23.அவனுக்காக
"தஞ்சாவூர் போயிருக்கீங்களா சார்?
போகலைனாலும், தஞ்சாவூர் பெரிய கோவிலைப் பத்திக் கேள்விப்படாம யாரும் இருக்க முடியாது.
ராஜகோபுரம், விமானம், அம்மன் சன்னிதி, அகழி, வெளிப்பிரகாரம், உட்பிரகாரம் எல்லாம் தெரியும்... ஆனா மடப்பள்ளி பக்கத்தில இருக்கற குப்பைத் தொட்டி தெரியுமா சார்?
எனக்கு அதுதான் சார் மொதல்ல தெரியும்... ஏன்னா என்னோட பிறந்த வீடு அது தான்.
ஆமா...
யாரோ பண்ணின தப்புக்கு நான் தண்டனையா வந்து பிறந்தேன். பெத்த கடனுக்கு வளர்க்காட்டாலும், கொன்னு போட்டிருக்கலாம். அத விட்டுட்டு, ரத்தமும் சதையுமா என்னை அந்தக் குப்பைத் தொட்டில போட்டுட்டுப் போய்ட்டாளாம் என்னைப் பெத்த அந்த மகராசி.
மடப்பள்ளி ஐயர் குப்பை எடுக்கறப்போ பாத்திருக்கார் என்னை. சினிமாவா இருந்தா அவரே என்னை வளர்த்து ஆளாக்கிக் கல்யாணமும் பண்ணி வச்சிருப்பாருல்ல? ஆனா என்ன பண்ண, இது நிஜ வாழ்க்கை. என்னை போலீஸ்கிட்ட ஒப்படைக்க, அவங்க ஒருநாளே ஆன குழந்தைங்கறதால அரசு ஆதரவற்றோர் இல்லத்தில சேர்த்தாங்களாம் என்னை.
என் வாழ்க்கையில நடந்த ஒரே நல்ல விஷயம் அதுதான்னு நெனைக்கறேன். அங்க மேனேஜரா இருந்தது சத்யநாராயணன் சார். என்னோட குரு, என்னோட கடவுள். இந்த உலகத்தில மனிதாபிமானம் இன்னும் மிச்சம் இருக்குன்னு நிரூபிக்கற சில தெய்வப் பிறவிகள்ல, அவரும் ஒருத்தர்.
குப்பைல தூக்கிப் போடப்பட்ட என்னை, ஏதோ பொக்கிஷத்தை ஏந்தரா மாதிரி கையில வாங்கினாராம்... இன்னும் அந்த ஹோம் ஆயாம்மா சொல்லும். ப்ரகதீஸ்வரர் கோவில்ல கிடைச்சதால ப்ரகதீஸ்வரின்னு பேரு வைக்க சொல்லுச்சாம் ஆயாம்மா. அவர்தான் சுருக்கமா அழகா வைக்கணும்னு ப்ரகதின்னு வச்சார்.
எங்களை அவரோட செலவுல அரசு ஆரம்பப் பள்ளியில படிக்க வச்சார். என்னை மாதிரி நாப்பது குழுந்தைங்க இருந்தாங்க எங்க ஹோம்ல... எல்லோருக்கும் அவர்தான் அம்மா, அப்பா, ஒட்டு, உறவு எல்லாமே. அரசு நிதியை சுருட்டிக்கிட்டு எத்தனையோ பேர் ஊழல் பண்ணிப் பணக்காரங்க ஆனப்போ, அவர் மட்டும் ஏழையா, பிழைக்கத் தெரியாதவனா, அப்படியே இருந்தார் உலகத்து முன்னால.
அவரோட நேர்மை அவர் கண்ணில அப்படியே மின்னும், நீங்க நம்ப மாட்டீங்க. அரசு நிதியும், நல்லவங்க நன்கொடையும் முழுக்க முழுக்க எங்க படிப்புக்கும் மருத்துவ செலவுக்கும் மட்டுமே செலவாகும். எட்டாவது வரைக்கும் கண்டிப்பா படிக்கணும். அதுக்கு மேல விருப்பப்பட்டா படிக்கலாம், இல்லைன்னா வேலை கத்துக்கிட்டு செய்யலாம்.
எங்க பசங்க முக்கால்வாசி பேர் கொளுத்து வேலை, தச்சு வேலைன்னு செஞ்சு, காசு கொண்டு வந்தா, அதை அவங்களுக்கே சேமிப்புக் கணக்கில போடுவார் அவர். நிறையப் பேர் ஹோம்ல இருந்து வெளிய போக விரும்பறப்போ, அந்தப் பணத்தைக் கொடுத்து அனுப்பி வைப்பார்.
நான்னா அவருக்கு ரொம்ப இஷ்டமாம். ஏன்னா நான் நல்லாப் படிப்பேனாம், அழகா பேசுவேனாம். பத்தாவது வரை கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சு, நல்ல மார்க் வாங்கியிருந்தேன். சத்யா சார் ரொம்பப் பெருமைப் பட்டார். அடுத்து என்ன படிக்கறன்னு என்னைக் கேட்டார். மேல படிக்கலை, எதாவது ஆபிஸ்ல டைப்பிஸ்டா வேலை செய்யறேன்னு சொன்னப்போ கோபம் வந்து அடிச்சுட்டார்.
ப்ரகதீஸ்வரர் தந்த வரம் படிப்பு, அதை உதறித் தள்ளறது தப்புன்னு சொல்லி, வர்ற படிப்பை ஏன் வேணான்னு சொல்றன்னு கேட்டார்.
'எனக்கு ஏனோ தானோ படிப்பு எல்லாம் வேணாம். நம்ம பேரை நாலு பேர் மரியாதையா சொல்ற மாதிரி ஒரு படிப்பு வேணும்'னு நான் அழுதுகிட்டே கேட்டேனாம். அவர் என் கண்ணைப் பார்த்துட்டு அதிலிருந்த ஏக்கம், அடையாளத்துக்கான தவிப்பு, தாகம் எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு, என்னை பயாலஜி க்ரூப்ல சேர்த்து, டாக்டருக்குப் படிக்க சொன்னார்.
அவரோட வார்த்தைக்காக மட்டுமே தான் உட்கார்ந்து படிச்சேன். உயிரைக் குடுத்து, ஒரு மெடிக்கல் சீட்டுக்காகப் படிச்சேன். கவர்மெண்ட் ஸ்கூல்தான்னாலும், எனக்காக எத்தனையோ பழைய புக் கடைகள்ல ஏறி இறங்கி புக்ஸ் வாங்கிட்டு வருவார் அவர். ராப்பகலா என்னோடவே உட்கார்ந்து, கடுங்காப்பி போட்டுக் குடுத்துப் படிக்க வைப்பார்.
அவரோட முயற்சி வீண் போகலை.
எனக்கு மதுரை மெடிக்கல் காலேஜ்ல சீட்டுக் கிடைச்சது. கண்ணீரோட என்னை மதுரைக்கு அனுப்பினார் அவர். எனக்காக அவர் தொடங்கின அக்கவுண்ட்ல அப்போ இருந்நது இருபதாயிரம் ரூபாய். வந்த டொனேஷன்ல இருந்தெல்லாம் கொஞ்ச கொஞ்சமா சேர்த்தது அது. அதை எனக்காகக் குடுத்து அனுப்பி வச்சார் அவர்.
ஒரு அனாதை ஆசிரமத்தில இருந்து வந்ததாலயோ, இல்ல வெளியுலகம் தெரியாம வளர்ந்ததாலயோ, என்னை ஒரு மனுஷியா யாரும் மதிக்கல அங்க. எத்தனையோ நாள், கண்ணைக் கட்டிக் காட்டில விட்ட மாதிரி இருக்கும் சார். எங்க போகணும், என்ன பண்ணனும், யாருகிட்டக் கேட்கணும், யாருகூடப் பழகணும்.. எதுவுமே தெரியாது. யாரும் துணையில்லாம நடுக்கடல்ல மிதக்கற மாதிரி இருக்கும். மூச்சுத் திணறும். சாகத் தோணும் சில நேரம். ஹாஸ்டல்ல பொண்ணுங்க எல்லாம் ஃபோன்ல அம்மா அப்பா கூடப் பேசுவாங்க, அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி, சித்தி, அத்தை, பாட்டி, தாத்தான்னு பேசுவாங்க... எனக்கு தான் யாருமே இல்லையே...
அந்த பச்சாதாபப் பார்வை அப்படியே உள்ள குத்திக் கிழிக்கும் சார்... ஏன்டா பொறந்தோம், ஏன்டா இந்த வாழ்க்கை வாழறோம்னு தோணும். என்னோட இந்தப் பொறப்புக்குக் காரணமானவங்களைக் கண்டுபிடிச்சுக் கொல்லணும்னுகூட நினைச்சிருக்கேன்.
அப்போவெல்லாம் சத்யா சார் மட்டும் தான் என்னோட ஆறுதல். அவரும் எங்களைப் போலத் தான். ஊரு, உறவு எதுவும் இல்லை அவருக்கும். நாங்க தான் அவர் உலகம். அவர்தான் எங்க உலகம். அடிக்கடி எதாவது காரணம் சொல்லி மதுரைக்கு வந்து என்னைப் பார்ப்பாரு. அவரைப் பார்க்கறப்போவெல்லாம் அழுவேன். நானும் அவர்கூட ஹோமுக்கு வரேன்னு.
அப்பல்லாம் அவர் ஒண்ணே ஒண்ணுதான் சொல்வார்.
'நீ இப்படிப் பொறந்தது உன் தப்பில்ல. ஆனா இப்படியே வாழ்ந்து இப்படியே செத்துட்டா அது முழுக்க முழுக்க உன் தப்பு தான்'
அவர் விட்டுப்போற அன்னைக்கு முழுக்க அழுகை மட்டும்தான். ஃபர்ஸ்ட் இயர் ரணக் கொடூரமாப் போச்சு. ஆனா ப்ரகதீஸ்வரர் தந்ததா சொன்ன படிப்பு மட்டும் அப்படியே இருந்தது.
முதல் வருஷப் பரீட்சையில காலேஜ்ல மட்டுமில்லை, யுனிவர்சிட்டிலயே ஃபர்ஸ்ட்.
அதுவரைக்கும் பார்க்காதவங்க எல்லாம் அப்ப என்னைப் பாக்க ஆரம்பிச்சாங்க. மெடல்ஸ், ஹானர்ஸ், லாரல்ஸ்னு தேடி வந்தது. ப்ரகதீஸ்வரர் தந்த வரம் கொஞ்சம் கொஞ்சமாப் புரிய ஆரம்பிச்சது...
என் வாழ்க்கையில் நல்ல நேரம் தொடங்கிபுடுச்சுன்னு மதுர பாஷைல மனசில நினைச்சுக்கிட்டேன். என்னைப் புரிஞ்சுக்கற மாதிரி நாலு நல்ல ஃப்ரெண்ட்ஸ்... என்னை அட்மையர் பண்ற லெக்சரர்ஸ், ப்ரொஃபஸர்ஸ்... எனக்காக ஆதரவாக இருக்கற சத்யநாராயணன் சார்... எல்லாமே ரொம்ப நல்லா போயிட்டிருந்தது, நான் அந்தக் கேவலமான தப்பைப் பண்ணற வரை"
அவள் பேசிப் பெருமூச்சு விட, பேச்சு மூச்சின்றி அமர்ந்திருந்தான் அவன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro