வெளிச்சப் பூவே - 8
"இந்த ஒரு வருஷத்துல, மினி லேட்டா வந்து நான் பார்த்ததே இல்ல. மேல்மாடியில தூங்கற எனக்கே சில நாள் லேட்டாகும்; ஆனா மினி எத்தனை மைல் தூரத்துல இருந்து வந்தாலும் டாண்ணு எட்டு மணிக்கு ஆபிஸ்ல இருப்பா. அதுவும் சும்மா எல்லாம் இல்ல; எப்ப கவனிச்சாலும் பிசிறில்லாம பர்ஃபெக்ட்டா இருப்பா. போடற ட்ரெஸ்ல இருந்து செய்யுற வேலை வரை, எல்லாமே பர்ஸ்ட் க்ளாஸ் தான்!"
எதிரே அமர்ந்திருந்த ரக்ஷிதா உச்சுக்கொட்ட, சண்முகம் மட்டும் பெருமையாக அமர்ந்திருந்தார் புன்னகையோடு.
மூவரும் அவனது பென்ட்ஹவுஸின் கூடத்தில் அமர்ந்திருந்தனர்.
கல்லூரி விடுமுறை என அண்ணனைப் பார்க்க ரக்ஷிதா கிளம்ப, தானும் வருவதாக சண்முகமும் வந்திருந்தார் தன் பழைய அலுவலகத்தைப் பார்க்க.
வழியில் மினியை சந்தித்துவிட்டு, இருவரும் அவளைப் பற்றி சிலாகித்துக் கொண்டே வந்ததில் ரக்ஷிதா உர்ரென்றிருந்தாள்.
"நான் வந்தது உன்னைப் பார்க்கத் தான் அண்ணா. கண்டவங்களைப் பத்தி பேச இல்ல."
"ப்ச், மினி உனக்கு அக்கா மாதிரி. அவளைப் பத்தி மரியாதையோட பேசு," என அதட்டினார் சண்முகம். ரக்ஷிதா கண்களை சுழற்றினாள் ஆயாசமாக.
அவர் காதுபடாமல் தர்ஷனிடம், “வர வர நீயும் அப்பா மாதிரியே மினி புராணம் படிக்க ஆரம்பிச்சுட்ட. எதாவது சூன்யம் வச்சு உன்னையும் மாத்திட்டாளா அவ?” என்றாள் ரக்ஷிதா.
ஒரு வருட காலத்தில் அவளது குரோதம் இன்னும் மாறாதிருக்கக் கண்டு தர்ஷனுக்கு வியப்பும் வருத்தமும் ஒருசேர வந்தது. தந்தையிடம் திரும்பியவன், “டாட், ரச்சு இன்னிக்கு எங்களோட இருக்கட்டும். நான் ஈவ்னிங் அவளை வீட்ல விட்டுடறேன்,” என்றிட, அவரும் சரியெனக் கிளம்பிவிட்டார்.
“வாவ் தர்ஷ்! எத்தனை நாளாச்சு இப்டி நாம ரெண்டு பேரும் டைம் ஸ்பெண்ட் பண்ணி! ஜாலி!! ஃபர்ஸ்ட் எங்கே போறோம்?”
அவள் உற்சாகத்தில் துள்ள, அவனோ மென்முறுவலுடன் இண்டர்காமை கையில் எடுத்தான்.
“ஹான், மினி.. இன்னிக்கு ப்ளான்ஸ் எதுவும் இல்லைல்ல நமக்கு? குட். நீயும் ரக்ஷிதாவும் எங்கயாச்சும் அவுட்டிங் போயிட்டு வாங்க. ம்ம், நான் வரலை. லேப்ல வேலை இருக்கு. ஓகே தென். ஃபை மினிட்ஸ்ல வந்து ரச்சுவை அழைச்சிட்டுப் போ.”
அழைப்பை வைத்துவிட்டுத் திரும்பினால் அங்கே ரக்ஷிதா அக்கினிப் பார்வையுடன் நின்றாள் இடுப்பில் கைவைத்து.
“இதுதான் உன் ப்ளானா? என்னை அவளோட கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கறது? அண்ணனாடா நீ? சொந்தத் தங்கச்சியை இப்படி ட்ரீட் பண்ற!?”
“இல்ல ரச்சு, எனக்கு லேப்ல–”
“ஹான், பெரிய்ய டோனி ஸ்டார்க் இவரு! அப்டியே ஆராய்ச்சி பண்ணி அயர்ன் மேன் ஆகப் போறாரு! போடா டேய்!”
மினி சரியாக அப்போது உள்ளே நுழைய, இருவரையும் அற்பமாகப் பார்த்துவிட்டு ரக்ஷிதா கிளம்பத் தொடங்க, மினி சட்டென, “அரிஜித் சிங் கான்சர்ட், இன்னிக்கு ஈ.சி.ஆர்ல! சுல்ஃபி எனக்கு ரெண்டு டிக்கெட் வாங்கித் தந்தான், நாம போலாமா பாஸ்?” என்றாள்.
‘அரிஜித் சிங்’ எனக்கேட்ட மாயத்தில் ஆர்வம் மின்னத் திரும்பிய ரக்ஷிதா அண்ணனைக் கெஞ்சலாகப் பார்த்தாள்.
அவனோ, “எனக்குத் தலை வலிக்குது.. சத்தம், கூட்டம் எல்லாம் தாங்காது. மினி, நீ வேணா ரச்சுவை கூட்டிட்டுப் போயேன்,” என்றுவிட, மினி ரக்ஷிதாவை நோக்கினாள், கையில் இரண்டு டிக்கெட்களை விசிறிக் காட்டியபடி. பார்வையில் தென்பட்ட குறும்பை மறைக்க முனையவில்லை.
கண்களை மேலாகச் சுழற்றித் தன் அயர்ச்சியைக் காட்டியவள் மினியுடன் நடந்தாள் கச்சேரிக்கு.
காரில் இருவருக்கும் பேச்சில்லை. உம்மென்றே அமர்ந்திருந்தாள் ரக்ஷிதா. ஆறரை மணி கச்சேரிக்கு இப்படி நான்கரை மணிக்கே கிளம்பச் சொன்ன மினியின் மீது கோபம்.மினியோ அசராமல் காருக்குள் ஒலித்த பாடலுக்குத் தலையாட்டியபடி வந்தாள்.
"கான்சர்ட் போகும்போது இப்படி சாதாரண ட்ரெஸ்ல போனா நல்லா இருக்காது. ‘சோச்’ல ஆஃபர் போட்டுருக்கான்.. ஒரு ட்ரெஸ் எடுக்கலாம்” என்றபடி காரை ஒரு மாலுக்குள் செலுத்தினாள் மினி. ரக்ஷிதா அமைதியாக அமர்ந்திருந்தாள்.
அந்த உயர் ரக ஆடையகத்தில் மினி ஆமை வேகத்தில் ஒவ்வொரு ஆடையாகத் தொட்டுப் பார்த்துக்கொண்டிருக்க, ரக்ஷிதா பொறுமையின்றி உச்சுக்கொட்டினாள். மினியின் அசிரத்தை தாளாமல் வேகமாக வந்து சில டி-ஷர்ட்களை எடுத்து அவள் கையில் திணித்தவள், “இதை ட்ரை பண்ணு” என்றாள்.
மினி மறுப்பாக, “டி-ஷர்ட்ஸ் எல்லாம் காலேஜோட விட்டாச்சு. உனக்கு வேணும்னா நீ எடு,” என்றுவிட, முறைத்துக்கொண்டே ட்ரையல் ரூமுக்குச் சென்றாள் ரக்ஷிதா, டி-ஷர்ட்டுகளின் அழகை மினிக்கு நிரூபிக்க நினைத்து.
ஆனால் அவள் எடுத்தவற்றில் ஒன்றிரண்டு நன்றாகவே பொருந்த, நாமே வாங்கிக்கொள்வோம் என்று கையில் அவற்றை எடுத்துக்கொண்டாள். வெளியே வரும்போது மினி தனக்கென ஒரு டெரிலின் சட்டையை எடுத்து ஆராய்ந்துகொண்டிருக்க, ரக்ஷிதாவைப் பார்த்ததும் சிப்பந்தியை அழைத்து அவள் கேட்காமலேயே அவளது கையிலிருந்த ஆடைகளை பில் போடச் சொல்லவும் ரக்ஷிதா வாய்பிளந்தாள். மினி தனக்குள் சிரித்தாள்.
கிளம்பி சிறிது தூரம் சென்றிருப்பர். மினி சாலையில் எதையோ தேடினாள் மீண்டும். ரக்ஷிதா விழிப்பாக அவளை ஏறிட்டாள்.
“கான்சர்ட் போற இடத்துல சாப்பிடக் கிடைக்குமோ கிடைக்காதோ.. ‘காபி டே’ல லைட்டா சாப்டுட்டுப் போலாம்” என்றபடி குளம்பிக் கடைக்கு வெளியே மினி வண்டியை நிறுத்த, இம்முறை லேசாகப் புன்னகைத்தாள் ரக்ஷிதா.
ரக்ஷிதா தனக்கு வேண்டியதை எல்லாம் வாங்கிக்கொள்ள, சுணங்காமல் அவற்றிற்கு பில் செலுத்தினாள் மினியும். இருவருக்குமிடையே இறுக்கம் குறைந்திருந்தது.
இசைக் கச்சேரி நிகழும் இடத்துக்கு வந்தபோது, மினி காரை நிறுத்திவிட்டு வரும்வரை காத்திருந்தாள் அவள். வியப்பாக மினி நோக்க, அவள் கையிலிருந்த டிக்கெட்டைக் கண்காட்டினாள் அவள். குறும்புப் புன்னகையுடன் சீட்டை அவள் தர, ஏனோ அப்போதும் விட்டுப் போகாமல் மினியுடனே நடந்தாள் அவள்.
அரிஜித் சிங்கின் உருக்கமான குரல் உள்ளத்தை நிறைக்க, தடுக்காமல் நிரப்பிக் கொண்டனர் தங்கள் நெஞ்சில் அனைவரும். மினியும் ரக்ஷிதாவும் தங்களை மறந்து உற்சாகக் கூச்சலிட்டனர். ரக்ஷிதா குறைந்தது ஓராயிரம் புகைப்படங்கள் எடுத்திருப்பாள் தனது கைபேசியில். மினி அரிஜித் சிங்கை ரசித்த ரக்ஷிதாவை மட்டும் ஒன்றிரண்டு புகைப்படங்கள் எடுத்தாள்.
விழா இறுதியில் பாடகரைக் கிட்டத்தில் இருந்து பார்க்க மினி அழைத்துச் செல்ல, காரில் ஏறுமுன் அவரும் பறக்கும் முத்தம் ஒன்றை அவர்களது திசையில் விட்டுச்செல்லவும் அவள் காற்றில் பறக்காத குறைதான். மினியிடம் திரும்பிச் சிரிக்க, அவளும் முறுவலித்தாள்.
ஆடிப்பாடி அயர்ந்தாலும் முகத்தில் இன்னும் உற்சாகம் மின்ன வந்தவளை தர்ஷன் சிரிப்புடன் வரவேற்றான்.
தர்ஷனிடம் தன் பையைத் தந்துவிட்டு சோபாவில் பொத்தென சாய்ந்தாள் ரக்ஷிதா. சிறிதுநேரம் கண்மூடி ஓய்வெடுத்தாள். தர்ஷன் அவளருகில் அமர்ந்து காத்திருந்தான். அவள் பேசுவதாக இல்லை.
அமைதி நிலவுவது பிடிக்காமல் தர்ஷன் வினவினான்:
"மினி எப்படி?"
"ஓ..க்கே.." மனமின்றி இழுத்தாள் ரக்ஷிதா.
முதல்முறை மினியைப் பற்றி அப்பா கேட்டபோது தனக்கிருந்த தலைக்கணம் நினைவுக்கு வர, தர்ஷன் சிரித்துக்கொண்டான்.
"போகப்போக பிடிக்கும் உனக்கும். Just keep an open mind."
***
வாரக்கடைசியில் அபூர்வமாகக் கிடைக்கும் ஓய்வு நேரத்தை முழுவதுமாய் உபயோகித்து உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள் பத்மினி.
மாலையில் வித்யாவுடன் பொருட்காட்சிக்குச் செல்வதாக வாக்குக் கொடுத்திருந்தெல்லாம் தூக்க முனைப்பில் மறந்து போயிருந்தது. ஆனால் அதை வித்யா மறந்ததாகத் தெரியவில்லை.
ஏழரை மணியளவில் கதவின் அழைப்பு மணி ஒலிக்க, இன்னும் தூக்கம் கலையாத முகத்துடனே வந்து கதவைத் திறந்தாள் மினி.
வித்யா நின்றாள் வாயிற்படியில். நின்றாள் என்று சொல்ல முடியாவண்ணம் குதித்துக் கொண்டிருந்தாள்.
“மினி! ரெடியா?? போலாமா? கிளம்பலாமா? வர்றயா? சீக்கிரம்.. க்விக்! ஃபாஸ்ட்! லேட்டாகிடும்.. வா போலாம்!!"
ஓரிடத்தில் நில்லாமல் துள்ளியவளைக் கண்டு கலகலவெனச் சிரித்தாள் மினி.
"விது.. தலைசுத்தி விழுந்துடப் போற! கொஞ்சம் தரையில நில்லு!"
தோளைப் பிடித்து அவளை ஓரிடத்தில் நிற்க வைக்க முயன்ற நேரத்தில், வெளியில் கார் ஹாரன் ஒலித்தது அதீதமாய்.
"வித்யா! சீக்கிரம் அவளை இழுத்துட்டு வா! எக்ஸ்போவுக்கு நேரமாச்சு!!"
"ப்ச், அவ மசமசன்னு நின்னா நான் என்ன பண்ணுவேன்!? இருங்க வர்றோம்!"
வித்யா திரும்பி காரில் அமர்ந்திருந்தவனிடம் உரக்கக் கத்த, அவனே இறங்கி வந்தான் அவசரமாக.
“மோகன்.. அவ தான் ஹைப்பர் ஸ்டேட்ல இருக்கானு பார்த்தா, நீயுமா? பொருட்காட்சிக்கா இப்படி பறக்கறீங்க ரெண்டு பேரும்??”
அவன் இடுப்பில் கைவைத்து முறைத்தான்.
"மினி.. நாளைக்கு உன் பொறந்த நாள்டி! அதைக் கூட மறந்தாச்சா?"
அவள் சட்டென்று திகைத்தாள்.
"இ.. இல்ல.. ஞாபகமிருந்தது.. நேத்துக் கூட நினைச்சேன்.."
"சமாளிக்கறா! நெருப்புக் கோழி மண்ணுல தலையை புதைச்சுக்கற மாதிரி வேலைல மனசை நுழைச்சுக்கிட்டு எதைப் பத்தியும் அக்கறை இல்லாம இருக்கறா.."
மோகன் சாடினான் கோபமாக.
"ப்ச்.. பிறந்தநாள் கொண்டாடறதெல்லாம் ஸ்கூல் காலேஜோட விட்டுறணும்.. ஏழு கழுதை வயசாகியும் இதெல்லாம் என்னத்துக்கு?"
வித்யா அவளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, “நீ கொண்டாடத் தகுதியா ஒரு நியூஸ் சொல்லட்டா?” என்றாள் கண்கள் மின்ன. “ஐம் ப்ரெக்னெண்ட். பத்து வாரமாம்.”
மினி அதிர்ச்சியில் வாய்பிளக்க, மோகன் வாய்க்கொள்ளாப் புன்னகையுடன் ஸ்கேன் படங்களைக் காட்ட, ஆனந்தக் கண்ணீருடன் இருவரையும் அணைத்துக்கொண்டு உற்சாகக் கூச்சலிட்டாள் அவள்.
“என் வாழ்க்கையோட பெஸ்ட் பர்த்டே கிஃப்ட் இதுதான்! தேங்க்யூ விது! தேங்க்யூ மோகன்!”
“ப்ச், அதெல்லாம் அப்பறமா பாத்துக்கலாம்.. எனக்கு டெல்லி அப்பளம் வேணும், சீக்கிரம் கிளம்பு!”
****
மறுதினம் காலையில் தர்ஷன் அவசரமாக காரியதரிசி அலுவலகத்தில் நுழைய, மினியும் மற்றவர்களும் எழுந்து நின்றனர் கரிசனமாக.
“ஹான்.. மினி! உன்னைத் தான் தேடி வந்தேன்! கம் ஃபாஸ்ட்!!”
என்னவோ ஏதோவென அவளும் பதற்றமாக எழுந்து வந்தாள்.
“கம் வித் மீ.”
அவசரமாக அழைத்துச்சென்று கம்பெனி வாசலில் முன்புறம் நின்றிருந்த மகிழுந்தைக் காட்டினான் தர்ஷன்.
"ஹாப்பி பர்த்டே. மினிக்காக, ஒரு மினி கூப்பர்! எப்படி?"
மெலிதான ஆச்சரியத்தில் முகம் மலர்ந்தாலும், இன்னும் கரிசனம் மாறாத பார்வையோடே அவனிடம் திரும்பினாள் அவள்.
"ஒரு மினி கூப்பர் கார் கிட்டத்தட்ட அம்பது லட்சம் வருமே பாஸ்..? இவ்ளோ விலை குடுத்தா ஒரு கிப்ட் வாங்கணும்?"
"செலவில்லை மினி, இது இன்வெஸ்ட்மென்ட். நீ உன் வேலையை ஈஸியா பண்றதுக்கு கார் உதவினா, எனக்கு தானே அது நல்லது?"
அதிதீவிர பெருமிதத்துடன் அவன் கேட்க, அவளோ உதட்டை இறுக்கமாக மூடிக்கொண்டு முறுவலித்தாள் கடினமாக.
"தேங்க்ஸ் பாஸ்."
அப்போது சுல்ஃபி உற்சாகமாக அவள் பெயரைக் கூவிக்கொண்டே நடந்துவந்தான்.
"ஹாப்பி பர்த்டே மை டியர் மினி! விஷ் யூ ஆல் ஹாப்பினெஸ்!"
கையடக்கமான சின்னப் பரிசுப்பெட்டியை அவளிடம் நீட்ட, ஆர்வமாக அதைப் பிரித்தாள் அவளும். உள்ளிருந்து எடுத்த பொம்மையைக் கண்டு ஆனந்தமாய்ச் சிரித்தாள் அவள்.
"வாவ் சுல்ஃபி! Taylor swift மினியேச்சர் பொம்மை!??"
"3D ப்ரிண்டர்ல நானே செஞ்சது! உனக்காக!"
"தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ! செம்மையா இருக்குடா!" என அவனை கட்டியணைத்து ஆர்ப்பரித்தாள் அவள்.
தர்ஷன் அலட்சியமாக சிரித்தான்.
"அம்பது லட்ச ரூபா காரை விட, அம்பது ரூபா பொம்மை உசத்தியா? உன் ஜட்ஜ்மெண்ட் ரொம்ப வினோதமா இருக்கு மினி!"
மினி பேசுமுன் சுல்ஃபி இறுக்கமான புன்னகையுடன், "குடுக்கற கிப்ட்டோட மதிப்பு விலைல இல்லை பாஸ், அது பரிசைக் குடுக்கறவங்களோட மனசைப் பொறுத்தது. 'Personal' is better than 'pricey'. அது மினிக்கும் புரியும், எனக்கும் தெரியும்" என்றிட, தர்ஷனோ ஆயாசமாகக் கண்ணசைத்துவிட்டு மினியிடம், "மறுபடியும் கன்கிராட்ஸ். ஹாப்பி பர்த்டே" என்றுவிட்டு விலகிச் சென்றான்.
சுல்ஃபி அவனை முறைக்க, மினி இருவரையும் பார்த்துத் தலையசைத்தாள் அதிருப்தியாக. சுல்ஃபியின் தோளில் தட்டித் திருப்பினாள் அவனை.
"வா சுல்ஃபி, கார் எப்டி இருக்குனு பார்க்கலாம்"
"கார் என்ன, பாஸுக்கு பிடிச்ச கலர்ல இருக்கு? தன் செக்ரெட்டரிக்கு என்ன கலர் பிடிக்கும்னு கூடவா தெரியாது அந்தாளுக்கு?"
"இது முதலீடாம். நான் இன்னும் நல்லா வேலை செய்ய வேணும்றதற்காக."
சுல்ஃபி வறட்டுச் சிரிப்பு சிரித்தான். "அதான பாத்தேன்."
“கலரை மாத்திக்கலாம் வாடா, சும்மா ஃபீல் பண்ணாம!”
இருவரும் காரில் ஏறுவதை ஒரு இறுக்கப் புன்னகையுடன் பார்த்திருந்தான் தர்ஷன்.
***
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro