Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நிலா - 2

இல்லத்தின் கதவை அடைந்த பொழுதே அவன் முகத்தை காரினுள் ஸ்கேன் செய்த அந்த தானியங்கி பெரிய இரும்பு கதவு தன்னாலே திறக்க, தன்னுடைய பென்ஸ் இ.க்யூ.எஸ் வாகனத்தை வீட்டினுள் செலுத்தினான்.

அவர்கள் ராமகிருஷ்ணன் மருத்துவமனையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவியில் இருந்தது அந்த இல்லம். அவனுடைய அன்னை தந்தை, தாத்தா பாட்டி, சகோதரன் என அனைவரும் வசிக்கும் இடம் அது.

ஆரம்பத்தில் அத்தை குடும்பம் கூட அங்கு தான் இருந்தது. கடந்த சில காலங்களாக தான் அவர்கள் இரண்டு வீடுகள் தள்ளியிருக்கும் வீட்டிடை கட்டி குடி போனது. ஆனால் இந்த வீட்டினை கூட ஐந்து வருடங்கள் முன்பு தான் பேரப்பிள்ளையின் விருப்பத்தை கேட்டு ஆசையாய் கட்டினார்கள்.

நீண்ட நெடிய அந்த தெருவில் இருக்கும் மூன்றே வீடுகளில் இந்த வீடும் ஒன்று. வீட்டினுள் நுழைந்ததுமே சில தூரம் சிறுக வளர்ந்த புல்லால் நிரம்பியிருக்க வீட்டை சுற்றிலும் ஒவ்வொரு வகை மரங்கள் வளர்ந்திருந்தது.

வீட்டின் பின் பகுதியில் பெரிய நீச்சல் குளம் ஒன்றும், பயர் பிட் ஒன்றும் அமைத்து அதை சுற்றி அமர்வதற்கு ஏதுவாக நாற்காலிகளும், அதற்கு குடையும் செய்திருந்தனர்.

வீட்டின் தரை தளம் நல்ல விசாலமாக வரவேற்பறை, சமையலறை, உணவரை, மூன்று பெரிய படுக்கையறை, ஒரு பெரிய தியேட்டர் கொண்டது. முதல் தளம் பெரிய பெரிய படுக்கையறைக்கு ஆறு, ஒரு லைப்ரரியோடு இணைந்த மீட்டிங் ஹால் ஒன்றும் இருக்கும் மருத்துவமனை பற்றிய பேச்சுகளுக்காக.

அதற்கு மேல் மாடியில் பெரிய ஜிம் அறையும், வீட்டின் தோட்டத்தை காணும் வகையில் மேற்கூரை மட்டுமே இருக்கும் திறந்த வெளி ஊஞ்சல்கள் சிலவும் அமைந்திருந்தன. வீட்டின் ஒவ்வொரு இடமும் அனைவரின் விருப்பத்திற்கிணங்க அமைக்கப்பட்டிருக்க, அவரவர் அறை மட்டும் அவரின் தனிப்பட்ட விருப்பத்தின் பாணியில் இருந்தது.

இரவு விளக்கின் ஒளியில் மின்னிய அந்த மாளிகை போன்ற இல்லத்தின் ஒரு ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி வீட்டினுள் நுழைந்த பொழுதே அவனை பிடித்துக்கொண்டது அவர்கள் வளர்க்கும் ஹஸ்கி வகையை சேர்ந்த ப்ருனோ. அர்ஜுனை பார்த்து பல நாட்கள் ஆன சந்தோசத்தில் துள்ளி குதித்து அவன் மேல் பாய்ந்தது.

"டேய் ப்ருனோ" அதன் முகத்தை கைகளில் ஏந்தியவன் அதன் உடலை சந்தோசமாக தட்டி கொடுக்க அவனுக்கோ இன்னும் சந்தோசம்.

சமையலறையிலிருந்து அவன் பாட்டி, தாத்தா பேச்சு சத்தம் கேட்டு செல்ல நினைத்த அர்ஜுனின் மேல் மொத்தமாய் தாவி அவன் முகத்தை எச்சிலால் நிறைக்க விளைந்த நேரம் அதன் வாயை பிடித்து, "வேணாம் ப்ருனோ, மறுபடியும் என்னால குளிக்க முடியாது" என்றவன் கீழே தரையில் அமர்ந்து அந்த சிரியவனின் சேட்டையை ரசிக்க துவங்கினான்.

உள்ளே மனைவியோடு நின்று சமைத்த உணவுகளை மேஜையில் மாற்ற உதவி செய்துகொண்டிருந்த ராமகிருஷ்ண சக்ரவர்த்தியின் பேச்சை சிரிப்போடு கேட்டுக்கொண்டிருந்தார் ராதா சக்ரவர்த்தி, ராமகிருஷ்ணனின் அன்பு மனைவி.

எழுவதை தாண்டிய வயதிலும் காதல் பாடம் கற்க தோன்றும், காதல் ஆசையை தூண்டும் அந்நியோன்யம் அவர்களிடம் என்றும் இருக்கும்.

கணவன் பேசுவதை கோவமாக இருந்தாலே ரசிப்பவர், இன்று சிரிப்போடு பேசவும் சொல்ல வேண்டியதே இல்லை.

"நிஜமா ராதா, அப்டியே அந்த பொண்ணுக்கு உன் கை பக்குவம் போல. நீ போட்ட மாதிரியே டீ. கொஞ்சம் கூட மாறல, அதே அளவு சுகர், டீ தூள், பாலோட திக்னெஸ் எல்லாமே. உண்மைய சொல்லு எனக்கு தெரியாம நீ ஏதாவது ஆன்லைன் கிளாஸ் எடுக்குறியா?"

செய்த வேலையை அப்படியே நிறுத்தி, "உங்களுக்கு தெரியாம நான் என்ன பண்ணிருக்கேன் இது வர?" என்றார் சிறு முறைப்போடு.

"அப்றம் எப்படி அந்த பொண்ணுக்கு உன் கை பக்குவம் இருக்கும்?" முக்கியமான கேள்வியை வைத்தார்.

"நான் என்னோட அம்மாகிட்ட கத்துக்குட்டேன், அவ அவளோட அம்மாகிட்ட கத்துட்டு போட்ருப்பா" - ராதா

"இருக்கவே இருக்காது, நான் இது வர இப்டி வேற யாரும் செஞ்சு பாத்தது இல்ல" அடித்து பேசினார் மனைவியை பின்தொடர்ந்து.

இடுப்பில் கை வைத்து கணவனை முறைத்தவர், "நீங்க என்ன தமிழ் நாட்டுல இருக்குற எல்லார் வீட்டுலையும் டீ குடிச்ச மாதிரி பேசுறீங்க? யாருக்கு தெரியும் என்ன விட இன்னும் நல்லா டீ போடுறவங்க இருப்பாங்க"

"சத்தியமா அதுக்கு வாய்ப்பே இல்ல" அடித்து பேசினார் ராமகிருஷ்ணன்.

"நீங்க நினைச்சுக்க வேண்டியது தான்"

மனைவி அலுத்துக்கொண்டதை பார்த்து மென்மையாய் அவர் கன்னம் பற்றியவர், "ஆமா நான் நினைக்கிறது தானே சரி, என் ராதா தான் எனக்கு எப்பவும் பெருசு, அவளோட கை பக்குவம் தான் எனக்கு உசத்தி"

ஆழமான மூச்சை விட்டு அவரே மீண்டும், "அதுக்கு சோதனை வந்த மாதிரி உன் டீய ஒரு பொண்ணு அடிச்சிட்டா" என்றார் வருத்தமாக.

"ஏங்க? அந்த மாதிரி நல்லா சமையல் தெருஞ்ச பொண்ணா நம்ம அர்ஜூன்க்கு பாக்கலாமா?"

"சமையல் தெரிஞ்சு என் ஹாஸ்பிடல்ல கேன்டீன் போடவா பாட்டி?"

சரியாக பாட்டி இறுதியாக பேசியதை மட்டும் கதவில் சாய்ந்து நின்று கேட்டவன், பெரியவர்கள் இருவரின் இனிமையான பேச்சை தடுக்க வேண்டாம் என நின்றுவிட்டான். ஆனால் தன்னை பற்றி பேச்சு எழவும், அதுவும் தன்னுடைய வாழக்கை துணை பற்றிய தேர்வில் தவறான பேச்சு எழவும் நிற்க முடியவில்லை.

"ஏன் அந்த தொழில் எதுல கொறஞ்சு போச்சு?" கணவனிடமிருந்து விலகி நின்றவர் பேரனை பார்த்து கேள்வி எழுப்பினார்.

"அதான?" பெரியவரும் பேரனை பார்த்தார்.

"கொறஞ்சு போகல, என்ன கல்யாணம் பண்ணிக்க போறவ, என் பக்கத்துல என்னோட பொண்டாட்டியா நிக்க போறவ, எனக்கு சரி சமமா நிக்கணும். படிப்பு, வேலை, அழகு, அந்தஸ்து-னு எல்லாத்துலயும்" என்றான் அழுத்தத்தை கூட்டி.

"ஏன் நான் உன் பாட்டியை கல்யாணம் பண்ணிக்கல?" - ராமகிருஷ்ணா

"நல்ல வேலை பண்ணீங்க" சாலட்ற்காக வெட்டியிருந்த கேரட் ஒன்றை எடுத்து உண்டான்,

"இல்லனா எனக்கு இப்டி ஒரு பாட்டி கெடைச்சிருக்க மாட்டாங்கள்ல?" என்றவன் மேலும்,

"ஆனா அது அம்பது வருஷம் முன்னாடி தாத்தா, அந்த காலத்துலயே பாட்டி டிகிரி ஹோல்டர். இந்த காலத்துல எல்லாருக்கும் டிகிரி இருக்கு, ஏன் ரெண்டு மூணு டிகிரி எல்லாம் அசால்ட்டா முடிக்கிறாங்க. பட் ஐ வாண்ட் எ கேர்ள் வித் மாஸ்டர்ஸ் டிகிரி இன் டாக்டர்ஸ். தட்ஸ் இட் தாத்தா" பேரனை பார்த்து பாட்டி சிரிக்க அவர்கள் தன்னை புரிந்துகொண்டதில் அவனுக்கும் சிறு நிம்மதி.

ஏனெனில் பலமுறை அவர்கள் மருத்துவமனை ஷேர் ஹோல்டர் ஒருவரின் பெண்ணை இவனுக்கு திருமணம் செய்துவைக்கலாம் என்னும் பேச்சு அவன் காதுப்படவே அடிபட்டது.

நல்ல வசதியான குடும்பம், லண்டன் சென்று இன்ஜினியரிங் படித்த பெண், அதோடு நில்லாமல் அவளின் அழகை பாராட்டி அவன் அன்னை பேசியதை காது கொடுத்து அவனால் கேட்க இயலவில்லை.

பதில் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தவன் இந்த பேச்சே இப்பொழுது வேண்டாம் என இரண்டு வருடங்கள் தள்ளி வைத்து தனியாய் ஒரு அபார்ட்மெண்டை வாங்கி சென்றுவிட்டான்.

வீட்டினர் தடுத்து பார்த்துவிட்டனர், "ஒரு அஞ்சு வருஷம் நான் தனியா இருக்க ஆசைப்படுறேன் தாத்தா, கல்யாணம்னு ஒன்னு ஆகி ரெண்டு வருஷம் இல்லனா மூணு வருஷம் கழிச்சு நீங்க கூப்புடாமயே வந்துடுவேன்"

அதோடு பெரியவர்களால் அவனை தடுக்க முடியவில்லை. தனிமையை விரும்புகின்றவன் மனநிலையை மதித்து அவன் போக்கில் போகட்டும் என அர்ஜுன் மேல் நம்பிக்கை வைத்து அனுப்பினர்.

எப்பொழுதாவது பெரியவர்கள் விருப்பப்பட்டு கேட்டால் இரவு அங்கு தங்கியிருந்து மறுநாள் வீட்டிற்கு சென்று விடுவான். இன்றும் ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டதால் தான் வீட்டிற்கு வந்தது.

"ம்மா காபி" வரதராஜன் உள்ளே நுழையும் பொழுதே சோர்ந்த குரலோடு அன்னையிடம் கேட்டுக்கொண்டே வருவார்.

"பாத்தியா? டாக்டர் பொண்ண கல்யாணம் பண்ணா, யாரைவாது எதிர் பாத்துட்டே தான் இருக்கனும்" பேரனிடம் கூறி அவனுக்கு அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்துகொண்டார்.

அர்ஜுன் சின்ன சிரிப்போடு நிறுத்திக்கொண்டான்.

"ம்மா காபி கேட்டேன்" மகன் மீண்டும் கேட்க, "நைட் சாப்பாடு சாப்புடுற நேரம் எதுக்கு காபி? குளிச்சிட்டு வா ப்பா, சாப்பிடலாம்" ராதா கூறவும் பாவமாக தன்னை பார்க்கும் தனயனின் பார்வையில் கரையவில்லை.

"ஒழுங்கா போ" பத்து வயது மகனை மிரட்டுவது போல் மிரட்டவும் தான் எழுந்தார், "பானு எங்க வரதா?"

"அவ ரூம் போய்ட்டா ம்மா" என வரதராஜனும் தனதறைக்கு நடந்தார்.

"ஏன் இந்த திடீர் மீட்டிங்? அப்பா அம்மா இந்த நேரம் வீட்டுக்கு வர மாட்டாங்களே" கேள்வியாய் அர்ஜுன் பெரியவர்களை பார்க்க இருவரிடமும் மௌனம் தான்.

"உன் அத்தை மாமா வரட்டும் அர்ஜுன், சொல்றேன்" - ராமகிருஷ்ணா

"அப்டி என்ன ரகசியம்?" - அர்ஜுன்

"ரகசியமா? இல்லையே. சந்தோசமான விசியம் சொல்ல போறேன், அதுக்கு வீட்டுல எல்லாரும் இருந்தா நல்லா இருக்குமேன்னு சொல்றேன்" அர்ஜுன் அமைதியாகி போனான்.

அடுத்த அரை மணி நேரத்தில் சிரியவர்களிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் உணவு மேஜையில் வந்து அமர்ந்துவிட்டனர். உணவு செய்வது ராதா தலைமையில் நடந்தாலும், பரிமாறுவது எல்லாம் வீட்டின் பெண்கள் இருவர் தான்.

மருமகள் பானுவும், மகள் பரிமளாவும் பரிமாறி நிற்க, "உன் பையன்னுக்கு முப்பது வயசாகிடுச்சு பொண்ணு பாக்குற எண்ணம் இருக்கா இல்லையா வரதராஜா?" - ராமகிருஷ்ணன்

மகனை பார்த்தார் வரதராஜன், அமைதியாக அவன் இருக்கவும் அவன் மனதிலும் இந்த எண்ணமும் இருப்பது புரிய, "இவன் இத்தனை நாள் வேணாம்ன்னு சொன்னதால தான் ப்பா பேசாம இருந்தேன். பாக்க ஆரமிச்சிடலாம்" இது பற்றிய பேச்சுக்கள் தான் வரும் என எதிர் பார்த்திருந்தான் அர்ஜுன்.

"உனக்கு அந்த வேலையே வேணாம்"

தன்னுடைய கைபேசி எடுத்து மகனிடம் நீட்டினார், "ரெண்டு பொண்ணு பாத்து வச்சிருக்கேன், ரெண்டுமே அர்ஜுன் எதிர் பாக்குற மாதிரி அவனுக்கு ஈகுவலா இருக்கும். படிப்பு அந்தஸ்து அழகுன்னு எல்லாத்துலயும். அவனுக்கு எந்த பொண்ணு ஓகே-னு கேளு பேசி முடிச்சிடலாம் ரெண்டு வரனுக்கும் ஜாதகம் பொருத்தமா இருக்கு. நம்ம பதிலுக்காக தான் வைட்டிங்"

கைபேசி அங்கிருந்த அத்தனை கைகளுக்கும் மாறி மாறி சென்றது அர்ஜுனை தவிர. அமைதியாக உண்டு முடித்தவன் அவர்கள் ஆர்வத்தை கவனிக்காமல் கை கழுவி மீண்டும் நாற்காலியில் வந்து அமர்ந்தான்.

"அர்ஜுனு ரெண்டுமே செம்ம, உனக்கு புடிக்கலைனா சொல்லு ரெண்டு பொண்ணுங்களை கட்டிக்க நான் ரெடி" தாராளமாய் அர்ஜுனின் தம்பி வருண் கூற அவன் தலையில் கொட்டு வைத்தாள் பிரியங்கா.

"ஏய் அண்ணி" வருண் வலியில் தலையை தேய்த்தான்.

"ரெண்டுபேரும் உன்ன விட ஒரு வருஷம் பெரிய பொண்ணுங்க" என்றாள் அவனை கண்டிக்கும் பொருட்டு.

"அப்போ ரெண்டு பொண்ணு பாலிசிக்கு ஓகே-னு சொல்ற?" - வருண்

"இது கூட ரொம்ப நல்லா இருக்கே" ப்ரியதர்ஷன்

"உங்கள முதல ஒரு பொண்ணு சரின்னு சொல்லுதா பாக்கலாம்" - ப்ரியங்கா

"ஏன் எங்களுக்கு என்ன அறிவில்லையா அழகில்லையா?" - வருண்

"ரெண்டும் இல்ல" அர்ஜுன் கூற மொத்த வீடும் குலுங்கி சிரித்தது.

"ச்சீ போடா உனக்கு இந்த ரெண்டு பொண்ணுமே செட் ஆகாது" சபித்து அவன் முன்னாள் வருண் கைபேசியை வைக்க சிரிப்போடு எடுத்தான் அர்ஜுன்.

முதலில் இருந்த பெண்ணை பார்த்தான், எம்.எஸ் சர்ஜென். பார்த்த உடனே மறுக்க தோணாமல் ஒத்துக்கொள்ளும் அழகு முகம். அடுத்த பெண்ணை பார்த்தான்.

உடனே அடையாளமும் கண்டுகொண்டது புத்தி. டெல்லியில் அவன் படித்த பொழுது அவனுக்கு ஜுனியராக இருந்த பெண்.

சிறு தவறு கூட கூற முடியாத பளிங்கு போன்ற அழகிய முகம். ஜெனரல் சர்ஜெரி பிரிவு அவனுக்கு தெரிந்து. அர்ஜுன் கவனத்தை கூட பல நேரங்களில் எளிதாக கவர்ந்துவிடுவாள் சிறு சிரிப்பிலே. நான்கு ஆண்டுங்கள் முன்பு பார்த்ததை விட இப்பொழுது இன்னும் அழகாய் இருந்தாள்.

"இந்த பொண்ணுங்களோட அப்பா என்ன பன்றாங்க?" - அர்ஜுன்

"முதல இருக்குற பொண்ணு பேர் கீர்த்தி. அப்பா சிமெண்ட் பிஸ்னஸ். அம்மா ஸ்டாக் மார்க்கெட் பிஸ்னஸ் சின்னதா பண்றங்களாம். தம்பியும் இப்போ டாக்டர் பைனல் இயர் பன்றான். பீடியாட்ரிசன் டாக்டர், நல்ல பேமிலி, தங்கமான பொண்ணு, முக்கியமா நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு" - ராமகிருஷ்ணன்

"அப்போ என்ன மாமா, பேசிடலாம். நம்மள்ல யாரும் சைல்ட் ஸ்பெசலிஸ்ட் இல்ல. வசதியா போச்சு, கடைசி வர சபைல நின்னு செய்ய தம்பி கூட இருக்கான்" சந்தோசமாக பானு கூறினார், அவருக்கோ தனக்கு துணியாக தன்னுடைய மருமகள் இருப்பாளென ஆசை.

"ம்மா வெயிட் பண்ணுங்க"

அன்னையை அடக்கியவன் தாத்தாவை பார்த்தான், "ரெண்டாவது பொண்ணு?"

"பேர்..." தாத்தாவை முந்தி, "அஞ்சு ஸ்ரீ. தெரியும் என் காலேஜ்ல படிச்சா. பேமிலி டீடெயில்ஸ்?"

அவனை கூர்மையாய் பார்த்தவர், "அப்பா பார்மசியுடிகல் கம்பெனி வச்சு நடத்துறாங்க, நம்ம ஹாஸ்பிடல்க்கு சப்ளை பன்றாங்கள்ல பிரீமியம் மெடிகேர், அவங்க தான். அம்மா ஹவுஸ் வைப் தான், கூட பொறந்தது யாருமில்ல. சிங்கள் ச்சைல்ட். ஆனா அவங்க குடும்பம் பெருசா சொந்தம் பந்தம்ன்னு இருக்க மாட்டாங்க போல"

"இந்த பொண்ண பேசி முடிங்க தாத்தா" அஞ்சுஸ்ரீயை காட்டி கூறினான்.

"அர்ஜுன், இது லைப். பிஸ்னஸ் இல்ல" தந்தை மகனை நிறுத்தினார்.

"எக்ஸாட்லி அர்ஜுன். எனக்கு நீ பிஸ்னஸ் மைண்ட்ல பேசுறியோனு இருக்கு. யோசிச்சு முடிவெடு" என்றார் பரிமளாவின் கணவன் சுந்தர்ராஜன்.

"உண்மையும் அது தான் மாமா, டேப்லட்ஸ் தயாரிக்கிற ரேட்க்கு வாங்குறதெல்லாம் எவ்ளோ பெரிய விசியம் தெரியுமா ப்பா? கால் வாசி லாபம் நமக்கு. அதோட ஒரே பொண்ணு.

மொத்தமும் எனக்கு தான் வரும். ஆல்சோ ஐ க்நோ ஹெர். என்னோட ஜூனியர். எனக்கும் அவளுக்கும் கண்டிப்பா செட் ஆகும். பர்சனல் அண்ட் ப்ரோபஸ்னல் ரெண்டுமே சரியா அமைஞ்சா வேற என்ன எங்களுக்குள்ள பிரச்சனை வர போகுது" அனைவர் முகத்தை பார்த்து கேள்வி கேட்க அவன் கூறுவதும் சரியாக பட்டது.

"காசு பணம் தான் வாழ்க்கைன்னு முடிவு பண்ணிட்டியா அர்ஜுன்?" அமைதியாக இருந்த ராதா பேரனை பார்க்கவும் ஒரு நொடி அவரது ஆழ்ந்த பார்வை அவன் முடிவையே சந்தேகப்படுத்தியது.

"நான் என்னைக்குமே பணத்தை பெருசா யோசிச்சதில்ல பாட்டி. என்னால வேற ஹாஸ்பிடல்ல வேலை பாத்து கூட ஒரே மாசத்துல மினிமம் மூணு லட்சம் சம்பாதிக்க முடியும்"

"அப்போ சந்தோசமான வாழ்க்கையை தேடிக்கோ அர்ஜுன், உனக்கே உனக்காக. உன் படிப்புக்காக, உன் ஹாஸ்பிடல்-னு பாக்காம, அர்ஜுன் வீட்டை, அர்ஜுன் மனச பாக்குற பொண்ண நாங்க தேடுறோம்"

ராதா கூறியதை அமைதியாக கேட்டவன் மனம் மாறிவிடும் என பெரியவர்கள் எண்ணியிருக்க அஞ்சு ஸ்ரீயின் அழகு அவனை வீழ்த்தியிருந்தது,

"வேணாம் பாட்டி. எனக்கு இது தான் சரியா வரும். பேசிடுங்க, எப்போ வேணாலும் கல்யாணம் வைங்க, எனக்கு பிரச்சனை இல்லை" அவ்வளவு தான் பேச்சு என அனைவரிடமும் கூறி தன்னுடைய அபார்ட்மெண்ட் நோக்கி புறப்பட்டான்.

அர்ஜுன் சென்றதும் வீட்டில் இருந்த அனைவரின் மனமும் கூட சந்தோசத்தில் துள்ளியது ராதாவை தவிர. அன்னையின் வருத்தமான முகத்தை பார்த்த பரிமளா,

"அர்ஜுன் பத்தி யோசிக்க வேணாம் ம்மா, அவனை என்ன செஞ்சாலும் நல்லா யோசிச்சு தான் செய்வான். நாமளும் பொண்ணோட குடும்பத்தை பத்தி நல்லா விசாரிக்கலாம்" என்றார் ஆறுதலாய்.

சரி என தலை அசைத்தாலும் மனதில் இருந்த நெருடல் நீங்காமல் இருந்தது அவருக்கு, கணவன் வந்து புகைப்படத்தை நீட்டும் பொழுது இல்லாத சலனம், பேரன் கூறும் காரணங்களில் வந்தது.

"ஏன் இந்த சோகம்?" பாட்டியின் அருகே வந்தமர்ந்தனர் மற்ற இரு பேரன்கள்.

இருவரின் முகத்தை பார்த்து மௌனமாய் இல்லை என்க, "உங்களுக்கென்ன டாக்டர் பொண்ணு வேணாமா?" - வருண் அதற்கும் இல்லை என்றார் பெரியவர்.

"சரி உங்க ஆசை எதுவோ அத எங்களை வச்சு நடத்திக்கோங்க" - தர்ஷன்(ப்ரியதர்ஷன்)

"ஆமா அர்ஜுன் கல்யாணத்துலையே நல்ல பொண்ணா பாருங்க, உங்க விருப்பம் எப்டியோ அப்டி" - வருண்

"ரத்த வாடையே பாக்காத பொண்ணா" - தர்ஷன்

"ஆபரேஷன் பண்ணிட்டு குளிக்காமலே வந்தா மூக்கை மூடிட்டே பாத்ரூம் உள்ள அடிச்சு விரட்டுற பொண்ணா" - வருண் "

"பயாலஜி வெறுக்குற பொண்ணா" - தர்ஷன்

"நம்ம பணத்தை பாக்காம நம்ம குடும்பத்தை பத்தி தெரிஞ்சு, புரிஞ்சு நடக்குற பொண்ணு" - வருண்

"என்ன சுத்துறத விட, உங்கள சுத்துற என்னோட பொண்டாட்டியா" தர்ஷன் சிரித்தான்.

"வீட்டுக்குள்ள நான் வந்த ஒடனே என்னோட அம்மா மாதிரி இல்லாம என்னோட பாட்டி மாதிரி சிரிச்சிட்டே, சூடா காபி குடுக்குற பொண்ணா பாருங்க" - வருண்

"ஆமா, மொத்தத்துல என்னோட சந்தோசம் அவ சந்தோசத்துலன்னு சொல்ற மாதிரி, டிகிரி, ஸ்டேட்டஸ், சொந்தம், சொத்துனு எதுவும் பாக்காம காதல் யுத்தம் மட்டும் தான் எங்களுக்குள்ள நடக்கணும்" - தர்ஷன்

"அப்டி ஒரு பொண்ண நீங்களே பாருங்க"

இருவரும் ஒன்றாக கூறவும், இந்த வயதிலும் தன்னுடைய கண்களின் மொழியை எளிமையாய் புரிந்து அதன்படி நடக்கும் அந்த இருவரின் கன்னத்தை வாஞ்சையாக தடவி தன்னுடைய சந்தோசத்தை கண்ணீர் மூலம் வெளியிட,

"அட பாட்டி" வருண் ராதாவை கட்டிக்கொள்ள, "டேய் போடா நான் தான்டா கட்டி பிடிப்பேன்"

அடுத்த சில நிமிடங்களில் அர்த்தமில்லாத அவர்கள் சண்டையில் சிரிக்க வைத்துவிட்டனர் பெரியவரை. 

அன்னையின் சஞ்சலத்தை மகனும், மருமகனும் சேர்ந்தது தீர்த்து வைக்க நிம்மதியானது வரதராஜனுக்கும்.

*****

ஒரு நாள் இரவு மருத்துவமனையிலிருந்து இரவு பத்து முப்பது மணிக்கு இலக்கியாவிற்கு அழைப்பு வந்தது.

"அக்கா நாளைக்கு காலைல ஒரு ஆபரேஷன் வர முடியுமா உங்களால?"

"ஏர்லி மார்னிங் ஆபரேஷனா அஞ்சலி?"

"ஆமா க்கா, அஞ்சு மணிக்கு ஸ்டார்ட் ஆகிடும். விஸ்வநாத் சார் தான் ஆபரேஷன் பன்றார், நான் ஒரு அவசரத்துக்கு ஊருக்கு போறேன் க்கா, உன்ன விட்டா வேற யார்கிட்ட சொல்லனு தெரியல" மிகவும் சோர்வான குரலில் அந்த பெண் கேட்கவும் அவளின் மன காயத்தை பெரிதுபடுத்தாமல் உடனே சரியென்றாள்.

இரவு வீட்டை சுத்தப்படுத்தி உறங்கவே பதினொன்றை தாண்டியிருக்க அதிகாலை வீட்டிலிருந்து நான்கு மணிக்கெல்லாம் கிளம்பியிருந்தாள். மகள் இரவில் செல்ல பயம் கொள்வதால் அவள் தந்தையே மருத்துவமனை வரை வந்து விட்டு சென்றார்.

ஐந்து மணிக்கு துவங்கிய அறுவை சிகிச்சை அடுத்த மூன்றரை மணி நேரம் நடக்க, பிறகு கருவிகளை சுத்தப்படுத்தி முடிக்கவே மேலும் இருவது நிமிடங்கள் கடந்திருந்தது.

இன்னும் பத்து நிமிடங்களில் அர்ஜுனின் ஓ.பி வேலைகளை கவனிக்க இவள் தான் செல்ல வேண்டும். அஞ்சலியுடைய வேலையை இலக்கியா வாங்கியிருந்தாலும், இலக்கியாவின் வேலை எப்பொழுதும் போல அன்று இரவு வரை இருந்தது.

பம்பரம் போல் சுழலும் அர்ஜுனின் வேகத்திற்கு உணவு அருந்தாத இலக்கியாவால் பதினோரு மணி வரை மட்டுமே சரிக்கட்ட முடிந்தது. டெஸ்ட் எடுப்பது, எடுத்த டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் வாங்குவது, நோயாளிகளை வழிநடத்துவது என மொத்த உடலும் தளர்ந்தது, கால்களில் வலி அதிகமாகியது, நிற்காமல் நடந்துகொண்டே இருந்ததால்.

அர்ஜுனிடம் சென்று ஓய்வு கேட்கலாம் என சென்றால் அவன் இன்னும் இரண்டு வேலைகளை கொடுத்து அந்த கேள்வி இருந்த இடம் தெரியாமல் ஓட விட்டான்.

அவனிடம் அதற்கு மேல் அழுத்தியும் பேச முடியவில்லை பெண்ணால். அவனிடம் ஏதாவது சந்தேகம் கேட்கும் சாக்கில் அவனுடைய மேஜையில் தன்னுடைய மொத்த அழுத்தத்தையும் கொடுத்து சில நொடிகள் ஆறுதல் தேடிவந்தாள்.

அதே போல் ஒருமுறை அவன் டேபிளில் சாய்ந்து நின்று மருந்து சீட்டிற்காக காத்திருந்த பொழுது அவளை தலை தூக்கி பார்த்தவன், "என்ன பழக்கம் இது இலக்கியா? ஒழுங்கா தள்ளி நேரா நில்லு"

காட்டமாக பேசியவன் வார்த்தைகள் சட்டென பெண்ணின் மனம் சுட்டது. கலங்கிய கண்களை இமை தட்டி அடக்கிய இலக்கியா மனம், தன்னை தீண்ட தகாத பெண்ணை போல் அல்லவா பேசுகிறான் என சுணங்கியது.

எப்பொழுதும் இருக்கும் ஒரு வித மகிழ்ச்சி அவன் அருகில் இல்லை, "இந்தா" மருந்து சீட்டை நீட்டி, "போன தடவ குடுத்த டேப்லட்ஸ் ஸ்டாப் பண்ணிட சொல்லு, இந்த ஸ்கேன் ரிப்போர்ட் வாங்கிட்டு வா"

அவளை பார்த்து நீட்டி, ரிப்போர்ட் ஒன்றை கவனித்தவன் அவள் தன்னிடம் சீட்டை வாங்காமலிருப்பதை கவனித்து அப்பொழுது தான் அவள் முகம் பார்த்தான். கண்கள் அவனை பார்க்காமல் அவன் நீட்டிய சீட்டின் மேல் கோவமாய் படிந்தது.

அவள் வாங்க போவதில்லை என்பதை புரிந்து, "நின்னுட்டே கனவு காணுற ஐடியாவா?" அழுத்தி கேட்டு அவள் மொத்த கவனத்தையும் தன் பக்கம் இழுத்தான்.

"வேற யாரையாவது குடுக்க சொல்லுங்க சார்" குரல் கமர அவனிடம் தைரியமாக பேசினாள்.

இதுவரை எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும் முகம் சுளிக்காமல் வேலையை செய்யும் பெண் இன்று எளிமையான வேலையை மறுக்கவும் அவள் முகத்தை உன்னிப்பாக கவனித்தான்,

"ஏன் குடுக்க முடியாது?"

கண்களை மூடி சோர்வை விழுங்கி, "வேற ஒர்க் இருக்கு சார் ப்ளீஸ்" மன்றாடியது அவள் வார்த்தைகள் மட்டுமல்ல, அவள் மனமும் கூட.

"ஓ... என்ன தவற உனக்கு வேலை குடுக்க இன்னொரு ஆளுங்க இருக்காங்களா?" இலக்கியா பதில் பேசவில்லை.

"சரி அப்போ இனிமேல் நீ அவங்களுக்கு அசிஸ்ட் பண்ணிக்கோ, நான் வேற ஆள அப்பாய்ண்ட் பண்ணிக்கிறேன்"

இது தான் முடிவென உறுதியாய் நின்றவன் வார்த்தைகளில் அதிர்த்தவள் அவனை பார்க்கும் இந்த சில நொடிகளுக்காக ஆசைக்கொண்டு உடனே அவன் கையிலிருந்த பேப்பரை வாங்கி வெளியில் நடந்தவளை நிறுத்தினான்.

"நில்லு... குடுத்துட்டு அஞ்சே நிமிசத்துல வா, பேஷன்ட்ஸ் எல்லாரையும் மதுக்கு பார்வட் பண்ணிடு"

அவனை திட்டவும் முடியாமல் தன்னுடைய உடல் சோர்வினால் உண்டாகும் கோபத்தையும் கட்டு படுத்த முடியாமல், வறண்ட தொண்டையின் தாக்கம் மொத்தமாய் கண்ணீராய் வெளியில் வந்தது. அவன் கொடுத்த வேலைகளை முடித்து அர்ஜுன் ஓ.பி பார்க்கும் அறையில் பார்க்க அவன் இல்லை.

இரண்டு மாடி மேலே ஏறி அவன் அறை கதவை தட்டினாள். உள்ளே வருமாறு குரல் வர அங்கிருந்த ஒரு சோபியாவில் அமர்ந்திருந்தான் அர்ஜுன்.

"சார் வர சொன்னிங்க" இலக்கியா நிற்க அவளை கண்கள் உயர்த்தி பார்த்தவன் தனக்கு முன்னே இருந்த ஒரு தட்டை காட்டினான்.

குழப்பமாய் அவனை பார்த்து இலக்கியா அசையாமல் நிற்க, "உனக்கு தான் எடுக்குறியா இல்லை வந்து ஆள் வச்சு ஊட்டி விட சொல்லவா?"

"எ.. எனக்கு எதுக்கு சார்?" - இலக்கியா

"காலைல ஆபரேஷன் அன்டன் பண்ணிருந்தா சாப்பாடு சாப்பிட்டு வந்து ஓ.பி அன்டன் பண்ண தெரியாதா? இப்பிடி தான் எதுவும் சாப்புடாம இருப்பியா?" - அர்ஜுன்

சில நிமிடங்களுக்கு முன்பு அவன் பேசிய கூரிய வார்த்தை அத்தனையும் அந்த வாக்கியத்தில் அடிபட்டு மாண்டது. ஒரு வார்த்தை தொழிலை மீறி பேசியிராதவனின் முதல் முயற்சியே அவள் முகம் பார்த்து அகம் படித்ததில் குளிருந்து போனது பேதையின் உள்ளம்.

"இருக்கட்டும் சார், நான் கேன்டீன்ல வாங்கிக்கிறேன். அரை மணி நேரம் எனக்கு பிரேக் தாங்க" கேட்டாள் உள்ளிறங்கிய குரலில்.

அவளை ஆழ்ந்து பார்த்தவன், "சாப்பிட முடியுமா முடியாதா? ஒக்காரு" அவனுக்கருகில் சோபாவை காட்டினான். அவனுடைய அழுத்தத்தை புரிந்தவள் குனிந்து அந்த தட்டை எடுத்து ஓரடி வைத்த பொழுது,

"எங்க போற?" என்றான் தனக்கு முதுகு காட்டி நின்ற பெண்ணிடம்.

அவஸ்தையில் கண்களை மூடி திறந்தவள், "உங்க பக்கத்துல ஒக்காந்து என்னால சாப்பிட முடியாது சார்"

அவளின் தவிப்பை உணர்ந்தவன் எழுந்து அவன் மேஜைக்கு அருகில் இருக்கும் நாற்காலி ஒன்றை டீ பாயின் முன்பு எடுத்து போட்டு மீண்டும் சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்துகொண்டான்.

அவன் செய்கையின் அர்த்தம் புரிந்தவள் மனம் மேலும் தவித்தது. இவன் அருகே தினம் தினம் காரணமே இல்லாமல் ஈர்க்கப்பட்ட இதயத்திற்கு இப்பொழுது இவனை பிடிக்க காரணங்களை கொடுத்தால் அந்த மனம் படும் பாட்டை தான் அவன் அறிவானோ?

அமைதியாக மறு பேச்சின்றி அமர்ந்தவள் தொண்டையில் இறங்கவே மாட்டேன் என சண்டித்தனம் செய்தது அவன் கொடுத்த மிருதுவான அந்த பிரட் சாண்ட்விச்.

அவளை பார்க்கவில்லை அவன், ஒரு நொடி கூட அவள் முகத்தையோ தவிப்பையோ கண்டுகொள்ளும் எண்ணம் அவனுக்கு என்றும் இருந்ததில்லை.

சின்னஞ்சிறு செயலில் இன்பம் கொள்ளும் அந்த பிஞ்சு இதயத்திற்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வீணாகி குப்பைக்கு செல்லும் பிரட் சூடாகாக இரண்டு பச்சை வெங்காயமும் தக்காளியும் அலங்கரித்து வந்தது பெரியகோவிலின் மகிமையை விட உயர்ந்து நின்றது.

காதலில் பித்தாகியிருந்த அவள் மனம் பசியை துறந்து அவன் செயலை உண்டு மனதை நிறப்பியது.

அதற்கு மேல் உள்ளே உணவை அனுப்பாதே என வயிறு கட்டளையிட்டும், வரம்பு மீறி செல்லும் அந்த உணவை உள்ளிழுக்காமல் இருக்க, அவனே எழுந்து சென்று ஒரு கிளாஸ் தண்ணீரை அவன் முன் வைத்தான்.

முகத்தை தாங்கி கால்களில் கை வைத்து தன்னை பார்க்கும் அவன் பார்வை வீச்சை தாங்காமல் விக்கும் உணவை வீணடிக்க விரும்பாமல் இலக்கியா ஒரு வழியாக கால் மணி நேரம் எடுத்துக்கொண்டாள்.

"ஏன் இந்த பதட்டம்?" அவன் கேட்பதற்கு பதில் வரவில்லை.

திகட்ட திகட்ட மகிழ்ச்சியை கொடுத்து திக்கு முக்காட செய்தவனின் கேள்விக்கு பதில் நிச்சயம் இல்லை, ஆனால் அவனுக்காக காலமெல்லாம் கொடுக்க ஒரு வார்த்தை மட்டுமே இருந்தது, "தேங்க்ஸ் சார்"

ஆழியின் ஆழத்தை கொண்டவன் கண்களில் எந்த விதமான உணர்வையும் பிரித்தெடுக்க முடியவில்லை பெண்ணால், "வீட்டுக்கு போ, நாளைக்கு ஹாஸ்பிடல் வந்தா போதும்"

வேலை அசதியை விட மருத்துவனின் செயல் அவள் மனதிற்கு ஓய்வு தர வேண்டியது. தயக்கமாக எழுந்தவள் வாய் வார்த்தையாக, "பரவால்ல சார் ஈவினிங் போறேன்" என்றாள்.

"அடுத்தவங்களுக்கு உதவி பண்றது தப்பில்லை, அந்த உதவி நம்ம மனசையும் உடம்பையும் பாதிக்காம இருக்க நமக்கு தகுதியிருக்கா-னு பாக்குறது தான் முக்கியம்"

அவளின் உடலை படித்தவன் கூற, அவன் வார்த்தையை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அர்ஜுனிடம் வாதாடவும் வேண்டாம் என தோன்றியது.

இது என்ன முதல் முறையா இது போன்ற இரண்டு மூன்று வேலைகளை இவள் ஒருத்தியே பார்ப்பது? இரண்டு நாள் கூட உறக்கமில்லாமல் இருந்ததுண்டு ஆனால் அந்த நேரமெல்லாம் குட்டி கப் டீ குடித்தாவது உடலின் அசதியை போக்கிவிடுவாள் இன்று தான் தண்ணீர் மட்டுமே துணையாகி போக மொத்த உடலும் சோர்வின் பிடியில் விழுந்தது.

"ஓகே சார்" பேச்சுக்காக ஒப்புக்கொண்டு நின்றவளிடம் ஒரு கார்டை நீட்டினான்.

அலங்கரித்து நின்ற அந்த அழகிய காகிதத்தில் சொக்கி போனவள் அதனை திறக்கும் முன்பே அவளின் உயிரை பாதி கொன்றிருந்தான் தன் செய்திகொண்டு.

"கம்மிங் சண்டே எனக்கு என்கேஜ்மெண்ட், கண்டிப்பா வந்துடு"

இத்தனை நேரம் அவள் பார்த்திராத ஒரு மெல்லிய புன்னகை அவன் இதழின் ஓரம். எந்த சிரிப்பிற்காக பல நாள் இலக்கியாவின் மனம் ஏங்கியதோ அதே சிரிப்பு இன்று அவளை கூறுபோட்டு கொன்றது.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro