வேதனையில் பாரத மாதா! வீரம் கொள் மாமனிதா!
முறுக்கு மீசை, முண்டாசுத் தலைக்கட்டு, நிமிர்ந்த நெஞ்சம், வான் கொண்ட பார்வை, கூரிய தமிழ்ப்பற்று அனைத்தும் கொண்ட பாரதப் பைந்தமிழ்க் கவிஞன் பாரதி கண்ட கனவு - இந்த தேசம் நம் இந்திய தேசம்!
கொடை வள்ளல் கர்ணன் பிறந்த இம்மண்ணில், கானி நிலம் கேட்டார் இந்த பராசக்தி கவிபக்தன் பாரதி.
உடமை வெறிகொண்டு உறங்குவதற்கும், உற்சாகம் புரிவதற்கும் அல்ல!
உழுது பயிர் செய்து, தமிழ் மக்களின் உணவுப் பசி போக்க!
ஆனால் இன்று வரை விவசாயம், நம் விரும்பாத ஒரு மாயம்.
உணவு வேண்டும் ஆனால் அதை உற்பத்தி செய்யும் இந்தியன் வேண்டாம்.
என்ன ஒரு முரண்பாட்டுக் கொள்கை!
போருக்காக புறப்பட்டார் சுபாஷ் சந்திர போஸ் - அன்று!
இன்னும் இமயமலையில் இருக்கிறார் என் பாரத வீரனுக்கு துணையாக - இன்று!
அங்கே ஓடுவது சிந்து நதிமட்டுமல்ல!
நம் வீரர்கள் நமக்காக இரத்தம் சிந்துகின்ற நதியும் தான்!
எல்லை வீரனின் காவலைப் போற்ற, ஆவல் வரவில்லை இன்னும் ஏனோ என் மக்களுக்கு!
இந்த மண்ணின் விளையாட்டு வீரர்களை கூட விற்பனை பிரதிநிதிகளாக மாற்றி இருக்கும் சமூகம், இந்த முரண்பட்ட சமூகம்.
போராட்டம் பல கண்டது ஒர் புனிதாத்மா!
அவரே போர்பந்தரின் மகாத்மா!
நம் அடிமை என்னும் அடையாளத்தை ஒழிக்க ஆடை துறந்தார் அன்று!
இன்றும் நம் மண்ணில் ஆடை துறக்கின்றனர் சிலர், ஆடம்பர அடிமைகளாகவே வாழ்வதற்காக!
கொண்டாட மது, குதூகலிக்க மங்கை, கூட்டுக்கற்பழிப்பு, குழந்தைகள் பலாத்காரம் போன்ற கொடுமைகளை கண்டிருந்தால் அன்றே மாண்டிருப்பான் மண்டியிட்டு வெள்ளையன்!
கோடி மக்கள் கூடி கட்டிய ஆலயங்கள் உண்டு இத்திருநாட்டில்.
அதில் கயவர்களையும், காம வெறியர்களையும் தங்க அனுமதித்து கலங்கங்குறை சொல்லும் சமூக அரசியலை எழுதுகிறோம் நம் ஏட்டில்!
உண்ணும் உணவை உற்சாக விடுதிகளிலும், கடவுளைக் கயவர்களிடமும், கருனையை மனித மரணங்களிலும், வீரத்தை கொலைகளிலும் தவறாகத் தேடிக்கொண்டிருக்கும் நாம்
அன்பு, பாசத்தை எங்கு தேடுவதென்று தெரியாமல், சுதந்திரமாக அலைகிறோம்.
துயரங்களை தொடர்ச்சியாக சுவையுடன் கண்ட நம் கண்களுக்கு, அதை மனதில் சேமிக்க முடியாத மறதி குணம் பெருகி விட்டது!
வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நம் நாட்டில்
மதவெறியும், மனிதாபிமானமற்ற தன்மையும் கொண்ட சமூக விரோதிகள், தம் ஆடையெனும் கொடியுருவிக் கொண்டாட முயற்சிப்பதால்,
வேதனையில் இருக்கிறாள் என் பாரத மாதா!
நாம் வேடிக்கை மட்டும் பார்த்து
விட்டு விடுவோமோ என்று!
வீரம் கொண்டு எழுவோம், சமூகம் காப்போம், மீண்டும் நம் சுதந்திரத்தை மீட்போம் என்ற உறுதியுடன்...
ஜே...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro