வெளிச்சப் பூவே - 3
"ஓய் மினி.. காதுல என்ன, ஹெட்ஃபோனா? டேய்லர் ஸ்விப்ட் பாட்டு தானே?"
கேள்வியை முன்னே அனுப்பிய வண்ணம் சுல்ஃபி நடந்து வந்தான் மினியின் மேசைக்கு.
மினி பதிலளிக்குமுன் அவன் முதுகில் பலமாக ஒரு அடி போட்டவாறே, "காலங்காத்தால உனக்கு இங்க என்னடா வேலை?" என அதட்டினார் அன்வர். அப்போதுதான் அவரும் வந்திருந்தார் சண்முகத்தைப் பார்க்க.
முதுகைத் தேய்த்துக்கொள்ள முயன்றவாறே, "ஆ… அஸ்ஸலாமு அலைக்கும் சார்" என்றான் சுல்ஃபி.
"வலைக்கும் ஸலாம். ஆபிஸுக்கு வந்த அடுத்த செகண்ட் இவளைப் பார்க்கலைன்னா ஐயாவுக்கு வேலை ஓடாதோ?"
"ஹிஹி.. இன்னிக்கு எனக்கு வேலை இவகூட தான். மினியும் நானும் ரெஜிஸ்ட்ரார் ஆபிஸ் போறோம்."
"அடடே! என்னம்மா, மூணு வருஷமா அலைஞ்சான், கடைசியா இவனுக்கு விடிவுகாலம் பொறந்துடுச்சா? ரெஜிஸ்ட்ரார் ஆபிஸ் போறீங்க?"
"ஐயோ அங்கிள்... இந்த மெர்ஜருக்காக புது ஹார்ட்வேர் பர்சேஸ் கொஞ்சம் பண்ணியிருந்தோமே.. அதோட டாக்ஸ் டாக்குமெண்ட்ஸ் ஃபைல் பண்ணத் தான்; வேற ஒண்ணும் இல்ல. அவன் உளர்றதை எல்லாம் நம்பாதீங்க."
"ஹூம்.. ரெண்டு வேலையும் ஒண்ணா பார்த்துட்டு வந்துடுவோம் சார், கவலைப்படாதீங்க"
அன்வரிடம் சொல்லிவிட்டு மினியைப் பார்த்துக் கண்ணடிக்க, மினியோ கண்களைச் சுருக்கி ஆள்காட்டி விரலை நீட்டி மிரட்டினாள் அவனை.
அன்வர் சிரித்தார். இருவரையும் பார்த்துத் தலையசைத்துவிட்டு நகரப் போனவர், ஏதோ தோன்றவும் நின்றார்.
"சரி, ரெஜிஸ்ட்ரார் ஆபிசுக்கு இன்னிக்கு தானா போகணும்? அப்ப சாரோட எப்டி போறது?"
"என்னது அங்க்கிள்? ஏன்?"
"என்னம்மா, மறந்தாச்சா? இன்னிக்கு தர்ஷன் நம்பி திரும்பி வராருல்ல?"
"ஐயோ ஆமால்ல!? காலைல கூட ஞாபகமிருந்தது, எப்படி மறந்தேன்? சாரை ஏர்ப்போர்ட்டுக்கு கூட்டிட்டு போறீங்களா ப்ளீஸ்? நான் டாக்குமெண்ட்டை வாங்கிட்டு நேரே பார்ட்டில மீட் பண்ணிக்கறேன்."
"ஸ்யூர் மா, ஜாக்கிரதையா போ. ஸ்லோவாவே ட்ரைவ் பண்ணு!"
"என் வண்டி நாப்பதுக்கு மேல போகாது அங்க்கிள், டோன்ட் வரி!"
அவள் கையசைத்துவிட்டு சுல்ஃபியுடன் வெளியே விரைய, சண்முகத்தை அழைக்கச் சென்றார் அன்வர்.
***
விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் புடைசூழ நின்று காத்திருக்க, அருகிலேயே தனது அப்பாவும் அம்மாவும் நின்றிருந்ததைக் கண்டான் தர்ஷன்.
கண்களில் ஏவியேட்டர் குளிர்கண்ணாடியை அணிந்து அவர்களை நோக்கி வந்தவன், பைகளை உதவியாளர்களிடம் தந்துவிட்டு அப்பாவிடம் விரைந்தான்.
"டாட்!!" என்று ஆதுரமாக அவரை இறுக்கி அணைத்துக்கொண்டு உணர்ச்சிவசப்பட, அவரும் சிரித்தார் பாசத்தோடு.
"வாடா ராஜா!" என அவன் முதுகில் தட்டிக்கொடுத்தார் அவர்.
அதற்குள் பத்திரிகையாளர்கள், "சார், ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க, ஃபோட்டோ எடுத்துக்கறோம்.. ப்ளீஸ் சார்.." என வேண்ட, சரியென இருவரும் கேமராவை நோக்கிப் புன்னகைத்தனர்.
அப்பாவின் வயதையொத்த சில நபர்களும் அவனிடம் கைகுலுக்கி வாழ்த்துச் சொல்ல, தெய்வானை முகத்தை சுழித்தபடி, "போதும் போதும், மொதல்ல வீட்டுக்கு போலாம். அப்பறம் வெச்சிக்கலாம் இந்த வேலை எல்லாம்!" என்றபடி இருவரையும் நகர்த்திக்கொண்டு நடந்தார்.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு தோளைக் குலுக்கிவிட்டு நடந்தனர். கேமராக்கள் விடாமல் படபடத்துப் படம்பிடிக்க, தெய்வானை மட்டும் சிடுசிடுவெனவே வந்தார்.
காரில் அமர்ந்தபோது அம்மாவை முன்சீட்டில் விட்டுவிட்டு தந்தையும் தனையனும் பின்சீட்டில் ஏறிக்கொண்டனர்.
'சிங்கப்பூரிலிருந்து வாரிசு வருகை' , 'இந்தியத் தொழில்நுட்பத் துறையின் புதிய திருப்பம்' என்றெல்லாம் தலையங்கம் வந்திருந்த வணிக நாளிதழ்களைக் காரில் பார்த்தவன் புன்னகைத்தான்.
"இண்டியால நம்ம கம்பெனிக்கு இவ்ளோ அட்டென்ஷனா டாட்!?"
"அட்டென்ஷன் எல்லாமே உன் மேல தான். அவங்களுக்குக் கம்பெனி ரெண்டாம் பட்சம் தான் தர்ஷன்.. they only mind your business. Not ours."
"ஆமா ஆமா.. எழுதினா தான் என்ன தப்பு? என் பையனைப் பத்தி எழுத அவங்க பத்திரிக்கை தான் குடுத்து வெச்சிருக்கணும்! அவன் அழகுக்கும் அந்தஸ்துக்கும், தினம் தினம் ஆயிரம் நியூஸ் வந்தாலும் தகும்," என்றார் தெய்வானை ஜம்பமாக.
சண்முகம் அயர்ச்சியாக ஜன்னல் பக்கம் திரும்பிக்கொள்ள, தர்ஷன் லேசாக சிரித்துவிட்டுக் கைபேசியில் மும்முரமானான். அம்மாவின் குணம் அத்தனை எளிதாக மாறுவதல்ல என்பதை என்றோ ஏற்றுக்கொண்டிருந்தான் அவன்.
வீட்டிற்கு வந்தவுடன் அவனை வரவேற்கக் காத்திருந்த பணியாளர்களுக்கெல்லாம் தர்ஷன் பணிவாக வணக்கம் கூறி குசலம் விசாரிக்க, தெய்வானை எரிச்சலாக, "வேலைக்காரங்களுக்கு எல்லாம் ஏன்டா குழைஞ்சு குழைஞ்சு பதில் சொல்ற? உன்னைப் பார்க்க உன் அக்கா வந்திருக்கா பாரு, மொதல்ல அவகிட்ட பேசு!" என இழுத்துச் சென்றார் அவனை.
தேவிகா அம்மாவின் மறுபிறவி. அதே இறுமாப்பு, அதே படாடோபம்.
மேனிகொள்ளாத நகைகளுடன் வந்தவள், "வா தர்ஷா! அமெரிக்கா சிங்கப்பூர்னு ஜாலியா இருக்க போல!? போனே பண்றது இல்ல? மாமா உன்னை விசாரிச்சாரு. கிரானைட் குவாரில ஏதோ பிரச்சனை. அதான் வர முடியல. அப்பறம், சிங்கப்பூர் கேஸினோல சும்மா பூந்து விளையாடிருக்க போல!? கம்பெனி நியூஸை விட, உன்னை க்ளப்புல எடுத்த போட்டோஸ் தான் அதிகமா இருக்கு பேப்பர்ல!" என்றவாறு அவன் தோளில் இடித்தாள்.
சண்முகம் அதிருப்தியாகப் பார்க்க, அசடு வழியச் சிரித்தபடி உள்ளே நடந்தான் அவன்.
"ரச்சு எங்கே? காலேஜ் போயிருக்காளா?"
"உன் தங்கச்சி என்ன உனக்கு சளைச்சவளா? அவளும் க்ளப், தீம் பார்க்னு எங்கயாச்சும் ஊர் சுத்திட்டு தான் இருப்பா. பொறுப்பா காலேஜ் போறவளா இருந்தா என்னத்துக்கு இருபத்தெட்டு அரியர் வெச்சிருக்கப் போறா.."
அவன் தோளில் கைபோட்டவண்ணம் அவள் வர, தெய்வானையோ அவன் பைகளை ஆராயத் தொடங்கியிருந்தார்.
"சரி, சிங்கப்பூர்ல இருந்து எனக்கு என்னடா வாங்கிட்டு வந்த? நேத்து கூட மெசேஜ் அனுப்புனனே.. டிசைனர் ஹேண்ட்பேக் வாங்கிட்டு வரச் சொல்லி?"
"மாம், நான் வந்தது அப்பாவை பாக்க. பதட்டமா வரும்போது உங்களுக்கு எல்லாம் எதுவும் வாங்கிட்டு வரலை, வாங்கவும் தோணலை. ஐம் ஸாரி."
"ப்ச்... டேய், அந்த டைமண்ட் பெண்டன்ட் கேட்டேனே.. அதயாச்சும் மறக்காம வாங்கிட்டு வந்தியா?"
அவன் பார்வையே சொல்லியது பதிலை.
"தர்ஷன்.. அம்மா மேல பாசமே இல்லியா உனக்கு??"
என்ன சொல்வதென்றே தெரியாமல் விழித்தான் தர்ஷன்.
ஆபத்துதவிக்காக அவன் அப்பாவைத் தவிப்போடு பார்க்க, அவரும் புரிந்துகொண்டதாக, "ஆபிஸ்ல எனக்கொரு ரிடையர்மெண்ட் பார்ட்டி, அப்றம் உனக்கொரு வெல்கம் பார்ட்டி அரேஞ்ச் பண்ணியிருக்காங்க தர்ஷன். நீ ஃப்ரெஷ் ஆகிட்டு வா, நாம கிளம்பலாம்" என எழுந்தார்.
"தேங்க் காட்– ஐ மீன்– தேங்க்ஸ் டாட்!"
விட்டால் போதுமென எழுந்து அவன் செல்ல, தேவிகா அதிருப்தியாக சண்முகத்தைப் பார்க்க, அவரும் எழுந்து நழுவினார் தன்னறைக்கு.
***
காரில் அலுவலகத்திற்குச் சென்றபோது, ஜன்னலைத் திறவாமல் சென்னை மாநகரைப் பார்த்தான் தர்ஷன்.
"வாவ்.. சென்னை ரொம்ப மாறிடுச்சு டாட்.."
"ம்ம், நீ அஞ்சு வருஷம் கழிச்சுப் பார்க்கறல்ல? அதான் அப்டி தெரியுது. தினமும் பார்க்குற எங்களுக்கு பெரிசா வித்தியாசமே தெரியுறதில்லை."
"எவ்ளோ மாறினாலும் இந்த தூசியும் குப்பையும் மாறல. சிங்கப்பூர்ல எந்த பொது இடத்துலயும் குப்பையை பார்க்கவே முடியாது."
ஏதோ போல் அவன் சொல்ல, சண்முகம் ஆராயும் பார்வையோடு பார்த்தார் அவனை.
"இனி சிங்கப்பூர் இல்லை; சிங்காரச் சென்னை தான் உனக்கு. மனசை மாத்திட்டு நீயும் மாறிக்கோ தர்ஷன்."
தலையசைத்துவிட்டு அமைதியானான் தர்ஷன்.
நான்கு மணியளவில் JK குழுமத்தின் அலுவலகக் கட்டிடத்தின் மேல்மாடியில் இருந்த ஹாலுக்கு வந்தபோது, வாசலில் தோரணங்கள் கட்டப்பட்டு, ஒரு வாழ்த்துப் பலகையும் வைக்கப்பட்டிருந்தது.
"A legend ends. But another one begins."
பலகையைப் படித்த தர்ஷன் ஒருகணம் மெச்சுதலாகப் புருவத்தை உயர்த்தினான்.
"அழகான வார்த்தைகள். நல்லா இருக்குல்ல டாடி? யாரோட ஐடியா?"
அவர் வாய்நிறையப் புன்னகைத்தார்.
"லிட்ரலா முதல் ஸ்டெப்லயே உன்னை இம்ப்ரெஸ் பண்ணிட்டா பாரு! பொறு தர்ஷன், பார்ட்டியை ஆர்க்கனைஸ் பண்ணின ஆளை உனக்கு ஸ்பெஷலா அறிமுகப்படுத்தறேன் நான்."
பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவ்விழா, சண்முகம் வந்ததும் தாமதிக்காமல் தொடங்கியது. மேடையில் அவரை அமர்த்தி வாழ்த்துகளும் புகழாரங்களும் பொழியப்பட்டன. பொன்னாடைகளும் மாலை மணிகளும் கூட வழங்கப்பட்டன. தர்ஷனையும் அழைத்து இரண்டொரு வார்த்தைகள் பேசுமாறு அன்வர் கேட்டுக்கொள்ள, அவனும் மரியாதை நிமித்தமாக மேடையேறினான்.
"எல்லாருக்கும வணக்கம். பொதுவா எனக்கு அதிகமா பேசற பழக்கம் கிடையாது. சாதிச்ச பிறகு நம்ம சாதனைகள் பேசணும்னு நினைக்கறவன் நான். என்னை நம்பி இந்த கம்பெனிக்கு என்னை CEO ஆக்கின உங்களுக்கு, என் நன்றியை நிறுவனத்தோட வெற்றியில காட்டுவேன். தேங்க்யூ."
அவன் பேச்சிற்குக் கைதட்டல்கள் பறக்க, சண்முகமும் நிம்மதியான புன்முறுவலுடன் அவனை அங்கீகரித்தார். விழாவின் அடுத்த நிகழ்விற்கு அறிவிப்பு வந்தது.
செந்நிற ரெட் வெல்வெட் கேக்கை வெட்டி ஒரு துண்டை எடுத்து தர்ஷனுக்கு ஊட்ட, கூட்டத்தினர் கைதட்டி ஆர்ப்பரிக்க, தலைக்கு மேல் ஒலிப்பெருக்கிகளில் கொண்டாட்ட இசை தவழ, அனைவரின் முகத்திலும் அனிச்சையாகவே ஒரு புன்சிரிப்பு குடியேறியிருந்தது.
சண்முகத்திடம் கைகுலுக்க வரிசையாக பிரமுகர்கள் வர, அவரும் ஒவ்வொருவராக அவனுக்கு அறிமுகம் செய்துகொண்டே வந்தார். கேட்ட சில நொடிகளில் பெயர்கள் மறந்துவிட்டாலும் வெளிக்காட்டாமல் தலையசைத்தான் அவனும்.
'இவரைத் தெரியலையா, அவரைத் தெரியலையா, என்னைத் தெரியலையா' என ஆளாளுக்கு வந்து இம்சிக்க, விளக்கெண்ணெய்ச் சிரிப்போடு தர்ஷன் சற்றே விலகி வந்து ஒரு தூணருகே நின்றான். அங்குமிங்கும் வேடிக்கை பார்த்தவாறு இளைப்பாறி மறைவாக அவன் நிற்க, அவனுக்கெனத் தேடி வந்தது சோதனை.
ஒரு தம்பதியர் அவனைப் பார்த்துக் கையசைத்துவிட்டு உற்சாகத்தோடு அவனை நோக்கி நடந்து வர, அவர்கள் யாரெனத் தெரியாமல் இவன் சற்றே பதறத் தொடங்கினான்.
அப்போது, "மிஸ்டர் அண்ட் மிஸஸ் கல்யாணராமன். உங்க அப்பாவோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். சின்ன வயசுல உங்களைத் தூக்கி தோள்ல போட்டு தூங்க வைத்ததா வந்து சொல்லப் போறாங்க. ஞாபகமிருக்குன்னு பொய் சொன்னீங்கனா சந்தோஷப்படுவாங்க," என அவனது தோளருகில் ஒரு குரல் கேட்டது.
அக்குரலுக்குச் சொந்தக்காரியாய் இளம்பெண் ஒருத்தி முழுக்கை சட்டையும் முழங்கால் வரை வரும் கருநீல ஸ்கர்ட்டும் அணிந்து நிற்க, அவள் கண்ணில் தெரிந்த நம்பகத்தன்மை அவனை அரை கணத்தில் வசீகரிக்க, அவளிடம் ஏதும் பேசுமுன் அவர்கள் நெருங்கி வந்துவிட்டனர்.
அவள் கூறியவாறே நடந்தன நிகழ்வுகள்.
"என்ன தர்ஷன், எங்களை ஞாபகமிருக்கா? சின்ன வயசுல என் தோள்ல போட்டு உன்னைத் தூங்க வெச்சிருக்கேன்.." எனப் பீடிகை போட்டார் அம்மனிதர்.
ஏற்கனவே தகவலறிந்து தயாரானதால், "அஃப்கோர்ஸ்.. கல்யாணராமன் அங்க்கிள்! எப்படி இருக்கீங்க? ஆன்ட்டி, நீங்க எப்டி இருக்கீங்க?" என உற்சாகத்தைக் குரலில் புகுத்திக் கொட்டினான் அவனும். எதிரில் நின்றோர் முகம் பூரிப்படைய, சில நிமிடங்கள் பேசிவிட்டு அவர்கள் சென்றதும் நன்றியாகத் திரும்பி அப்பெண்ணைப் பார்த்தான் தர்ஷன்.
எங்கேயோ பார்த்தது போன்ற முகம். எங்கேயென யோசிக்கத் தொடங்குமுன், "ஹலோ தர்ஷன், என் பேர் பத்மினி. நான் உங்க அப்பா கிட்ட செக்ரெட்டரியா வேலை பாக்கறேன்" எனக் கை நீட்டினாள் அவளாகவே.
கையைப் பிடித்துக் குலுக்கினான் அவனும். "இதுக்கு முன்னால மீட் பண்ணியிருக்கோமா?"
"ஹ்ம்ம், ஆனா உங்களுக்கு ஞாபகமிருக்காது."
அவள் குரலில் இழையோடிய ஒரு வகை துள்ளலை அவன் வியந்து கவனித்தான்.
அவன் மேலும் கேட்குமுன் அவளொரு மந்திரப் புன்னகையை அவனுக்குத் தந்துவிட்டுக் கூட்டத்தினுள் கரைய, அவன் அதிசயம் மாறாமல் நின்றான்.
***
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro