6.அவனால்
மருத்துவமனை சூழல் பிடிக்காமல் எழுந்துபோக நினைத்துக் கட்டிலில் இருந்து கால்களை இறக்கியவன், திடீரென ஏற்பட்ட கால்வலியால் நிலைதடுமாறிக் கீழே சாய்ந்தான், கம்பிகளுடன்.
காலில் சில மின்சார வயர்கள் வேறு சிக்கிக் கொண்டதால் எழமுடியாமல் அலறினான் அவன். அங்கிருந்த இளநிலை மருத்துவர் ஒருவர் ஓடி வந்து அவனைப் பரிசோதித்துவிட்டு, அருகிலிருந்த செவிலியரிடம் ஏதோ சொல்ல, அவர் வேகமாகக் சென்று ஒரு ஸ்ட்ரெட்சரை எடுத்து வந்தார். ஆட்கள் மூவர் சேர்ந்து அவனை ஸ்ட்ரெட்சரில் ஏற்றி, சகடை வைத்த அந்தப் பலகையைத் தள்ளிக்கொண்டு சென்றனர்.
அவனை 'Department of Radiology' என்ற பெரிய நீல வண்ணப் பலகை பொருத்தப்பட்ட கதவு வரவேற்றது.
"முதல்ல X ray எடுங்க. டாக்டர் ப்ரகதி வந்ததும் மத்த investigations எதுவும் பண்ணனுமான்னு கேட்டுட்டு பண்ணலாம்"
அவனைக் கண்ணாடி மேசையில் படுக்க வைத்து கண்ணுக்குத் தெரியாத எக்ஸ் கதிர்களை அவனுள் பாய்ச்சி, அது தந்த பிம்பத்தை செல்லுலோஸ் தாளில் படம் பிடித்தனர். அறையே கொஞ்சம் இருட்டடைந்து இருக்க, அவனை மட்டும் ஸ்ட்ரெட்சரில் விட்டுவிட்டு அனைவருமே கண்ணாடித் தடுப்புக்கு மறுபுறம் நிற்க, அது எல்லாமே அவனுக்குப் புதிதாகவும் பயமாகவும் இருந்தன.
அதற்குள் அங்கே வந்திருந்தாள் அவள். முகத்தில் லேசான எரிச்சல். அவனைப் பார்த்ததும், "அதான் செக்கப் பண்ணணும்னு தெளிவா சொன்னேன்ல, அப்றம் ஏன் எழுந்திரிக்க ட்ரை பண்ணீங்க?" என எரிந்து விழுந்தாள்.
நிவீஷூக்குக் கோபம் வந்தது. ஆனால் எதுவும் பேச முடியவில்லை. மற்ற மருத்துவர்கள், ஊழியர்கள் அனைவருமே அவனைத் தெரிந்துகொண்டு தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். நிறைய பெண் செவிலியர்கள் அவனைக் கண்டு நம்பவே முடியாமல் பார்த்துப் பார்த்துச் சென்றனர். முகத்தில் ஒரு 'starstruck awe' தெரிந்தது அனைவரிடமும்.
'ஆனால் இவள் மட்டும்...'
ப்ரகதி அவனது எண்ண ஓட்டங்கள் எதையும் அறியாதவளாய் உடனிருந்த மருத்துவரிடம் சில கட்டளைகள் கொடுத்துக் கொண்டிருந்தாள். ஒரு செவிலியர் x-ray தாளை இவளிடம் நீட்ட, அதை வாங்கி ஆராய்ந்தாள்.
"No apparent fractures. ஆனா வலிக்குது... ம்.... MRI எல்லாம் வேணாம். Arthroscopy ரூம் ரெடி பண்ணிட்டு டாக்டர் சதீஷை வரச் சொல்லிடுங்க"
செவிலியர் தலையசைத்துவிட்டு அகன்றார்.
அவனோ அவர்கள் பேசுவது எதுவும் புரியாமல் விழித்தான். அவனை இப்போது சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிச் சென்றனர்.
அவன் மனமெல்லாம் அவளே இருந்தாள்.
'சினிமா வாழ்க்கையில் முதல் முறையாய்.. என்னைத் தெரியாமல் ஒருத்தி... என்னிடம் சிடுசிடுக்கிறாள், கோபப்படுகிறாள், திமிராக முறைக்கிறாள்... இதுவரை எந்தப் பெண்ணும் என்னைக் கண்டு இத்தகைய உணர்வுகளைக் காட்டியதில்லை.
இவளிடம் ஏதோ இருக்கிறது... எத்தனை நடிகைகளைப் பார்த்திருக்கிறேன்... அவர்களைப் போல் எந்த அரிதாரமும் பூசிக்கொள்ளவில்லை இவள். ஆனாலும் அவர்களில் இல்லாத ஒரு ஈர்ப்பு... ஒரு இனம்புரியாக் கவர்ச்சி... இவள் மேல் எப்படி?
கண்ணைக் கவரும் நகைகள் எதுவும் அணியவில்லை. ஒரு சன்னமான சங்கிலி, காதில் தொங்காத பொட்டுக் கம்மல், வளையல் போடவில்லை. அவ்வளவுதான். நெற்றியில் கீற்றாய் விபூதியும், கல்லுப்பொட்டும். ஆனாலும் அவள் முகம் இப்படி ஒளிர்கிறதே... இதென்ன அதிசயம்?'
ஆயிரம் பெண்கள் சிரித்தபோது வராத ஆர்வம் ஒருத்தி முறைத்ததும் வந்துவிட, அவளைப் பற்றி அறிந்து கொள்ளத் துடித்தான் அவன். அதற்குள் அவள் சொன்ன அறை வந்துவிட, சக்கர நாற்காலியிலிருந்து ஒரு சாய்வான நீள நாற்காலியில் அவனை அமர வைத்தனர் உதவியாளர்கள். தப்பித்து ஓடிவிடக் கூடாது என்பதைப் போல் இரு கால்களையும் தனித்தனியாகக் கணுக்கால் பகுதியில் பெல்ட்டால் கட்டினர்.
அவனுக்கு சற்றே உதறலாக இருந்தது. அதற்குள் அவளும் மற்றொரு மருத்துவரும் அவனுக்கு அருகில் வந்தனர். அவன் முகத்தில் தெரிந்த பயத்தை அவள் இனங்கண்டுகொண்டாள். சற்றே நகைப்புடன், "ஒண்ணும் பண்ண மாட்டாங்க. இது ஆர்த்ரோஸ்கோப்பி. ஒரு minimal invasive investigation. அதாவது பெரிய அளவுல சேதம் இல்லாம, உங்க கால் மூட்டுல எதாவது கோளாறு இருக்கான்னு பாக்கணும், அவ்ளோதான்" என்றாள்.
மேலும் அருகிலிருந்த மருத்துவரிடம் திரும்பி, "டாக்டர்கிட்ட திமிரா பேசுவாங்க, அப்பறம் சும்மா ஒரு procedure பண்ண வந்தா அப்படியே பயந்து நடுங்குவாங்க" என உரைத்தாள் மெல்லிய குரலில், நிறைந்த ஏளனத்துடன்.
அவள் சொன்னது அவனுக்கும் கேட்டுவிட்டது. மேலும் அந்த மருத்துவரும் அதற்குச் சிரித்துவிட, அவனுக்கு ஆத்திரம் பீறிட்டது.
'என்ன திமிர் இவளுக்கு! அழகு இருந்தால் திமிரும் தானாக வந்துவிடுமோ?? என்னைத் திட்டியது கூடப் பரவாயில்லை.. ஏளனம் வேறு செய்கிறாளா? இருக்கட்டும். நான் யாரென இங்கிருந்து வெளியே சென்ற பின்னர் காட்டுகிறேனா இல்லையா பார்!!'
ஒரு ஜூனியர் டாக்டர் வந்து அவனது முழங்காலில் ஒரு ஊசியை செலுத்தினார். சுள்ளென்று வலித்தாலும், தன்மானம் கருதிக் கத்தாமல் இருந்தான் அவன். இரண்டு நிமிடங்களில், ஊசியிட்ட அந்த இடமே மரத்துப் போனதுபோல் இருந்தது அவனுக்கு. அவன் முகமாறுதல்களை அவள் கவனித்தாள்.
"சதீஷ் சார், I think the Anaesthesia sunk in"
அவள் தன் சக மருத்துவரிடம் திரும்பிக் கூற, அவரும் ஆமோதிப்பாகத் தலையசைத்தார்.
"அப்போ ஸ்டார்ட் பண்ணலாம் ப்ரகதி"
அவர்கள் பேசிவிட்டு அகல, உதவியாளர் ஒருவர் அவனது முழங்காலில் செந்நிற மருந்து ஒன்றைத் தடவினார். அவனுக்கு எந்த உணர்ச்சிகளும் தெரியவில்லை. ஆனால் அதுவே பயமாக இருந்தது. ஒரு துணியை அவன்மேல் போர்த்திவிட்டு அவர் நகர்ந்தார். சற்று முன் அவனருகில் நின்று பேசிக் கொண்டிருந்த டாக்டர் சதீஷ் இப்போது முகமூடி எல்லாம் போட்டு தயாராக வந்தார். கொஞ்சம் தள்ளி நின்று அவனைக் கவனித்துக் கொண்டிருந்தாள் ப்ரகதி.
கையில் அவர் ஒரு சின்னக் கத்தியை எடுக்கவும், கண்களை இறுக்க மூடிக்கொண்டு கைகளையும் முறுக்கிக் கொண்டான் அவன். அவளது சிரிப்பு லேசாகக் கேட்டது. அதன்பிறகு அங்கு நடந்தது ஏதும் அவனுக்குத் தெரியவில்லை. பத்து நிமிடம் கழித்து அவனைக் கண்ணைத் திறக்கச் சொல்லிச் சிரித்தார் சதீஷ்.
"It's over Mr. Niveesh. You can look!"
அவன் பார்த்தபோது முழங்காலில் ஒரு சின்ன பிளாஸ்திரி மட்டும் போடப்பட்டிருந்தது.
"அவ்ளோதானா?" சற்றே திகிலுடன் அவன் வினவ, அவர் சிரித்துக் கொண்டே தலையசைத்துவிட்டு நகர்ந்தார். அவள் வந்து, ஒரு நாற்காலியை அவனருகில் இழுத்துப் போட்டு அமர்ந்தாள். கையில் ஒரு வழவழப்பான கருநீலத் தாளில் அவனது கால் மூட்டின் உள்பகுதியுடைய படங்கள் பலவித கோணங்களில் இருந்தன. அதைப் பார்த்தபடியே அவனிடம் பேசினாள் அவள்.
"Mr. Niveesh, உங்களுக்கு இப்ப பண்ணின ஆர்த்ரோஸ்கோபியில, ஒரு ligament tear, அதாவது சவ்வு கிழிஞ்சிருக்கறது தெரிந்தது-"
"I know English" அவன் இடைமறிக்க, கோபமானாள் ப்ரகதி.
"Fine. We have spotted an Anterior Cruciate ligament tear in the posteromedial part of its insertion into the medial condyle of your right Femur..."
அவள் கடகடவென நிறுத்தாமல் மருத்துவ மொழியில் ஏதேதோ சொல்ல, அவன் திருதிருவென விழித்தான். அவளது முறைப்பான முகத்தை கடைக்கண்ணால் பார்த்தான்.
"I'm sorry, doctor"
கண்ணை வேறுபக்கம் திருப்பியபடி முனகினான் அவன்.
அவளது கோபம் பெருக, "Whatever.." எனத் தோளைக் குலுக்கியவாறு அலட்சியமாகக் கூறிவிட்டு நகரப் போனாள் வெளியே.
"டாக்டர், ப்ளீஸ். நான் நடுவில பேசினது தப்பு தான். இனிமே அப்படி நடக்காது. Will you kindly explain it again?"
அவன் முழுமையாக சரணடைந்து கெஞ்ச, மறைக்க முயன்ற ஒரு கர்வப் புன்னகையுடன் திரும்பி வந்து அமர்ந்தாள் அவள்.
"உங்க right knee jointல ஒரு ligament கிழிஞ்சிருக்கு. Speed trauma-- அதாவது கால் வேகமா போயி காரோட சீட்ல அடிச்சதால இப்படி நடந்திருக்கலாம். ஸோ உங்களால காலை நீட்டவோ, எழுந்து நிற்கவோ முடியாது"
"டாக்டர்!"
அவன் அதிர்ந்து உறைந்தான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro