யாதிரா - 1
குண்டூசி ஸைசில் ஒரு பொட்டை தன் நேர்த்தியான இரு புருவங்களின் நடுவில் பொருத்தினாள் யாதிரா. பொட்டு வைப்பது கூடாது தான் இருந்தாலும் இருக்கண்களும் நெற்றியும் மட்டும் தெரியும் இந்த மாஸ்க் முகத்தை கொஞ்சம் பரிட்சயமான முகமாய் மாற்ற இப்பொட்டு உதவியது. அதன் பின் N95 mask ஐயும் face shield ஐயும் மாட்டிகொண்டு இவ்வீராங்கணை போர்களத்துக்கு உற்சாகமாய் துள்ளியோடினாள். எமெர்ஜன்சி வார்ட் இல் இவள் தான் ராணி, இவள் தான் இப்போரை வழிநடத்தும் அதிகாரி. காலை 8 மணிக்கு தொடங்கிய இவளின் ஷிப்ட் அன்றைய நாளின் பூகம்பத்தை காட்டிக்கொடுக்கவில்லை. எப்போதும் போல் பாம்பு கடியும், கையை வெட்டிகொண்ட இளசுகளும், வழுக்கிவிழுந்த பெருசுகளும், திடீர் வயிற்று வலியைக் கண்டு பயந்தவர்களுமாய் நாள் துவங்கியது.
மருத்துவர் இவளுக்கு இது பழக்கப்பட்டதாயினும் நோயாளிகளுக்கு இது புதிது அதுவும் சிலரின் வாழ்க்கையின் மீள முடியா துயரத்தின் துவக்கம் இது என அறிந்தவள் ஒவ்வொரு நோயாளியையும் முழுமனதாய் கவனித்துக்கொண்டிருந்தாள். அஜீரணத்தால் நெஞ்சு வலியோடு வருபவனையும் ஹார்ட் அட்டாக்கால்(heart attack) நெஞ்சைப் பிடித்துகொண்டு வருபவனையும் சரியான நேரத்தில் பிரித்து தகுந்த முதற்படி சிகிச்சை வழங்குவது எளிதல்ல. பாலிலிருந்து தண்ணீரைப் பிரிக்கும் அன்னமாய் இந்த அன்னம் அவளின் வேலையை சிறப்பாய் செய்தது. ஒவ்வொரு நோயாளியின் கட்டிலில் தொங்கும் ரிப்போர்ட்டைப் படித்து அதில் கையொப்பொம் செய்கையில் அவளின் விரல்களிலிருந்து பேப்பருக்கு மின்சாரம் பாய்வது போல் ஓர் உணர்வு. 28 வயதில் Emergency Medicine Associate Consultant ஆக யாதிரா வளர்ந்திருந்தாலும் ஒவ்வொரு முடிவையும் இருமுறை யோசித்தாள். அவளின் திறமையும் எளிதாய் வந்தது அல்ல. இதற்கு அவளின் அத்தை மகன் ஆதவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.(அந்த கதையை இன்னொரு நாள் சொல்கிறேன்.)
மதியம் இரண்டு மணியைத் தொட மூச்சு வாங்கும் எண்ணத்தில் யாதிரா corridorஇல் இருந்த waiting area நாற்காலியில் சாய்ந்தது தான் தாமதம் எமெர்ஜன்சி வார்டில் இடி அரவம் போல் திடீர் ஆரவாரம் வெடித்தது. நாற்காலியிலிருந்து யாதிரா எழ முற்பட அவளின் தேய்ந்த பாதம் வலியில் கெஞ்சியது. தன் கீழ் இருக்கும் இரு ஜூனியர் ரெசிடன்ஸ்(junior residents) புதிய பேஷண்டை சோதனை செய்ததும் அவர்களை மேற்பார்வைப் பார்க்கலாமென திட்டமிட்டாள் யாதிரா. இவள் பயிற்சியளித்த மருத்துவர்கள் அல்லவா, அவ்விருவரும் முதற்கட்ட சோதனையை சிறப்பாக செய்வார்கள் என நம்பினாள் யாதிரா. தன் உடலை தன் வாழ்க்கை இலட்சியத்தை நோக்கி அழைத்துச் செல்லும் இக்கால்களுக்கு அவ்வப்போது கரிசணமும் நன்றியும் காட்டலாம், தப்பில்லை என தனக்குள் சிரித்துக்கொண்டு ஒவ்வொரு விரலையும் நீவினாள்.
"டாக்டர் யாதிரா, சீக்கிரமா வாங்க. டீன் கூப்பிடுறாரு," நர்ஸ் ஹேமா பேயைக் கண்டாற்போல் ஓடி வந்தாள்.
குளுகுளு ஏசியில் உட்காரும் டீனுக்கு இந்த அனத்தும் எமர்ஜென்சி வார்டில் கால் வைக்கும் புண்ணியம் என் ஷிப்ட் இல் தான் நடக்கனுமா?
"என்னவாம் தலைக்கு?" நர்ஸுகளுக்கும் (சில)டாக்டர்களுக்கும் இடையே இருக்கும் நட்பின் வெளிபாட்டாய் யாதிரா டீனின் பட்டை பெயரை வைத்து கேட்டாள்.
"தெரியல டாக்டர். ஆனா புது கேஸ் வந்ததுல ரொம்ப கூட்டமா இருக்கு. எச்சரிக்கையா இருந்துக்குங்க," நட்புக்கு நட்பு தானே உதவி.
ஆம், நர்ஸ் ஹேமா சொன்னது போல் ஒளியை சுற்றும் அந்திப் பூச்சிகளாய்(moth) ஒரு stretcherஐ சுற்றி முழு எமெர்ஜன்சி வார்ட் ஏ இருந்தது. கூட்டத்தை விலக்கி அவ்வொளியைக் கண்டபோது யாதிராவுக்கு, 'ஆம் இது பெரிய பல்ப் தான்' என தோன்றியது. பளிங்கு போல் மின்னும் தேகமாய் மிக மிக அழகாய் ஒரு வாலிபன் stretcherஇல் படுத்திருந்தான். யாதிராவின் கண்கள் அவனை தலை முதல் கால் வரை உன்னிப்பாய் கவனித்தன. மயக்கத்தில் இருந்தவனின் கரத்தைப் பிடித்து பல்ஸ்(pulse) பார்க்கும்போதே அவனின் தொப்புள் பகுதியில் 3cm diameterஇல் ஓர் இரும்பு கம்பி பதிந்திருந்ததையும் யாதிரா பார்த்தாள். இடது புறத்தில் axillary line இலிருந்து குறுக்காய் அவ்விடமே bruise ஆகி இருந்தது.
"யாதிரா!" இவளின் கவனத்தை டீனின் குரல் உடைத்தது. அடிபட்டவனின் தந்தையோடு பேசிக்கொண்டிருந்த டீன் இப்போது யாதிராவை நோக்கினார்.
"யெஸ் சார்."
"இவரு ஒரு விஐபி. உங்க ஜுனியர் ரெசிடெண்ட்ஸ்(junior residents) கிட்ட விடாம நீங்களே treat பண்ணுங்க. direct ஆ என்கிட்ட ரிப்போர்ட் பண்ணுங்க."
"யெஸ் சார்."
டீனின் அதட்டலில் பல்பை ஐ மீன் ஆறடி அழகனை சுற்றியிருந்த கூட்டம் விருப்பம் இன்றி கலைந்தது. அட்டெண்டண்ட்(attendant) மூர்த்தி stretcherஐ தனி அறைக்கு தள்ள உடனே குறுக்கிட்டாள் யாதிரா, "எங்க கொண்டு போறீங்கண்ணே?"
"இல்ல மா. இவரு பெரிய ஆளு. அதான் தனி ரூமுக்கு..."
"தனி ரூம் நார்மல் வார்ட் இல் தானே இருக்கு. இவருக்கு கோரோனா டெஸ்ட் எடுக்காம நாம அவர அங்க கொண்டு போக முடியாது. மற்றவர்களுக்கு பரவினா பெரிய பிரச்சனை. நீங்க நார்மல் எமெர்ஜென்சிக்கே கொண்டு போங்க." யாதிரா மூர்த்தியின் மறுபேச்சைக் மறுத்துவிட்டு அவளே stretcherஐ தள்ள மூர்த்தி அவளின் கட்டளைக்கு அடிபணிந்தார்.
சற்று கூட்டமாய் இருந்த எமர்ஜென்சி வார்டில் அவ்வழகன் சேர்க்கப்பட அவளின் ஜூனியர் ரெஸிடண்ட் ஒருவரின் உதவியோடு யாதிரா தன் பணியைத் துவங்கினாள். அவளின் தோள் பின்னால் சில தாதியர்களும் சில பேஷண்ட்களும் எட்டிப்பார்ப்பதை அவளால் உணர முடிந்தது.
அக்கம்பி அவ்வளவு ஆழமாய் உடம்பினுள் செல்லவில்லை என யாதிராவின் பயிற்சியும் அனுபவமும் கூறினாலும் X-ray எழுதினாள் யாதிரா. பின் அந்த ஆடவனின் இடது புறத்தை லேசாக அமுக்கி சோதனை செய்தாள். ஆம், அவனின் spleen ruptureஆகியிருந்தது. குருதி வழியாய் அவனின் உயிர் கசிந்துக்கொண்டிருந்தது. ஏற்கனவே ஏற்றிக்கொண்டிருந்த ரத்தத்தை அதிகரிக்க சொன்னாள் யாதிரா. x-rayவந்த பின் கம்பியின் முழு தாக்கத்தை அறிந்த பின்னே splenectomy(spleen removal) அறுவை சிகிச்சை செய்ய முடியுமென கணக்கிட்டவள் மூர்த்தியை x-ray ரூமுக்கு stretcherஐ தள்ளுமாறு கேட்டுகொண்டாள். அந்த ஆடவன் இன்னும் மயக்க நிலையில் வலியில் முனங்கிக்கொண்டு இருந்தான். ரூமுக்கு செல்லுகையில் தான் இவ்வளவு நேரமாய் உடம்பின் காயங்களை கவனித்த யாதிராவால் அவனின் முகத்தைப் பார்க்க முடிந்தது.
எங்கோ பார்த்த முகம். இவளின் பேஷண்ட் ஆக இருக்க வாய்ப்பில்லை ஏனெனில் இவளின் ஒவ்வொரு நோயாளியின் உடலையும் முகத்தையும் இவளின் கைகளும் கண்களும் அடையாளம் கண்டுக்கொள்ளும். ஆனால் இது எங்கோ அவ்வப்போது பார்த்த முகம் தான். ஒரு வேளை மளிகைக் கடையிலோ அல்லது அனுதினமும் தோசை மாவு வாங்கும் கடையிலோ நிற்பவனா? இல்லை, இவ்வளவு அழகாய் இருந்தால் மளிகைக் கடையில் நிற்கமாட்டான், நடிகனாய் கேமரா முன் நின்றிருப்பான். விஐபி வேற. இவள் நியாபகத்தை புரட்டும்போது x-ray ரூம் வர, மூர்த்தி stretcherஐ உள்ளே கொண்டு சென்றார். யாதிரா கம்பியூட்டர் பின்னால் நின்று radiographer இடம் கேஸை விவரித்தாள்.
கருப்பு வெள்ளை படம் மனிதனின் ஆழ் உடலை படம் பிடித்துக் காட்ட யாதிராவின் யூகம் நிரூபனமானது. அவ்வளவு டீப் ஆக கம்பி செல்லவில்லை. அவனின் வேறொரு பிரச்சனை தான் இப்பொழுது சிக்கலாய் இருந்தது. உடனே splenectomy செய்தாக வேண்டும், இதன் மூலம் ரத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும். பின் அந்த கம்பியை எடுக்க வேண்டும். மயக்கத்தில் இருக்கும் ஆடவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய அவரின் தந்தையைத் தேடி அவரிடம் அனுமதி பெற வேண்டுமே, அதற்கு நேரமாகுமே என அஞ்சினாள். நமக்கு வேலைக்ககொடுத்த டீன் சும்மா தானே இருக்கார் என உடனே டீனுக்கு போன் செய்து அவரிடம் இச்சில்ற வேலையை ஒப்படைத்துவிட்டு OT2(operating theatre 2) ஐ தயார் செய்ய சொன்னாள் யாதிரா.
ஒன்றரை மணி நேரத்தில் அறுவை சிகிச்சை முடிந்து பின் கோரோனா டெஸ்ட் நெகடிவ் என வர இப்போது அவனை தனி ரூமில் தங்க அனுமதித்தாள் யாதிரா. மணி மூன்றரை ஆகியது. வயிறு குடைய ஆரம்பித்தது. தனது ஜூனியர்களிடம் பொறுப்பை விட்டுவிட்டு மருத்துவமனை காண்டீனுக்கு அடியெடுத்துவைத்தவள் அதிர்ச்சியில் உறைந்தாள். கருப்பு கேமராக்களை மேசையில் வைத்துவிட்டு பல பத்திரிக்கையாளர்கள் காண்டீன் டீயில் வடையை முக்கிக்கொண்டிருந்தனர். ஒருவழியாய் நெளிந்து வளைந்து காண்டீன் கடையின் முன் வந்தடைந்தவள் புளியோதரை ஒன்றை வாங்கினாள். "என்ன இவ்ளோ கூட்டம்?"
"அதுவா பாலிவூட் நடிகன் வருண் நம்ம ஹாஸ்பத்திரில தான் இருக்காராமே. டாக்டர்மா, நீங்க பார்த்தீங்களா?"
யாதிராவுக்கு தூக்குவாரி போட்டது. அவ்வப்போது பார்த்த முகத்தின் அடையாளம் தெரிந்துவிட்டது. தமிழ் பட ஹீரோவாக இருந்திருந்தால் தெரிந்திருக்கும், ஹிந்திக்கு இவள் எங்கு போவது? ஆயினும் விளம்பரங்களில் பரிட்சயமான முகம் தான் வருணுடையது.
"எமர்ஜென்சி கேஸ் நு வேற நியூஸ்காரனுங்க சொல்றாங்க. அதுவும் என் கடை முன்னாடி பல மணி நேரமா நின்னு கேமரா பார்த்து பேசுறானுங்க ஆனா ஒரு தயிர் சாதம் வாங்கமாட்டேங்குறாங்க. சரி... நீ தானமா எமர்ஜென்சிக்கு ஹெட்? உனக்கு தெரிஞ்சிருக்குமே?"
யாதிரா புளியோதரை பொட்டலத்தை கையில் வாங்கிக்கொண்டு காண்டீன் கடைக்காரரை பார்த்து கண்ணடித்தாள். கடைக்காரர் அவளின் சைகையைப் புரிந்துக்கொண்டு சிரித்தார்.
வருணு..வருணு..நீ என்ன பண்றன்னு பார்த்துர்ரேன், யாதிரா புன்னகைத்துக்கொண்டே மீண்டும் எமர்ஜென்சி வார்டினுள் அடியெடுத்துவைத்தாள். முதலில் இப்புளியோதரையை சாப்பிட்டு உடம்புக்கு தெம்பு ஏற்றிக்கொண்டு தான் அவனை மீண்டும் பார்க்க வேண்டும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro