வெளிச்சப் பூவே - 10
அன்று அலுவலகத்தில் ஏதோ சலசலப்புக் கேட்கவும் சந்தேகமாக மினி நிமிர, அபர்ணா நடந்து வருவதைக் கண்டாள் தர்ஷனின் அறையை நோக்கி. அவளைத் தடுத்தால் கோபப்படுவாள் என்று தெரியுமாகையால் தர்ஷனுக்கு இண்டர்காமில் அழைத்து விபரம் சொன்னாள் அவள். வழக்கம் போலவே அவர்களைக் கண்டுகொள்ளாமல் நேரே தர்ஷனின் அறைக்குச் சென்றாள் அபர்ணா.
அபர்ணா அறைக்குள் சென்ற ஐந்தாவது நிமிடம் இருவருமாய் வெளியே வந்தனர்.
“நான் பெண்ட்ஹவுஸ்ல இருக்கேன், என் மீட்டிங்ஸை கேன்சல் பண்ணிடுங்க. நான் வந்ததும் அதை கவனிச்சுக்கறேன்.”
“பாஸ், ஒரு நிமிஷம்.. க்ராபிக் டிசைன் ப்ரொபோசலை அனுப்ப சொல்லியிருந்தீங்களே? மேனேஜர் பதிலுக்காக வெய்ட் பண்றார்.”
தர்ஷனைக் காட்டிலும் அதிருப்தியோடு அபர்ணா முறைத்தாள். தர்ஷன் யோசித்துவிட்டு, “மூணாவது செக்ஷன் நல்லா இருந்தது. அதையே ரெடி பண்ணி ப்ரிவ்யூ வைக்க சொல்லிடு” என நகர எத்தனித்தான்.
ஸ்பூர்த்தி வந்து, “டெவலப்பர் டீம்க்கு தர வேண்டிய கேட்டலாக். இதுல ஒரு சைன்” என நீட்டினாள். தர்ஷன் கையெழுத்துப் போட்டுத் தரும் இரண்டு வினாடிகளுக்குள் இருபது முறை எரிச்சலாக உச்சுக்கொட்டிவிட்டாள் அபர்ணா.
ஒருவழியாக அவர்கள் மேலே கிளம்ப, மினி அலுப்பாகத் தன் கணினி முன் அமர்ந்து அவனது சந்திப்புகளை மாற்றியமைக்கத் தொடங்கினாள். சுல்ஃபிக்கு அழைத்து, “பாஸ் இன்னிக்கு டிபார்ட்மெண்ட் விசிட் வரமாட்டார். அபர்ணா வந்திருக்கா, அவளோட இருக்கார்,” எனத் தகவல் தெரிவிக்க, அவனது பாணியில் ஒரு ஏளனப் பதிலைத் தந்துவிட்டு அழைப்பை வைத்தான் அவன்.
கிருத்திக்கும் ஸ்பூர்த்தியும் கோப முகங்களுடனே அங்குமிங்கும் அலைந்துகொண்டிருக்க, இருபது நிமிடங்களில் தடதடவென ஏதோ சத்தம் கேட்டு நிமிர்ந்தனர் அனைவரும்.
சுல்ஃபி அவசரமாகப் படியேறி வந்தான்.
“தர்ஷனை பாக்கணும்.”
“ப்ச்.. அவர் தான் அபர்ணாவோட இருக்கார்னு சொன்னனே!?”
“இந்த கேட்டலாக் ஃபைலை பாரு, இதை எப்படி அவர் அப்ரூவ் பண்ணார்னு தெரியலை. நிச்சயமா அபர்ணாவை பார்த்த அவசரத்துல கையெழுத்துப் போட்டுருப்பான். மறுபடி கரெக்டா பார்க்கச் சொல்லு.”
“சரி, வந்ததும் சொல்றேன்.”
“அந்த வேலையே ஆகாது. என் கம்ப்யூட்டர்ல க்ளையண்ட் காத்திருக்கான் அரேபியாவுல. பத்து நிமிஷத்துல வரேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். தர்ஷனைக் கூப்பிடு!”
"என்ன சுல்ஃபி…" என சலித்துக்கொண்டாள் அவள்.
"ரொம்ப அவசரம், புரிஞ்சுக்கோ மினி!"
"அச்சோ.. இன்னொரு தடவை டிஸ்டர்ப் பண்ணினா அந்தப் பொண்ணு ஓநாய் மாதிரி பாய்ஞ்சி என்னைக் கடிச்சுக் குதறிடுவா! கண்டிப்பா நான் போயே ஆகணுமா? ப்ளீஸ் சுல்ஃபி.."
"உன் உயிர் முக்கியமா, இல்லை ப்ராடக்ட் கேட்டலாக் முக்கியமா? நீ பார்க்காத ஓநாய்களா மினி? போ தைரியமா!"
சோர்வாக அந்த ஃபைலை வாங்கிக்கொண்டு தர்ஷனைக் காண அவனது அறையை நோக்கி நடந்தாள் அவள்.
எதிர்பார்த்ததைப் போலவே கதவு திறந்ததுமே அபர்ணாவின் கோப முகத்தைத் தான் கண்டாள் மினி. தயக்கமாகச் சிரித்தபடி, "தொந்தரவுக்கு மறுபடி ஸாரி, பாஸ் இந்த ஃபைலை பார்த்து அப்ரூவ் பண்ணனும்.. ரெண்டு நிமிஷ வேலை தான்.. அதுக்கப்பறம் திரும்ப வரவே மாட்டேன்" என்றவாறு தரவுகளை நீட்டினாள்.
அவன் வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு, “ஹ்ம்.. கொஞ்சம் சேஞ்சஸ் இருக்கு, இரு வரேன்,” என்றவாறு தனது பணிமனைக்கு விரைய, அபர்ணாவும் மினியும் மட்டும் இருந்தனர் அறையில்.
அசவுகரியமாக இருக்கக் கூடாதென லேசாக மினி புன்னகைக்க, அபர்ணாவோ மறைக்கத் தோன்றாத கடுகடுப்புடன் அவளை ஏற இறங்கப் பார்த்தாள்.
"நீயென்ன, அவனுக்கு எடுபிடியா? எப்பவும் நாய் மாதிரி அவன் பின்னால சுத்திட்டே இருப்பியா?"
கொஞ்சம் கூட சலனமின்றி புன்னகை மாறாத முகத்துடன் நின்றாள் பத்மினி.
"ஒரு செக்ரட்டரியா என்னோட வேலையை தான் நான் செய்றேன். என் பாஸுக்கு என்ன தேவையோ அதை நான் நிறைவேத்தறேன். அது உங்களோட ரிலேஷன்ஷிப்ல இடைஞ்சலா வந்தா, பிரச்சனை என்கிட்ட இல்ல, உங்களோட low self esteemல தான் இருக்கு."
அவள் பேசப் பேச அபர்ணாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
"How dare you? இப்பவே தர்ஷூ கிட்ட சொல்லி உன் சீட்டை கிழிக்கறேன் பாரு!"
பத்மினி ஓரடி நெருங்கி அவளிடம் சென்றாள்.
"இதை என்கிட்ட சொன்ன ஒம்பதாவது பொண்ணு நீ. சொன்ன யாருமே மறுநாள் அவர்கூட இல்லை, தெரியுமா?"
"எ– என்ன, மிரட்டுறியா?"
"சேச்சே.. உண்மையை சொன்னேன், அவ்ளோ தான். வரேன்."
***
அபர்ணா உள்ளுக்குள் எரிமலையாகக் கொதித்துக் கொண்டிருந்தாள் தர்ஷன் வந்தபோது.
"வேலை முடிஞ்சுதா?"
அவளது தொனியை கவனிக்காதவன் அலட்சியமாக, "ஹான்.. இன்னும் கொஞ்சம் இருக்கு அப்பூ.." என்றபடி தனக்கொரு கோப்பையில் க்ரீன் டீ எடுத்துக்கொண்டான்.
அபர்ணாவின்புறம் திரும்பிய பின்னர் தான் அவளது முகம் சுணங்கியிருப்பதைக் கண்டான் தர்ஷன்.
"What happened?"
"ம்ப்ச். ஒண்ணுமில்ல."
தர்ஷன் சற்றே எரிச்சலானான். "சொல்லு.. என்ன?"
"எப்பப்பாரு அவ ஒருத்தி உன் பின்னாலவே அலையுறா.. நம்ம ரெண்டு பேரையும் பத்து நிமிஷம் கூட தனியா விட மாட்டேங்கறா.. அவகிட்ட சொல்லி வை தர்ஷூ.. நான் வந்த பின்னால வாலை சுருட்டிட்டு இருக்கச் சொல்லி!"
அவன் தோளைக் குலுக்கினான் அலட்சியமாக.
"நீ என்ன பேசறன்னே எனக்குப் புரியல. மினி என் செக்ரெட்டரி. பாவம் அவளோட வேலைய அவ செய்யறா.. நீ ஏன் பேபி அவளைப் பார்த்து ஜெலஸ் ஆகற?" எனச் சிரிக்க, அவளோ இன்னும் ஆத்திரமானாள்.
"செக்ரெட்டரி மாதிரியா நடந்துக்கறா? ஏதோ ஓனர் மாதிரில்ல பேசறா உங்கிட்ட? பேபி.. அவ இல்லைனா ஆயிரம் செக்ரெட்டரிங்க கிடைப்பாங்க. அவ வேணாம் உனக்கு."
"Don't be ridiculous. மினி மாதிரி ஒரு செக்ரெட்டரி உலகத்துல எந்த கம்பெனியிலயும் இருக்க மாட்டாங்க. அவளோட நீ பிரச்சனை பண்ண வேணாம். அதைப் பத்தி மறந்துடு. ஓகே?"
சோபாவில் அவளை நெருங்கி அமர்ந்தபோது அவள் எழுந்து விலகிச் செல்ல, அவனுக்கு சலிப்பு வந்தது.
"என்ன அப்பூ?"
"தர்ஷூ.. எனக்கு முடிவா தெரிஞ்சாகணும்! நானா, இல்ல அவளா?"
"முடிவு உன் கைல தான் இருக்கு பேபி.. காலைல ஏழு மணிக்கு ஆபிசுக்கு வந்து என் ஷெட்யூலை ரெடி பண்ணி, ஏழு முப்பதுக்கு நான் வரும்போது சாப்பிட லைட்டா டோஸ்ட் பண்ண ரெண்டு ப்ரெட் ஸ்லைஸும் ஒரு க்ரீன் டீயும் கையைத் துடைக்க நாப்கினும் ரெடியா வெச்சிட்டு ஏழு ஐம்பதுக்கு க்ளையண்ட்ஸ் எல்லாரையும் வரிசையா கால் பண்ணி ஸ்டாட்ஸ் விசாரிச்சிட்டு அதையும் எனக்கு அப்டேட் பண்ணிட்டு அடுத்த பத்து மணி நேரம் என் ஆர்டர்ஸுக்காக வெயிட் பண்ணிட்டு, இடையில என்னென்ன வேலை வந்தாலும் என்னை மறந்துடாம, மூணு மணிநேரத்துக்கு ஒருதரம் க்ரீன் டீயும் குடுத்துட்டு மதியம் ஒவ்வொரு நாளும் எனக்குப் பிடிச்ச மாதிரி லஞ்ச் ஏற்பாடு பண்ணி அதுக்காக அலைஞ்சு ரிசர்வேஷனும் பண்ணிட்டு சாயங்காலம் ஆபிஸ் பூட்டுற வரைக்கும் இருந்து பாத்துக்கிட்டு மறுநாள் தேவையான ஃபைலை எனக்காக எடுத்து வெச்சிட்டு ராத்திரி நான் வெளியே போற ரோட் ரூட்ல இருந்து சாப்பிடற டின்னர் மெனு வரைக்கும் தெரிஞ்சு வச்சிக்கிட்டு, நடுராத்திரியில எழுப்பி வேலை சொன்னாலும் முகம் சுழிக்காம செய்யற அளவுக்கு எனக்கு விசுவாசமா இருக்கணும். ம்ம், மறந்துட்டேன்.. கூடவே பெங்களூர் ஐ.ஐ.எம்.ல இருந்து ஒரு எம்.பி.ஏ டிகிரியும் இருக்கணும். இதெல்லாம் நீ செஞ்சா, எனக்கெதுக்கு பேபி இன்னொருத்தி?"
அபர்ணா முகத்தில் ஈயாடவில்லை.
தர்ஷன் அவளை தீர்க்கமாகப் பார்த்தான்.
"ஒரு நாள்ல பன்னெண்டு மணி நேரம் என் கூட இருக்கறா அவ. உன்னை ரெண்டு மணி நேரம் பாக்கறேன் நான். நீயே சொல்லு, நான் என்ன பண்ணணும்?"
"போயி அவளையே கல்யாணம் பண்ணிக்கடா! யூ ஸ்கவுண்ட்ரல்! இட்ஸ் ஓவர். இனி என்னைத் தேடிட்டு எப்பவும் வராதடா நீ! இடியட்! ப்ளடி ஃபூல்! நான்சென்ஸ்! ஆஸோல்!"
ஆத்திரமாக கத்திவிட்டு அவள் வெளியேற, தர்ஷனின் முகத்திலும் கோப ரேகைகள் படர, மேசைமீது பலமாகக் கைகளை மோதியவன் நெடிய மூச்சுக்கள் விட்டுத் தன்னை சமன்படுத்திக்கொள்ள முயன்றான்.
***
"அபர்ணாவோடவும் புட்டுக்கிட்டதாமே??"
"நெட்ல பாத்தியா?"
"ஆமா.. நல்லா விலாவாரியா எழுதியிருக்கான். எங்கெல்லாம் டின்னர் போனாங்க, எத்தனை செல்பி எடுத்தாங்க, எப்பப்போ கேமராவுக்கு கட்டிப்புடிச்சிக்கிட்டு போட்டோக்கு போஸ் குடுத்தாங்க.. எல்லாமே."
ஸ்பூர்த்தியும் கிருத்திக்கும் கதைத்துக்கொண்டே நடந்து வர, உள்ளே பரபரப்பாக நடந்துகொண்டிருந்த பத்மினி மீது மோதும்படி வந்து கடைசி வினாடியில் சுதாரித்து நின்றனர்.
"மினி!? ஏன் இப்டி டென்ஷனா இருக்க?"
ஒன்றுமில்லையெனத் தலையசைத்துவிட்டு வெளியே விரைந்தாள் அவள்.
சுல்ஃபியை அவனது தளத்தில் சென்று சந்தித்தவள், “ஒரு ஹெல்ப்” என்றாள் அவசரமாய்.
“வந்ததும் வராததுமா உன் பாஸை பத்தி பேசிக் கடுப்படிக்காதே! எனக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்குடி. அவன் ஊர்மேய்ஞ்சுட்டு வர்றதை எல்லாம் நான் உட்கார்ந்து சரி பண்ணிட்டு இருக்க முடியாது. நீ வேணா–”
மினியின் முகமாற்றம் கண்டு பேச்சை நிறுத்தினான் அவன்.
அவளோ கண்கள் கலங்க நின்றாள்.
“அபர்ணா போனதுக்கு நான் தான் காரணம்னு நினைக்கறேன்.”
“ஒழிஞ்சது தொல்லை! நல்ல விஷயம் பண்ணியிருக்க.”
“ப்ச், சுல்ஃபி நான் ஏதோ விளையாட்டுத்தனமா அவளை மிரட்டினேன்.. அதுல தான் சண்டை வந்திருக்கணும். நான் பேசின அரைமணி நேரத்துல ப்ரேக்கப் பண்ணியிருக்கா. என்னைப் பத்தி ஏதும்..”
இல்லையெனத் தலையசைத்தான் சுல்ஃபி.
“கருத்து வேறுபாடு காரணமாக பிரிகிறோம்னு இண்ஸ்டாகிராம்ல போஸ்ட் போட்டிருக்கா. அவங்க டேட் பண்ணாங்கன்னே தெரியலைன்னு தான் பாதிக்கு மேல கமெண்ட் பண்ணியிருக்காங்க.”
நிம்மதிப் பெருமூச்சு விட்டவள் சுல்ஃபியின் அருகிலிருந்த நாற்காலியில் சரிந்தாள்.
“தர்ஷனோட வாழ்க்கைல நான் தேவையில்லாம நுழையறேனா? என்னால தான் இப்படியெல்லாம் நடக்குதா?”
“ப்ச், லூசு மாதிரி பேசாதடி! உனக்கு அந்த சபீனா ஞாபகமிருக்கா? பாம்பே மாடல்? உன் முன்னாடி தானே தர்ஷன் அவளை ப்ரேக்கப் பண்ணான்?”
“ஹ்ம், கேட்காம தர்ஷனோட லேப்ல நுழைஞ்சிட்டா. அவருக்கு டென்ஷன் ஆகிடுச்சு.”
“மினியைத் தவிர யாருக்கும் லேப்ல நுழைய ரைட்ஸ் இல்லைனு கத்துனானே.. அப்போ அவளும் திருப்பித் திட்டினாளே, நீயும் உன் செக்ரெட்டரியும் நாசமா போங்கன்னு”
பத்மினி முறைக்க, அவளை அமர்த்திவிட்டு சுல்பியே தொடர்ந்தான்.
“நான் என்ன சொல்ல வரேன்னா, தர்ஷனுக்கு நீ முக்கியம் மினி. ஒரு வலது கை மாதிரி, ஒரு ஸர்ச் என்ஜின் மாதிரி, மையா எழுதற ஒரு பேனா மாதிரி. அவனுடைய தற்காலிக பெண் நண்பர்களை விட உன் தேவை அவனுக்கு அதிகம். ஸோ, அது உன் தப்பு இல்ல”
சுல்ஃபி வேப்பங்காயைக் கடித்ததுபோல முகத்தை சுழித்தவாறே அவனுக்குப் பிடிக்காத, மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத அந்த உண்மையை அவளுக்கு விளக்கினான்.
மினியும் தலையாட்டினாள், கொஞ்சம் தெளிவுடன்.
***
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro