💖 வஞ்சி மனம் 34
அலர்மேல் மங்கை அருள்மொழியின் வருகைக்காக வாசலிலேயே எதிர்பார்த்து காத்திருந்தார். மணி பதினொன்றை தாண்டி மேலும் பத்து நிமிடங்கள் கடந்திருந்தது. எட்டு மணிக்கே சந்திரதாரா அவர் மாத்திரைகளை போட்டுக்கொண்டு தூங்கி விட்டார். மங்கை தான் என்ன செய்வதென்று தெரியாமல் மிட்டுவிடம் சிறிது நேரம், தோட்டத்தில் சிறிது நேரம் என்று நேரத்தை கடத்திக் கொண்டு இருந்து விட்டு இரவு வெகுநேரம் ஆகிய காரணத்தால் வெளியே உலாவாமல் வாசலிலேயே அமர்ந்து விட்டார். பிள்ளைகள் மூவரும் இல்லாமல் வீடு வெறிச்சோடி போய் விட்டது போன்ற எண்ணம் தோன்றியது அவருக்கு. மித்ரனை கூட அவர் அதிகமாக தேடவில்லை, சின்னத்தம்பி மற்றும் பாப்பாவை மிகவும் மிஸ் பண்ணுவதாக உணர்ந்தார்.
வாசலில் செக்யூரிட்டி இருப்பதால் பயம் ஒன்றுமில்லை என்றாலும், இவ்வளவு நேரம் ஆகியும் உலாவிக் கொண்டிருந்தால் அருள்மொழி அவரிடம் கண்டிப்பாக கோபித்துக் கொண்டு கால்களை அமர்த்தி விட கீழே அமர்ந்து விடுவார். தான் இது வரையில் சந்தித்த மனிதர்களில் அருள்மொழி மிகவும் வித்தியாசமான ஒரு மனிதர் என்று நினைத்து அலர்மேல் மங்கை சிரித்துக் கொண்டார்.
அருள்மொழியின் கார் ஹார்ன் சத்தம் கேட்டதும் எழுந்து போர்டிகோவிற்கு சென்றார் மங்கை.
"ஹாய் லோட்டஸ், ஸாரிம்மா! கொஞ்சம் வேலை இழுத்துடுச்சு, நீ சாப்பிட்டியாமா? மித்ராம்மா டேப்லெட்ஸ் எடுத்துக்கிட்டாங்களா.... இன்னிக்கு தெரபி செஞ்சாங்களா?" என்று கேட்ட அருள்மொழியிடம், "சந்திராம்மா அப்பவே படுத்துட்டாங்க மாமா, ஒரு சின்னப்புள்ள வந்து கைக்கு எக்சர்சைஸ் செஞ்சுட்டு போச்சு.
நீங்க சாப்பிட்டீங்களா மாமா?" என்று கேட்டார். அவருடன் இணைந்து வீட்டிற்குள் வந்த படி,
"இல்லம்மா! நீ வீட்ல எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பன்னு தெரியும், அதான் கொஞ்சமா சாப்பிட்டுட்டு வந்துட்டேன், இந்தா மங்கை ரெண்டு நாள் முன்னாடி ஒரு படம் பார்த்துட்டு ரொம்ப நேரமா என் கையைப் பிடிச்சுக்கிட்டு உட்கார்ந்துட்டு இருந்தியே..... அதை மாதிரி ஒரு கதை தான் இதுவும், "ரெட் டீ" ன்னு பேரு, பி.ஹெச் டேனியலோடது. பிடி!" என்று அவள் கையில் புத்தகத்தை அவள் கையில் நீட்டியவரை போட்டுத் தள்ளுவது போல் ஒரு நெருப்பு பார்வை பார்த்தார் மங்கை.
"நல்லா வாங்கிட்டு வந்தய்யா பொண்டாட்டிக்கு குடுக்கறதுக்கு சாமான்; நம்ம வீட்டு குத்து விளக்கு வச்சிருக்கிற முக்காலியோட கால் ஆடிட்டு இருக்கு, முக்காலிக்கு முட்டு குடுக்க இந்த புத்தகத்தை வேணா அடியில வச்சுக்கறேன், நமக்கு ஏபிசிடீயே ஊடயில தடுக்கும், இதுல இங்கிலீசு புத்தகத்தை குடுத்து...... உன்னைய எல்லாரும் ரொம்ப நல்லவன்னு சொல்றது சரியாத்தான்யா இருக்கு. உனக்கு ஒண்ணுமே தெரியமாட்டேங்குது!" என்று சொல்லிக் கொண்டு இருந்த மங்கையை டேபிளில் அமர்ந்து இரு கைகளை ஊன்றி தலை சாய்த்து பார்த்து கொண்டு இருந்தார் அருள்மொழி.
"மங்கை நீ என்னோட வொய்ப்மா, நம்ம கம்பெனியில நான் ஜி.எம் போஸ்டில இருக்கேன்; கம்பெனில ஏதாவது ஒரு அன்அஃபிசியல் பார்ட்டி, கெட் டூ கெதர் அப்படின்னு அரேன்ஜ் பண்ணினா நீ வீட்ல இருக்கிற மாதிரி புடவையை தூக்கி சொருகிட்டு வர முடியாது, ஜிஎம் அவர் வொய்ப்பை ஒழுங்கா ட்ரீட் பண்ண மாட்டார் போலிருக்குன்னு எல்லாரும் என்னைத் தான் தப்பா பேசுவாங்க. அதுக்காக ஒரே நாள்ல உன்னை ஸ்பீச் எல்லாம் குடுக்க சொல்லல, நீ நமக்காக கொஞ்சம் கொஞ்சமா இம்ப்ரூவ் ஆகிக்கிட்டா நல்லா இருக்கும்ன்னு சொல்றேன். மாமாவுக்கு இந்த மங்கையை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு, பட் மத்தவங்க யாருமே உன்னை ஒரு எழுத்து கூட தப்பா பேசிடக் கூடாது லோட்டஸ் பொண்ணு; உன்னால கண்டிப்பா செய்ய முடியும், உனக்கு எபிளிட்டி ஐ மீன் கத்துக்கிற திறன் எல்லாம் நிறைய தான் இருக்கு; ஆனா நீ தான் கொஞ்சமே கொஞ்சம் மனசு வக்கணும்!" என்று கெஞ்சியவரிடம்,
"யோவ் நடுராத்தியில ஏன்யா என் உசுரையும், பலனையும் வாங்குற..... ஒரு படத்தை பார்த்து அழுதது குத்தமா? அதுக்கு கொண்டாந்து வக்கிற பாரு இவ்வளவு பெரிய ஆப்பு; எந்த கொல்லையில போறவன் உன்னைய பார்த்து நாக்கை மடக்கி கேள்வி கேட்டா உனக்கென்னய்யா வந்துச்சு? வேலைக்காரிய தான் கூட்டிட்டு போய் வீட்டுக்காரி ஆக்கிட்டேன்னு சொல்லு. பார்ட்டிங்கிற.... என்னவோ சொல்ற; நீ பேசுறதுல பாதி எனக்கு புரிய மாட்டேங்குது, நம்ம பாப்பா இருந்தாவது அர்த்தமாவது சொல்லும். நான் இங்கிலீசு கத்துக்கிறது உனக்கு சந்தோஷம்னா சொல்லிக் குடு, கத்துக்குறேன். ஆனா நான் ரொம்ப ரொம்ப மக்கு மண்ணாந்தைன்னு எங்க ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாரே சொன்னாரு. பார்த்துக்க! அப்புறமேட்டு உனக்கு பாடம் மறந்து போய்டாம.......
இந்த புத்தகத்தை பத்திரமா வச்சுட்டு வந்துடட்டுமா? நீ முகம் கழுவிட்டு வா, சாப்பாடு எடுத்து வக்கிறேன். நேரத்துக்கு சாப்பிடணும்யா; வேலையை இழுத்துப் போட்டு செஞ்சுட்டு ஏதாவது நோக்காடு வந்துடாம..... பெரிய தம்பி உன்னைய கூப்பிட்டுச்சாய்யா? எங்க கிட்ட பேசுச்சு; சின்னத்தம்பி ஒண்ணும் பிரச்சனை எல்லாம் செய்யலையாம்.... ஏதேதோ வெளியூர் போய் சுத்திப் பார்த்துட்டு காலேஜ்ல சேரப் போகுதாம்!" என்று பேசிக் கொண்டே அருள்மொழி சாப்பிட அனைத்தையும் எடுத்து வைத்தவாறு இருந்தார் மங்கை.
"மங்கை நம்ம கூட மித்ரா வந்த பிறகு ஒரு நாலு நாள் டூர் அடிச்சுட்டு வரலாமாமா..... எனக்கு மாசம் ஒரு லட்சம் சம்பளமாம்; நம்ம ஐசு மித்ரா வேலை, முக்கி முக்கி செலவு பண்ணினா கூட இருபதாயிரத்துக்கு மேல செலவு பண்ண முடியாது. ஸோ ஏதாவது தேவையில்லாத செலவு செஞ்சா தான் பணத்தை காலி பண்ண முடியும்!" என்றவரிடம் ஆச்சரிய பாவனையில்,
"அடங்கொப்புரானே.... ஒரு லட்சமா; உனக்கு சம்பளமாவா? அந்த ஆஃபிஸ்ல இன்னும் மிச்சம் மீதி ஏதாவது இருக்கு?..... மொத்தத்தையும் வாரி வாயிலல்ல போட்டுருப்பானுக;
ஐயாயிரம் ரூபாய் போதும், நம்ப பாப்பா கிட்ட எல்லாம் இவ்வளவு சம்பளம் வாங்காதய்யா; புள்ளைங்க பாவம்!" என்று சொன்னவரிடம் புன்னகையுடன் சாதத்தை பிசைந்து கொடுத்து, "சாப்பிடும்மா; வயிறு பசிக்கும்ல; நானும் கல்யாணம் ஆன நாள்ல இருந்து பார்க்குறேன், ஒரு நாள் கூட நீ சாப்பிட்டியான்னு கேள்வி கேட்டா பதிலே சொல்ல மாட்டேங்குறியே.... நான் ஆஃபிஸ்ல நல்லா சாப்பிட்டேன், நீ சாப்பிட்டு இருக்க மாட்டன்னு தான் நானும் இன்னும் சாப்பிடலைன்னு சொல்லி எடுத்து வக்க சொன்னேன், நீயே சாப்பிட்டுக்கிறியா? ஊட்டி விடட்டுமா மங்கை?" என்று கேட்டார் அருள்மொழி.
அவரது அன்பில் நெகிழ்ந்து போய் அமர்ந்து இருந்தார் அலர்மேல் மங்கை. அவரை தன் குடும்ப உறுப்பினர் போல் நினைக்கும் சந்திரதாரா கூட சாப்பிடு என்று சொல்லி தான் பார்த்திருக்கிறார். ஆனால் தன் மனைவியின் பசியை அவள் வாயால் செல்லாமலேயே உணர்ந்து தட்டில் உணவைப் பிசைந்து அவர் கண்ணசைவுக்காக காத்திருக்கும் இந்த மாதிரி கணவர் கிடைக்க தான் என்ன பாக்கியம் செய்திருக்கிறேன் என்று யோசித்துக் கொண்டிருந்த போது,
"சாப்பிடவேயில்ல, அதுக்குள்ள எதுக்கு கண்ணுல தண்ணி வருது மங்கை.... இன்னிக்கு குழம்பு கேவலமா இதுக்கு; இந்த அருள் சாப்பிடாம தப்பிச்சுட்டானேன்னு நினைச்சு அழுவுறியா?" என்று கண்சிமிட்டி கேட்டார் அருள்மொழி.
"தட்டை குடு! நானே சாப்பிட்டுக்கிடுவேன், நீ போய் டீவி பாருய்யா!" என்று கண்களைத் துடைத்து கொண்டு அருள்மொழியிடம் இருந்து தட்டை வாங்கிக் கொண்டவரிடம்,
"மங்கை கையில உருண்டை பிடிச்சு கொஞ்சம் சாதம் தர்றியா? சாப்பிடணும் போல இருக்கு!" என்றார் அருள்மொழி.
மங்கை சந்தோஷமாக சாப்பாட்டை அவர் கைகளில் வைக்க, "கம்பெனியில இப்போதைக்கு ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்ல மங்கை. இப்படி எல்லாம் எங்கேயாவது இடிக்கும்ன்னு கெஸ் பண்ணி தான் முதல்லயே ஐசு ஜ்வல்ஸையும் பணமாக்கிட்டோம், அத செய்யாம விட்டுருந்தா இப்போ ரொட்டேட்டிங் கேப்பிட்டளை மேனேஜ் பண்ணியிருக்க முடியாது, எப்படியும் நிலைமை சரியாக இன்னும் ரெண்டு மூணு மாசமாவது ஆகும், மெதுவா தான் சரி பண்ணணும்! ஆனாலும் 29 வருஷ பிஸினஸ் எக்ஸ்பீரியன்ஸ் உள்ள ஒரு ஆளுக்கு போனா போகுது 5000 ரூபாய் எடுத்துக்கன்னு பெருந்தன்மையா சம்பளம் குடுத்த பார்த்தியா...... நீ அங்க நிக்குற மங்கை! நிதானமா சாப்பிட்டுட்டு பெட்ரூமுக்கு வா, அவசரமா எடுத்து வச்சுட்டு வந்தன்னா மறுபடியும் கூட்டிட்டு வந்து ஊட்டி விடுவேன்! போய் படுக்கட்டுமா லோட்டஸ்!" என்று கேட்டவரிடம் தலையாட்டி விட்டு ரசித்து சாப்பிட அமர்ந்தார் மங்கை.
சௌஜன்யா அன்று அவளது கணவன் வீட்டில் இருந்து தனது பிறந்த வீட்டிற்கு மறுவீடு சடங்கிற்காக வந்திருந்தாள். அவளது ஆசை மூட்டைகளையெல்லாம் அவளது கணவனிடம் முதலிரவிலேயே அவிழ்த்து கொட்ட அவன் ஒரே வார்த்தையில்,
"உன் கனவுகளை நீ தான் துரத்திட்டு ஓடணும். அந்த வேலையை என் தலையில கட்டக் கூடாது, பணம் வாழ்க்கைக்கு அவசியம் தான், பட் நம்ம அடிக்ட் ஆகுற அளவுக்கு இல்ல!" என்று சொல்லி உரையாடலை முடித்து விட்டான்.
"பாருங்கப்பா எல்லாம் உங்களால தான்! என் ஹப்பி எப்படி பேசுறாரு தெரியுமா...... சிவு எவ்வளவு பெரிய பணக்காரன் அதுவும் இங்க இருக்கிற திருப்பூர்ல; அவனை கல்யாணம் பண்ணி இருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்ப்பா...... நான் அவனை மிஸ் பண்ணிட்டேன்ப்பா!" என்று சொன்ன தன் மகளை ஒரு அருவருப்பான உணர்வுடன் பார்த்தார் ராஜசேகர்.
"சிவா நீ இருக்கிற திசைக்கே ஒரு பெரிய கும்பிடா போட்டுட்டான்; உன் கல்யாணத்தன்னிக்கு அவன் வரல, எங்க நீ அவன் ரிஷப்ஸனுக்கு போய் தொந்தரவு குடுப்பியோன்னு நினைச்சு என்னையும் இன்வைட் பண்ணல, உன்னால எனக்கும் அவனுக்குமான
ஒரு நல்ல ப்ரெண்ட்ஷிப் கெட்டுப் போயிடுச்சு சௌஜு; இனிமேலாவது தேவையில்லாம குழப்பிக்காம உனக்கு கிடைச்சிருக்கிற வாழ்க்கையை அழகா வாழப் பழகு!" என்று அறிவுரை சொன்ன தன் தந்தையிடம் முணுமுணுத்த படி ஏதோ திட்டிக் கொண்டு சென்றாள் சௌஜன்யா.
சிலரது இயல்புகள் எவ்வளவு தான் தவறாக இருந்தாலும் அவர்களது இயல்புகளை அவர்களாகவே வருந்தி திருத்திக் கொண்டால் தான் உண்டு, அப்படிப்பட்டவர்களில் ஒருத்தி தான் சௌஜன்யா! இவர்கள் பக்குவமடைய காலம் தான் கைகளைக் கட்டிக் கொண்டு காத்திருக்க வேண்டும்.
நேத்ரன் அமிர்தவர்ஷினியின் வீட்டிற்கு வந்திருந்தான், தன் மனதில் உள்ளதை அவளிடம் வெளிப்படுத்தி விட்டான். அவளுக்கும் தன்னைப் பிடித்திருக்கிறது என்றும் தெரிந்து கொண்டான், அண்ணனிடம் இருந்தும் அமிர்தவர்ஷினி வீட்டிற்கு செல்வதற்கு அனுமதி கிடைத்து விட்டது, பின் என்ன.....கைகளால் தொடையில் தாளமிட்டுக் கொண்டே,
"காதல் காதல் காதலில் நெஞ்சம்
கண்ணாமூச்சி ஆடுதடா!
தேடும் கண்ணில் படபடவென்று
பட்டாம்பூச்சி ஓடுதடா!" என்று பாடிக் கொண்டு தன் பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருந்தவன் தொடையில் கிள்ளினாள் அமிர்தவர்ஷினி.
"ஷ்.....ஆ! வண்டியை பார்த்து ஓட்டு மினி செல்லம், என் வாழ்க்கையும், உயிரும் இப்போ உன் கையில தான் இருக்கு!" என்று கண்சிமிட்டியவனிடம்
"உங்க கிட்ட மூணு தடவ ஒரே கேள்வி கேட்டுட்டேன் நேத்ரா. பதில் தான் சொல்ல மாட்டேங்குறீங்க!" என்று சலித்துக் கொண்டாள் அமிர்தவர்ஷினி.
"உன்னோட லவ்வர் பாய் கொஞ்சம் சந்தோஷமா இருந்தா உனக்கு பொறுக்காதா....... என் சைல்டு ஹுட்ல இருந்து எனக்கான ஸ்ட்ரெஸ் பஸ்டர் புக்ஸ் தான் மா; என்னையும் அம்மாவையும் காப்பாத்திக்கறதுக்கு ஒரு செக்யூர்டு ஜாப் வேணும், உடனே வேணும், பெட்டரா வேணும்ன்னு ஒவ்வொரு நாளும் ஒரு தேடலோட தான் நாள் ஆரம்பிக்கும்! ஒரு வாய்ப்பை கூட நான் மிஸ் பண்ணினதேயில்ல. சில நேரம் செத்துப் போய்டலாம்னு கூட தோணியிருக்கு, அப்படியே அந்த கோபத்தையெல்லாம் நான் பாஸிட்டிவ் எனர்ஜியா கன்வர்ட் பண்ணிட்டேன். அவ்வளவு தான் என்னோட ஸ்கோர்ஸோட சீக்ரெட்!" என்று சொல்லி புன்னகைத்தவன் தோளை இடது கையால் பற்றியவள்,
"ஸாரிப்பா...... தேவையில்லாம உங்கள ஹர்ட் பண்ணிட்டேனா?" என்று கேட்டவளை
"வர்ஷ்...... காரை ஸ்டாப் பண்ணு!" என்றான் நேத்ரன்.
"ஓய்....இதென்ன திருப்பூரா, கலிபோர்னியா போயிட்டு இருக்கோம். இப்போ எல்லாம் ஸடனா வண்டியை ஸ்டாப் பண்ண முடியாது. ஆமா ஏன் திடீர்னு டென்ஷன் ஆகுற நேத்ரா?" என்று அவள் கேட்க அவன் முகத்தில் சிரிப்புடன்,
"ம் நேத்ரா ஓகே! நீ அதுலயே பிக்ஸ் ஆகிக்க..... இனிமே என்னைய அப்பா, மாமா, பெரியப்பா, தாத்தான்னு எல்லாம் கூப்பிடாத, கேக்கறதுக்கு நல்லாவே இல்ல!" என்று சொல்லி விட்டு மறுபடியும் பாடலைத் தொடர்ந்து தாளமிட்டுக் கொண்டிருந்தான்.
அமிர்தவர்ஷினியின் பெற்றோர் நேத்ரனிடம் மிகவும் இயல்பாக பழகினர். அவனது கூச்சம், ஒதுக்கத்தை எல்லாம் மறந்து விட்டு சிறிது நேரத்தில் நேத்ரனும் அவர்களது வேவ் லென்த்துக்கு சமமாக பழக ஆரம்பித்து விட்டான்.
"டாடி ஐம் இன் லவ் வித் நேத்ரன்! அவர் ஸடடீஸ் முடிஞ்சதுக்கப்புறமா நாங்க மேரேஜ் பண்ணிக்குவோம். அதுக்கப்புறம் அவர் கூட நான் இண்டியாவுக்கு போயிடுவேன். அதுக்குள்ள நீயும் அம்மாவும் இன்னொரு தம்பிப் பாப்பா வேணும்னா ரெடி பண்ணிக்கோங்க!" என்று வர்ஷினி சொல்ல நேத்ரனுக்கு உணவு புரையேறியது.
தண்ணீரை குடித்து தன்னை சற்று சமன் செய்து கொண்டவன்,
"எக்ஸ்க்யூஸ் மீ அங்கிள்..... ஐ வில் பி பேக்!" என்று அவரிடம் சொல்லிவிட்டு விரைவாக எழுந்து சென்றான். சிறிது நேரத்தில் அவனை தேடி வந்த வர்ஷினி,
"என்னாச்சு நேத்ரா.... எதுக்கு ஓடி வந்து இங்க தனியா நின்னுட்டு இருக்க?" என்று கேட்டவளிடம்
"இல்ல....இன்னும் ஒரு வருஷத்துல ஒரு மச்சினன் கிடைச்சா எப்படி இருக்கும்ன்னு இமாஜின் பண்ணி பார்த்தேனா........சிரிப்பு வந்துடுச்சு. அதான் ஓடி வந்துட்டேன்!" என்று சொன்னவனிடம்,
"எங்க அப்பா அம்மாவே நான் சொன்ன விஷயத்தை லைட்டா எடுத்துக்கிட்டாங்க. நீ எதுக்கு வெளியே வந்து இப்படி நெளியுற, உள்ள வா! உனக்கு ஸ்டடீஸ் ஆரம்பிச்சதுக்கப்புறம் மன்த்லி ஒன்ஸ் இங்க வந்துட்டு போ! அப்பா அம்மாவை பார்த்து நீயும் நம்ம லவ் லைஃப்ல கொஞ்சம் பிக்கப் ஆகிடுவ!" என்று அவனை நோக்கி உதடு குவித்தாள் வர்ஷினி.
"அடிங்க...... எனக்கு ஸ்டார்ட்டிங் ட்ரபிள் இருக்குன்னு உன் கிட்ட சொன்னேனாடீ; எங்க சிவாண்ணா மாதிரி நானும் லவ்ல ரொம்ப டீசன்ட்டா இருக்கணுமேன்னு பார்க்குறேன், இல்ல..... உங்க அப்பா அம்மா கிட்ட கேட்டியே அந்த கிப்ட்டை நான் வேணும்னா உனக்கு குடுக்கட்டுமா? ஏய் வர்ஷ்..... எங்கடீ ஓடுற; சும்மா தான் கேட்டேன். நில்லுடீ!" என்று கூவி அழைத்தபடி அவள் வீட்டிற்குள் சென்றான் நேத்ரன்.
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டான்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro