Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வலியின் மொழி மௌனம்

தண்டவாளத்தின் மீது சிவப்பு கம்பளிப்பூச்சியாய் அதிவேகத்தில் ஊர்ந்து கொண்டிருந்தது அனந்தபுரி எக்ஸ்பிரஸ். ஒருவழியாய் வாஞ்சி மணியாச்சியைக் கடந்து திருநெல்வேலியை நோக்கிச் சீறிப் பாய்ந்து சென்று கொண்டிருந்த அப்புகைவண்டியில் முதல் வகுப்பு பெட்டியில் அமர்ந்திருந்த எனக்கு எப்போதடா நெல்லை சந்திப்பு இரயில் நிலையம் வருமென்ற ஆர்வம். என் அருகில் அமர்ந்திருந்த அம்மாவுக்கு இப்போதைய கவலை நெல்லை சந்திப்பில் உள்ள சாந்தி ஸ்வீட்டில் கூட்டம் இருக்கக் கூடாதே என்பது தான்.

அது என்னவோ அம்மாவுக்கு அந்தக் கடை அல்வாவின் மீது அலாதிப்பிரியம். இருட்டுக்கடை அல்வா கூட அவ்வளவு ருசியில்லை என்பார் அடிக்கடி. எப்போது திருநெல்வேலி வந்தாலும் சாந்தி ஸ்வீட்டின் அல்வாவும் மிக்சரும் எங்களின் மூட்டை முடிச்சுகளில் கட்டாயம் இடம்பெறும்.

அல்வா எனும் போது தான் ரம்யாவின் நினைவு வந்தது. அவளும் என் அன்னையைப் போன்றே அல்வா என்றால் உயிரை விடும் ரகம். முன்பெல்லாம் நாங்கள் திருநெல்வேலியிலிருந்து திரும்பும் தினத்துக்காகக் காத்திருப்பாள் அவள். அலுவலகத்திற்குச் சென்று அவளிடம் சாந்தி ஸ்வீட்டின் அலுமினிய நிறத்தினாலான பொட்டலத்தை நீட்டினால் அவள் முகம் பூவாய் மலரும்.

அப்படி இருந்தவள் தான் இன்று ஓய்ந்து போனவளாக, வாழ்வையே வெறுப்பவளாக வலம் வருகிறாள். இதையெல்லாம் எண்ணும் போதே எனக்குள் முணுக்கென்று ஒரு வலி உண்டாகும். ஒரு பெண்ணுக்கு இவ்வாறு கூட நடக்குமா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அவளது வாழ்வில் தினந்தோறும் சம்பவங்கள் நடந்தேற அதைக் கொட்டும் வடிகாலாக அவள் எண்ணியது என்னை மட்டுமே.

அவ்வபோது எங்களின் பேச்சில் அம்மாவும் கலந்துகொள்வார். ஆனால் முடிவில் "ஆம்பளைனா முன்ன பின்ன இருக்கத் தான் செய்வாங்க ரம்மி... ஒரு புருசனோட ஆசையை நிறைவேத்துறது பொண்டாட்டியா உன் கடமை... அதுக்கு ஏன் இவ்ளோ வருத்தப்பட்டு வேதனையோட பேசுற?" என்ற வழமையான அறிவுறுத்தலுடன் ரம்யாவை வழியனுப்பி வைப்பார்.

அதுவும் நேற்றைய சம்பவத்தின் போது கூட ரம்யாவின் கணவனுக்கு ஆதரவாகப் பேசிய அம்மாவை நான் என்ன சொல்லி அடக்க என்று புரியாது விழித்தேன்.

ஆனால் அம்மாவுக்கு இது புரிவது கடினமே. அவளைத் தன் சரிபாதியாக மதிக்கும் என் தந்தை போன்ற கணவர் வாய்க்கப் பெற்றவளுக்கு ரம்யாவின் நிலை புரிந்தால் தான் ஆச்சரியம். கூடவே பெண் என்றால் பொறுத்துப் போக வேண்டுமென்ற பொதுப்புத்தி அம்மாவுக்கு அதிகம்.

ரம்யாவின் கணவனது குடும்பம் முழுவதும் பழமைவாதிகள். அவர்களைப் பொறுத்தவரையில் பெண் என்றால் ஆணுக்கு அடங்கியவள். அப்படி அடங்காத பட்சத்தில் ஆணால் அடக்கப்பட வேண்டியவள். ஏதோ அவள் வேலைக்குச் செல்வது குடும்பத்தின் பொருளாதாரத்துக்கு நல்லது என்பதால் அவன் அவளை வேலையை விடுமாறு இதுவரைக்கும் கட்டாயப்படுத்தவில்லை. அவ்வளவுக்கு அவன் நல்லவன் தான்(?)

திருமணம் முடிந்த நாளன்று இரவில் எண்ணற்றக் கனவுகளுடன் காத்திருந்தவளுக்கு அவளது கணவனின் செய்கை உச்சப்பட்ச அதிர்ச்சியே. இதமான தென்றலாய் வீச வேண்டிய தாம்பத்தியத்தில் மென்மையான மலராக முகிழ வேண்டிய அவர்களின் பந்தம், அவள் கணவனின் முரட்டுத்தனத்தால் சூறாவழியான தாம்பத்தியத்தில் சிக்கி காய்ந்த சருகானது.

ரம்யா எனும் நல்லதொரு வீணையை ஒரு நலம் கெட்டவனிடம் ஒப்படைத்ததன் விளைவு இரவு வருகிறது என்றாலே அவள் நடுங்கத் தொடங்கினாள். ஒவ்வொரு நாளும் உடலில் ஏற்படும் காயங்களோடு அவனது இரக்கமற்ற அணுகுமுறையால் மனதளவிலும் புண்பட்டுப் போனாள் ரம்யா.

அவனிடம் இது குறித்துப் பேசினால் தீர்வு கிடைக்கும் என்ற முடிவுக்கு வந்தவள் அவனிடமே "ஏன் இப்பிடி முரட்டுத்தனமா நடந்துக்கிறிங்க? எனக்கு முடியலைங்க... ஆபிஸ்ல போய் வேலை பார்க்க கஷ்டமா இருக்கு... உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குது" என்று வெளிப்படையாகவே பேசிப் பார்த்தாள். அதற்கு அவனது பதிலடி "நான் ஆம்பிளைடி" என்பது மட்டுமே.

அவன் மட்டுமல்ல ரம்யாவின் தாயார், எனது தாயார், ரம்யாவின் சகோதரி என்று அனைவரின் எண்ணமும் இதுவே. அவன் ஆண்மகன். அவனை ரம்யா தான் பொறுத்து போக வேண்டும். ரம்யாவின் மாமியார் இதற்கு ஒருபடி மேலே போய் நடுக்கூடத்தில் ஒப்பாரி வைத்தாராம்.

"நாங்கள்லாம் குடும்பம் நடத்திக் பிள்ளைக்குட்டிங்களை பெத்துக்கலையா? ஏன்டி மானமுள்ள பொம்பளை இந்த விசயத்தைப் பத்தி அடுத்தவங்க கிட்ட வாயைத் திறப்பாளா? ச்சே! வெட்கம் கெட்ட ஜென்மம்"

இதற்கு மேல் யாரிடமும் பேசிப் பயனில்லை என்ற பின்னர் தான் என்னிடம் அவள் விசயத்தைச் சொன்னாள். அதுவும் "நீ கல்யாணம் ஆகாத பொண்ணு! உன் கிட்ட இதைச் சொல்லுறதே தப்பு தான்" என்ற முகவுரையோடு.

அதிலும் ஒரு முறை நிலமை கைமீறி போய்விட "ஏய்! இதுக்கு பேரு மேரிட்டல் ரேப்... நியாயப்படி நீ அந்த ஆள் மேலே கம்ப்ளைண்ட் குடுத்து உள்ள தள்ளணும்" என்று பொங்கிய என்னை என் அன்னை தான் அடக்கினார். ரம்யாவைத் தனியே அழைத்துச் சென்றவர் என்ன மந்திரம் ஓதினாரோ அவள் மீண்டும் கணவன் வீட்டுக்கே சென்றுவிட்டாள்.

அதன் பின் கணவனின் கொடுமையை இது தான் அவனது இயல்பு என்று பொறுத்துப் போகப் பழகிக் கொண்டாள். ஆனால் என்னிடம் புலம்புவதை நிறுத்தவில்லை அவள். இந்த லெட்சணத்தில் அவளின் அழகிய தாம்பத்தியத்தின் பரிசாக இப்போது ஒரு வயது ஆண்குழந்தை வேறு.

ஆனால் ஒவ்வொரு முறையும் "இந்த வலியோட வாழ நான் பழகிட்டேன்டி.. வலிக்குனு தனியா ஒரு மொழி இந்த உலகத்துல இல்ல... அப்பிடி இருந்தாலும் அது மௌனம் மட்டும் தான்" என்று தனது வலியை என்னைத் தவிர வெளியாரிடம் பகிர்ந்து கொள்ளாமல் மௌனத்தை மொழியாக்கிக் கொண்டவளைக் காணும் போது எனக்குள்ளும் வலி எடுக்கும்.

இதைக் கண்கூடாகப் பார்த்ததாலோ என்னவோ எனக்கு திருமணத்தின் மீது நாட்டம் குறைந்தது. ஒரு மஞ்சள் சரடைக் கட்டி மனைவியாக அதிகாரமளிக்கும் கணவன் அவளது இன்பதுன்பங்களைப் பகிர்ந்து கொள்பவனாக இருக்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. இவ்வாறு நான் எண்ணும் போதெல்லாம் "கடல்லயே இல்லையாம்" என்று கேலி செய்யும் என் மனசாட்சி.

எண்ண அலைகளில் நீந்திக் கொண்டிருந்த என்னை மீண்டும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ்சுக்கு அழைத்து வந்தது என் அன்னையின் குரல்.

"ஜங்சன் வந்துடுச்சுடி... லக்கேஜை தூக்கிக்கோ"

இருவரும் நடைமேடையில் இறங்கிய பிறகு சிவப்புச்சட்டை போர்ட்டர்கள் கண்ணில் பட அம்மா அவர்களை அழைக்கலாமா என்று கேட்க நானே தூக்கிக் கொள்கிறேன் என்று அவரைச் சமாதானப்படுத்திவிட்டு அவருடன் நெல்லை சந்திப்பு இரயில்நிலையத்தை விட்டு வெளியேறினேன்.

அம்மாவின் ஆஸ்தான சாந்தி ஸ்வீட்டின் முன்னே கூட்டம் வழக்கம் போல முண்டியடித்தது. என் இதழ்களில் நெளிந்த கேலிப்புன்னகையைப் பார்த்து முறைத்தார் அம்மா.

"போதும்டி! நான் போய் அல்வா வாங்கிட்டு வர்றேன்... நீ லக்கேஜை பார்த்துக்கோ" என்றபடி கடையை நோக்கிச் சென்றவர் திரும்பி வரும்போது பந்தயத்தில் ஜெயித்தவன் பதக்கத்தைப் பெருமையுடன் கொண்டு வருவது போல அல்வாவும், மிக்சரும் அடங்கிய பைகளுடன் வந்து சேர்ந்தார். ஆனால் வழக்கத்துக்கு மாறாக கொசுறாக இன்னொரு பையும் இருக்கவே அது என்ன என்று நான் கேட்டுவைக்க

"எங்கக்காவோட இளைய மருமகளுக்கு அதான் உன் மதினிக்கு மட்டும் ஸ்வீட் தனியா வாங்குனேன்... புதுசா கல்யாணம் ஆன பொண்ணு... அவளுக்கு என்ன ஸ்வீட்லாம் பிடிக்கும்னு அக்கா ஒரு லிஸ்ட் போட்டா.. நான் கிடைச்சதை வாங்கிருக்கேன்டி"

இதில் என் அம்மாவை அடித்துக் கொள்ள முடியாது. சென்ற வருடம் திருநெல்வேலி வருகையில் அப்போது புதுமருமகளாய் இருந்த மூத்த மதினிக்கு முறுக்கு பிடிக்குமென்று பாளை மார்க்கெட்டில் கடை கடையாக என்னைக் கூட்டிக்கொண்டு அலைந்தவராயிற்றே!

அவரை மென்சிரிப்புடன் பார்த்தபடி மெதுவாய் சந்திப்பு பேருந்து நிலையத்தில் அடியெடுத்து வைத்தோம். பேருந்துக்காக காத்திருக்கும் போது இரு இளைஞர்களின் வெறித்தப் பார்வை என் மீது விழ அதைக் கவனித்த என் அன்னையோ

"நான் நேத்தே சொன்னேன்ல திருநெல்வேலிக்கு வர்றப்போ அடக்க ஒடுக்கமா சுடிதாருக்குச் ஷால் போடுடினு... இப்போ பாரு" என்று நொடித்துக் கொண்டதோடு அவர்களை முறைத்துவைக்க அந்த இளைஞர்கள் இடத்தைக் காலி செய்தனர்.

அவளது இந்தக் கூற்றில் எரிச்சலுற்ற நான் "ஷட்டப்மா! இந்த ஃப்ளாரல் டாப்புக்கு துப்பட்டா போட்டாலே சகிக்காது... இதுல நீ டபிள் சைட் பின் பண்ணி போடச் சொல்லுற! ஏன்மா இவ்ளோ கர்நாடகமா இருக்க? அங்க பாரு! அவங்களும் திருநெல்வேலி பொண்ணுங்க தானே! அவங்களும் ட்ரென்டியா டாப், ஜெகின்ஸ் தான் நிக்கிறாங்க.. சோ இப்பிடி நீயே திருநெல்வேலி பொண்ணுனா இப்பிடி தான்னு ஒரு டெஃபனிசனை கிரியேட் பண்ணாத... ட்ரென்டியா டிரஸ் பண்ணுறவங்க எல்லா ஊருலயும் இருக்காங்க.. இவனுங்க இப்பிடி வெறிச்சு பார்க்குறானுங்கனா அவனுங்களோட வளர்ப்பு லெட்சணம் அப்பிடி... எல்லார் கிட்டவும் இருக்கிறது தானே எனக்கும் இருக்கு... எனக்கு என்ன எக்ஸ்ட்ராவா ஒரு ப்ரெஸ்ட் இருக்கா?" என்று அடிக்குரலில் சீறிய எனது வாயை அடைத்தார் அம்மா. "என்ன பேச்சு பேசுறடி? உன்னோட ஃபெமினிசத்தைக் காட்டுற இடம் இது இல்ல... சுடிதாருக்குச் சால் போடுடினு சொன்னா அதை மட்டும் கேளு"

இதன் பின்னும் வாதம் செய்தால் முட்டாள் ஆகப் போவது நானே! நான் எப்படி புரியவைப்பேன் சில வக்கிரம் பிடித்தக் கண்களுக்கு துப்பட்டா போட்ட அல்லது போடாத வளர்ந்த பெண்களும் ஒன்று தான், ப்ரில் வைத்த கவுன் அணிந்த சிறுபிஞ்சுகளும் ஒன்று தான் என்று. அவர்களின் பிரச்சனை உடையில்லை. பெண்ணில் உடல் தான். இதைச் சொன்னால் ஏற்றுக்கொள்ளும் இடத்தில்

அம்மாவும் இல்லை. சொல்லிப் புரியவைக்கும் நிலையில் நானும் இல்லை.இருவரும் காத்திருக்கையில் அதிரவைக்கும் இசையுடன் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்தது கிருஷ்ணவேணி டிரான்ஸ்போர்ட்டின் பேருந்து. திருநெல்வேலி சுற்றுவட்டாரப்பகுதிகளில் இப்பேருந்தின் பெயர் மிகவும் பிரசித்தம்.

"வேணி பஸ் வந்துட்டான்டி... போய் சீட்டைப் பிடி" என்றபடி பேருந்துக்குள் ஏறிய அம்மா அக்மார்க் கருங்குளத்துப் பெண்ணாகவே மாறியிருந்தாள். கருங்குளம்! அது தான் என் அன்னை பிறந்த கிராமத்தின் பெயர். பசிய வயல்களும், கடை கண்ணிகளும் நிறைந்த அவ்வூரை தாமிரபரணி அன்னை தன் கருணையால் வளமாக்கி இருந்தாள்.

ஊருக்குள் சிவனும், மலை மீது பெருமாளும் அருள்பாலிக்கும் அழகிய கிராமம். அங்கே தான் என்னை ஈன்ற அன்னையின் தாயாரான பேச்சியம்மாளும் அவரது மூத்த மகளும் வாசம் செய்துவந்தனர்.

பேச்சியம்மாள் ஆச்சிக்கு நான் என்றால் கொள்ளைப்பிரியம். எனக்கு அவள் காதுகளில் தொங்கும் பாம்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் அவள் மடியில் படுத்துக்கொண்டு பாம்படங்கள் ஆட அவள் சொல்லும் கதைகளைக் கேட்பது தான் கருங்குளம் வந்தால் என் முழுநேர பொழுதுபோக்கு.

ஆச்சியை நினைத்திருந்தவளின் தோளில் அம்மா தட்டவும் தான் ஊர் வந்ததே என் புத்தியில் உறைத்தது. இருவரும் பேருந்தை விட்டு இறங்குகையிலேயே அம்மாவை பிடித்துக் கொண்டனர் ஊர்வாசிகள்.

"என்னத்தா நல்லாருக்கியா? உன் மவளா இது? என்ன இப்பிடி கன்னம் ஒட்டிப் போய் கெடக்கு.. பேச்சித்தா பேத்தி மாரியே இல்ல போ"

வெகுளித்தனமும் அன்பும் சரிபாதிக்கலவையாய்க் கலந்திருந்த அவர்களின் பேச்சில் நெல்லைத்தமிழின் மணம் வீசி மற்ற எண்ணங்களை மறக்கடித்தது.

அம்மாவும் சளைக்காது "எனக்கென்ன பெரிம்மா? நான் நல்லா இருக்கேன்... நீங்க எப்பிடி இருக்கிய? மாசானம் அண்ணே மவனுக்குப் பொண்ணு பாக்கியளா?" என்று அவர்களிடம் நலம் விசாரிக்க ஆரம்பித்தாள். இந்த அம்மா நூறு சதவிகிதம் கருங்குளத்துக்காரி! இவரை இப்படியே விட்டால் வீடு போய்ச் சேர மாலை ஆகிவிடும் என்பதால் உரையாடலைப் பாதியிலேயே இடையிட்டு முடித்துவிட்டு வீட்டை நோக்கி அம்மாவைத் தள்ளிச் சென்றேன்.

செல்லும் வழியெங்கும் "ஏத்தா எப்பிடி இருக்க?", "என்ன மதினி முன்னாசல் வரை வந்துட்டு சாப்பிடாம போறியளே!" என்ற அன்பான அழைப்புகளும், அக்கறை கலந்த விசாரிப்புகளுமாக அக்கிராமம் வழக்கம் போல என்னை வசீகரித்தது.

ஒருவழியாக ஊர்க்காரர்களின் பாசமழையிலிருந்து தப்பித்து வீட்டை அடைந்தோம். என் தாத்தா கட்டிய மச்சுவீடு அது. வீட்டின் முற்றத்திலேயே முப்பது பேருக்குச் சாப்பாடு போடலாம். அவ்வளவு வீதியாக இருக்கும். தாழ்வாரமும், நீண்ட அகலமான அறைகளும், வீட்டின் பின்வாயிலில் மாட்டுத்தொழுவம் மற்றும் அழகிய கிணற்றடியோடு கூடிய அழகிய வீடு அது.

பெரிய ஜன்னலும் மரக்கதவுமாக கம்பீரத்துடன் நின்ற அவ்வீட்டின் தாழ்வாரத்தில் அமர்ந்து வெற்றிலை இடித்துக் கொண்டிருந்த பேச்சியம்மா ஆச்சியின் பாம்படங்கள் என்னைக் கவர ஓடிச்சென்று கட்டிக்கொண்டேன் நான்.

ஆச்சியின் சுருங்கிப் போயிருந்த தோலின் ஸ்பரிசத்தில் தெரிந்த அன்புக்கு வேறேதும் ஈடில்லை. ஆச்சியின் அன்பில் விளைவாய் எழுந்த உரத்தக்குரலில் வீட்டினுள் இருந்து என் பெரியம்மாவும் அவரது இளைய மருமகளும் எட்டிப் பார்த்தவர்கள் என்னையும் அம்மாவையும் கண்டதும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

பெரியம்மாவின் இளைய மருமகள் என்னை விடச் சிறுபெண்ணாகத் தோற்றமளித்தாள். என்னிடம் பிரியமாகப் பேசினாள். அதிலும் பெரியம்மா அவளைத் தங்கத்தட்டில் வைத்து தாங்காத குறை தான். என் இளைய மதினிக்கு இருபத்தியோரு வயது தான் ஆகிறதாம். ஆனால் என் சின்ன அண்ணனுக்கு வயது முப்பது. அது சரி! கிராமப்புறங்களில் வயதுவித்தியாசத்தை யாரும் பொருட்படுத்துவது இல்லையே.

இளைய மதினி அழகான அடக்கமான பெண் என்று வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்தார் பெரியம்மா. ஆனால் புகழப்பட்டவளின் முகத்தில் மகிழ்ச்சியிருந்தாலும் கண்ணில் உள்ள வெறுமை என்னைத் திடுக்கிடச் செய்தது.

பெரியம்மாவிடம் அது குறித்து கேட்டதற்கு அவளது பெற்றோர் சிறுவயதிலேயே தவறிவிட்டதாகவும் தாய்மாமா ஆதரவில் வளர்ந்த பெண் எனவும் கூறினார். பெற்றோரை இளம்வயிலேயே இழந்த சோகம் தான் அவளது கண்ணில் இன்னும் குடியிருக்கிறது என்று பெரியம்மாவைப் போல என்னால் நம்ப இயலவில்லை.

அதன் பின்னர் பெரியப்பாவைப் பற்றி கேட்டுவைக்க "உன் பெரியப்பாக்கு வேற பொழைப்பு இல்ல சின்னக்குட்டி... அவரோட சேக்காளி நம்ம ஊரு குளத்துக்குள்ள வெள்ளைரிக்கா போட்டுருந்தாரு.. அதை தூதுகுழிக்காரப்பயலோட ஆடு மேய்ஞ்சிடுச்சாம்... இவரோட சேக்காளி ஆட்டை வீட்டுக்குப் பத்திட்டு வந்துட்டாரு... இப்போ பஞ்சாயத்து பண்ணிட்டிருக்காவ" என்று அங்கலாய்த்தார் பெரியம்மா. பெரியப்பா ஊருக்கு உபகாரம் செய்யும் மனிதர். ஆனால் வெள்ளந்தி. பஞ்சாயத்து முடிந்து அவரும் திரும்பிவிட்டார்.

என்னையும் அம்மாவையும் கண்டதில் மகிழ்ந்து போனவர் மனைவியிடம் அன்றைக்கு விருந்து தூள் பறக்க வேண்டும் என்று கட்டளையிட்டு விட்டுப் பெரியம்மாவுக்கு வெங்காயம் உரித்துக் கொடுக்க ஆரம்பித்தார் அவர். படித்தவரான என் தந்தை கூட இன்னும் வரத் தயங்கும் இடம் சமையலறை. மனைவிக்காக சமைப்பது, சமையலில் கூடமாட உதவுவது இதெல்லாம் அவரது அகராதியில் மோசமான வார்த்தைகள். ஆனால் படிக்காத மனிதரான பெரியப்பாவின் செய்கையில் புரட்சி எதுவுமில்லை. மாறாக என் மனைவிக்கு என்னாலான உதவியைச் செய்கிறேன் என்ற அக்கறை மட்டுமே தெரிந்தது எனக்கு.

அதன் பின்னர் நான் மீண்டும் மதினியைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். அவளது வெறுமைக்கான காரணத்தை தனிமையில் அவளிடம் கேட்கலாம் என்று முடிவு செய்தவள் பயணக்களைப்பு தீர நீராட முடிவு செய்கையில் கிணற்றில் நீரிறைத்து இளைய மதினி தந்தாள். நானும் குளித்துவிட்டு உடை மாற்றினேன். அப்போது தாழ்வாரத்தில் மூத்த அண்ணனும் மூத்த மதினியும் வருவது தெரிந்தது. மூத்த மதினியின் முகம் சோர்ந்திருக்க

"நான் தான் வராதனு சொன்னனே... இப்போ யாருக்குலா அவஸ்தை?" என்று மூத்த அண்ணன் கடிந்தபடியே மூத்தமதினியைக் கைத்தாங்கலாக அவரது அறைக்கு அழைத்துச் சென்றவர் என்னிடம்

"சின்னக்குட்டி! எப்பிடில இருக்க? மதினிக்கு உடம்பு முடியலைலே... தப்பா நெனச்சிக்கிடாத" என்று அன்பு கலந்த குரலில் சொல்ல எனக்கு அவர் சொல்ல வருவது புரிபடவே புன்னகையுடன் தலையாட்டினேன்.

மூத்தமதினிக்கு எப்போதுமே மாதாந்திர உபாதையின் போது உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். அந்நேரங்களில் எல்லாம் மூத்த அண்ணன் அவரை பத்திரமாகப் பார்த்துக் கொள்வார். சிறு துரும்பைக் கூட நகர்த்த அனுமதித்ததில்லை. இப்போதும் அப்படி தான். செல்லும் போது மூத்த மதினியின் முகத்தில் தெரிந்த வேதனையைக் காட்டிலும் கணவன் காட்டிய அன்பில் நெகிழ்ந்த பாவம் தான் அதிகமிருந்தது.

கொடுத்துவைத்த மகராசி! உள்ளங்கையில் வைத்துத் தாங்கும் கணவன் அமைவது கடவுள் கொடுத்த வரம் அல்லவா! பெருமூச்சுடன் திரும்பிய எனது கண்ணில் பட்டுவிட்டாள் இக்காட்சியை ஏக்கத்துடன் பார்த்தபடி நின்றிருந்த இளைய மதினி. ஏக்கத்துடன் கூடவே கலக்கமும் குடியேறியிருந்தது அவளது விழியில். நான் அவளைக் கவனிப்பதைக் கண்டுகொண்டவள் சாமர்த்தியமாக அதை மறைத்தபடி மாமியாருக்கு உதவ அடுக்களையை நோக்கிப் பயணப்பட்டாள்.

அதன் பின்னர் ஊர்க்கதைகள் அனைத்துமே வீட்டின் கூடத்தில் வைத்து பேசப்பட்டன. அக்காவுடன் சேர்ந்து பேசுகையில் அம்மாவின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசம். நான் பேச்சியம்மா ஆச்சியின் மடியில் படுத்திருந்தபடி இடையிடையே இளைய மதினியைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

அவள் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறாளாம். மூன்று வருடங்கள் கிருஷ்ணாபுரத்தில் உள்ள பஞ்சாலையில் வேலை பார்த்துள்ளாள் என்று பெரியம்மா கூறவும் இளைய மதினி ஒன்றும் வெளியுலகம் தெரியாத பெண்ணில்லை என்பது புரிந்தது. சிறிது நேரத்தில் பெரியம்மாவுக்கு ஒத்தாசை செய்ய வந்தவள் என்னிடம் பேச ஆரம்பித்தாள்.

மாலை வரை அவளுடன் பேசியதில் அவளும் நானும் ஓரளவுக்கு நெருங்கிவிட்டோம் என்றே கூறவேண்டும். நான் வார்த்தைக்கு வார்த்தை சின்ன மதினி என்று விளித்துவைக்க அவளோ

"நான் உங்கள விட சின்னவ தான்... மதினினு கூப்பிட்டு வயசானவளா ஆக்காதிய" என்று சொல்ல நான் நகைத்துவிட்டு

"சின்னவளோ பெரியவளோ நீ என்னோட அண்ணன் பொண்டாட்டி ஆயிட்ட... நான் உன்னை மதினினு தான் கூப்பிடணும்... வேற வழியில்ல சின்ன மதினி" என்று சொல்ல சிறுகுழந்தை போல முகம் சுருக்கியவளின் பாவனை சிறிதுநேரத்தில் கலவரமாக ஆரம்பித்தது.

அவளுடன் தாழ்வாரத்தில் அமர்ந்திருந்த நான் யாரைப் பார்த்து இவ்வளவு கலவரம் அடைகிறாள் என்று திரும்பிப் பார்க்க அங்கே என் இளைய அண்ணன் பல்சரை நிறுத்திவிட்டு வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான். தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் கடன் வசூலிப்பு பிரிவில் வேலை செய்கிறான் அவன்.

கட்டியக் கணவனைக் கண்டதும் ஒரு புதுமனைவியின் முகத்தில் நாணம் தானே மின்ன வேண்டும். இங்கே என்ன வித்தியாசமாய் என்று நான் எண்ணும் போதே "சின்னக்குட்டி! எப்பலே வந்த?" என்றபடி என்னருகில் வந்தவனது பார்வை மனைவியிடம் என்ன கட்டளையிட்டதோ தெரியவில்லை, அடுத்த நொடி மதினி அடுக்களையைச் சரணடைந்தாள்.

ஆறு மணிக்கு விளக்கேற்ற வந்ததோடு சரி மீண்டும் இரவு வரை அவள் என் முகத்தில் விழிக்கவே இல்லை. இரவுணவுக்குப் பின்னர் அனைவரும் சிறிதுநேரம் முற்றத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க மூத்த மதினி சிறிது உற்சாகமடைந்திருந்தார். ஆனால் இளைய மதினியைத் தான் காணவில்லை.

அதன் பின்னர் நானும் மற்றவரின் பேச்சில் கலந்து கொண்டதில் அவளைப் பற்றி சிந்திக்கவில்லை. இரவு வெகுநேரமான நிலையில் அனைவரும் உறங்க செல்ல நான் ரம்யாவிடம் ஒரு முறை பேசிவிட்டுப் படுப்போம் என்ற எண்ணத்துடன் கிணற்றடிக்குச் செல்ல அடுக்களையைத் தாண்டினேன்.

அப்போது என் காதில் தெளிவாக விழுந்தது இளைய அண்ணனின் சீறல். ஒரு வேளை அண்ணனுக்கும் மதினிக்கும் எதுவும் பிரச்சனையாக இருக்குமோ என்ற கவலையுடன் எட்டிப் பார்த்தவளுக்கு மதினியின் கலைந்திருந்த தலையும், ஏனோ தானோவென்று சுற்றியிருந்த புடவையுமே கண்ணில் பட்டது. அவளது கன்னத்தில் கண்ணீர் வழிந்த தடம் நிலவொளியிலும் பின்வாயிலில் எரிந்த பல்பின் வெளிச்சத்திலும் தெளிவாகத் தெரிந்தது. அண்ணன் ஏன் இந்தச் சிறுபெண்ணிடம் சீறுகிறான் என்பது புரியாது விழித்த எனக்கு அதிர்ச்சியை ஊட்டியது என் இளைய அண்ணனின் வாய்மொழிகள்.

"மனுசனோட ஆசாபாசத்தை புரிஞ்சிக்காம என்னடி அழுகை வேண்டி கிடக்கு? உலகத்துல இல்லாததையா நான் பண்ணிட்டேன்?... புருசனுக்குப் பொண்டாட்டி கிட்ட எல்லா உரிமையும் இருக்கு... கண்ணைத் துடைச்சுட்டு உள்ளே வா" என்று கட்டளையிட்டவன் விறுவிறுவென்று அடுக்களையை நோக்கி வர நான் மெதுவாகக் கதவுப்பக்கம் பதுங்கி கொண்டேன்.

அவன் சென்றதும் கிணற்றடியை நெருங்கினேன். இன்னும் இளைய மதினி அழுது கொண்டு தான் இருந்தாள். பக்கத்தில் பார்க்கும் போது கழுத்தில், கையில் எல்லாம் சிவந்திருந்தது கண்ணில் பட்டது. மாலையில் விளக்கேற்றும் நேரத்தில் புடவையைப் பாந்தமாகக் கட்டி கூந்தலில் மல்லிகைச்சரத்துடன் இருந்தவளா இவள் என்று எனக்கு அதிர்ச்சி.

மல்லிகைப் மலர்கள் தலையில் ஆங்காங்கு ஒட்டியிருந்தன. கீழே கிடந்த மலர்கள் கசங்கிப் போயிருக்க, அங்கே கசங்கியது மல்லிகை மட்டுமல்ல, அதைச் சூடியிருப்பவளும் தான் என்பது என் புத்திக்கு உறைத்தது.

"சின்ன மதினி" என்று அழைத்ததும் என்னை நோக்கி திரும்பியவளின் விழியில் கண்ணீர் நிறைந்திருந்தது. அவளது நிலை வருத்தத்தைக் கொடுக்க அதற்கு காரணமான இளைய அண்ணன் மீது கோபம் வந்தது.

சிறுபெண்ணைப் பூ போல் கையாளத் தெரியாத இவனெல்லாம் ஏன் திருமணம் செய்ய வேண்டும்? மூத்த அண்ணன் மனைவிக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருப்பதைப் பார்த்தாவது இவன் திருந்த கூடாதா?

எந்தக் கேள்வியையும் கேட்கும் துணிவு எனக்கு இல்லை. கேட்டால் என்ன பதில் வரும் என்பதை நான் அறிவேன்.

"ஆம்பளைனா அப்பிடி தான்", "புருசன் வெளிவேலையா அலைஞ்சு திரிஞ்சு வர்றப்போ இதெல்லாம் சகஜம் தான்" , "ஏன் நாங்கலாம் கல்யாணம் கட்டி குழந்தை குட்டினு வாழலையா?", "கல்யாணவாழ்க்கைனா அப்பிடி இப்பிடி இருக்க தான் செய்யும், இதைப் போய் வெளியே சொல்லுவியா? என்ன பொண்ணு நீ?"

மேற்கூறிய சமாதானங்கள் யாவும் ரம்யாவுக்கு வந்தவை. இப்போது நான் இதைப் பற்றி கேட்டால் இளைய மதினிக்கும் அதே சமாதானங்கள் தான் சொல்லப்படும். அவளும் ரம்யாவைப் போல இதைக் கடந்து போக பழகிக் கொள்வாள். இவ்வாறு நான் எண்ணும் போதே மெதுவாக எழுந்தாள் இளைய மதினி.

"வலிக்குதா மதினி?" என்று எழுந்தவளிடம் பொதுப்படையாகக் கேட்டுவைத்தேன் நான்.

எழுந்தவள் வலியுடன் என்னைப் பார்த்து ஆழ்ந்த மௌனத்தை மட்டும் எனக்கு பதிலாக அளித்துவிட்டு வீட்டை நோக்கிச் சென்றாள். அவளது வலியைச் சொல்ல அவளுக்குத் தெரிந்த மொழி மௌனம் மட்டுமே. வாய் விட்டுச் சொன்னாலும் யாரும் அவளுக்கு ஆறுதல் சொல்லப் போவதில்லை. அவளது பிரச்சனைக்குத் தீர்வு சொல்லப் போவதில்லை. மாறாகப் பொறுத்துக்கொள்ளுமாறு அறிவுரை மட்டுமே வரும். அது வரும் முன்னரே மௌனமாக அனைத்தையும் பொறுத்துக்கொள்ள இளைய மதினி தயாராகிவிட்டாள் போல...

அதே நேரம் ஒரு பெண்ணாய் அவளது வலியை உணர்ந்த எனக்குள் முணுக்கென்று வலிக்க ஆரம்பிக்கவும் ரம்யாவின் சொற்கள் நினைவுக்கு வந்தது.

"இந்த வலியோட வாழ நான் பழகிட்டேன்டி.. வலிக்குனு தனியா ஒரு மொழி இந்த உலகத்துல இல்ல... அப்பிடி இருந்தாலும் அது மௌனம் மட்டும் தான்"

இப்போது எனக்குத் தெளிவாகப் புரிந்தது வலியின் மொழி மௌனம்! ஆம்! மௌனம் மட்டுமே!

**************

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

இது பிரதிலிபியோட கதை திருவிழா போட்டிக்காக எழுதுன சிறுகதை... எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரால் சிறந்த கதைகளுள் ஒன்று என பாராட்டப்பட்ட கதையும் கூட (வின் பண்ணல😜😜 அது வேற விசயம்)...

இங்க ரொம்ப நாளா எந்த கதையும் போஸ்ட் பண்ணலயேனு ஃபீல் பண்ணுனேன்... அதான் போஸ்ட் பண்ணுனேன்பா... டாட்டா🚶‍♀️🚶‍♀️🚶‍♀️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro