யார் அவன் (Part 5)
அன்புள்ளங்களே, 'யார் அவன்' இந்தப் பாகத்துடன் முடிவடைகிறது. முடிவு உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன். உங்கள் கருத்துகளைத் தயவுசெய்து தெரிவிக்கவும். பொறுமையுடன் காத்திருந்ததற்கு மிக்க நன்றி நண்பர்களே. .
அன்புள்ள அமுதா
கதைகளே கற்பினையின் சிறகுகள்
'எலிசபெத்' என்ற பெயரைக் கேட்டதும் மாலதியின் தலை ஒருமுறை வீட்டைச் சுற்றுவிட்டு வந்தது.
''யு ஆர் எலிசபெத்? சன் எடிசன்?'' என்று தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கேட்டாள் மாலதி.
''எஸ்'' என்று தலையை மட்டும ஆட்டினாள் அந்த ஆங்கிலப் பெண்மணி. அவளுக்கு வயது எழுபதுக்கு மேலிருக்கும். வாடிய முகம். மெலிந்த உடல். நரைத்துப்போன பழுப்புநிற முடி!
மாலதிக்குத் திடீரென்று ஏதோ தோன்றி, தன் கையில் உள்ள புகைப்படத்தை எடுத்து வந்தவளுடன் ஒப்பிட்டுப் பார்த்தாள். அவள்தான் இவள்! இவள்தான் அவள்! ஆனால் வந்திருந்தவள் சற்று முதிய தோற்றத்துடன் காணப்பட்டாள், புகைப்படத்திலிருந்தவளோ இளமையாக இருந்தாள்.
எலிசபெத்துக்குப் பின்னால் இன்னொரு பெண் நின்றுகொண்டிருந்ததை மாலதி கவனிக்கவில்லை. அவள் பார்ப்பதற்குத் தமிழ்ப்பெண் போல இருந்தாள். சற்று வயதான மாதுதான். அவள் பேசினாள்.
''மன்னிக்க வேண்டும். என் பெயர் ஜானகி. நான் எலிசபெத்தின் தாதி. உள்ளே வரலாமா?'' என்று மிகவும் பணிவாகக் கேட்டாள்.
மாலதி ஏதோ பிரமைப்பிடித்தவள் போல அசைவற்று நின்றுகொண்டிருந்தாள். தலை மட்டும் இலேசாக உள்ளே வாருங்கள் என்று ஆடியது. இருவரும் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.
சுவிடனில் கிரினா என்னும் நகரம்
''அதோ. . அதோ அதுதான் என் வீடு. . என் வீடு. . மம்மி. . மோனிக்கா. .,'' என்று கதிரவனின் கைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு கார்த்திக் அந்த இருளடைந்த வீட்டை நோக்கி ஓடினான்.
''டேய். . கார்த்திக். . '' என்று கதிரவன் அவன் பின்னால் ஓடினார். நண்பர் குமாரும் தன் நடையின் வேகத்தை அதிகரித்தார். ஒருவழியாக கார்த்திக்கின் ஓட்டத்திற்கு அந்த இரண்டு நடுத்தர ஆண்சிங்கங்களும் ஈடுகொடுத்தனர்.
வீடு ஓட்டையும் ஒடிசலுமாக இருந்தது. மிகவும் பழைய வீடு. சிலந்திகள் உல்லாசமாக தங்கள் வலைகளைப் பின்னி அவற்றில் ஊஞ்சாலாடிக்கொண்டிருந்தன. ஆனால், இது எதற்கும் பயப்படாமல் கார்த்திக் வீட்டிற்குள் நுழைந்தான்.
''இங்கத்தான் நாங்க எல்லாரும் டின்னர் சாப்பிடுவோம். அதுதான் ஹால். எங்களோட ஃபேபரட் டிவி பார்க்கும் இடம். மோனிக்கா எப்போதும் என் மடிமீது உட்கார்ந்துகொண்டுதான் டி வி பார்ப்பாள். . . ''
கதிரவனும் குமாரும் கண்இமைக்காமல் கார்த்திக்கின் செய்கைளை மட்டும் கவனித்துக்கொண்டிருந்தார்கள். அதிலும் மனோத்தத்துவ மருத்துவர் குமார் மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தார்.
''என்னோட ரூம் மேல இருக்கு,'' என்று அந்த உடைந்த படிகளின் மேல் ஓட முயற்சித்துத் தட்டுதடுமாறி விழுந்தான் கார்த்திக். குமார் ஓடோடி வந்து அவனைத் தூக்க முயன்றார். ஆனால், அதற்குள் அவனே எழுந்து, ''ஒன்னுமில்ல,'' என்று காலை உதறிக்கொண்டு மேலே சென்றான். கதிரவனும் குமாரும் அவன் பின்னே சென்றார்கள்.
கார்த்திக் பாதி உடைந்து விழுந்திருந்த கதவைத் தள்ளிக்கொண்டு அவசரமாக ஓர் அறைக்குள் நுழைந்தான். அந்தக் கதவு அவன் தள்ளிய வேகத்தில் முழுதும் உடைந்துவிட்டது. ''My room. . my lovely room," என்று ஓடிபோய் கிழிந்து நாராகியிருந்த ஒரு மெத்தையின் மீது விழுந்தான். தூசு மண்டலம் கதிரவனையும் குமாரையும் மூர்ச்சையாக வைத்தது. அந்த அறையிலிருந்த பொருள்களை எடுத்து முத்தம் கொடுத்தான், சுற்றிச் சுற்றி ஆடினான். . அவனிடமிருந்த மகிழ்ச்சியைக் கண்டு கதிரவன் சிறு குழந்தையைப் போல் குமாரின் தோளில் சாய்ந்துகொண்டு அழுதார். குமார் அவரைத் தேற்றினார்!!
அந்த வீட்டைவிட்டு கார்த்திக்கை அழைத்து வந்தார்கள் என்பதைவிட இழுத்து வந்தார்கள் என்றே கூற வேண்டும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை விசாரித்ததில் அந்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் இறந்துபோய் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன என்ற செய்தி கிடைத்தது.
''ரிச்சட் , எலிசபெத் குடும்பத்தினருக்கு இரண்டு குழந்தைகள். எடிசன், மோனிக்கா. அந்தப் பையனும் அவனின் அம்மாவும் ரொம்ப நெருக்கமாக இருப்பாங்க. பொன்ன கூட அப்படி பாக்க மாட்டாங்க. அவனுக்கு ஒன்னுனா அந்த அம்மாவால் தாங்க வே முடியாது. ரொம்ப நல்ல குடும்பங்க. . எல்லாருக்கும் அந்த ரிச்சட் உதவி செய்வாரு. நல்ல பணம் படைச்சவங்க. . ஆனா ஆணவம் கிடையாது. . ஏதோ பொல்லாத தொற்று நோய் வந்து குடும்பமே போச்சு! ஆனா, அதுல அந்த எலிசபெத் அம்மா பொழச்சிகிருச்சி. .ஆனா, அதுக்கு மனநலம் சரியில்லன்னு வெளிநாட்டுக்கு சொந்த காரங்க மருத்துவம் பாக்க கூட்டிட்டு போனாங்க. . அப்புறம் அந்த அம்மாவ பாக்கவே இல்லீங்க,'' என்று அங்கிருந்த ஒரு மூதாட்டி குமாரிடம் கூறினார்.
''கதிரவன். .எனக்கு ஓரளவு தெளிவாகிவிட்டது. கார்த்திக்கின் முற்பிறவிதான் எடிசன். தன் முற்பிறப்பு தாயிடம் இருந்த ஒரு நெருக்கத்தினால் எடிசனினால் தன் தாயை விட்டுப் பிரிய முடியவில்லை. கார்த்திக்கின் ஆழ்நினைவுகளில் (subconscious) புகுந்துகொண்டிருக்கிறான். அவனை அந்த நினைவுகளிலிருந்து விரட்டிவிட்டால் கார்த்திக் உங்கள் மகனாகவே மாறிவிடுவான். ''
''இப்படியெல்லாம் இருக்கிறதா குமார்?''
''உண்டு கதிரவன். அவனின் ஆழ்மனது இன்னும் கார்த்திக்கை எடிசனாகவே நினைத்துக்கொண்டிருக்கிறது. அந்த நினைவை நாம் அழித்துவிட்டால் எடிசன் போய்விடுவான்,''
''ஆனால், அது எப்படி சாத்தியமாகும் குமார்?''
''.....................''
''என்ன குமார், முடியாதா?''
''முடியும். . அதற்கு எடிசனின் அம்மா வந்து நீ என் மகனில்லை என்று கார்த்திக்கைப் பார்த்துச் சொல்ல வேண்டும்,''
அதைக் கேட்ட கதிரவனின் கைகளும் கால்களும் செயலிழந்து நின்றன. கைப்பேசி அலறியது
'' என்னங்க. . இங்க . . எலிசபெத். . எடிசன். . கார்த்திக். . ,''
''என்ன சொல்ற மாலதி. . தெளிவாச் சொல்லு!''
மாலதி சொன்ன செய்தி கதிரவனுக்கு நெஞ்சில் பாலை வார்த்தது. குமாரை நம்பிக்கையுடன் பார்த்தார்.
**********************************
''மாலதி, இவங்க பெயர் எலிசபெத். நான் இவங்களப் பார்த்துக்கொள்ளும் தாதி. ரொம்ப வருஷத்திற்குப் பிறகு தன் குடும்பத்தை இழந்து மனநலம் சரியில்லாமல் இருந்தார்கள். இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வராங்க. இவங்க மகன் எடிசன் ஒரு தொற்று வியாதியால் இறந்துவிட்டார். ஆனால், சமீபத்தில் இவங்க மகன் உங்க வீட்டுல வளர்வதாக கனவு கண்டதாக என்னிடம் சொன்னாங்க. . அது உண்மையில்ல என்று எனக்குத் தெரியும். ஆனா, இவர்கள் மனம் மீண்டும் பாதிக்கக் கூடாதுன்னுதான் நான் இவங்கல கூட்டிக்கிட்டு வந்தேன். உங்க பையன ஒரு முறை காட்டினா, நான் எப்படியாவது சமாளிச்சு இவங்கள கூட்டிட்டுப் போயிடுவேன்,'' என்றார் எலிசபெத்துடன் வந்த அவரின் தாதி.
''அவங்க வெளியூர் போயிருக்காங்க. அடுத்த வாரம்தான் வருவாங்க,'' என்று மாலதி கூறியதும் அவர்கள் சென்றுவிடுவார்கள் என்று அவள் எண்ணினாள். ஆனால். .
''அதுவரையில் நாங்க இங்க தங்கலாமா? ஏனென்றால் நாங்க மறுபடியும் வர முடியாது,'' என்றார் தாதி.
வேறு வழியின்றி மாலதியும் ஒப்புக்கொண்டாள். தன் கணவனுக்குத் தகவலைத் தெரிவித்ததும் அவர் அவர்களைப் போக விட்டுவிடாதே மாலதி, நாங்கள் உடனே கிளம்பி வருகிறோம் என்றது மாலதிக்கு வியப்பை அளித்தது.
கதவு மணி ஒலித்தது. வெளியே கார்த்திக், கதிரவன், குமார் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்தும்தான் மாலதிக்கு மூச்சு வந்தது. தன் மகனைக் கட்டிப்பிடித்து அழுதாள். கார்த்திக் அவளின் பிடியை உதறினான்,
''எங்கே அவர்கள்?'' என்று கதிரவன் ஜாடையில் கேட்கும்போதே அறையிலிருந்து எலிசபெத்தும், தாதியும் வந்தார்கள்.
எலிசபெத்தைப் பார்த்த கார்த்திக், ''Mum. . " என்று கதறிக்கொண்டு அவளிடம் ஓடினான். மாலதி அவனைப் பிடிக்க முயன்றாள். பலனில்லை!
''Who are you? You aren't my son. This is my son," என்று கூறி எலிசபெத் ஒரு புகைப்படத்தைக் அவனிடம் காண்பித்தாள். எல்லாரும் அதனை வாங்கிப் பார்த்தனர். அதில் ஒரு வெள்ளைக்காரச் சிறுவன் இருந்தான். அவன் பார்ப்பதற்கு முற்றிலும் வேறு மாதிரி இருந்தான்.
இதைக் கேட்டதும் கார்த்திக் தலையைப் பிடித்துக்கொண்டு கீழே விழுந்துவிட்டான். உடனே கதிரவனும், மாலதியும் பதறிக்கொண்டு அவனைத் தூக்கினார்கள்.
''come let us go, Edison is not here," என்று தாதியைக் கூட்டிக்கொண்டு எலிசபெத் கிளம்பிவிட்டார். தாதியும் நன்றி கூறி விடைபெற்றாள்.
கார்த்திக் சுயநினைவுக்கு வந்தான். முதல் முறையாக தன் தாய் மாலதியைக் கட்டியணைத்தான். மாலதி தன் மகனின் முகத்தில் முத்தமாரி பொழிந்தாள்.
''கதிரவன், கார்த்திக் இப்போது 100% உங்கள் மகன். அவன் ஆழிமனத்திற்குள் இருந்த எடிசன் வெளியேறிவிட்டான். நாளைக்கு கார்த்திக்கை என் கிளினிக்கு அழைத்து வாங்க. கொஞ்சம் அவனின் உடல்நலத்தை ச்செக் பண்ணி வைட்டமின்ஸ் தர்றேன். எல்லாம் சரியாகிவிடும். கவலப்படாதீங்க,'' என்றார் டாக்டர் குமார்.
கார்த்திக்கை தன் பெற்றோரிடம் விட்டுவிட்டு எடிசன் மீண்டும் தன் தாயை நோக்கி அவள் பின்னே சென்றான்.
முற்றும்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro