2.அவள்
"LIVEWELL HOSPITALS"
அந்தப் பெயர்ப்பலகையே அதன் செழிப்பைத் தெரிவிக்க, அமிஞ்சிக்கரையின் பரபரப்புக்கு இடையே பாந்தமாய், ஒய்யாரமாக நின்றிருந்தது அந்த பத்துமாடி பன்னோக்கு மருத்துவமனை. நான்கைந்து கட்டிடங்கள் ஒன்றையொன்று பார்த்தபடிக் கட்டப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு கண்ணாடி அரண்மனை போல இருந்தது அது.
மூன்றாவது கட்டடத்தில் ஐந்தாவது மாடியில் இருந்த 'General Surgery' துறை மிகத் தூய்மையாகத் துடைக்கப்பட்டுக் கொண்டிருக்க, பினாயில் வாசம் தளத்தை நிறைத்தது. மருத்துவர்கள் ஒவ்வொருவராகத் தங்கள் அலுவலக அறைகளுக்கு வந்து கொண்டிருந்தனர். காலைநேரப் பரபரப்புக்கு மருத்துவமனையும் விதிவிலக்கில்லை!
ப்ரகதி, மன்னிக்கவும், டாக்டர் ப்ரகதி தன் ஆக்டிவாவை டாக்டர்ஸ் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, லிஃப்ட்டின் மூலம் ஐந்தாவது தளத்தின் தென்கோடியில் இருந்த தன் அறைக்கு வந்தாள். வரும் வழியெங்கும் அவளைத் தெரிந்த செவிலியர்கள், உதவியாளர்கள் யாவரும் காலை வணக்கம் கூற, புன்னகைக்காமல் ஒரு மிடுக்கான தலையசைவில் ஏற்றுக் கொண்டு நடந்தாள்.
தனது க்ளினிக்கிற்கு வந்தவள், தன் காலணிகளைக் கழற்றிவிட்டு தனது நாற்காலியில் அமர்ந்து பயோமெட்ரிக் வருகைப்பதிவேடில் விரல்பதித்து, தனது வருகையை உறுதிசெய்தாள். பின் உதவியாளர் ஒருவர் வந்து அவள் பார்க்கவேண்டிய சிகிச்சைகள் மற்றும் நோயாளிகள் பட்டியலை அவளிடம் தர, அவரைப் போகச் சொல்லிவிட்டு ஒருமுறை அந்தப் பட்டியலை கண்ணால் அளந்தாள்.
மூன்று hernia surgery, ஒரு goitre surgery. பின்னர் முந்தைய post-op patients ஐ பரிசோதித்து ரிப்போர்ட் எழுதவேண்டும். அட்டவணையை சரிபார்த்துக் கொண்டு, தன் வார்டுக்கு நடந்தாள் ப்ரகதி. அவளது தோழியான ஹரிதா, மீண்டும் மன்னிக்கவும், டாக்டர் ஹரிதா நோயாளியைப் பரிசோதித்துவிட்டு அவரது குறிப்பேட்டில் ஏதோ எழுதிக்கொண்டு இருந்தாள். இவளைப் பார்த்து அவள் கையசைக்க, பதிலுக்கு ப்ரகதியும் கையசைத்துவிட்டு, நிற்காமல் நடந்தாள்.
காலைப் பரபரப்பு கொஞ்சம் அடங்கத் தொடங்கியது. துப்புரவுப் பணியாளர்கள் தங்கள் வேலையை முடித்துவிட்டு நகர்ந்தனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில செவிலியர்கள் நின்றிருந்தனர். தான் சர்ஜரி செய்த நோயாளிகள் ஒவ்வொருவராகப் பார்த்து பரிசோதித்துவிட்டு, மணி பத்தானதும் அறுவை சிகிச்சையறைக்கு நடந்தாள்.
மூன்றடுக்குப் பாதுகாப்பும், நோய்த்தொற்றுத் தடுப்பும் கொண்ட air conditioned கோட்டைதான் அந்த சிகிச்சையறை. உடைமாற்றும் அறையில் தனது நீலவண்ண scrubஐ அணிந்து, கடவுளின் கைகளாய் வந்தாள் அவள். அவளைக் கண்டதும் சக மருத்துவர்களும், செவிலியர்களும், உடனிருந்த மருத்துவ மாணவர்களும் பயம்கலந்த மரியாதையுடன் காலை வணக்கம் தெரிவித்தனர்.
"Good morning, Ma'am"
"Good morning. இன்னிக்கு schedule எல்லாரும் பாத்துட்டீங்களா?"
மாணவர்களைப் பார்த்து அவள் கேட்க, அவர்கள் ஒரே குரலில்,
"Yes ma'am" என்றனர்.
"OT no. 1ல முதல் சர்ஜரி என்ன இன்னிக்கு?"
"Hernia, ma'am"
"That's not the way to answer, doctors"
"Indirect Inguinal Hernia, ma'am" ஒரு மாணவி மட்டும் தனது கீச்சுக் குரலில் சொன்னாள்.
"ஓகே. மாஸ்க்க போடுங்க.. இப்ப தியேட்டர்க்குள்ள போலாம். Listen, i strictly don't want any noises and distractions inside. And I mean it" சற்றே கடுமையான குரலில் வாக்கியத்தை முடித்துவிட்டு அவள் முன்னே நடந்தாள்.
மாணவர்கள் பத்தடி இடைவெளியில் பின்தொடர்ந்து வந்தனர். அதில் கடைசியாக வந்துகொண்டிருந்த மாணவன்,
"ஆமா என்ன இன்னிக்கு எல்லாரும் செம்ம சைலண்டா போறாங்க?" என மெல்லிய குரலில் அருகில் இருந்தவனிடம் கேட்டான்.
"டேய்,போன surgery posting வராததால உனக்கு தெரில. வந்திருக்கறது டாக்டர் ப்ரகதி டா"
"யாரு அவங்க? சின்னப் பொண்ணு மாதிரி இருக்காங்க..."
"ம்.. Senior resident surgeon டா அவங்க. டில்லி Lady Harding காலேஜ்ல MS முடிச்சுட்டு இங்க வந்திருக்காங்க. அந்தக் காலேஜோட youngest PG graduate அவங்க.
ஒரு பைசா செலவில்லாம central government scholarshipல படிச்சாங்களாம். நம்மள மாதிரி லட்சக்கணக்கில ஃபீஸ் கட்டிட்டு ஈ ஓட்டீட்டு வரல"
"ஓ... அதான் ரொம்ப ஸ்ரிக்டா?"
" 'ஸ்ட்ரிக்டா'வா? She's the walking example of perfection and precision. அவங்களுக்கு ஒரு துரும்பு கூட அது இடத்துல இருந்து மாறக்கூடாது. எதாச்சும் disturbance வந்ததுன்னா அவங்க என்ன பண்ணுவாங்கன்னே தெரியாது. இங்க வந்து ஆறு மாசம்தான் ஆகுது.. ஆனா அவங்க co-doctorsஸே அவங்களைப் பார்த்து பயப்படறாங்கன்னா பாரு"
தியேட்டருக்குள் நுழைந்ததும் அவர்களது கிசுகிசுப்பு அடங்கிப் போனது.
அவள் வருகையை எதிர்பார்த்து, அன்றைய அறுவை சிகிச்சைக்கான நோயாளியை தயார்ப்படுத்தி வைத்திருந்தனர் உதவியாளர்கள்.
அந்த நோயாளிக்கு வணக்கம் தெரிவித்து, அவர் பெயர், வயது முதலியவற்றை உறுதி செய்துகொண்டு, மாணவர்களுக்கு விளக்கமளித்தவாறே சிகிச்சையைத் தொடங்கினாள் அவள்.
மேலே எண்ணூறு வாட்ஸ்ஸில் எரிந்துகொண்டு இருந்த கூட்டுவிளக்கை அவள் வசதிக்கு ஏற்றவாறு திருப்பித் தந்தார் ஒரு உதவி மருத்துவர். வழியும் இரத்தத்தை கீழே சிந்தாமல் உறிஞ்சும் கருவியோடு நின்றார் ஒரு செவிலியர். மயக்கவியல் மருத்துவர் அவளது அனுமதி பெற்று நோயாளிக்கு மயக்கமருந்து கொடுத்தார்.
அவள் கூறுவதை காதிலும், அவளது பிசிரற்ற கைவேலையை கண்ணிலும் ஏற்றிக்கொண்டு சிலைபோல் நின்றிருந்தனர் மாணவர்கள். சிறு துரும்பும் அவள் அனுமதியின்றி அசையவில்லை.
அவ்வப்போது "scalpel", "forceps", "gauze cloth" என்று கேட்கும் அவளது குரலைத் தவிர அந்த அறை முழுதும் நிசப்தத்தால் நிறைந்திருந்தது. அரைமணி நேரமாய் ஒருநொடி கூட நிற்காமல் அவள் அந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்தாள். இறங்கிய குடலை மேலேற்றி, அது வெளிவராமல் இருக்க ஒரு தடுப்பும் பொருத்தி, பின் தையல்கள் போட்டுவிட, அதைக் கண்ணெடுக்காமல் பார்த்திருந்தனர் அனைவரும்.
சிகிச்சை முடிந்தது தன் கையுறைகளைக் கழற்றி குப்பையில் வீசிவிட்டு, அருகில் உள்ள ஓய்வறைக்கு வந்தாள் ப்ரகதி. இரத்தம் தோய்ந்த apronஐ உதவியாளர் வந்து கழற்றி எடுத்துச் சென்றார். முகமூடியைக் கழற்றிவிட்டு தனது பாட்டிலில் இருந்து ஒருவாய் தண்ணீர் அருந்திவிட்டு, அடுத்த பேஷண்ட்டைத் தயார் செய்யுமாறு உதவியாளரை அனுப்பிவிட்டு, அங்கிருந்த ஜன்னல் வழியே சாலையில் பறந்தோடும் வாகனங்களை வெறித்துப் பார்த்தவாறு நின்றிருந்தாள் அவள்.
சட்டென, காற்றைக் கிழிக்கும் வேகத்தில் காதைப் பிளக்கும் ஓலத்துடன் ஒரு ஆம்புலன்ஸ் அவர்களது மருத்துவமனை நோக்கி வருவது தெரிந்தது. சிறு புள்ளியாய் வந்த வாகனம் இப்போது மிக அருகில் வந்திருக்க, அதன்முன்னும் பின்னும் இரண்டு கார்கள் பாய்ந்து வந்து கொண்டிருந்தன.
அவள் என்னவெனப் பார்த்துக் கொண்டிருந்த போதே அருகில் உள்ள அலமாரியில் வைத்திருந்த அவளது கைபேசி அடித்தது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro