சென்னை நகரின் பிரபலமான ஒரு சபாவில் இன்று ஐஸ்வர்யா ஸ்ரீயின் நடன அரங்கேற்றம் நடைபெற இருக்கிறது. சிவமித்ரன் வந்தவர்களை வரவேற்பது, அருள்மொழியிடம் அறிமுகப்படுத்துவது என்று பரபரப்பாக சுற்றிக் கொண்டு இருந்தான். ஐஸ்வர்யாவின் நடன ஆசிரியையிடம் பேசி அவரின் குழுவினருடன் இந்தியாவிற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு வரவழைத்தது, தன் தோழியிடம் கோபமாக இருந்த அமிர்த வர்ஷினையை சிறிது சிறிதாக கரைத்து அவள் குடும்பத்தினருடன் இங்கே வரவழைத்தது, அனைவருக்கும் டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்தது, சபாவை புக் செய்தது, இதற்கிடையே அவனது அன்றாட பணிகள் என்று இந்த இரண்டு மாதங்களாக வேலைகள் வரிசை கட்டி கொண்டு காத்திருந்தன மித்ரனுக்கு.
மித்ரன் பேசிய அதிகப்படியான பேச்சின் பின்னர் அவனது
வாட்டர்பெட் அவனுக்கு குட்மார்னிங், குட்நைட் சொல்வதோடு சரி. அவளை எத்தனை தான் கெஞ்சினாலும், கொஞ்சினாலும் ஒரு முறைப்புடன் சென்று விட்டாள்.
நேத்ரன் இருவருக்கும் இடையே சமாதான தூது சென்று, காலை, இரவு வாழ்த்து மட்டும் சொல்வேன் என்ற தீர்மானத்துக்கு வந்திருந்தாள்.
கல்யாண பேச்சை வீட்டில் எடுத்த போது மித்ரன், "வரு அரங்கேற்றம் முடிச்ச பிறகு தான்மா எங்களுக்கு கல்யாணம்!" என்று சொல்லி விட அருள்மொழி அவனிடம், "என்னடா மித்ரா நீயும் உன் லட்சியமும்; சீக்கிரம் அரங்கேற்றத்துக்கு ஏற்பாடாவது செய்டா!" என்றார் சிறு கோபத்துடன்.
"அரங்கேத்தம்....
அரங்கேத்தம்ங்கிறளே; ஓயாம பாடுன வரியவே திரும்ப திரும்ப பாடிப்புட்டு தாளம் தட்டிக்கினு இருப்பானுவளே..... கெரகம், அங்கண போய் நம்ம பாப்பா ஆடப் போவுதாக்கும்...... அதான் வூட்லயே என்னமா ஆடுது; இந்த அரங்கேத்தம் பண்ணினாக்கா தான் கலியாணம்ன்னு என் பெரிய தம்பி அடம் பிடிச்சுக்கினு இருக்க?...... நம்ம புள்ளைய சீக்கிரம் கலியாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா இருய்யா.... உனக்கோசரம் தெனம் ஒரு தபா சின்னத்தம்பி கூட பாப்பாவ கூட்டிக்கிணு நீச்சல் குளம் போயிட்டு வருது. அப்புறம் ஓட்டம், சைக்கிள்.... சாயங்காலம் டான்ஸூன்னு பாடாப்படுது. கன்னத்துல எலும்பெல்லாம் துருத்திக்கிட்டு தெரியுது.....பார்க்க நல்லாவேயில்ல.....!" என்று புலம்பியவரிடம் இடுப்பில் கை வைத்து கொண்டு நின்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"என்ன கண்ணு கோபமா இருக்கியா? இந்த இழவெடுத்த நாக்கு பேசாம வாயைப் பொத்திகிட்டு கெடன்னு சொன்னா கேக்குதா.....மன்னிச்சுடு பாப்பா!" என்று கேட்ட அலர்மேல் மங்கையிடம் தோளைக் கட்டிக் கொண்டு அமர்ந்த ஐஸ்வர்யா ஸ்ரீ,
"லோட்டஸ் பொண்ணு, அரங்கேற்றத்தை ரங்க ப்ரவேசம்ன்னு சொல்வாங்க. இவ்வளவு நாள் கத்துக்கிட்டதை நிறைய பார்வையாளர்கள் முன்னாடி நம்ம பெர்ஃபாம் பண்ணப் போறோம். யார் வேணும்னாலும் பரதத்தை ஆடிட முடியாது. நடராஜரோட அனுக்ரகத்தோட, குருவோட ஆசிர்வாதத்தோட, பக்கவாத்திய குழுவினர் உதவியோட கால்ல கட்டுற சலங்கைக்கு பூஜை பண்ணி, என் குருவுக்கு தட்சணை கொடுத்துட்டு தான் நான் ஸ்டேஜ்ல ஏற முடியும். ஸோ உனக்கு புரியலைன்னாலும் நீ அரங்கேற்றத்துக்கு வந்து எனக்கு கை தட்டி உற்சாகம் குடுக்கணும்! சரியா? அப்புறம் இன்னொரு விஷயம்..... நான் வொர்க் அவுட் செய்யறது எனக்காக தான்; உங்க பெரிய தம்பிக்காக ஒண்ணும் இல்ல...... புரியுதா?" என்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"கண்டிப்பா கண்ணு, நீ டான்ஸ் ஆடுற, நான் கை தட்டாம இருப்பேனா..... அதெல்லாம் நல்லா தட்டுவேன்! ஆனாக்க நீ பெரியதம்பி கூட பேசாம அதை காயவுடுறது நல்லாயில்ல கண்ணு!" என்றார் அலர்மேல் மங்கை. மித்ரனும், அருள்மொழியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். பதில் ஏதும் பேசாமல் அந்த இடத்தில் இருந்து எழுந்து சென்று விட்டாள் ஐஸ்வர்யா.
சந்திரதாரா புன்னகையுடன் நேத்ரனிடம், "நேத்ரா உங்கண்ணுக்கும், அண்ணிக்கும் நடுவில என்னடா நடக்குது? என்ன பிரச்சனை?" என்று கேட்டவரிடம்,
"நத்திங் சீரியஸ்மா! ரெண்டும் சின்னப்புள்ளைங்க மாதிரி பிஹேவ் பண்ணுதுங்க. அதுவா சரியாகிடும்! மங்கா மிட்டு பேபி எங்க இருக்கான்? ஐஷு ரூம்ல விளையாடிட்டு இருக்கானான்னு பாரு!" என்று கேட்டவனிடம்
"அதெல்லாம் பத்திரமா தான் இருப்பான்டா.....நம்ம வீட்டுக்கு வெளியே பாக்ஸ்ல இருக்கிறவனுங்களை விட இந்த பையன் ஸ்பெஷலா இருக்கான்டா! போறான், விளையாடுறான், மறுபடியும் ஐசு ரூமுக்கு ஓடியாந்துர்றான். பாரேன்!" என்று சொன்ன அருள் மொழியிடம்,
"சும்மாவா.....அவனுக்கேத்த மாதிரி இந்த பிசாசு ரூமையே மாத்தி வச்சிருக்கால்ல......!" என்று குமுறி விட்டு சென்றான் நேத்ரன்.
"அமிர் ஸாரி, ஜ்வல்ஸ் எல்லாம் ஓகே தானேடீ? ஆன்ட்டி, அங்கிளை உட்கார வச்சுட்டல்ல...... சந்திரா ஆன்ட்டிக்கு ஏதாவது வேணும்னா பக்கத்தில இருந்து கவனிச்சுக்க சொன்னேன்னு லோட்டஸ்ட்ட சொல்லிட்டு வந்துடுறியா.....?" என்று கேட்ட தன் தோழியை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தாள் அமிர்தவர்ஷினி.
"ஏய்.....என்னடீ நான் பேசிட்டு இருக்கேன்......நீ என்ன ஒரு மாதிரி முழிச்சுட்டு உட்கார்ந்து இருக்க?" என்று கேட்ட தன் தோழியிடம் ரசனையுடன்,
"சும்மா சொல்லக் கூடாதுடீ; உன் ப்யூச்சர் ஹப்பி ரொம்ப டேஸ்ட்டான ஆளு தான்! டிரஸ், ஜ்வல்ஸ் எல்லாம் செமையா செலக்ட் பண்ணியிருக்காங்க பாரேன்! அஞ்சாறு கிலோ குறைஞ்சிருப்பியா? இப்படியே மெயின்டெய்ன் பண்ணு ஐஷு, ரொம்ப அழகா இருக்க!" என்று கருத்து தெரிவித்தவளிடம் குழப்பத்துடன் ஐஸ்வர்யா,
"என்னடீ அமிர்..... அந்த நேத்து பையன் நீ வாங்கிட்டு வந்ததா சொல்லி சலங்கை; ஸாரி, ஆர்னமெண்ட்ஸ் எல்லாம் குடுத்துட்டு போனானே...... எனக்கு கூட லைட்டா டவுட் வந்தது. அப்ப இதெல்லாம் நீ வாங்கிட்டு வரலையாடீ?" என்று உதடு பிதுக்கியவளிடம்,
"கேப்படீ, என் அரங்கேற்றத்துக்கு மூடு சரியில்லை, அது இதுன்னு காரணம் சொல்லி வராம இருந்துட்டு இப்போ உன் பங்ஷனுக்கு வரணும்னா நான் சீர் எடுத்துட்டு வரணுமாக்கும்....... நான் ஒண்ணும் வாங்கிட்டு வரல. எல்லாம் என் கிட்ட கேட்டு மித்ரன் ஸார் வாங்கினது தான்! எப்படி ஸாரி செலக்ட் பண்ணினா போட்டோவுக்கு, ஸ்டேஜ் லைட்டிங்க்கு அழகா இருக்கும்ன்னு கூட ஐடியா கேட்டாங்களே.....!" என்று வர்ஷினி சொல்ல சொல்ல, "ஆமால்ல அந்த ஸாரி தான் இதுவா..... மறந்தே போச்சே, திருடா, இரு உன்னை ராத்திரி கவனிச்சுக்கிறேன்!" என்று நினைத்து சிரித்தபடி தயாரானாள் ஐஸ்வர்யா.
அறைக்குள் வந்த அருள்மொழி, சந்திரதாரா இருவரிடமும் ஆசி பெற்றாள். "நல்லா இருக்கணும்டா ஐசு!" என்று அருள்மொழியும், "அழகா இருக்கேடா ஐஷு! சூப்பரா ஆடணும்!" என்று சந்திரதாராவும் வாழ்த்த அவள் சிரிப்புடன் அலர்மேல் மங்கையை கட்டிக் கொண்டு பிசைந்து வைத்தாள்.
"அய்யய்யோ அலங்காரம் கலைஞ்சுடாம கண்ணு, என் கண்ணே பட்டுடும் போலிருக்கு! எம்புட்டு அழகா இருக்கே ராசாத்தி!" என்று சொல்லி விட்டு நெட்டி முறித்தார் அலர்மேல் மங்கை.
"ஐஷுமா! உன்னை ப்ளஸ் பண்றதுக்கு நானும் ரெடியா இருக்கேன்டா செல்லம்!" என்று அறையின் கதவருகே நின்று கொண்டு தலையை மட்டும் நீட்டியவனிடம் கோபத்துடன்,
"ஓணான் வேலிக்கு அந்த பக்கம் நின்னுட்டு மண்டைய ஆட்டுற மாதிரியா லுக் விட்டுட்டு இருக்க...... கையில சிக்கின; நீ காலிடா!" என்று எச்சரித்தவளிடம்,
"கூல் பேபி, ரிலாக்ஸ்! மங்கா அவளுக்கு ஜுஸ் ஏதாவது குடிக்க குடுங்க. நிறைய பெர்ஃபார்ம் பண்ணணும். எனர்ஜி வேணும்ல.... இந்தா சிவாண்ணா இந்த பொக்கேவை உன் கிட்ட குடுத்துட்டு விஷ் பண்ண சொன்னாங்க!" என்று அவளருகில் வந்து கைகளில் பூச்செண்டை நீட்டியவன் "ஆல் தி பெஸ்ட் மை டியர் பிரண்ட்!" என்று பெருவிரல் உயர்த்தி காட்டினான். அவன் கிளம்பும் முன் அவன் கைகளைப் பற்றி தடுத்தவள்,
"எனக்கு மித்துவை பார்க்கணும்!" என்றாள் தலைகவிழ்ந்த படி.
"மிட்டுவா.... அவனோட பாக்ஸ்ல சமர்த்துப் பிள்ளையா விளையாடிட்டு இருக்கான்!" என்றான் புன்னகைத்து.
"டேய்!" என்று பல்லைக் கடித்தவளை அடக்கிய வர்ஷினி, "ஹலோ மிஸ்டர் உங்களுக்கு காது கேக்கலையா? பொய்க்கோழி.... வாயைத் திறந்தா பொய்; மித்ரன் ஸார் வாங்கினதை நான் வாங்கினேன்னு பொய் சொல்லியிருக்கீங்க..... ஐஷு மித்ரன் ஸாரை பார்க்கணும்ன்னு கேக்குறா. சீக்கிரம் வரச் சொல்லுங்க. இன்னும் 10, 15 மினிட்ஸ்ல ப்ரோக்ராம் ஸ்டார்ட் பண்ணிடுவாங்க!" என்று சொன்ன வர்ஷினியை ஏற இறங்கப் பார்த்தவன்,
"நான் உன் கிட்ட வேலை செய்றேனா? நீ சொல்றதெல்லாம் நான் எதுக்கு கேக்கணும்? பங்ஷன் ஸ்டார்ட் ஆகுறதுக்குள்ள சிவாண்ணாட்ட பேசணும்ன்னு அக்கறை இருந்தா, இவ கையில இருக்கிற மொபைலில் இருந்து அவர் நம்பருக்கு கால் பண்ணி கூப்பிட்டு பேசச் சொல்லு. இதுக ரெண்டுக்கும் பஞ்சாயத்து பண்ணி நமக்கு டையர்டாகுது.... இதுக்கு ரெகமண்டேஷன் வேற; வாங்கம்மா நாம ஸீட்ல போய் உட்காரலாம்!" என்று சொல்லி விட்டு தன் அன்னையின் வீல் சேரை நகர்த்தி கொண்டு போய் விட்டான் நேத்ரன்.
மித்ரனுக்கு அழைத்தவுடன் அவன் இரண்டாவது ரிங்கில் போனை எடுத்தவுடனே, "வரு பேபி லவ் யூ! உன்னை ஸ்டேஜ்ல பார்க்க ரொம்ப எக்ஸைட்டடா வெயிட் பண்ணிட்டு இருக்கேன். உன்னோட பெஸ்ட்டை அவுட்புட்டா குடுக்கணும். ஆல் தி பெஸ்ட்!" என்றவனிடம்,
"மித்து உடனே ரூமுக்கு வா! உன்னை பார்க்கணும்!" என்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ. இதற்காகவே தானே இத்தனை நாள் காத்திருந்தான்.......ஒரு நிமிடத்தில் ஓடிச் சென்று அவளறை கதவை தட்டினான்.
"உள்ள வாங்க மித்ரன் ஸார்!" என்று அழைத்த வர்ஷினையை பார்த்து மெலிதாக புன்னகைத்தான்.
"ஐஷு, காமிரா என் கிட்ட இருக்கு..... அம்மாட்ட குடுத்துட்டு வர்றேன். நிறைய போட்டோஸ் எடுக்கணும்ல.....!" என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டாள் அமிர்தவர்ஷினி.
அவள் கண்ணசைவிற்காக காத்திருந்த மித்ரன் ஐஸ்வர்யா அருகில் அழைக்கவும் சென்று அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்.
"நிறைய ஆடியன்ஸ் இருக்காங்கடா கண்மணி! ப்ரண்ட் ரோல ரெண்டு சீட்ஸ் எம்ப்டியா இருக்கு. ப்ரோக்ராம் முடியற வரைக்கும் அப்படியே தான் இருக்கும். அப்பா, அம்மா பார்க்கணும்ன்னு ஆசைப்பட்ட விஷயம்ல; ஏதோ தோணுச்சு. அதனால தான்....... ஏய்.... இங்க பாரு! கண் கலங்கிடாத கண்மணி, நிறைய மை போட்டு பார்க்கவே கொஞ்சம் டெரரா இருக்க.....நம்ம வீட்ல வராண்டாவில ஒரு இடத்தில ஸ்னோஸெம் உரிஞ்சுருந்தது. வீட்டுக்கு வர்ற வரைக்கும் உன் மேக்கப்பை கலைக்காத! உன் முகத்தில் இருக்கிறத வழிச்சு எடுத்தா அந்த இடத்தை சரி பண்ணிடலாம்ன்னு நினைக்கிறேன்!" என்று மித்ரன் சொல்ல ஐஸ்வர்யாவிற்கு சிரிப்பு வந்தது. "லவ் யூ பாவா! யூ ஆர் சோ ஸ்வீட்!" என்றாள் கண்களில் காதலுடன்.
அவன் உதடுகளை அவள் கன்னங்களில் ஒற்றி எடுத்தவன், "நல்லபடியா பங்ஷனை முடி! அதுக்கப்புறம் அன்லிமிடெட் ஸீரிஸ் தான், ரெண்டு மாசமா புலம்பி தவிக்க விட்டுட்டியேடீ...... அதுக்கெல்லாம் நீ பதில் சொல்லியே ஆகணும்! பைடா கண்மணி!" என்று சொல்லி விட்டு சென்றான்.
ஐஸ்வர்யா ஸ்ரீ யின் நடன அரங்கேற்றம் அனைவரும் எதிர்பார்த்ததற்கும் மேலாக சிறப்பான முறையில் நிறைவு பெற்றது.
அமிர்தவர்ஷினி திருச்சியில் தன் அப்பா வழிப் பாட்டி வீட்டில் ஒரு வாரம் தங்கி விட்டு தான் அமெரிக்காவுக்கு கிளம்ப போவதாக சொல்ல மித்ரன் அவர்கள் குடும்பத்திற்கு ஒரு கார் ஏற்பாடு செய்து தந்தான்.
ஐஸ்வர்யாவின் நடன ஆசிரியையை சிறப்பாக கவனித்து ஹோட்டலில் தங்க வைத்து விட்டு நாளைக்கு அவர்கள் யூஎஸ் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டதா என்று உறுதிப்படுத்திக் கொண்டு, நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு நள்ளிரவில் வீட்டுக்கு வந்த போதும் அவனுக்கு களைப்பே தெரியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக, உற்சாகமாக வீட்டிற்குள் நுழைந்தவனை பின்னாலிருந்து போர்வையால் முகத்தை போர்த்தி கடத்தியிருந்தது ஓர் உருவம்!
வஞ்சி மனம் தஞ்சம் கொள்வான்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro