Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

காதல் பாவமா?: 25

கும்மிருட்டிற்கு மத்தியில் எங்கோ ஒரு மங்கிய ஒளி மறைந்து மறைந்து அவன் இருந்த அறையை ஒளியூட்ட, அவனவளின் குரல் அவனை சுற்றி சுற்றி இம்சித்தது.

' மாமா... மாமா, என்ன விட்டு எங்க போனீங்க? ஏன் போனீங்க? '

கண்ணீர் மழ்கிய அவள் குரலை கேட்ட நொடி இவன் மனதை யாரோ குத்திக் கிளிப்பதை போல் இருந்தது. அவளின் மெல்லிய அழுகுரலும் விம்மலும் இவனை ஏதோ செய்ய, அவளை அழைத்து அழைத்துப் பார்த்தான். ஆனால் முதல் முறையாக அந்த இருளில் அவளை கண்டறிய இயலாமல் தடுமாறினான். கண் பார்வையில்லாத வலி அவனை அப்போது வாட்டியது.

" யமுனா...யமு— யமுனா அழாத டி! "

ம்ஹும்... அவன் சொல்லைக் கேட்க மாட்டேன் என சபதம் எடுத்திருந்தாள் போல. மேலும் மேலும் அவள் அழுகை அவன் வலியை கூட்ட, ஏதோ திக்குத்தெரியாத காட்டில் தொலைந்த யாதேஷை ஒருவாறு காப்பாற்றி எழுப்பிவிட்டது காலை ஒரு மணிக்கெல்லாம் அலறிய அவன் அலாரம் தான்.

வேர்த்துவிருவிருத்து படாரென கண்களைப் பிரித்தவன், பெருமூச்சோடு மீண்டும் இமைகளை மூடி கொண்டான். என்ன மாதிரியான கனவோ தெரியவில்லை. நம் நாயகனை இப்படித் தான் கடந்த இரண்டு நாட்களாக இம்சித்துக் கொண்டிருக்கிறது.

வாய்க் க்லாக்கின் வழி மணி அதிகாலை 01:02 என அறிந்து கொண்ட யாதேஷ், தொப்பலாய் நனைந்திருந்த அவன் கேசத்தை கோதி பின்னுக்கேத் தள்ளினான்.

அருகிலே உறங்கிக் கொண்டிருந்த ஆரவ் புரண்டு படுத்துக் கொண்டே, " ஏன் டா மாக்கான் மாதிரி நடு ராத்திரியில ஏன்ச்சு உக்காந்திருக்க?! "

" மச்சான்... அவ நினைப்பாவே இருக்கு டா... "

கண்களை மீண்டும் திறந்து, நடுராத்திரியில் கட்டில் மீது புத்தர் போல் அமர்ந்திருந்தவனை ங என பார்த்தான் அவன்.

" டேய் இதுக்கெல்லாம் ஒரு நேரங்காலம் வேணாமா டா? "

" என்னால தூங்க முடியல டா! அவ குரல் கேட்டுட்டே இருக்கு, எனக்குத் தூக்கம் வரல! "

அர்த்தராத்தியில் கோபித்துக் கொள்ளும் குழந்தைப் போல முகத்தைச் சுருக்கிக் கொண்டவனை கண்டு பெருமூச்சுவிட்ட ஆரவ்,  " நாளன்னைக்கு அவளே ஊருக்கு வந்துருவா டா... நீ தூங்கு ப்லீஸ், நீ ஒழுங்காத் தூங்காம இப்டி ஜாம்பி மாதிரி அவ முன்னாடி போயிட்டீன்னா ஏதோ நான் உன்ன பட்டினில போட்டமாதிரி எங்கள சும்மா வக்காது அந்த குட்டி குயிலி! "

" தூக்கம் வரல வரலங்குறேன், ஏன் டா உயிர வாங்குற? நான் வெளியப் போறேன் போ! " என பற்களை கடித்தபடி கட்டிலில் இருந்து எழுந்து விருவிருவென எங்கோ போய் விட்டான் யாதேஷ்.

" சும்மா இருந்தவன லவ் டையலாக்-ஆ பேசி லவ் பண்ண வச்சதுக்கு இப்போ அனுபவிக்கிறோம் டா யப்பா! " ஆரவ் தலையைப் பிடித்தபடி தலையணைக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.

முகமெல்லாம் சோகத்தோடு இவனை விட்டுச் செல்ல மனமின்றி இவனிடமே தன் மனதை கொடுத்துவிட்டு ஊருக்குப் புறப்பட்ட ஷிவன்யா இப்போது எப்படி இருக்கிறாளோ தெரியவில்லை. யாதேஷ் அவள் சென்ற இரண்டாவது நாளில் இருந்து உறக்கமும் இதயமும் அருகே இல்லாமல் இப்படித் தான் சுற்றித் திரிந்தான்.

ஷிவன்யா இன்றோடு கீரனூருக்குச் சென்று ஆறு நாட்களாகியிருக்க, அவள் ஊருக்குச் சென்ற இரண்டாவது நாளில் இருந்தே யாதேஷிற்கு அவளிடம் இருந்து ஒரு அழைப்பும் வரவில்லை. நலமாய் சென்றடைந்துவிட்டாள் என்பதை தவிர வேறெந்த தகவலும் இல்லாமல், இவனும் தூங்காமல் இவன் நண்பர்களையும் உறங்கவிடாமல் உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறான்.

அவனும் என்ன செய்வான்? ஊருக்குப் போனால் அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது அவள் குரலைக் கேட்டுவிடுவான். அவள் தொலைப்பேசிக்கு பிரச்சனை என்றால் என்ன? அவள் தந்தை முணியாண்டி செல்ஃபோனிலிருந்தாவது பேசிவிடலாம் என்று அவருக்குக் கூட நேற்று அழைத்துப் பார்த்துவிட்டான்.

ஆனால் முணியாண்டி ஏதோ ஒரு வேலை விஷயமாகவும், ஒரு தூரத்துச் சொந்தத்தின் திருமணம் காரணமாகவும் மனைவியோடு கோவை வரை வந்துள்ளதால் அந்த வழியும் முட்டுச் சந்தானது.

ஆரவ் வீட்டின் மொட்டை மாடியில், வீசும் குளிர் காற்றில் தலைதாழ்த்தி ஒரு சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்த யாதேஷ், ஆரவின் அரவம் கேட்டும் நகராமல் அப்படியே இருக்க, ஆரவும் அவன் அருகில் வந்து சாய்ந்தமர்ந்தான்.

" ஷிவா கிட்ட பேசுனேன் டா... இங்க வரேன்னு சொன்னான், "

யாதேஷிற்குத் தொண்டை அடைத்தது. அதை முடிந்தமட்டும் தன் நண்பனிடமிருந்து அவன் மறைக்க நினைத்தாலும் பனித்திருந்த அவன் கண்களை ஆரவ் பார்க்காமல் விட்டுவிடுவானா என்ன?

ஒன்றரை மணிக்கு மொட்டை மாடியில் அமர்ந்திருந்த நண்பர்களை காக்க விடாமல் விடுதியிலிருந்து சுவரேறி குதித்து வந்து இவர்களுடன் இணைந்து கொண்டான் ஷிவனேஷ். மாடிப்படிகள் வீட்டின் வாசலில் இருப்பதால் அவனுக்கு பூட்டுடைத்து உள்ளே வரும் வேலை இருக்கவில்லை.

" ஏன் டா அர்த்தராத்திரியில என்ன ஆச்சு? " ஷிவனேஷ் கேட்டுக் கொண்டே வந்து யாதேஷின் மறுபுறம் அமர்ந்தான்.

" துரை கிட்ட நீயே கேழு, "

யாதேஷ் கண்களை அழுத்திக் கொண்டு, " என்ன அப்டியே விட வேண்டியது தான டா... ம்ச் சாரி உங்க தூக்கத்தையும் கெடுத்துட்டேன்... "

" ஆமா இப்போ தான் உனக்கு அது தெரியிதுல்ல, "

" டேய் சும்மா இரு டா, " ஆரவை அடக்கிவிட்டு மீண்டும் யாதேஷை பார்த்த ஷிவனேஷ், " என்ன டா ஆச்சு உனக்கு? திரும்ப கனவா? "

யாதேஷ் சோகமாய் அந்த சுவற்றில் தலையை சாய்த்து ஆம் என்று மட்டும் தலையசைத்தான்.

" ஃபோன் பண்ணாளா ஷிவா? சரி விடு நாளைக்கு நான் வீட்டுக்கே ஃபோன் அடிச்சு பேசுறேன், ஹப்பியா? "

ஆனால் ஷிவனேஷ் சொல்லி முடிப்பதற்கு முன்பாக திடீரென அவன் செல்பேசி அலறி இவர்களை திடுக்கிடச் செய்ய, படக்கென அந்த செல்பேசியை எடுத்து அதை முதலில் அணைத்தவன் அதில் வந்த பெயரைப் பார்த்ததும் குழப்பத்தோடு உடனே பதிலளித்து காதில் வைத்தான்.

இவன் ஹலோ என்பதற்குள்ளாக மறுபுறத்திலிருந்து ஒரு சத்தமான கேவல் கேட்டது. சாதாரணமாகவே காதுகளை தீட்டி வைத்திருக்கும் நம் நாயகனுக்கு அந்த அமைதியில் அது பட்டென கேட்டுவிட, ஆரவும் குழப்பத்தில் இருந்த போது ஷிவனேஷ் அவர்களை அமைதியாக்க முயன்றபடி மறுபுறம் குரல் கொடுத்தான்.

" ஹலோ? ஹலோ, சசி? என்னாச்சு?! என் கிட்ட பேசு சசி, "

சசியின் பெயரைக் கேட்டதும் யாதேஷின் மனதில் பயபந்து உருண்டது. தொடர்ந்து சசி அழுது கொண்டே இருக்க, ஷிவனேஷிற்கு பதட்டம் தலை தூக்கியது.

" சசி அழுகாம என்ன ஆச்சுன்னு சொல்லு! "

அவள் அந்த பக்கமாக என்ன சொன்னாளோ தெரியவில்லை. இறுதியில் " இங்க வாண்ணா! உடனே வா! " என அழுகைக்கு இடையில் அவள் கத்தும் போதே அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது.

" என்ன டா?! என்ன டா ஆச்சு? சசி...சசி என்ன சொன்னா? என்னாச்சு ஷிவா எதாவது சொல்லு டா! "

" நான் உடனே ஊருக்கு கிளம்புறேன் யாதேஷ். நான்... நான் உடனே கிளம்புறேன். அங்க ஏதோ தப்பா இருக்கு, " ஷிவனேஷ் யாதேஷைப் பார்க்காமல் ஏதோ ஒரு குழப்பத்திலே பதில் கொடுக்க, ஆரவும் இப்போது அவனை உலுக்கினான்.

" என்ன டா சொன்னா சசி? "

" அவ தெளிவா எதுவும் சொல்லல மச்சான்... அழுவுறா ரொம்ப... ஏதோ சரியில்ல அங்க, நான் உடனே கிளம்புறேன். "

அர்த்தராத்திரியில் ஷிவனேஷைப் பின் தொடர்ந்து ஓடினான் யாதேஷ்.

" நானும் வரேன் என்னையும் கூட்டீட்டு போ! "

வாசல் கேட்டை ஷிவனேஷ் தாண்டி குதிப்பதற்குள்ளாக யாதேஷ் அவன் தோளைப் பிடித்துத் தன் புறம் திருப்பியிருக்க, ஷிவனேஷ் மறுப்பதற்கு முன்பாக கார் சாவியையும் தேவையான உடைமைகளையும் எடுத்துக் கொண்டு வீட்டைப் பூட்டி சாவியை ஜன்னல் வழியே உள்ளே தூக்கிப் போட்டுவிட்டு வாசலுக்கே ஓடி வந்திருந்தான் ஆரவ்.

" நானும் வருவேன்! "

இவர்களை பேசி சமாளிக்க நேரமில்லை என்பதை அறிந்து, ஷிவனேஷ் ஒத்துக் கொண்ட அடுத்த நொடி, நண்பர்கள் மூவரும் ஆரவின் காரில் கீரனூரை நோக்கி பயணித்தனர்.

வழியெல்லாம் மூவரும் மயான அமைதியில் வந்தாலும் அவர்களின் மனதில் பிரளயம் வெடித்துக் கொண்டிருந்தது. ஆரவ் குழப்பத்திலும், யாதேஷ் ரனமான வலியிலும், ஷிவனேஷ் இப்போது வரை கேட்டுக் கொண்டே இருக்கும் சசியின் " எதுவுமே புடிக்கலண்ணா! அக்கா...அக்கா... பாவம்... இங்கவாண்ணா! உடனே வா! " அழுகையும் அவர்களை விடியல் விடியும் வரை தொடர்ந்து கொண்டே இருந்தது.

***

வாழ்வே இருண்டது போல் பொம்மையாக அந்த கூட்டத்தின் மத்தியில் அமர்ந்திருந்தாள் ஷிவன்யா. அழுதுஅழுது சிவந்திருந்த அவள் விழிகளுக்குத் தீட்டப்பட்ட மை மீண்டும் மளிர்ந்தது அவள் கண்ணீரில். பட்டுப்புடவை அணியவைத்து, அவள் கைகளெல்லாம் அவள் அன்னையின் தங்க வளையல்கள் பூட்டப்பட்டிருக்க, கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஆரம் ஒன்று கயிறு போல் அவள் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தது.

சசியை அவள் அருகில் கூட நிற்க வைக்காமல் தன்னுடனே இழுத்து வைத்துக் கொண்டு மலர்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தார் முத்துலட்சுமி அப்பத்தா.
நடக்கும் அனைத்திற்கும் மூலகாரணம். 

சிலை போல் அமர்ந்திருந்த அவளின் மனதை உடைத்துவிட்ட எண்ணமின்றி அவள் தாய்தந்தை ஊரில் இல்லாத நேரத்தில் வலுக்கட்டாயமாய் அவளுக்குத் திருமணம் நிச்சயித்துவிட்டு விருது வாங்கியது போல் அமர்ந்திருந்தவரை ஷிவன்யா ஒரு முறை நிமிர்ந்து பார்த்தாள்.

ஷிவன்யா ஊருக்கு வந்த இரண்டாவது நாளே யாரோ ஒருவரின் படத்தை காட்டியபோது ஷிவன்யா சண்டைக்கு நின்றாள். ஆனால் அதையெல்லாம் அவர் கணக்கில்லே எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் நான் சொல்வதை நீ கேட்டுத் தான் ஆக வேண்டும் என அப்பத்தா ஒரு எல்லையைத் தாண்டிய பின் தான் வெடித்தாள்.

" ஏன் அப்பத்தா இப்டி பன்ற? நான் சந்தோஷமா இருக்க மாட்டேன் அப்பத்தா! " என வந்த நான்கு நாட்களில் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள், ஆனால் அவள் செல்பேசியை மறைத்து வைத்திருந்த அப்பத்தா எதையும் காதில் கேட்கவில்லை.

அப்பா அம்மாவிடம் கூட பேச விடாமல் அநியாயம் தான் செய்து கொண்டிருந்தார் முத்துலட்சுமி அப்பத்தா.

அக்காவின் கஷ்டம் பொருக்காமல் சசியும் குரலை உயர்த்தினாள். " அப்பத்தா அப்பாக்கு இதெல்லாம் தெரிஞ்சா— "

" ஏய் என்ன டி வாய் நீளுது! நான் என்ன செய்யனும்னு உங்க அப்பன கேட்டுத் தான் செய்யனுமோ? எல்லாம் எனக்குத் தெரியும், நான் சொல்றவன் கிட்ட மட்டும் நீ கழுத்த நீட்டுனா போதும்! மூணு வர்ஷத்துக்கு முன்னாடியே உன் கால வெட்டிப் போற்றுந்தா இவ்வளவு பண்ணீருப்பியா நீ?! " முதலில் சசியிடம் தொடங்கி ஷிவன்யாவிடம் முடித்தார் முத்தலட்சுமி அப்பத்தா.

" அப்பத்தா நான் அப்டி... அப்டி என்ன தப்பு பண்ணேன்னு இவ்ளோ பெரிய விஷயம் பண்ணப் பார்க்குற நீ?! நான் ஒருத்தர விரும்புறது அவ்ளோ பெரிய தப்பா?! "

ஆனால் ஷிவன்யாவால் அதற்கு மேல் பேச முடியவில்லை. அப்பத்தா அவள் கன்னத்தில் பளாரென அறைந்த அறையில் ஷிவன்யா கீழே சென்று விழ, சசி பயத்தில் ஷிவன்யாவை ஓடிச் சென்று கட்டிக் கொண்டாள்.

" சிருக்கி மவளே எல்லாம் உங்க ஆத்தாவ சொல்லனும் டி! புள்ளைய வளத்துவிற்றுக்காப் பாரு, பன்றதையெல்லாம் பண்ணீட்டு என்ன செஞ்சேன்னு வேற கேட்குறியா?! நீ போறவர கண்டவனெல்லாம் பார்த்துட்டு காதலிக்கிறன்னு வந்து சொன்னா உன் அப்பன் ஆத்தா மாதிரி நான் வாயப் பொத்தீட்டு போவேன்னு நினைச்சியா?! ஏய் நான் கட்டின காப்பாத்துன மரியாதைய நீ கப்பலேத்தீட்டுப் போவ, நான் சும்மா இருக்கனுமா?! " விருவிருவென தலையில் ஒரு கொண்டையை கட்டிவிட்டு வேகமாகச் சென்று ஷிவன்யாவைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றார்.

" அப்ப...அப்பத்தா விடு அப்பத்தா! அப்பத்தா அக்காவ விடுங்க... விடுங்க... அக்கா! அக்கா! அப்ப— அப்பத்தா! "

பொம்மை போல் இழுத்த இழுப்பிற்கெல்லாம் சென்ற ஷிவன்யாவின் பின்னே அழுது கொண்டே ஓடிய சசியோடு அவளை ஒரு அறைக்குள் தள்ளி தாளிட்ட அப்பத்தா, சசியின் அலறலை காதில் வாங்காமல் அங்கிருந்து கத்திக் கொண்டே புறப்பட்டார்.

" எப்டி என்ன செஞ்சு இந்த கலியாணத்த நடத்திக் காட்டனுமுன்னு எனக்குத் தெரியும் டி. பட்டனத்துக்கு படிக்க அனுப்பினதால தான உன் வாய் இவ்வளவு நீளுது, கைகால கட்டிப் போட ஒருத்தன் வந்தா போதும் நீ பொட்டிப் பாம்பா அடங்குறியா இல்லையான்னு நான் பார்க்குறேன், " என ஒவ்வொரு வார்த்தையிலும் ஷிவன்யாவை அடியோடு கொன்றுவிட்டுத் தான் அவர் வேலையைப் பார்க்கச் சென்றார்.

வேறென்ன வேலை? ஷிவன்யாவிற்கு எண்ணி இரண்டாவது நாளே எதாவது செய்து ஒரு அவசர நிச்சயம் செய்து வைத்தாக வேண்டும். அதற்கு அவர் எந்த எல்லை வரை செல்வாரென்று சகோதரிகளுக்கு மறுநாள் தான் தெரிந்தது. அப்போதே அழுது அழுது உறங்கியிருந்த ஷிவன்யாவிடமிருந்து சசியைப் பிரித்து வெளியே இழுத்து வந்த பாட்டி, ஷிவன்யா பதட்டத்தில் பயத்தோடு ஓடி வருவதற்குள் மீண்டும் அந்த அறை கதவை பூட்டினார்.

" அப்பாத்தா! அப்பத்தா கதவ திற அப்பத்தா! அப்பத்தா! "

சசி பயத்திலும் தூக்கத்திலும் தெளிவில்லாமல் அப்பத்தாவின் இழுப்பிற்கு ஈடு கொடுக்க முடியாமல் அக்காவின் அழுகைச் சத்தத்தில் பதறினாள்.

" அப்ப— அப்பத்தா! அக்காவ வெளிய விடுங்க! அக்கா அக்கா! " சசி கத்துவதையெல்லாம் கேட்காமல் அவளையும் ஒரு அறையில் தள்ளி ஒரு பட்டுப்பாவாடையை கொடுத்து உடனே குளித்து கிளம்பி வர சொன்னார்.

" சீக்கிரம் குளிச்சிட்டு வா டி! "

" அப்பத்தா தப்புத்தப்பா பண்ற அப்பத்தா! என்ன விடு நான் அக்காட்ட போறேன்! நீ சொல்ற எதுவும் நான் செய்ய மாட்டேன். என்ன விடு— "

ஆனால் அப்பத்தா எதுவும் யோசிக்காமல் சசியை ஓங்கி அடிக்க, சுல்லென விழுந்த அடியில் வலி பெருக கத்திவிட்டாள் அவள்.

" வாயி வாயி... அப்டியே அக்காள மாதிரி தான இருப்ப நீயும்! போய் கிளம்பி வர போ! " என அழுபவளை அடித்து அனுப்பியதோடு இல்லாமல் சசிக்கு வேறு வழியே கொடுக்காமல் அவளை அவசரப்படுத்தி அந்த பட்டுப் பாவாடையெல்லாம் அணிய வைத்துத் தரதரவென வெளியே இழுத்துச் சென்று ஒரு கூட்டத்தின் முன்பு நிறுத்தினார்.

ஊரின் ப்ரோக்கரும் அக்கம்பக்கத்து ஆன்ட்டிகளும் கூட, ஒரு சில புதிய முகங்களும் மீசைக்காரர்களும் சசியை கண்டதும் வாயெல்லாம் பல்லாக எழுந்து நின்றனர். சசி வலுக்கட்டாயமாக அப்போதும் கதவைப் பிடித்துக் கொண்டு வர மாட்டேன் என அடம்பிடிக்க, வந்த கோவத்திற்கு அப்பத்தா சுல்லென அவள் கையில் அடித்ததும் சசியால் வலியைத் தாங்க முடியவில்லை.

" இது தான் என்னோட கடைசி பேத்தி. அக்காளும் தங்கச்சியும் ஒரே மாதிரி தான் இருப்பாளுவோ! என் பெரிய பேத்திய நாளைக்குப் பார்த்தா சொக்கிப்புடுவீங்க ஆமா, "

வந்த ஜனமெல்லாம் அப்பத்தா கூறிய உப்புசப்பில்லாத காமெடிக்கு கைதட்டி சிரிக்க, சசிக்கு என்ன ஏதென்று புரிவதற்குள்ளாகவே, " சம்பந்தத்த பேசி முடிச்சிட்டேன். சந்தோஷம் தானே தாயி? சரி நான் காத்தால அர்ச்சகரோட கிளம்பி வந்துடுறேன், நீங்க மாப்பிள்ளையும் பொண்ணையும் பாருங்க, " என இளித்து வைத்துவிட்டு அவர் வேலை முடிந்ததாக விடைப்பெற்றார் கல்யாண ப்ரோக்கர்.

" நாளைக்கு காத்தாலையே அப்போ தட்டை மாத்திடலாம். நாங்க அப்போ கிளம்புறோம் ஆச்சி, " என அந்த முகம் தெரியாத கூட்டமும் அங்கிருந்து கிளம்பியது.

அவர்கள் போன அடுத்த நொடி, ஏதோ ஒலிம்பிக்கில் வெற்றியடைந்ததைப் போன்ற ஆனந்தம் நம் முத்துலட்சுமி அப்பத்தா முகத்தில்.

" என் மவன் வந்தா ஏதேதோ பேசி எல்லாத்தையும் கெடுத்துடுவான் புள்ள, அதனால இந்த சிருக்கிக்கு நாளைக்கே நிச்சயத்த முடிச்சிட்டா பாதி கல்யாணம் முடிஞ்சிடும்! அதுக்கப்பரம் இந்த வீட்டைத் தாண்டி அவ கால எடுத்து வைச்சா வெட்டிப்புட மாட்டேன் நானு, " என பக்கத்து வீட்டு அத்தையிடம் அப்பத்தா வீரவசனம் பேச, அவரும் அதற்கு ஒத்து ஊதுவதை போல் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றினார்.

" இதுக்குத் தான் ஆத்தா பட்டனத்துக்குல்லாம் பொம்பளப் புள்ளவோல அனுப்பக் கூடாது... என்னக் காரியம் பண்ணீட்டு வந்து நிக்கிறா பாருவோ உன் பேத்தி? நல்லவேள நீ அவள கட்டிக்குடுத்து உன் மானமருவாதையெல்லாம் காத்துக்குட்ட... கில்லாடி தான் ஆத்தா நீ, "

சசி அழுது கொண்டே உள்ளே ஓடி அக்கா இருக்கும் அறை கதவை தட்ட, வாசலில் நடந்த அனைத்தையும் ஜன்னல் வழியே பார்த்திருந்த ஷிவன்யா மனமுடைந்து எப்போதோ கீழே சரிந்திருந்தாள். மனமெல்லாம் வலிக்க, அப்பத்தாவின் ஒவ்வொரு சொல்லும் நடவடிக்கையும் அவளை உயிரோடு கொல்ல, தன்னை தன் ஆசை காதலனிடமிருந்து யாரோ ஒருவரோடு சேர்த்து வைத்து விட்டால் போதும் தன் மகிழ்ச்சி வாழ்கையென எதையும் பொருட்படுத்தாமல் யாரோ எவரோ என எதுவும் தெரியாத ஒருவனிடம் அவளை அப்படியே கொடுக்க நினைக்கும் அந்த பாட்டியின் கசப்பான எண்ணம் அவளை மொத்தமாய் உடைத்து ஒரு ஓரத்திற்கு தள்ளியது.

பார்வையை கண்ணீர் அணையின்றி மறைக்க, கத்தி அழுதாள். கதறினாள். ஆனால் சசியின் கேவலைத் தவிற வெறெந்த துணையும் அவளுக்குக் கிடைக்கவில்லை. ஒரு வாரத்தில் வந்துவிடுகிறேன் என தான் சொன்ன வார்த்தையை நம்பி, தன்னை மட்டுமே எண்ணி காத்திருக்கும் அவன் இல்லாத ஒரு வாழ்வா? தன்னை மட்டுமே நித்தமும் நினைத்து வாழும் அவனுக்கு என்ன பதில் கூறுவாள்? தன் காதலுக்காக சண்டையிட கூட திராணியற்று உடைந்து அழுபவள் என்ன சொல்வாள்?

வேறென்ன செய்ய முடியும் அந்த பெண்ணால்? இன்னும் வளராமல் இன்னமும் காதலைக் கூட உலக நியதிக்கு  புறம்பான ஒன்றாய் பார்க்கும் இப்படிப் பட்ட கிராமத்தில், சொந்த உறவே ஏமாற்றும் போது உடன் தாய் தந்தையென எவரும் இல்லாமல் உடைந்த மனதுடன் அவளால் என்ன செய்ய முடியும்?

விழி மீறிய வழி நாடி...

DhiraDhi❤️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro