Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வெளிச்சப் பூவே - 9

“ஹேப்பி பர்த்டே மினி!!”

“தேங்க்ஸ் கிருத்திக்!”

“முன்னவே சொல்லியிருந்தா பெரிய பார்ட்டியா ஏற்பாடு பண்ணியிருக்கலாம்..”

“அதனால என்ன, எனக்கு பிறந்தநாள் கொண்டாடற பழக்கம் இல்லை.”

“ஹை, ட்ரீட் குடுக்காம ஏமாத்தப் பாக்கறியா?”

அவன் காதைத் திருகியவள், “சோறு சோறு, எப்பப் பாத்தாலும் சோறு!” என சீண்ட, அவனோ பொய்க் கோபத்துடன், “மூணு மாசம் முன்ன தர்ஷன் சாரோட பர்த்டேவை அவ்ளோ க்ராண்டா ஆர்கனைஸ் பண்ணியே? வயலின் ஆர்கெஸ்ட்ரா, வகை வகையா சாப்பாடு, அத்தனை சீஃப் கெஸ்ட்கள்.. இப்ப மட்டும்?” என சண்டையிட்டான்.

“அது என் வேலைடா. இது என் வாழ்க்கை. பாஸும் நானும் ஒண்ணாகிட முடியுமா?”

“கரெக்ட். அவரோட ரேஞ்சே வேற! சரி, உன் அளவுக்கு அட்லீஸ்ட் ஐஸ்க்ரீமாச்சும் வாங்கிக் குடு..”

“இப்ப கேட்டயே, அது நியாயம்! வா போவோம்.”

“ஹை! ஐஸ்க்ரீமா? நானும் வரேன்!!” என்றபடி ஸ்பூர்த்தியும் ஓடி வந்து ஒட்டிக்கொள்ள, வாய்விட்டுச் சிரித்தபடி அவர்களை அழைத்துக்கொண்டு கேண்ட்டீனுக்கு நடந்தாள் அவள்.

செல்லும் வழியில் செயற்கூடத்தில் தண்டபானியும் சிலரும் அமர்ந்து விவாதித்துக் கொண்டிருந்ததைக் காண நேரிட்டது.

துணுக்குற்றாலும் முகத்தில் காட்டாமல் கிருத்திக்கிடம் ஐஸ்கிரீம் வாங்கிவரச் சொல்லிவிட்டு அவ்வறையை ஒட்டிய பால்கனியில் சென்று காத்திருப்பதுபோல நின்றாள் அவள்.

காற்றில் மிதந்து வந்த சில வார்த்தைகள் காதில் விழுந்தன.

“தர்ஷனை..” “..ஆமா..” “..ஆறு மாசம்..” “..வோட்டிங்..” “..சாஷா…” “..டர்ன் ஓவர்..” “..போஸ்ட்போன்..”

சட்டென விழிப்பானாள் மினி.

***

“பாஸ், போர்ட் மீட்டிங்கை ஆறு மாசம் போஸ்ட்போன் பண்ணப் போறாங்க. உங்கள சேர்மன் ஆக விடாம சதி பண்றாங்க.”

“வாட்!? யாரு?”

“என்னால வெளிப்படையா சொல்ல முடியாது. ஆனா இது உண்மை.”

ஒருகணம் மூச்சிழுத்து நிதானமாக யோசித்தான் தர்ஷன்.

“நம்ம ஆப்டிக்ஸ் இப்ப எப்படி இருக்கு?”

“நூறாவது டெக் டீல் சைன் பண்ணியிருக்கோம் ஒரே வருஷத்துல. கம்பெனியோட லாபம் நீங்க வந்ததுல இருந்து பதினெட்டு பர்சண்ட் அதிகமாகியிருக்கு. ஸோ, பத்துல ஏழு  இண்வெஸ்டர்ஸ் உங்க பக்கம் இருக்கலாம். வோட்டிங் வைச்சா நீங்க ஜெயிக்க எழுபது சதவீத சான்ஸ் இருக்கு.”

“பத்தாது மினி. இந்த ஆறு மாச காலத்தை வச்சே நம்ம சான்ஸை இன்னும் பலப்படுத்தணும்.”

அவசர அவசரமாய் மேலாளர்கள், மென்பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் காரியதரிசிகள் அனைவரையும் அழைத்து கூட்டம் கூட்டினான் தர்ஷன்.

“உங்க எல்லாருக்கும் தெரியும், நான் இங்கே வந்து ஒரு வருஷம் ஆகப் போகுது. இதுவரை புது ப்ராஜெக்ட் எதையும் நாம கையில் எடுக்கலை. இருக்கற அதே ஆப்களையும் சாப்ட்வேர்களையும் தான் வித்துட்டு இருக்கோம். ஸோ, ஒரு புதுமையான ப்ராஜெக்ட்டை லான்ச் பண்ணி, மார்க்கெட்டை பிடிக்கணும். Let's have a brainstorming session. எவ்வளவு நேரம் ஆனாலும் பரவால்ல. புதுசா எதாவது ஐடியா இருந்தா ஷேர் பண்ணுங்க.”

ஏற்கனவே வேலை நேரம் முடிந்து வீடுசெல்லாமல் அமர்ந்திருந்த எரிச்சலோடு, தர்ஷனின் அசட்டுத்தனமான வார்த்தைகளால் வந்த எரிச்சலும் சேர, அனைவரின் முகமும் கடுகடுத்தது.

ஒரு மேலாளர் எழுந்தார்.
“சார், இதெல்லாம் ஒரு நாள்ல நடக்கற காரியமில்லை. ப்ரொபோஸல் சப்மிட் பண்ணி, டீம் லீடர் ரிவ்யூ பண்ணி, ஆயிரம் கண்களைக் கடந்து மேனேஜர்கிட்ட சேரணும் ஒரு ஐடியா. அதுக்கெல்லாம் நேரம் எடுக்கும். எடுத்தோம் கவுத்தோம்னு எதையும் செய்ய முடியாது. உங்க போர்ட் மீட்டிங் வருதுன்னு ஒரே நாள்ல உட்கார்ந்து யோசிச்சா மட்டும் எதுவும் மாறாது. இதை ஒரு வருஷம் முன்னவே யோசிச்சிருக்கணும். இப்ப பண்றது வேஸ்ட்.”

“அட, வழக்கத்தை மாத்துவோம். ரேபிட்-லான்ச் மாதிரி பண்ணுவோம். நல்லா ஐடியா மட்டும் இருந்தா–”

“இன்னும் காலேஜ் பையன் மாதிரி பேசறீங்க சார். ஒரு பேங்க்கிங் ஸாப்ட்வேர் தயார் பண்ணதால நீங்க அதுல நிபுணர் ஆகிட முடியாது. அப்படியே ஒரு ஐடியா கிடைச்சாலும், அதை கமர்ஷியல் ப்ராடக்டா மாத்த குறைஞ்சது ஒரு வருஷம் ஆகும். உங்க ஆசைப்படி மின்னல் வேகத்துல நடக்காது எதுவும்.”

“அப்படி இல்லை சார்..”

“வெரி சாரி சார், ஆனா இது வேலைக்காகாது.”

ஒவ்வொருவராக எழுந்து வெளியேறினர், அதிருப்தியாகத் தலையசைத்தவண்ணம்.

இறுதியாக மினி மட்டுமே எஞ்சியிருக்க, தலையைக் கைகளில் பிடித்தபடி மேசையில் சரிந்தான் தர்ஷன்.

"பாஸ், இப்ப என்ன நடந்துடுச்சு? ஏன் ஃபீல் பண்றீங்க?"

"நான்.. தோத்துகிட்டே இருக்கேனே மினி.. I'm not perfect anymore. என்னால எதுவுமே முடியல."

"ரிலாக்ஸ் பாஸ்.. இங்க யாருக்கும் எதையும் நீங்க நிருபிக்கத் தேவையில்ல! நீங்க ஆல்ரெடி பர்ஃபெக்ட் தான்! You're the only person in the whole world who can be YOU. நீங்க நீங்களா இருக்கறதே ஒரு பெரிய சாதனை தான், ஏன்னா, உலகத்துல உங்களைத் தவிர யாரும் உங்களைப் போல இருக்க முடியாது. உங்க மேல நம்பிக்கை வைங்க. உங்க மனசுக்குப் பட்டதை தாராளமா செய்யுங்க, உங்களை நம்புறவங்களோட சப்போர்ட் உங்களுக்கு எப்பவும் இருக்கும். ஒரு நல்ல ஐடியா நிச்சயம் கிடைக்கும். புது ப்ராடக்ட் இல்லாட்டாலும் உங்க பதவியை யாரும் பறிக்க முடியாது. நீங்க எப்போதுமே எங்க பாஸ் தான். நீங்க எப்பவுமே பெஸ்ட் தான்."

லேசாகப் பனித்த கண்களுடன் நிமிர்ந்தான் அவன்.

"தேங்க்ஸ் மினி" என்றான் உருக்கமாக.

அவள் ஆதுரமாகப் புன்முறுவல் பூத்தாள்.

"இன்னிக்கு ஓய்வெடுப்போம். உற்சாகமா வந்து நாளையை வெல்வோம்."


***

“என்ன மினி.. தர்ஷனை ஒரு பொண்ணோட பார்த்தேன், நேத்து மேகஸின்ல..?”
சுல்ஃபி ஒருநாள் மாலை காரியதரிசிகள் அறைக்கு வந்தான்.

மினி தலையசைத்தாள்.
“பேரு அபர்ணா. நடிகை. புது கேர்ள்ஃப்ரெண்ட்.”

“ஒரு புது மாடல் வந்தா பழைய ஃபோனைத் தூக்கிப் போடற மாதிரி டேட் பண்ற பொண்ணுங்களை மாத்திட்டு இருக்கான் உங்க பாஸ்.”

“சாஷா போயி ஒரு மாசம் கூட ஆகலை.. அதுக்குள்ள இன்னொரு பொண்ணா?” என வாயைப் பிளந்தான் கிருத்திக்.

அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது உள்ளே வந்தாள் ஸ்பூர்த்தி. கையில் அந்த சர்ச்சைக்குரிய நாளிதழ்.

“யார் அந்தப் பொண்ணு?”

"ஹான், புது மாடல்"

இரட்டை அர்த்தத்தில் சுல்ஃபி இளக்காரமாக சொல்ல, ஓங்கி அவன் விலாவில் இடித்தாள் மினி.

"ஆஹ்! மாடலிங் பண்ற புதுப் பொண்ணுன்னு சொன்னேன்டி!”

“பேரு அபர்ணா. பெங்களூர் பொண்ணு. சில ஷார்ட் பிலிம்ஸ் பண்ணியிருக்கா. நம்ம கம்பெனிக்கும் சில விளம்பரங்கள் பண்ணியிருக்கா. அப்ப பாஸை மீட் பண்ணா.”

பத்மினி விளக்க, அவர்கள் தலையசைத்துக் கேட்டுக்கொண்டனர்.

சில நாட்கள் கழித்து தர்ஷனைத் தேடி அலுவலகத்துக்கே வந்தாள் அந்த மாடல் பெண். அடையாளம் தெரிந்ததால் மினி புன்னகையுடன் வரவேற்றாள்.

"ஹலோ மிஸ்.அபர்ணா"

கைகுலுக்க நீட்டிய மினியின் கை காற்றிலேயே நிற்க, அபர்ணா அவளை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் கடந்து சென்றாள்‌. மினி திகைப்பாகப் பார்த்துத் தோளைக் குலுக்கினாள்.

தர்ஷன் அபர்ணாவைக் கண்டதும் பணியை விட்டுவிட்டு அவளுடன் கிளம்பிவிட்டான்.

அபர்ணாவிடம் தர்ஷனின் நெருக்கம் நாளாக நாளாக அதிகரிக்க, அவளை தினந்தோறும் க்ளப், டின்னர், பார்ட்டி என எங்கேனும் சந்திக்கச் சென்றுகொண்டே இருந்தான் அவன். அவனது சார்பாக அலுவலகத்தையும் பார்த்துக்கொண்டு, அவனுக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்துகொண்டு மினி அல்லாடினாள்.

“அடுத்த வாரம் நான் அபர்ணாவோட ஆட் ஷூட் இருக்கு. என்னையும் வர சொல்லியிருக்கா, ஸோ–”

“அடுத்த வெள்ளிக்கிழமை இன்வெஸ்ட்டர் ப்ரெசண்டேஷன் இருக்கு பாஸ்.”

“அப்டியா” என்றான் அவன், புதிதாகக் கேட்பவன்போல். மூன்று வாரங்களாக அதுபற்றி நினைவூட்ட மெமோக்கள் அனுப்பிய கடுப்பை முகத்தில் காட்டாமல் ஆமெனத் தலையசைத்தாள் மினி.

“கண்டிப்பா வரேன்னு சொல்லியிருந்தேன். இப்ப ப்ரெசன்டேஷனையும் மாத்த முடியாது..”

காரியதரிசிகள் மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர் சந்தேகமாக. மினி பாந்தமாக, “புது இண்வெஸ்டர்ஸ் நிறைய பேர் மீட்டிங்க்கு வருவாங்க. உங்களோட சின்சியாரிட்டியை எதிர்பார்ப்பாங்க. ஸோ, அபர்ணா கிட்ட பேசிப் பாருங்களேன்..” என்றாள்.

“ம்ஹூம்.. ஒண்ணு பண்ணுவோம், நீங்களும் என்கூட கிளம்புங்க. ஒரு பிஸினஸ் ட்ரிப் மாதிரி இருக்கட்டும், மீட்டிங்கை ஆன்லைன்ல பண்ணிடலாம்!”

மறுத்துப் பேச வாயெடுப்பதற்குள் தர்ஷன் காதில் வாங்காமல் கிளம்ப, எரிச்சலாகக் கையிலிருந்த ஃபைலை மேசையில் விசிறினான் கிருத்திக்.

வெள்ளிக்கிழமை தர்ஷனுடன் கிளம்புவதாக சுல்ஃபியிடம் பத்மினி சொன்னபோது, தானும் வருவதாக அடம்பிடித்தான் அவன் சிறுவன்போல.

கிருத்திக் ஏளனமாகச் சிரித்தான்.
“ஒரு நாள்ல மினி ஒண்ணும் கரைஞ்சு போயிட மாட்டா! மேபீ.. அங்க ஒரு அழகான பையனைப் பார்த்து லவ் பண்ற வாய்ப்பு இருக்கு.. எதுக்கும் தயாரா இரு சுல்ஃபி! சமத்தா இருந்தியானா நாங்க வரும்போது குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிட்டு வரோம்!”

அவன் சிரிக்க, சுல்ஃபி முறைக்க, ஸ்பூர்த்தி தான், “எங்களைப் பார்த்து பொறாமைப்படாத சுல்ஃபி. நாங்க பண்ற மாதிரி வெட்டி வேலை உலகத்துலயே இருக்காது,” என்க, மூவரும் சோர்வாகச் சிரித்து ஆமோதித்தனர்.

மினியின் காரில் மூவரும் கிளம்பினர் அதிகாலையில். தர்ஷனோ அபர்ணாவுடன் செல்வதாகச் சொல்லிவிட்டான். தடாவைத் தாண்டி ஒரு மலைப்பாங்கான ஊரில் படப்பிடிப்பு நடப்பதாகச் சொல்லியிருந்தான். இடத்தை அடைந்து தர்ஷனைத் தேடினால் அவன் அபர்ணாவுடன் இருந்தான் ஒரு நிழற்குடையின் கீழ்.

'தர்ஷூ, தர்ஷூ' என உதட்டைக் குவித்துக் கொஞ்சிக் கொஞ்சி அழைத்து அவள் குலவிக்கொண்டிருக்க, அதைக் காண சகிக்காமல் தலையில் கைவைத்தபடி திரும்பினாள் ஸ்பூர்த்தி.

"மினி, எனக்கு ஒரு உதவி செய்யேன்… தயவு செய்து என்னை இந்தப் பள்ளத்தாக்குல தள்ளி விட்டுரு. நான் நிம்மதியா செத்துப் போயிடறேன். என்னால இந்தக் கண்றாவியை எல்லாம் பார்க்க முடியல."

"விடுடா  விடுடா.. நமக்கென்ன வந்தது? அவர்  என்னமோ பண்ணிட்டு போகட்டும். போர்ட் மீட் ஆச்சு, அவராச்சு. நாம நூடுல்ஸ் சாப்பிடப் போலாம் வா!"

மூவருமாய் அங்கிருந்த டீக்கடையில் அமர்ந்து மேகி ஆர்டர் செய்ய, தர்ஷனோ அபர்ணாவுடன் அவளது கேரவனுக்குள் சென்று மறைய, கிருத்திக் தலையில் அடித்துக்கொண்டான்.

பகல் முழுதும் இப்படியே கழிந்தது. காரியதரிசிகள் மூவரும் தான் வெயிலில் கணினியைத் தட்டிக்கொண்டும் காதோடு ஒலியூட்டி மாட்டி மீட்டிங்கில் பேசிக்கொண்டும் உழைத்துக் கொட்டினர்.

அபர்ணாவோ அவர்களைக் காணும்போதெல்லாம் ஏதோ புழுக்களைப் பார்ப்பதுபோல பார்த்துச் சென்றாள். கிருத்திக் கைகளை முறுக்கிக்கொண்டு எழுந்தபோது மினியும் ஸ்பூர்த்தியும் அவனைப் பிடித்து அடக்கி அமர்த்தினர். தர்ஷன் நேரில் வராத செய்தியை அறிந்த பங்குதாரர்கள் அதிருப்தியுடன் சந்திப்பை முடித்துக்கொண்டனர். தண்டபானியின் ஏளனச் சிரிப்பைத் திரையில் கண்ட பத்மினிக்கு இரத்தம் கொதித்தது.

ஊருக்குத் திரும்பிய பின்னர் ஆளுக்கு இரண்டு நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு மனசாந்தி அடைய ஆலயங்களுக்கும் மடங்களுக்கும் போய் வருவதாக முடிவாயிற்று.

“வொர்ஸ்ட் ட்ரிப் எவர்!”

***

“அஞ்சாம் மாசத்து ஸ்கேன் நார்மலா இருக்குன்னு சொல்லியிருக்காங்க. எனக்கு தான் அயர்ன் கம்மியா இருக்காம். மாத்திரை தந்திருக்காங்க.”

மினியின் வீட்டு பால்கணியில் பிரம்பு ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் வித்யா. எதிரே சாய்வு நாற்காலியில் காபிக் கோப்பையுடன் பத்மினி.

“ஒழுங்கா சாப்பிடுன்னா கேட்டா தானே!”

மினி சலிப்பாக சொல்ல, வித்யா முறைத்தாள்.

“நீ இருந்து பார், அப்பப் புரியும். வாந்தியும் குமட்டலுமா இருக்கேன், இதுல வக்கனையா வேற சாப்பிடணுமா?”

“ஓகே ஓகே.. ரிலாக்ஸ். ப்ரெக்னன்ட்டா இருக்கறப்ப இப்படி கோபப்படக் கூடாது. ஹேப்பியா எதாச்சும் பேசு விது.”

“சரி, உன் லைஃப் எப்படிப் போகுது? எதாவது முன்னேற்றம் உண்டா காதல் வாழ்க்கைல?”

“தலைக்கு மேல வேலை, இதுல அதுக்கு எங்கே நேரம்?”

“ப்ச்.. சும்மா சாக்கு சொல்லாத மினி. நேர்ல பார்க்க முடியலைன்னா இந்த டிண்டர், பம்பிள் மாதிரி ஆன்லைட் டேட்டிங் ஆப்ஸ் எதாச்சும் ட்ரை பண்லாம்ல?”

“அந்த வம்பே வேணாம்! ஆன்லைன்ல தினம் தினம் எத்தனை குற்றம் நடக்குது தெரியுமா? எங்க கம்பெனியிலேயே ஏகப்பட்ட ஃபயர்வால் ஆப்ஸ் கிரியேட் பண்ணிருக்கோம், இந்த சைபர் க்ரைம்களைத் தடுக்க.. ஆனாலும் குறைஞ்ச பாடில்ல. ஒவ்வொரு கதையையும் கேட்டா பயமா இருக்கும்!”

“எனக்கு உன்னைப் பார்த்தா தான் பயமா இருக்கு! மினி, சிங்கிளாவே இருந்து என்னத்த சாதிக்கப் போற? கொஞ்சம் முயற்சி எடுத்தா உனக்கு எவ்ளோ செம்மையான லவ் லைஃப் அமையலாம் தெரியுமா?”

“பேசுவ, பேசுவ! காலேஜ்ல சுல்ஃபி வந்து லவ் லெட்டர் குடுத்ததுக்கு என் சார்புல போயி ஹெச்.ஓ.டி கிட்ட கம்ப்ளெய்ன் பண்ணவ தானே நீ?”

வித்யா அசரவே இல்லை.
“நீ சிங்கிளாவே செத்தாலும் பரவால்ல, அந்த கேனையன் மட்டும் வேணாம் சொல்லிட்டேன்! நாளப்பின்ன வந்து என் வீட்டுல சம்பந்தம் கேட்டா தரமாட்டேன்,” என்றாள் வயிற்றைத் தடவியபடி.

“போடி! என் மருமகன் என் வீட்டோட மாப்பிள்ளையாவே வந்துடுவான்! வந்துடுவ தானடா செல்லம்?”

வயிற்றினருகே குனிந்து அவள் கேட்க, குழந்தை உதைத்த உணர்வில் திகைத்தாள் வித்யா.

“மருமகன்னு முடிவே பண்ணிட்டயா?” என்றபடி மோகன் வந்தான்.

“ஆமா, ஏதோ தோணுது. அண்ணா, நீ வேணா பாரு.. என் யூகம் தான் கரெக்டா இருக்கப் போகுது!”

“குழந்தை நல்லபடியா பொறந்தா போதும் மினி. பையனோ பொண்ணோ, பாசத்துல பாகுபாடே கிடையாது.”

மினி பெருமிதமாய் அவன் தோளில் சாய்ந்துகொள்ள, வித்யாவும் புன்னகைத்தாள்.

***

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro