போக மாட்டேன்: 42
ஆரவிற்கு தெரிந்த ஒரு மருத்துவரை சந்தித்துவிட்டு அவர் நம் நாயகனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கூறியதும் இப்போது யாதேஷ் ஆரவ் காரின் பின் சீட்டில் அவன் ஆசை மனைவியின் மடியில் தலைவைத்து நிர்மலாக உறங்கிக் கொண்டிருந்தான்.
ஷிவன்யா கடந்த அரை மணி நேரத்தில் எதுவும் பேசவுமில்லை. அவள் கடந்த நாட்களாக தொடர்ந்து செய்யும் ஒரே வேலையான அழுகையையும் தொடரவில்லை. தன் வெண்டைவிரலால் அவன் கேசத்தில் விளையாடியபடி குழந்தை போல் அவன் உறங்குவதை திகட்ட திகட்ட அவள் கண்களுக்குள் நிறப்பிக் கொண்டிருந்தாள்.
எத்தனை தூங்கா இரவுகள் இந்த காட்சியை பார்க்க ஏங்கியிருப்பாள்? எத்தனை உயிரோடே மருகிய நாட்கள்? எத்தனை தனிமையிலே கழிந்த கொடிய நாட்கள்?
அப்பப்பா... அனைத்திற்கும் அவன் தன் மடியில் துயில் கொண்ட இந்த சில நொடிகள் சொர்க்கமாய் தோன்றியது பெண்ணவளுக்கு.
அவர்கள் இருவரையும் அவ்வப்போது பார்த்துக் கொண்டே வந்த ஆரவிற்கு நினைவுகள் அலைமோதிக் கொண்டே இருந்தது.
ஆரவ் " எதாவது சாப்டியா டா? "
ஷிவன்யா அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு ஏதோ ஒரு நினைவில் தலையை மட்டும் ஆட்டினாள். ஆரவ் சரி பின்னர் பேசிக் கொள்ளலாம் என நினைத்த நேரம் ஷிவன்யாவை பேச்சைத் தொடர்ந்தாள்.
" நான் தப்பு பண்றேன் தான அண்ணா? "
ஆரவ் முன் கன்னாடியின் வாயிலாக அவளைப் பார்க்க, யாதேஷின் மீதிருந்த பார்வையை அவள் அகற்றவில்லை.
" என்ன ஷிவா கேட்க வர? "
" இப்போ நான் ஓடி ஒழியிறது தப்பு தானே... என் சுயநலத்துக்காக ஷிவானியையும் இவரோட லைஃப்லேந்து நான் மறைக்க நினைக்கிறது தப்பு தானே... இப்போ மாமா என்னத் தேடித்தேடி வரப்போவும் நான்...நான் தள்ளி நிக்கிறது தப்பு தானே...? "
ஆரவ் அவளுக்கு பதில் கூறாமல் மௌனம் காக்க, மேலும் அவளே தொடர்ந்தாள்.
" என்னால இத்தன வர்ஷம் கடந்தும் எதையும் மறக்க முடியல அண்ணா... அவர சாகுற நிலைமைல ஒரு முறை பார்த்ததே என்ன சாகுற வரைக்கும் குத்திக்கிழிச்சிட்டே இருக்கும். திரும்ப என்னால அவர அப்டி-அப்டி பார்க்க முடியாது. என் கூட இல்லனாலும் எங்கையோ அவர் உயிரோட நல்லா இருப்பாருன்னு தான் தள்ளிப் போக நினைச்சேன்... ஆனா... "
அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வருவது போல் அவள் உதடுகள் துடித்தது. ஆனால் கண்களில் கண்ணீர் இல்லை.
ஆரவ் " உன் புருஷன நான் நினைவு தெரிஞ்சதுலேந்து பார்த்துட்டு வரேன் ஷிவா. அவன் உன் அளவுக்கு வேற எந்த விஷயத்தையும் இந்த உலகத்துல விரும்பல. நீ எப்டி அவன் மனசுக்குள்ள போனன்னுலாம் எனக்குத் தெரியாது. ஆனா நீ இன்னும் அவன் மனசுல இருக்க டா, அவனுக்கு எல்லாமே மறந்து போயிருக்கலாம் ஆனா நீ... அவன் லவ்... ம்ஹும்... "
ஷிவன்யா மெல்ல ஆரவைப் பார்க்க, அவன் முகத்தில் புன்னகை ஒன்று இலையோடியது.
" திரும்ப என்ன என்னலாம் பாடுப்படுத்த ஸ்டார்ட் பண்ணீட்டான் தெரியுமா இவன்? உன் குரல கேட்டதுக்கே என்ன அவன் சும்மா விடல, இப்போ உன்ன பார்த்த நாள்லருந்து அவன் பண்ற அலப்பரையெல்லாம் யம்மா! "
சிரித்துக் கொண்டிருந்த ஆரவ் சீரான முகத்தோடு ஷிவன்யாவின் வலி மிகுந்த கண்களை சந்தித்தான்.
" நாழு வர்ஷமா எந்த நியாபகமும் இல்லாம அவன நான் என் பழைய யாதேஷா பார்த்தேன் தான், ஆனா அவன் முழுசா இல்ல... நாழு நாள் முன்னாடி வரைக்கும். "
ஷிவன்யா சிலிர்த்தடங்கிய அவன் வார்த்தையில் கண்கள் கலங்கிட புன்னகையோடு உறங்கும் யாதேஷின் முகத்தை வருடினாள்.
" நீ இல்லாம அவன் உயிரோட இருப்பான் தான்... ஆனா உயிர்ப்போட இருக்க மாட்டான் ஷிவா. நான் அவனுக்காக மட்டும் சொல்லல டா, உனக்காகவும் தான் சொல்றேன். உங்க இரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனது எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா அவனுக்கு எப்போவோ எதாவது நியாபகப் படுத்த முயற்சி செஞ்சிருப்பேன்... சாரி டா, "
கண்களை அழுந்தத் துடைத்துவிட்டு புன்னகைத்த ஷிவன்யா " நான் சொல்லாம கொள்ளாம ஊர விட்டுப் போனதுக்கு நீங்க ஏன் அண்ணா சாரி கேட்றீங்க? என்ன நடக்கனும்னு இருந்துச்சோ அதுப்படியே தான் நடந்திருக்குது போல, "
ஆரவ் " சரி நீ இப்போ என்ன செய்யலாம்னு இருக்க? " என மெதுவாக தூண்டில் போட்டான்.
சீட்டில் தலை சாய்த்து கண் மூடிய ஷிவன்யா " எனக்குத் தெரியல அண்ணா... ஆனா நான் அவர விட்டுட்டு திரும்ப எங்கையும் போகுறதா இல்ல... இவ்வளவு நாள் புத்திப்பேதழிஞ்ச மாதிரி தனியாளாவே போய்டலாம்னு நெனச்சிட்டேன். ஆனா என் உயிர் எனக்காக காத்துட்டு இருக்கும் போது என்னால இனிமேலும் அத தவிக்க விட முடியாது. "
விட்டால் ஆரவ் யாதேஷின் நிலையையும் மறந்து அங்கேயே குத்தாட்டம் போட்டிருப்பான். உலகை வென்ற அளவில்லா மகிழ்ச்சியோடு அவளைக் கண்டு நிறைவாகப் புன்னகைத்தான்.
ஆரவ் " இதுக்கு மேல எல்லாத்தையும் நாங்க பார்த்துக்குறோம் டா, "
முதலில் எதுவும் கூறாமல் அமைதிகாத்த ஷிவன்யா பின் பெருமூச்சோடு கண்களைத் திறந்தாள்.
" இல்ல அண்ணா. நான் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் இருக்கு. இப்போ இவர் வீட்டுக்குப் போகலாம். "
ஆரவ் அவளை திரும்பி நம்பாத ஒரு பார்வை பார்த்தான். ஆனால் எந்த சலனமும் இல்லாமல் இருந்தது நம் நாயகியின் முகம்.
" சசி சொன்னது உண்மையா? இன்னும் ஸ்வேத்தா இவர கல்யாணம் பண்ணிக்கனும்னு வெயிட் பண்ணீட்டு இருக்காளா? " என புருவத்தை உயர்த்தி ஆரவை அமைதியாய் அவள் ஒரு பார்வை பார்க்க, ஆரவிற்கு எங்கோ அடிக்கும் அபாய மணி சத்தம் மெதுவாக கேட்டது.
" உண்மை தான்... அவனோட அம்மா தான் அவ ஒன்னாவது படிக்க ஆரம்பிச்சதுலேந்து மருமகளே மருமகளே வா வான்னு ஆரத்தி சுத்தீட்டு இருக்காங்களே... அவ மட்டும் எப்டி சும்மா இருப்பா? "
" ஆனா ஏன் இத்தன வர்ஷம் எதுவும் அவங்க செய்யல... "
" எல்லாம் உன் தர்மபத்தின புருஷன் இராமனா இருக்குறதால தான். அவன் தெரிஞ்சோ தெரியாமலோ ஸ்வேத்தாவுக்கு கொஞ்சம் கூட பக்கத்துல இடம் கொடுக்கல. அவளுக்குன்னு இல்ல, வேற எந்த பொண்ணையும் அவன் பார்க்கல... கல்யாணத்துக்கு அவன் வேணும் வேணாம்னு சொல்லாதப்போவே அவங்கம்மாவும் அவளும் அடுத்த முகூர்த்தத்துல அவங்களுக்கு நிச்சயம் பண்ணலாம்னு நாழு வர்ஷமா பேசீட்டுத் தான் இருக்காங்க... ஆனா பாரேன் உன் புருஷன் உன்ன பார்த்த இரெண்டாவது நாளே நீ தான் அவனோட ஆளுன்னு சொல்லீட்டுத் திரியுறான், "
தன் காதல் கணவனின் காதலில் இன்னமும் உள்ளம் உருகிய பெண்ணவள் அவன் நெற்றியில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் ஆசை நகையோடு. அவள் மடியில் இன்னமும் தலையை அழுத்திய யாதேஷ் அந்த காரின் குறுகிய இடத்திலும் புரண்டு படுத்து அவள் இடையோடு முகம் புதைத்து அவள் இடையை சுற்றி இரு கைகளாலும் அணைத்துக் கொண்டான்.
" யமுனா... போகாத ப்லீஸ்... யமுனா... "
ஷிவன்யா இவனது திடீர் அசைவிலும் உரிமையான தொடுகையிலும் சில்லிட்ட பனிச்சிலையாய் உறைய ஆரவ் அதை பார்த்தும் பார்க்காதது போல் ஷிவன்யாவை சகஜமாக்க முயன்றான்.
" தூங்குனாலும் என் மச்சான் எப்டி இராமன் மாதிரி இருக்கான் பாத்தியா? உன்னத் தவிர வேற எவளையும் பார்க்காது அவன் மனசு. "
ஷிவன்யா " ஆமா சொன்னாலும் சொல்லாட்டியும் என் மாமா இராமன் தான். " என அவன் தலையில் குனிந்து அவள் தலையை சாய்த்துக் கொண்டாள்.
ஆரவ் " உன் ப்லன் கொஞ்சம் சொதப்பி இருந்தாலும் மலையேறுன சாமி ஒருவழியா மலையிறங்கிடுச்சு டா மச்சான். " என மானசீகமாக ஷிவனேஷிடம் சொல்லிவிட்டு உதட்டோரப் புன்னகையோடு காரை யாதேஷின் வீட்டை நோக்கிச் செலுத்தினான்.
யாதேஷின் வீட்டைப் பார்த்த ஷிவன்யாவிற்கு மீண்டும் பழைய நினைவுகள் எப்போதும் போல் வந்து மனதை தொட்டுச் சென்றது. ஆனால் ஓடி ஒழிந்து மட்டும் என்ன ஆகப் போகிறது?
ஆரவ் கைத்தாங்கலாக யாதேஷைத் தட்டி எழுப்பி அவனை தோளோடு அணைத்தபடி எழுந்து நிற்க வைத்தான். அதற்கே அரை உறக்கத்தில் இருந்த நம் நாயகன் காற்றில் அவன் நாயகியைத் தேடி கையை இங்கும் அங்கும் ஆட்டிக் கொண்டிருக்க, அவனின் மறுபுறம் சென்று அவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டாள் ஷிவன்யா. அவள் ஸ்பரசிம் உணர்ந்த மறுநொடி யாதேஷின் முழு உடலும் சுயநினைவற்ற நிலையிலும் அவள் புறமே சாய்ந்தது.
வீட்டின் மணியை அடித்துவிட்டு இவர்கள் மூவரும் காத்திருக்க, இன்னமும் வீடு திரும்பாத அண்ணனுக்காக காத்திருந்த விஜித்தா கதவை திறந்ததும் பார்த்தது ஷிவன்யாவைத் தான்.
" அண்ணி!! " என பக்கத்து வீட்டுக்கே கேட்கும் அளவு கத்திய விஜித்தாவின் சத்தத்தில் யாதேஷின் தூக்கத்தோடு அப்போதே உறங்கியிருந்த சாதனாவின் தூக்கமும் கலைத்தது.
விஜித்தா எதை பற்றியும் சிந்திக்காமல் தாவி வந்து அவள் அண்ணனின் தோளோடு ஒன்றியிருந்த அவள் அண்ணியை பிடித்துக் கொள்ள, தூக்கம் பாதி கலைந்த யாதேஷ் சினுங்கிக் கொண்டே ஷிவன்யாவை மேலும் அவனிடம் இழுத்துக் கொண்டான்.
" ஏய்... அது என் பொண்டாட்டி எனக்குத் தான்... "
விஜித்தா அவனின் கூற்றைக் கூட கவனிக்கவில்லை.
" அண்ணி ஐயோ இராமா அண்ணி நீங்க திரும்ப வந்துட்டீங்களா?! நீங்க இல்லாம என்ன என்னலாம் நடந்துப் போச்சுத் தெரியுமா? " என விஜித்தா வாணத்துக்கும் பூமிக்கும் குதிக்க தன் மீது கள்ளம் கபடமற்ற பாசம் கொண்ட இவளின் அன்பில் ஷிவன்யா அகமகிழ்ந்தாள்.
ஆரவ் " சேரி சேரி கொஞ்சம் உங்க பாசப்போராட்டத்த ஒத்தி வைங்களேன். இன்னும் செத்த நேரம் நின்னாலும் உன் அண்ணன் என் தங்கச்சிய டெடிபியர் மாதிரி கட்டிப்புடிச்சிட்டு இங்கேயே தூங்கீடுவான், " என விஜித்தாவின் பாசத்திற்கு சற்று ப்ரேக் போட்டான்.
விஜித்தா தலையில் அடித்துக் கொண்டு அவர்களை உள்ளே வரவேற்க, சாதனாவின் குரல் அவர்களை தடுத்தது.
" விஜி... யாரு வந்தது? ஏன் நீ கத்திக்கிட்டு இருக்க? " என கேட்டுக் கொண்டே வந்தவரின் பின் காதில் மாட்டிய ஹெட்ஃபோனுடன் வந்தாள் ஸ்வேத்தா.
உள்ளே வந்ததும் தலை நிமிர்த்திய ஷிவன்யா ஒரு நொடி சாதனாவை கண்டு நடுங்கியது உண்மை தான். அன்று அவர் சொன்ன அனைத்து கொடிய சொற்கள் இன்றும் அவள் இதயத்தை நொறுக்கியது. பயத்தில் அவள் ஒரு கையும் நடுங்கத் தொடங்கியதை அவள் அறியவில்லை.
ஆனால் அவள் மன்னவன் அவளோடு இருக்கையில் அவன் அவளை அஞ்ச விட்டுவிடுவானா? விஜித்தாவிடமிருந்து அவள் கையையும் பிரித்து அவன் மார்போடு இழுத்துக் கொண்டான்.
" யமுனா தூங்கலாம்... தூங்கலாம் யமுனா... வா போலாம்... "
நான்கு வருடம் களித்து ஷிவன்யாவை யாதேஷோடு பார்த்ததற்கே இமையமலையை மண்டையில் போட்டது போல் நின்ற சாதனா மற்றும் ஸ்வேத்தா நம் நாயகன் அவளை உரிமையோடு அணைத்தபடி யமுனா என அழைத்ததை கேட்டதும் திடுக்கிட்டு யாதேஷைப் பார்த்தனர்.
" அண்ணா வாங்க இவர ரூம்ல படுக்க வைக்கனும், " என யாரையும் பார்க்காமல் ஷிவன்யா ஆரவிடம் சொல்லிவிட்டு முன்னே நடக்க, சாதனா எப்படியோ அதிர்ச்சியிலிருந்து வெளியே வந்து குரலை உயர்த்தினார்.
சாதனா " ஏய் எந்த உரிமைல டி இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்ச? என் புள்ளையோட வாழ்கைய ஒரு தடவ அழிச்சது பத்தாம திரும்ப வந்துட்டியா?! "
அவர் கூறியதை கேட்டு யாருக்கு கோவம் வந்ததோ இல்லையோ. இன்னமும் அரை உறக்கத்தில் யமுனா யமுனா என அவளோடு ஒன்றியிருந்த யாதேஷிற்கு நாடி நரம்பெல்லாம் புடைத்தது. ஆரவ் பிடித்திருந்த அவன் கையை அவன் உதறித் தள்ளிவிட்டு " நிறுத்துங்க! " என கோபமாக கத்தினான்.
ஆனால் கோபம் அவன் மயக்கத்தின் வீரியத்தோடு கலந்ததால் நிற்க இயலாமல் அவன் திண்டாட யாதேஷின் ஒரு சொல்லுக்கே சப்தநாடியும் அடங்கிப் போனது சாதனாவிற்கு.
" மாமா! " ஷிவன்யா வலுக்கட்டாயமாக அவனை அவளோடு பிடித்து நிற்க வைக்க உடனே அமைதியான யாதேஷ் மீண்டும் அன்னையைத் தேடும் குழந்தைப் போல அவளோடு ஒன்றிக் கொண்டான்.
" உன் கோபத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல டா டேய், " என ஒரு பக்கம் வசைபாடிக் கொண்டே சாதனா மற்றும் ஸ்வேத்தா முகத்தில் இருந்த ஈ ஆடாத எக்ஸ்ப்ரஷனால் உள்ளூர மகிழ்ந்து கொண்டே ஷிவன்யாவிற்கு தன் நண்பனை மாடியில் இருக்கும் அவன் அறைக்கு அழைத்துச் செல்ல உதவினான் ஆரவ்.
படுக்கையில் அவனை தள்ளியதுமே அவன் ஷிவன்யாவையும் அவனோடு இழுக்கப் பார்க்க, அதிலிருந்து லாவகமாக தப்பியவள் ஒரு தலையணையை அவன் கரங்களுக்கு இடையே கொடுத்து அவனை திருப்பிப் படுக்க வைத்தாள். யாதேஷ் சினுங்களோடு மெத்தையில் புரள முயற்சி செய்ய அவன் தலைகோதி ஏதோ ஒரு பாடலை மெல்லிய ஓசையில் ஷிவன்யா பாடிட, இவை அனைத்தையும் கதவோரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த ஆரவிற்கு அவள் பாட்டை கேட்ட சில வினாடிகளில் யாதேஷ் நிர்மலாக நித்திராதேவியின் பிடியில் ஆழ்ந்ததும் உடல் சிலிர்த்தது.
ஷிவன்யா இவை அனைத்தையும் முன்பே பல முறை செய்து பழக்கப்பட்டதைப் போல அவனுக்காக ஒவ்வொன்றையும் செய்வதை பார்க்கும் அவனுக்கு அவர்கள் திருமணமாகி ஒன்றரை வருடம் ஒன்றாக வாழ்ந்தனர் என்ற உண்மை அவ்வப்போது மறந்துவிடுகிறது போல.
இவள் எப்போதடா வெளியே வருவாள் என அந்த அறை மீதே கண்கள் வைத்து காத்திருந்த ஸ்வேத்தா ஆரவ் மற்றும் ஷிவன்யா கீழே இறங்கி வருவதைக் கண்டு சாதனாவை உலுக்கினாள்.
ஆனால் அவர்களுக்கு முன் விஜித்தா முந்திக் கொண்டாள்.
" அண்ணி! அண்ணனுக்கு எல்லாமே நியாபகம் வந்துடுச்சா? அவன் எப்டி உங்கள யமுனான்னு... எப்டி அண்ணி?! "
விஜித்தாவின் கண்களில் அத்தனை ஆனந்தம். இனி தன் தமையனுக்கு எந்த கேடும் நடக்கப் போவதில்லை, அவன் மனதுக்குப் பிரியமானவளோடு அவன் வாழப் போகிறான் என அவள் இறெக்கையின்றி விண்ணில் பறக்க அன்பாய் அவள் தலை கோதிய ஷிவன்யா இல்லை என தலையசைத்தாள்.
" இல்ல விஜி... உங்க அண்ணனுக்கு எதுவும் இன்னும் நியாபகம் வரல, "
இதை கேட்டதும் தான் சாதனா மற்றும் ஸ்வேத்தாவிற்கு சீராகவே மூச்சு வந்தது.
சாதனா விருவிருவென அவர்களிடம் வந்து ஷிவன்யாவின் கையை இறுக்கமாக பிடித்தார்.
" என் புள்ள இருக்க இடத்துல நீ இருக்கவே கூடாது. அவன் உயிர நீ காவு வாங்கீடுவ! ஒழுங்கா நீயா அவன் வாழ்கைல இருந்து போய்டு, அவனுக்கு நான் அமோகமா கல்யாணம் பண்ணி அழகு பார்க்கப் போற நேரத்துல அபசகுணமா நீ இங்க எங்கையுமே இருக்க கூடாது! " என ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டு அவர் ஷிவன்யாவை கதவு வரை இழுத்துச் செல்ல, படாரென அவளது கையை சுழற்றி எடுத்துக் கொண்டாள் ஷிவன்யா.
" ஹையோ மாமியாரே, என்ன நீங்க பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க? உங்க புள்ள தான் நாழு நாழா வா யமுனா வா யமுனான்னு என்ன கூப்ட்டுட்டே இருக்காரு, அதெப்புடி என் புருஷன் கூப்பிட்டு நான் வராம இருப்பேன்? அதோட சென்னை ஒன்னும் நீங்க எழுதி வாங்குன உங்க நிலம் இல்ல மாமியாரே. நான் எங்க எப்போ வேணா வருவேன். "
ஷிவன்யாவின் நக்கல் சிரிப்பு ஆரவ் மற்றும் விஜித்தாவை வாய் மேல் ஆச்சர்யமாய் கை வைக்கத் தூண்ட, மற்ற இருவருமோ இவள் இப்படி கூட பேசுவாளா என அவளை மிரண்டு போய் பார்த்தனர்.
விழி மீறிய வழி நாடி...
DhiraDhi❤️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro