Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

யார் அவன் (Part 4)

அன்புள்ளங்களே, கார்த்திக் யார்? அவன் ஏன் தன் பெயரை எடிசன் என்று கூறினான்? விடைகாண தொடர்ந்து படியுங்கள், உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள். நன்றி 

கதைகளே கற்பனையின் சிறகுகள்************ அமுதா மணி 

'என் பெயர் எடிசன்'

 அம்மிக்கல்லொன்றைப் பத்தாவது மாடியிலிருந்து யாரோ கீழே வீசியெறிந்து, அது அவர்களின் தலையில் விழுந்ததுபோல் இருந்தது மாலதிக்கும் கதிரவனுக்கும்! மாலதியின் கைகள் நடுங்குவதைக் கதிரவனால் உணர முடிந்தது. அதை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டார். 

''உன் பெயர் எடிசனா?'' என்று முனியம்மா கார்த்திக்கைப் பார்த்துக் கேட்டாள். 

''ஆமாம்''

''உன் அம்மா பெயர் என்ன?''

''எலிசபெத்''

''அப்பா''

''ரிச்சட்''

''உன் ஊர் எது?''

''கிருனா (Kiruna)

''அது எங்கே இருக்கிறது?''

''சுவிடன்''

''பிறகு, உன்னை ஏன் 'கார்த்திக்' என்று இவர்கள் சொல்கிறார்கள்?''

''எனக்குத் தெரியாது. . நான் என் அம்மாவைப் பாக்கனும், அப்பாவைப் பாக்கனும், என் தங்கை மோனிக்காவைப் பாக்கனும் - என்னை அழைத்துச் செல்லுங்கள்,'' என்று கூறி, தன் கண்களை மூடிக்கொண்டு அழத் தொடங்கினான் கார்த்திக். அவன் கண்களிலிருந்து தாரைத் தாரையாக நீர் வழிந்துகொண்டிருந்தது.

''என்னங்க'' என்று மாலதி கதிரவனின் முகத்தை ஏக்கத்துடன் பார்த்தாள்.

அவளின் கைகளை அழுத்தி, சற்று நேரம் அமைதியாக இருக்கும்படி ஜாடையில் கூறினார் கதிரவன்.

கார்த்திக் அழுவதை இன்னும் நிறுத்தவில்லை. அழுதுகொண்டே, "Mummy, bring me home, bring me home,"என்று புலம்பினான்.

முனியம்மா தண்மை நிலைக்கு வந்தாள்.  கதிரவனையும் மாலதியையும் பார்த்துப் பேச வாயெடுத்தாள். அதற்குள் மாலதி, ''கார்த்திக்கு என்ன அம்மா,'' என்று முந்தினாள். 

''நான் சொல்றத ரண்டு பேரும் பொறுமையாகக் கேளுங்க. உங்க மகன் கார்த்திக் உடலால் மட்டும்தான் கார்த்திக். மனத்தால் அல்ல. . ''

''என்னம்மா சொல்றீங்க!!'' மாலதி அலறினாள்.

''பொறுமையாகக் கேளு மாலதி. .அவங்கதான் சொல்லிக்கிட்டு இருக்காங்களே,'' என்று கதிரவன் வேகமாக வந்த சொற்களை அடக்கி மெதுவாக மனைவியிடம் கூறினார். தானும் திட்டினாள் மாலதி தாங்க மாட்டாள் என்று அந்த மனிதருக்குத் தெரியும். 

''நீங்க சொல்லுங்கம்மா'' என்று பணிவாக முனியம்மாவிடம் கேட்டுக்கொண்டார் கதிரவன்.

''கார்த்திக் மனத்தில் ஏதோ இருக்கிறது. அதை அவனால் வெளியில் சொல்ல முடியவில்லை. அவனின் உள்ளம், உணர்வு எல்லாமே வேறு எதையோ சுற்றி இருக்கிறது. பிறந்தது உங்களுக்காக இருந்தாலும், அதை அவனால் உணர முடியவில்லை. அவனின் மனம் அன்புக்காக வேறு எதையோ நாடுகிறது. அதை உங்களால் இப்போது தர முடியாது. நான் சொல்வதைக் கேளுங்கள்,''

''சொல்லுங்க அம்மா''

''கார்த்திக் தன் பெயர் எடிசன் என்றும், அவன் ஊர் சுவிடன் என்றும் கூறினான். அங்குதான் அவனுக்குத் தொடர்பு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். நீங்கள் கார்த்திக்கை அங்கு கூட்டிச்சென்றால் பல வினாக்களுக்கு விடை கிடைக்கும் என்று நினைக்கிறேன்,'' என்றாள் முனியம்மா தெளிவாக.

''சுவிடனுக்கா, அது எந்தப் பக்கம் இருக்கனுக்கூட தெரியாதே அம்மா,'' என்று மாலதி அவசர அவசரமாகக் கூறி, தன் கணவனை ஏக்கத்துடன் பார்த்தாள்.

''எனக்குத் தெரியும் நீ கவலைப்படாதே மாலதி,'' என்று தன் மனைவியின் தலையைத் தடவிவிட்டு, ''எப்போது செல்ல வேண்டும் அம்மா,'' என்று முனியம்மாவைப் பார்த்துக் கேட்டார் கதிரவன்.

''எவ்வளவு சீக்கிரம் செல்கிறீர்களோ, அவ்வளவுக்கு நல்லது,'' என்றாள் முனியம்மா. 

''சரிம்மா, நீங்க சொன்னமாதிரியே செய்கிறோம்,'' என்று முனியம்மாவிற்கு நன்றி தெரிவித்தார் கதிரவன்.

கதிரவன் $100 எடுத்து முனியம்மாவிடம் நீட்டினார். ஆனால் முனியம்மாவோ, நீங்க எங்களுக்கு அண்டைவீட்டுக்காரர். உங்ககிட்ட பணம் வாங்குவது, என் சொந்த வீட்டில இருப்பவங்ககிட்ட வாங்குற மாதிரி,'' என்று கூறி மறுத்துவிட்டு, மாறாக ஓர் உண்டியலை நீட்டினாள்.

''இது தெய்வக்காரியங்களுக்காச் சேத்துவைக்கிற பணம். உங்களால் முடிஞ்சத இதுல போடலாம்,'' என்றாள்.

கதிரவன் பணத்தை அந்த உண்டியலில் போட்டுவிட்டு, மாலதியையும், கார்த்திக்கையும் கூட்டிக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பினார். இருவருமே அழுதழுது, படர்வதற்கு கொலுக்கொம்பில்லாமல் இருக்கும் செடியைப் போல  தெம்பில்லாமல் இருந்தனர்.

இரவு

''என்னங்க, நாம சுவிடனுக்குப் போனுமா?''

''நாம இல்ல, நானும் கார்த்திக்கும்,''

''நான் வர வேண்டாமாங்க''

''வேணா மாலதி. அங்க என்ன நடக்கப்போதோ எனக்குத் தெரியாது. நான் உன்னப் பாப்பனா இல்ல கார்த்திக்க பாப்பனா? நீயே சொல்லு? எனக்குத் தெரிந்த நண்பன் ஒருவர் இருக்கிறார். மனநல டாக்டர். அவருக்குக் கார்த்திக் பற்றி எல்லா விவரமும் தெரியும். நம்ம வீட்டுக்குக் கூட வந்திருக்காரு, ஞாபகம் இருக்கா?''

''ஆ. . தங்கமான மனுசன். . ''

''அவரேதான். அவர் இந்த விஷயத்தில் எல்லாம் கைதேர்ந்தவரு. அவரயும் கூட்டிக்கொண்டு போனா எனக்கு உதவியாக இருக்கும். . ''

'இந்த விஷயம்ன்னா? என்னங்க சொல்ல வரீங்க?'' என்று மாலதி அவசர அவசரமாகக் கேட்டாள்.

''அது ஒன்னுமில்ல, அவர் ஒரு டாக்டர். . அதனால உதவியாக இருக்கும்ன்னு சொன்னேன்,'' என்று கூறி மழுப்பினார் கதிரவன். 

அதற்குமேல் மாலதி ஒன்றும் கேட்கவில்லை. ஓர் ஓரமாகப் போய் உட்கார்ந்துவிட்டாள். அவளுக்குத் தன் மகன் கார்த்திக் குணமடைந்தாலே போதும்!

''கவலைப்படாதே மாலதி. உனக்குத் துணையாக உன் தங்கச்சி வான்மதியை வரச்சொல்லு. ஒருவாரம்தான். நான் வந்திடுவேன், என்ன''

மாலதி தலையை மட்டும் ஆட்டினாள். அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.

கார்த்திக்கை முனியம்மாவிடம் காட்டி இரண்டு வாரங்கள் உருண்டோடின.

கதிரவன் சுவிடனுக்குச் செல்லும் ஏற்பாடு எல்லாம் செய்துவிட்டார். தன் மனோத்தத்துவ நண்பர் விமான நிலையத்தில் தன்னைச் சந்திப்பதாகக் கூறிவிட்டார். கார்த்திக்கை அழைத்துக்கொண்டு விமான நிலையத்திற்குச் செல்லத் தயாரானார் கதிரவன்.

கார்த்திக் எதுவும் பேசவில்லை. ஆனால், தன் தந்தை சுவிடன் போகிறோம் என்று கூறியதும் அவன் முகத்தில் ஒரு வெளிச்சம் காணப்பட்டது. தன் தாய் மாலதியிடம்கூட அவன் விடைபெற்றுக்கொள்ள வில்லை.  மாலதி கார்த்திக்கைக் கட்டிப்பிடித்து அழுதாள். ஆனால் அவனோ, அவளின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றான். 

''என்னங்க, போயிட்டு ஃபோன் பண்ணுங்க. .கார்த்திக்க பாத்துத்துக்குங்க. அவனைத் திட்டாதீங்க. .அங்க சாப்பாடு எல்லாம் எப்படியிருக்கும்னு தெரியாது. பாத்துச் சாப்பிடுங்க. ''

''சரி மாலதி. நீ பயப்படாம இரு. நான் போய்ச் சேந்தவுடனேயே ஃபோன் பண்றேன். குமார்தான் கூட இருக்கான்லே. . அவ பாத்துக்குவான்,'' என்று மாலதி மறு அழுகை அழுவதற்குள் வீட்டிலிருந்து புறப்பட்டுவிட்டார். 

மறுநாள்

வீடே 'ஓஓஓ' என்றிருந்தது. மாலதி நடுகூடத்தில் அமர்ந்திருந்தாள். கணவனிடமிருந்து இன்னும் ஃபோன் வரவில்லை. அவளுக்கும் வெளிநாட்டு ஃபோன் பண்ண எல்லாம் தெரியாது. ஃபோனையே வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தாள். திடீரென ஃபோன் மணி அடித்தது.

''ஹலோ. . நான்தாங்க. . சுவிடனா, குவிடனா போய்ச் சேந்துட்டீங்களா?''

கதிரவன் பதில் கூறுவதற்குள், அடுத்த கேள்வியையும் கேட்டாள்.

''கார்த்திக் நல்லா இருக்கானா?''

''மாலதி, நீ நல்லா இருக்கியா, சாப்பிட்டியா? நாங்க நல்லபடி வந்து சுவிடன் சேர்ந்துட்டோம். ஹோட்டல் வந்துட்டோம். இங்க எந்தப் பிரச்சினையும் இல்ல. கார்த்திக் நல்லா இருக்கான். பிளைட் ல வந்த களைப்பு. தூங்கிட்டான். நீ பத்திரமா இரு மாலதி. நான் மறுபடியும் ஃபோன் பண்றேன்'' 

ஃபோன் துண்டிக்கப்பட்டது. மாலதி நிம்மதி பெருமூச்சு விட்டாள். யாரோ வாசல் மணியை அழுத்தினார்கள். எழுந்துபோய் கதவைத் திறந்தாள். மேல் வீட்டு முனியம்மா. இப்போது சாதாரணமாகக் காட்சியளித்தாள்.

''மாலதி, உன் கணவனும், கார்த்திக்கும் வெளிநாட்டுக்குக் கிளம்பிட்டாங்களா?'' என்று வந்ததும் வராததுமாகக் கேட்டாள்.

''ஆமா அம்மா. நேத்தே புறப்பட்டுப் போயிட்டாங்க. இப்பத்தான் அவரு ஃபோன் போட்டாரு. . அம்மா கார்த்திக்கு என்னம்மா? எனக்கு ஒன்னும் புரியல.  .'' கண்ணீர் துளிகள் மாலதியின் கண்களிலிருந்து எட்டிப் பார்த்தன.

''எனக்குத் தெரியாதடியம்மா. அது அந்த அம்மன்தான் எனக்கு வந்து சொல்லுவா. நீ இப்ப கேட்டா,  நான் என்ன சொன்னேன்னு எனக்கே நினைவு இருக்காது. . ''

மாலதி ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.

''கவலப்படாம இரு மாலதி. எல்லாம் அந்த அம்மன் கிட்டே விட்டுடு. அவ பாத்துக்குவா. .நீ தனியா இருப்பேனு பாத்துட்டுப் போக வந்தேன். வந்து என் வீட்ல இருறேன். . ''

''பரவாலம்மா. . நீங்க சொன்னதே பெருசு. அவருகூட என் தங்கச்சிய கூப்பிட்டு வீட்டுல கொஞ்ச நாளு இருக்கச் சொன்னாரு. எனக்குத்தான் விருப்பம் இல்ல. அவரு எத்தன மணிக்கு ஃபோன் பண்ணுவாருன்னு தெரியாது. ஏதாச்சும்னா உங்களுக்கு ஃபோன் பண்றேனம்மா,''

''சரிடா. பத்திரமா இரு என்ன''

முனியம்மா சென்றுவிட்டாள். மாலதி கதவை அடைத்துவிட்டுத் திரும்பினாள். கார்த்திக்கின் அறைக்கதவு அவள் கண்களில் பட்டது. அதற்குள் நுழைந்தே பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவன்தான் எந்நேரமும் பூட்டிக்கொண்டு அதனுள் வாழ்கிறானே!!

மாலதி அறைக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனாள். அறை முழுவதும் தாள்களாகக் கிடந்தன.  தூசு கேட்பாரற்று அறைமுழுவதும் சுதந்திரமாகப் பறந்துகொண்டிருந்தது.  

''ரூமுக்குள் நுழைய விட்டால்தானே! எத்தனை நாள்கள் சுத்தம் செய்ய வில்லையோ,'' என்று புலம்பியவாறு கீழே கிடந்த தாள்களைப் பொறுக்கினாள் மாலதி.

அவற்றில் என்னென்னவோ ஓவியங்கள் கிறுக்கி வரையப்பட்டிருந்தன. அக்கிறுக்கல்களின் மத்தியில் ஓர் ஒவியத்தைக் கண்டெடுத்தாள் மாலதி.

அது ஒரு பெண்ணின் உருவம். அழகாக வண்ணம் தீட்டப்பட்ட ஓர் ஆங்கிலப் பெண்ணின் உருவம். அதன் கீழ் ''my mother Elizabeth" என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. 

அதைப் பார்த்துக்கொண்டே நின்ற மாலதியின் தாய் வயிற்றில் பெற்றெடுத்த வலியைவிட, ஏதோ ஒன்று ஆழமாகக் குடைந்தது. வாசல் மணி ஒலித்தது.

''யாராக இருக்கும்?'' என்று குழம்பியவளாய் ஓவியத்தை கையில் எடுத்துக்கொண்டே மாலதி கதவைத் திறந்தாள்.

வெளியில் ஓர் ஆங்கில மாது நின்றுகொண்டிருந்தாள். உயரமான பெண்மணி. 60 வயதிற்கு மேலிருக்கும். முகத்தில் சோகத்தின் ரேகைகள் காணப்பட்டன.

''நீங்க யாரு'' என்று மாலதி மெதுவாகக் கேட்டாள்.

''Hello, my name is Elizabeth.  I am looking for my son Edison," என்று அந்த ஆங்கிலப் பெண் கூறினாள்.


(தொடரும்)







Bạn đang đọc truyện trên: Truyen247.Pro