💚 இணை 13
சபாபதியின் அண்ணன் மகனது நிச்சயதார்த்த விழாவில் அனைவரும் மகிழ்ச்சியான மனநிலையில் அங்கும் இங்குமாக உலவிக் கொண்டிருந்தனர்.
தன் அம்மம்மா தன்னை வீட்டிலேயே விட்டு வந்தாலும், தான் எப்படியோ இந்த சுபநிகழ்வுக்கு வந்து சேர்ந்து விட்டோம் என்ற நிம்மதியில் இருந்தாள் சாம்பவி. செல்வாவும் அவள் கூடவே அவள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று அந்த மண்டபத்தில் கூட்டம் அதிகமாக இல்லாத ஒரு இடத்தில் சாம்பவிக்கு நேர் பின்னால் அமர்ந்து கொண்டு அவ்வப்போது அவளது நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டிருந்தான். தனது அம்மம்மாவின் அருகில் சென்று அவரை ஒட்டி அமர்ந்து கொண்ட சாம்பவியிடம் அடிக்குரலில்,
"ஒன்ன யாரு இங்க வரச்சொன்னா பவிம்மா..... எதுக்காக இங்க வந்த? சாப்பாடு வேணும்னா எப்பவும் போல வீட்ல உனக்கு மட்டும் வேலை செய்றவன்ட்டயே கேட்டு சாப்ட்ருக்க வேண்டியதுதான?" என்று கல்யாணி பேச சாம்பவியின் கண்களில் நீர் கட்டிக் கொண்டு கீழே விழவா என்ற படி நின்றது.
ஏதோ இந்த விழாவிற்கே அவள் சாப்பாட்டிற்காக தான் வந்தது போல இதென்ன தரம் குறைந்த பேச்சு என்று தன் அம்மம்மாவிடம் அவள் வாயைத் திறக்கும் முன் செல்வா சாம்பவிக்கு அடுத்தது போலாக போட்டிருந்த ஒரு இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டான்.
"ஏஆயா.... உம்பொண்ணுதா ரொம்ப வருசத்துக்கு முன்னால எவம்பின்னாலயோ ஓடிடுச்சே? அத்த யாரும் ஒன்னாண்ட இப்ப கேட்டுக்குட மாட்டாங்க? கொஞ்சங்கூட வெக்கமே இல்லாத பவியோட நைனா வூட்டு வொறவுகாரங்க விசேசத்துக்கோசரம் வந்துக்கினியே? இங்க மொய் எழுதவாச்சு துட்டு வச்சுனு இருக்கியா? இல்ல டமாரமாச்சு வச்சுனு இருக்குதா? மவ ஓடிப்போற அளவுக்கு அவள கொடுமைப்படுத்திட்டான் பாவிப்பயன்னு மூக்கால அழுது மருமவன கிழிச்சு தோரணமா தொங்க வுட்டுக்குவாங்களாம். அப்பால அவனோட அண்ணாத்த வூட்டு விசேசத்துக்கும் வந்து மூக்குப் புடிக்க ஒரு வெட்டு வெட்டிக்குவாங்களாம். சோக்கா இருக்குதுல்ல பவி இவுங்களோட நாயம்.....!" என்று கல்யாணியின் முகம் கருத்துப் போகும் அளவிற்குப் பேசிக் கொண்டே போன செல்வாவின் கையில் சுரண்டி அவனை பேசாமல் இரு என்று வாயில் விரல் வைத்துக் காட்டினாள் சாம்பவி.
"டேய்.... அவ்ளோ தான் என் பொறுமைக்கு லிமிட்! பெரியவங்க, சின்னவங்கன்னு மரியாத இல்லாம
என்ன பேச்சு பேசுற? அதுசரி.... உங்கிட்ட எல்லாம் என்ன மரியாதய எதிர்பாக்க முடியும்? ஒவ்வொரு தடவ நான் இவள திட்டும் போதும் நீ நடுவுல புகுந்து நாட்டாமை பண்ற? இவளுக்கு நீ தான் பெரிய சப்போர்ட்டோ?" என்று கேட்ட கல்யாணியிடம் இல்லையென அப்படியும் இப்படியுமாக தலையசைத்த செல்வா,
"ம்ப்ச்! என்னைய பொறுத்தவரைக்கும் ஒன்னைய விட பாப்பா தான் பெரிசு;
பாப்பாவுக்கு பேசத்தெரியாம எல்லாம் இல்ல ஆயா! நான் இதுக்கு வாயாவும் வேல செய்யல! அது என்னைய விட சொம்மா நச்சு நச்சுன்னு தலையில ஆணியடிக்குற மாதிரி பேசுது. என்ன அதெல்லாம் ஒன்னாண்ட பேசசொல காட்ட மாட்டேங்குது! அதுதாஏ வருத்தம்..... ஏம்மே..... கார்ல அம்மாம்பெரிய சீட்ல நீ ஒண்டியாதான ஏறி ஒக்காந்துனு வர்ற! ஒம்பேத்தியவும் இந்த விசேசத்துக்கு கூட இட்டுக்கினு வருவம்னு தம்மாதூண்டு நெனப்பு தோணாதா ஒம்மனசுல? நீங்க இப்டித்தான்னு தெரிஞ்சும்,
ஒங்க ரெண்டு பேராண்டயும் புள்ளைய குடுத்துட்டு அவரு பாட்டுக்கு போயினுருக்காருல்ல ஒரு மனுசன்! அவரச் சொல்லணும்;
என்னா கேட்ட......? நாந்தான் இத்துக்கு நாட்டாமையான்னு கேட்டல்ல.....? ஆமா! இனிமேட்டு பவிம்மா, செல்லம், தங்கமுனு கொஞ்சினு பாப்பா பக்கத்துல வந்த...... அவ்ளோ தான்! நொய்யு நொய்யுன்னு குடைஞ்சிட்டு கெடக்காம வாய மூடினு எதுக்கு வந்தியோ, அந்த வேலய மட்டும் பார்த்துனு போயிட்டே இரு! இல்ல...
பெர்சுன்னெல்லாம் பாக்க மாட்டேன். வாய ஒடச்சு உட்டுடுவேன் பாத்துக்க!" என்று சொல்லி கல்யாணியை முறைத்து விட்டு முதலாவதாக அவன் அமர்ந்திருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான் செல்வா.
"அம்மம்மா செல்வா ஏதோ கோபத்துல உங்க கிட்ட.......!" என்று தன்னுடைய பாட்டியின் கையைப் பற்றி அவருக்கு சமாதானம் செய்ய முனைந்த சாம்பவியின் கைகளை உதறி விட்டு விருட்டென்று எழுந்து சென்று தனசேகரின் அருகில் இருந்த சேரில் அமர்ந்து கொண்டார் கல்யாணி.
சற்று மரியாதை குறைவாக இருந்தாலும், அவனது பேச்சில் எந்த தவறும் இல்லை என்று உணர்ந்த சாம்பவி அதற்கு மேலும் சென்று தன்னுடைய அம்மம்மாவிடம் கெஞ்சிக் கொண்டு நிற்க விரும்பவில்லை. இந்த கூட்டத்தில் தான் அவரின் முன்னால் சென்று கெஞ்சினால் அதுவும் ஷோ காட்டுவது போலத்தான் இருக்கும்; அதனால் வீட்டுக்குச் சென்றதும் மொத்தமாக ஒரு பெரிய மன்னிப்பு கேட்டு விடுவோம் என்று நினைத்து பேசாமல் அமர்ந்து கொண்டாள்.
வைத்தி அண்ணாவை கட்டிக் கொள்ள போகும் தன்னுடைய வருங்கால அண்ணிக்கு சாம்பவியின் பெரியம்மா வளையல் அணிவித்து, பூ, பொட்டு எல்லாம் வைத்துக் கொண்டு இருந்தார். வைத்தி பக்கத்தில் இருந்த ஒரு சேரில் கழுத்தில் மாலையுடன் அமர்ந்து தன்னுடைய பெட்டர்ஹாப் ட்டூ பீ என்று அடையாளப்படுத்தப் பட்ட பெண்ணை நன்றாகவே சைட் அடித்து கொஞ்சம் வியர்வையில் வழிந்து கொண்டிருந்தான்.
சபாபதியின் உறவினர்களில் மிகவும் நெருங்கியவர்கள் அவரது அண்ணனும், ஒரு தங்கையும் தான்.... அந்த இரண்டு பேமிலியை தான் சற்று சிரித்த முகமாக பேசிக் கொள்ளும் அளவுக்காவது சாம்பவிக்குத் தெரியும். ஆனால் இன்று தன் அத்தையையும் விழாவில் காணவில்லை. பெரியப்பாவின் குடும்பத்தினரும் நிச்சயப்புடவையை மாற்றி வந்த பெண்ணுக்கு ஆசிர்வாதம் செய்ய என மேடையில் நின்று கொண்டிருந்தனர்.
இதற்கு மேல் இந்த விழாவில் நமக்கென்ன வேலை என்று நினைத்து ஆயாசம் ஏற்பட்டது சாம்பவிக்கு. எத்தனை நேரம் அழுது, அவனிடம் அடம் பிடித்து இந்த விழாவிற்கு கஷ்டப்பட்டு வந்ததென்ன........ இப்போது இங்கும் பொருந்தியிருக்க முடியாமல் கிளம்புவோம் என்று நினைப்பதென்ன என்று மனதிற்குள் சலித்த படி லேசாக செல்வாவின் புறம் திரும்பி அவன் என்ன செய்கிறான் என்று பார்த்தாள் சாம்பவி.
துரை முகத்தில் அவ்வளவு உற்சாகத்தோடு பக்கத்தில் அமர்ந்திருந்தவரின் ஐபோனை கடன் வாங்கி அதில் அவனை செல்ஃபி எடுத்தபடி அவரிடம் அந்த அலைபேசியை பற்றி ஏதோ சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தான்.
"சரியான கேஜெட் பைத்தியம்! ஆனா காசு குடுத்து இதெல்லாம் வாங்க மாட்டேன்; ஆனாலும் எனக்கு அது வேணும்னு நீ கேட்டா உன்னை என்ன தான்டா செய்றது?
எங்க இருந்தாலும் எப்டி இவனால மட்டும் இவ்ளோ சந்தோஷமா இருக்க முடியுது? பக்கத்துல உட்கார்ந்த பாவத்துக்கு அந்த அங்கிள படுத்தி எடுக்கப் போறான்?" என்று புன்னகைத்த படி நினைத்த சாம்பவி மெதுவாக தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்தாள்.
அவள் எழுந்த இருபதாவது நொடியில் அவள் முன்பு வந்து நின்ற செல்வா, "போவமா பாப்பா?" என்று கேட்டபடி வாயிலைப் பார்த்தான்.
"கிளம்பலாம் செல்வா. எனக்கு இங்க போர் அடிக்குது. உன்னையும் டிஸ்டர்ப் பண்ணி இங்க கூட்டிட்டு வந்ததுக்கு ஸாரிடா!" என்று சொன்னவளிடம்,
"அத்த வுடும்மே! செல்லாண்டியம்மா கோயில்ல கொடன்னு எம்பழயஓனர் பக்கிப்பய ஓட்டல பூட்டினு குடும்பத்தோட ஊருக்குப் போயிருக்காப்லயாம்! நம்ம கட தோஸ்த்துங்கலா இன்னிக்கு பீச்ல ஆடினு கெடக்குதுங்களாம். வூட்டுக்கு போறதுக்கு முன்னால அங்க தலையக் காட்டினு போவமா பாப்பா? நீ வோணாம்னு சொன்னா நேரா வூட்ல போயி எறங்குவோம்! நீதா போவணுமா, வோணாமான்னு சொல்ணும்!" என்று கேட்ட செல்வாவிடம் ஒரு நிமிட யோசிப்பிற்கு பின் சாம்பவி "போலாமே.....!" என்றாள் சம்மதப்பார்வையுடன்.
"உங்கிட்ட ஒண்ணு கேக்கணும்டா! என்னையே இப்டி கேர் எடுத்துப் பார்த்துக்குறியே? ஆனா நீ உன் ப்ரெண்ட்ஸ் எல்லாரையும் வீட்டுக்கு வந்ததுல இருந்து தேடவேயில்லயே? நீ அவங்கள மிஸ் பண்ணலையா? ஒருதடவ உன்னோட ஏரியாவுக்கு போயி அவங்கள எல்லாம் பார்த்துட்டு வந்துருக்கலாம்ல செல்வா? இப்பக்கூடப் பாரு; அவங்களா தான் உன்னை கால் பண்ணி கூப்டுறாங்க!" என்று கேட்டவளிடம்,
"அந்த ........ ....... குடியக் கெடுத்த போ!" என்று சொல்லி விட்டு அவளிடம் வாயிலேயே படாரென அடி வாங்கினான்.
"இந்தா...... இதெல்லாம் நல்லா இல்ல சொல்ட்டேன்! எஓடம்புல நல்லா வெள்ள வெளேர்னு இருக்குறதே பல்லு ஒண்ணு தாம்மே! நீ அடிக்கிற அடியில அதுல ரெண்டு கழண்டுக்கிச்சுன்னா நா
இன்னா பண்ணுவேன்?" என்று கேட்டவனின் கன்னத்தை கிள்ளியவள்,
"கெட்ட வார்த்த பேசுனேன். அதுனால என்னோட ப்ரெண்ட் என்னை அடிச்சா! அந்த கேப்ல தான் எம்பல்லு புடுங்கிட்டுப் போயிடுச்சுன்னு ஒரு பேப்பர்ல எழுதி பல் விழுந்த கேப்ல அத ஒட்டிக்க! வா போவோம்!" என்று சொன்னாள்.
"ஏய்.... நா மெய்யாலுமேதாம்மே சொல்லிக்கினு இருக்கேன். என்னைய பாக்குற ஒவ்வொருத்தனும் அடுத்து ஹோட்டலாண்ட கால எடுத்து வக்கக்கூடாது! அப்டியே எங்கூடவே போயிடணும்னு அந்தத் ...... நம்ம பழைய ஓனர் பசங்களாண்ட சொல்லி வச்சுருக்காப்டி!" என்றான் செல்வா.
"ம்ம்ம்......! இந்த கண்ட்ரோல் தான் உங்கிட்ட நான் எதிர்பார்க்குறது; டப்பு டப்புன்னு வாய்லயே அடி போட்டா தான தப்பான வார்த்தய முழுங்கிட்டு கரெக்டா பேசுற; அப்ப உன்னை அடிக்குறதுல தப்பே இல்ல! வா உன் ப்ரெண்ட்ஸ் என்ன லட்சணத்துல இருக்கானுங்கன்னு பாப்போம்!" என்று சொன்ன படி அவனுடன் இணைந்து நடந்தாள் சாம்பவி.
அந்த நிச்சயதார்த்ததிற்கு அவள் வந்ததும் தெரியாது, அங்கிருந்து போனதும் தெரியாது என்ற லட்சணத்தில் மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் அந்த விழாவில் பிஸியாக இருக்க சாம்பவி செல்வாவுடன் அங்கிருந்து கிளம்பியிருந்தாள்.
"பாத்தீங்களா.... அவ இப்ப நம்ம கிட்டல்லாம் வர மாட்டான்னு நான் தான் சொன்னேன்ல? கெளம்பி அவன் கூடப் போறா பாருங்க; எங்க அண்ணன் நிச்சயத்துக்கு
நீ என்னடீ என்னை வரக்கூடாதுன்னு சொல்றதுன்னு காமிக்குறதுக்குன்னே அவங்கூட கெளம்பி வந்துருக்கா! வந்த இடத்துல அந்த நாதாரியும் என்னைய கேள்வி மேல கேள்வி கேட்டு அவள கொம்பு சீவி விடுது! இதெல்லாம் கொஞ்சமாவது நல்லதாப் படுதா? ஏதோ ஒரு ஆர்வக்கோளாறுல இங்க வந்துட்டேன்; என்னை மன்னிச்சிடுங்க அம்மம்மான்னு அவ வாயில இருந்து ஒரு வார்த்த வந்துச்சா......?" என்று கேட்ட கல்யாணியிடம் முடிந்த அளவு தன் குரலைத் தணித்துக் கொண்டு,
"இங்க பாரு கல்யாணி; முந்தி நம்ம என்ன செஞ்சாலும் பவிம்மாவுக்கு நம்மள விட்டா வேற ஆளு இல்ல, நாம சொல்றதுக்கெல்லாம் தலையாட்டித் தான் ஆகணும்ங்குற ஒரு கட்டாயம் இருந்தது! ஆனா இப்ப சாப்பாடுல இருந்து எல்லாத்தையும் அவளுக்கு அந்தப் பொடியன் பாத்து பாத்துச் செய்யுறான்! நம்மள விட பெரிய ஒதுக்கல் பார்ட்டியா இருக்கான்டீ அவன்! அவளுக்கு எல்லாம் நாந்தான் செய்றேன்ற பேருல மாப்ள குடுத்த மொத்த ரூபாயையும் அப்டியே ஆட்டையப் போட்டான் தெரியுமா உனக்கு! நம்ம மாப்ள வீட்ல இருந்து கெளம்ப வேண்டிய நேரம் கூடிய சீக்கிரத்துல வந்துடும்! அது மட்டும் எனக்கு நல்லாத் தெரியுது!" என்று சொன்ன தனசேகரிடம்,
"ஒளறாம சும்மா கெட...... நம்ம இங்கருந்து கெளம்புனா மாசா மாசம் நமக்கு ஆகுற செலவுக்கு என்ன பண்றது நாம? போற வரைக்கும் போட்டும்! எங்கயாவது முட்டி வேற வழியில்லன்னு நிக்கும் போது நீ சொன்ன ஐடியாவப் பத்தி யோசிப்போம்!" என்று சொல்லிக் கொண்டிருந்தார் கல்யாணி.
இளையவள் இணை சேர்வாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro