Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

3.அவர்கள்

நீல பென்ஸ்காரின் வேகமானி நூறைத் தொட்டிருந்தது. சென்னையின் போக்குவரத்துக்கு சவால் விடும்படி அது சீறிப் பாய்ந்தாலும், இரண்டு சிக்னல்களில் சிக்கியதும் பரிதாபமாய் வேகமிழந்தது.

உள்ளே பின்சீட்டில் அமர்ந்திருந்த நிவீஷ் பொறுமை இழந்திருந்தான். தன் தங்கநிற முகத்தில் சுருக்கங்கள் படர்ந்திருக்க, அறுபதாயிரம் ரூபாய் அர்மாணி சூட்டின் பட்டனை விரல்களால் திருகிக் கொண்டிருந்தான் அவன்.

"இன்னும் எவ்ளோ நேரம் சங்கர்?"
வார்த்தையில் சலிப்பும், எரிச்சலும் அதீதமாகவே தொனித்தன.

"சார்..இன்னும் பத்தே நிமிஷம் சார். போய்டலாம்"

அவனது உதவியாளர் அவனுக்குப் பாந்தமாக பதிலளித்துவிட்டு, ஓட்டுனரிடம் சிடுசிடுத்தார்.

"மணி...வேகமாப் போயேன். சார் இன்னும் பத்து நிமிஷத்தில அங்க இருக்கணும். நிவீஷ்னாலே punctuality தான்னு எல்லாரும் சொல்வாங்க.. உன்னால அது கெட்டுடும்போல இருக்கே"

மணி திருதிருவென விழித்தான்.

இவங்க லேட்டா வந்துட்டு நம்மளைக் குத்தம் சொல்றாங்களே!

ஆனாலும் எதுவும் பேசவில்லை. இவன் வெறும் ஊழியனல்லவா? முதலாளிகளின் கோபத்திற்கு வடிகாலாய் இருப்பது இவர்களின் எழுதப்படாத விதி ஆயிற்றே.

அதற்குள் நம் நாயகனே, "இல்லை சங்கர். நான்தான் லேட் பண்ணிட்டேன். அம்மா ஃபோனை எடுத்திருக்கக் கூடாது. அதான் எல்லாத்துக்கும் காரணம்" எனப் புலம்ப, சங்கர் அவசரமாக மறுத்தார்.

"இல்ல சார்.. இன்னிக்கு ட்ராஃபிக் ஜாஸ்தி. அதான்.. வேறொன்னும் இல்ல. மணி, அங்கே ஒரு கேப் கிடைச்சிருச்சு பாரு, சீக்கிரம் போ."

ஓட்டுனர் மணியும் அவரது கத்தலுக்கு பயந்து கிடைத்த சந்து பொந்தில் எல்லாம் வண்டியைச் செலுத்தினான். ஹாரனின் ஜீவனை அழுத்தி அதன் ஓலக் குரலை சாலையெங்கும் தெளித்துக் கொண்டிருந்தான்.

நிவீஷ் அன்று பேசப் போகும் உரையை எடுத்துப் படித்துப் பார்த்தான். ஆயிரம் முறைகள் ஏற்கனவே படித்ததுதான். என்றாலும், புதிதாகப் பார்ப்பதுபோல் அதை உற்றுப் பார்த்துப் படித்து, மனதில் ஏற்ற இறக்கங்களுடன் பேசிப் பார்த்துக் கொண்டான். அப்போது தனது கைபேசி அடிக்க, யாரென்று எடுத்துப் பார்த்தான்.

சந்தோஷ்ராஜா சார்.

அழைப்பை சைலண்ட்டில் போட்டவன் நிலைக்கொள்ளாமல் தன் சீட்டில் அசைந்தான். காரின் முன்சீட்டில் எட்டிப் பார்த்தான். சங்கரை அழைத்தான்.

"கூகுள் மேப்ல ஒரு ஷார்ட்கட் காட்டுது சங்கர். அதைப் பார்த்து ட்ரைவருக்கு வழி சொல்லுங்க, கொஞ்சமாச்சும் சீக்கிரம் போலாம்"

"சரிங்க சார்"

அவரது கைபேசியில் வரைபடத்தை விரித்தவர் அதைப் பார்த்துவிட்டு ஒருநொடி தயங்கினார்.

"சார்...இது பைக் போற ரூட். ஒருவேளை ரோட் சின்னதா இருந்தா?"

"என்ன சங்கர்? சென்னைல எங்க அவ்ளோ சின்ன சந்துகள் எல்லாம் இருக்கு? நீங்க வழியை மட்டும் சொல்லுங்க"
சற்றே எரிச்சலுடன் அவன் சொல்ல, அவரும் சரியென்று தலையசைத்துவிட்டு ஓட்டுனருக்கு வழி சொன்னார்.

மணி கூட ஒரு நொடி தயங்கினான். பின்னர் சத்தமின்றி ஒரு பெருமூச்சு விட்டபடி 'விதிவிட்ட வழி' என்று அவர் சொன்ன பாதையில் காரைச் செலுத்தினான்.

'லெஃப்ட்'

'அடுத்த ரைட்'

'மறுபடியும் லெஃப்ட்'

'இப்ப நேராப் போ'

அப்படியிப்படி என்று சைதாப்பேட்டையின் உட்பகுதிக்குள் வந்திருந்தனர். இன்னும் அவர்கள் செல்ல வேண்டிய விஜயா வாகினியை நெருங்கவில்லை அவர்கள்.

"அதான் ரோட்ல யாரும் இல்லையே.. கொஞ்சம் வேகமாப் போகச் சொல்லுங்க சங்கர்"

"அ..அது...ம்ம்... சரி சார்"

"சார்...நூறுல போய்ட்டு இருக்கோம் சார். எனக்கே லைட்டா பயமா இருக்கு..." நிவீஷுக்குக் கேட்காதவாறு மெல்லிய குரலில் மணி சொன்னான்.

"அவர் ரேசர் பா. பைக் ரேஸ் எல்லாம் ஓட்டுவாரு. அவருக்கு பயமில்ல. நீ தைரியமா ஓட்டு"

சங்கரும் மெல்லிய குரலில் பதில் சொல்லியபடியே தனது சீட்பெல்ட்டை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். எதேச்சையாக நிவீஷைத் திரும்பிப் பார்த்தால் அவன் சீட்பெல்ட் அணியவில்லை. அவனிடம் சொல்லலாமா வேண்டாமா என சிந்தித்துக்கொண்டே, வரைபடத்தைப் பார்த்தார்.

'அடுத்த லெஃப்ட்'

......

அடுத்து நடந்ததை விவரிக்க சில நிமிடங்கள் பிடித்தாலும், அவை கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தேறின.

சரியாக roadview கிடைக்காமல் சடாரென அந்தக் கார் திரும்ப, அவர்களுக்காவே காத்திருந்தது போல் அந்தப் புளியமரம் அங்கே நின்றிருக்க, பெருஞ்சத்தத்துடன் அதில் மோதியது கார். மோதிய வேகத்தில் காரின் கண்ணாடிகள் அனைத்தும் உடைந்து சிதறின. முன்பக்க பானெட் முற்றிலுமாய் உருவிழந்து சிதைந்தது.

'ஏர்பேக்' என்ற கண்டுபிடிப்பின் அற்புதத்தை அன்று அவர்கள் உணர்ந்தனர். ஓட்டுனர் இடத்தில் இருந்த மணிக்குக் காயங்கள் பெரிதாக இல்லை. ஆனால் சட்டென இடித்த அதிர்ச்சியில் அவனது இசயத்துடிப்பு எகிறியிருந்தது. அவன் திரும்பி அருகிலிருந்த சங்கரைப் பார்த்தான். அவர் முகத்தில் கண்ணாடிக் கீறல்கள் பல இருந்தன. மேலும் அவரது ஏர்பேக் முழுதாக விரியாவிட்டதால் காரின் முன்பக்கப் பலகையில் மோதி விழுந்து மயங்கியிருந்தார்.

மணி சற்றே நடுக்கத்துடன் பின்னால் திரும்பினான்.

தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான திரையுலக நட்சத்திரம்... தன்னால் ஓட்டப்பட்ட காரில், ஏற்பட்ட விபத்தில், இறந்துவிட்டால்... அது வெளியே தெரிந்துவிட்டால்...
முகத்தில் உண்மையான பயம் நிழலாடியது.

நிவீஷ்...
என்றுமே அவன்பக்கத்தில் இருக்கும் அதிர்ஷ்டம் அன்று விடுப்பு எடுத்துக்கொண்டது போல.

எப்போதும் பயணியர் இருக்கையில் அமரும்போது ஒரு ஓரமாக அமர்ந்து சீட்பெல்ட் அணிபவன் இன்று முன்சீட்டுகளுக்கு இடையேயான பகுதியில் அமர்ந்திருந்தான். அதுவும் முற்றிலும் நடுவே அமராமல் ஒரு காலை முட்டுக்கொடுத்து வேறு அமர்ந்திருந்தான். அவனுக்கு வேகம் பிடிக்கும்தான்... ஆனால் இன்று வேகத்துக்கு அவனைப் பிடிக்காமல் போய்விட, மோதிய அதிர்ச்சியில் நினைவிழந்திருந்தான் அவன். கையிலிருந்த காகிதங்கள் நழுவி, காரின் தரையில் விழுந்திருந்தன.

மூக்கில் இரத்தம் வழியும் நிலையில் மயங்கியிருந்தான் அவன். முகம் நிர்மலமாய் இருந்தது. மூச்சிருக்கிறதா என மணி தொட்டுப் பார்க்க, அது போனால் போகட்டும் என்பதுபோல் சன்னமாக வந்துகொண்டிருந்தது. சற்றுத் தைரியம் வந்தவன் ஆம்புலன்ஸ்க்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல, அதற்குள் இடித்த சத்தமும், காரின் கீக்கீ சத்தமும் கேட்டு அந்தப் பகுதி மக்களே என்னவெனப் பார்க்க வந்துவிட, உதவி செய்கையில் நிவீஷை இனங்கண்டுவிட்டவர்கள் அதிசயத்தில் கூச்சலிட்டவாறும், ஃபோட்டோ எடுத்தவாறும் இருக்க, மணி கோபமாகக் கத்தினான்:

"மனுஷன் சாகற நிலைமையில் இருந்தாலும் விட மாட்டீங்களா?!"

ம்ஹூம்... அவனது கதறல்களை எவரும் கண்டுகொள்ளாமல் தங்கள் வேலையிலேயே மும்முரமாக இருந்தனர். ஆம்புலன்ஸ் வரும்வரை இந்தக் களேபரம் தொடர்ந்தது. விஷயத்தை யாரோ மீடியாவுக்குச் சொல்லிவிட, நான்கைந்து கேமராவைத்த கார்களும் ஆம்புலன்ஸைப் பின்தொடர்ந்தன.

எங்கே கூட்டிச் செல்ல எனத் தெரியாமல் அமிஞ்சிக்கரைக்குள் நுழைந்தது அந்த ஆம்புலன்ஸ்.

"கவர்மெண்ட் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலாமா?"

"யோவ்!!! ஒனக்கென்ன பைத்தியமா? உள்ள இருக்கறது மக்கள் நாயகன் நிவீஷ். நாளைக்கு அவனுக்கு எதாவது ஒன்னு ஆச்சுன்னா அவனோட ரசிகர்கள் உன்னை சும்மா விடமாட்டாங்க"

ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பேசிக் கொள்வதைக் கேட்டான் மணி. அவனுக்குக் கலக்கம் அதிகமானது. முதலுதவி கொடுத்தும் நிவீஷ் எழவில்லை. ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவப் பணியாளரும் ஓய்ந்துபோய்க் கையை விரித்தார். மணி நடுங்கத் தொடங்கினான்.

கையைப் பிசைந்துகொண்டே சுற்றுமுற்றும் பார்த்தவன் கண்ணில் பட்டது அந்த பெயர்ப்பலகை.

'LIVEWELL HOSPITALS'

"ஏ!! லெஃப்ட்ல போ. அந்த பெரிய ஆஸ்பத்திரிக்கே போ!"
ஓட்டுனரிடம் கத்தினான் மணி.

"பெரியாஸ்பத்திரியா?"

"டேய்! அந்த பிரைவேட் ஆஸ்பத்திரி தான். சீக்கிரம் போ"

நிவீஷின் அதிர்ஷ்ட தேவதை இன்னும் ஒரு அடி தூரப் போயிருந்தது.

ஆம்.
அன்றைய Casualty (விபத்து, அவசர சிகிச்சை) பிரிவின் duty doctor சொல்லாமல் இன்று கொள்ளாமல் விடுப்பு எடுத்திருந்தார்!!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro