Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தேங்கா பன்னு: 35

கண்கள் சிவக்க படாரென பருத்திவீரன் போல் தன்னை நிமிர்ந்து பார்த்த யாதேஷின் தோற்றத்தைக் கண்டு திடுக்கிட்டான் ஆரவ்.

" டேய் வெண்ண! ஃபைல்ஸ் எல்லாத்தையும் கீழ கடைப்பரப்பீட்டு நீ எந்த கொலம்பஸ புடிக்க டா ப்லன் போட்டுட்டு இருக்க?! "

ஆரவ் நண்பனை வசைப்பாடிக் கொண்டே கீழே கிடந்த கோப்புகளையெல்லாம் ஒவ்வொன்றாய் எடுத்துக் கொண்டே வர, அவனை சட்டையே செய்யாமல் வேறொரு தாளை எடுத்து ஏதோ இஸ்ரோ-விற்கு உண்மையிலே அடுத்த ராக்கெட் செய்ய உதவுகிறேன் என சத்தியம் செய்துவிட்டு வந்தது போல் வெறிக்க வெறிக்க சுவரையே பார்த்துக் கொண்டிருந்தான் நம் நாயகன்.

கோப்புகள் அனைத்தையும் தூக்கி ஒரு ஓரமாய் வைத்த ஆரவ் தலையில் பட்ட அடியினால் ஏதேனும் நட்டு லூசாகி இருக்குமோ என்ற கவலையில் யாதேஷின் தலையை பிடித்துத் திருப்ப, அவனுக்கே யாதேஷைப் பார்க்க சற்று பீதியாகத் தான் இருந்தது.

" என்ன டா...? "

யாதேஷ் " நீ... என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது... " என மிகவும் ஆழ்ந்த குரலில் அமைதியாய் தொடங்கியவன் அடுத்த வாக்கியத்திற்கு ஆரவின் கழுத்தைப் பிடித்திருந்தான். " எனக்கு நாளைக்கு அவள பார்த்தே ஆகனும்! அவ கிட்ட பேசியே ஆகனும்! நான் அவ குரல கேட்டே ஆகனும்! "

கழுத்தை அவன் பிடித்த உடனே " கொல! கொல! " என கத்தத் தொடங்கியிருந்த ஆரவைப் பிடித்து கதிரை ஒன்றில் சாய்த்த யாதேஷ் ஏதோ அவனுக்கு ஆறு வயதில் பாடம் எடுத்த ட்யூஷன் மிஸ் அவனிடம் மக்ஸ் ஃபார்முலா கேட்டது போல் விருவிருவென அங்குமிங்கும் நடந்தவன் மீண்டும் வந்து ஆரவைப் பிடித்துக் கொண்டான்.

" அவ என் கிட்ட ஒழுங்கா பேசல டா! ஃபோன் அட்டெண் பண்ணல, எடுத்தா ஒழுங்கா ஒரு வார்த்தை சொல்லல! அழுவுறா எதுக்கோ! எப்டி நான் கேப்பேன்?! திரும்ப நாளைக்கு வருவாளான்னு தெரியல, எப்டி வருவா? ஏன் வருவா? அவ பீஏ வேலைக்கு தான வந்தா, ஸ்க்ரிப்ட் எடிட்டர் வேலைக்கு அவ ஏன் வரப் போறா?! ஆனா அதெல்லாம் எனக்குத் தெரியாது அவ வரனும்! இல்லனா...இல்லனா நான் அழுதுறுவேன்! "

இவன் ஏன் இப்படி மூச்சுமுட்ட வசனம் பேசுகிறான் என அவனை மலைத்துப் பார்த்துக் கொண்டிருந்த ஆரவ் அவன் இறுதியில் உண்மையாக விட்டால் அழுதுவிடுவேன் என்ற முகபாவனையோடு நின்றதால் விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்து, " யாரு மச்சான் பேசல? யாரு அழுதா? அந்த ஸ்வேத்தாவா? ஆனா அவளுக்கு மத்தவங்கள அழ வைக்கிறது தான வேல? "

யாதேஷ் வேகமாக அவன் சட்டையை உதறினான். " டேய் நான் இங்க எவ்ளோ ஸீரியசா பேசீட்டு இருக்கேன்! அவ கெடக்குறா அந்த பக்கம்! "

ஆரவ் " அப்போ யாருகிட்ட பேசுன? யாரு உன்கிட்ட ஒழுங்கா பதில் சொல்லல? யார பத்தி பேசுற நீ? "

யாதேஷின் பதிலை ஆனால் ஆரவ் எதிர்பார்த்திருக்க மாட்டான்.

" யமுனா டா! "

ஆரவ் படக்கென தலையைத் தூக்கி அவனைப் பார்க்க, யாதேஷ் மிகவும் பிசியாக அவன் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்துக் கொண்டிருந்தான்.

" யாரு? "

யாதேஷ் " யமுனஷிவன்யா! காலைல வந்தாளே... பீஏ இன்ட்டர்வ்யூ, கூகுல், செர்ட்டிஃபிக்கேட்ஸ், பெங்கலூர் ட்ரன்ஸ்ஃபர்! "

" அ... அந்த பொண்ணு... நீ எப்போ பேசுன? "

" நான் தான் பேசுனனே, ஆனா அவ பேசல! "

ஆரவ் யாதேஷைப் பார்த்து விழித்தான். ஆனால் இன்னமும் அங்குமிங்கும் நடந்துக் கொண்டிருந்த யாதேஷ் நடையை நிறுத்தாமல் தனியாகப் பேசிக் கொண்டிருந்தான்.

" எனக்குத் தெரியல டா! எனக்கு மனசு நிக்க மாட்டுது ஒரு இடத்துல! எனக்கு அந்த பொண்ண திரும்ப பார்க்கனும்! பேசனும்... எதாவது பேசனும், ஆனா என்ன பேசனும்? ஏன் பேசனும்? எதுவுமே தோனல எனக்கு... திரும்ப ஒரு முறையாவது பாத்துற மாட்டனா, பேசீற மாட்டனான்னு அது மட்டும் தான் என் தலைக்குள்ள இப்போ ஓடீட்டு இருக்கு. யாரு இவ? ஏன் இப்போ நான் இப்டி அவள பத்தி மட்டும் நினைச்சிட்டு இருக்கேன்? எனக்கு தலை கூட வலிக்கல டா, ஆனா...ஆனா இங்க வலிக்கிது... "

நெஞ்சில் கை வைத்து நின்றவனை பார்த்து ஆரவால் எதுவும் கூற முடியவில்லை.

" நான் பொய் சொல்லல ஆரவ்... உண்மையா இங்க வலிக்கிது... ஏதோ பாரமா இருக்கு... நேத்து வரைக்கும் ஏதோ நான் தான் எதையோ தொலைச்ச மாதிரி இருந்துச்சு... ஆனா இன்னைக்கு அவள பார்த்ததுக்கு அப்பரம் நானே எங்கையே தொலைஞ்சு போய்ட்டனோன்னு சந்தேகமா இருக்கு டா... "

யாதேஷின் கண்கள் மௌனமாய் அமர்ந்திருந்த ஆரவை அடைய, அவன் ஏதேனும் கூறுவான் தன் தலையில் தட்டி ' மண்டைல அடிப்பட்ட மூளைய ஹோல்சேல்-அ விக்கனும் மொதல்ல, ' என்று எதாவது கூறி தன்னை வம்பிழுப்பான் என எதிர்பார்த்தவனின் எண்ணத்தை பொய்யாக்கியது  மேலும் நீடித்த ஆரவின் அமைதி.

யாதேஷும் பதிலேதும் இன்றி தலையை சாய்த்து விட்டத்தை பார்த்து பெருமூச்சு விட, ஆரவ் சட்டென கண்களை இமைத்து தன் பார்வையை வேறெங்கோ மாற்றிக் கொண்டான்.

" ஏதேதோ யோசிச்சு தலவலி வந்துட போது டா... வீட்டுக்குப் போகலாம் வா, " ஆரவ் அமைதியாய் யாதேஷை கடந்து செல்ல, யாதேஷின் மனம் தான் அவன் பேச்சை கேட்கும் நிலையில் இல்லையே.

யாதேஷ் கண்களை கையிலிருந்த கோப்பைவிட்டு அகற்றாமல் குழந்தை போல் குற்றம் சாடினான். " நானா யோசிக்கல... தானா அவ நெனப்பு வருது... "

" ஏன் ஊரு உலகத்துல இந்த 30 வர்ஷத்துல ஒரு பொண்ணையே பார்த்ததில்லையா டா நீ? "

ஆரவ் தன்னை கடினப்பட்டு சமன்செய்தபடி ஒரு அரைகுறை புன்னகையோடு யாதேஷைப் பார்க்க, யாதேஷின் பார்வை அவன் கையில் இன்னமும் இருந்த ஷிவன்யாவின் கோப்பில் தான் இருந்தது.

" பார்த்துருக்கேன் தான்... ஆனா அவள பார்த்ததே இல்ல டா. "

***

சூப்பர்மார்கெட் வளாகத்தில் அவளை விட உயரமாய் இருந்த ட்ராலியைத் தள்ளிக் கொண்டு ஷிவானி விளையாட அவளைப் பின் தொடர்ந்தபடி வந்து கொண்டிருந்தனர் நான்கு வருடம் பின் மீண்டும் இணைந்த சகோதரிகள்.

ஷிவானி மீதே சசியின் பார்வை நிலைத்திருக்க, அவளுக்கு இன்னமும் காலம் தேவைப்பட்டது அனைத்து உண்மையையும் ஏற்றுக்கொள்வதற்கு. ஷிவானிக்கும் அவ்வாறே இருந்தது போல. உறங்கி எழுந்ததும் அன்னையைத் தேடி வீட்டில் கண்களை கசக்கியபடி அலைந்த குட்டி ஷிவானி தன் அம்மாவோடு வந்த அவளுக்கு இத்தனை நாளும் புகைபடத்தில் மட்டுமே தெரிந்த சசி சித்தியைப் பார்த்ததும் ஷிவன்யாவின் பின் ஒழிந்து கொண்டாள்.

" அம்மா ஜெல்லி வேணும்! "

யோசனையில் இருந்த சசி நான்கு ஜெல்லி பக்கெட்டுகளை அலேக்காக தூக்கி நின்ற ஷிவானியைக் கண்டு புன்னகைக்க, அவள் அருகில் குனிந்த ஷிவன்யா அந்த பக்கெட்டுகளை வாங்குவது போல் வாங்கிவிட்டு ஷிவானி திரும்பிய நேரம் அதில் மூன்றை எடுத்த இடத்திலே வைத்திருந்தாள்.

" ஜெல்லி மட்டும் போதுமா தங்கம்? பாப்பாக்கு இன்னைக்கு ஜூஸ் வேணாமா? " என ஷிவன்யா ஜூஸ் இருக்கும் இடத்தை தேடியபடியே கேட்க, ஷிவானிக்கு கண்களெல்லாம் ஹார்ட்டுகள் பறந்தது.

ஷிவானி " ஜூஸ்! ஜூஸ் வேணும் ஷிவானிக்கு! இனிப்பா வேணும்! "

ஷிவன்யா தலையசைத்து திரும்பவும் அதே வழிக்குள் வேறொருவரும் ட்ராலியோடு வர, மீண்டும் போக முடியாதென்பதை உணர்ந்து குதித்துக் கொண்டிருந்த குட்டியை அமைதிப்படுத்த முயன்றாள் ஷிவன்யா.

" கடைசியா அத வாங்கிக்களாம் டா, "

" இல்ல இப்போவே வேணும்மா! "

ஷிவன்யா " திரும்பவும் இங்க வருவோம் செல்லம். வந்து எடுத்துக்களாம், இப்போ வா போய் நாம ம்ம்ம் வேற பார்க்கலாம், "

ஷிவானி உதட்டைப் பிதுக்கி கோவமாய் அவள் அம்மாவைப் பார்த்து முறைத்துவிட்டு கைகள் இரண்டையும் நெஞ்சுக்கு குறுக்கேக் கட்டிக் கொண்டாள்.
அவள் அசையாமல் தரையைப் பார்த்தபடி அங்கேயே நிற்பதைப் பார்த்துக் கொண்டிருந்த சசி ஒரு புன்னகையோடு,

" நீ இங்க பார்க்குற வரைக்கும் நானும் பாப்பாவும் போய் ஜூஸ் எடுத்துட்டு வரட்டுமாக்கா? "

ஷிவன்யா அதை கேட்டு " இவ உன்ன சும்மா விட மாட்டா டி, " என சொல்லவருவதற்குள் சசியிடம் குடுகுடுவென ஓடிவிட்டாள் ஷிவானி.

ஷிவானி " வாங்க வாங்க சித்தி! ஜூஸ் வாங் போலாம்! அம்மா பாய்! "

சசியையும் இழுத்துக் கொண்டு ஷிவன்யாவிற்கும் டாட்டா காட்டிவிட்டு அவள் சித்தியை மறுபுறமாக இழுத்துச் சென்றுவிட்டாள் அந்த குட்டி தேவதை.

" போறத பாரு... ஜூஸ்க்காக என்ன கலட்டிவிட்டுட்டு யாரு கூட வேணாலும் யோய்டும் வாண்டு... " என தன்னிடமே கூறிக் கொண்டாலும் ஷிவன்யாவின் முகத்திலும் அழகிய புன்னகை இலையோடியது.

சசியை இழுத்து வந்திருந்த ஷிவானி ஜூஸைத் தேடி அங்குமிங்கும் தன் குட்டி கண்களை சுழட்ட, அவளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் இரசித்துப் பார்த்த சசிக்கு அவளை அள்ளி முத்தமிடவேண்டும் போல் இருந்தது.

" சித்தி ஜூஸ் காணும்... " என உதட்டைப் பிதுக்கிக் கொண்டு அவள் சசியின் கையைப் பிடித்து இழுக்க, எண்ண ஓட்டத்திலிருந்து வெளியே வந்த சசி அவர்கள் இருந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தாள்.

" இங்க தான் இருக்கும் செல்லம். நீங்க சொல்லுங்க ஷிவானி பாப்பாக்கு ஜூஸ் ரொம்ப பிடிக்குமா? "

கேள்வி கேட்டு திசைதிருப்பிக் கொண்டே இவள் பழரசம் இருக்கும் இடத்தைத் தேடி நகர, அவள் கைப்பிடித்து வந்த ஷிவானி டிங்கு டிங்கென தலையாட்டி அவளுக்குப் பிடித்த அனைத்தையும் பற்றி பட்டியிலிட தொடங்கினாள்.

" ஜெல்லி முட்டாய் புடிக்கும்! பஞ்சுமுட்டாய் நல்லாக்கும்! கச்சுமுங்கோ கொஞ்சூம் புடிக்கும்! ஸ்ராபெரி கேக்கு புடிக்கும்! அப்ரம் பன்னு- "

இப்படி அவள் கூறும் அனைத்திற்கும் ம்ம்ம் போட்டுக் கொண்டே வந்த சசி திடீரென ஷிவானி நின்றதும் திரும்பி பார்க்க, கண்களில் கண்ணீர் பொங்க நின்ற ஷிவானியைக் கண்டு அதிர்ந்தாள்.

" ஷிவா—

" தேங்கா பன்னு ஷிவானிக்கு ரொம்ப புடிக்கும்... " ஷிவானி சொன்ன விதத்தில் சசிக்கு ஏதோ மணி அடிக்க, அடுத்த வினாடியே அவள் எண்ணியதைப் போல ஓவென அழத் தொடச்கினாள் அவள்.

சசி பதட்டத்தில் என்ன ஏதென புரியாமல் முதலில் பறக்கபறக்க முளித்தபடி அங்குமிங்கும் பார்க்க, மேலும் ஷிவானி சத்தமெழுப்பி அழவும் அவளைத் தூக்கி தன் இடுப்பில் அமர்த்திக்கொண்ட சசி

" என் பட்டுமா, தங்கப்புள்ள அழாத டி! உங்கம்மா வேற எங்க போனாங்கன்னு தெரியல, ப்லீஸ் ப்லீஸ் அழாத செல்லம். என்ன...என்ன வேணும் சொல்லு, சித்தி வாங்கித் தரேன். நான் வாங்கித் தரேன், என் செல்லம்ல? அழாம சித்திட்ட சொல்லு. பாப்பாக்கு என்ன வேணும்? "

மானே தேனே பொன்மானே என ஏதேதோ சொல்லி சொல்லி ஷிவானியின் அழுகை விசும்பலான பின், வராத கண்ணீரை தேய்த்துத் தேய்த்து வர வைத்த ஷிவானி எங்கோ கையை நீட்டி கேட்டது தேங்கா பன்னைத் தான்.

அவள் அழுகையை நிறுத்தியதே போதும் என நினைத்த சசி அவள் காட்டிய புறத்தில் மைதா மாவு மட்டுமே இருப்பதைக் கண்டு அது பன்னு இல்லை என வாயைத் திறக்க வந்ததற்கே ஷிவானி சைரன் வைத்த வண்டி போல் மீண்டும் அழுகையைத் தொடங்கினாள்.

" ஒன்னும் இல்ல, ஒன்னும் இல்ல டி, இரு இரு சித்தி போய் உனக்கு பன்னு எடுத்துட்டு வரேன். இங்கேயே- இங்கேயே இரு, நான் பன்னு எடுத்துட்டு வரேன். "

ஷிவானியை படக்கென கீழே இறக்கிவிட்ட சசி பன்னை தேடி எங்கோ ஓட, அவள் மறையும் வரை அழுகையோடு பார்த்து நின்ற ஷிவானி இப்போது ஒரு பெரிய மூச்சை இழுத்துவிட்டு தன் பன்னை தேடி கண்களை சுழலவிட்டாள்.

இந்த சேட்டைக்காரியின் தில்லுமுல்லை தெரியாமல் சசி ஒரு பக்கம் பறபறத்துக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் பன்னைத் தேடுகிறேன் என வாயில் வரை தனியாக வந்திருந்த ஷிவானிக்கு இப்போது கண்கள் உண்மையில் பனிக்கத் தொடங்கியது.

இரவு நேரமாதலால் வெகு சிலரே அந்த நேரத்தில் மார்கெட்டிற்கு வந்திருக்க, தன் தாயயையும் சித்தியையும் பன்னையும் காணாமல் ஷிவானிக்கு மீண்டும் அழுகை பொத்துக் கொண்டு வந்த நேரம் தான் அவள் கண்களில் விழுந்தான் அவன்.

***

அமைதியே உருவாய் காரை ஓட்டி வந்திருந்த ஆரவோடே வந்த யாதேஷ் ஒரு கட்டத்தில் அந்த மௌனம் கூட பொருக்காமல், பழைய நினைவுகளைப் பற்றிக் கேட்டு அவனை நச்சரித்துக் கொண்டே வந்தான்.

இவன் அலும்பல் பொருக்காமல் எங்காவது காரைப் போய் முட்டிவிடலாம் என்ற ஆத்திரத்தில் வந்த ஆரவை படாரென பிடித்து காரை நிறுத்திவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஏதோ பொக்கிஷத்தைப் பார்த்தது போல் வெளியே ஓடிவிட்டான் நம் நாயகன்.

ஆரவ் " ஐயோ எங்க போய் தொலைஞ்சான் இவன்?! இவன சமாளிக்கிறதுக்கு நாழு மாட வாங்கி மேய்ச்சிறளாம், " என புலம்பிக் கொண்டே யாதேஷ் சென்ற வழியிலே இவனும் காரை அறக்கப்பறக்க நிறுத்திவிட்டு ஓடினான்.

இப்படி நடுரோட்டில் காரை நிறுத்தி ட்ரஃபிக் உண்டாக்கி நம் நாயகன் ஓடி வந்தது ஒரு கடையில் நிறுத்தி சுவிங்கவிட்டாய் வாங்கத் தான். ஆம் பொட்டிக் கடை ஒன்றில் நின்று இருவது ரூபாய்க்கு சுவிங்கம் கேட்பவனை அந்த கடைகாரரே ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு அதெல்லாம் இல்லை என சொல்லி அனுப்பிவிட, அப்போதும் அலட்டாமல் சுவிங்கம் தான் வேண்டும் என அருகில் இருந்த சூப்பர் மார்கெட்டிற்குள் நுழைந்து அவனுக்கான மிட்டாயைத் தேடிச் சென்றான்.

அப்போது ஏதோ தன் காலை சுரண்டவும், குதூகலமாய் மிட்டாயை எடுத்த யாதேஷ் பொருமையாக திரும்பிப் பார்க்க, அங்கே யாரும் இல்லை.

" பாப்பா இங்க இருக்கேன்! "

அவன் முட்டி அளவிற்கு நின்ற பாப்பா அவன் கவனத்தைப் பெற வேண்டி  கைகள் இரண்டையும் தூக்கி ஆட்ட, யாதேஷ் அவளைக் கண்டு விழித்தான்.

யாதேஷ் அந்த அழகிய கண்கள் தன்னை ஆர்வமாய் நோக்குவதைக் கண்டு ஒரு சிறிய புன்னகையோடு அவள் அளவிற்கு முட்டிக் காலில் அமர்ந்து அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

" ஹாய், குட்டிமா, யாரு நீங்க? இங்க தனியா என்ன பன்றீங்க? "

நம் ஷிவானி பன்னு தேடப் போய் அவள் அப்பாவை கண்டுப்பிடித்துவிட்டாள் என்று தெரியாமல் ஷிவன்யா அதே கடையின் மறுபுறத்தில் தன் வாழ்வைப் பற்றிய எண்ணங்களில் மூழ்கி போனாள்.

விழி மீறிய வழி நாடி...

DhiraDhi ❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro