Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தனிமையில் வலி: 6

இருள் சூழ்ந்து மூடியிருந்த நீண்ட பள்ளத்திற்குள் ஒரு இளக்கே இன்றி கண் மூடி விழுந்து கொண்டிருந்தான் யாதேஷ்... அவனின் கண்மணிகள் இமைகளுக்குள்ளே ஆழ்ந்த அமைதியுடன் அடங்கியிருக்க, உடல் நிலையிழந்து நேரம் கடந்திருந்தது.

" ஷிவா! "

அவனின் கண்மணிகள் சட்டென ஒரு ஆட்டம் காண, எங்கிருந்தோ வந்த அந்த குரல் அவனின் செவிகளில் விடாது ரிங்காரமிட்டது.

" ஷிவா!! " என யாரோ அலற, " ஷிவா!! " என யாரோ கதற, " ஷிவா! " என யாரோ சிரிக்க, " டேய் ஷிவா! " என யாரோ கத்தியபடி ஒட— அது யாரோ அல்ல அவனின் நண்பன் ஆரவ்.

அவனால் அவனின் சிரிப்பிலே கூற முடிந்தது அது ஆரவே தான். ஆரவோடு வேறு யாரோ சிரித்தபடியே ஓடிக் கொண்டிருந்தனர்.

" ஷிவா! " மீண்டும் ஒரு குரல் அழைத்தது.

" கண்ண திறந்து என்னப் பாரு ஷிவா! " என்ற கதறல்.

" ஷிவா ப்லீஸ்! " என்ற யாரோ ஒரு பெண்ணின் அழுகை.

அப்பெண்ணின் குரல் நொடியிலே யாதேஷின் இதயத்தை உலுக்கியது. அது எங்கோ கேட்ட குரல் தான்.

ஆனால் யாருடையது?

யாருடையது?

யாருடையது?

" ஷிவா!! " என காதை கிளிக்கக் கேட்ட அலறலுடன் ஒரு பகுத்தறிய முடியாத சத்தம் அவன் இரு காதுகளையும் பிரிக்க, ஏதோ எதையோ இடித்துச் சிதறிய சத்தத்துடன் அவனின் பின் தலையில் ஒரு ஈரம் பரவியது. அந்த பிசுபிசுவென்ற ஈரம் அவன் கழுத்தோடு உடலிலும் பரவ, அவனறியாதது அவனின் காதிலிருந்தும் இரத்தம் வலிந்ததை தான்.

ஆரவ் " யாதேஷ் கண்ண திறடா! " என எங்கிருந்தோ கேட்ட அலறலில் துடித்துப்பிடித்து கண்களை திறந்தான் யாதேஷ்.

ஐந்து நிமிடம் முன்பு...

இரவு முழுவதும் உறக்கமில்லாமல் தன் தோழனையாவது தேடிச் செல்லலாமென யாதேஷைத் தேடி வீட்டிற்கே வந்திருந்த ஆரவ் அவன் அறை கதவை எதற்சையாய் திறந்ததுமே கவனித்தது மெத்தையில் புரண்டு கொண்டிருந்த யாதேஷையும் அந்த வெள்ளை மெத்தைவிரிப்பு சிகப்பு புள்ளிகளால் அலங்கரிக்கப் பட்டிருப்பதையும் தான்.

ஓடிச் சென்று தண்ணீரை அவன் முகத்தில் ஊற்றிய ஆரவ் வேகமாய் யாதேஷை எழுப்ப, யாதேஷ் இறுக்கி மூடிய கண்களோடு அங்குமிங்கும் திரும்பிக் கொண்டே இருந்தான்.

அளவு கடந்த பயம் மூளையை ஆக்ரமிக்க, அத்தருணத்தில் செய்யக்கூடாத செயலை செய்திருந்தான் ஆரவ்.

" யாதேஷ் கண்ண திறடா! " அவனின் அலறலில் யாதேஷ் படாரென கண்களை திறக்க, பெருமூச்சு விட்டு அவன் சுதாரிக்கவும் அவனின் காதிலிருந்து வலியும் இரத்தம் அதிகரிக்க, அதை ஆரவ் கவனிக்கும் முன்பாகவே மயங்கி சரிந்திருந்தான் யாதேஷ்.

ஒரு கெட்ட கனவினால் நட்ட நடு இரவில் எழுந்தமர்ந்த ஷிவன்யா தலையை பிடித்தபடி டைனிங் டேபிலில் வந்தமர்ந்திருந்தாள். என்ன காரணமோ தெரியவில்லை, அவளின் கண்கள் முன் மீண்டும் மீண்டும் அவளின் கணவனின் முகம் வந்து வந்துச் செல்ல, காரணம் புரியாது குழப்பிக் கொண்டிருந்தவள், திடீரென கேட்ட ஏதோ ஒரு சத்தத்தில் எழுந்து வீட்டின் பின் பக்க வாயிலுக்குச் சென்றாள்.

அவள் வீட்டின் பின் இருக்கும் சாலையில் எதனாலோ ட்ரஃபிக் கிளம்பியிருக்க, அங்கு குழுமியிருந்த இருவதிற்கும் மேற்பட்ட வாகனங்களில் சாம்பல் நிற டெஸ்லா ஒன்று அவளின் கவனத்தை ஈர்த்தது.

அதை எவ்வாறு மறப்பாள் அவள்?

அவள் சென்னை வந்து முதன் முதலில் பயணித்த மகிழுந்தாயிற்றே அது.

அவளின் காதலனை தேடிக் கிளம்பிய போது அவனின் நிலையறிந்து அதிலிருந்து இறங்கியப் பின் தானே எவரையும் திரும்பியும் பாராது ஊரை விட்டு வெளியேறினாள். சென்னையில் முதல் முதலில் ஏறிய காரும் அது தான். சென்னையை விட்டு செல்லும் முன் கடைசியாய் ஏறிய காரும் அது தான். அவள் உடன்பிறவா சகோதரனின் மகிழுந்து.

ஒரு சில நொடிகள் சிந்தித்தவள் அவனை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்ற ஊந்துதலில் அந்த நடு ராத்திரியில் வீட்டை பூட்டி விட்டு வெளியே ஓடினாள். சரியாக அங்கு வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி அந்த சாலையின் வழியாக செல்லக்கூறிய ஷிவன்யா, இறுதியாய் அந்த மகிழுந்து ஒரு மருத்துவமனையின் வளாகத்தினுள் நுழைவதை கண்டு ஆட்டோவை காத்திருக்கக் கூறிவிட்டு உள்ளே ஓடினாள்.

அந்த படபடப்பிலும் மாஸ்கினால் முகத்தை மறைக்க மறக்கவில்லை நம் நாயகி. தீவிர சிகிச்சை பிரிவின் வெளியே பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ஆரவ்.

ஷிவன்யா தன் நடையின் வேகத்தை குறைத்து அவனை பார்க்க, இத்துனை வருடத்தில் சற்றும் மாறாமல் இன்னும் இறுகியிருப்பவனை கண்டு ஓரமாய் நின்றாள். அவன் அழுகிறானென உணர்ந்ததும் ஷிவன்யாவின் இதயம் வேகமெடுத்தது. ஆரவ் அழுது அவள் அந்த நான்கு வருடத்தில் ஒரு முறை தான் பார்த்திருக்கிறாள்.

அதுவும் அவன் வாழ்வில் இரு கண்களாய் எண்ணிய இருவரில் ஒருவரை முழுதாய் இழந்த அன்று தான்.

அவர்களிடையில் இருப்பதிலேயே ஆரவ் மட்டும் தான் வலியை மறைப்பதிலும் கடந்து வருவதிலும் வித்தகன். அவன் அழுத்தக்காரன் என பலர் கூறிக் கேட்டிருக்கிறாள். ஆனால் அவனை இறுதியாய் கண்ட அந்த நாளில் ஆரவ் கதறிய கதறல் உடனிருந்தோர் அனைவரது மனதையும் சுக்கு நூறாய் உடைத்திருந்தது. இதயம் அந்த நினைவில் மீண்டும் படபடக்க அவள் இதயத்திற்கு தெரிந்ததோ என்னவோ?

என்னவன் இங்கெங்கோ இருக்கிறான் என்று கூறுவதைப் போல, பல நாள் கழித்து பாரம் கூடி இறெக்கை கட்டிப் பறக்க முயலும் வேகத்தில் அதிவேகமாய் துடித்தது அவளின் இதயம். அந்த பாரம் கூடிய உணர்வை ஷிவன்யாவாலுமே நம்ப முடியவில்லை. இதே போன்ற ஒரு மருத்துவமனையில், இதே நிலையில் தான் அன்று அவளின் அவனையும் இழந்தாள் அவள்... ஈருயிரை தாங்கும் அந்த தகவல் அறிந்து முழுதாய் 24 நான்கு மணி நேரம் கூட ஆகவில்லை. அவளின் பெற்றோர் அவளை தலை முழுகியிருந்தனர். அவளவன் விபத்திற்குள்ளாகியிருந்தான். பலர் அவளை குற்றம் சாடினர். அதிலும் அவளவனை பிடிக்க அந்த நேத்தில் போட்டி வேறு. இதில் அனைத்திற்கும் மேலாக அவளின் வாழ்கையே சரிந்து விழ வைத்தது அவள் கணவனின் மரணச் செய்தி...

அதற்கு மேலும் அவள் அங்கு நிற்க இயலாமல் ஆரவை நோக்கி ஓரடி எடுத்து வைக்கும் முன்பாக அவளை கடந்து சென்ற இருவரை கண்டு உறைந்து நின்றாள் ஷிவன்யா.

அது விஜித்தா மற்றும் அவளின் தாய் சாதனா. சாதனாவை கண்டதுமே ஷிவன்யாவின் முகம் பயத்தில் வெளிறியது. மனதின் அடி ஆழத்தில் இன்னமும் புதையாமல் மேலோட்டமாகவே இருந்த எக்கச்சக்கமான கசப்பான நினைவுகள் ஒரே நேரத்தில் அவளின் இதயத்தை நோக்கி படையெடுக்க, ஆரவை நோக்கி ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்ட விஜித்தா திரும்பும் முன்பாக அங்கிருந்து தட்டுத் தடுமாறி வெளியேறினாள் ஷிவன்யா.

வந்த ஆட்டோவில் ஏறியிருந்த ஷிவன்யா மீண்டும் வீட்டின் முகவரியை கூறிவிட்டு அமைதியாய் அமர்ந்து விட, அவளின் உற்றத் தோழியான கண்ணீர் மட்டும் தான் அப்போதைக்கு அவளுக்குத் துணையாய் இருந்தாள்.

துடைக்கத் துடைக்க அவளை தனியாய் விட மனமின்றி கண்ணீரும் வலிந்து கொண்டிருக்க, வீட்டிற்கு வந்ததும் அறைக்குக் கூடச் செல்லாமல் கீழே மடிந்தமர்ந்து வாய் மூடி அழத் தொடங்கினாள் அவள். அவளின் சத்தம் கேட்கக் கூடாதென செல்பேசியில் ஏதோ ஒரு பாடலை ஓட விட்டாள்.

" எதுக்கு என்ன விட்டு போனீங்க? ஏன் என்ன விட்டு போனீங்க? ஏன் என்ன விட்டு போனீங்க?! நீங்க இறந்து நாழு வர்ஷமாச்சு, ஆனா ஏன் என்னால உங்கள மறக்க முடியல?! நான் பைத்தியமாகுறேன் மாமா! எனக்கு பைத்தியம் புடிக்கிர மாதிரி இருக்கு!! நம்ம பொண்ணு கிட்ட நீங்க இறந்துட்டீங்கன்னு சொல்ல முடிஞ்ச என்னால ஏன் உங்க இறப்ப ஏத்துக்க முடியல?! ஏன்?! ஏன்?! நீங்க ஏன் மாமா என்ன விட்டு போனீங்க? நீங்க அன்னைக்கு என்ன விட்டு போகலன்னா நான் இன்னைக்கு இப்படி ஒரு நிலமைல இருந்துருக்க மாட்டனே?! ஷிவானிக்கு அப்பா இல்லாம போய்ர்க்காதே?! ஏன் ஷிவா என்ன விட்டு போனீங்க?! " கத்தி கதறக் கூட வழியில்லாது அவளின் மழலை நிம்மதியாய் அவளின் கண் முன் உறங்கிக் கொண்டிருந்தாள்.

" கண்ணிலே கண்ணீரிலே..
பிரிந்தேன் நான் போகின்றேன்

விண்ணிலே வெண்மேகமாய்
கலைந்தே நான் மெல்ல மெல்ல கரைந்தேன்..

அழுகை என்னும் அருவியில்
தினம் தினம் நானும் விழுந்தேனே

நிலவே உன் நிழலினை
தொடர்ந்திட நானும் விழைந்தேனே...

ஏன் என்னை பிரிந்தாய் உயிரே... உயிரே
காதலை எரித்தாய் என் அழகே..
ஏன் என்னை பிரிந்தாய் உயிரே.. உயிரே
கண்ணீரில் உறைந்தாய் கனவே... "

அவளின் வலியை போக்காது நிலையை உணர்த்தி மேலும் வலி கூட்டியது அப்பாடலின் வரிகள்.

பாவம் பெண்மனம். பேதை என பேர் கொண்டதால் அவள் அனைத்தையும் பெற்றுக் கொண்டு அமைதியாகவே தான் இருக்க வேண்டுமா?

இவளின் அறையில் எரிந்த விளக்கின் வீரியத்தினால் ஷிவன்யா வீட்டின் எதிர் ப்லாக்கில் இருக்கும் தன் வீட்டில், தண்ணீர் குடிக்க எழுந்திருந்த சூர்யா அவளை கவனித்து விட்டிருந்தார்.

சூர்யா " ஹ்ம்ம் என்னால சுத்தமா முடியல ஷிவா. ‌நீ அழுதுட்டே இருந்தா எப்படி உன் வாழ்கை சரியாகும்? " என தூக்கம் மறந்து அவரது அறைக்குள் நுழைந்தார்.

அங்கே சிறிய படுக்கையுடன் ஒரு ட்ரெஸ்ஸிங் டேபுலும் ஓரமாய் இருக்க, அந்த அறையின் ஒரு புறம் முழுவதும் ஆர்யாவின் புகைபடங்கள் நிறைந்திருந்தாலும் அதற்கு நேர் எதிரில் ஒரே ஒரு புகைப்படமிருந்தது. அதே புகைப்படம் தான்.

ஆரவ், யாதேஷ் மற்றும் ஒருவனும் நிற்கும் அந்த படம். ஆனால் அதில் சற்றே வித்தியாசமாய் ஆரவ் மற்றும் யாதேஷ் ஒரு புறம் தனியாக இருக்க மற்றைய பாதியில் ஒரே ஒரு மலர் இருந்தது.

அதில் ஒரு சிறு புன்னகையுடன், பலருள் சிலருக்கே உள்ளதை போல் கண்களும் அவனோடு சிரிக்க நின்றிருந்தான், யாதேஷ் மற்றும் ஆரவின் உயிர் தோழன், ஷிவனேஷ் ஷிவா.

அவனையே உருத்து நோக்கிக் கொண்டிருந்த சூர்யா அந்த காய்ந்த மலரை எடுத்து விட்டு விரக்தியாய் புன்னகைத்தார்.

" நீங்களாவது ஷிவன்யாவ விட்டுட்டு போகாம இருந்துர்க்களாம் ஷிவா. ஆனா நீங்க உண்மையாவே இறக்கலன்னு எனக்குத் தெரியும்... உங்க ஷிவன்யாவுக்கு செஞ்ச சத்தியத்த நிறைவேத்துரதுக்காகவாவது நீங்க வருவீங்கன்னு எனக்குத் தெரியும். ஷிவன்யாவோட பொண்ணு அப்படியே அவள மாதிரியே இருக்கா. ஆனா அவ சிரிப்பு உங்ககிட்ட இருந்து வந்த மாதிரி இருக்கு. அவள பார்க்க எப்போ வருவீங்க? ஷிவன்யாவோட குட்டிக்குட்டி ஆசையெல்லாம் எப்போ நிறைவேத்துவீங்க? நீங்க உயிரோட இருக்கீங்களா இல்லையான்னு யாதேஷுக்கு மட்டும் தான் தெரியும் இல்லையா? ஹ்ம் ஆனா அவருக்கு ஒன்னுமே நியாபகமில்ல, ஷிவா. அவரு உங்கள மட்டுமில்ல, ஷிவன்யாவ கூட மறந்துட்டாரு. கல்யாணமாகி ஆறு மாசம் கூட ஆகலைல? நீங்க அதுக்குள்ள இறந்துட்டீங்க. எங்கள விடுங்க. ஷிவன்யாவ பத்தி யோசிச்சு பார்த்தீங்களா, ஷிவா? அவ உங்கள மட்டும் தான் நம்பியிருந்தா, எனக்கும் புரியிது உங்க நிலமை அப்படி, நீங்களும் உங்க மரணத்த எதிர்பார்க்கல. கவலப்படாதீங்க டெய்லி ஆர்யா உங்களுக்கு பூ வைப்பான். அவன் கிட்ட என்னால இப்போதிக்கு உண்மைய சொல்ல முடியாது. சொல்றதுக்கு நீங்களே வருவீங்கன்னு நான் நம்புறேன். " என இவ்வளவு நேரமும் அவனிடம் விரக்தியாய் உரையாடிக் கொண்டிருந்த சூர்யா இறுதியில் அழுகையை கடினப்பட்டு விழுங்கி விட்டு, " நீங்க போனதுல எனக்கு கவலையே இல்ல. நான் கஷ்டப்படுறேன்னு மட்டும் நினைக்காதீங்க. எனக்கு ஷிவன்யா தான் முக்கியம். அவளுக்கு 26 வயசு தான் ஆகுது... அவ பார்க்க வேண்டியது இன்னமும் எவ்வளவோ இருக்கு... அவ வாழ்கைய உங்களால மட்டும் தான் இப்போ சரி பண்ண முடியும்... சீக்கிரம் வந்துடுங்க, ஷிவா. " என கூறி விட்டு அந்த அறையை விட்டு வெளியேற அவளை கண்டு மென்மையாய் புன்னகைத்தான் புகைபடத்திலிருந்த ஷிவா.

விழி மீறிய வழி நாடி...

DhiraDhi❤️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro