நிலா - 3
சென்னை மாநகரின் முக்கியமான நட்சத்திர ஹோட்டல் அது. இரவு ஆறு மணிக்கே மக்களின் நடமாட்டம் அதிகம் இருக்க அதனுள் நுழையும் மக்களையும் அவர்கள் வந்திறங்கும் வாகனங்களையும் பார்த்த இலக்கியாவிற்கு உள்ளே நுழையவே தயக்கமாக இருந்தது.
அவளோடு அவளுடன் வேலை பார்க்கும் எவருக்கும் அழைப்பு வராமல் இருக்க தனியாக வரவே பிடிக்கவில்லை, அதுவும் தன்னுடைய மனதினுள் ஒன்றாய் கலந்திருக்கும் அர்ஜுனின் நிச்சய நிகழ்விற்கு சந்தோசமாக வந்து நிற்க முடியவில்லை அவளால்.
அதே சமயம் மருத்துவமனையில் எவரையும் அழைக்காமல், தன்னை மட்டும் அவன் அழைத்திருக்க அர்ஜுன் அழைப்பை உதாசீனப்படுத்தவும் முடியவில்லை இலக்கியாவால்.
மூளையின் உந்துதலில் கால்கள் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலை நோக்கி நடக்க, உள்ளே நுழைந்ததுமே இலக்கியாவின் கண்கள் அதன் ப்ரமாண்டத்தில் விரிந்தது. ஆறு மாடி கட்டிடத்தின் ஆறு தளங்களும் கீழிருந்து பார்த்தாலே தெளிவாக தெரியும்.
அதிலும் அதன் அழகு அந்த மஞ்சள் நிற விளக்கின் ஒளியில் மின்ன, அதன் அழகை, பிரமாண்டத்தை விவரிக்க வார்த்தைகளற்று போனது. உயர்தர மேஜைகள், உலக தரம் கொண்ட டைல்ஸ் கர்க்களை பார்த்தவள் கால்கள் அதன் மேல் நடக்க கவனமாய் இருந்தது.
"வேர் கேன் ஐ டிரெக்ட் யூ மேம்" அவள் முன்பு வந்து கண்ணியமாக கேட்டான் கோட் சூட் அணிந்த ஒருவன்.
அவனுக்கு பதில் கூற முடியாமல் தான் கொண்டு வந்த அர்ஜுனின் நிச்சய பத்திரிகையை நீட்ட, அதை பார்த்தவன், லிப்ட் பக்கம் காட்டி, "அந்த லிப்ட்ல போனா தேர்ட் ப்லோர் மேம்" அவன் குறிப்பிட்ட திசையை நோக்கி அவள் நடக்க அவளோடு இன்னும் சிலரும் மின்தூக்கியினுள் நுழைந்தனர்.
"நான் அவங்க பிஸ்னஸ் பார்ட்னர் பொண்ணோட கல்யாணாம் நடக்கும்னு தானே நினைச்சேன்"
தன்னோடு வந்து நின்ற பெண்ணிடம் ஒரு பெண் பேச, "அந்த பேச்சு ரொம்ப வருஷம் முன்னாடியே அடிபட்டிச்சு பட் ஹி இஸ் அட்மென்ட். டாக்டர் பொண்ண தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு பிடிவாதம் பண்ணி சாதிச்சிட்டானே" என்றார் சிரிப்போடு.
"ம்ம் என்ன கேட்டா இந்த பொண்ணே அவங்க லெவல்க்கு ரொம்பவே கம்மி தான்"
"சொந்தமா பார்மா கம்பெனி வச்சிருக்காங்க, கூட்டி கழிச்சு பாத்தா ராமகிருஷ்ணன் வாரிசு லாபம் பாக்காம இந்த கல்யாணத்த நடத்த மாட்டான்" அவர்கள் பேசுவதை கேட்ட இலக்கியாவிற்கு தான் அந்நியமாய் தோன்றியது.
அவர்கள் பேச்சில் தான் தன்னுடைய ஆசை எவ்வளவு பொருத்தமற்றது என புரிந்தது. அவன் எங்கே, தான் எங்கே? அவன் தகுதி எங்கே, தன்னுடைய தகுதி அவன் கால்களுக்கருகில் கூட வராதே...
எந்த எண்ணத்தோடு அவன் மேல் ஆசை வைத்தது என் மனது, சூரியனை அள்ளி கைகளுக்குள் வைத்தால் அதனால் காயம் தனக்கு தான் ஏற்பட்டுள்ளது என்பதை இப்பொழுது தான் புரிந்துகொண்டாள்.
மின்தூக்கி அலுங்காமல் குலுங்காமல் மூன்றாவது தளத்தில் வந்து நிற்க தனக்கு முன்னே சென்ற பெண்களை தொடர்ந்து சென்றாள் இலக்கியா. சற்று தொலைவில் இருந்த பார்ட்டி ஹாலை பார்த்த பொழுதே அங்கு நின்ற பெண்களை பார்த்து இலக்கியாவின் கால்கள் சில நொடிகள் தடுமாறியது.
உடை, நடை, அணிகலன் என அவர்கள் அருகில் செல்ல கூட பயமாக இருந்தது, தன்னை ஒரு ஏளன பார்வை எவரேனும் பார்த்துவிட்டால் என்ன செய்வேன் நான் என மனம் பதைபதைத்தது பெண்ணுக்கு.
தன்னிடம் இருப்பதில் விலையுயர்ந்த ஹேசல் வுட் நிற பட்டுடுத்தி எளிமையான ஒரு மெல்லிய வெள்ளி சங்கிலி மட்டுமே அணிந்து, காதில் சிறிய தங்க ஜிமிக்கி, இடையை தாண்டி வளர்ந்திருந்த அவள் கூந்தலை மெல்லிதாக பின்னலிட்டு அழகாய் வந்தாள்.
எந்த விதமான கவனத்தையும் ஈர்க்காமல் எளிமையாக இருந்தது அவள் தோற்றம், ஆனால் அங்கிருந்த மக்கள் யாவரும் டைமண்ட், பல ஆயிரம் கொட்டி வாங்கிய புடவை, பளபளக்கும் மேனி என அவர்கள் தன்னம்பிக்கை அவர்கள் முகத்திலே தெரிந்தது.
வர கூடாத இடத்திற்கு வந்தது போல் வாசலை தாண்டாமல் பதட்டத்தோடு இலக்கியா நிற்க, "எக்ஸ்க்யூஸ் மீ" என பின்னால் கேட்ட குரலில் தானாக அவள் கால்கள் முன்னேறி உள்ளே சென்று வழிவிட, இதற்கும் மேல் பின்வாங்க முடியாதென உள்ளே நடந்தவள் அந்த நீண்ட ஹாலின் பிரமாண்டத்தை கூட கவனிக்க தவறி ஒரு ஓரத்தை தேடி அமர்ந்துகொண்டாள்.
மனதில் பெரிய பாரம் ஏறி குடிகொண்டது. இங்கு வந்திருக்கவே கூடாதென்று அந்த நொடி உணர்ந்தாள்.
அவன் வீட்டின் ஆட்கள் அனைவரும் மிகவும் பிஸியாக அங்கும் இங்கும் வந்தவர்களை வரவேற்பதில் மும்முரமாய் இருக்க இவளை அங்கு யாருக்கும் தெரியாமல் போனது.
அமைதியாக அமர்ந்திருந்தவள் மனம் உலைக்களமாய் கொதித்துக்கொண்டிருந்தது, அதை இன்னும் வேதனைப்படுத்த சிரித்த முகத்தோடு மேடை ஏறினான் அர்ஜுன்.
அடர்ந்த நீல நிற சூட் அணைந்து அத்தனை வசீகரிக்கும் சிரிப்போடு அவன் வந்து நிற்க, அவனுடைய உறவு முறை ஒருவர் வந்த மாலையிட, கைகள் எடுத்து வணங்கி சந்தோசமாக ஏற்றுக்கொண்டான்.
அடுத்த சில நிமிடங்களில் இளமஞ்சள் நிற பட்டுடுத்தி மொத்தமும் தங்க ஆபரணம் அணிந்து அர்ஜுனுக்கு சலிக்காத அழகோடு அவன் அருகில் வந்து நின்ற அஞ்சுஸ்ரீ முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்த்து உடனே கண்கள் கலங்கியது இலக்கியாவிற்கு.
தன்னை விட்டு சற்று தள்ளி நின்ற அஞ்சுஸ்ரீயை பார்த்த அர்ஜுன் மெதுவாக அவளை ஒட்டி சென்று நிற்க, உடனே தன்னுடைய இமைகளை தாழ்த்தி கண்ணீரை உள் இழுத்துக்கொண்டாள்.
அவன் வேறு பெண்ணுடன் சந்தோசமாக நிற்பான் என்று மனதை திடப்படுத்தி தான் வந்தாள், அதே திடமான மனம் மனதில் சித்தரித்ததை வைத்திருந்ததை நேரில் இரு விழி கொண்டு பார்த்த பொழுது ஊசியை வைத்து குத்தியது போல் வலித்தது.
திடீரென இளைஞர்களின் ஆரவாரமும், கை தட்டலும் கேட்டு தலையை உயர்த்த, மேடையில் இருவரும் மோதிரம் மாற்றும் நிகழ்வு நடந்து கொண்டிருந்தது.
அவள் கையில் மோதிரம் மாட்டி அவன் கையை எடுக்க, சுற்றி நின்ற அவன் வீட்டின் இளசுகள் அவனை ஏதோ நச்சரித்தனர். தூரத்தில் அமர்ந்திருந்த இலக்கியாவிற்கு அவர்கள் என்ன பேசினார்கள் என கேட்காமல் போக விழி அகலாமல் கூச்சத்தோடு நெற்றியை தேய்த்தவனின் சிரித்த முகத்திலிருந்து பார்வையை மாற்ற முடியாமல் இருந்தாள் பெண்.
"கிஸ் பண்ணு அர்ஜுன்"
"கிஸ் ஹெர்" என அவன் வீட்டு இளசுகள் அர்ஜுனை நச்சரிக்க, "டேய் விடுங்களேன்டா" என்றான் கெஞ்சலாய்.
அஞ்சு முரண் பிடித்து நின்ற அவர்களின் வாக்கியத்தை தடுக்காமல் அமைதியாக சின்ன சிரிப்போடு நிற்க, அவள் பின்னால் நின்ற அவள் தந்தை கணேஷ், "கோ அஹெட்" என்றார் மெல்ல சிரித்து.
அர்ஜுன் ஒன்றும் அவருடைய அனுமதிக்காக காத்திருக்கவில்லை, ஏதோ அவனை முன்னேற தடுத்தது. அதை வெட்கம் என்னும் பெயர் வைத்து நிறுத்தினான், "கல்யாணம் ஆகட்டும் டா, விடுங்க" என்றான் சற்று கோபமாக.
"அதெல்லாம் முடியாது இப்போவே குடுக்கணும்" வருண் தீவிரமாக கூறினான்.
இவர்கள் விடப்போவதில்லை என உணர்ந்து அவள் கையை முகத்தினருகே கொண்டு சென்று கையில் பட்டும் படாமலும் முத்தம் ஒன்று வைக்க, அவர்கள் செய்த ஆரவாரத்தில் அந்த அறையே குலுங்கி சிரித்தது.
அதெற்கெல்லாம் நேர் மாறாக அவன் அஞ்சுக்கு கொடுத்த முத்தம், இலக்கியாவின் காயத்தின் மேல் நெருப்பை வைத்து தேய்த்தது போல் எரிய கண்களிலிருந்து விழுந்த கண்ணீரை உடனே சுற்றம் கருதி துடைத்துக்கொண்டாள்.
"என் பையனுக்கு வெட்கமா?" பானு மகனை கேலி செய்ய, அவனுக்கோ அனைவரின் ஆரவாரம், தன்னை கேலி செய்வது என சினம் தான் ஏறியது.
"மாம் தட்ஸ் இட்"
தன்னுடைய சினத்தை காட்டி அன்னையை சிலகணங்கள் பார்க்க அவனை புரிந்தவர் இளைய பட்டாளத்தை விரட்டிக்கொண்டு மேடையை விட்டு இறங்கி மற்ற விருந்தினர்களை கவனிக்கலானார்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வந்தவர்களை கவனிப்பதில் மும்முரமாய் இருக்க கீழே அமர்ந்திருந்த இலக்கியாவின் கண்கள் வேதனையோடு அர்ஜுனின் சிரித்த முகத்தை மட்டுமே கவனித்தது.
வந்தவர்களிடம் சிறு புன்னகையோடு கை குலுக்கி தன்னுடைய வருங்கால மனைவியை அறிமுகப்படுத்தி வைக்க, சில சமயம் அவள் இடையோடு எந்த தயக்கமும் இல்லாமல் கை போட்டு அவளையும் பேச வைத்தவன் முகத்தில் இருந்த பெருமிதம் இலக்கியாவின் தவறை மறக்காமல் சுட்டி காட்டியது.
அவன் துறையிலிருந்து அவன் விருப்பத்தின்படி மனைவியை தேர்ந்தெடுத்த பெருமிதம் அர்ஜுன் கண்ணில்.
"நீ அர்ஜுன் டிபார்ட்மென்ட் நர்ஸ் தானே ம்மா?" திடீரென தன்னருகில் கேட்ட ராமகிருஷ்ணன் குரலில் முகத்தை கைக்குட்டை கொண்டு வேகமாக சரி செய்து திரும்பினாலும் சிவந்து நின்ற அவள் நாசி, கண்கள் என அவள் அழுகையை காட்டிக்கொடுத்தது பெரியவருக்கு.
"ஆமா சார்" என்றவள் குரல் கூட அழுத்துள்ளாள் என காட்டியது.
"அர்ஜுன் இன்வைட் பன்னானா ம்மா?" தலையை ஆட்டினாள், "ம்ம்ம் சாப்பிட்டியா ம்மா?"
"இல்ல சார்"
"சரி வெயிட் பண்ணு இப்போ வந்துர்றேன்" ஆர்வமாக அவர் பேசி விலக வேகமாக மேலும் தனையே சரி செய்து நின்ற நேரம் சரியாக தன்னுடைய மனைவியோடு வந்து நின்றார் ராமகிருஷ்ணன்.
நரைத்த முடியோடு, மங்கலமாய் சிரித்த முகமாய் வந்து நின்ற ராதாவை பார்த்த இலக்கியாவிற்கு தானாக அவர் கால்களை தொட்டு வணங்க தோன்ற யோசிக்காமல் அவர் காலில் விழுந்தாள்.
பெண்ணின் திடீர் செயலில் அதிர்ச்சியுற்றவர், "சந்தோசமா இரு ம்மா" என்றார் மனமார வாழ்த்தி.
ஏனோ ராதாவுக்கும் அவளை பார்த்த உடனே பிடித்து போனது. தன்னுடைய பேரன் வாழ்க்கையில் வர போகும் பெண் எப்படி எல்லாம் இருக்கவேண்டுமென ஆசைக்கொண்டாரோ அத்தனை தகுதியும் அவளிடம் இருப்பதாய் தோன்றியது.
பெரியவர்களுக்கு மரியாதை, முகத்தில் கனிவு, உடையில் நளினம், எளிமையான தோற்றம் என சக்ரவர்த்தி குடும்பத்திற்கேற்ற இளவரசியாக இந்த பெண் வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்ற எண்ணம் தான் அவருக்கு.
மனைவியின் என்ன ஓட்டத்தை புரிந்த ராமகிருஷ்ணன், "உன் டீயை அடிச்சுக்க ஆள் இருக்குன்னு சொன்னேன்ல ம்மா, அது இந்த பொண்ணு தான்"
இந்த தகவல் கூடுதல் பிரியத்தை வைத்தது அவள் மேல், "உன்ன பத்தி தான் ம்மா இவங்க ஒரு வாரம் பேசுனாங்க, உன் சமையலை ருசி பாக்க கூட ஆசை இவருக்கு"
இதுவரை ராதாவின் பெயரை மட்டுமே கேட்டிருந்த இலக்கியாவிற்கு இத்தனை உயரத்தில் இருக்கும் பெண்மணி தன்னிடம் இவ்வளவு இலகுவாக பேசுவார் என்று நம்பவே முடியவில்லை.
அதிர்ச்சி விலகாமல், "இல்ல.. இல்ல மேம், நான் சுமாரா தான் சமைப்பேன்" திணறியவளின் கையை மென்மையாக பற்றினார்.
"மேம் ஏன்ம்மா சொல்ற? பாட்டின்னு சொல்லு. வா ஒக்காரு" அவள் ஏற்கனவே அமர்ந்திருந்த இருக்கையில் அமர வைத்து தானும் அருகில் இருந்த ஒரு நாற்காலியை அவள் அருகில் போட்டு அமர்ந்தார்.
"உனக்கு ஒன்னு தெரியுமா ம்மா? யாரையும் பாராட்டாத என் பேரன் கூட உன் டீயை பத்தி நல்லா இருக்குன்னு சொன்னான்" என்றவுடன் தன்னிச்சையாக இலக்கியாவின் கண்கள் மணமேடையில் வேதனையோடு விழுந்தது.
"உன் அப்பா அம்மா என்ன பண்றங்க ம்மா?"
ஆர்வமாய் அவர் கேட்பதை பார்த்து தயங்கியது அவள் வார்த்தைகள், "அப்... அப்பா வாட்ச்மேன் வேலை பாக்குறாங்க மேம்"
பற்றியிருந்த இலக்கியாவின் கரத்தை அழுதியவர், "பெத்தவங்கள பத்தி வெளிய சொல்றதுல என்னைக்குமே கர்வப்படணுமே தவற, கூச்சப்பட கூடாது ம்மா" என்றார் கனிவான குரலில்.
சோர்ந்திருந்த அவளின் முகத்தை பார்த்து மேலும் கேள்வி எழுப்ப தோன்றாமல், "சரி வா நீ போட்டோ எடுக்கல தான?"
"இல்ல மேம் இருக்கட்டும், நான் கிளம்புறேன்" எழுந்தவளை வம்படியாக இழுத்து சென்று மேடையில் தள்ளிவிட்டார்.
தன்னுடைய பாட்டியை பார்த்ததும் சிரித்தவன் அவருக்கு பின்னால் தயக்கமாக மேடை ஏறி வந்த இலக்கியாவை பார்த்து சம்ரதாயத்திற்காக சிரித்தான். அவனின் அந்த சிரிப்பில் இங்கு வந்ததே தவறாக தோன்றியது.
"கங்கிராட்ஸ் சார்" என்றவள் பார்வை அவனை தொடாமல் அவனுக்கு அருகில் நின்றவளிடம் சென்றது, "கங்கிராட்ஸ் மேம்"
"ஸ்ரீ இது என் டிபார்ட்மென்ட் நர்ஸ்" இதுவரை அவன் அறிமுகப்படுத்தியவர்களிடம் கை குலுக்கியவள் இலக்கியாவிடம் கை குலுக்காமல் பாதி வந்த சிரிப்போடு தலையை மட்டும் ஆட்டினாள்.
"போட்டோ எடுத்துக்கோ ம்மா" கீழிருந்து ராதா நினைவு படுத்த அர்ஜுன் வாய் வார்த்தையாய் கூட அவளை அழைக்கவில்லை, கையை மட்டும் காட்டி நிற்க கூற, அசிங்கப்படுத்தியது போல் இருந்தது இலக்கியாவிற்கு.
அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்து கீழே நின்ற ராதாவிடம், "இருக்கட்டும் மேம்" என புன்னகையோடு கீழே இறங்கி சென்றவளை எப்பொழுதும் போல் அர்ஜுன் கண்டுகொள்ளவே இல்லை.
"நான் கிளம்புறேன் மேம்" கிளம்புவதிலே குறியாத இருந்தவளை எவ்வளவு வற்புறுத்தியும் ஒரு மிடறு தண்ணீர் கூட அங்கு குடிக்காமல் கிளம்பி சென்றாள் மொத்தமாய் மனம் உடைந்து.
'உன்ன சும்மா கூப்பிடனும்னு வர சொல்லிருக்கார், அத பெருசா எடுத்துட்டு வந்து இந்த அசிங்கம் உனக்கு தேவ தான்' தன்னையே வீட்டிற்கு செல்லும் வழி எங்கும் திட்டிக்கொண்டே சென்றாள்.
வீட்டிற்கு சென்றும் உறக்கம் வராமல் புரண்டு படுத்தவள் கண்கள் தன்னுடைய அனுமதியே இல்லாமல் கண்ணீரை வடித்துகொண்டே இருந்தது. விடிய விடிய அழுதவள் இரவு இரண்டை தாண்டி தான் உறங்கவே செய்தது.
மறுநாள் காலை வேலைக்கு மருத்துவமனை வந்து தன்னுடைய வேலையில் மும்முரமாய் இருந்தாள், இலக்கியா வந்து அரை மணி நேரத்திற்கு பிறகே அர்ஜுன் வந்தது.
வந்ததும் ஏற்கனவே ஆபரேஷன் செய்திருந்த நோயாளிகளை பார்வையிட அவன் சென்றதை கேள்வியுற்று கோப்புகளை எடுத்துக்கொண்டு விரைந்தாள்.
இலக்கியாவை பார்த்ததும் ஒரு நர்ஸ் அர்ஜுன் சென்ற அறையை காட்டி, "அந்த ரூம் இலக்கியா" எனவும் அவருக்கு சிரிப்பின் மூலம் நன்றியை கூறி அந்த அறைக்குள் நுழைந்த நேரம், "மூச்சு விட கஷ்டமா இருக்கா?" கேள்வி எழுப்பினான் அந்த நோயாளியிடம்.
"இல்ல டாக்டர், எந்த பிரச்சனையும் இல்ல, என்ன செத்த வலி தான் இருக்காம்" என்றார் உடன் இருந்த வயதான பெண்மணி ஒருவர்.
"ஊசி போட்டதால இவ்ளோ நேரம் வலி தெரியல பாட்டி, இனிமேல் வலி இருக்க தான் செய்யும். பொறுத்துக்க சொல்லுங்க. நான் வலி மாத்திரையும் எழுதி தர்றேன்" - அர்ஜுன்
"சரியாகிடும்ல டாக்டர்" - மூதாட்டி
"சரியாகிடுச்சு பாட்டி, இனி உங்க கைல தான் இருக்கு இவரை நல்லா பாத்துக்கோங்க. வேளா வேளைக்கு மாத்திரை எடுத்துக்கோங்க. சத்தான ஆகாரம் குடுங்க..."
அந்த வயதானவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாய் அர்ஜுன் பதிலளித்துக்கொண்டே வர, அந்த நோயாளியுடைய பல்ஸ், பி.பியை பரிசோதிக்க அவனை கடந்து இலக்கியா சென்றாள்.
எப்பொழுதும் அவன் பார்த்தாலும் பார்க்காவிடினும், அவள் அவனை பார்த்ததும் காலை வணக்கத்தை வைத்துவிடுவாள். இன்று அவன் அங்கிருப்பதை கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையை அவள் பார்க்க, தன்னை கடந்து சென்ற இலக்கியாவை ஒரு புருவம் தூக்கி பார்த்தான் அர்ஜுன்.
இதை எதையும் கருத்தில் கொள்ளாமல் அவனை முடிந்த மட்டும் தள்ளி வைத்திருக்க கூறிய மனதின் ஆசையை கேட்டு இலக்கியா நடக்க அவனும் தன்னுடைய வேலையை தொடர்ந்தான்.
வேலையை முடித்து ரீடிங்ஸை அங்கிருந்த பேடில் எழுதி அவன் முன் வந்து நீட்ட, அவளை ஒரு பார்வை பார்த்தவன் அதை கவனமாய் பார்த்து,
"என்ன ஆபரேஷன் பண்ண பயம் இன்னும் போகலையா? பி.பி நார்மல் ஆகாம இருக்கு?" என்றவன், "மாத்திரை வேற மாத்தி தர்றேன் எதையும் யோசிக்காம இருங்க" எழுந்து வெளியே செல்லவிருந்த நிமிடம் அங்கு இலக்கியா இல்லை.
"எங்க இவ?" அவளுடைய தேவை அவனுக்கில்லை என்றாலும் அவள் உடன் இருக்க வேண்டும் என தோன்றியது அர்ஜுனுக்கு.
அடுத்த அறைக்குள் அர்ஜுன் செல்லவிருந்த நேரம் உள்ளிருந்து வந்த இலக்கியா அவன் மேல் மோதிவிடுவோமோ என்ற பயத்தில் பின்னால் நகர கால்கள் தடுமாறி கதவை பிடித்து நின்றுகொண்டாள்.
அவள் பதட்டத்தை உணர்ந்தவன் அமைதியாக நிற்க மீண்டும் கால்களை உள் இழுத்துக்கொண்டு நகர்ந்த இலக்கியா அவன் உள்ளே வர இடம் கொடுத்தாள். வந்த அர்ஜுன் தன்னுடைய வேலையில் மும்முரமாய் அந்த நோயாளியை பரிசோதித்து அறிவுரை கூறினான்.
மீண்டும் அதே போல் வெளியே செல்லவிருந்த நேரம் இலக்கியா அங்கில்லாமல் அடுத்த அறைக்குள் சென்றிருக்க, இதுவே உள் நோயாளிகளை பார்க்கும் நேரமெல்லாம் நடந்தது.
ஒரு மணி நேரம் முடிந்து வெளி நோயாளிகளை பார்க்க அர்ஜுன் ஓ.பி ரூமிற்குள் வர, முதல் நோயாளியோடு எப்பொழுதும் வரும் இலக்கியா இன்று வரவில்லை. ஏதோ அவளுக்கு பிரச்சனை என அர்ஜுன் விட, அந்த நாள் எல்லாம் இலக்கியா அவன் அழைக்காமல் அவன் முன்னாள் வந்து நிற்கவில்லை.
இதுவே இரண்டு வாரங்கள் நடக்க, அவளுடைய நடவடிக்கையில் எரிச்சலுற்றவன், "வேலை பாக்க விருப்பம் இல்லையா உனக்கு?" என்றான் சீற்றமாக.
சட்டென்ன அவன் கேட்ட கேள்வியில் அவன் முகத்தை ஏறிட்டவள், "அப்டிலாம் இல்ல சார்" விரைவாக வந்தது பெண்ணின் பதில்.
"அப்றம் இது என்ன பழக்கம்? பேஷண்டை நான் மானிட்டர் பண்ணிட்டு இருக்கறப்ப நீ ரூம்ல இருக்குறதில்ல, ரீடிங்ஸ் எல்லாம் பேட்ல எழுதி வச்சிட்டு நீ உன் வாட்டுக்கு போகுற, பேஷன்ஸுக்கு என்ன தேவைன்னு நான் சொல்றத கேக்காம கூட வெளிய போற அளவுக்கு அப்டி என்ன அவசர வேலை உனக்கு?" சுளீரென அவன் பட்ட கோவம் அவளை சிறிதும் அசைக்கவில்லை.
பதிலும் தெரியவில்லை, என்ன சொல்வது? உன்னை விட்டு விலகி நிற்க ஆசைகொண்டு செய்யும் செயல் என்றா? அமைதியாகிப்போனாள்.
"ஆன்சர் மீ டாமிட்" அழுத்தமாய் அவன் அவள் முகம் பார்க்க, "இல்ல இல்ல சார், சா... சாரி இனிமே..."
அவன் பார்வையின் தாக்கம் தந்த தீயில் திக்கி திணறி பதில் கூறும் முன்பு கதவை எந்த அனுமதியும் கேட்காமல் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள் அஞ்சு ஸ்ரீ.
இலக்கியா மேல் இருந்த அதே கோவத்தோடு அஞ்சுவை பார்த்த அர்ஜுன், "இஸ் இட் எ வே டு ஓபன் தி டோர்? (Is it a way to open the door?)" கேள்வி எழுப்பினான்.
அந்த பெண்ணோ சிறிதும் அலட்டல், "கம் ஆன் அர்ஜுன், நீ என்னோட பியான்ஸி. உன் ரூம்குள்ள நான் வர நாக் பண்ணிட்டு வரணும்னு அவசியம் இல்ல" அவன் அறையிலிருந்த சோபாவில் அமர்ந்தாள் அவனை பார்த்து சிரிப்போடு.
அவளை சில நொடிகள் பார்த்த அர்ஜுன், மீண்டும் இலக்கியாவிடம் திரும்பி பேச்சை தொடரும்படி தலை அசைக்க, அஞ்சு வரும் முன்பு தேறியிருந்த அவள் மனம் மீண்டும் வாடி, பெண்ணின் மனதை உடைத்து.
"வேலை பாக்குறதா இருந்தா முழு கவனமும் வேலைல மட்டுமே இருக்கனும், மார்னிங் வந்ததுல இருந்து நான் கெளம்புற வர நான் பேஷன்ஸை பாக்குற வர கூட நிக்கணும், அத விட்டு வேற யாரையோ உன் வேலைய பாக்க வக்கிர ஐடியா இருந்தா, இப்பயே சொல்லிடு வேற ஆள தேடிக்கிறேன்"
காட்டமாக அர்ஜுன் பேசவும் தலை கவிழ்த்திருந்த இலக்கியாவின் கண்கள் மேலும் பணிந்தது, 'கிளம்பிவிடு அவனை விட்டு' என ஆணையிட்ட மனதை மதிக்காமல் சரி என தலை அசைக்க அவளை பார்த்தவன்,
"குட். ரிப்போர்ட்ஸ் எதுவும் இருந்தா கொண்டு வா" என்க, அவன் அறையில் ஏற்கனவே வைத்திருந்த சில கோப்புகளை எடுத்து வர, "கேன் யூ வெய்ட் அவுட்?" ஒவ்வாமையான குரலில் அஞ்சு கேட்க சிலையாக நின்ற இலக்கியா என்ன செய்வதென்று புரியாமல் அர்ஜுனை பார்த்தாள்.
"இங்கிலிஷ் புரியாதா? வெளிய போ" அதிகாரமாக அவள் கூற, அர்ஜுனின் அமைதியும் அவனும் அதை விரும்புவதாக தோன்ற வெளியில் செல்ல எத்தனித்த இலக்கியாவை தடுத்தது அர்ஜுன் குரல்.
"ஸ்ரீ, இது நம்ம பெர்ஸனலா பேசுற இடம் இல்ல, நைட் நானே உனக்கு கால் பண்றேன். நவ் ஐ ஹாவ் ஒர்க்" என்றான் அழுத்தமாக.
"இத தான் அர்ஜுன் நீ டூ வீக்ஸா சொல்ற, இது வர எனக்கு ஒரு கால் கூட வரல" சண்டைக்கு நின்றாள் அஞ்சு.
இலக்கியாவை பார்த்தவன் அஞ்சுவிற்கு மறைமுகமாக எச்சரிக்கை செய்ய அவள் நிறுத்தவில்லை, "அதையும் மீறி நான் உனக்கு கால் பண்ணா ஏதாவது ஒரு ரீசன் சொல்லி கால் கட் பண்ற படிக்கிறேன், அது பண்றேன், இது பன்றேன்னு. எனக்கு தெரியாதா நான் படிக்கணும்னு" - அஞ்சு
"ரெண்டு நாள்ல எக்ஸாம்ஸ் ஸ்டார்ட் ஆக போகுது உனக்கு, ஒன் வீக் படிச்சா அப்றம் லைப் லாங் பேச தானே போறோம்" - அர்ஜுன்.
"நான் பிரிப்பர் பண்ணிட்டேன் அர்ஜுன்" - அஞ்சு
"இப்ப இத சொல்லுவ, நாளைக்கு உன்னால தான்னு சொல்லுவ. என்ன உன் கூட நான் போன்ல ரொமான்ஸ் பண்ணனுமா?" சலிக்காமல் நிதானமாக பேசிய அர்ஜுனை பார்த்த இலக்கியாவிற்கு சங்கடமாக இருந்தது.
"சார் எக்ஸ்க்யூஸ் மீ" என மீண்டும் கதவை நோக்கி நடக்கவிருந்தவளை,
"ஏய் நில்லு" என்றான் கோபமாக.
இறுக்கமாக கண்களை மூடி திறந்தவள் அவனை பார்த்து திரும்ப, "உன்ன நான் போக சொல்லல" அஞ்சு பக்கம் திரும்பி, "வீட்டுக்கு போ, நைட் கால் பண்றேன்" என்றான் அதிகாரமாக.
பற்களை கடித்த அஞ்சு ஸ்ரீ அர்ஜுனை முறைத்து வெளியில் செல்லும் சாக்கில் இலக்கியாவை செல்ல, அவளை பார்த்து கண்டுகொள்ளாமல் மெல்ல தலை அசைத்து கையிலிருந்த புத்தகத்தில் பார்வையை பதித்தான்.
அடுத்து சில நிமிடங்களில் இலக்கியாவிற்கு பல வேலைகள் கொடுத்து தனக்கு அருகில் வைத்துக்கொண்டவன் இரவு அவள் வழக்கமாக செல்லும் நேரத்திற்கு முன்பாகவே அனுப்பி வைத்தான்.
இதே போல் அடுத்த ஒரு வாரமும் ஓட, தான் படித்துக்கொண்டிருந்த எம்.டி படிப்பின் இறுதி தேர்வை முடித்து வீட்டிற்கு கூட செல்லாமல் அர்ஜுனை தான் பார்க்க வந்தாள் அஞ்சு.
அஞ்சு வந்த சமயம் வருணும் தர்ஷனும் சில சில பேச்சுகளோடு அர்ஜுன் அறையில் இருக்க இந்த முறையும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு தான் வந்தாள் அஞ்சு.
"ஹே அண்ணி" வருண் சிரிப்போடு அவளை பார்க்க, வாய் வார்த்தையாய் கூட சொல்லாமல் கையால் ஹாய் காட்டிய அஞ்சு அர்ஜுனுக்கு அருகில் அமர்ந்து அவன் காதின் ஓரம்,
"நாம தனியாவே இருக்க முடியாதா?" முணுமுணுக்க சிரித்து சமாளித்தான் அவன்.
"என்ன அண்ணி சொல்ற, உன்ன விட ஒரு வயசு தான பெரிய பொண்ணு, பேர் சொல்லியே கூப்புடு" என்றான் அர்ஜுன்.
"பாட்டி அவ்ளோ தான் என்ன கொன்னுடுவாங்க" - வருண்
"டேய் பாட்டி என்ன, இவனே சும்மா இப்ப சொல்றான், நாளைக்கு என்னடா பேர் சொல்றன்னு சண்டைக்கு வந்து நிப்பான்"
தர்ஷன் அர்ஜுனை கேலி செய்ய, "அப்டிலாம் சொல்ல மாட்டேன்டா" சிரித்தான் மருத்துவன்.
அந்த நேரம் கதவை தட்டி இலக்கியா உள்ளே வந்து, "காலைல ஆபரேஷன் பண்ண பேஷண்ட் அந்தோணிக்கு ப்பைன் கில்லர் போடணும்"
அர்ஜுன் கையில் அந்த நோயாளியை பற்றிய தகவலை இலக்கியா கொடுக்க அங்கு இருந்த மற்ற மூவர் இருப்பதை தெரிந்தும் அவர்கள் பக்கம் திருப்ப கூட இல்லை.
"வேற டாக்டரே உனக்கு இல்லையா? எதுக்கு எடுத்தாலும் இங்கையே வந்து நிக்கிற?"
இலக்கியாவிடம் அஞ்சு கோவத்தை காட்ட, இலக்கியா கையில் மருந்தை எழுதி கொடுத்தவன், "மதுவ பாத்துக்க சொல்லு" இலக்கியாவிடம் கூறி அஞ்சு ஸ்ரீயிடம், "ஆபரேஷன் பண்ணது நான், அப்போ நான் தானே பாத்துக்கணும்?" வாயை அடைத்துவிட்டான்.
"இத மது கிட்ட குடுத்துட்டு பசுபதி அண்ணாகிட்ட சொல்லி ஒரு டீ, மூணு காபி அனுப்ப சொல்லிடு"
சரி என தலையை அசைத்து இலக்கியா வெளியில் செல்ல சரியாக அஞ்சுவிற்கும் அழைப்பு வந்தது அவளும் வெளியேறிவிட, இதற்காகவே காத்திருந்த வருண் அர்ஜுன் அருகில் வந்து அமர்ந்தான் ஆர்வமாக.
"யார்ரா இது புது நர்ஸா?" - வருண்
"யார் இலக்கியாவை கேக்குறியா?" - அர்ஜுன்
"பேர் பாரேன் காவியம் மாதிரி இருக்கு" - தர்ஷன்
"டேய் நான் தான முதல கேட்டேன், நீ நடுல வராதடா" தர்ஷனிடம் சண்டைக்கு நின்றான் வருண்.
"ஏன் வர கூடாது, நான் வருவேன். இவன் நிச்சயத்துல இந்த பொண்ண உனக்கு காட்டுனதே நான் தான். முடிஞ்சா நீ கரெக்ட் பண்ணி பாரு" - தர்ஷன்
"டேய் நீங்க டாக்டர்ஸ், அவ வெறும் நர்ஸ் தான்" சிரிப்போடு அர்ஜுன்.
"இருந்தா என்ன?" இருவரும் ஒரு சேர பேசினர். சில சமயம் அர்ஜுனுக்கு சந்தேகம் கூட வரும் இருவரும் ஒட்டி பிறந்த இரட்டை பிறவிகள் போல் அத்தனையும் ஒற்றுமையாக, சிந்தனை, செயல் என வித்யாசமே காண இயலாது இவர்களிடத்தில்.
"அந்த பொண்ணோட கண்ண பாத்தியா, அப்டியே ஒரே பார்வைல ஆளையே சாச்சிடும்" - வருண்
"பிஸிக்கல் அபியரன்ஸ் என்ன பெருசா? நாங்க இங்க தான் இருக்கோம், தெரிஞ்சும் ஒரு பார்வை அந்த பொண்ணு அனாவசியமா பாக்கல, உன் ஆளு காரணமே இல்லாமல் அசிங்கப்படுத்துனப்பயும் கண்டுக்காத மாதிரி போச்சு பாத்தியா? அது அழகு.
அதைரியும் மீறி வெளி தோற்றத்துக்கு என்ன குறைச்சல்? அன்னைக்கு நிச்சயத்துல அந்த ஹேசல் வுட் கலர் சாரீல ஒரு சின்ன செயின், ஒரே ஒரு வளையல், குட்டி ஜிமிக்கி-னு அந்த எளிமைய பாத்து கண்ண எடுக்க தோணல அர்ஜுன்" - தர்ஷன்
"ஆமா, ஜிகு ஜிகு-னு மின்னிகிட்டு இருக்க கூட்டத்துக்கு நடுல எந்த ஆடம்பரமும் இல்லாம எதார்த்தமா ஒரு மூலைல அமைதியா இருந்த பொண்ண யார் தான் பாக்காம இருப்பாங்க? அவளோட அமைதி ஒரு அழகுடா... உனக்கு சொன்னா புரியாது"
வருண் பேசியதை கேட்ட அர்ஜுன் மெல்லிசாக சிரித்தான்.
"எப்ப இருந்துடா நீங்க இப்டி மாறுனீங்க?" வியந்தான் பெரியவன்.
"டாக்டர் பொண்ணு தான் வேணும்னு ஒன்ன நீ புடிச்சிட்டு வந்துருகியே, அத பாத்த அந்த செகண்ட்ல இருந்து" - தர்ஷன்
"டேய் அவளுக்கு நம்ம குடும்பத்தை பத்தி தெரியல" - அர்ஜுன்
"தெரிஞ்சிட்டா மட்டும், அப்டியே கலகலன்னு இருந்துடுவா"
முணுமுணுத்த வருண், "பாட்டி சொல்ற அத்தனை தகுதியும் இருக்குற இந்த பொண்ண இத்தனை நாள் கூடயே வச்சுக்குட்டு ஏன்டா வெளிய பொண்ணு தேடுற?" நீ எல்லாம் என்ன மனிதன் என முகத்தை அஸ்டகோலமாக வைத்த வருண் சகோதரனை கேட்டான்.
யோசிக்காமல் தோளை குலுக்கி, "சிம்பிள், டாக்டர் படிக்கல, அவளோட குடும்பத்துக்கு ஒரு நல்ல பேக்கிரௌண்ட் இல்ல" என்றான் அர்ஜுன்.
"வாழ்க்கைய தொலைச்சிட்டியே குமாரு" தர்ஷன் அர்ஜுனை கிண்டல் செய்ய அவன் பேசிய விதத்தில் வருணும் உடன் விழுந்து விழுந்து சிரித்தான்.
அர்ஜுன் அவர்கள் கேலியை எல்லாம் காதிலே வாங்கவில்லை, "நாளைக்கு உனக்கு பொண்ணு தேடுறப்ப நானும் பாக்க தானே போறேன்"
"ஏன் தேடணும் இந்த இலக்கியா இருக்கே" - வருண்
"டேய் அவ எனக்கு" - தர்ஷன் இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக்கொள்ள அவர்களை கேலியாக பார்த்தான் மருத்துவன் அர்ஜுன்.
மதுமதியிடம் அர்ஜுன் கூறிய வேலையை ஒப்படைத்து அவன் கேட்ட தேநீரை மேல் தளத்திற்கு சென்று கூற போன இலக்கியாவின் மனது அவனுக்காக டீயை போடு என சண்டித்தனம் செய்ய அவனுக்கு மட்டும் இஞ்சி டீயை போட்டு வைக்க பசுபதி மற்ற மூன்று காபியை போட்டு அவளிடம் ஒப்படைத்தார்.
ஒரே ஒரு தளம் தான் இறங்க வேண்டி இருப்பதால் படியில் இறங்கி வந்த இலக்கியாவின் காதுகளில் கிசுகிசுப்பான குரலில் அஞ்சு ஸ்ரீ பேசுவது கேட்டு அசையாது நின்றாள் இலக்கியா.
"கமான் டாட், நான் தான் சொல்றேன்ல மெடிக்கல் ஸ்டோரேஜ் ரூம்ல பெருசா எந்த பாதுகாப்பும் இல்ல, ட்ரக்ஸ ஈஸியா ஸ்டோர் பண்ணி, வேணும்ங்கிற நேரத்துல வெளிய எடுத்து டிஸ்ட்ரிபியூட் பண்ணிக்கலாம்" கேட்ட இலக்கியாவின் இதயம் நின்று போனது.
சில நொடிகள் அமைதி காத்த அஞ்சு, எரிச்சலாக, "அகைன் சொல்றேன் டாட், ராமகிருஷ்ணா ஹாஸ்பிடல்க்கு இருக்குற பேருக்கு இங்க ஸ்டாக் வச்சு அனுப்புனா எந்த பிரச்னையும் வராது.
நயிட்டோட நயிட்டா ஈஸியா வேலைய முடிச்சிடலாம். அதையும் மீறினா ஹாஸ்பிடல் பேர யூஸ் பண்ணிக்கலாம்" என்றாள் அழுத்தமாக.
"சரி ஸ்டோரேஜ் ரூம் வீடியோ எடுத்துட்டு வர்றேன், வைங்க" என அர்ஜுன் அறையை நோக்கி அவள் நடக்கவும் இலக்கியாவிற்கு கால்களே நடுங்கியது.
இதற்காக தான் இவள் அர்ஜுனை திருமணம் செய்ய போவதாக இருந்தால் கூட ஆசிரியப்பட இல்லை. ஆனால் இத்தனை பெரிய நிருவத்தின் பெயரை பயன்படுத்தி கீழ் தரமான தொழிலை செய்ய பயன்படுத்துகிறார்கள் என தெரிந்ததும் இலக்கியாவால் சாதாரணமாக விட முடியவில்லை.
இது அவர்கள் திட்டத்தின் ஒரு சிறு பகுதியாக கூட இருக்கலாமே, என தோன்ற அவளை முழுதாய் படிக்க திட்டமிட்டாள் இலக்கியா.
அதிர்ச்சியிலிருந்து மீண்டு தன்னை நிதானப்படுத்தி அர்ஜுன் அறைக்கு செல்ல அங்கு அர்ஜுனுக்கு மிக நெருக்கமாக அமர்ந்திருந்த அஞ்சு ஸ்ரீயை பார்க்க இவள் மனதிலா இப்படி ஒரு வஞ்சகம் என வியப்பாக இருந்தது பெண்ணுக்கு.
சோபாவின் முன்னே இருந்த டீபாயில் காபி ட்ரேயை வைத்து வெளியேறிவிட்டாள்.
அவள் வந்தது முதல் வெளியேறியது வரை சகோதரர்கள் செய்த கூத்தை பார்த்த அர்ஜுனுக்கு எரிச்சல் தான் வந்தது, "வந்த வேலைய மட்டும் பாத்துட்டு கிளம்புங்கடா" இருவரையும் விரட்டினான்.
அவர்களோ காபியை குடித்து, "இந்த பசுபதி என்னைக்கு தான் காபி டீ போட கத்துக்க போறாரோ" வருண் புலம்ப, தன்னுடைய டீயை ஒரு மிடறு குடித்ததுமே அர்ஜுனுக்கு புரிந்தது, தனக்கு மட்டும் இலக்கியா தான் போட்டுளாள் என. ஆனாலும் இவர்கள் முன்பு எதையும் பேசிவிட தோணவில்லை.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro