Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

'யார் அவன்' (Part 2)

அன்புள்ளங்களே, 'யார் அவன்' இரண்டாம் பாகத்தை எழுதி முடித்துவிட்டேன். அன்புகூர்ந்து படித்துவிட்டு, உங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.  இக்கதையில் நீங்கள் படிப்பது அனைத்தும் எனது முழுமையான கற்பனையே.

அன்புடன் அமுதா மணி                                                                                                             கதைகளே கற்பனையின் சிறகுகள்

****************************************************************************************

அந்தக் குரலைக் கேட்ட மாலதியின் நெஞ்சம் படபடத்தது. இத்தனை வருடங்களாக  கேட்க காத்திருந்த அந்த வார்த்தைகள்!! தன் மகன் கார்த்திக்கிடமிருந்து வந்ததை எண்ணி அவள் நிலைகுத்தி நின்றாள். 

''அம்மா, அழாதம்மா,'' மறுபடியும் அறையிலிருந்து கார்த்திக்கின் குரல் கேட்டது. இம்முறை மாலதி துள்ளியோடும் புள்ளமான்போல சோபாவிலிருந்து குதித்தெழுந்து கார்த்திக்கின் அறைக் கதைவைத் தட்டினாள்.

''அம்மா வந்திட்டேன்டா தங்கம். கதவ தொறடா ராசா. .ஏண்டா அழறே. . நீ அழுதா  அம்மா தாங்கமாட்டேன்டா. . ,'' என்று கார்த்திக்கின் அறையின் வெளியில் நின்று புலம்பினாள் மாலதி. 

கதவு இன்னும் திறக்கப்படவில்லை!

''ஐயா, உனக்கு என்னையா கவல. இந்த அம்மாகிட்ட சொல்லு ராசா. அம்மா உன்ன திட்டவோ, அடிக்கவோ மாட்டேன்டா. . ''

கதவு இன்னும் திறக்கப்படவில்லை!

''இங்கப் பாரு கார்த்திக். அம்மா அழலடா. . கண்ணுல பாரு தண்ணி இல்ல.'' என்று கூறிக்கொண்டே தன் கண்களில் வழிந்திருந்த கண்ணீரைத் தன் புடவை நுனியால் அவசரமாகத் துடைத்துக்கொண்டாள் மாலதி.

கதவு மெல்ல திறந்தது.

கார்த்திக் வாசலில் நின்றான். 

''ஐயா, சாமி, ஏண்டா அழுத. . அம்மா இங்கனதானே இருக்குறேன். .அம்மா அழலடா தங்கம். சும்மா படந்தான் பாத்துக்கொண்டு இருந்தேண்டா. . ஏண்டா ராஜா. . என்னடா தங்கம். .'' என்று தன் தாயை உள்ளே விடாமல் வாசலை மறித்து நின்றுகொண்டிருந்த கார்த்திக்கைப் பிடித்து உலுக்கினாள் மாலதி.

மாலதியின் கைகளைத் தட்டிவிட்டு, அவளின் முகத்தைப் பார்த்தான் கார்த்திக். ஈரம் படிந்திருந்தது. அதைத் துடைக்க வேண்டும் என்றுகூட அவனுக்குத் தோன்றவில்லை. 

''நான் அழலையே. சாரிம்மா. நீங்க போய் படம் பாருங்க,'' என்று மட்டும் கூறிவிட்டு மீண்டும் அறைக்குள் புகுந்துகொண்டு கதவை அடைத்துக்கொண்டான் கார்த்திக்.

அவனைப் பெற்றெடுத்ததைவிட ஒரு கனமான வலி மாலதியின் அடிவயிற்றைத் தாக்கியது. அந்த வலி தன் இதயத்துடிப்பை நிறுத்திவிடுமோ என்று பயந்து கார்த்திக்கின் அறைக்கு வெளியிலேயே உட்கார்ந்துவிட்டாள் மாலதி.

கார்த்திக்கின் அறை கதவு மீண்டும் திறந்தது. தன் பையனின் முகத்தை ஏறெடுத்து ஏக்கத்துடன் பார்த்தாள் மாலதி. 

''எக்ஸ்யூஸ்மி அம்மா,'' என்று ஓரமாக நடந்து ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்துக்கொண்டு மீண்டும் தன் அறைக்குள் புகுந்துகொண்டான். 

மாலதிக்கு மயக்கமே வந்துவிட்டது. அங்கேயே சாய்ந்து, உறங்கியும் விட்டாள்.  கதிரவன் வீட்டுக்கு வந்துதான் அவளைத் தன் அறையில் படுக்க வைத்தார்.

மறுநாள் காலை.

கதிரவன் வேலைக்குச் செல்வதற்காகக் கிளம்பிக்கொண்டிருந்தார். மாலதி அவருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்துகொண்டிருந்தாள். கார்த்திக்கின் அறை கதவு திறந்தது.

''டேய், கார்த்திக் உனக்கு மண்டயில் அறிவிருக்காடா? உன் அம்மவ நீயே கொன்னுடுவப் போலருக்கே. . '' என்று கதிரவன் ஆரம்பித்தார்.

கார்த்திக் ஒன்றும் பேசவில்லை. அமைதியாக நின்றான்.

''நேத்து ஒன்னோட அறைக்கதவு வெளியில் அவ்வளவு நேரம் கிடந்து, அங்கேயே மயக்கமாயிட்டா. . என்னான்னு ஒரு வார்த்த கேட்டயாடா? இல்ல அவ சாப்படாளா, இல்லையான்னு பாத்தியாடா? இல்ல. . என் வாயில வந்துடும். .''

கார்த்திக் அதற்கும் ஒன்னும் பேசவில்லை. அமைதியாகவே நின்றான். 

''ஏங்க புள்ளய திட்டுறீங்க. .அவனுக்கு என்ன தெரியும். கொழந்த. நான்தான் சாப்பிடாதனால மயக்கம் வந்துடுச்சு. . '' எங்கே கணவர் கோபத்தில் கார்த்திக்கை அடித்துவிடுவாரோ என்ற பயத்தில் மாலதி குறுக்கிட்டாள்.

''நீ பேசாமரு மாலதி. ஒரே புள்ளன்னு செல்லம் கொடுத்து கொடுத்துதான் இவன் இப்படி இருக்கான்.  பிள்ள இல்லாமல் இருந்ததற்கு ஒரு பிள்ளைய தத்து எடுத்துருந்தா கூட அது நம்ம மேலை பாசத்த பொழிஞ்சிருக்கும். இவனப் பாரு பாசம் இல்லாத மரக்கட்ட,''

கார்த்திக் பேசினான்.

''பசிக்குது. சாப்பிடுறதுக்கு ஏதாச்சும் கிடக்குமா அம்மா,''

இதைக் கேட்ட கதிரவன் கையை ஓங்கிக்கொண்டு கார்த்திகை அறைவதற்கு வந்தார். ஆனால் அதற்குள் மாலதி ஓடிவந்து அவன்முன் நின்றுகொண்டு, ''என்னங்க இது, தலைக்கு ஒசந்த புள்ளய கைய ஓங்குறது, அங்கிட்டு போங்க,'' என்றாள்.

''அப்புறம் என்ன மாலதி, நான் என்ன பேசிக்கிட்டு இருக்கேன், இவ சாப்பிடுறதுக்கு கேக்குறான். . கொஞ்சமாவது ஈவு இரக்கம் இருக்கா?''

''விடுங்க புள்ளைக்குப் பசிக்குது. நான் போய் கொண்டு வரேன் ராசா, நீ போய் ரூம்ல உட்காந்துக்கோ,''

''இல்லம்மா. நான் இங்கே நிக்குறேன். தேங்ஸ்''

''என்னடா தேங்ஸ். . பெத்த அம்மாகிட்டயாடா தேங்ஸ் சொல்லுவே, படுவா ராஸ்கோல். . '' என்று மீண்டும் எகிறிக்கொண்டு கதிரவன் கார்த்திகை நோக்கிப் பாய்ந்தார்.

''பெத்ததிலிருந்து உங்கம்மாவுக்கு ஒரு முத்தம் கொடுத்திருப்பியாடா? அவளைக் கட்டிப் பிடிச்சிருப்பியாடா? அவ எப்படியெல்லாம் ஏங்கியிருப்பா. ஒவ்வொரு நாளும் அவ வடிக்கிற கண்ணீரு எனக்குத்தாண்டா தெரியும். ஒனக்கு உடம்பு சரியில்லன்னா அவ  துடிக்கிறத் துடிப்பு உனக்குத் தெரியுமாடா, பாசாமில்லாத மரக்கட்ட. . இவ்வளவு சொல்றேனே, உனக்கு சொரணையே வராதாடா. . எங்கேயோ பாத்துக்கிட்டு நிக்கிறே. . ''

தன் அப்பா கதிரவன் பேசியதற்குக் கார்த்திக் பதிலே கூறவில்லை. அவன் தன் கைவிரல்களில் உள்ள நகங்களை அழகு பார்த்துக்கொண்டிருந்தான். இதற்குள் மாலதி சமையலறையிலிருந்து இரண்டு தோசைகளைச் சுட்டு, கொஞ்சம் சாம்பாரையும், சட்னியையையும் போட்டு எடுத்துக்கொண்டு வந்துவிட்டாள்.

''சும்மா இருங்க. ஏங்க இப்படி எட்டு வீட்டுக்கு கேக்குற மாதிரி கத்துறீங்க. புள்ளைக்குப் பசிக்குதுன்னு சொன்னலே, முதல சாப்பிட விடுங்க, இந்தாடா ராசா நீ சாப்பிடு கண்ணா. அப்பா சும்மா சொல்றாரு. உனக்கு இல்லாத பாசமாடா? எல்லாத்தையும் உன் மனசுல போட்டுப் பூட்டியே வைச்சிருக்கேனு எனக்குத் தெரியாதாடா?'' என்று சொல்லிக்கொண்டே தட்டை கார்த்திக்கிடம் நீட்டினாள் மாலதி. ''அம்மா வேணும்னா ஊட்டி விடட்டா ராசா?''

''நோ பிளீஸ். . தேங்குயு''

''டேய் நீ தட்ட தொட்டே எங்கிட்ட இன்னைக்கு சம்மயா வாங்கிடுவே. . பெத்த தாய் கிட்டயே, தேங்குயுவாடா? அவ எவ்வளவு ஆசையா உனக்கு ஊட்டிவிடவான்னு கேட்டா. . நீ என்னமோ வெள்ளக்கார புளுக்க மாதிரி 'நோ பிளீஸ்' ன்னு சொல்லுறே. .அம்மா மட்டும் வேணா ஆனா அவ சுட்ட தோச மட்டும் வேணும், பிள்ளையாடா நீ?'' என்று கதிரவன் கத்தியது அக்கம் பக்கத்தினரை ஈர்த்துவிட்டது.

ஒருசில தலைகள் கதிரவன் வீட்டுச் சன்னல்களை எட்டிப்பார்க்கத் தொடங்கிவிட்டன. 

''அய்யோ, நம்ம பிரச்சன நம்மலோடு இருக்கட்டும்ங்க, இப்படி பக்கத்துவீட்டுக் காரங்க எல்லாம் பாக்குறவரைக்குமா கத்துறது?'' என்று தன் கணவனை எச்சரித்துவிட்டு, சன்னலோரமாகச் சென்று, 'ம்ம. . ஒன்னுமில்லங்க. .பையன் ஒழுங்காச் சாப்பிட மாட்டுறான். . உடம்பு கெட்டுப்போயிடும் இல்லையா.. அதுதான் கொஞ்சம் எம் புருசன் சத்தம் போட்டுப் பேசிட்டாரு. . நீங்க போங்க. . நீங்க போய் வேல ஏதாச்சும் இருந்தா பாருங்க. . '' என்று நைசா பேசி எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தவர்களை விரட்டி விட்டாள் மாலதி.

''ஏங்க ஒரு நாளும் இல்லாத திருநாளா இப்படிப் பண்ணுறீங்க. . இது இன்னைக்கு நேத்தா நடக்குது. . சும்மா விடுங்க அக்கம்பக்கதில் உள்ளவங்க எல்லாரும் எட்டிப் பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. . ,'' என்று மாலதி சொல்லி முடிக்கையில் வாசற் கதவைத் தட்டும் ஓசை கேட்டது.

மாலதி தன் விரலை வாயில் வைத்து, 'ஷு' என்று தன் கணவனிடம் கூறிவிட்டு, கதவைத் திறந்தாள். மேல்வீட்டு முனியம்மா வாசலில் நின்றுகொண்டிருந்தாள். 

மேல் வீட்டு முனியம்மாவுக்குச் சுமார் எண்பது வயது இருக்கும். தனியாகத்தான் இருக்கிறாள். நல்ல பழுத்த அனுபவசாலி. நன்றாகச் சாமி கும்பிடுவாள். அவளிடம் அருள்வாக்கு கேட்பதற்கு ஒருசிலர் அவளிடம் வந்துபோவதுண்டு. 

''அடியே மாலதி, என்னடி ஒங்க வீட்டுல இடிமொழக்கம், மேல வரைக்கும் கேக்குது?''

''ஒன்னும் இல்ல பாட்டி, சும்மா பேசிக்கிட்டுத்தான் இருந்தோம். . ''

''யாருடி அங்க, ஒம்பையன் கார்த்திக்தானே அங்க நிக்குறது. .''

''ஆமா பாட்டி. . ''

''பேசுறானா இல்லையா. . எப்போதும் உம்முன்னு மூஞ்ச வச்சிக்கிட்டு. . என்னடி வீட்டுக்குள்ள விடமாட்டியா, வெளிய நிக்க வைச்சே அனுப்பிடுவ போலருக்கு. . ''

''இல்ல பாட்டி, கார்த்திக்கு உடம்பு சரியில்ல. . உள்ள வந்தா உங்களுக்கும் ஒட்டிக்கிருக்கும் அதுதான். . '' மாலதிக்கு என்ன சொல்லிச் சமாளிப்பது என்று தெரியவில்லை. ஏதோ சொல்லி வைத்தாள்.

''சரிடியம்மா. . ஒன் வீட்ட அழகுபாக்க வர்ல. . இந்தா இந்தா முறுக்குச் சுட்டேன். . உனக்கு ஒம்புருசனுக்கும் கொஞ்ச எடுத்தாந்தே. . இந்தா,'' என்று சொல்லிக்கொண்டே ஒரு பிளாஸ்டிக் டப்பாவை மாலதியிடம் நீட்டினாள். 

''சரி பாட்டி. .நன்றி பாட்டி. .'' என்று கதவை அடைக்க முயன்றவளிடம், 

''மாலதி, அப்புறம் நான் அன்னைக்குச் சொன்னத மறந்துடாத. . கடவுள் வழிதான் காட்டுவாரு. . நம்மதான் செய்யனும், புரியுதாடி. .'' என்று நினைவுபடுத்திவிட்டுச் சென்றாள் முனியம்மா.

மேல்வீட்டு முனியம்மா சென்றதும், மாலதி பெருமூச்சு விட்டாள். ''இங்க பாருங்க கத்துறத நிறுத்துங்க. .புள்ளய கொடுத்த கடவுளுக்கு, அப்பா அம்மா மேல அவனுக்குப் பாசத்தையும் கொடுக்க தெரியும். . '' என்று தன் கணவனைப் பார்த்து கூறினாள்.

''அம்மா, நான் இந்த தோசையைச் சாப்பிடலாமா, வெரி ஹங்கிரி. .நான் சாப்பிட்டு இந்தத் தட்டைக் கழுவி கொடுத்திடுறேன். .'' என்று கார்த்திக் மாலதியிடம் கூறினான்.

''டேய் கண்ணு, நீ இன்னுமாடா சாப்படலே. . '' என்று மாலதி அலறியடித்துக்கொண்டு தட்டை கார்த்திக்கிடம் நீட்டினாள்.

கதிரவனும் அமைதியானார். 

பின் ஆதரவான குரலில் பேசினார்.  ''டேய் கார்த்திக், நீ தோசையைச் சாப்பிடுறதுக்கு முன்னால, இதுக்கு மட்டும் பதில் சொல்லுடா, அப்பா உன்ன திட்டமாட்டேன்டா''

கார்த்திக் ஒன்றும் கூறாமல் கதிரவனின் முகத்தைப் பார்த்தான். பிறகு மிகவும் மெதுவாக, 'சுவர் (sure) ' என்றான்.

''ஏண்டா, நேத்து அம்மா அழாதீங்க நான் இங்கதான் இருக்கேனு ரும்குள்ள இருந்து சொன்னியாமே. . உனக்கு அம்மா மேல பாசம் இருக்குதானே கண்ணா. . அத ஏண்டா காட்ட மாட்டுறே. . '' என்று கதிரவன் ஒரு குழந்தையைப் போல் கெஞ்சினார்.

சற்று நேரம் அங்கு மௌனம் நிலவியது. மாலதியின் மனத்தில் பால் நிரம்பி அவள் உதட்டில் புன்னகையாகச் சிறிது அரும்பியது. மகனின் முகத்தைப் பார்த்தாள்.

''அப்பா, நான் சொன்னது இவங்கள இல்ல,'' என்று மாலதியைக் கைகாட்டி கார்த்திக்  கூறினான். 

(தொடரும்) 

*****************************************************************************************



Bạn đang đọc truyện trên: Truyen247.Pro