Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தாமரை பாட்டி: 30

வீட்டு வாசலில் வேறூன்றி நின்றிருந்த யாதேஷைக் கண்டு சாதனாவும் ஸ்வேத்தாவும் திகைக்க, திடுக்கிட்ட ஷிவன்யா அவன் முகத்தில் தெரிந்த சினத்தில் எச்சிலை விழுங்கினாள்.

நினைவு தெரிந்ததிலிருந்தும் அவனை தெரிந்ததிலிருந்தும் யாதேஷை இத்தனை கோவத்தில் அவள் பார்த்ததில்லை. என்றும் சிரித்த முகத்தோடு பார்ப்போரை கவரும் தன்னவனுக்கு கோவம் கூட வருமா என்ற திகைப்போடு நின்றவளை விஜித்தாவின் ஸ்பரிசம் உலகிற்குக் கொண்டு வந்தது.

விருவிருவென உள்ளே வந்திருந்தவனை விஜித்தா " அண்ணா! " என அழைத்து அவள் புறம் திருப்பியிருக்க, ஷிவன்யாவின் முன் சென்று எந்த ஒரு வார்த்தையும் சொல்லாமல் கை நீட்டி நின்றான் அவன்.

அவள் சிந்திக்கும் முன்பாக விஜித்தா இதற்காகவே காத்திருந்தது போல் அவள் அண்ணன் மற்றும் அண்ணி கைகளை கோர்க்க, யாதேஷ் " உன் ரூமுக்கு கூட்டீட்டுப் போ விஜி... வா, " என ஷிவன்யாவின் கரத்தை இறுகப் பற்றினான்.

இதுவரை இல்லாத இறுக்கம் அவளின் மணிகட்டைப் பிடிக்க, அவன் குரலில் எள்ளும் கொள்ளுமாய் வெடித்த கோவத்தில் பெண்கள் அனைவரும் பயந்தது உண்மை.

சாதனா " யா...யாதேஷ்...யாதேஷ்! கண்ணா! "

புரியாமல் நின்றிருந்த ஷிவன்யாவை விஜித்தா வழி நடத்த, சாதனாவின் அழைப்புகளை பொருட்படுத்தாமல் விஜித்தாவின் அறைக்குச் சென்றான்.

சாதனா " யாதேஷ்... எங்க போற?! நாங்க... நாங்க... யாதேஷ், "

என்ன பேசுவது என்ன சொல்வதென தெரியாமல் அவர் அவன் பின் ஓட, அவரை பின் தொடரவிருந்த ஸ்வேத்தா இரண்டு பைகளை கையில் தூக்கிக் கொண்டு மறுகையில் ஷிவன்யாவை பிடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறியவனை கண்டு பசை வைத்து ஒட்டியதைப் போல் அங்கேயே நின்றுவிட்டாள்.

ஷிவன்யா " என்னங்க! மாமா, என்ன பன்றீங்கங்க? மா... மாமா, நில்லுங்க, "

அவள் எவ்வளவோ முயன்றும் யாதேஷையும் பேச வைக்க முடியவில்லை. அவன் பிடியையும் லேசாக்க முடியவில்லை. சொல்லப் போனால் மேலும் மேலும் அவன் பிடியின் இறுக்கத்தைக் கூட்டிக் கொண்டே தான் போனான். வழியறியாமல் ஷிவன்யா விஜித்தாவை திரும்பித் திரும்பி பார்க்க, யாதேஷ் எதற்காகவும் காத்திருக்கவில்லை.

விஜித்தாவிடம் மட்டும் சொல்லிவிட்டு தன்னவளை இழுத்துக் கொண்டு அவன் வாசல் புறம் நடக்க, சாதனாவிற்கு உலகமே இருண்டது போல் இருந்தது.

" யாதேஷ், நில்லு டா! நான் இவ்ளோ கூப்புட்டு என்ன மதிக்க மாட்டியா?! அம்மா சொல்றேன்ல நில்லு யாதேஷ்! "

சுவருக்குக் காது என செவுடன் காதில் பீப்பி ஊதியது போல் நின்று கூட பார்க்காமல் சென்ற யாதேஷ் வாயிலை தாண்டியதும் திரும்பி அவன் அம்மாவின் குரல் வந்த திசை நோக்கினான்.

" நீங்க இப்டி பண்ணுவீங்கன்னு நான் நினைச்சே பார்க்கல... உங்கள நம்பி என் உயிர இங்க விட்டுட்டு போனதுக்கு ரொம்ப நல்லா செஞ்சிட்டீங்க. அதுக்கு ரொம்ப நன்றி. இனிமே... இந்த வீட்டு வாசப்படிய நாங்க இரெண்டுப் பேரும் மிதிக்க மாட்டோம். "

எந்த ஒரு உணர்வும் இல்லாதது போல், அவன் கோவத்தில் அதிர்ந்து நின்றிருந்த சாதனாவிடம் தெளிவாக கூறிவிட்டு மீண்டும் திரும்பியும் பாராமல் சிலையாக நின்ற ஷிவன்யாவை இழுத்துக் கொண்டு வெளியேறினான்.

பனிக்கட்டியாய் உறைந்த ஷிவன்யாவை அவன் இழுத்துக் கொண்டு சாலையோரமாய் நடக்க, அருகில் பலத்த சத்தத்தோடு கேட்ட ஏதோ ஒரு பெரிய வண்டியின் சத்தம் ஒருவழியாக அவளை நடப்பிற்கு வலுக்கட்டாயமாய் இழுத்து வந்தது. அப்போதே தன்னை இழுத்துக் கொண்டு இவன் ரோட்டோரமாய் எங்கோ சென்று கொண்டிருப்பதை உணர்ந்த ஷிவன்யா,

" மாமா! என்ன மாமா பன்றீங்க?! "

யாதேஷ் ஒரு பதிலும் கூறவில்லை. அவன் அவளை இழுத்துச் செல்வதிலும், சாலையின் அரவத்திலும் தான் தன் கவனத்தைப் பதித்திருந்தான்.

" மாமா, மாமா திரும்பி உங்க வீட்டுக்குப் போகலாம் மாமா... என்ன சொல்லீட்டு வந்துருக்கீங்க நீங்க? அவங்க என்ன... அவங்க... இல்ல மாமா நீங்க... அய்யோ பெருமாளே நான் என்ன செய்வேன்? மா ப்லீஸ் மா, நில்லுங்க மா, ப்லீஸ்... "

அவள் கண்களில் கண்ணீர் தானாய் கோர்த்துக் கொண்டது. ஏன் அழுகிறாள் என்று தெரியவில்லை. யாதேஷின் பாராமுகமா, அவள் கைகளை பட்டும் படாமல் பிடிக்கும் மென்மையான கரங்கள் இன்று பிடித்த இறுக்கமா அல்லது தனக்காக அவன் தன் அம்மாவையே விட்டுவிட்டு வந்த வலியா என்று ஏற்கனவே நொந்திருந்த பாவையின் மனம் சிந்திக்க இயலாமல் வலியைத் தேக்கிக் கொண்டு கதற, திடீரென நின்று அவள் புறம் திரும்பினான்.

" அழுதுட்டு இருக்கல்ல... " என யாருக்கோ சொல்வதைப் போல் அவன் சொன்னபோது அவன் பிடி மெதுமெதுவாய் இலகியது.

ஆனால் இன்னமும் அவன் முகத்தில் அந்த கோவம் கொப்பளிக்க, ஷிவன்யா வாய் திறப்பதற்குள்ளாக மீண்டும் அவன் திரும்பி கொண்டான்.

" அழாத... எதுவும் பேசாத... நான் உன்ன ஹர்ட் பண்ண விரும்பல... "

ஷிவன்யாவின் அழுகை அவள் தொண்டையை அடைக்க, அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றவள் சாலையோர பேருந்து நிறுத்தத்தை அடைந்ததும் சுற்றி முற்றிப் பார்த்தாள். அவன் மேலும் நடந்து கொண்டே இருக்க, ஒரு இடத்தில் அவனைப் பின் தொடராமல் நின்றவள் தன் மறு கரத்தால் அவன் கையைப் பிடித்தாள்.

" பஸ்... பஸ்ல போலாம் மாமா... ப்லீஸ், "

யாதேஷ் சட்டென நின்று அவள் புறம் திரும்ப, அழுது சிவந்த முகம் அந்த வெயிலில் மேலும் சிவக்க, ஷிவன்யா விசும்பிக் கொண்டே அவனை இழுத்து மரம் ஒன்றின் நிழலில் சென்று நின்றாள்.

ஆனால் பேருந்து வரும் வரையுமே யாதேஷ் ஒரு சொல் சொல்லாமல் சிலை போல் இறுகியே தான் நின்றிருந்தான். பஸ் வந்த உடனே ஷிவன்யா அவனை வழி நடத்திச் சென்று ஏறி அமர, அவன் டிக்கெட் எடுத்த போது கூட எங்கே செல்கிறோம் என்று ஒரு கேள்வி கேட்கவில்லை அவள்.

தன் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டு தோள் மீது தலை சாய்த்தவளின் கண்ணீர் அவன் சட்டையை நனைக்கவும் அவளை நோக்கியவன், ஒரு பெருமூச்சோடு அவள் கண்ணீரை மென்மையாக துடைத்தான்.

" அழாத யமுனா... "

ஷிவன்யா அவன் ஒருவழியாக தன்னிடம் பேசிய நிம்மதியில் மேலும் கேவ, ஒரு கரத்தால் அவளை இழுத்து தன்னுள் புதைத்துக் கொண்டான் யாதேஷ்.

" ஸாரி... ஸாரி... தப்பு தான்... ஸாரி... "

" ஷ்ஷ்ஷ்... அப்பரமா பேசிக்களாம், அழாத ப்லீஸ். "

அதற்கு மேல் அவன் அவளிடம் எதுவும் பேசவில்லை. ஷிவன்யாவும் கேட்கவில்லை. இருவது நிமிட பயணத்தின் பின் பேருந்து நிறுத்தம் ஒன்றில் அவளை இழுத்துக் கொண்டு இறங்கிய யாதேஷ் ஏதோ அங்கே பத்திற்கு பதினோறு முறை வந்தது போல் ஏதோ ஒரு திசை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

ஷிவன்யா ஒன்றும் புரியாமல் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டே வர, சரியாக அவள் கண்ணில் விழுந்தது தூரத்தில் நின்ற வெள்ளை டெஸ்லா. அவள் எண்ணத்தை பொய்யாக்காமல் இரண்டுமாடி வீடு ஒன்றிலிருந்து யாருடனோ பேசிக் கொண்டே வந்தான் ஆரவ்.

தன்னை பின் தொடர்ந்து வந்த ஷினேஷ் தீடீரென நிற்கவும் என்னவென திரும்பி பார்த்த ஆரவ், சில அடியில் ஒரு கையில் பைகளுடன் மறுகையில் ஷிவன்யாவை இழுத்துக் கொண்டு வந்த யாதேஷைக் கண்டு வாயைப் பிளந்து விட்டான்.

ஆரவ் " டேய்! அவள எதுக்கு டா இப்போயே கூட்டீட்டு வந்த?! " என இவன் கத்திக் கொண்டே அவர்களிடம் ஓடி வர, ஷிவன்யாவிற்குத் தான் ஒன்றும் புரியவில்லை.

யாதேஷ் " இனிமே அந்த வீட்டுக்கு நாங்க இரெண்டுப் பேரும் போக மாட்டோம். நீ வீட்டுக்கு உடனே போய் என்னோட எல்லா திங்ஸையும் எடுத்துட்டு வா. என் சம்மந்தம் பட்ட விஷயம் ஒன்னு கூட அங்க இருக்க வேணாம். வீடு விஷயத்த நான் பார்த்துக்குறேன், "

ஆரவ் " வீடா?! "

ஷிவனேஷ் " எல்லா ஹாஸ்டலும் ஃபுல்லா இருக்கு டா, இன்னும் நாழு மாசம் ஆகுமாம் வகென்சி கிடைக்க, "

ஆனால் அவ்விருவரின் எண்ணத்திற்கு மாறாக, யாதேஷ் வேறு ஒரு குண்டை தூக்கி வீசினான்.

" இனிமே நான் அவள தனியா விட மாட்டேன் டா. ஹாஸ்டல்லாம் எதுவும் வேண்டாம். நான் சொன்ன அதே வீட ஃபைனல் பண்ணலாம், "

ஆரவ் " வீடா?! டேய் என்ன டா நினைச்சிட்டு இருக்க நீ?! "

ஷிவனேஷ் " அந்த பாட்டி காலேஜ் பச்சிலர்ஸ நம்பி வீடு குடுக்க மாட்டேன்னு சொலீட்டாங்க யாதேஷ். மறந்துட்டியா? " என இவன் மட்டும் தான் நிலைமையை சீராக்க வேண்டி பொருமையாகப் பேசிக் கொண்டிருந்தான்.

ஆனால் நீலகிரி மலையளவிற்கு பொருமை வேண்டுமென்றால் நம் நாயகன் இந்த இடத்திற்கே வந்திருக்க மாட்டான்.

" அப்போ எங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்லிக்கிறேன். " என அலட்டாமல் கூறியவன் அதிர்ந்து நின்ற நண்பர்களைத் தாண்டி ஷிவன்யாவை இழுத்துக் கொண்டு அந்த இரண்டு மாடி வீட்டின் வளாகத்தின் உள்ளே சென்றான்.

அப்போதே கதவை திறந்து ஒரு பாட்டி வாயிலில் பையும் பொண்ணுமாய் நின்ற யாதேஷை ஏறஇறங்க பார்க்க, அவர் கண்கள் ஷிவன்யாவின் அழுது சிவந்த முகத்தில் விழுந்ததுமே அவருக்கு ஏதோ புரிந்தது. அவர் தான் அறுபத்தைந்து வயது மதிக்கத்தக்க அந்த வீதியில் வசித்து வரும் பாட்டி, தாமரை.

" தம்பி நீ தான இரெண்டு நள் முன்னாடி வீடு தேடி வந்த...? "

தாமரை பாட்டியின் கேள்விக்கு யாதேஷ் பதில் கூறும் முன்பாக நண்பர்கள் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்து " நீ எப்போ டா இரெண்டு நாள் முன்னாடி இங்க வந்த? " என மீண்டும் ஷாக்காகி பார்த்தனர்.

" ஆமா பாட்டி. நான் என் பொண்டாட்டிய கூடிய சீக்கிரம் கூட்டீட்டு வரேன்னு சொன்னேன்ல... நீங்க கூட நீ பொண்ணோட வந்தா வீடு தரேன்னு சொன்னீங்களே? இவ தான் என் வைஃப். யமுனஷிவன்யா. இப்போ வீடு தருவீங்களா? " என யாதேஷ் அங்கிருந்த நாழ்வருக்குமே அசால்ட்டாக அதிர்ச்சிகளை மழை போல் பொழிந்தான்.

தாமரை பாட்டி வாயில் கை வைத்து விட்டார். " அடேய் சின்ன பையா, என்ன டா நீ சும்மா கதையளந்துட்டு வேடிக்கப் பாத்துட்டு நிக்கிறன்னு பார்த்தா நெசமாவே ஒரு பொண்ண இழுத்துட்டு வந்துட்ட?! வாரே வா! ஆனா என்ன தாலியே இல்ல? " என பாட்டி கண்களை கூறாக்கி சிலையான ஷிவன்யாவின் கழுத்தை ஆராய, யாதேஷ் அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தான்.

" ரெஜிஸ்ட்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். எங்களுக்கு போக வேற இடமில்ல. வீட்டவிட்டு வந்துட்டோம் பாட்டி. நான் நீங்க சொன்னத நம்பி தான் இங்க வந்துருக்கேன். "

தாமரை பாட்டியின் மலர்ந்த முகம் அதை கேட்டவுடன் சோகமடைந்தது.

" அச்சச்சோ அதான் இந்த புள்ள முகமே விடியலையா? சரி சரி இருங்க, நான் சாவிய எடுத்துட்டு வாரேன், " என அவர் வேறெதுவும் கேட்காமல் குடுகுடுவென உள்ளே சென்றுவிட்டார்.

நாம் காண்பது கணவா இல்ல நினைவா என ஆரவ் மற்றும் ஷிவனேஷ் நடப்பிற்கு வருவதற்குள்ளாகவே பாட்டி நம் நாயகன் நாயகியை அழைத்துக் கொண்டு மாடியில் இருந்த இரண்டறை கொண்ட ஒரு வீட்டைத் திறந்து காட்டியிருந்தார்.

மாத வாடகையை கூறியதும் யாதேஷ் தலையை ஆட்டிவிட்டு இவான் நண்பர்களை தேடவேண்டி ஷிவன்யாவை அந்த பாட்டியோடு விட்டுச் செல்ல, தாமரை பாட்டி ஷிவன்யாவின் தலையை தடவினார்.

" அம்மாடி உன் கஷ்டம் எனக்கு புரியிது டா... கொஞ்ச நாள் அப்டி தான் இருக்கும் ஆனா எவ்ளோ நாளுக்கு கோவமா இருப்பாங்க? எல்லாம் நீ ஒரு பேரப்புள்ளைய தூக்கி காமிச்சிட்டீன்னா தானா இலகி வந்துடுவாங்க சரியா? நீ அழாம தைரியமா இரு, "

தாமரை பாட்டி அவளை மெதுவாய் பிடித்து அன்பாய் கூற, ஷிவன்யாவிற்கு பொங்கிக் கொண்டு வந்தது கண்ணீர். பாட்டி அவளை அன்பாய் தழுவி அவள் தலை கோதினார்.

" அழாத டா மா, அழாத... இந்த பாட்டி உனக்கு என்ன ஹெல்ப் வேண்டா செய்றேன் சரியா? நானும் லவ் மேரேஜ் பண்ணீட்டு தான் வந்தேன், எனக்கும் உன் நிலைமை புரியிது. நீ எதுக்கும் கவலப்படாத, "

வீட்டிற்குள் நுழையவிருந்த நண்பர்கள் மூவரும் வாசலிலே நிற்க, நேற்று வரை " உங்கள மாதிரி வயசு பசங்களலாம் நம்ப முடியாது, போங்க டா! " என கத்திக் கொண்டிருந்த பாட்டி வாஞ்சையாய் ஷிவன்யாவிற்கு தட்டிக் கொடுப்பதை கண்டு வாயடைத்துப் போயிருந்தனர்.

ஒரு வாரத்திற்கு பின்பு...

யாதேஷ் சொன்னது போல் மீண்டும் அவன் வீட்டின் புறமும் செல்லவில்லை, ஷிவன்யாவிடம் என்ன நடந்தது என்றும் கேட்கவில்லை. அவர்கள் இருவரும் தாமரை பாட்டியின் வீட்டு மாடியில் வாடகைக்கு இருக்கத் தொடங்கியது யாருக்கு கஷ்டமாக இருந்ததோ இல்லையோ, ஆரவும் அவன் அம்மா பூரணியும் மிகவும் வருத்தமடைந்தனர்.

பூரணி எப்போதும் போல் தங்கள் வீட்டிற்கே வா, உன் காதலியை என் மகள் போல் பார்த்து கொள்ள மாட்டேனா என எவ்வளவோ அழைத்துப் பார்த்தும் யாதேஷ் இசைந்து கொடுக்கவில்லை.

தான் இருக்கும் இடத்திலே தான் நம்பிய இரத்த பந்தமே தன்னவளை இவ்வாறு காயப்படுத்தி அவளை வாய் பேசாத கைபாவையாய் நிற்க வைத்தப் பின், அந்த நிலை மீண்டும் அவளுக்கு ஒருபோதும் வந்துவிட கூடாதென்ற தீர்மானத்தில் இருந்தான்.

ஆரவும் ஷிவனேஷும் இவர்களோடு அவ்வப்போது வந்து தங்கிக் கொள்ள, தாமரை பாட்டி ஷிவன்யாவை வந்த முதல் நாளில் இருந்து வேலை கூட பார்க்கவிடவில்லை. உணவு வேலைகளை அவரே முதலில் இவர்களுக்கு உதவ, ஷிவன்யா தாமரை பாட்டிக்கு அசல் பேத்தியாகவே மாறிப் போனாள்.

தேவையான அனைத்து உதவிகளையும் பார்த்து பார்த்து செய்தார் தாமரை பாட்டி. தன் கணவர் இறந்ததும் இரண்டாண்டுகள் தனிமையிலே வாழ்ந்த பாட்டியின் வாழ்வில் வந்த இந்த இளைஞர் பட்டாளம் அவரை குதூகலமாக்கியிருந்தது.

தன்னவனின் கோவம் குறைந்திருந்தாலும் அவனிடம் என்ன சொல்லி அவனை சகஜமாக்குவது என சிந்திக்கவே ஷிவன்யாவிற்கு பாதி நாளில் மணி நேரங்கள் ஓடிவிடும்.

அன்றும் அவ்வாறு தான், இரவு உணவை சமைத்துவிட்டு நேரமாகியதால் பாட்டியை உறங்க சொல்லிவிட்டு மாடியின் வராண்டாவில் நடைப்பயின்று கொண்டிருந்தாள் ஷிவன்யா.

விழி மீறிய வழி நாடி...

DhiraDhi ❤️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro