நினைவின்றியும் காதல்: 36
தன் உயரத்திற்கு குனிந்தமர்ந்தவனை அப்போதும் அன்னாந்து பார்த்த ஷிவானி அவன் கையின் ஸ்லீவைப் பிடித்து எங்கோ காட்டி, " பாப்பாக்கு பன்னு வேணும்... "
அவள் கூறிய விதத்தில் சிரித்தவன், சுற்றிப் பார்த்துக் கொண்டே, " என்ன பன்னு வேணும் பாப்பாக்கு? "
அவன் கேட்டது தான் தாமதம் ஷிவானிக்கு அழுகையெல்லாம் பறந்துவிட்டது.
" தேங்கா பன்னு! "
யாதேஷ் சிரித்துக் கொண்டே கீழிருந்து எழ முயற்சிக்க, ஷிவானி அவன் கழுத்தைப் பிடித்துக் கொண்டு கீழே மீண்டும் இழுந்தாள்.
" பாப்பாக்கு... பாப்பாக்கு பன்னு... "
ஷிவானியின் கண்கள் பாவமாய் அவனை நோக்க, அவளைப் பார்த்து புன்னகைத்த யாதேஷ் அவள் கையைப் பிடித்துக் கொண்டு, " பன்னு வாங்க தான் போறோம். அப்டீயே பாப்பாவோட அம்மாவையும் தேடலாமா? "
ஆனால் ஷிவானிக்கு பன்னு மட்டும் தான் காதில் கேட்டது.
" பன்னு வேணும்! " என குதூகலமாய் அவள் கத்திக்கொண்டே யாதேஷிடம் குதிக்க, ஏதோ பிறந்தது முதல் பார்த்துப் பழகிய முகம் போல் யாதேஷும் அவளை எந்த முன் சிந்தனையும் இன்றி தூக்கிக் கொண்டான்.
இப்போது யாதேஷ் மற்றும் ஷிவானி இருவருமாய் தேங்கா பன்னைத் தேடும் வேட்டையில் ஒன்றாய் இறங்கினர்.
" ஆமா குட்டி உங்க அம்மா எங்க? "
அவன் கேள்விக்கு அலட்டலே இல்லாமல் எங்கையோ கையைக் காட்டிவிட்டு அவள் பன்னு தேடுவதிலே குறியாய் இருக்க, யாதேஷிற்கு சிரிப்புத் தான் வந்தது.
" அம்மா உங்கள தேட மாட்டாங்களா? சொல்லீட்டு வந்தீங்களா நீங்க? "
இந்த கேள்விக்கு தலையை நன்றாக டிங்கு டிங்கென ஆட்டிய ஷிவானி திடீரென எதையோ பார்த்துவிட்டு வாயைத் திறக்கும் முன்பாக யாதேஷ் சிகப்பு நிற பக்கெட்டில் இருந்த தேங்கா பிஸ்கட்டை எடுத்தான்.
" இது நான் என— "
நம் நாயகன் ஏதோ கூற வருவதற்குள் அதை தாவி வந்து பிடுங்கிய ஷிவானி வாயெல்லாம் பல்லாக " தேங்கா பிஸ்கெட்டு பாப்பாக்கு! "
" உங்களுக்கும் தேங்கா பிஸ்கட் புடிக்குமோ? " யாதேஷ் சிரித்துக் கொண்டே ஷிவானியை பார்க்க, நம் குட்டி தேவதை ஏதோ உலகமே அவள் கைக்கு வந்தது போல் வாயெல்லாம் பல்லாக யாதேஷின் கழுத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு அவன் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
அந்த முத்தத்தை கண்கள் மூடி உணர்ந்த யாதேஷின் இதயம் படபடக்க, உறைந்த புன்னகையோடு அவன் ஷிவானியை கீழே இறக்கிவிட முனைந்த அதே நேரம் அவன் காதில் ஒலித்தது எங்கோ பலமுறை கேட்ட கொலுசொலி...
ஷிவானியை இறக்கிவிடாமல் அப்படியே நின்றவன் கண்களை மூடி அந்த கொலுசின் ஒலியை பின் தொடர முயல, அவன் கன்னத்தைத் தட்டிய ஷிவானியின் அசைவில் பட்டென கண்களைத் திறந்தான்.
" அம்மாட்ட போலாமா? "
அந்த கேள்வி ஏனோ வெகு தொலைவில் இருந்து கேட்பது போல் இருந்தது நம் நாயகனுக்கு. பாப்பா, பன்னு, தேங்கா மற்றும் பிஸ்கெட் என இந்த நான்கு வார்த்தைகளை விடுத்து முதல் முறை ஷிவானி பேசிய அந்த வார்த்தைகள் அவன் காதுகளை ரிங்காரமிட, ஏதோ ஒரு மாயைக்கு கட்டுப்பட்டதைப் போல தலையாட்டிய யாதேஷிற்கு மீண்டும் கேட்டது அந்த கொலுசொலி.
என்ன சத்தம்? யாரின் சத்தம்?
யாதேஷின் மூளைக்குள் அந்த கொலுசின் ஒலி மீண்டும் மீண்டும் இந்த கேள்விகளை எழுப்ப, ஷிவானியிடமிருந்து வந்தது பதில்.
" அம்மா, "
யாதேஷ் டப்பென தலையை சிலுப்பிவிட்டு சிரித்துக் கொண்டிருந்த ஷிவானியைப் பார்த்து விழிக்க, ஷிவானி எங்கோ கை காட்டினாள்.
" அம்மாவா? "
" ம்ம்ம் அம்மா! "
ஷிவானியின் சிரிக்கும் கண்கள் யாதேஷின் மனதை லேசாக்க அவனுக்கும் அந்த புன்னகை ஒட்டிக் கொண்ட அதே நேரம் திடீரென கேட்ட ஒரு குரல் அவனை நேராக திரும்ப வைக்க, அதிர்ந்து நின்ற ஷிவன்யாவின் மீது விழுந்தது அவன் பார்வை.
அறக்கபறக்க சூப்பர்மார்கெட் முழுவதும் அலைந்து திரிந்தும் பன்னு கிடைக்காததால் பரிதவித்து நின்ற சசியை கண்ட ஷிவன்யா தன் மகளின் சேட்டைளை அறிந்தவளாய் இவளை பில் போட சொல்லிவிட்டு அவளே ஷிவானியைத் தேடி வர, " தேங்கா பிஸ்கெட்டு பாப்பாக்கு! " என்ற ஷிவானியின் சத்தம் வந்த திசை நோக்கி விரைந்தாள்.
தெரியாதவரிடம் நிச்சயம் தன் மகள் தானாக பேசியிருக்க மாட்டாளே என்ற பயத்திலே சற்று வேகமாய் வந்தவள் அவளை யாரோ தூக்கி வைத்திருந்ததையும் ஷிவானி சிரித்துக் கொண்டிருந்ததையும் கண்டு புன்னகைக்க, அவள் புன்னகை ஷிவானியை தூக்கி வைத்திருந்தவனைப் பார்த்ததும் கானலாய் மறைந்தது.
யாதேஷ் மற்றும் ஷிவானி ஒரே போல் புன்னகையோடு ஷிவன்யாவின் புறம் திரும்ப, அந்த காட்சி படம் போல் அவள் மனதின் ஆழத்தில் பதிந்ததை அவளாலும் தடுக்க முடியவில்லை.
யாதேஷின் மகிழ்ச்சி அவன் கண்களில் பிரதிபலிக்க, யாரை பார்த்துவிட முடியாதா என ஏங்கினானோ அவளே அவனிடம் நடந்து வந்தது வாணத்திலிருந்தே பூமழை பேய்தது போல் இருக்க, சரியாக ஷிவன்யா அவர்களருகில் வந்ததும் ஷிவானி அவளிடம் தாவினாள்.
வார்த்தைகள் கிடைக்கவில்லை போல நம் நாயகன் நாயகிக்கு. யாதேஷ் வசீகரிக்கும் அவன் புன்னகையோடு அவளைப் பார்த்து நிற்க, தன்னை ஏன் இந்த உலகம் இப்படி மீண்டும் மீண்டும் சோதிக்கிறதோ என்ற கதறலால் கண்கள் கண்ணீரில் நிறைய நின்றாள் ஷிவன்யா.
ஒரு முறை அவனை இத்தனை ஆண்டுகள் பின் பார்த்தவுடன் அவனை விட்டு திரும்பியும் பாராமல் ஓடிவிட்டாள்.
மீண்டும் அவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் அவர்களின் மகள் மூலம் இணைத்துவிட்டு சிரித்த விதியை தாண்டி ஓடிவிடுவாளா?
தொண்டை அடைக்க மூச்சுவிட மறந்து நின்றிருந்தவளின் கண்ணீர் அவளையும் மீறி கன்னத்தில் தடம் புரள, ஏதோ இமையமலை ஏறிவிட்டு கண்காணாத பொக்கிஷத்தை கண்டுப்பிடித்தது போல் அகமகிழ நின்றிருந்த யாதேஷின் புன்னகை மெல்ல மறைய அவள் கண்ணீரை கண்ட அடுத்த நொடி அவன் கை தானாக அவள் முகமேந்தியது.
விழிகளில் தீவிரம் குடிகொள்ள, பெண்ணவளின் கண்ணீர் அவன் மனதை இரணகளமாக்குவதன் காரணத்தைக் கூட கண்டுகொள்ளாமல் அவன் விரல் மட்டும் அவள் கண்ணீரை மெல்ல துடைக்க, ஷிவன்யாவின் இதழ்கள் தந்தியடிக்கத் தொடங்கியது.
நான்கு வருடம் முன்பு இரத்த வெள்ளத்தில் கிடந்தவனை மருத்துவனை தூக்கிச் சென்றதும் அவள் எவ்வளவோ கெஞ்சியும் ஒரு முறை கூட இந்த முகத்தை காணும் பாக்கியம் அவளுக்கு அவன் மரண செய்தி வந்தடைந்த பின்பும் கிடைக்கவில்லை. உயிரை இழந்து நடைபிணமாக அன்று சென்னையை விட்டு ஓடிய ஷிவன்யாவின் மனதில் பதிந்த கணவனின் சிரித்த முகம், இனி எப்போதுமே பார்க்கப் போவதில்லையே என நிழல் படத்தைப் பார்த்துப் பார்த்து அவள் தினம் அழுத முகம், கணவிலும் வந்து அவள் தூக்கத்தை பறித்துச் சென்ற அவனது முகம் இப்போது அவளுக்கு மிக அருகில் இருந்தது.
ஆனால் அத்தனை வலியோடு அவன் முகம் காண தினம் உயிரோடு தன்னைத் தானே கொன்றுக் கொண்டிருந்தவளுக்கு இப்போது என்ன செய்யவென தெரியவில்லை.
கத்தி அழுது அவன் கணவில் வருவது போல் மறைந்து செல்லும் முன் மீண்டும் அவனை இறுக்கி அணைத்து அவனுள் புதைய வேண்டி அவள் இதயம் கதறினாலும் உடலும் மனமும் காலையிலிருந்து கிடைத்த வலிகள் எதையும் பகுத்தறிய மேலும் சக்தி இன்றி அவனைப் பார்த்த அடுத்த நொடி அவளை கைவிட்டது.
" ஏன்... ஏன்... " ஷிவன்யாவின் வார்த்தைகள் அவள் இதழைவிட்டு வெளியேறவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் அவள் கேட்டது அது தான். " ஏன்... மா... ஏன்... மா? ஏன்...? "
தன் கணவனிடம் கேட்க நினைத்து நினைத்து கதறிய ஒரே கேள்வி. நான்கு வருடமும் கணவிலும் நினைவிலும் அவள் மனம் அவனிடம் கதறும் அதே கேள்வி.
" ஏன் போ—போனீங்—க? ஏன்... என்...என்ன... என்ன ஏன்...ஏன் த—தனி—தனியா... "
ஏதோ ஒரு உள்ளூணர்வுக்குக் கட்டுப்பட்டு அவள் கண்களில் இருந்து பார்வையை அகற்ற இயலாமல் யாதேஷ் அவள் ஏதோ தன்னிடம் சொல்ல வருகிறாள் என்பதை கவனியாமல் அவள் இமைகளில் இருந்து தப்பித்த கண்ணீர் துளிகளை அவன் துடைத்துக் கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் அவன் இரு கைகளும் அவள் கன்னத்தை பட்டும்படாமல் ஏந்தியதை அவனே அறியவில்லை.
அவள் கண்ணீரில் இவன் மனம் வலிக்க அடுத்து வந்த வார்த்தைகளை அவனே உணரவில்லை.
" யமுனா அழாத ப்லீஸ்... "
அவன் விழிகளுக்குள் மூழ்கிய ஷிவன்யாவின் உடல் சட்டென தூக்கிப் போட, அவன் கண்களில் தீவிரம் கூடிய அதே நேரம் ஷிவன்யா தன்னிலையை அடைந்தாள்.
ஷிவன்யா தடுமாறி அவனிடமிருந்து பின் நகர, அவள் ஸ்பரிசம் உணராத அடுத்த நொடி இவ்வளவு நேரமும் இல்லாத ஒருவிதமான வலி அவன் இதயத்தைத் தைக்க, மீண்டும் கை நீட்டி அவளை அவன் அடையும் முன்னே ஷிவன்யா மீண்டும் பின்னே நடக்க யாதேஷின் பின்னந்தலையில் சுல்லென ஒரு வலி எழுந்தது.
இவர்கள் இடையில் நடந்த சம்பாஷனை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த ஷிவானி தன் அன்னை அங்கிருந்து தட்டுத்தடுமாறி அவளைத் தூக்கிக் கொண்டு நடந்தபோது யாதேஷைத் திரும்பிப் பார்த்து டாட்டா காட்டினாள்.
தலையின் வலி கொஞ்சம் கொஞ்சமாக பெருகியதால் திண்டாடி நின்ற யாதேஷ் அவன் கண்களில் இருந்து மறையும் இருவரையும் அப்படியே பார்த்து நிற்க, அவன் ஒரு கை அவளை நோக்கியே தான் இருந்தது.
ஷிவானியின் அழகிய முகமும் ஷிவன்யாவின் பிம்பமும் அவன் கண்களில் தெளிவின்றி மங்கலாக, ஷிவன்யா அவனிடமிருந்து இரண்டாவது முறை ஓடி ஒழிந்ததும் யாதேஷ் தலையைப் பிடித்துக் கொண்டு கீழே சரிந்தான்.
***
வாங்கிய அனைத்திற்கும் பணம் கொடுத்துவிட்டு அப்போதே பில்லோடு பைகளைத் தூக்கிக் கொண்டு வந்த சசி திடீரென எங்கிருந்தோ ஷிவன்யா தட்டுத்தடுமாறி ஷிவானியோடு ஓடி வருவதைப் பார்த்து இவளும் பின் தொடர்ந்து ஓடினாள்.
" அக்கா! அக்கா எங்கக்கா போற?! " சசி எவ்வளவு கத்தியும் விருவிருவென திரும்பி பார்க்காமல் நடந்த ஷிவன்யாவிற்கு எதுவும் கேட்கவில்லை.
ஷிவானியே தலையைத் திருப்பி இவர்களை பின் தொடர்ந்து ஓடி வரும் சசியைப் பார்த்துவிட்டு அம்மாவை அழைக்க முயன்றாலும் ஷிவன்யா எதையும் கவனிக்கவில்லை. சுற்றிப் பார்க்காமல் சாலையை கடந்த ஷிவன்யாவின் அவசரத்தில் சாலையில் சீரிக் கொண்டிருந்த வாகனங்களும் பதியாமல் போக, சசி " அக்கா பைத்தியமாக்கா உனக்கு?! இங்க வா! " தன்னால் முயன்ற அளவு வேகத்தைக் கூட்டி ஷிவன்யாவை வேகமாக சாலையின் மறுபுறமாக தள்ளிச் சென்றாள்.
சசியின் அலறல் கேட்டும் சாலையில் சீரிச் சென்ற வானங்களின் அதீத இரைச்சலாலும் ஷிவானி திடுக்கிட்டு ஷிவன்யாவின் நெஞ்சோடு ஒன்றிக்கொள்ள, ஷிவன்யா தடுமாறி கீழே விழுந்ததும் அவளின் அழுகை சத்தம் வீரிட்டது.
" அக்கா! "
தன் முட்டிகளில் கீழே விழுந்த ஷிவன்யா தன் மகளை இறுக்கி அணைத்திருந்தாலும் அவள் கண்கள் அங்கு எதிலுமே பதியவில்லை. கண்ணீர் பார்வை மொத்தத்தையும் மறைத்திருக்க, அவள் மனதின் ஆழத்திலிருந்து வந்த சத்தமான கேவல் சசி மற்றும் ஷிவானியை அப்படியே உறைய வைத்தது.
ஷிவன்யா " தப்பு பண்ணீட்டேன்... தப்பு பண்ணீட்டேன். நானே எல்லாத்தையும் தொலைச்சிட்டு இப்போ ஒன்னும் இல்லாத அனாதையா நிக்கிறேன். நான் இப்போ என்ன செய்வேன்? சசி... சசி நான் அவருக்கிட்ட என்னன்னு டி போய் பேசுவேன்? நான் என்ன சொல்லுவேன்? அவங்க அம்மாவுக்கு மட்டும் தெரிஞ்சா அவங்க...அவங்க என்ன செய்வாங்கன்னே தெரியல... என்ன...என்ன உயிரோட கொன்னுடுவாங்க டி... அவர...அவரு நிம்மதியே என்னால போய்டும்... ஐயோ ஏன் எனக்கு இப்டியெல்லாம் நடக்குது? நான் எதிர்பார்க்காத நேரம் என் கிட்டேந்து அவர பிரிச்சிட்டு இப்போ அந்த கடவுள் ஏன் அவர திரும்ப என் கண்ணுல காட்டுனாரு? இராமா... நான் என்ன செய்வேன் சசி?! "
சசிக்கும் கண்கள் கண்ணீரில் மூழ்க, அவள் அக்காவை இழுத்து அணைத்துக் கொண்டாள்.
" அக்...அக்கா... அக்கா அழாதக்கா ப்லீஸ்... ஏன்க்கா அழுவுற? நாம...நாம மாமாக்கிட்ட பேசலாம்க்கா... "
" நான்...நான் என்னன்னு போய் சொல்லுவேன் சசி? என்ன பேசுவேன்? அவருக்கு...அவருக்கு திரும்ப எதாவது ஆகீட்டா...என்னால முடியாது டி! என்னால திரும்ப அவர அந்த நிலமைல பார்த்துட்டு உயிரோட இருக்க முடியாது சசி! "
சசிக்கு அவளின் நிலையில் மனமெல்லாம் வலித்தது. மேலும் அவளை எதுவும் பேசவிடாமல் மெல்ல மெல்ல ஏதேதோ கூறி ஷிவன்யாவின் அழுகையை எப்பாடுபட்டோ நிறுத்திவிட்டுத் தான் அங்கிருந்து அவளை அழைத்துச் சென்றாள்.
ஆனால் அவர்கள் இருவருமே தொலைவில் இருந்து தலையைப் பிடித்துக் கொண்டு இவர்களைப் பார்த்த யாதேஷை கவனிக்கவில்லை.
அவன் தலைச்சுற்றி விழுந்த அதே நேரம் எங்கிருந்தோ ஓடி வந்து ஆரவ் அவனைப் பிடிக்க, அவன் உதவியோடு எழுந்து கொண்ட நாயகன் வேகவேகமாக அவள் சென்று மறைந்த பாதையில் ஓடினான். சாலையை கடந்து ஓடியவளை தூரத்திலிருந்து பார்த்தவன் ஒரு நொடி இடைவேளையில் அவளை இடிக்க வந்த காரை கண்டு அதே இடத்தில் அவன் இதயத்தோடு அவனும் அங்கேயே நின்றுவிட்டான்.
அவளை யாரோ தள்ளியதை பார்த்தும் அவன் நஙர இயலாமல் பயத்தில் வெளிரி போய் நிற்க, ஷிவன்யாவும் சசியும் அங்கிருந்து நகரும் வரை அவன் இமைக்கவும் இல்லை.
அவன் கண்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஷிவன்யாவின் முகம் மட்டும் தான். வலியில் சிவந்து அழுது கதறிய அவளின் முகம் மட்டும் தான் அவன் நினைவில் நிறைந்திருந்தது. தூரத்திலிருந்து பார்த்ததால் அவனுக்கு எதுவும் கேட்கவுமில்லை.
ஆரவ் பதைபதைப்பாய் அவன் அருகிலே நிற்க, ஷிவானி யாதேஷிடம் சென்று பேசத் தொடங்கிய முதலே மறைந்து நின்று பார்க்கத் தொடங்கிய ஆரவ் ஷிவன்யாவையும் அங்கு எதிர்பார்க்கவில்லை.
பத்து நிமிடத்திற்கும் மேலாக சிலை போல் கண்ணிமைக்காமல் நின்றவனின் தோளைத் தயங்கித் தயங்கி ஆரவ் தொட்டுத் திருப்ப முயன்றான்.
ஆனால் அவன் அசைந்தால் தானே...
ஆரவ் எச்சிலை கூட்டி விழுங்கினான். இவர்கள் இருவரும் சந்தித்தால் என்ன ஆகும் என பார்ப்பதற்காக வேடிக்கை மட்டும் பார்த்து நின்றது தவறோ என்ற கேள்வி இவன் மூளையை கொடைந்தது.
" மச்சான்... டேய்... "
ஆரவ் அவன் தோளைப் பிடித்து உலுக்க, கண்களை ஒரு முறை இமைத்த யாதேஷ் அங்கேயே மயங்கி விழுந்தான்.
விழி மீறிய வழி நாடி...
DhiraDhi❤️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro