💚 இணை 36
இன்னும் அரைமணி நேரத்தில் செல்வா திவ்யாவின் திருமணத்திற்கு செல்வதற்காக தன்னுடைய வீடாக அவன் உபயோகப்படுத்தும் பெட் க்ளினிக்கில் கால்மணி நேரமாக கிளம்பிக் கொண்டிருந்தான்.
தன் பிம்பத்தைப் பார்த்த போது முழங்கை அளவுக்கு அழகிய சில்வர் நிறத்திலான மென்ஸ் ஸ்லிம் ஃபிட் பார்மல் ப்ளேஸரில் அந்த கண்ணாடியில் தெரிந்த செல்வா இன்று வழக்கத்திற்கு மாறாக மிக அழகாக தெரிந்தான்.
"என்னா நாம இன்னிக்கு எஸ்ட்ராவா அழகா இருக்கமா? இல்ல கண்ணாடிய நல்லா பளபளன்னு தொடச்சு வச்சுருக்குதா தெரியலயே?
இன்னாடா தம்பி....... இன்னிக்கு நீ செம குஜாலாக்கீற போல்ருக்கு! ஒன்னிய பாத்து எங்கண்ணே பட்டுடும் போலிருக்கே? நம்ம வார்டனம்மா என்னமேரி கெட்டப்புல வந்துக்கினுருந்தாலும், மொத அவதா நம்மளப் பார்த்துனு வாயப் பொளக்கணும்! இம்மாநாள் கட்டி காப்பாத்தி வச்சுனு இருந்த கெத்த அவ முன்னால போட்டு பொசுக்குன்னு ஒடச்சிக்கினு பல்லக்காட்டாத சரியா? நம்ம பவிக்கண்ணு இன்னா ட்ரெஸ்ஸூ போட்டுக்கினு வருவா? செல்வா அங்க வருவேன்னு அவளுக்குத் தெரியுமா? தெரியாதா?" என்று கண்ணாடி முன்னால் நின்று தனக்குத் தானே அனைத்துக் கேள்விகளையும் கேட்டுக்கொண்டிருந்தவன், தன் தலைமுடிக்கு சிறிது ஹேர்ஸ்ப்ரே போட்டு விட்டு தன்னுடைய வீட்டில் இருந்து வெளியேறி திருமண மண்டபத்தை வந்தடைந்தான்.
சாம்பவியும் அன்று தன் அன்னை மற்றும் தந்தையுடன் தில்யாவின் திருமணத்திற்காக கிளம்பிக் கொண்டிருந்தாள். சந்தன நிறப் பட்டுப் புடவையில் சாம்பவி இன்று ரேணுவின் கண்களுக்கு மிகவும் அழகாகத் தெரிந்தாள்.
"வாவ்..... என் அழகிடீ நீ பாப்பு! அதுக்குள்ள ஏன்டீ உனக்கு கல்யாண வயசு ஆச்சு? மறுபடியும் உன்னைய தவழ்ற குழந்தையா மாத்தி முதல்ல இருந்து உன்னை வளர்த்துப் பாக்கணும்னு அம்மாக்கு ஆசையாயிருக்கேடீ பவிம்மா...... என் செல்லம்!" என்று தன் மகளின் கன்னம் கொஞ்சி முத்தமிட்ட ரேணுவின் வயிற்றைக் கட்டி அணைத்துக் கொண்டு,
"ம்மா.... கண்ணம்மா பாட்டு பாடு!" என்றாள் சாம்பவி.
"ஐயயோ.... இந்த நேரத்துல நாம பாட்டு பாடிக்கிட்டு இருந்தா உங்கப்பா டென்ஷன் ஆகப் போறாரு பவிம்மா!" என்று சொன்ன ரேணுகாவை இறுக்கமாக கட்டிக் கொண்ட பவி,
"பவிக்காக பாடு ரேணு ப்ளீஸ்!" என்றாள் கெஞ்சலாக.
"நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் துயர் போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன் எனக் கொண்ட பொழுதிலே என்றன் வாயினிலே அமுதூறுதே கண்ணம்மா என்ற பேர்
சொல்லும் போழ்திலே
கண்ணம்மா ம்ம்ம்
கண்ணம்மா ம்ம்ம் - கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்தீயினிலே வளர் சோதியே - என்றன் சிந்தனையே, என்றன் சித்தமே!" என்று அவள் தாயார் இனிமையான குரலில் பாடி முடித்த போது சாம்பவியின் கண்களில் நீர் கோர்த்து நின்றது.
என் மனதிலும் அதில் ஓடும் சிந்தனையிலும் நீதான் இருக்கிறாய் என்று தன் அம்மா தன்னிடம் சொல்வது மற்ற குழந்தைகளுக்கு வேண்டுமானால் பெரிதாக தோன்றாமல் இருக்கலாம். ஆனால் சாம்பவியை பொறுத்தவரையில் இந்த வார்த்தைகள் எல்லாம் அவளுக்கு கிடைத்த வரம் தான் என்பாள்!
இந்த பாட்டை பாரதி தன் காதலிக்காக எழுதினாரோ என்னவோ அவளுக்குத் தெரியாது. ஆனால் இந்த பாரதியின் பாட்டை அவளது அன்னை ஒவ்வொரு முறை பாடும் போதும் அவள் கண்களில் இருந்து லேசாக நீர் கசியும்!
இந்த சோதனை முயற்சியை தனது அப்பாவிடம் செய்து பார்ப்போம் என்று நினைத்த சாம்பவி எப்போதாவது அவரைப் பாடச் சொன்னால் அவர் அடுத்த நிமிடம் எங்காவது தலைதெறிக்க ஓடிக் கொண்டிருப்பார்.
தனது தாயை தேடிய ஏக்கம் ஆழ்மனதில் அவளுக்கு மிகவும் அதிகமாகவே இருந்திருக்க வேண்டும்; இப்போது அவளுடைய தாய் அந்த ஏக்கத்தைப் பூர்த்தி செய்வதால் வரும் ஆனந்தக்கண்ணீர் தான் இவையெல்லாம் என்று நினைத்துக் கொள்வாள் சாம்பவி.
"போலாமா ரேணு?" என்று கேட்ட சாம்பவியிடம்,
"அப்பா ரெடியாகிட்டாங்களான்னு பாரு! எல்லா வீட்லயும் லேடீஸ் கிளம்பி வர்றதுக்காக ஜென்ட்ஸ் வெயிட் பண்ணுவாங்க! இங்க அதுவும் உல்டா தான்!" என்று சொன்ன ரேணுகா பூஜையறைக்குள் சென்று திவ்யாவின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமென இரண்டு நிமிடங்கள் கடவுளிடம் ப்ரார்த்தித்துக் கொண்டு புறப்பட்டார்.
திருமண மண்டபத்தில் தீபக், அவனது மனைவி, தீபக்கின் பெற்றோர், இன்னும் சில பெரியவர்கள் நின்று கொண்டு அனைவரும் வரவேற்றுக் கொண்டிருந்த போது தீபக்கின் பின்னால் நின்று அவளைப் பார்த்து கண்சிமிட்டி சிரித்து அவள் முன் இப்போது வந்தவனைப் பார்த்த அதிர்ச்சியில் சாம்பவி சில டைமண்ட் கல்கண்டுகளை பதட்டத்தில் அப்படியே விழுங்கி விட்டாள்.
"ஹாய் பாப்பா? என்னடா இவ்ளோ ஷாக்? ஆக்சுவலி இது ஷாக்கா, ஸர்ப்ரைஸா? வழிய மறிச்சுட்டு நிக்காத! இந்தப் பக்கமா வா!" என்று அவள் முதுகைப் பற்றி சற்று நகர்த்தி சொன்னவனுடைய குரலும், முகமும் நிறைய மாறியிருந்தாலும் அவன் கண்களில் தெரிந்த பாசம் மட்டும் இம்மியளவும் மாறவில்லை. சொல்லப்போனால் பல மடங்காக பெருகித் தெரிந்ததோ?
"யப்பா...... யப்பா! எங்கடா போயிட்டா உனக்குள்ள இருந்த அந்த குட்டிப் பாப்பா? கண்ணுல நிதானம் வந்துருச்சு; நடையில நளினம் வந்துருச்சு! பேச்சுல பொறுமை வந்துருச்சு; மொத்தத்துல நான் என்னாண்ட நெறய ஒரண்ட இழுக்குற
என்னோட பழய மைமாவ ரொம்ப மிஸ் பண்றேனே தங்கம்?" என்று காதருகே கிசுகிசுத்தவனிடம்,
"அம்மா தேடுவாங்க! விடு செல்வா!" என்றாள் மெல்லிய குரலில்.
"அம்மாவா.... இதென்ன புத்சா இருக்கு? ரேணும்மாவாண்ட ப்ரெண்ட் ஆகிக்குனியாமே?" என்று தெரியாதது போலக் கேட்டவனிடம் மண்டையை பெரிதாக ஆட்டிய சாம்பவி அவனிடமிருந்து விலகிச் சென்று தன் பெற்றோர் அமர்ந்திருந்த வரிசையில் அவர்களுக்கு இடப்புறத்தில் அமர்ந்து கொண்டாள். அவளையும் தாண்டி அவளுக்கு இடப்புறமாக இருந்த இரண்டு வரிசையிலும் ஆட்கள் அமர்ந்திருக்க செல்வா சலிப்புடன் உச்சுக்கொட்டினான்.
"ஒருத்தன் இங்க பேசினு இருக்கேன்; அவ பாட்டுக்கு எனக்கென்னன்னு போறா பாரு! நல்லாயிருக்கியான்னு கூட இன்னும் விசாரிச்சுக்கவேயில்ல..... அதுக்குள்ள வாகா ஒரு இடத்த கண்டுபிடிச்சுனு போய் ஒக்காந்தாச்சு! இரு ஒன்னிய இன்னிக்கு விடுறதாயில்ல!" என்று நினைத்துக் கொண்டவன் ரேணுகாவிடம் சென்று அவரை நலம் விசாரித்து விட்டு சபாபதியிடம் சற்றுப் பேச வேண்டும் என்று ரேணுவிடம் அனுமதி கேட்டான்.
"இதோ ஒன் மினிட்ல வர்றேன்மா!" என்று தன் மனைவியிடம் சொல்லி விட்டு எழுந்து வந்தவரிடம் கோபமாக,
"யோவ் ரூல்ஸூ; இன்னாயா ஒம்பொண்ணு என்னிய கண்டுக்கவே மாட்டுனுது! நீ ஏதாச்சு அத்த மெரட்டினு இங்க கூட்டினு வந்தியா?" என்று அவரிடம் கேட்டான்.
"எனக்கென்ன வேற வேல இல்லையா? அவ உங்கூட வந்தா கூட்டிட்டுப் போயி அவளோட பேசு!" என்று விட்டேற்றியாக சொல்லி விட்டு மறுபடியும் தன்னுடைய மனைவியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டார் சபாபதி.
பவியிடம் மட்டும் தான் அவன் முழுமனதோடு கொடுத்த வார்த்தையை காப்பாற்ற வேண்டுமென இத்தனை ஆண்டுகள் ஒற்றை வார்த்தை கூடப் பேசவில்லை. ஆனால் அவ்வப்போது சபாபதியிடம் பேசிக் கொண்டு தான் இருந்தான். அவர் அவனிடம் பேசுபவை எல்லாம் அவன் சம்பந்தப்பட்ட பேச்சுகளாக இருக்கும்; செல்வா அவரிடம் கேட்பவை எல்லாம் அவள் சம்பந்தப்பட்ட பேச்சுகளாக இருக்கும்! பவி பிடிஎஸ் கோர்ஸில் படிக்கிறாள், இப்போது ரேணுவும் அவளும் மிகவும் இணக்கமாக இருக்கிறார்கள், தனசேகருக்கு கடன் பிரச்சனை இருக்கிறது, பவி தன்னுடைய தாத்தாவிடம் அவர் இருக்கும் வீட்டை எழுதிக் கேட்டிருக்கிறாள் என்பது உட்பட அவள் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் அவனுக்குத் தெரியும்.
இப்படி அவனைப் பற்றி அவனது நண்பர்கள் யாரிடமாவது அவள் விசாரிக்க வேண்டுமென செல்வா எதிர்பார்த்தான். ஆனால் ஏனோ இன்றுவரை பவி அவனுடைய அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அவளும் அவனை நன்றாக இருக்கிறாயா என்று கூட கேட்கவில்லை. அதை விட அவனைப் பார்த்ததும் அவள் கண்களில் தோன்றிய பாவம் தான் அவனை மிகவும் வருத்தியது.
"என்னாச்சு நம்ம பாப்பாவுக்கு? அது பாக்குறதும், ஒரு சைஸா முழிச்சுனு இருக்குறதும் எங்கையோ இடிக்குதே?" என்று யோசித்த படி அவளை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டு திருமண நிகழ்ச்சியையும் பார்த்துக் கொண்டிருந்தான் செல்வா.
திவ்யா, வசந்த் இருவரும் இன்று முதல் நாங்கள் இந்தப் புனிதமான திருமண பந்தத்தில் இணைகிறோம் என உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் உறுதி கூற வசந்த் திருமாங்கல்யத்தை திவ்யாவின் கழுத்தில் அணிவித்தான். வந்திருந்த சொந்த பந்தங்கள் அனைவரும் வாழ்த்துக் கூறவும், நாங்கள் உங்கள் திருமணத்திற்கு வந்திருந்தோம் என்று அடித்துக் கூறவும் சாட்சியமாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தனர்.
"ம்மா.... ரொம்ப கூட்டமாயிருக்கு! நீங்க போயி கிப்ட்ட குடுத்துட்டு வந்துர்றீங்களா? நான் தீபக்கோட வொய்ஃப மீட் பண்ணிட்டு அவங்க மேரேஜ்க்கும் விஷ் பண்ணிட்டு வந்துடுறேன்!" என்று சொல்லி விட்டு போன தன் மகளைப் பார்த்து ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டார் சபாபதி.
"என்ன டாடி?" என்று கேட்டவளிடம்,
"ஒண்ணுல்ல.... பாத்துப் போயிட்டு வாடா பவிம்மா!" என்று சொல்லி விட்டு நின்றார்.
அவள் வாசலுக்குப் போகும் வழியிலேயே செல்வா அவளை மடக்கிப் பிடித்து ஒரு அறைக்குள் நுழைத்து அந்த அறையின் கதவைச் சாற்றியிருந்தான்.
"ஏய்... நீ! என்னடா பண்ற? கதவத் தொறந்து விடு! நான் போணும்!" என்றாள் அவன் கண்களைப் பார்க்காமல்.
"என்னையப் பார்த்தவுடனே சந்தோஷத்துல ஒங்கண்ணு சிரிச்சுருக்கணும். அதுவும் இல்ல; இப்ப ரூமுக்குள்ள வந்ததுக்குப் பொறவாவது நல்லாருக்கியாடா செல்வா? நான் போட்ட கண்டிஷன் என்னாச்சுன்னு கேட்ருக்கணும். அது கூட இல்ல! ஒனக்கு எம்மேல ஏதாச்சு கோபமா பாப்பா? நா ஒன்னியும் தப்பு பண்ணலயே? பின்ன ஏன் நீ எங்கூட சரியா பேச மாட்டேங்குற! நீ வேற யாரோ மாதிரி எங்கிட்ட இருந்து ஒதுங்குறது எனக்கு கஷ்டமாயிருக்கு பாப்பா!" என்று சொன்னவனிடம்,
"செல்வா நம்மளோட மேரேஜ் பத்தி நீ பேசியிருந்தல்ல..... அது இம்பாஸிபிள்னு நான் நினைக்கிறேன்! இவ்ளோ வருஷமா உனக்கு ஒரு பால்ஸ் ஹோப் குடுத்து உன்னை வெயிட் பண்ண வச்சதுக்கு ஸாரி! பட் உன்னை இவ்ளோ வருஷத்துக்கு அப்புறமா பாத்ததுக்கு அப்புறமும் எனக்கு எக்ஸைட்மெண்ட்லாம் வரல! நமக்குள்ள செட் ஆகாது! ஸோ நீ வேற யாராவது பொண்ணப் பாத்து கல்யாணம் பண்ணிக்கோ! நானே டாடி கிட்ட சொல்லி உனக்கு ஒரு நல்ல கேர்ளா அலையன்ஸ் பாக்க சொல்லட்டுமா?" என்று கேட்டவளிடம் இதுவரை அவள் கண்டிராத கடினத்தன்மையுடன்,
"ஓங்கி ஒரு அறை உட்டேன்; அப்புறம் ஒன்னிய சேருல படுக்கப்போட்டு வேற எவனாவது ஒவாய தொறந்து வைத்தியம் பாக்க வேண்டியதிருக்கும்! எம்பாப்பாவோட கன்னத்த அப்டி
எவந்தொடுறதையும் என்னால பாத்துட்டு இருக்க முடியாது.
அதுக்கோசரந்தா சொம்மா நின்ட்டு இருக்கேன். நா நம்ம புள்ளைங்களுக்கு வடபழனி கோவில்ல வச்சு மொட்டயடிச்சு, காது குத்துற வரைக்கும் வாழ்ந்து பாத்துட்டன்டீ; இப்ப வந்து வேற கேர்ளு, நல்ல அலையன்ஸூன்னு பெனாத்தினு இருக்க....... ஒன்க்கு என்னாடா பாப்பா ஆச்சு?" என்று அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தான் வாகை செல்வன்.
இளையவள் இணை சேர்வாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro