17.அவன் மனம்
அவள் கூறியதும் "நோ.." என்று அவன் சத்தமிட, அனைவரும் அவனைத் திரும்பிப் பார்த்தனர் குழப்பமாக.
ப்ரகதியும் சந்தேகத்துடன் நோக்க, அவனோ தன்னை சமன்செய்து செருமிக்கொண்டான்.
"அ.. அதாவது.. நான் என்ன சொல்ல வந்தேன்னா.. வீட்டுக்குப் போனா, நாளைக்கு திடீர்னு மறுபடியும் வலி வந்ததுன்னா உடனே ஓடி வர முடியாது. அத்தோட, முழுசா குணமாகி வீட்டுக்குப் போனா தொந்தரவில்லாம இருக்கும். சோ, நான் இங்கயே இருக்கேன்"
"உங்க விருப்பம் சார். இப்ப நான் கிளம்பறேன்." என்று அவனிடம் விடைபெற்றுத் தன் அறைக்கு நடந்தாள் ப்ரகதி. நிவீஷ் பெருமூச்செரிந்தான்.
தன் தோழி ஹரிதா அங்கே நின்றிருக்க, புன்னகையுடன் அவளருகில் சென்றாள் ப்ரகதி. அவள் குற்றஞ்சாட்டும் பார்வையோடு இவளை ஏறிட்டாள். இவளோ புரியாமல் திகைத்தாள்.
"என்ன ஹரி, நிவீஷைப் பாத்தாச்சா?"
"பாத்தேனே... அவனையும்...அவன் பக்கத்தில உட்கார்ந்திருந்த இன்னொருத்தரையும்.."
வார்த்தையில் குத்தல் நன்றாகவே தெரிந்தது. ஹரிதா அதை மறைக்க எந்த சிரமமும் படவில்லை.
"அட... நான் என்ன ஆசைப்பட்டா போனேன்?... டீன் தான் ஹாஸ்பிடல் ரூல்ஸ் அதுயிதுன்னு சொல்லி கூட்டிட்டுப் போய்ட்டார். அதுக்காக கோபமா? காலைல இருந்து நிறைய பேரைப் பாத்தாச்சு ஹரி... நீயுமா?"
"விடு விடு.. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? உனக்கு அவனோட வேல்யூ புரியல. நம்ம தமிழ்நாட்டில மட்டுமே நாலு லட்சம் பொண்ணுங்க அவனைக் கட்டிக்க ஆசைன்னு சொல்லிருக்காங்க... ஃபேஸ்புக், ட்விட்டர்ல எல்லாம் எத்தனை பேர் அவனை ஃபாலோ பண்றாங்க தெரியுமா? ஏன், நம்ம டீன் இவ்ளோ ஸ்ட்ரிக்டா ஆர்டர் போடாம இருந்திருந்தா, ஹாஸ்பிடல் மொத்தமும் அவன் ரூம்ல குவிஞ்சிருக்கும், தெரியுமா?"
படபடவென அவள் பேச, ப்ரகதி ஆயாசமாகத் தன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
"என்னவோ... நீதான் சொல்ற. எனக்கு ஒண்ணும் தெரியல. You know, ignorance is blissful."
"அவனை இத்தனை தடவை நெருக்கத்துல பார்த்தயே? ஒரு தடவை கூடவா அவன் அழகுல மயங்கி அப்படியே நீ விழல? ஸ்டேஜ்ஷ பார்த்ததுக்கே எனக்கு புல்லரிச்சிடுச்சு. You know.. he's such a sight..."
கண்களில் நட்சத்திரங்கள் மின்ன அவள் மேல்நோக்கிக் கதைக்க, இவளுக்கு சலிப்பாக வந்தது.
"அவனை அறையலான்னு தான் தோணும்... அழகுன்னெல்லாம் தோணல... நீ வழியரத நிறுத்து... அவன் உன்னை விட சின்னப் பையனாமே!?"
ஹரிதாவுக்கு இருபத்தி ஏழு வயதாகிறது. வரும் ஆகஸ்ட்டில் இருபத்தி எட்டு. இளநிலைக்கும் முதுநிலைக்கும் இடைவெளி விட்டுப் படித்ததால், ப்ரகதி தற்போது இருக்கும் அதே இடத்திற்கு வர, ஹரிதாவுக்கு மூன்று வருடங்கள் அதிகம் பிடித்தது. ஆனால் ப்ரகதி தனக்கு சமமான பொறுப்பில் இருப்பதால் அவளைத் தோழியாகப் பாவித்து நீ வா போ என்றே அழைத்தாள். அவளும் அது எதையும் கண்டுகொள்ளாமலே இருந்தாள்.
"சே.. என் கனவுகளைக் கலைக்கறதுக்குன்னே இருக்க... சரி விடு... ப்ரகதி.. ப்ரகதி டார்லிங்... எப்படியாவது அவனோட ஒரு செல்ஃபி எடுக்கணும் டார்லிங்.. வாழ்க்கைல இந்த மாதிரி சான்ஸ் எனக்குக் கிடைக்காது... அதுக்கு மட்டும் ஏற்பாடு பண்ணேன்... ப்ளீஸ்..."
"ம்ம். இப்ப வந்து கேளு... நான் ரவுண்ட்ஸ் போறப்போ வர வேண்டியது தான?"
"அப்போ என் வேலைய யாரு பார்க்கறது? இப்ப லஞ்ச் பிரேக் தானே? இப்ப போனாலும் புடிச்சடலாம்... நான் தனியாப் போக முடியாதுல்ல... நீயும் வாயேன்... ப்ளீஸ் ப்ரகதி.."
"நான் இன்னும் சாப்பிடக் கூட இல்ல... அவன் நல்லா சப்பாத்திய முக்கிட்டு இருக்கான், தெரியுமா? எனக்குப் பாத்ததும் பசியெடுத்தது. நான் போய் கீழ கேண்ட்டீன்ல சாப்ட்டு வரேன்... அதுக்கப்றம் ரெண்டு சர்ஜரி இருக்கு எனக்கு. சோ, அப்றம்... முடிஞ்சா பாக்கலாம்!"
"ஹே.. இப்ப ஒரே நிமிஷத்துல பண்ண வேண்டியதை சாயங்காலம் வரை இழுக்குறியே.. மோசம்டி நீ.."
"அதெல்லாம் அப்படித்தான்!"
"சரியான பிடிவாதம்! உடும்புப் புடியா உன் வார்த்தைலயே நிக்கறதைப் பாரு!"
"Thanks for the compliment!"
நிற்காமல் அவள் நகர, பின்னால் ஹரிதாவின் ஏச்சுக்கள் நன்றாகவே கேட்டன. அதைப் பொருட்படுத்தாமல் சிரித்துக் கொண்டே உணவகத்திற்கு விரைந்தாள் அவள்.
_______________________________
அவனது மதியத் தூக்கம் கெடுமாறு அலாரம் அலறலாய் ஒலிக்க, எழுந்து அதை வேண்டா வெறுப்பாக எடுத்து அணைத்தான் நிவீஷ்.
சங்கர் அவன் எழுந்த சத்தம் கேட்டதும் பால்கனியில் இருந்து வந்தார்.
"எதாவது வேணுமா சார்?"
"ஒண்ணுமில்ல சங்கர். இன்னும் அஞ்சு நிமிஷத்துல தெரபிஸ்ட் வந்திருவாங்க.. அதான், நான் முகம் கழுவி ஃப்ரஷ் ஆயிட்டு வரேன்"
"தனியா.. பாத்ரூம் போக வேணான்னு..."
"இருபத்தஞ்சு வருஷமா தனியாத்தானே போறேன்... இப்ப என்ன?" எனக் கேட்டுச் சிரித்தவாறு அவன் குளியலறைக்குள் செல்ல, சோர்வான பெருமூச்சுடன் சங்கர் வெளியே காத்திருந்தார்.
'ஐந்து நிமிடத்தில் வராவிட்டாலோ, இல்லை லேசாக ஏதேனும் சத்தம் கேட்டாலோ கதவை உடைத்துவிடலாம்' என்ற முடிவோடு நின்றிருக்க, அவருக்கு வேலை வைக்காமல், அவன் இரண்டொரு நிமிடங்களில் முகம் கழுவிப் பூந்துவாலையால் துவட்டிக் கொண்டே வந்தான்.
"ரெண்டு நாளா படுத்தே இருந்தது ஒரே போரடிக்குது சங்கர்... பாருங்க..தொப்பை வேற போடுது.."
கண்ணுக்குத் தெரியாத சதையைப் பிடித்துக்கொண்டு வருத்தப்பட்டான் அவன். சங்கர் சிரிப்பை உதிர்த்துவிட்டு, "அப்டிலாம் இல்லை சார்... நீங்களா கற்பனை பண்ணிக்கறீங்க... வேணும்னா உங்க ஜிம் ஆர்ட்டிக்கிள்ஸை எடுத்துட்டு வரச் சொல்லட்டுமா?" என்றார்.
அவர் விளையாட்டாகக் கேட்டது தெரிந்தாலும் , அது நல்ல யோசனையாகவே பட்டது அவனுக்கு.
"பாக்கலாம்..."
அதற்குள் பிஸியோ தெரபி சிகிச்சையாளர் வந்துவிட, அந்தப் பேச்சு நின்றது. ஐந்து மணி வரை உடற்சிகிச்சை தெரபி நடந்தது. சரியாக அந்த சிகிச்சை முடியும் தருவாயில் ப்ரகதியும் அவளுடன் மற்றொரு பெண் மருத்துவரும் அறையினுள் வருவதைக் கண்டான் அவன்.
"என்ன டாக்டர்...? ஒரு நாளுக்கு ஒரு தடவை தான் வருவேன்னு சொன்னீங்க... இன்னிக்குக் கணக்கு ஏதோ அதிகமா இருக்கே?" அவனது கலகலப்பான குரல் அறை முழுதும் பரவி ஒலித்தது.
அந்த பிசியோதெரபி சிகிச்சையாளர் ப்ரகதிக்கும் ஹரிதாவுக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு, ப்ரகதியின் சில கேள்விகளுக்குப் பதிலும் கூறிவிட்டு பணிவாக விடைபெற்றுச் சென்றார்.
"இப்ப எப்டி இருக்கு, மிஸ்டர் நிவீஷ்?"
அவள் இயல்பாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டு அவனிடம் வினவினாள். அவன் விளையாட்டாக முறைத்தான்.
"Ditch that mister. Call me Niveesh"
ஹரிதாவுக்கு அந்த அன்னியோன்யப் பேச்சில் லேசாகப் பொறாமை மூண்டாலும், அவனை அருகிருந்து பார்த்ததில் கொஞ்சம் சொக்கிப் போயிருந்தாள். அவளது விழிகளிலேயே அவள் மனதின் வியப்பைக் கண்டுகொண்டவன் சிரிப்புடன் வினவினான்.
"யாரு, உங்க ஃப்ரெண்டா டாக்டர்?"
"ம்.. இவங்க டாக்டர் ஹரிதா. Family medicine. She's your fan."
"ஹல்லோ டாக்டர் ஹரிதா.. எப்படி உங்க கூட இருந்துட்டு உங்க ஃப்ரெண்ட் என்னை யாருன்னே தெரியாதுன்னு சொல்றாங்க?"
அவனது இயல்பான பேச்சிலும் செய்கைகளிலும் தன்னைத் தொலைத்திருந்தாள் ஹரிதா. திரையில் பார்க்கும் நாயகனைத் தரையில் பார்த்த பிரம்மிப்பில், ஒரு அசல் விசிறியாக அவள் மயங்கினாள்; தயங்கினாள். எனவே அவனது கேள்விக்கு பதிலளிக்க ஒரு நொடி தாமதமாகியது.
"அ.. அது, ப்ரகதி இந்த ஹாஸ்பிடலுக்கு வந்து ஆறு மாசம் தான் சார் ஆகுது. நாங்க வேலை நடுவில எப்போவாச்சும் தான் பேசுவோம் சார்.. அதான் சினிமா டாப்பிக்ல எதுவும் பேசல சார்..."
அவள் தங்கள் டீனைக் கூட இத்தனை சார் போட்டு அழைத்திருக்க மாட்டாள். அவனை வேண்டுமென்றே நிறைய தடவை சார் என்று அழைத்தாள், ப்ரகதியைப் போலவே தன்னையும் அவன் பேர் சொல்லி அழைக்கச் சொல்வான் என்ற ஆசையில். ஆனால் அவன் கண்டுகொள்ளாமல் இருக்கவே, அவள் வாடிப்போனாள்.
ஆனால் அவளது பேச்சைக் கேட்டு ப்ரகதியும் சங்கரும் சிரித்தனர் லேசாக.
ஹரிதா அவனைப் பார்க்க, அவன் பார்வை வேறு எங்கோ இருந்தது. அவன் பார்வையைத் தொடர்ந்து அவளும் பார்த்தபோது சற்று அதிர்ச்சியடைந்தாள் அவள்.
அவனோ ப்ரகதி சிரிப்பதைக் கண்கொட்டாமல் பார்த்திருந்தான்.
***
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro