Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

26.அவன் பார்வை

"இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு என்னை இவ்ளோ அசிங்கமா பாக்குற ப்ரகதி?"

"நீங்க இப்டி பண்ணுவீங்கனு நான் நினைக்கவே இல்லை சார்... நான் உங்களை அப்படி பார்க்கல. நீங்க என்னோட நல்ல ஃப்ரெண்ட், நல்ல சீனியர், நல்ல மெண்டர். அவ்ளோ தான். I don't think there's anything beyond that."

"எப்டி உன்னால இப்டிப் பொய் சொல்ல முடியுது ப்ரகதி? உனக்கு என்னைப் பிடிக்கும்‌. எனக்குத் தெரியும். நான் பாத்திருக்கேன், நீ மத்தவங்களை விட என்கிட்ட க்ளோஸா இருப்ப, நிறைய ஷேர் பண்ணிக்குவ... நீ--"

"யாரு, நான், நிறைய ஷேர் பண்ணுவேனா? என்னைக்காவது பேஷண்ட், சர்ஜரி, ப்ரொசீஜர், ஷெட்யூல்... இதைத் தவிர நானா உங்க கிட்ட வேற எதாவது பேசியிருக்கேனா? சரி, என்னோட surname என்னன்னு உங்களுக்கு தெரியுமா? என் வீட்டைப் பத்தி, பாஸ்ட் பத்தி, எதாவது தெரியுமா சார்?"

அவன் மௌனமாக நின்றான். ஆனால் கண்களில் அபாயகரமான அளவில் கோபம் கொப்பளித்தது. அதை லட்சியம் செய்யாமல் அவள் நிமிர்ந்து நேருக்கு நேர் அவனைப் பார்த்து நின்றிருந்தாள். அவள் சற்றே உயரம் என்பதால் இருவரின் பார்வையும் ஒரே நேர்க்கோட்டில் விழுந்தன.

அந்தப் பார்வையைத் தவிர்த்து வேறுபுறம் திரும்பிக் கொண்டு கேட்டான் அவன்.

"இப்ப முடிவா என்ன சொல்ல வர்ற?"

"முதலும் முடிவுமா நான் சொல்றேன். என் வாழ்க்கையில் இன்னொரு ஆணுக்கு இடமில்லை. நான் ஏற்கனவே நிறைய பட்டுட்டேன். அதெல்லாம் சொன்னாலும் புரியாது உங்களுக்கு. So never approach me with those sort of thoughts"

"Fine. I'll make you regret. I'll make your life a living hell!"

கண்களில் கருமை படர, ஒரு ஆழ்ந்த குரலில் எச்சரித்துவிட்டு அவன் விலகி‌ நடந்தான்.

அதன்பின் நடந்தவை எல்லாம் அவனது வார்த்தைகளை அவளுக்கு உணர வைத்தன. அவனது கோபத்தின் உஷ்ணத்தை உணர்த்தின.

அவளுக்கு மட்டும் சில கஷ்டமான, பிரச்சனையான, சிக்கலான அறுவை சிகிச்சைகள்.

அவளுக்கு மட்டும் 'underperforming' மெமோக்கள்.

அவளுக்கு மட்டும் அதிக பேஷண்ட்கள், மற்றவர்களால் நிராகரிக்கப்பட்ட நோயாளிகள்.

ஆனால் சிகிச்சைப் பணிகள் ஒவ்வொன்றையும் சவாலாக எடுத்துச் செய்யும் ப்ரகதிக்கு, அந்தப் போர் வாழ்க்கை பழகிப் போனது. ஒரு மாதமே ஆனாலும், ஏதோ வருடக்கணக்கில் பணிபுரிந்து வருவது போல் அத்தனை அனுபவம், அத்தனை பரிச்சயம். மருத்துவனையில் அனைத்துத் துறைகளிலும் அவள் பேசப்பட்டாள். எவ்வித சிகிச்சையையும் தயங்காமல் செய்வதால் மருத்துவர்கள் மத்தியில் ஒரு தனி மரியாதை கிடைத்திருந்தது அவளுக்கு.

ஒரு முடிவில் தெளிவாக இருந்தாள் அவள்.

'இனி எந்த ஆணிடமும் முகம் கொடுத்து சிரித்துப் பேசக் கூடாது. ஏன், முடிந்தால் பேசுவதையே தவிர்க்க வேண்டும். மீண்டும் ஒருமுறை இதுபோல் தன் தலையில் தானே கல்லை ஏற்றக் கூடாது.'

மேத்தாவின் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெறுவதற்கு அவள் உயிரைக் கொடுத்து உழைக்க ஆரம்பித்தாள். சிக்கலான சிகிச்சையைக் கூட அவள் செய்து முடிப்பதை மேத்தாவே கேட்டறிந்து வியந்திருக்கிறார். எனவே தன்னை நிரூபிப்பதற்காக மட்டுமே அவள் நிவீஷை ஏற்றிருந்தாள், தன் பேஷண்ட்டாக.

.........................

தன் அறை வாசலில் வசந்த் நிற்பதைப் பார்த்து ஒருகணம் தயங்கினாலும், அவன் மீதிருந்த வெறுப்பும் அருவருப்பும் ஒரு வகையான தைரியம் கொடுக்க, முகத்தை நிமிர்த்திக்கொண்டு அவனை நோக்கி நடந்தாள் அவள்.

"குட் ஈவ்னிங் டாக்டர் ப்ரகதி"

"குட் ஈவ்னிங் சார்"

"ம்.. உங்க ஷெட்யூல் எல்லாம் முடிஞ்சதா? ரிவ்யூ பார்க்கலாமா?"

"யெஸ் சார்" என்றவாறு அவள் உள்ளே சென்று அவளது மேசையில் இருந்த கணிணியில் வேகவேகமாக எதையோ அடித்தாள். இரண்டு நிமிடங்களில் அருகிலிருந்த ப்ரிண்டரில் 'கீய்ங்' என்ற சத்தத்தோடு நான்கைந்து தாள்கள் வரிசையாக வந்து விழுந்தன. அவற்றை எடுத்து நேர் செய்து, ஒன்றாக வைத்து பின்னடித்து, ஒருமுறை திருப்பிப் பார்த்துவிட்டு அவனிடம் தந்தாள்.

அத்தனை நேரமும் அவளையே கண்கொட்டாமல் பார்த்திருந்தான் அவன். அவன் பார்ப்பது உடலின்மேல் ஏதோ ஊர்வது போன்ற அசூசையை ஏற்படுத்த, எச்சில் விழுங்கி அதை அடக்கினாள் அவள். அவனை சீக்கிரம் வெளியேற்ற வேண்டுமென இரட்டை வேகத்தில் தன் வேலையை முடித்துக் கொடுத்தாள்.

அதை அலட்சியமாக வாங்கித் திருப்பிப் பார்த்துவிட்டு, "ம்..not bad. போன வாரத்தை விட ஒரு பாயிண்ட் அதிகம்.. இருந்தாலும் சர்ஜரி டிபார்ட்மெண்ட்டுக்கு இதெல்லாம்... ம்ஹூம்..." என ஏளனமாகச் சொன்னான்.

'அதை நான் பாத்துக்கறேன், நீ எழுந்து வெளியே போ' என வாய்வரைக்கும் வந்துவிட்டது அவளுக்கு. அதைச் சொல்லாமல் இருக்கப் பெரும்பாடு பட்டாள் அவள்.

"என்ன? எதாவது சொல்லணும்னா சொல்லுங்க மேடம்.."

"ஒ..ஒண்ணுமில்ல சார்"

அவன் எழுந்து மேசை மேல் கையை வைத்து சாய்ந்து நின்றான். முகத்தை அவளருகே கொண்டு போய், "நீ எதுக்கு இப்படிக் கஷ்டப்படணும் ப்ரகதி ? உன் வாயால ஒரு வார்த்தை சொன்னாப் போதும், இந்தக் கஷ்டம் எல்லாம் பறந்து போய்டும்... உன் performance review கூட நல்லா நடக்கும்..."

அவனை வெட்டிவிடுவதுபோல் முறைத்தாள் அவள்.

"நான் என்ன உன்ன தப்பாவா கேட்டேன்? லவ் பண்றதை ஒத்துக்க தானே சொல்றேன்? அதுக்கு என்ன மொறைக்கற? ம்?"

"நான் இன்னும் எத்தனை தடவை சொன்னா உங்களுக்குப் புரியும்? நான் யாரையும் லவ் பண்ணல, பண்ணவும் இஷ்டமில்ல. எனக்கு என் வாழ்க்கை, என் சுதந்திரம் எல்லாம் உங்களை யாரையும் விட முக்கியம். அதையெல்லாம் காதல் போன்ற முட்டாள்தனமான காரணங்களுக்காக நான் இழக்கத் தயாரா இல்ல. இது தான் என்னோட முடிவு. உங்களால ஆனதைப் பாத்துக்கங்க."

"அப்போ இன்னும் பல பிரச்சினைகளுக்குத் தயாராகிக்கோ."

கிட்டத்தட்டக் கத்திவிட்டு அவன் வெளியேற, அதுவரை கஷ்டப்பட்டு அடக்கியிருந்த அழுகை அவளைவிட்டு வெளியே வந்தது. விசும்பலுடன் மேசையில் தலையைக் கவிழ்ந்து அதன் கண்ணாடிக் குளிரில் தன் கண்ணீர் வெம்மையைப் படரவிட்டாள் அவள். தஞ்சாவூர் ஞாபகங்களும், கல்லூரி நினைவுகளும் அழைக்கமலேயே வந்தன.

"டாக்டர், may I come in?"

சட்டெனக் கதவை யாரோ தட்ட, அவசரமாக முகத்தைத் துடைத்துக் கொண்டு, தன் வழக்கமான பாவனையில் அமர்ந்துகொண்டாள் அவள். முடிந்தவரை குரலை இயல்பாக்கிக் கொண்டாள்.

"Yes?"

உள்ளே நுழைந்தது நிவீஷ்.

அவனைப் பார்த்ததும் ஒருநொடி மனமெங்கும் நிம்மதி பரவியதை உணர்ந்தாள் அவள். அதன் அர்த்தத்தை ஆராய்வதற்குள் அவன் வந்து அவளெதிரில் அமர்ந்தான்.

அவனது புன்னகைக்கு இவளும் பதில் புன்னகை செய்தாள்.

"இப்ப எப்டி இருக்கு, நிவீஷ்? என்ன ஆனது, உங்களை எங்க கொண்டு போயிருந்தாங்க?"

"Nothing, actually. சின்ன contusionனு சொன்னாங்க, அப்டினா ரத்தம் கட்டிக்கறதாமே? அதுதான் ஆகியிருந்தது, தோள்ல. X-ray எடுத்தும் பார்த்தாங்க. No fracture, luckily. No ligament tears too, unluckily."

அவனது சிரிப்பு அவளையும் லேசாகத் தொற்றிக் கொள்ள, சன்னமாகப் புன்னகைத்தாள் அவள்.

"Why unluckily?"

"நீங்க இன்னொரு சர்ஜரி பண்ணியிருக்கலாம்ல?"

"Hahahaha... எங்க ப்ராக்டீஸ்ல, இதெல்லாம் சர்ஜரி கிடையாது. Just procedures. சர்ஜரின்னு சொல்லணும்னா மினிமம் ஒருமணி நேரம் நடக்கணும்"

"ஒருமணி நேரம் நடக்கணுமா? நீங்க ஒருமணி நேரம் நடந்தா யாரு பேஷண்ட்டுக்கு ஆபரேஷன் பண்றது?"

"மொக்க ஜோக்!"

"ஆனா, சிரிப்பு வந்துச்சு உங்களுக்கு!"

புன்னகைத்தவள் அதற்கு மேல் வெட்டிப் பேச்சு பேசாமல் அவன் கையில் இருத்த ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்தாள். அவள் பார்க்கும் வரை அவன் அறையெங்கும் நோட்டமிட்டான். அவன் பார்ப்பது தெரிந்தது அவளுக்கும். மற்றவர்கள் போல் தன்னையே விழுங்குவது போலப் பார்க்காமல், கள்ளமற்ற கண்ணால் சிறுபிள்ளை போன்ற ஆர்வத்துடன் அறையைப் பார்த்துக்கொண்டு இருந்தவனை ஏனோ மனதுக்குள் மெச்சினாள் அவள்.

அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்து,
"யாராவது நர்சுங்க கிட்ட கொடுத்து விட்டிருக்கலாமே? ஏன் நீங்க கஷ்டப்பட்டு வரணும்?"  என்றாள்.

அவன் புன்னகைத்தான்.

"எல்லாம் காரணமாத் தான்...."

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro