Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நிலா - 15


அன்று மாலை நேரம். வீட்டிற்கு செல்ல இருந்தவளை அர்ஜுன் பிடித்து அமர்த்தியிருந்தான். காரணம் அவனுடைய பனி நேரம் முடிய இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது. 

இலக்கியாவின் பனி நேரம் இன்னும் ஒரு மணி நேரத்தில் முடியவிருக்க, ஓ.பி அறைக்கு அருகே இருந்த மேஜையில் அன்றைய குறிப்புகளை குறித்து வைத்துக்கொண்டிருந்தாள். 

"இலக்கியா" குரல் கேட்கவும் சிரம் உயர்த்தி பார்த்தவள், அங்கு நெடுஞ்செழியன் நிற்பதை பார்க்கவும் சங்கடமாய் உணர்ந்தாள். 

ஆனால் அவன் அவளை தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது காட்டிய ஆசையை சுற்றி இத்தனை மக்கள் இருக்கும் பொழுது காட்டவில்லை. தொழில்முறை தொனி மட்டுமே அவனிடம் வெளிப்பட்டது. 

"ஒக்காரலாமா?" சிறு சிரிப்போடு அவன் கேட்க, "உக்காருங்க" என்றாள் அவனை உன்னிப்பாக கவனித்து. 

முன்பு பார்க்கும் பொழுது சிகை எல்லாம் களைந்து, சரியான உடை இல்லாமல் பார்க்கவே சற்று தள்ளி நின்றிடலாம் என தான் இருக்கும். 

இன்றோ வெள்ளை நிற சட்டை, பழுப்பு நிற காற்சட்டை அணிந்து உழைப்பின் அடையாளமாக பார்க்கவே மதிக்கும் தோற்றத்தோடு தான் இருந்தான். 

"அன்னைக்கு உங்ககிட்ட சரியா பேச முடியல. நீங்க ஏதோ அவசரத்துல இருந்திங்க. உங்களுக்கு தெரியாதுல. இங்க மேனேஜ்மென்ட் டிபார்ட்மென்ட்ல ஒர்க் பண்றேன்"

"ஓ சரிங்க. ஏதாவது வேணுமா?" 

நெடுஞ்செழியன், "ஆமா டிஷ்ச்சார்ஜ் ஆன சில பேஷண்ட்ஸ் பத்தி கொஞ்சம் டீட்டைல்ஸ் மிஸ் ஆகியிருக்கு. அதுல உங்க டிபார்ட்மென்ட்ல ரெண்டு பேஷண்ட்ஸ் டீடைல்ஸ் வேணும்" 

"கவிதா மேம் கேபின் காட்டவா. அவங்களுக்கு என்ன விட எல்லாம் தெரியும்" 

"இல்ல அவங்க ஏதோ எமெர்ஜென்சினு வேகமா போய்ட்டதா சொன்னாங்க. கால் பேசிட்டு தான் வர்றேன். வேற யாரை கேக்கனு தெரியல" 

"ரொம்ப அர்ஜென்ட்டா?" 

"ஆமா அடுத்த வாரம் ஒரு மீட்டிங், இந்த ஒர்க் முடிச்சி நான் குடுத்தா தான் அடுத்த வேலை நடக்கும். சாரி உங்கள டிஸ்டர்ப் பன்றேனா?" 

"இல்ல, இருக்குற டீட்டைல் தாங்க, நான் லாக் (Log) எடுத்துட்டு வர்றேன்" அவன் தகவல்களை கொடுக்க, அதை எடுக்க அர்ஜுன் இருக்கும் அறைக்கு அருகே இருந்த அறைக்கு தான் செல்ல வேண்டும். 

இவள் தேவையானவற்றை எடுத்து வெளியே வர, சரியாக அர்ஜுன் வந்தான். 

மனைவியை பார்த்ததும் பெருமூச்சோடு, "ஒரு காபி தர்றியா?" 

"சார் ஒரு அர்ஜென்ட் ஒர்க். பசுபதி அண்ணாகிட்ட சொல்றிங்களா?" நிற்க கூட இல்லை வேகமாக ஓடிவிட்டாள். 

இலக்கியா கொடுத்த குறிப்பேட்டிலிருந்து தனக்கு தேவையான தகவல்களை நிதானமாக ஆராய்ந்து குறிப்பிட்டுக்கொண்டிருந்தான் நெடுஞ்செழியன். 

"புதுசா இம்ப்ளிமென்ட் பண்ண பார்ம் கொஞ்சம் குழப்பமா இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. அதுனால இந்த பிரச்சனை வரலாம்" என்றாள் அவளே அனைவரின் பிரதிநிதியாக. 

"அர்ஜுன் சார் தான் போன மாசம் இதை திடீர்னு கொண்டு வந்துருக்கார். எங்களுக்கே கஷ்டமா தாங்க இருக்கு. ஆனா அதுல இருக்குறது எல்லாம் ரொம்ப அவசியமானது தான். விட முடியாதுல" என்றான் பொறுப்பான நிர்வாகியாக. 

"சரி தான், அப்போ அதை கொஞ்சம் மீட்டிங் வச்சு சொல்லலாமே. இங்க இருக்குற எல்லாரும் ஈஸியா கேட்ச் அப் பண்ணிக்கிறவங்க இல்ல" 

சிரித்துக்கொண்டான் அவன், "சொல்லி பாக்கறேன் மேனேஜர்கிட்ட, அவர் ஈஸியா எடுத்துக்குறவர் மாதிரி தெரியல. 'எனக்கு என்ன மீட்டிங் வச்சா சொல்லி தந்தங்களா'னு கேக்குற மனுஷன்" 

"அப்போ எங்களுக்கும் வேற வழியில்லை, தப்பு தப்பா பிள் பண்ணி அனுப்புறோம்" 

இவளும் சிறிய புன்னகையோடு கூற தலை உயர்த்தி அவளை பார்த்தவன், பற்கள் தெரியாமல் அவள் சிரித்த அழகில் ஒரு நொடி சுயம் மறந்து தான் போனான். 

அவளை சிரித்த முகமாய் அவன் பார்ப்பது இதுவே முதல் முறை. எதுவும் பேசாமல், தனக்குள்ளே ஒடுங்கி போயிருந்த இலக்கியாவை தூரத்தில் மட்டுமே இருந்து ரசித்து காதலித்து வந்த நெடுஞ்செழியனுக்கு இவ்வளவு அருகே அடக்கமான அழகோடு வசீகரிக்கும் பெண்ணை பார்த்து மயங்கி போனதில் தவறில்லையே.

உடனே தன்னை சுதாரித்தவன் அதே மெல்லிய புன்னகையோடு, "சொல்லி பாக்குறேன், இல்லனா அர்ஜுன் சார் பீட்பேக் உங்க எல்லார்கிட்ட இருந்தும் வாங்கணும்னு சொன்னார் அதுல சொல்லுங்க. பல்க்கா இருந்தா டக்குனு ஆக்ஷன் நடக்கும்" 

இலக்கியா, "ஏங்க, அப்போ ஒரு ஆள் சொல்றதெல்லாம் கண்டுக்க மாட்டிங்களா?" 

"நூத்து கணக்கானவங்க இருக்குற இடத்துல ஒருத்தரோட வார்த்தை எப்படி எடுபடும்?" 

"அது தாங்க அழகான நிர்வாகம். எல்லாரையும் திருப்த்தி படுத்த முடியாது தான். அதுக்காக கேக்காம கூட இருக்குறது தப்பில்லையா?" 

"நீங்க பேசாம மேனேஜ்மென்ட் பக்கம் வந்துடுங்க, யாரையும் உங்கள கேள்வி கேக்க விட மாட்டீங்க" சாதுர்யமாக இவன் நழுவ பார்த்தான். 

"அப்டி எல்லாம் எஸ்கேப் ஆகிட முடியாது. பீட்பேக்ல நான் வில்லங்கமா ஒன்னு யோசிச்சு எழுதுறேன். பாக்கலாம் என்ன ஆக்ஷன் எடுக்குறீங்கனு" 

குறிப்பேட்டை அவளிடம் ஒப்படைத்தவன், "என் முதல் வேலையே உங்க பார்மை எங்கையாவது ஒளிச்சு வைக்கிறது தான்" என்றவன், "எங்கங்க ஒளிச்சு வச்சிருந்திங்க இந்த இலக்கியாவை? இவ்ளோ பேச தெரியுமா உங்களுக்கு?" 

ஓபி பார்த்துக்கொண்டிருந்த ஒரு மருத்துவர் ஒரு தகவலுக்காக அர்ஜுனை அங்கு அழைத்திருக்க, வந்தவன் சிரித்து பேசிக்கொண்டிருந்த மனைவியையும் நெடுஞ்செழியனையும் பார்த்து உள்ளே சென்றான். 

அவன் பேசி முடித்து வந்த பொழுது தான் நெடுஞ்செழியன் அவ்விடத்தை விட்டு அகன்றது. 

அவள் இவ்வாறெல்லாம் பேசி அவன் பார்த்ததே இல்லை, அங்கு பணிபுரியும் பெண்களோடு பேசுவாள் அதுவும் அதிகம் சிரித்து கூட பேசாதவள் இவனிடம் பேசியது ஆச்சிரியமாக தான் இருந்தது. 

ஆனாலும் பெரிதாய் எடுக்காமல் விட்டுவிட்டான், என்ன சிறு கோவம் அவன் கேட்ட காபி அவனுக்கு கிடைக்கவில்லை. 

அடுத்த வாரத்தில் ப்ரியங்கா மகன் வேதவ் பிறந்தநாள் இடைப்பட்ட நாளில் வந்திருக்க, அன்று எளிமையாக கோவில் சென்று வழிபட்டு வந்த குடும்பம், வார இறுதியில் கொண்டாட்டத்தை துவங்கிவிட்டனர். 

கொண்டாட்டம் என்றால் ஆடம்பர செலவுகள் செய்து, பலரை அழைத்து அல்ல. இவர்கள் குடும்பம் மற்றும் ப்ரியங்கா கணவனின் தாய் தந்தையர் தான். அனைவரும் இம்முறை இருந்தது சுந்தர்ராஜன் பரிமளா வீட்டில்.

மாலை நேரம் வீட்டிற்கு பக்கவாட்டத்திலிருந்த இடத்தில் தான் ஆங்காங்கு குடும்பத்தினர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.  

பல வகையான மரங்களுக்கு இடையில் அவர்கள் அமர்ந்திருந்த இடம் இளம்வெயிலில் இதமாக இருந்தது. 

ஒரு பக்கம் மாலை சிற்றுண்டிக்காக வேலையாக பார்பிக்யூ வகையில் சிக்கன் ஒரு பக்கம் அனலில் வெந்துகொண்டிருக்க, மற்றொரு பக்கம் அர்ஜுனுக்கு பண்ணீர் தயாராகிக்கொண்டிருந்தது. 

இரவு உணவு வெளியே சொல்லியிருக்க, மாலை நேர சிற்றுண்டி மட்டும் பெரியவர்களுக்கு ஓய்வு கொடுத்து இலக்கியா ப்ரியங்கா மட்டும் தான் பார்க்கிறார்கள். 

"அசைவம் இருந்தாலும் இவன் ஒருத்தன் தான் இந்த பண்ணீரை தேடியே போவான்" மகனை பானு செல்லமாக திட்டி செல்ல இலக்கியாவும் சிரித்துக்கொண்டாள். 

"கொஞ்சம் தான்க்கா பண்ணீர் இருக்கு, வாங்கிட்டு வர சொல்லலாமா?" 

"வேணாம் இலக்கியா, அவன் ஒருத்தன தவற யாரும் இங்க பண்ணீர் எடுக்க மாட்டாங்க" என்றுவிட்டாள் ப்ரியா. 

அதுவும் சரியாக பட அதனை சமைத்து ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்து வைத்தாள். 

அபொழுதென பார்த்து தூரத்தில் ஆண்கள் பட்டாளமும், வேதவும் விளையாடிக்கொண்டிருந்த நேரம் எதிர்பாராத விதமாக பந்து உணவினை நோக்கி வர, துரிதமாக இலக்கியா அதனை எளிதாக பிடித்திருந்தாள். 

இன்று அவ்வளவு தான் உணவு என ஆண்கள் நினைத்திருக்க அதிர்ச்சியோடு இலக்கியாவை கேலி செய்யவே வருண் மற்றும் தர்ஷன் கூச்சலிட்டு கத்திவிட்டனர். 

போதாக்குறைக்கு விசில் வேறு. 

"ஏண்டா இப்டி கத்துறிங்க?" ராமகிருஷ்ணன் கேட்க, "இங்க ஒரு அழகான பீல்டர வச்சிட்டு இத்தனை நாள் விட்டுட்டோமே" 

ராதா, "வருண்..." என கண்டிக்க அவர்கள் விளையாட்டு ஆர்வத்தில் அல்லவா இருந்தனர், "இலக்கியா நீ வா, இன்னைக்கு உன்ன களத்துல இறக்குறோம்" என்றான் இலக்கியாவின் கையையே இழுத்து தர்ஷன். 

இவளோ பதறிவிட்டாள், "ஐயோ சார், எனக்கு இதெல்லாம் சுத்தமா வராது. ஏதோ தெரியாம புடிச்சிட்டேன்" 

"பொய் சொல்றாடா, கிரிக்கெட் புட்பால் எல்லாம் பாப்பா" தன பங்கிற்கு அர்ஜுன் இழுத்துவிட்டான். 

"இதெல்லாம் என் மருமகளுக்கு தெரியுமா, சும்மா போ ம்மா" என்றார் வரதராஜன். 

"ஐயோ மாமா, அவர் சும்மா சொல்றார். பாப்பேன் அவ்ளோ தான்" அர்ஜுனை கண்களால் கெஞ்சினாள். 

"விடுங்க, இலக்கியா சங்கடப்படுது, டேய் போங்கடா. பொழுது போகலானா இங்க யாரையாவது வம்புக்கு இழுக்க வந்துடுங்க" பரிமளா இவர்களை விரட்ட அதில் வருண் தர்ஷன் இருவருக்கும் சற்று ஏமாற்றம் தான். 

"நாங்க கூப்பிட்டு வர மாட்டிக்கிற" என்றான் கொஞ்சம் கோவத்தை காட்டி தர்ஷன். 

"சார், நிஜமா எனக்கு அதெல்லாம் வராது. பாருங்க இந்த சுடி போட்டு எப்படி வருவேன்?" 

"அதுக்கென்ன, ப்ரியா டிரஸ் போட்டுக்கோ" உடனே ஒரு தீர்வை கொண்டு வந்தான் வருண். 

"சார் ப்ளீஸ்" 

"இந்த சார நீ எப்ப தான் விட போறியா" சலித்துக்கொண்ட வருண் அங்கு ஓரமாக இருந்த பண்ணீரை பார்த்துவிட்டான். 

"என்ன பண்ணீர் எல்லாம் இருக்கு? நீ செஞ்சியா இலக்கியா?" அவள் தலை அசைக்க, ருசி பார்க்க எடுத்தவனுக்கு அது பிடித்துப்போக தர்ஷனோடு இணைந்து அவனே மொத்தத்தையும் முடித்துவிட்டிருந்தான். 

உண்பவனை தடுக்க முடியாமல் இலக்கியா அடுத்த வேலையை பார்க்க அப்பொழுது அங்கு வந்த ப்ரியா, "அது அர்ஜூன்க்குடா, நீங்க ஏன் சாப்பிட்டீங்க?" மறக்காமல் அருஜுனை அழைத்தும் அதனை கூறிவிட்டாள். இவர்களோ எளிதாக ஒரு மன்னிப்பை வைத்து ஓடிவிட்டனர். 

சிற்றுண்டியை முடித்து ஒரு குடும்ப புகைப்படத்தை எடுத்துவிடலாம் என அனைவரும் கூடி நின்றனர். 

ப்ரியா மாமனார் மாமியார் மற்றும் ராமகிருஷ்ணன், ராதா தம்பதியர் இருக்கையில் அமர்ந்திருக்க அவர்களுக்கு இடையில் வேதவ். அவர்களுக்கு பின்னே, வரதராஜன் தம்பதி, சுந்தராஜன் தம்பதி மற்றும் ப்ரியா தம்பியின் நின்றனர். 

அவர்களுக்கு பின்னே, ஒரு நீள் இருக்கையில் தர்ஷன், வருண், அர்ஜுன் மற்றும் இலக்கியா. 

புகைப்பட கலைஞருக்கு எப்படி புகைப்படம் எடுக்க வேண்டும், குடும்பத்தினர் எந்த மாதிரி நிற்க வேண்டும் செய்கை செய்ய வேண்டுமென வருண் தர்ஷன் கூறிவிட்டு பின்னே வந்து நிற்க, அந்த இருக்கையில் நிற்பதற்கு இடமிருந்தும், "அர்ஜுன் தள்ளி நில்லு" வேண்டும் என்றே ஒட்டி நின்றான் தர்ஷன். 

"இடமில்லைடா" என்றான் இவன். 

"அப்போ நான் எங்க போறதாம், போடா அங்குட்டு" வருண் தள்ளிவிட, நுனியில் நின்ற இலக்கியா தடுமாறுவதை உணர்ந்த அர்ஜுன் வேகமாக அவளது இடையை வளைத்து பிடித்திருந்தான். 

'ஹக்' அதிர்ந்தவள் இதழிலிருந்து தன்னாலே அவ்வார்த்தை பிறக்க திரும்பி பார்த்தவனுக்கு அவளது நிலை பார்க்கவே அவ்வளவு பிடித்தது. அதே ஆசையில் இன்னும் தானாகவே நெருங்கி அவளிடமும் இறுக்கத்தை கூட்டினான். 

மௌனத்தின் மொழியில் இருவரும் பேச, "சார் இங்க பாருங்க" புகைப்பட கலைஞர் இவர்களை அழைத்தான். 

பெயருக்கு ஒரு முறை திரும்பி பார்த்தவன், அவன் அடுத்த புகைப்படம் எடுக்கும் முன்பு, "எங்கடி என் பண்ணீர்?" காதில் வந்து கேட்டான். 

இவளுக்கு திக் என ஆனது. அவன் சகோதரர்கள் கூறிய பொழுது பரவாயில்ல என கூறியவன் எதற்கு தன்னிடம் இப்பொழுது சண்டைக்கு வர வேண்டும்? 

"எனக்கு பண்ணீர் தந்தூரி வேணும்" என்றான் தீவிரமாக. 

"வீட்டுக்கு போய்..." 

"சார் இங்க பாருங்க" புகைப்பட கலைஞர் இருவரையும் அழைத்தது எல்லாம் இருவருக்கும் செவியையே தீண்டவில்லை. 

"இல்ல எனக்கு இப்போவே வேணும்" விடாமல் நின்றான். 

"கொஞ்சம் தான் இருந்துச்சு. அவங்க எடுப்பாங்கனு தெரியாது" 

"அதெல்லாம் எனக்கு தெரியாது. நீல வாங்கி வச்சிருக்கணும். அப்போ தப்பு உன் மேல தான்" 

"இது என்ன சார் பிடிவாதம்?" 

"என்ன பிடிவாதம், புருசனுக்கு சாப்பாடு போட மாட்டிக்கிற" 

"நான் எப்போ அப்டி சொன்னேன், நீங்க தான் பெரிய டாக்டர் ஆச்சே, நீங்களே சமைச்சுக்கோங்க" 

"நக்கலு? ம்ம்ம்?" அவன் விரல்கள் அவளது இடையில் சற்று அழுத்தம் கூட்ட, விதிர்விதிர்த்து போனாள். 

"அத்தை மாமா இருக்காங்க" முன்னே இருந்தவர்களை கண் காட்டினாள். 

"நான் எதுவுமே பண்ணல, நீ விழாம இருக்க புடிச்சிருக்கேன்" என்றான் ஒன்றுமே அறியாதவன் போல், "விற்றவா?" மெல்ல அவன் கையை விலக்க பார்க்க, வேகமாக இவள் அவன் இடையோடு இருந்த சட்டையை பிடித்து, "வேணாம்" என்றாள் எவருக்கும் கேட்காமல் கண்களில் பீதியோடு. 

"ஏய் என்ன சட்டையை கசக்குற?" 

அவனை விடவும் முடியாமல் பிடிக்கவும் முடியாமல் இவள் திணற, "வேற எங்க தான் புடிக்கிறதாம்?" 

"நான் உன்ன புடிச்சிருக்க மாதிரி நீயும் புடிச்சுக்கோ" 

"நான் கீழயே நிக்கிறேன்" அவனை விட்டு கீழே இறங்க முயன்றவளை மீண்டும் தன்னோடு பிடித்து வைத்துக்கொண்டான், "இருடி. சும்மா எதுக்கு எடுத்தாலும் கோவத்தை காட்டிட்டு" 

"நீங்க தான விட போறேன்னு சொன்னிங்க?" 

"பயப்புடுற மாதிரி தான். இன்னைக்கு நீ பன்னதுக்கெல்லாம் உனக்கு பனிஷ்மென்ட் இருக்கு" 

"நான் என்ன பண்ணேன்?" 

"பண்ணீர் தரல, இதோ என் சட்டையை கசக்கிட்ட" 

"வீட்டுக்கு போய் பண்ணீர் பண்ணி தந்துட்டு இந்த சட்டையை அயர்ன் பண்ணி தந்துடுவேனாம். அப்போ நோ பனிஷ்மென்ட்" 

"கேடி" அர்ஜுன் சிரிப்போடு அவளை பார்க்க வெட்க சிரிப்போடு முன்னே திரும்பினாள். 

அவளை தொடந்து திரும்பிய அர்ஜுன் தங்களை சுற்றி பார்க்க, வருண் மற்றும் தர்ஷன் இவர்கள் நின்றிருந்த இருக்கையின் மற்றொரு முனையில் கன்னத்தில் கை வைத்து இவர்களை பார்த்து அமர்ந்திருக்க, ஏனையோர் இவர்களை காணாதது போல் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். 

அனைத்திற்கும் மேல் புகைப்பட கலைஞன் தரையில் அமர்ந்து இவர்களை பார்த்திருந்தான். இலக்கியாவிற்கு வெட்கம் பிடுங்கி தின்றது. 

தர்ஷன், "அர்ஜுன் நீ லவ் பண்ணி முடிச்சிட்டா எங்க நிலைமையை கொஞ்சம் கன்சிடர் பண்ணலாம். வயசானவங்க எல்லாம் இருக்காங்க ரொம்ப நேரம் நிக்க முடியலயாம்" மருத்துவனுக்கே வெட்கம் தான் வந்தது, இப்படியா மொத்தமும் மறந்து பேசுவேன் என. 

இருந்தும், "நான் சண்டை போட்டுட்டு இருந்தேன், ரொம்ப கடுப்பேத்துறா உன் அண்ணி. டேய் தம்பி போட்டோ எடு. எல்லாரும் என்ன பேசிட்டு இருக்கீங்க, ஒழுங்கா நில்லுங்க" 

இவன் அதட்டியதில் மொத்த கூட்டமும் மீண்டும் அதே போல் வந்து நின்றுவிட தன்னையே அடக்கப்பட்ட சிரிப்போடு பார்க்கும் மனைவியிடம் திரும்பி ஒற்றை கண்ணடிக்க அவனது சேட்டையில் தாராளமாக விரிந்தது பெண்ணின் இதழ்கள். 

அந்த புகைப்பட கலைஞன் எடுத்த பல புகைப்படங்களில் இவர்களின் அழகிய சிரிப்பும் நிழல்படமாக உள்வாங்கப்பட்டது.

*****

வாரங்கள் அதன் போக்கில் நகர்ந்திருக்க, நாளை மருத்துவமனைக்கு பின்னால் இருக்கும் பெரிய வளாகத்தில் இரண்டு பெரிய கூடாரம் அமைக்கும் பனி மும்முரமாய் துவங்கியிருந்தது. 

இன்று நேற்று அல்ல, ஒரு வாரமாக இந்த வேலை தான் மருத்துவமனையில். நோயாளிகளுக்கு சற்றும் இடையூறு ஏற்படாமல் ஒதுக்குபுறமாக அமைத்திருந்த அந்த கூடாரத்தை வீட்டின் ஆட்கள் அடிக்கடி பார்வையிட்டு செல்வர். 

ஒரு கூடாரம் அந்த மருத்துவமனையின் ஆட்கள் அத்தனை பேரையும் தாங்கி ஒரு நிகழ்ச்சிக்கு தயாராக, மற்றொரு கூடாரம் அவர்களுக்கு வகை வகையான உணவை பரிமாற தயாராக இருந்தது. 

"சார், ஸ்டேஜ் டெக்கரேஷன் இன்னும் முடியவே இல்ல, என்ன சார் நேத்துல இருந்து அதை தான் பாத்துட்டு இருக்கேனு சொல்றிங்க" காட்டமாக கேட்ட அர்ஜுன் அதே மேடையின் ஓரத்தில் அமர்ந்தான். அந்த பக்கம் ஏதோ சமாளிக்கும் பதில் தான் வந்தது. 

"உங்க காரணம் எல்லாம் எனக்கு வேணாம். இன்னைக்கு நைட் எனக்கு ஒரு ஒர்க் இல்லாம எல்லாம் முடியனும். அதுவரை உங்க ஆளுங்கள நான் இங்க இருந்து அனுப்பவே மாட்டேன். இன்னும் எல்ஈடி செட் பண்ணல, என்னங்க இது ஒன்னு ஒன்னையும் நான் சொல்லிட்டே இருக்கணுமா?" 

"..." 

"சரி வைங்க" எரிச்சலோடு கையிலிருந்த விருந்தினர் பட்டியலின் அடுத்த விருந்தினருக்கு அழைத்தான். 

இந்த பரபரப்பு, வேகம் அனைத்திற்கும் காரணம் ராமகிருஷ்ணா மருத்துவமனை துவங்கி ஐம்பது ஆண்டுகள் ஆகியிருந்தது. 

அதனை கொண்டாடவே இந்த பிரமாண்ட ஏற்பாடு. மருத்துவமனையின் ஒவ்வொரு ஊழியருக்கு விருந்து வைத்து பலருக்கு இங்கு தான் விருதும் கொடுக்க ஏற்பாடுகள் நடக்கின்றது. 

ஊழியர்களுக்கு அழைப்பு கொடுக்கும் பொறுப்பை யாரிடம் ஒப்படைக்கலாம் என யோசித்த பொழுது வருண், தர்ஷன் தானே முன் வந்து அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். 

அவர்களின் விளையாட்டு குணத்தை புரிந்தும் அர்ஜுன் அவர்களிடமே அதை ஒப்படைத்தான் சிறு எச்சரிக்கையோடு தான். 

அவர்களுக்கு அதுவே சந்தோசமாக இருந்தது, குதூகலத்தோடு ஒவ்வொருவரிடமும் அழைப்பை கொடுத்து வந்தனர். அனைத்து பக்கமும் அலைந்து சோர்வில் அர்ஜுன் அருகே வந்து இருவரும் அமர்ந்தனர். 

கைபேசியில் பேசிக்கொண்டே மற்றொரு பட்டியலை நீட்டினான் அர்ஜுன், அவர்களிடம் பேசுமாறு. 

வாங்கிக்கொண்ட வருண், தர்ஷனிடம் கொடுக்க, அவனோ அதனை மடித்து சட்டை பையில் வைத்தான். பேசிமுடித்து அர்ஜுன் இவர்களை பார்க்க, ஒருவன் தோளில் மற்றொருவன் தலை வைத்திருக்க, மற்றொருவன் அவன் சிரத்தில் சிரம் வைத்து சோர்வில் அமர்ந்திருந்தனர். 

அவர்களின் நிலையை பார்த்து மெல்லிய சிரிப்போடு, "இதுக்கே இப்டி இருக்கீங்களேடா. இதுல ஹாஸ்பிடல் பொறுப்பு உங்களுக்கு வேணும்னு சண்டை வேற" 

தர்ஷன் தலையில் விளையாட்டாக அடித்தவன், எக்கி அவன் சட்டையிலிருந்த பட்டியலை எடுத்தான். 

"எங்களுக்கு வேணாம்டா, நீயே வச்சுக்கோ" ஒரே நாளில் அலுப்பு தட்டிய வருண் விட்டுக்கொடுத்தான் பெரிய மனதோடு. 

"நீங்க ஏன் சார் விட்டு குடுக்குறீங்க, இந்த சமோசாவை சாப்பிட்டு தெம்பா திரும்பவும் சண்டை போடுங்க" 

இவர்களுக்கு முன்னே வந்த இலக்கியா வீட்டிலிருந்து தான் கொண்டு வந்த சிற்றுண்டியை எடுத்து நீட்டினாள். சமோசாவை பார்த்ததுமே தெம்பு வந்து விட்டது, மூவருக்கும் அதனை கொடுக்க அர்ஜுன் வம்பு செய்யாமல் வாங்கி உண்டான். 

"என்ன இவன் குறை சொல்லாம சாப்பிடுறான்?" வருண் ஆச்சிரியமாக சகோதரனை பார்த்தான். 

"ஆயில் கம்மியா இருக்கு வருண்" என்றான் தர்ஷன். 

அர்ஜுன், "அவ பேக் (bake) பண்ணிருக்கா, ப்ரை பண்ணல" 

வருண், "மைதா..." 

"இல்ல, வீட்" என்றான் மனைவியை நன்கு அறிந்தவனாய், "உனக்கு?" 

இலக்கியா, "நான் சாப்பிட்டேன் சார். கவிதா மேம் வேகமா வர சொன்னாங்க. நான் கிளம்புறேன்" அவை விடைபெறும் முன்பு மூவருக்குமான தேநீரை ஒரு ப்லாஸ்க்கில் வைத்து சென்றாள். 

"நீ குடுத்து வச்சவன் அர்ஜுன்" செல்லும் இலக்கியாவை பார்த்து வருண் சகோதரனிடம் கூறினான். 

"எதுனால சொல்ற?" அர்ஜுனின் கேள்வியை தர்ஷன் கேட்டிருந்தான். 

"இப்டி பாத்து பாத்து செய்ற பொண்ணெல்லாம் டைனோசர் காலத்துலயே அழிஞ்சு போச்சு" என்றான் சோகமாய், "நாமெல்லாம் இதெல்லாம் எதிர்பாக்க கூடாது" 

அர்ஜுன், "ஓவரா புகழாதிங்கடா" 

தர்ஷன், "இவனுக்கு ரொம்ப ஈஸியா கெடைச்சிடுச்சு அதான் அதோட அருமை புரியல" 

அர்ஜுன், "அப்டிலாம் ஒன்னுமில்ல. அல்டரா மார்டனா மாறினாலும் இன்னைக்கும் பல பேர் இப்டி இருக்க தான் செய்றாங்க. ஏன் நம்ம பாட்டி இல்ல?"

வருண், "அதான் தான்டா நானும் சொல்றேன், அந்த மாதிரி பொண்ணுங்க எல்லாம் நம்ம பாட்டி காலத்துலையே ஓவர். சரி நம்ம அம்மாவையே எடுத்துக்கோ. 

கல்யாணத்துக்கு முன்னாடி பெரிய குடும்பம் எல்லாம் இல்ல, ஆனா இங்க வந்து ஒரு நாள் வேலை செஞ்சது இல்லனு பாட்டி சொல்லுவாங்க. காரணம் என்ன தெரியுமா? நம்ம குடும்பத்துல இருக்க செழிப்பு. 

வசதி இருக்கு, வேலைக்கு ஆள் இருக்குனு ஹாஸ்பிடல், இங்க விட்டா ரூம்னு இருந்துடுறாங்க. நீ சொல்லு நம்மள என்னைக்கு பக்கத்துல இருந்து படிக்க வச்சிருக்காங்க? 

இல்ல உனக்கு டீ புடிக்குமா காபி புடிக்குமான்னு தான் தெரியுமா? அம்மா குட் தான். பட் ஒரு நாள், 'முடியலடா சாமி'னு அம்மாவை நீ தேடிருக்கியா? அதை தான் சொல்ல வர்றேன். 

அடிமையா பொண்ணு வேணாம், நம்ம தேவை இதுனு ஒரு நாளைக்கு ஒரு தடவை என்னாச்சுனு கேட்டு கைல காபி கப் திணிக்கிற பொண்ணு கிடைக்கிறது கஷ்டம்னு சொல்றேன். 

அப்டி பாத்தா உன் கைல வைரமே கிடைச்சிருக்கு. நீ டீ கேட்டியா டயர்டா இருக்கேனு, வந்துச்சுல. உன்னோட ஹெல்த் கான்ஷியஸ் தெரிஞ்சு அதுக்கு தகுந்த மாதிரி, இவ்ளோ வேலையையும் சமையல் பண்ணி வந்துருக்காடா" 

தர்ஷன், "விடுடா, இலக்கியாவை யாராவது கொத்திட்டு போனா தான் இவனுக்கு தெரியும்" 

அர்ஜுன், "லூசு மாதிரி பேசிட்டு இருக்க" அடிக்கவே கிளம்பியவனை வருண் தான் பிடித்து நிறுத்தினான். 

"இங்க கோவப்பட்டு என்ன யூஸ். அதோ அங்க பாரு" தர்ஷன் கண்ணை காட்டிய திசை பார்த்தன் அர்ஜுன். 

சற்று தூரத்தில் இலக்கியா நெடுஞ்செழியனோடு பேசிக்கொண்டிருந்தாள். சாதாரணமாக அல்ல, அவன் எதற்கோ மென்மையாக சிரிக்க, இலக்கியா சற்று அதிகமாக சிரிப்பது தெரிந்தது. 

"அதுக்கு என்ன இப்போ?" 

"அதுக்கு என்னவா? அவன் யாருனு தெரியுமா?" வியந்தான் வருண் அர்ஜுனின் இந்த அலட்சியத்தில். 

"தெரியாது, ஆனா அவ கூட அடிக்கடி பேசி பாத்துருக்கேன்" என்றான் இப்பொழுதும் சுவாரஸ்யம் இல்லாமல். 

"டேய் இலக்கியாக்கு காம்படிஷன் ஜாஸ்தி. அவ ஸ்கூல் படிக்கிறப்போ ஒரு பையன் ப்ரப்போஸ் பண்ணிருக்கான், காலேஜ்ல ரெண்டு, இப்போ இங்க ஹாஸ்பிடல் வந்து ஜாயின் பண்ண புதுசுல ஒரு டாக்டர் ப்ரப்போஸ் பண்ணிருக்கான்" 

நண்பனின் கை பிடித்து, "மச்சான் நம்மள லிஸ்ட்ல விட்டுட்ட" வருண் நினைவு படுத்த அர்ஜுன் முறைத்தான். 

"உனக்கெல்லாம் பயப்பிடல, உங்க கல்யாணத்துக்கு முன்னாடி நாங்க கூட அப்ரோச் பண்ணலாம்னு தான் இருந்தோம்" சிறிதும் தயக்கமோ கூச்சமோ வருணிடம் இல்லை. 

இவர்களை பற்றி சகோதரன் அவனுக்கு தெரியாதா தேநீரை அருந்திக்கொண்டே கேட்க சுவாரஸ்யமாக இருந்தது மருத்துவனுக்கு. 

"சரி இவன் கதைக்கு வாங்கடா" இவனே அழைத்து வந்தான். 

"ம்ம்ம் இவன் ஒரு வருசமா இலக்கியாவை பஸ்ல பாலோ பண்ணிட்டே இருந்திருக்கான். அடிக்கடி பேச ட்ரை பண்ணிருக்கான் போல, பட் முடியலயாம். இப்போ இங்க வேலை கிடைச்சிருக்கு. எனக்கு என்னமோ இலக்கியாவுக்காக தான் இங்க வேலைக்கே வந்திருப்பான்" 

கூடுதல் தகவலாக தன்னுடைய சந்தேகத்தையும் அவ்விடத்தில் போட்டான் தர்ஷன். 

அர்ஜுன், "இதெல்லாம் உன்கிட்ட யார் சொன்னது?" 

தர்ஷன், "இலக்கியா தான்" 

"சரிடா கிளம்புங்க. வேலை நிறையா இருக்கு" 

இது தன்னை சுத்தமாக பாதிக்கவில்லை என்பது போல இருந்தது அவன் செயல், "டேய் இதெல்லாம் விட இன்னும் ஒன்னு சொல்றேன் கேளு. இலக்கியாவும் அவனும் லவ் பண்றங்களாம்" 

அர்ஜுனுக்கு சட்டென புடையேறிவிட தாறுமாறான இருமலோடு தலையை தட்டியவாறே இலக்கியாவை பார்க்க, ஏதோ உந்துதலில் அவளும் இவனை தான் பார்த்தாள் சற்று புருவம் உயர்த்தி.

மெல்ல தண்ணீர் குடித்து அந்த செய்தியிலிருந்து மீண்டு வந்தவன், "இதை யார் சொன்னது?" 

"மொத்த ஹாஸ்பிடலும்" இருவரும் ஒருசேர பதில் கொடுத்தனர். 

அர்ஜுன், "டேய் அவ என் பொண்டாட்டிடா" 

வருண், "அது ஊர் உலகத்துக்கு தெரியாது தம்பி. அவங்கள பொறுத்த வர இப்பவும் இலக்கியா சிங்கள் தான்" 

தர்ஷன், "நம்மகிட்ட கூட இலக்கியா இவ்ளோ சிரிச்சு பேசி பாத்தது இல்ல. அவனும் கூடிய சீக்கிரத்துல ப்ரப்போஸ் பண்ற எண்ணத்துல இருக்கான் போல" 

அர்ஜுன் எழுந்துவிட்டதை பார்த்த வருண், "உனக்கு பொறாமை வரல, கோவம் வரல?" 

"எனக்கு அவளை பத்தி தெரிஞ்சதை விடவா வேற யாருக்கும் தெரிஞ்சிட போகுது. எந்திரிச்சு வேலைய பாருங்கடா" அவ்விடதில்ருந்து செல்லும் முன்பு மீண்டும் ஒரு முறை மருத்துவன் பார்வை மனைவியை தீண்டிய அகன்றது.

இதை கவனித்த வருண் மற்றொரு சமோசாவை உள்ளே தள்ளி, "வேலை செய்யும் நினைக்கிற?" 

"சொன்னதுல பொய் இல்லையே, கொளுத்தி போட்ருக்கோம், இப்போ இல்லனாலும் கண்டிப்பா வேலை செய்யும்" என்றான் இலக்கியாவை பார்த்துக்கொண்டு. இவர்கள் எண்ணியது அடுத்த நாளே நடக்கும் என இருவரும் எதிர்பார்க்கவில்லை.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro