🌚2🌚
இன்று பணக்காரனாக பங்களாவில் வாழ்பவன் நாளையும் அதே பங்களாவில் தான் வாழ்வான் என்பது எந்த நிச்சியமும் இல்லாத ஒரு எதிர்பார்ப்பாகும்.
திடீரென பாரிய இயற்கை அனர்த்தம் ஒன்று ஏற்பட்டுவிடுமேயானால் பங்களாவில் வாழ்ந்த பணக்காரன் கூட அடுத்து வினாடியில் வரும் தேவைக்கு அடுத்தவரிடம் கையேந்த வேண்டிய நிலையே ஏற்படும்.
இதுவே வாழ்வின் யதார்த்தமும் கூட.
அழகிலும் செல்வத்திலும் தேவதையாக அக்குழந்தை பிறந்திருந்தாலும் தேவதையாக வாழ அவளுக்கு கொடுத்துவைக்கவில்லை போலும்.
சேனாதிராஜா இறந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தன. இக்கிராமத்தில் நடைபெற இருந்த திருவிழாவும் இடையிலே நிறுத்தப்பட்டது.
சேனாதிராஜாவின் இடத்திற்கு அவரது மூத்த மகன் கஜேந்திரன் கிராம மக்கள் அனைவரின் விருப்பத்தின் பேரிலும் நியமிக்கப்பட்டிருந்தார்.
அக்கிராமம் வழமைக்கு திரும்பியிருந்தது. ஆனால் சேனாதிராஜாவின் வீடு வழமைக்கு திரும்பியிருக்கவில்லை.
அவ்வீட்டில் வழமையான பரபரப்பு இருந்தாலும் அதில் துடிப்பு இருக்கவில்லை.
பிறந்த குழந்தைக்கு இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது. ஆனால் அக்குழந்தை பெயர் வைக்கப்படாமலும் காது குத்தப்படாமலும் பார்ப்பார் கேட்பார் யாரும் இல்லாமல் இருந்தது. அதனை ஒரு குழந்தையாக மதித்திருந்தால் தானே நாம் இவற்றை எதிர்பார்க்கலாம்.
அதுதான் இல்லை எனும் போது இவற்றை எதிர்பார்ப்பதே வீணாகும்.
இவற்றையெல்லாம் பார்க்க முடியாமல் தான், தன்னைவிட பல வருடங்கள் மூத்தவனாகிய தன் அண்ணனையே கை நீட்டி அறைந்து விட்டு கோபத்துடன் வீட்டை விட்டே தந்தையின் சடங்கிற்கு வந்திருந்த விஜய் மூன்று நாளிலே சென்னைக்கு திரும்பியிருந்தான்.
சென்னைக்கு திரும்பியிருந்த விஜய்யின் உள்ளம் உலைக்களமாய் கொதித்துக்கொண்டிருந்தது. எதுவும் அறியா அந்த பச்சைக்குழந்தைக்கு தன் வீட்டில், அதுவும் நேர்மையானவர் என அனைவராலும் பெயர் பெற்ற தன் தந்தையின் வீட்டில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் கொடுமையை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் அவனால் சட்டென்று ஒரு முடிவும் எடுக்கவும் முடியாமல் இருந்தது. தன் அண்ணனான அஜய்யை அடித்தவன் இனி தனக்கு செலவுக்கு இந்த வீட்டில் இருந்து ஒரு சதம் கூட தேவையில்லை என்றுவேறு சொல்லிவிட்டு வந்திருந்தான். அதனால் வேலை ஒன்றில் சேர வேண்டிய நிலையில் இருக்கும் அவனால் ஒரு நிலையில் இருந்து அக்குழந்தை தொடர்பாக எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. ஆனால் அந்த வீட்டில் இருந்து அவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற உந்துதல் அவனிடம் விடாமல் இருந்து கொண்டே இருந்தது.
சேனாதிராஜாவின் மேல் வைத்திருந்த அதீத பாசம் அங்கிருக்கும் அனைவரினதும் கண்களை கருப்புத்துணி கொண்டு மறைத்திருந்தது என்றே கூறலாம்.
தான் பெற்ற பிள்ளை இது என்பதையே மறந்தவர்களாக அஜய்யும் ராணியும் இருந்தார்கள்.
காலதேவன் யாருக்கும் காத்திராமல் அதன் போக்கில் சென்றுகொண்டிருந்தான்.
அக்குழந்தையும் வயதிற்கே உரிய வளர்ச்சிகளோடு வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால் பாசம், அரவணைப்பு எதுவுமே இல்லாமல் தான் வளர்ந்தது.
குழந்தைகள் எனப்படுவோர் சரியான முறையில் திட்டமிடப்பட்டு வளர்க்கப்படவேண்டியவர்கள். ஆனால் இக்குழந்தை மாட்டுத்தொழுவத்தினுள் மாடுகளுடன் ஒரு மனித ஜீவனாக வளர்ந்ததே தவிர வளர்க்கப்படவில்லை.
செல்லப்பிராணிகள் வளரும்...
குழந்தைகள் வளர்க்கப்படும்...
ஒரு செல்லப்பிராணிக்கு காட்டும் அன்பில் துளியளவு கூட அங்கிருக்கும் எவராலும் இக்குழந்தைக்கு அன்பு காட்டப்படவில்லை.
நின்றாலும் தவறு, உட்கார்ந்தாலும் தவறு, ஆக மொத்தத்தில் எது செய்தாலும் தவறு என்ற ரீதியில் தான் அக்குழந்தை வளர்க்கப்பட்டது.
அவ்வீட்டில் இருக்கும் ஏனைய குழந்தைகளை கூட இவளோடு யாருமே பழக விடவில்லை. அக்குழந்தைகள் கூட இவளை ஒதுக்கி வைத்தே நடத்தாட்டினார்கள்.
வீட்டில் இருக்கும் ஆண்களால் தினம் தினம் இவள் பல உளத் தாக்கத்துக்குரிய பேச்சுக்களுக்கும் தண்டனைகளுக்கும் உள்ளானாள். அவர்கள் அனைவரினதும் முறைப்பான பார்வை தினம் தினம் இவளை மனதளவில் பாதிப்படையச்செய்தது. அந்த பாதிப்பை கண்ணீராக வெளியேற்றக்கூட அவளுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லையானால் எந்தளவு கொடூரமான சூழலில் சிக்கியிருப்பாள் என்பது நம்மால் ஊகிக்கக்கூடிய ஒன்றாகும்.
ஆக மொத்தத்தில் பாலியல் துஷ்பிரயோகம் தவிர்ந்த ஏனைய அனைத்து விதமான துஷ்பிரயோகத்துக்கும் உள்ளானாள்.
பழசுகள் தான் அவளை என்றும் அலங்கரிக்கக்கூடியதாக இருந்தது. அவ்வீட்டில் இருக்கும் பிள்ளைகள் அணிந்து சக்கையாகி ஒதுக்கப்படும் ஆடைகளையே அவள் அணிந்தாள். அதுவே அவளுக்கு அணிவிக்கப்பட்டது.
உணவுகளில் மீதியே அவளுக்கு சாப்பிடக்கொடுக்கப்பட்டது.
இந்தமாதிரியான கொடுமைகள் அனைத்தையும் இவள் அனுபவித்தது அவளது ஏழாவது வயது வரை ஆகும்.
சேனாதிராஜா இறந்து ஏழு வருடங்களின் பின்னர் மீண்டும் இக்கிராமத்தில் திருவிழா நடைபெற ஏற்பாடாகி நடைப்பெற்றுக்கொண்டிருந்தது.
பக்கத்து கிராமங்களில் எல்லாம் இருந்து திருவிழாவைக்காண மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டு வந்திருந்தனர். என்றும் இல்லாதவாரு அவ்வாறானதொரு கூட்டம் கூடியிருக்க அன்றே அது நடந்தது.
ஆம்...
எழுவயது அந்த அழகான பெண் குழந்தை அன்று கடத்தப்பட்டாள்...!!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro