💖 வஞ்சி மனம் 22
அதிகாலையில் வழக்கமான நேரத்திற்கு சிவமித்ரனின் உறக்கம் கலைந்து அவன் எழ முயன்ற போது அவனால் அது சுலபமாக முடிகிற காரியமாக தெரியவில்லை. அவனது வாட்டர்பெட் அவனை ஒரு பற்றுக்கோடாக அழுந்தப் பற்றிக் கொண்டு ஒரு கையையும், ஒரு காலையும் அவன் மேல் போட்டுக் கொண்டு சுகமாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
அவளது உறக்கத்திற்கு இடைஞ்சலை ஏற்படுத்த விரும்பாமல் மெல்ல அவளிடமிருந்து பிரிந்து நகர்ந்தவன், சற்று புத்துணர்வு ஏற்படுத்திக் கொண்டு வந்ததும்
அவனது யோகாசனங்களை ஆரம்பித்தான். குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் நேரம் இவனுக்கான ஆசனங்களை செய்து கொண்டிருக்க முடியாது என்பதால் மித்ரனின் பயிற்சி நேரம் குழந்தைகளின் வகுப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே முடிந்து விடும். கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பவளையும், அவளது மாமாவையும் தவிர மற்ற அனைத்து மாணவர்களும் அவர்களது ஆர்வத்தினால் இன்னும் இன்னும் என்று கேட்டு கற்றுக் கொள்பவர்கள் தான்! ஆனால் என்ன முயற்சி செய்தாலும் தனது வருங்கால மனைவியின் மனதில் யோகக் கலையின் மீது நாட்டத்தை கொண்டு வர முடியவில்லையே என்று மித்ரனுக்கு சற்று வருத்தம் தான்!
நேத்ரன் தான் அவனிடம், "ஐஷுமா தண்ணியில விளையாடுறதை தான் ரொம்ப என்ஜாய் பண்ணி செய்றா சிவாண்ணா! அவளுக்கு எது வருதோ அதை நாம செய்ய வைக்கலாம். நீங்க தேவையில்லாம அவளை ஃபோர்ஸ் பண்ணாதீங்க. ஸ்விம்மிங் கூட பிட்னஸ்க்கு பெஸ்ட் எக்சர்சைஸ் தானே!" என்று சொல்ல எப்படியோ அவளுடைய உடல் நிலை ஆரோக்யமாக இருந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்து மித்ரனால் தம்பியின் பேச்சுக்கு தலையாட்ட தான் முடிந்தது.
"பாவா..... இதெல்லாம் வேண்டாம் ஒழுங்கா நில்லு, ஐயோ எனக்கு பயமாயிருக்கு!" என்ற ஐஸ்வர்யாவின் பதட்டக்குரல் காதில் கேட்டதும் நிதானமாக தன் யோகா போஸில் இருந்து விடுபட்டவன், "குட்மார்னிங்டா வரு பேபி, என்ன சீக்கிரமே எழுந்துரிச்சாச்சு. மணி 5.30 தானேடா ஆகுது......நைட் தூங்க ரொம்ப லேட் ஆகிடுச்சு; இன்னும் கொஞ்ச நேரம் தூங்கும்மா. அப்புறம் தலைவலிக்குதுன்னு சொல்லுவ!" என்று சொன்ன மித்ரனை, "இங்க வா மித்து, இதென்ன உன் யோகாசனாஸா.... இவ்வளவு டெரரா இருக்கு. அரைத்தூக்கத்துல கண்ணைத் திறந்து பார்த்தா உன்னோட ரெண்டு கால் மட்டும் அந்தரத்தில நிக்குது. அதான் பயந்து கத்திட்டேன். இனிமே இதெல்லாம் என் கண்ணு முன்னால செய்யாத, நீ செய்யுறத பார்த்தாலே என் உடம்பு அங்கங்கே முறுக்கிக்கும் போலிருக்கு........அப்பா!" என்று உடம்பை நெளித்தவளை கட்டியணைத்துக் கொண்டு,
"இதெல்லாம் கொஞ்சம் டஃப் ஆசனாஸ் மா, ஆனா எனக்கு பழகிடுச்சு. என்ன கொஞ்சம் கவனமா செய்யணும். அவ்வளவுதான். சரி.....
நைட் நல்லா தூங்கினியாம்மா? மித்து கூட உறங்கினது ஒண்ணும் டிஸ்டர்பென்ஸா இல்லையே?" என்று புன்னகையுடன் கேட்டவனிடம் மெலிந்த குரலில்,
"என்னப்பா இப்படி கேட்டு என்னைய ஃபீல் பண்ண வைக்கிற நீ.....அப்பா அம்மா கூட நான் தூங்கறப்போ கூட அவங்க பாட்டெல்லாம் பாடினது இல்ல. நிறைய பேசுவாங்க. கூட விளையாடுவாங்க. பட் நான் படுக்கணும்னா என்னோட பெட்ரூம்ல தனியா தான் படுத்துக்கணும்; நேத்து நைட் தான் உன் கையை கட்டிப்பிடிச்சுட்டு உன் பாட்டு
கேட்டுட்டே ரொம்ப ப்ளெசன்டா தூங்கினேன், ஆனா உன் மேல உருண்டு வந்து உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டேன் போலிருக்கு! ஸாரிடா செல்லம்! இனிமே தூக்கத்தில கொஞ்சம் கவனமா இருக்கேன்!" என்று சொன்னவளை முறைத்தவன்,
"ம்ம்ம்! எப்படி கவனமா இருப்பீங்க மேடம்..... என் பக்கத்தில வராம தள்ளி ஒரே பெட்ல நீங்க ஒரு மூலையில.... நான் ஒரு மூலையில படுக்கணுமா? லூசு வரு பேபி.... நீ என்னை டிஸ்டர்ப் பண்றது தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. என்ன எப்பவும் நான் பெட் மேல படுத்துருப்பேன். நேத்து என்னோட லவ்லி பெட் என் மேல படுத்து இருந்தது. ஆனா நம்ம ரெண்டு பேருக்கும் ஏன்டா இன்னும் கல்யாணம் ஆகலனு நினைச்சு நேத்து நைட் ரொம்ப ஃபீல் பண்ணிட்டேன் வரு..... கஷ்டப்பட்டு தான் கண்ட்ரோல் பண்ணிக்க வேண்டியதா போச்சு!" என்று சொன்னவனிடம் தலைகவிழ்ந்த படி, "போடா.....நீ ரொம்ப பேசுற; சரி நீ உன் ஆசனாஸ், மார்னிங் செஷனை முடிச்சுட்டு வா! நான் போய் மிட்டு பேபி சாப்பிட்டானான்னு பார்க்குறேன்!" என்றவளிடம்,
"வரு பிள்ளை ஓரளவு வளர்ந்துட்டான். இனிமே அவனுக்கு ஸ்பூன் ஃபீடிங் பண்ணாத. அவனுக்கு தேவையானதை அவனே பாக்ஸ்ல இருந்து எடுத்து சாப்பிடுவான்!" என்று மித்ரன் சொல்ல ஐஸ்வர்யா அவனிடம் சம்மதமாக தலையாட்டி விட்டு சென்றாள்.
வீட்டிற்குள் நுழைந்தவளை வியப்பாக பார்த்த அனைவரையும் நோக்கி புன்சிரிப்பை உதிர்த்தவள், "எல்லாருக்கும் குட்மார்னிங்!" என்றாள்.
அருள்மொழி அவளிடம், "ஐசு என்னடா அதிசயமா இருக்கு...... மித்ரா க்ளாஸ்க்கு அதுக்குள்ள ரெடியாகி பார்த்துட்டு வந்தியா.... ஆனா இன்னும் க்ளாஸ் ஆரம்பிக்க டைம் இருக்கு போலயேடா; சீக்கிரம் வரணும்ன்னு திட்டிட்டானா..... நைட் ட்ரெஸ்லயே போயிட்ட போலிருக்கு. வேற ட்ரெஸ் மாத்திட்டு போடா!" என்று சொன்னார்.
சந்திரதாரா புன்னகையுடன், "என்னடா ஐஷு, நேத்து தான் அரங்கேற்றம் முடிச்ச, இன்னிக்கு ரெஸ்ட் எடுத்திருக்க வேண்டியது தானே?" என்று கேட்க நேத்ரன் கிண்டல் சிரிப்புடன்,
"அப்புறம் யாரும்மா உங்க பையன் கிட்ட ரைடு வாங்குறது..... அதான் ஓடியிருப்பா...... இல்ல கோழி!" என்றான் கண்சிமிட்டி.
அலர்மேல் மங்கை முகத்தை நொடித்து, "சின்னத்தம்பி பாப்பா உங்க அண்ணியாக போறவுக. மரியாதையா பேசணும். பெரிய தம்பிக்கு தெரிஞ்சா சங்கடப்படும்ல....!" என்று கேட்டவரிடம்,
"ம்ஹூம்! அவனும் சேர்ந்துட்டு தான் என்னை ஓட்டுவான். ஆனா நான் இப்போக்ளாஸுக்கு போகல, நேத்து நைட் நானும், மித்துவும் அவுட்ஹவுஸ்லயே பேசிட்டு இருந்துட்டு தூங்கிட்டோம். இப்போ தான் எழுந்துரிச்சு வர்றேன்!" என்று ஐஸ்வர்யா சொல்லவும் அலர்மேல் மங்கை முகவாயில் கை வைத்து, "அடங்கொப்புரானே!" என்றார். சற்று நேரம் அங்கு ஒரு சங்கடமான அமைதி நிலவியது.
சற்று செருமிக் கொண்ட நேத்ரன், "ஹலோ என்ன எல்லாரும் பேன்னு முழிச்சுட்டு நிக்குறீங்க....? சிவாண்ணாவும், ஐஷுமாவும் பேசிட்டு இருந்துருப்பாங்க. தூக்கம் வந்துருக்கும். தூங்கியிருப்பாங்க. அப்படிதானேம்மா?" என்று கேட்ட தன் நண்பனிடம்,
"இல்லடா நேத்து என் சந்தோஷத்தை மித்து கூட ஷேர் பண்ணிக்க நான் தான் அவனை துண்டால பொத்தி இழுத்துட்டு போனேன்!" என்று சொன்ன ஐஸ்வர்யாவை
"கொன்னுடுவேன்...... கொஞ்ச நேரம்
வாயை மூடிட்டு சும்மா நில்லுடீ!" என்று அடிக்குரலில் மிரட்டினான் நேத்ரன்.
சந்திரதாரா புன்னகையுடன் அருள்மொழியிடம், "ஸார் சீக்கிரம் ஒரு நல்ல நாளா பாருங்க. கல்யாணத்தை முடிச்சிடலாம்! பிள்ளைங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க. அப்புறம் எதுக்கு தேவையில்லாம நாளை கடத்திட்டு.....!" என்று சொன்னதை அருள்மொழியும் ஒப்புக் கொண்டு திருமணத்திற்கு தேதி குறிப்பதாக சொன்னார்.
"சிவாண்ணாவுக்கு கல்யாணம் பண்றதெல்லாம் இருக்கட்டும். பட் அதுக்கு முன்னாடி நம்ம வீட்டு டான்ஸிங் குயினுக்கு எல்லாரும் சேர்ந்து பேசி ஒரு கிப்ட் குடுக்கணும். சும்மா தெறிக்க விட்டுட்டா. அதுக்காக கண்டிப்பா அவளுக்கு ஒரு ரெஹக்னிஷன் குடுத்து ஆகணும். ஐஷுமா உனக்கு என்ன வேணும்ன்னு கேளு. அதை செய்யலாம்!" என்று நேத்ரன் சொல்ல ஐஸ்வர்யா சற்று நேரம் யோசித்து விட்டு,
"நேத்து எனக்கு..... நம்ம எல்லாரும் சேர்ந்து போய் ஒரு பீச் ரிசாட்ல இன்னிக்கு நைட் ஸ்டே பண்ணிட்டு, நாளைக்கு காலையில ஒரு நல்ல மூவிக்கு போயிட்டு வரணும்ன்னு ஆசையா இருக்கு. கூட்டிட்டு போறியாடா..... ப்ளீஸ்!" என்று கேட்டவளிடம்,
"சூப்பர் ப்ளானா இருக்கு. தாராளமா போகலாம்! பட் நம்ம மாஸ்டர் என்ன சொல்லப் போறாருன்னு தெரியலையே........ ஸார் உங்களுக்கு தெரிஞ்ச ரிஸாட்ஸ் ஏதாவது இருக்கா ஸார்......?" என்று நேத்ரன் கேட்க அருள்மொழி உற்சாகமாக நல்ல தங்குமிடத்தை தேடிக் கண்டுபிடித்து கொண்டு இருந்தார்.
அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டு அருள்மொழி உற்சாகமாக நேத்ரனிடம் பேசிக் கொண்டிருந்த போது மித்ரன் பயிற்சி வகுப்பை முடித்து விட்டு உள்ளே வந்தான்.
ஐஸ்வர்யா ஸ்ரீ புன்னகையுடன் தன்னுடைய ப்ளானை சொல்லி மாமாவும், நேத்துவும் அதற்கு ஏற்பாடு செய்து விட்டார்கள் என்று கூறியதும் அருள்மொழி அவனிடம்,
"மித்ரா மூணு டபுள் ரூம்ஸ் போட்டாச்சு டா. அம்மாவுக்கும், உனக்கும் ஒண்ணு; நேத்துவுக்கும் எனக்கும் ஒண்ணு, நம்ம ஐசு வழக்கம் போல மங்கை கூட வாயடிச்சுட்டு கிடப்பா. நீயும் வாயேன் டா!" என்று கேட்டவரிடம் புன்னகையுடன்,
"நான் இல்லாம எப்படி ஸார்..... நானும் என் பேமிலியும் தான் போகப் போறோம். நான்,வரு,அம்மா,சோட்டு நாங்க 4 பேரும் மூணு ரூமை ஷேர் பண்ணிக்கிறோம்!" என்றான் அழுத்தம் திருத்தமான குரலில்.
அனைவரும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போய் நின்றனர்.
அருள்மொழி அமைதியான குரலில் "நல்லது மித்ரா; உ.....உங்க பேமிலியில எல்லாரும் சேர்ந்து போகப் போறீங்க......நாங்க ரெண்டு பேரும் எதுக்கு இடைஞ்சலா.....போயிட்டு வாங்க!" என்றார் குரலே எழும்பாமல்.
நேத்ரன் தயக்கத்துடன் மித்ரனின் தோளை தொட்டு, "சிவாண்ணா.... என்ன இதெல்லாம்?" என்று கேட்டவனை மித்ரனின் பார்வை அடக்கியது.
ஐஸ்வர்யா ஸ்ரீ எரிச்சலுடன் அவனிடம், "மித்து எல்லாரும் சேர்ந்து போகணும்ன்னு தானே ப்ளான் பண்ணினோம். இங்க மாமாவையும், லோட்டஸையும் தனியா விட்டுட்டு எப்படி போறது மித்து?" என்று கேட்டவளிடம், "ஓ! அந்த பிரச்சனை வேற இருக்கோ..... மங்கை அம்மா இன்னைக்கு நைட் வேணும்ன்னா உங்களுக்கு வெளியில தங்குறதுக்கு வேற ஏதாவது ஏற்பாடு செய்யட்டுமா?" என்று கேட்ட மித்ரனிடம், அவசரமாக தலையாட்டி மறுத்து விட்டார் அலர்மேல் மங்கை.
"ஏன் ஆன்ட்டி இவன் இன்னிக்கு லூசு மாதிரி பிஹேவ் பண்ணுறான், மாமாவும், லோட்டஸும் எவ்வளவு அப்செட் ஆகி இருப்பாங்க?" என்று கலங்கிய முகத்துடன் அமர்ந்திருந்த ஐஸ்வர்யாவை சமாதானப் படுத்தி ஆறுதலளித்த சந்திரதாரா அருள்மொழியிடம் வந்து,
"தப்பா எடுத்துக்காதீங்க ஸார். நம்ம எல்லாரும் ஒரே பேமிலி தான். ஏன் இன்னிக்கு இப்படி நடந்துக்கிறான்னு தெரியல. அவனுக்காக நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்!" என்று கையை உயர்த்தியவரிடம் பதறிய அருள்மொழி,
"இவ்வளவு நாளா மித்ரன் எனக்கு பையனா இருந்தார். இப்போ வீட்டுக்கு வரப் போற மாப்பிள்ளையா மாறுறாருன்னு நினைச்சுக்கறேன். ஐசுக்குட்டி சந்தோஷமா இருந்தா அது போதும். நான் ஆஃபிஸுக்கு கிளம்பணும். டைமாச்சு. போய் கிளம்பறேன். நேத்ரா போற இடத்தில அவளை கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கடா!" என்றவரிடம்,
"நானும் ஆஃபிஸுக்கு வர்றேன். கிளம்பியதும் ஒண்ணா சேர்ந்து போகலாம் ஸார். வெயிட் பண்ணுங்க!" என்று சொல்லி விட்டு தன் அறைக்கு சென்றான் நேத்ரன்.
மாலையில் அவர் வீட்டிற்கு வந்த போது வீடு அமைதியாக அவரை வரவேற்றது.
"வாங்க சாரு.....இப்ப தான் வந்தீங்களா....கை, காலு கழுவிகினு வந்தீங்கன்னா டீ எடுத்தாரவா?" என்று கேட்ட அலர்மேல் மங்கையின் குரலில் ஒரு அண்டா நிறைய டீ குடித்த புத்துணர்ச்சியை பெற்றவர்,
"இருக்கட்டும் மங்கை, உனக்கு எதுக்கு சிரமம்....!" என்று கேட்டவரிடம் சலிப்புடன், "நா எப்படியும் டீ குடிக்கத் தேன் போறேன்; ஒரு டீ போட்டாலும், எட்டு டீ போட்டாலும் வேலை என்னவோ ஒண்ணுதேன், அளவுதேன் வேற வேற...... போய் உட்காருங்க! கொண்டுட்டு வாரேன். இந்த வீட்டுல எல்லா செலவுக்கும் காசு தார முதலாளி நீங்கதேன்; எங்க சந்திராமா மாதிரி நீங்களும் ஒரு மழுங்கட்டை தேன்..... வாயை தொறந்து பேசுனாவுல்ல நமக்கு வேண்டியது கிடைக்கும். ஆனாக்க பெரிய தம்பியை தப்பா நினைச்சு கோவீக்காதீக. அது என்னமோ மனசுல வச்சுட்டு காலையில பேசிடுச்சு.... பாவம்!" என்றார் அலர்மேல் மங்கை.
புன்னகையுடன் அவரிடம் டீயை வாங்கிக் கொண்டு, "உன் கிட்ட டீ கேக்க ஏன் யோசனையா இருந்ததுன்னா முதல்ல நானும், மித்ராவும் வந்தோமே.....உங்க அம்மா வீட்டுக்கு..... அப்போ நீ உபசரிச்சது நியாபகம் இருக்கு. அதான்! சரி அதென்ன மழுங்கட்டைன்னு என்னவோ சொன்ன....அது என்ன கட்டைமா?" என்று கேட்டவரிடம் எரிச்சலுடன்,
"யோவ்....உன்னை எல்லாம் எந்த வாத்தியார் பாசாக்கி இம்புட்டு பெரிய ஆபிசை வேற பார்த்துக்கிட சொல்லி கையில குடுத்திருக்காவ..... ஒத்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியல. வெகு லட்சணம். விளங்கிடும் போ!" என்றவரிடம்,
"மங்கை உன் கிட்ட ஒண்ணு கேக்கணும்மா.....தப்பா எடுத்துக்க மாட்டியே.....ஏம்மா நீ கல்யாணம் பண்ணிக்கல?" என்று கேட்டார் அருள்மொழி.
"எனக்குத்தேன் எடுத்து செய்ய ஒரு ஆளுமில்ல, பேருமில்ல. நீ ஏன்யா இம்மா நாளா கண்ணாலம் பண்ணிக்காத சுத்திக்கிட்டு இருந்த?" என்று மங்கை எதிர்க் கேள்வி கேட்டதும் அருள்மொழி திகைத்து போய் அமர்ந்திருந்தார்.
வஞ்சி மனம் தஞ்சம் கொள்வான்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro