Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அவன் இரகசியம்: 15

அன்று

ஷிவன்யா தன் மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு கீரனூருக்கே பேருந்தேறி கிளம்பி வந்து நான்கு நாட்களாகியிருந்தது. உண்மை தான் அவள் இறுதியாய் கிளம்பிய போதும் யாதேஷ் அவளை பார்க்கக் கூட வரவில்லை. எதற்கு படிப்பை அப்படியே விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தாய் என தாயும் பாட்டியும் கேட்டதற்கு அவளிடத்தில் பதில் இல்லை.

இருந்தும் அவளது அன்புத் தந்தை அவளை எதற்கும் வற்புருத்தாமல் அவளது போக்கிற்கே செல்ல சம்மதித்திருந்தார்.

ஒரு வாரம் ஓடியதோடு மீண்டும் சென்று ஷிவன்யாவின் டீசி வாங்குவதற்காக அவளை அழைத்துச் செல்ல வேண்டி கிராமம் திரும்பியிருந்தான் ஷிவனேஷ்.

ஷிவனேஷ் முன்பிலிருந்தே ஒரு கல் தான். இதில் இவள் ஏதேனும் கேட்டு எங்கு அவன் பதிலளிக்கப் போகிறானென ஷிவன்யா அமைதியாகவே இருக்க, அதை போல ஷிவனேஷுமே யாதேஷை பற்றி அவளிடத்தில் எதுவும் கூறவில்லை. அவன் கூறியதெல்லாம் அவன் அதே கல்லூரியில் இன்னும் இரண்டு வருடம் மேற்படிப்புப் படிக்கப் போவதைப் பற்றி மட்டும் தான்.

அரை மனதோடு விருப்பமே இல்லாமல் மீண்டும் சென்னையில் கால் பதித்தாள் ஷிவன்யா. இருவரும் நேராக கல்லூரிக்கே சென்ற போது, அலுவலகத்திற்கு பதில் ஷிவன்யாவை மைதானம் புறம் அழைத்துச் சென்றான் ஷிவனேஷ்.

ஷிவன்யா கேள்வியேதுமின்றி அவனை பின் தொடரும் போது தான் அதை கண்டாள். தொலைவில்... தினம் தான் அமரும் அதே மரத்தடியில் அமர்ந்திருந்தான் யாதேஷ்...

ஷிவன்யாவும் அறிவாள், அவன் அங்கே அமர்ந்து தான் ஷிவன்யா வெகு நேரம் அவனை பார்த்திருக்கிறாள்.

ஷிவனேஷே சில வினாடிகளின் பின் அவளை அவனிடம் செல்லக் கூற, அவனைப் புரியாத பார்வை பார்த்த ஷிவன்யா, ஒரு நிமிடத்தின் பின் அவன் பேச்சை மீறாமல் தன்னவனை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.

பட்டுப் பாதங்களோடு கிலுகிலுத்த கொலுசொலியிலும் தன் மனம் உணர்ந்த பரவசத்திலும் தனிச்சையாய் நிமிர்ந்து தன்னை நெருங்கி வந்தவளை நோக்கினான் யாதேஷ்.

ஷிவன்யா அவனது விழிகளைக் கண்டதும் அதை ஒரு வாரம் பின் கண்ட மகிழ்ச்சியில் சிலிர்க்கவா ஒரு வாரத்திற்கே அதை காணாமல் தான் பட்ட வேதனையை எண்ணி மருகவா என்றறியாமல் கண்ணீர் தேங்கிய விழிகளோடு அவனை ஏறிட்டாள்.

யாதேஷ் " யமுனா... " என காற்றிற்கே வலிக்காமலிருப்பதற்காக மென்மையாய் அழைத்தான் போலும்... அவளை அவன் பெயர் கூறி அழைத்த முதல் முறை.

அவ்வழைப்பும் அவன் மாயக்குரலில் ஒலித்த அவளது பெயரும் ஷிவன்யாவின் உயிரை நொடியில் தீண்டி விட்டிருந்தது.

ஷிவன்யா " எப்படி இருக்கீங்க சீனியர்? " என உதட்டைக் கடித்து அழுகையை விழுங்கி விட்டு வினவினாள்.

யாதேஷ் " நான் அதுக்கு பதில் சொல்ல இங்க வரல, யமுனா. நீ எப்படி இருக்க? " என அவன் எதிர்கேள்வி கேட்டபோது ' ரொம்ப நல்லா இருக்கேன் ' என்ற பொய்யைத் தான் கூறவேண்டுமென நினைத்தாள், ஆயினும் அவள் நாவிலிருந்து வெளிவந்ததே வேறு.

" நான் நானாவே இல்ல சீனியர், "

சுருக்கென்று ஏதோ இதயத்தைத் தைத்ததை போலிருந்தது நம் நாயகனுக்கு. ஆனால் அப்போதும் அவன் இதழ்களில் இருந்த அந்த புன்னகை மறையவில்லை.

யாதேஷ் " ஐம் சோ சாரி யமுனா, "

ஷிவன்யா " இல்ல சீனியர். இதுல உங்க தப்பு எதுவுமில்ல. ஆறு மாசத்துக்கு முன்னாடி நான் சொன்னேன் தான். ஆனா நான் சொன்னபடி எதுலையும் மாறல. என் காதலும் மாறல. நான் இப்பவும் சரி உங்கள அதே மாதிரி தான் காதலிக்கிறேன். நான் உங்கள காதலிச்சது ஒன்னும் என் தப்பு இல்ல. உங்கத் தப்பு தான். உங்க கண்ணோட தப்பு தான். ஒருவேளை உங்களுக்கு என்ன மயக்குற குரல் இல்லாம இருந்துருந்தா, உங்க நல்ல குணம் இல்லாம இருந்துருந்தா, நீங்க நல்லவரா இல்லாம இருந்துருந்தா, ஏன், நான் உங்கள பார்க்காமையே இருந்துருந்தாலும் என்னால என் இதயத்த கட்டுப்படுத்தியிருக்க முடியாது. ஏன்னா நான் உங்கள பார்த்த அந்த முதல் நொடியிலையே விழுந்துட்டேன். உண்மைய சொல்லனும்னா அந்த ஒரு நொடி உங்க கண்களத் தவிற எனக்கு வேற எதுவும் பெருசாத் தெரியல. நான் நின்னது நடு ரோடுங்குறதையோ, நீங்க யாருன்னே எனக்குத் தெரியாதுங்குறதையோ நான் அப்போ பெருசா நினைக்கல. என் மனசு சொல்லுச்சு எனக்கு நீங்க தான் வேணும்னு. அப்போ உண்மையாவே சின்னப் புள்ளத்தனமா இருந்துச்சு சீனியர். ஏன்னா நான் உங்க கைய பிடிச்சு ஒரு ஓரத்துலேந்து இன்னோறு பக்கம் அழச்சிட்டு போன அந்த ஒரு நிமிஷம் எனக்கு நீங்க யாருன்னு தெரியாது. உங்கப் பேரு தெரியாது. ஊருத் தெரியாது. உங்களுக்கு கல்யாணமாகிடுச்சான்னு எனக்குத் தெரியாது. ஏன், உங்களுக்குக் கண்ணுத் தெரியாதுன்னு கூட எனக்குத் தெரியாது. அந்தளவுக்கு நான் உங்க கண்களால கண்மூடித்தனமா ஒரு பெயர் தெரியா உணர்வுக்குள்ள விழுந்துட்டேன். அப்போலேந்து என் மனச விட்டு நீங்க போக மாற்றீங்க, உங்க கண்ணு என் பார்வைய விட்டு போக மாட்டுது. உங்கள பார்க்காம, உங்க கிட்ட பேசாம, நான் கஷ்டப்பட்ட அந்த ஆறு மாசத்த விடவும் இந்த ஒரு வாரம், என்ன மொத்தமா மாத்தீடுச்சு சீனியர். ஐம் டோட்டலி இன் லவ் வித் யூ. உங்கள பார்க்காம, பேசாம இருக்குறத விட, நீங்க எனக்குக் கிடைக்கவே மாட்டீங்கன்னு தெரிஞ்சு நான் கஷ்டப்பட்டது தான் அதிகம். " என மௌனமாய் கண்ணீர் விட்டுக் கொண்டே கூறினாள்.

" நமக்கு இருக்க ஒரே வித்தியாசம். உன்னால என்ன இப்போ பார்க்க முடியும். ஆனா என்னால முடியாது. " என யாதேஷ் திடீரென ஒரு விளக்கம் கொடுக்கவும் ஷிவன்யா அவனை புரியாமல் பார்க்க, " நீ சொன்னத நான் எதுவும் சொல்லல அவ்வளவு தான் யமுனா. இந்த ஒரு வாரத்துக்கு முன்னாடி வரைக்கும் நான் கண்ண கட்டீட்டு தான் அந்த காட்டுல சுத்தீட்டு இருந்தேன். ஆனா என் கண்ண நானே மூடியிருக்கேன் அப்படீங்குறதே லேட்டா தான் எனக்குத் தெரிய வந்துச்சு. நான் உன் காதல மட்டும் பார்க்காம இல்ல யமுனா, என்னோட காதலையும் நான் மதிக்கல. எனக்குள்ள இருந்த பயம் என்ன அத கவனிக்கவிடல. ஆனா நீ இனி எனக்கு கிடைக்கவே மாட்டங்குற ஒரே விஷயத்த தினம் சொல்லி சொல்லி அவன் ஒரே வாரத்துல என் மனசுல இருந்த காயத்த குத்திக் கிழிச்சிட்டான். என்னாலையும் இனி இப்படி இருக்க முடியாது யமுனா. " என யாதேஷ் கலக்கமாய் தன் மனதை வெளிப்படுத்தினான்.

" எனக்குப் புரியல சீனியர், " என ஷிவன்யா திக்கித் தினறினாள்.

" நான் செஞ்சதெல்லாம் மறந்துடு யமுனா. நீ இங்கையே ஸ்டடீஸ கன்ட்டின்யூ பண்ணு, " என யாதேஷ் அவளது முடிவை மாற்றக் கூறி திடீரென மன்றாட,

" என்னால முடியாது சீனியர். நீங்க எனக்கு இல்லன்னு தெரிஞ்சதுக்கு அப்பரமும் என்னால உண்மைய மறைச்சு உங்க கண் முன்னாடியே வாழ முடியாது சீனியர். " என ஷிவன்யா மறுத்துப்பேசினாள்.

" நான் உனக்கு கிடைக்க மாட்டேன்னு யாரு சொன்னா யமுனா? " என நேருக்கு நேராய் பார்த்துக் கேட்டவன். " நான் கிளம்புறேன் யமுனா, " அவள் எதிர்பார்க்காத பதில் கொடுத்த யாதேஷ் அங்கிருந்து வேகமாய் நடக்கத் தொடங்கினான்.

புரியாமல் குழப்பத்தோடே நின்ற ஷிவன்யாவை நோக்கி ஓடி வந்தான் ஆரவ்.

ஆரவ் " ஹே ஷிவா!! " என அவன் கத்தியதில் நிலையடைந்து அவள் அவனை பார்க்க, " உன் காதல் இத்தன மாசமா ஃபெயிலியர் ஆனதுக்கு காரணமே நான் தான்! " என கத்திக்கொண்டே வந்தான் ஆரவ்.

" என்னண்ணா சொல்றீங்க? " என அதிர்ச்சியாய் ஷிவன்யா வினவ, " ஆமா டா. அது எனக்கு புரிய இவ்ளோ லேட்டாய்டுச்சு. " என்ற ஆரவ் அன்று ஷிவன்யா பாடிவிட்டு சென்றப்பின் நடந்ததை விளக்கினான்.

கண்ணீருடன் பாடி முடித்த ஷிவன்யா அதற்கு மேலும் அங்கு நிற்காமல் விடுதிக்கு ஓடிவிட்டிருந்தாள். அன்று ஷிவன்யா மட்டுமல்ல, அனைவரும் விழா முடிந்து விட்டதென எண்ணியபோது மேடை மீது தன்னந்தனியாய் ஏறினான் யாதேஷ்.

யாதேஷ் கல்லூரி விழாக்களில் பாடியே அத்தோடு ஆறு மாதமாகியிருந்தது. இன்றைய இரவோடு அவர்கள் அனைவரது கல்லூரி வாழ்கையையும் முடிவு பெற இருக்கிறது.

இனி யாதேஷே எண்ணினாலும் அவனால் அவன் மனம் விரும்பியவளை பார்க்க முடியாது. இனிமேலும் அவனே ஆசை பட்டாலும் அவன் குரலை இரசித்த இதே கல்லூரி மாணவர்கள் முன் அவனுக்கு வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. அவனுக்காய் இல்லையெனினும் அவர்களுக்காய் ஒரு முறை பாட எண்ணினான்.

யாதேஷ் தனது கிட்டாருடன் வந்து நின்றதே அங்கிருந்த பெரும்பாலான மாணவர்களுக்கு ஆனந்த ஆதிர்ச்சியாய் இருந்தாலும், அவன் ஆரவில்லாமல் தன்னந்தனியே வந்து நிற்பது பேரதிர்ச்சியாய் இருந்தது. அவ்வனைவரும் தேடிய ஆரவ், அதே கூட்டத்திற்கு நடுவில் கண்களில் கண்ணீருடன் தன் நண்பனை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். ஆரவ் மட்டுமல்ல யாதேஷின் கண்களுமே பனித்திருந்தது.

பத்து நிமிடத்திற்கு முன்பு...

ஷிவன்யா அழுது கொண்டே விடைப்பெற்றதை கண்டவுடன், ஆரவிற்கு சுருசுருவென கோவம் எகிர, அதற்கு மேல் அவன் அமைதி காக்கவில்லை.

ஆரவ் " டேய் இப்போ உனக்கு சந்தோஷமா?! அவ அவளோட ஊருக்கே போகப் போறா. நாளைக்கு மொத்தமா உன்ன விட்டு போகப் போறாடா! " என கோவமாய் யாதேஷைப் பிடித்து உலுக்கினான்.

" போகட்டும் டா. நானா அவள இருக்க சொன்னேன்? " என எங்கோ பார்த்தபடி பதிலளித்தான் யாதேஷ்.

" எதுக்கு டா புரிஞ்சிக்கவே மாற்ற?! உன் ஒருத்தனால அவ அவளோட ஆசைகள கூட விட்டுட்டு அவ ஊருக்கே போறா, நல்லா படிக்கிற பொண்ணு டா, இவ்வளவு தூரம் வந்துட்டு உன் ஒருத்தனால நிம்மதிய இழந்து போறா! " என ஆரவ் அவனை ஒரு அறை அறைந்தது கூட யாதேஷிற்குப் பெரிதாய் தெரியவில்லை.

" வாயத்திறந்து எதாவது சொல்லேன் டா, உனக்கு உன் மனசே தெரியிதா இல்லையா?! அவளையும் நோகடிச்சிட்டு நீயும் ஏன் இப்படி கஷ்டப்பட்டுட்டு இருக்க?! உனக்கு அவ மேல எந்த உணர்வும் இல்லன்னா உங்க அம்மா சொல்ற பொண்ண நினைச்சிட்டு உன் வேலையப் பார்த்துட்டு போக வேண்டியது தான?! ஏன் அந்த அப்பாவி பொண்ணோட வாழ்கைய வீணடிச்சிட்டு இருக்க?! " என ஆரவ் ஷிவன்யாவின் நலத்தை முன் வைத்து தன் தோழன் என்பதையும் பாராமல் லெஃப்ட் அண் ரைட்டென வாங்கினான்.

" என்னால முடியாது டா! சத்தியமா என்னால முடியாது. நான் உன் அளவுக்கு தைரியமானவன் இல்ல! " என யாதேஷ் மனமுடைந்து கத்த, " என்னடா உளறுற? " என புரியாமல் பார்த்தான் ஆரவ்.

" காதலிச்சு ஏமாந்ததுக்கு அப்பரம் இருக்க வலிய என்னால தாங்கிக்க முடியாது. உன் அளவுக்கு நான் தைரியசாலி இல்லடா! உன்னால எது நடந்தாலும் எதுவுமே நடக்காத மாதிரி வாழ முடியும். ஆனா என்னால முடியாது! " என வலியுடன் கதறிய யாதேஷை ஆரவ் அதிர்ச்சியோடு பார்த்தான்.

" சௌமியா பத்தி எனக்குத் தெரியாதுன்னு நெனச்சியா...? இல்ல அவ வீட்டுல கட்டாயக் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்கன்னு நீ சொன்ன பொய்யத் தான் நான் நம்பீட்டேன்னு நெனச்சியா?! " என யாதேஷ் விரைப்பாய் அவனை பார்க்க, ஆரவிடம் அக்கேள்விகளுக்கு பதிலில்லை.

" எனக்கு கண்ணு தான் டா இல்ல. மனசு இன்னும் இருக்கு, "

அன்றைய இரவு ஆரவும் யாதேஷிடம் எதுவும் பேசவில்லை, யாதேஷும் ஆரவிடம் எதுவும் பேசவில்லை. ஆரவுக்கு பல மாதங்கள் கழித்து அன்று அழ வேண்டும் போலிருந்தது. அது யாதேஷிடமே பேசாமல் இருந்ததனாலா அல்ல தேவையற்ற அவளின் நினைவு வந்ததனாலா என தெரியாமல் தவித்தான்.

சௌமியா, ஆரவ் உயிருக்கு உயிராய் காதலித்த ஆரவின் முன்னாள் காதலி. அவன் மட்டும் தான் காதலித்தான். அவள் காதலித்தாளா என்பது இன்று வரை பதில் தெரியா கேள்வி தான். யாதேஷ் மற்றும் ஆரவ் முதலாமாண்டு இக்கல்லூரியில் சேர்ந்தபோது ஆரவ் மீது காதலில் விழுந்து முதல் நாளே அவனுக்கு அதை தெரிவித்தும் விட்ட மாணவி தான் சௌமியா.

ஆனால் ஆரவிற்கு அப்படி எந்த ஒரு எண்ணமும் இருக்கவில்லை. கிட்டத்தட்ட அவன் அப்போது ஒரு முரட்டு சிங்கிலாகத்தான் இருந்தான். விஜித்தாவும் அவன் மனதில் புகுரா நேரமது. ஆரவ் எவ்வளவு மறுத்துக் கூறியும் சௌமியா பேச்சை கேட்கவில்லை. அந்த கல்லூரியின் மாணவர்கள் முதல் பேராசிரியர்கள் வரை அனைவரும் ஆரவின் மீதான சௌமியாவின் காதலை அறிந்திருந்தனர். சௌமியா பெரிய வீட்டுப் பெண் என்பதால் எந்த ஒரு ஆசிரியரும் அதை பற்றி வாயெடுத்துப் பேசியதே இல்லை.

ஆயினும் ஆரவ் எவ்வளவோ கூறியும் அவள் கேட்காததால் ஒரு கட்டத்தில் ஆரவும் அவளின் மீது காதல் வையப்பட்டான். ஆரவின் அன்னை மகிழ்ச்சியோடு தன் மகனின் காதலை ஏற்றுக் கொண்டார். ஆனால் ஆரவின் முதல் காதல் இரண்டு வருடம் தான் நீடித்தது. ஒரு வருடத்திலே சௌமியா தனக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளதையும் தனக்கு வீட்டில் ஒரு பெரிய கோடீஸ்வரரின் மகனை நிச்சயித்ததையும் ஆரவிடம் கூறிவிட்டு, அவனின் காதலை ஒரு நொடியில் ஊதி உடைத்திருந்தாள்.

ஆரவ் அதை ஏற்றுக்கொள்ளும் இடத்தில் அப்போது இல்லை. அவன் முதல் முறை குடித்ததும் அன்று தான், யாதேஷிடம் முதல் முறை பொய் கூறியதும் அன்று தான்.

ஆயினும் இன்று வரை ஆரவ் அறிந்திடாத ஒன்று, பூட்டிய அறைக்குள் இரவு முழுவதும் கத்திக்கதறிய அவனின் கதறல்கள் அனைத்தும், விடிந்தப் பின் மறையும் வரையுமே அவன் சாய்ந்திருந்த அதே கதவின் மறுபுறம் யாதேஷ் சாய்ந்தமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான் என்பது தான்.

அன்று யாதேஷிடமும் தன் நண்பனுக்கு சமாதானம் கூற மனமில்லை. ஆரவை பற்றி நன்கறிந்தமையால் அவன் தன்னிடம் கூறவில்லையெனினும் வாய் விட்டு கதறியாவது பாரத்தை குறைக்கட்டுமென மனதை இழுத்துப் பிடித்துக் கொண்டான்.

ஆனால் ஒவ்வொரு முறையும் யாதேஷ் இதை பற்றி ஆரவிடம் பேச்செடுக்க முணையும் போதெல்லாம், ஆரவின் சலனமற்ற முகத்தைக் கண்டப் பின் எங்கு தன் நண்பன் மீண்டும் உடைந்து விடுவானோ, அவன் தன் முன் நலமாக இருப்பதாய் போடும் இந்த நாடகம் நீடித்து விடுமோ என்னும் பயத்தில் பின் வாங்கினான்.

ஆரவின் காதலும் இறக்கவில்லை. அவனது வலியும் மறையவில்லை. சௌமியாவின் இழப்பை அவன் பெரிதாகவே எடுத்துக் கொள்ளாததை போல சுற்றினாலும் அவனே அறியாது தனியே இருக்கும் நேரங்களில் கண்ணீரில் வெடிக்கத் தான் செய்தான்.

அதை தவிர்க்கவே யாதேஷுடன் வழக்கத்திற்கும் அதிகமாக நேரம் செலவழித்து அவன் தவிக்க, அவனே அறியாது மறுபுறம் யாதேஷும் ஒவ்வோர் நொடியும் அவனை எண்ணி வருந்தியே காலத்தை கடத்தினான்.

விழி மீறிய வழி நாடி...

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro