💖 வஞ்சி மனம் 19
கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்ததும் மித்ரன்
அவனது சீஃப் ராஜசேகருக்கு அழைப்பு விடுத்தான்.
"சொல்லுடா சிவா.... இன்னிக்கி ஏன் ட்யூட்டிக்கு வரல? எங்க ஊர் சுத்திக்கிட்டு இருக்க? ஐஸ்வர்யா கூட ரவுண்ட்ஸா....!" என்று கேட்டவரிடம்,
"ஸார் உங்க பொண்ணு எங்கிட்ட ஏதோ பேசணும்ன்னு வெளியே எங்கேயாவது மீட் பண்ணலாமான்னு கேட்டாங்க. அவங்களை வெளியே எங்கயும் மீட் பண்றதுக்கெல்லாம் நான் ரெடியா இல்ல, ஸோ நீங்க என்ன பண்றீங்கன்னா... உங்க வீட்டுக்கு அவங்களை கூட்டிட்டு போயிடுங்க. நான் இன்னும் ஒரு மணி நேரத்தில உங்க வீட்டுக்கு வர்றேன்! இந்த ப்ளான் ஓகே தானே ஸார்?" என்று கேட்டவனிடம் புன்னகையுடன்,
"என் பொண்ணு ஏதாவது பர்சனலா உங்கிட்ட பேசணும்ன்னு நினைச்சுருக்கலாம்டா சிவா; எதுக்கு எல்லார் முன்னாடியும் வீட்ல..... வேற எங்கயாவது போயிட்டு வாங்களேன்!" என்றார் ராஜசேகர்.
"இது தான் ஸார் நீங்க செய்யுற தப்பு..... தப்புன்னு புரிஞ்சாலும் அதை திருத்திக்க மாட்டேங்குறீங்க. சௌஜன்யா எதுக்கு ஸார் என் கூட வெளியே வரணும்? தைரியமா வெளியே கூட்டிட்டு போறதுக்கு எனக்கு தான் என் லவ்வர் இருக்காளே..... அதில்லாம உங்க பொண்ணை நான் எதுக்கு அங்க இங்கன்னு மீட் பண்ணிட்டு இருக்கணும்? சீக்கிரமா அவங்களுக்கு ஒரு நல்ல பையனா, அவங்க ஆசைப்பட்ட மாதிரி பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடுங்க ஸார். அது எனக்கு நீங்க செய்யுற பெரிய உதவியா இருக்கும்!" என்றான் மித்ரன்.
காரில் சாய்ந்த படி அவன் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ஸ்ரீ அவன் தோள்களை தட்டி சமாதானம் செய்தாள்.
ராஜசேகர் சற்று இறங்கிய குரலில், "என் பொண்ணு அவ கட்டிக்க போற பையனை அவளே செலக்ட் பண்ணிட்டா சிவா, அவங்க பேமிலி யூஎஸ்ல இருக்காங்களாம். வெல் செட்டில்டு, குட் லுக்கிங், இவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா என் லைஃப்ல பணத்துக்காக நான் கஷ்டப்பட்டு சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லப்பான்னு சொல்றா, இன்னும் மேரேஜை கூட ஒரு பிஸினஸா தான் பார்க்கிறா. நா என்ன பண்றது சிவா? இந்த பொண்ணோட இயல்பு என்னிக்குமே மாறப் போறதில்ல. அதுக்காக என் பொண்ணை விட்டுக் குடுக்க முடியுமா? இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம் நடத்திடலாம்ன்னு பேசி டேட் பிக்ஸ் பண்ணியிருக்கோம். அதை சொல்றதுக்கு தான் ஒரு வேளை உன்னை மீட் பண்ணணும்னு நினைக்கிறான்னு எனக்கு தோணுது சிவா.....உன் மனசுல என் பொண்ணு இல்லன்னு எனக்கு நல்லா புரியுது. ஆனா அவ ஐஸ்வர்யாவோட அவளை கம்பேர் பண்ணிட்டு புகைஞ்சுட்டு இருக்கா..... எனக்கு அவள எப்படி சமாளிக்குறதுன்னு தெரியலடா!" என்று சொன்னவரிடம் பெருமூச்சுடன்
"இன்னிக்கு ஒரே ஒரு தடவை நான் அவங்க கிட்ட பேசுறேன் ஸார். அதுவும் அவங்களுக்காக இல்ல, உங்களுக்காக..... இதுக்கு மேல என்னையும், என் லைஃபையும் அவங்க டிஸ்டர்ப் பண்ணக் கூடாது. அதுக்காகவும் தான். ஒன் ஹவர் கழிச்சு மீட் பண்ணலாம்!" என்று சொல்லி விட்டு போனை வைத்தான்.
புன்னகையுடன் நின்று கொண்டு இருந்தவளிடம், "இந்த மாப்பிள்ளை.....
ஏற்பாடுகள் எல்லாம் உன் வேலையா வாட்டர்பெட்?" என்று கேட்டு முறைப்புடன் நின்றான் மித்ரன்.
"ஆமா பாவா! மிஸ்டர் தேவேஷ் பேமிலி அப்பாவோட பிஸினஸ் சர்க்கிள் ப்ரெண்ட்ஸ் தான்....அவருக்கும் கிட்டத்தட்ட சௌஜன்யா மாதிரி பணம் தான் எல்லாம்ங்கிற தாட் தான், ரெண்டு பேருக்கும் இண்ட்ரோ குடுத்துட்டு நான் கழண்டு வந்துட்டேன். மைண்ட் செட் ஒண்ணா இருந்ததால ரெண்டு பேருக்கும் ஓகே ஆகிடுச்சு போலிருக்கு! அதான் பிரச்சனை முடிஞ்சுடுச்சுல்ல பாவா..... இன்னும் எதுக்கு முகத்தை தூக்கி வச்சுட்டு இருக்க? நீ உர்னு இருந்தா பார்க்க நல்லாவேயில்ல. ப்ளீஸ் மித்து என் புஜ்ஜூ பேபில்ல......கேஷுவலா இருடா!" என்று ஐஸ்வர்யா அவன் முகவாயை பிடித்துக் கொண்டு கொஞ்ச ஆழ்ந்து சுவாசித்து ஒரு நீண்ட மூச்சை வெளியேற்றினான் மித்ரன்.
"ஏய்.....என்னடா இது? ஸ்டீம் இன்ஜின் புகை விடுற மாதிரி புஸ்ஸுபுஸ்ஸுங்குற..... இது என்ன டென்ஷனை குறைக்கிற தெரபியா.... அடுத்து எங்க போகணும்ன்னு ஆணையிட்டால் தங்கள் கட்டளையை நிறைவேற்ற இந்த சாரதி காத்திருக்கிறேன் மன்னா!" என்று ஐஸ்வர்யா சொல்லவும் மித்ரன் முகத்தில் புன்னகையுடன் செல்லுமிடத்தை சொல்ல ஐஸ்வர்யாவின் முகத்தில் குழப்பம் தெரிந்தது.
"கொஞ்சம் நல்லா தான் சிரிக்கிறது.....!" என்று கேட்ட தன் காதலிக்கு காரில் ஏறிக் கொண்டு மனம் நிறைந்த புன்னகையை வழங்கினான் மித்ரன்.
"என்னாச்சு மித்து? இன்னிக்கு உன் மூட் ஸ்விங் என்னைய ரொம்ப கன்ஃப்யூஸ் பண்ணுது. திடீர்ன்னு சிரிக்கிற; டயலாக் எல்லாம் விடுற; அப்புறம் கோபப்படுற, மறுபடியும் சிரிக்கிற..... என்ன தான் ஆச்சு உனக்கு?" என்று கேட்ட ஐஸ்வர்யாவிடம்,
"உன் கூட அவுட்டிங் போகணும்ன்னு ரொம்ப சந்தோஷமா கிளம்பி வந்தேன் பேபி, நல்ல க்ரிஸ்பி மிக்சர் சாப்பிட்டுட்டு இருக்கும் போது நடுவில ஒரு உலர் திராட்சை வந்தா எவ்வளவு டென்ஷன் ஆகுது தெரியுமா? ச்சே.....!" என்று சலித்துக் கொண்டவனை முறைத்தவள்,
"டேய் இப்போ யாரு மிக்சர்? யாரு ட்ரை க்ரேப்ஸ்ங்கிற நீ? எதுக்கு இப்படி ஒரு கேவலமான கம்பேரிஸன்?" என்று மூக்கு புடைக்க கோபத்தில் சிவந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"அப்ப்ப்ப்பா...... அள்ளுறியேடீ; உடம்பில இருக்கிற ரத்தம் எல்லாம் முகத்துக்கு வந்துடுச்சு. அப்படியே பிங்க் கலர்ல இருக்க வரு பேபி! அன்டவுட்டட்லி நீ தான் கிரிஸ்பி மிக்சர், அந்த லூசுப் பொண்ணு தான் உலர்ந்த திராட்சை, இன்னொருத்தர் லைஃப்க்குள்ள இடைஞ்சலா போய் நின்னு உயிரை வாங்குறது தப்பு தானே? இதை உனக்கு பிடிச்ச மாதிரி உவமை சொன்னா நல்லா இருக்கும்ன்னு நினைச்சு தான் சொன்னேன்" என்று சாப்பிடுவது போல் சைகை செய்து காட்டியவனை இடக்கையால் தலையில் குட்டினாள் ஐஸ்வர்யா.
"என்னை அடிக்கிறதெல்லாம் அப்புறம் நம்ம வீட்டுக்கு போய் செஞ்சுக்கலாம். வண்டியை ஒழுங்கா ஓட்டு பேபி!" என்று சொல்லி சிரித்தவனிடம்,
"வீட்டுக்கு வா, இன்னிக்கு உன் மேல தான் ஏறி தில்லானா ஆடப் போறேன் பாரு!" என்றாள் ஐஸ்வர்யா.
"ஐ'ம் ஆல்வேஸ் அட் யுவர் சர்வீஸ் வரு டார்லிங்!" என்று சொல்லி விட்டு காரில் இருந்து இறங்கினான் மித்ரன்.
ஒரு பிரபல புடவை கடைக்கு தன்னவளை கூட்டி வந்திருந்தான் மித்ரன். பட்டுப்புடவை செக்ஷனை ஊழியரிடம் அவன் விசாரிக்கவும் ஐஸ்வர்யா மேலும் திகைத்தாள்.
"மித்து எதுக்கு சில்க் ஸாரி? எனக்கா......?" என்று கேட்டவளிடம்
"ம்ஹூம்! எனக்கு; ஒரு தடவை சில்க் ஸாரில பேண்ட், ஷர்ட் தைச்சு போட்டு பார்த்தா எப்படி இருக்கும்ன்னு யோசிக்கிறேன்! ஒரு சாரி செலக்ட் பண்ணு!" என்றான் புன்னகைத்து.
பொய்யான கோபத்துடன், "விளையாடாத மித்து, என்ன அக்கேஷனுக்குன்னு சொல்லு....
கல்யாணத்துக்கா?" என்று ஆர்வமாக கேட்டவளிடம்,
"இல்ல சீமந்தத்துக்கு.....ஆளைப் பாரு! நான் எதுக்குடீ யாருமே இல்லாம கல்யாணத்துக்கு ட்ரெஸ் பர்சேஸ் பண்ணப் போறேன்? கல்யாண ஷாப்பிங்க்குலாம் எல்லாரையும் கூட்டிட்டு வரணும். இது பிடிக்குதா அது பிடிக்குதான்னு எல்லார் ஒப்பீனியனும் கேட்டு நிறைய கன்ஃப்யூஸ் ஆகணும். மூச்சு திணற திணற எல்லார் திங்ஸையும் கஷ்டப்பட்டு தூக்கிட்டு நடக்கணும். அம்மாவுக்கு அலைச்சல் இல்லாம அவங்க கண்ணை பார்த்துட்டு அப்பப்போ கால் பிடிச்சு விடணும். ஜாலியா ஷாப்பிங் முடிச்சுட்டு ரெஸ்டாரென்ட் போய் சாப்பிட்டுட்டு அப்படியே எல்லாரும் சேர்ந்து ஒரு மூவி போய்ட்டு வரணும். இப்படியெல்லாம் நிறைய ப்ளான்ஸ் இருக்கு. பார்க்கலாம்! இந்த கலர் அழகா இருக்கு. உனக்கு ஓகேவா?" என்று ஒரு மஞ்சளும், சிவப்பும் கலந்த ஒரு பட்டை கையில் எடுத்து பார்த்து கொண்டு இருந்தான் மித்ரன்.
வாயைப் பிளந்து கொண்டு அவன் ஆசைகள் மடை திறந்த வெள்ளம் போல் வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவள், "மித்து இந்த சாரி ரொம்ப டார்க் ஷேடா இருக்குற மாதிரி தெரியுது. இன்னும் கொஞ்சம் மைல்டா......!" என்று இழுத்த போது,
"ம்ஹூம்! இது தான் நல்லா இருக்கும்ன்னு தோணுது. இதையே எடுத்துக்கலாம். ப்ளீஸ் பேபி, ஓகே சொல்லேன்!" என்று கேட்டவனிடம் சம்மதித்து தலையாட்டி விட்டாள் ஐஸ்வர்யா.
ரோட்டோரத்தில் உள்ள பிரியாணி கடையை அவள் கை காண்பிக்க அவன் அதை கண்டுகொள்ளாமல் தன் கைப்பிடியை விடாமல் பற்றி இழுத்துக் கொண்டு தரமான உணவகத்தில் நுழைந்து விட்டான்.
"நான் கேக்குறதை வாங்கி குடுக்கணும்ன்னு மங்கை ஆன்ட்டி சொன்னாங்க ல்ல......... அங்க கூட்டிட்டு போ பாவா!" என்று அடம் பிடித்தவளிடம்,
"இங்க சாப்பிடுறியா? இல்ல எழுந்துரிச்சு வீட்டுக்கு போகலாமா..... இன்னொரு நாள் வந்து அந்த சௌஜன்யாவை பார்த்துக்கிட்டா போகுது!" என்று மித்ரன் தீர்மானமாக சொல்லியதும் தான் வேறு வழியின்றி மெனு கார்டை கையில் எடுத்தாள் அவள்.
சாப்பிட்டு முடிக்கையில் அவனாக ஆசைப்பட்டு அவளுக்கு ஒரு ஐஸ்கிரீமை ஆர்டர் செய்தான்.
"ஹையா ஐஸ்க்ரீம்.... என் மித்து பாவா ரொம்ப நல்லவர்! உங்கள் கொள்கைகளை தளர்த்தி இந்த அபலைக்கு இரக்கப்பட்டு ஐஸ்க்ரீம் தந்ததற்கு நீவிர் வாழ்வாங்கு வாழ்க! உம் குலம் வாழ்க! கொடை வாழ்க! கொற்றம் வாழ்க! வாழ்க நீ எம்மான்!!" என்று இரு கைகளையும் தூக்கி வாழ்த்தியவளிடம் சிரிப்புடன்,
"போதும்டா வரு பேபி, ரொம்ப குளிருது. ஒரு ஐஸ்க்ரீமுக்கு இவ்வளவு வாழ்த்தா..... அன்னிக்கு சோட்டு கூட சேர்ந்து கேக்கை உனக்கு இல்லாம சாப்பிட்டோம்ல..... அதுக்கு பதிலா தான் இந்த பட்டர் பெக்கன் கேரமெல்.....
சீக்கிரம் முடிச்சுட்டு வா! கிளம்பலாம்!" என்று சொன்னவனை கேவலமான ஒரு பார்வை பார்த்துவிட்டு,
"என்ஜாய் பண்ணி சாப்பிட்டு தான் வருவேன். வேற ஏதாவது வேலை இருந்தா போய் பார்த்துட்டு வா..... உனக்கு கொஞ்சம்....ம்ம் ஒரு ஸ்பூன், இரண்டு ஸ்பூன் ஐஸ்க்ரீம் எடுத்துக்க. அதுக்கப்புறம் எனக்கு குடுத்துடணும்!" என்று அவனிடம் வாய்மொழி ஒப்பந்தம் போட்டாள் வரு பேபி.
பெயருக்கு சிறிது ஐஸ்கிரீமை சுவைத்தவன் தயக்கத்துடன், "உன் கிட்ட ஒரு கேள்வி கேக்கணும் வரு பேபி! உன் எஜுகேஷனல் க்வாலிபிகேஷன் என்ன? தமிழ்ல உனக்கு எப்படி இவ்வளவு இண்ட்ரெஸ்ட் வந்தது?" என்று கேட்டான்.
"என்னடா கேள்வி கேக்குற? தமிழ் தானே என் தாய்மொழி.......என்ன ஒண்ணு அம்மாவுக்கும் நிறைய கமிட்மெண்ட் இருந்ததால எனக்கு எல்லாமே செவி வழிக் கல்வி தான்! அதுவே ஈஸியாவும் இருந்தது. திருக்குறள், நாலடியார், ஆத்திச்சூடி, மூதூரைல ஆரம்பிச்சு குறுந்தொகை, கலிங்கத்துப் பரணி, புறநானூறு, சிலப்பதிகாரம், கம்பராமாயணம் எல்லாமே அம்மா அர்த்தம் சொல்லி சொல்லி செய்யுளை வாசிச்சு காட்டியது தான்.....அப்பா கூட திட்டுவாங்க. ஐஷுவை அவ செட் ப்ரெண்ட்ஸோட ஏதாவது பார்ட்டி, என்ஜாய்மெண்ட்ன்னு எதுக்கும் அனுப்ப மாட்டேங்கிறன்னு..... ஆனாலும் ஒரு அழகான மொழின்னு அது மேல ஈர்ப்பு வந்து ஏதோ கொஞ்சம் கத்துக்கிட்டாச்சு. நாளைக்கு நம்ம பேபிக்கு தமிழ்ல எனக்கு தெரிஞ்ச விஷயத்தை எல்லாம் கத்துக் குடுப்பேன். கத்துக்கணும்ங்கிற ஆர்வம் அந்த குழந்தைக்கு இருந்தால்....!" என்று சிரிப்புடன் சொன்னவளிடம்,
"எனக்கு கத்து குடுப்பியா பேபி.... கத்துக்கணும்ன்னு நிறைய ஆர்வம் இருக்கு. பட் நான் கொஞ்சம் கரிக்கட்டை புத்திக்காரன் தான்....!" என்று சொல்லி தோளைக் குலுக்கியவனிடம்,
"விடு மித்து, வாழை மட்டையா இருந்தா தான் கஷ்டம்....நீ கரிக்கட்டை டைப்னா ஊதி ஊதி பத்திக்க வைச்சிடலாம்!" என்று சொன்னாள் ஐஸ்வர்யா.
"ரெண்டு கேள்வி கேட்டேன். ஒரு கேள்வியை ஸ்கிப் பண்ணிட்ட.... அதுக்கும் பதில் சொல்லும்மா!" என்றான் கெஞ்சலுடன்.
"மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் இன் மேனேஜ்மென்ட் அண்ட் லீடர்ஷிப் இன் ஸ்டான்ஃபோர்டு யுனிவர்சிட்டி. ஒன் ஆஃப் த பெஸ்ட் மித்து, நம்ம நேத்து மாஸ்டர் டிகிரிக்கு அங்க தான் போகணும்ன்னு ப்ளான் பண்ணி இருக்கான். பட் அவனை மாதிரி நான் ஒண்ணும் எனக்கு எது பெஸ்ட்ன்னு நினைச்செல்லாம் படிக்கல. அப்பா தான் கைய்ட் பண்ணினாங்க. ஸோ படிச்சேன். அவ்வளவுதான்...." என்று சொன்ன போது ஆச்சரியப்படுவது மித்ரனின் முறையானது. பெயருக்கு ஒரு டிகிரியை பூர்த்தி செய்து இருப்பாள் என்று நினைத்தால் எவ்வளவு பெரிய பல்கலைக்கழகத்தில் மேனேஜ்மென்ட் கோர்ஸ் செய்திருக்கிறேன் என்று இவ்வளவு இயல்பாக சொல்கிறாள் என்ற ஆச்சரியம் தான் அவனுக்கு.
கார் ராஜசேகரின் வீட்டிற்குள் நுழைந்தவுடன் சிவமித்ரனின் இயல்பான புன்னகை தொலைந்து ஒரு வித இறுக்கம் அவனை பற்றிக் கொண்டது. அவன் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தவாறு,
"உன்னை ரிசீவ் பண்ண வாசல்லயே வெயிட் பண்ணிட்டு இருக்காங்க மிஸ். சௌஜன்யா..... முகத்தை ஏன்டா இப்படி வச்சுக்குற....கொஞ்சம் ஸ்மைலிங் பேஃஸோட வா. நீ முதல்ல போ! டென் மினிட்ஸ் கழிச்சு நான் வர்றேன்!" என்றவளிடம் சிறு தலையாட்டலுடன்,
"நீ எப்போ இறங்குறியோ.... அப்போ தான் நானும் இறங்குவேன். உனக்கு கார்ல உட்கார்ந்து இருக்கிறது ஓகேன்னா எனக்கும் ஒண்ணும் இல்ல பேபி!" என்று புன்னகைத்தவனை
"கீழே இறங்கு!" என்று சொல்லி விட்டு அவளும் இறங்கினாள்.
"ஹாய் சௌஜன்யா......!" என்று கை குலுக்கி, தோளணைத்து கொண்ட இருவரையும் ஓர் ஒதுக்கத்துடன் நின்று கொண்டு கவனித்தான் மித்ரன்.
"ஹாய் சிவு......!" என்று கையசைத்து அவனை தழுவிக் கொள்ள வந்தவளிடம் இருந்து பின்னால் நகர்ந்தவன், "வாயால வரவேற்பு பண்ணீங்கன்னா போதும் சௌஜன்யா. தள்ளி நில்லுங்க. உள்ள போகலாம் வரு!" என்று அவளது சொந்த வீட்டில் அவளை அந்நியமாக்கி நிறுத்தி விட்டு ஐஸ்வர்யாவுடன் உள்ளே சென்றான் சிவமித்ரன்.
ராஜசேகரும், கமலாவும் இருவரையும் வரவேற்று அமர வைத்தனர். "ஐஷு, இஃப் யூ டோண்ட் மைண்ட்,
நான் சிவு கிட்ட பெர்ஸனலா பேசணும்!" என்றாள் சௌஜன்யா.
ஐஸ்வர்யா தயக்கத்துடன் மித்ரனின் கண்களை பார்க்கவும், "உட்கார்ந்துட்டு இருக்கற இடத்தில இருந்து ஒரு இன்ஞ்ச் நகர்ந்து போனன்னு வை; வீட்டுக்கு போனதுக்கப்புறம் அன்னிக்கு மாதிரி எங்கிட்ட ஒரு அறை வாங்குவ! அப்புறம் காது வலிக்குது, கன்னம் எரியுதுன்னு கம்ப்ளைன்ட் பண்ணக் கூடாது. சொல்லிட்டேன்!" என்று அடிக்குரலில் பேசியவனிடம்
"என்ன சிவு நீ? ஏன் ஒரு மாதிரி நெர்வெஸா, ரிஜிடா இருக்க..... மேக் யுவர்செல்ஃப் கம்பர்டபிள்!" என்று சொன்ன சௌஜன்யாவிடம்,
"எனக்கு பிடிச்ச இடத்தில தான் நான் கம்பர்டபிளா இருக்க முடியும். இங்க எனக்கு மூச்சு முட்டுது.... ஸாருக்காக தான் வந்தேன். சொல்ல வர்றதை கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க சௌஜன்யா. எங்களுக்கு நிறைய வேலை இருக்கு!" என்று கறார் குரலில் கூறினான் மித்ரன்.
ஐஸ்வர்யாவை உறுத்து விழித்தவள் மித்ரன் அவளை கைப்பிடியிலேயே வைத்திருப்பதையும் கவனித்தாள்.
"சிவு, எனக்கு ஐஸ்வர்யாவை பார்த்தவுடனேயே பிடிக்கவேயில்ல. நீ அவளை விரும்பினதாலயோ என்னவோ அவ எனக்கு நல்லதெல்லாம் செஞ்சாலும் முழுசா அவளை ப்ரெண்டுங்கிற இடத்தில எல்லாம் வைக்க முடியல. எனக்கு சீக்கிரம் மேரேஜ் நடக்கப் போகுது! தேவேஷ் ரொம்ப ரிச், ஹேண்ட்ஸம், உன்னை மாதிரி கேவலமான ஐடியாலெஜி எல்லாம் இல்லாதவர்..... ஆனாலும் இவ்வளவு சந்தோஷம் கிடைக்கப்போகுதுன்னாலும் என்னமோ ஒரு விஷயத்தை நான் மிஸ் பண்றேன்டா! நான் உன்னை லவ் பண்ணல, உன் மேல ஜஸ்ட் ஒரு க்ரஷ் தான்னு நினைச்சேன். ஆனா இந்த ஐஸ்வர்யா உன்னை லவ் பண்றா, நீ அவளை லவ் பண்ற; தேவேஷ் என்னை லவ் பண்றார்ன்னு தெரிஞ்சும் என் மனசு உன்கிட்ட இருந்து வெளியே வர மாட்டேங்குது. ஐ ஸ்டில் லவ் யூ.........ஹக்!" வார்த்தையை சௌஜன்யா முடிக்கும் முன்பே அவள் குரல்வளையை பற்றியிருந்தான் சிவமித்ரன்.
"சிவா......வேண்டாம்டா ப்ளீஸ்!" என்று ராஜசேகர் கைகூப்பினார். "மித்து விடு அவளை ஹர்ட் பண்ணிடாதப்பா!" என்று ஐஸ்வர்யா அவன் கையைப் பிடித்து அதை சௌஜன்யாவின் கழுத்தில் இருந்து பிரிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
"மிஸ். சௌஜன்யா ராஜசேகர், உங்க வீட்டுக்கு நாங்க வந்து இருக்குறதுனால என்ன வேணும்னாலும் பேசுவீங்களா? என் பியான்சியை பிடிக்காதுன்னு சொல்றீங்க! அப்புறம் என்னன்னமோ உளறுறீங்க...... இன்னமும் நான் நீங்க சொன்ன மாதிரி பணத்தோட மதிப்பு தெரியாத சைக்கிள்ல சுத்திக்கிட்டு இருக்குற பரதேசி தான்! இன்னும் வேற ஏதாவது சொல்லி என்னை திட்டினா கூட பரவாயில்லை. சிரிச்ச முகமா நின்னு வாங்கிக்குவேன். பட் என்னை உரிமை கொண்டாடுற வேலையோ, பேச்சோ வச்சுக்கிட்டீங்கன்னா ரொம்ப கஷ்டம். வருவோட கழுத்தை ஒரு நாள் பிடிச்சீங்க.... நியாபகம் இருக்கா? அதுக்கு உங்களுக்கு எப்படா பதில் மரியாதை செய்யலாம்ன்னு காத்துட்டு இருந்தேன். நீங்களே கண்ட விஷயத்தை உளறி ஒரு வாய்ப்பை குடுத்துட்டீங்க. ஐ திங்க் யூ நீட் அ சைகார்ட்டிக் அட்வைஸ்! அழகான ஒரு வாழ்க்கை கிடைக்கப் போகுது! உங்களை நேசிக்கற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க போறீங்க. சந்தோஷமா உங்க வாழ்க்கையை வாழுங்க. இதுக்கும் மேல உங்களை சந்திக்கிற சந்தர்ப்பத்தை உங்கப்பாவே கேட்டா கூட நான் ஏற்படுத்திக்கவே மாட்டேன். குட்பை மிஸ். சௌஜன்யா; கிளம்பறேன் ஸார்!" என்று சொல்லி விட்டு தன் காதலியின் கைகளை தன் கைகளுடன் கோர்த்து கொண்டு அங்கிருந்து கிளம்பினான் சிவ மித்ரன்.
ராஜசேகர் சௌஜன்யாவிடம், "ப்ளீஸ் சௌஜு; என் மேல இருக்கற மரியாதைக்காக தான் நீ இவ்வளவு பேசியும், உன்னை மரியாதை குறையாம திட்டிட்டு போறான், இனிமேலாவது உன் வேலை உண்டுன்னு இரும்மா, சிவாவை மறந்துட்டு உன் வருங்கால கணவர் கிட்ட அன்பா இரு! அதிகாரம் பண்ணியோ, கெஞ்சியோ ஒருத்தர் மனசுல அன்பை வர வைக்க முடியாதும்மா. புரிஞ்சுக்க முயற்சி பண்ணு!" என்றார் ராஜசேகர். கமலா தன் தோளில் மகளை சாய்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.
"அப்பா......நான் ரொம்ப தப்பான பொண்ணாப்பா.....எனக்கானவனா சிவுவை மாத்தணும்ன்னு தான் நான் நினைச்சேனே தவிர அவனுக்கேத்த பொண்ணா நான் மாறிக்கணும்ன்னு நினைக்கல. ம்ப்ச்! ஐஷுவும், அவனும் தான் நல்ல ஜோடியா இருப்பாங்கன்னு தோணுது. ஆனா ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி நான் மிஸ் பண்ணின லவ்வையாவது அவன் கிட்ட கன்வே பண்ணிடணும்னு நினைச்சு தான் அவனை கூப்பிட்டேன். இட்ஸ் ஓகே...... தேவேஷ் பேமிலி கிட்டயாவது கொஞ்சம் ஃப்ளெக்சிபிளா இருக்க முயற்சி செய்யறேன்!" என்றாள் தலைகவிழ்ந்த படி.
ராஜசேகரும், கமலாவும் தங்கள் மகளுக்கு நிறைய ஆறுதல் வார்த்தைகளை சொல்லி தைரியப்படுத்திக் கொண்டிருந்தனர்.
வீட்டில் ஐஸ்வர்யாவும், மித்ரனும் சந்திரதாராவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மித்ரன் பிள்ளையை மடியில் வைத்து தடவிக் கொடுத்து கொண்டு இருந்தான்.
"வரு பிள்ளை ஓரளவு ரெடியாகிடுச்சு. அவங்க அம்மா கூட கொண்டு போய் விட்டுடலாமா?" என்று மித்ரன் கேட்டதும் ஐஸ்வர்யாவின் முகம் சுணங்கியது. தன்னவளின் முக மாறுதல் கண்டு சகித்துக் கொள்ள முடியாமல் உச்சுக் கொட்டிய மித்ரன் அவளிடம்,
"ம்ப்ச், முகத்தை இப்படி தூக்கி வச்சுக்க கூடாது கண்மணி. முதல்லயே நம்ம மிட்டு பேபியை கொஞ்சம் வளர்ந்ததும் அவங்க மம்மி கிட்ட விட்டுடலாம்ன்னு அக்ரிமெண்ட் போட்டோம்ல....! வேணும்னா நம்ம வீட்ல இருக்கிற எல்லா மரத்திலயும் ஸ்குரிள் பாக்ஸ் பிக்ஸ் பண்ணிக்கலாம். ஒரு பத்து நாள் பீடிங் வச்சன்னா அதுவா அந்த பாக்ஸ்க்கு வந்துடப் போகுது. ஓகேவா?" என்றான் புருவம் தூக்கி.
"நல்ல விஷயம்.....செய்ங்கப்பா!" என்றார் சந்திரதாரா.
"டேய்....ஸ்குரிள் பாக்ஸா....! இருபது, முப்பது மரம் இருக்கேடா வீட்ல.... அம்புட்டுக்கும் பாக்ஸ்; அதுக்கு சாப்பாடுன்னு இனிமே மாசம் மாசம் ஒரு தனி அமௌண்ட் எடுத்து வைக்கணுமா?" என்று கேட்ட அருள்மொழி ஐஸ்வர்யாவின் முறைப்பில், "சரிடா ஐசு, நல்லா செஞ்சுடுவோம்!" என்று தலையாட்டினார்.
"யோவ்.....காசு நிறைய இருந்தா அதில கொஞ்சத்தை இப்படி செலவு செஞ்சா குறைஞ்சா போயிடுவ......!" என்று கேட்ட அலர்மேல் மங்கையிடம்,
"இல்லம்மா......நீ போய் குருவி, கொக்கு, ரோட்ல போற நாய் எல்லாத்தையும் கூட பிடிச்சுட்டு வா. ஒரு விலங்கு மறுவாழ்வு மையம் நடத்தலாம்!" என்றார் எரிச்சலுடன். அலர்மேல் மங்கை முகத்தை திருப்பிக் கொண்டு வேறுபுறம் திரும்பிக் கொண்டார்.
"மித்து மிட்டுவை ரெண்டு நாள் வச்சு இருந்துட்டு தர்றேன்ப்பா.... அதுக்கப்புறம் விட்டுடலாம்...... ப்ளீஸ்!" என்றவளிடம்
"சரி, ஆனா இன்னும் ரெண்டு நாள் தான்! அதுக்கப்புறம் எக்ஸ்டன்ஷன் கேட்க கூடாது. நான் பாக்ஸ்க்கு விசாரிக்குறேன். இன்னொரு ஒன் வீக், டென் டேஸ்ல செட் பண்ணிடலாம். அம்மா டீ, பால் ஏதாவது குடிக்குறீங்களா? கொண்டு வரட்டுமா?" என்று கேட்டவனிடம் அலர்மேல் மங்கை,
"பெரிய தம்பி, அதெல்லாம் என் வேலை. நான் செஞ்சுக்குறேன். பாப்பா பருப்புருண்டை குழம்பு கொஞ்சூண்டு சாப்பிடுறியா? மதியத்துல உனக்காக செஞ்சது, நீ தான் சாப்பிடலையே......!" என்று அவர் கேட்டதும் மித்ரன் சமையலறைக்குள் சென்று பாத்திரங்களை ஆராய்ந்தான்.
"ஐயயோ..... என்ன மங்கை அம்மா..... கத்தரிக்காய் எண்ணெய்க்குள்ள ஸ்விம்மிங் பண்ணிட்டு இருக்கு..... இதெல்லாம் இவளுக்கு வேண்டாம்!" என்று பதறினான். ஐஸ்வர்யா ஸ்ரீ தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள்.
"இந்தாருங்க பெரிய தம்பி.....நீங்க பெரிய சாப்பாட்டு டாக்டர் தேன்..... அதுக்காக இது ஏன் இப்படி, அது ஏன் அப்படின்னு குறைமாட கூடாது ஆமா..... புள்ளைய நல்லா சாப்பிட விடுங்க. வீட்டு சமையல் ஆரோக்யமாதேன் இருக்கும். சரியா?" என்று கேட்டவரிடம் வேறு வழியில்லாமல் அரைமனதாக தலையை ஆட்டி விட்டு சென்றான் சிவமித்ரன்.
அலர்மேல் ஆன்ட்டியின் கைப்பக்குவத்தை வயிறார சுவைத்து விட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டு மாலை ஐந்து மணிக்கு தயாராகி வந்தவளிடம் கைகளை கட்டிக் கொண்டு,
"மகாராணி இப்போ எங்க நகர்வலம் கிளம்பியாச்சு?" என்று கேட்ட மித்ரனிடம்,
"தெரியலடா! நேத்து எங்கேயோ கூட்டிட்டு போறேன்னு சொன்னான். ஆறு மணிக்கு ரெடியா இருக்க சொன்னான்.....நீ அந்த சில்க் ஸாரி யாருக்குன்னு சொல்லவேயில்லையே மித்து? எனக்கு இல்லையா?" என்று கேட்டவளிடம் சிரிப்புடன்,
"உனக்கு தான் கண்மணி, பட் அதை வச்சு கொஞ்சம் வேலை இருக்கு. இன்னொரு நாள் உன் கிட்ட தர்றேன். நானும் உங்க கூட வருவேன். போய் ரெடியாகிட்டு வந்துடட்டுமா?" என்று திரும்பி செல்ல கிளம்பியவன் கைகளைப் பிடித்துக் கொண்டு,
"ஏம்ப்பா சாப்பாட்டு டாக்டர்..... எனக்கு ஒரு டவுட்டு...... என்னோட ஒபிசிட்டி நமக்கு..... பிறக்கப் போற பேபியையும் அஃபெக்ட் பண்ணுமா!" என்று தயங்கியபடி கேட்டவளிடம் புன்னகையுடன்,
"கண்டிப்பா பண்ணும். உன் ஒபிசிட்டிக்கு சைட் எபெக்ட்டா ப்ளட் பிரஷர் வரலாம். டயப்பிடீஸ் வரலாம். ப்ரீ மெச்சூர் பேபிக்கு கூட பாஸிபிளிட்டி இருக்கு!" என்று சொல்லிக் கொண்டு இருந்தவனிடம் கோபத்துடன்,
"வாயை மூடு.... அறிவு கெட்டவனே! எப்போ பார்த்தாலும் டாக்டராவே இரு! ஒரு லவ்வரா இருந்து என்னை பயமுறுத்தாம கட்டிப் பிடிச்சு உனக்கும், பேபிக்கும் ஒண்ணும் ஆக விடமாட்டேன்டா வருன்னு சொல்றியா......நீ? ஐ ஹாவ் டூ கோ, டோண்ட் கம் இன் மை வே!" என்று சொல்லி அவனை கும்பிடு போட்டு சென்றவளின் பின்னால் கெஞ்சி, கொஞ்சி அவளை சமாதானம் செய்ய முயன்று கொண்டு இருந்தான் மித்ரன்.
வஞ்சி மனம் தஞ்சம் கொள்வான்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro