1.அவன்
சித்திரை வெய்யில் சென்னை மாநகரை சுட்டெரிக்கும் காலைப் பொழுது...
மவுண்ட் ரோட்டில் ஆயிரம் வாகனங்கள் சாரிசாரியாக அணிவகுத்துச் சென்றுகொண்டிருந்தன. அந்த வாகனங்களின் உடமையாளர்களின் காலை அவசரத்தைக் கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல், சிக்னஸ் அதன்பாட்டுக்கு ஆயாசமாக வண்ணங்கள் காட்டியது.
பெரியார் பாலம் தாண்டி, அந்த நீலவண்ண பென்ஸ் கார் அவசரமாகச் சென்றுகொண்டிருந்தது. முன்னே சென்ற வண்டிகளை சத்தமிட்டு விலக்கி, அது தன் வழியில் விரைந்தது.
அங்கிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில், கோடம்பாக்கம் விஜயவாகினி ஸ்டுடியோ வளாகத்தில் உள்ள அரங்கம், பற்பல ஓளிவிளக்கு அலங்காரங்களில் ஜொலித்தது. அன்று, தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் ஆண்டு விழா நடைபெற இருந்ததல்லவா!
அரங்கத்தின் நுழைவாயிலில் சுறுசுறுப்பாக இரண்டு இளம் தொகுப்பாளர்கள் வரும் நட்சத்திரங்களை வரவேற்று அவர்களுடன் பேசி, விளையாண்டு, தங்கள் சேனலுக்கு கன்ட்டென்ட் சேர்த்துக்கொண்டு இருந்தனர். அங்கு வந்த சில முக்கிய விருந்தினர்களிடம், அவ்வருடத்திற்கான சிறப்பு விருதுகள் யாருக்குக் கொடுக்கப்படும் என்றும் கருத்துக் கேட்பு நடத்தினர்.
சட்டென காற்றில் ஒருவித பரபரப்பு பரவியது. அந்தக் கருப்பு வண்ண ஜாகுவார் காரிலிருந்து இறங்கினார் 'இயக்குனர் இமாலயம்' சந்தோஷ்ராஜா. ஐம்பத்தைந்து வயதில் இருபது படங்கள் இயக்கி அதில் பதினெட்டு படங்கள் பல்வேறு தேசிய விருதுகளைக் குவித்திருந்தன. இவர் அறிமுகப்படுத்திய நட்சத்திரங்களே தற்போது இந்தியா முழுவதும் திரைகளில் ஜொலித்துக் கொண்டிருந்தனர்.
அவர் வந்ததும் அங்கிருந்த அனைவரும் ஒருகணம் நின்று ஒதுங்க, அங்கீகரிப்பதுபோல் தன் கண்ணை கேமராவை விட்டு எடுக்காமல் கம்பீரமாகப் புன்னகைத்தபடி வாயில்வரை நடந்தார் அவர். அவரிடம் வழக்கமான வரவேற்பு விளையாட்டுகள் விளையாட யாரும் துணியவில்லை. ஆனால் பெண் தொகுப்பாளினி ஒருத்தி, அவரை வரவேற்று, விருதுகளில் அவரது கருத்தைக் கேட்டாள்.
"என்ன என்ன கேட்டகரி இருக்கு?" அவரது குரல் கணீரென ஒலித்தது.
"ஸார்... சிறந்த நடிகர், நடிகை, துணை நடிகர்கள், நகைச்சுவை நடிகர், அறிமுக நடிகர், நடிகை, வில்லன் நடிகர் என நிறைய கேட்டகரி இருக்கு ஸார். இதில சிலவற்றுக்கு உங்களோட கணிப்பை எங்களுக்காக சொல்லுங்க ஸார்" பளிச்சிடும் புன்னகை மாறாமல் கேமராவை ஒரு கண்ணிலும், இயக்குனரை மறுகண்ணிலும் பார்த்தவாறு கேட்டாள் அவள்.
இயக்குனர் இமாலயம் கொஞ்சம் செருமிக்கொண்டார்.
"ம்...போன வருஷம் நா ஜூரில இருந்தேன். ஆனா இந்த வருஷம் நானே விலகிக்கிட்டேன். ஏதோ நான் என்னோட ஆர்ட்டிஸ்களுக்கு மட்டும் அவார்ட்ஸ் தர்றதா பேசுனாங்க ..அதனால. ஆனா, இந்த வருஷம் பார்க்கட்டும். முக்கால்வாசி அவார்ட்ஸ் என்னோட ஆர்ட்டிஸ்களுக்கு தான்"
"கண்டிப்பாக ஸார்... ஆனா, நம்ம ரசிகர்களுக்காக, எதாவது ஒரு அவார்டுக்கு மட்டும் உங்க கணிப்பை சொல்லுங்க ஸார்.."
கடைசி முயற்சியாகக் கேட்டாள் அவள்.
"ஆங்... எல்லாருக்கும் தெரியும் தான்... இந்த ஆண்டின் சிறந்த புதுமுகம்..."
அவர் பேசப்பேச அனைவரும் புரிந்ததுபோல சிரித்தனர்.
"மை பாய்... நிவீஷ்..." அவர் குரலில் மறையாமல் பெருமிதம் தெரிந்தது.
"எதனால அப்டின்னு ஒரு காரணம் சொல்லுங்க ஸார்"
அவள் தெரிந்தே கேட்பது அவருக்கும் புரிந்தது. என்ன செய்ய, தொலைக்காட்சிக்கு சரக்கு வேண்டுமே!
"காரணம் தானே... கடந்த முப்பது வருஷத்தில, ரஜினிக்குப் பிறகு, ஒரே வருஷத்தில நாலு படம், அதில மூணு ப்ளாக்பஸ்டர், நாலுமே சினிமா ஆர்வலர்கள் தரப்பில பெருசா பேசப்பட்டது. அறிமுகம் என் படத்தில.. -'வானம் பொழியுது'. ஒரு கிராமத்து இளைஞனா நடிச்சான். அடுத்தடுத்த படங்கள்லே கமர்ஷியல் ஹீரோவா .. இப்ப பல பெண்களின் கனவு நாயகன். எல்லாம் ஓரே வருஷத்தில. அதுவும் இருபத்தைந்து வயசில...
அவன் எங்கிட்ட ஆடிஷனுக்கு வரும்போதே, அவன் கண்ணில இருந்த அந்த ஆம்பிஷன பாத்தேன். இன்னும் அவன் பெரிய ஆளா வருவான். I'm proud to say he's my boy!"
நிதானமாக, ஆனால் கம்பீரமாக அவர் பேசிவிட்டு வணக்கத்துடன் கேமராவை நோக்கி கையசைத்துவிட்டு நகர்ந்தார். தொகுப்பாளினி அவருக்கு நன்றி கூறிவிட்டு, கேமராவில் தொடர்ந்தாள்.
"நாம கேட்ட எல்லோருமே டெப்யுட் ஆக்டர் நிவீஷ்தான் இந்த வருஷத்தோட சிறந்த புதுமுக நடிகர்னு சொல்லிருக்காங்க.. ரசிகர்கள் மனசிலும் ஒரு தேர்ந்த நடிகரா, டெடிக்கேட்டட் ஆர்ட்டிஸ்ட்டா, உயர்ந்த இடம் பிடிச்சிருக்காரு நம்ம people's star நிவீஷ்.
உங்களுக்கு தெரியுமா? அவர் ஒரு டீடோட்டலர்...ஆமாங்க, தண்ணி சிகரெட் பக்கம் போகவே மாட்டாராம். நம்ப முடியலைல்ல? அவரோட நெருங்கிய வட்டாரம் சொன்ன தகவல்கள் தான் இது. சின்ன வயசுலயே தமிழ் சினிமாவில தனக்கான இடத்தைப் பிடிச்சுட்டார் அவர். இப்ப நம்ம நிவீஷ் வர்றதுக்காக தான் அவரோட ரசிகர்கள் ஆவலோட காத்திருக்காங்க"
கேமரா திரும்பி ஆயிரக்கணக்கான மக்களின் முகத்தை டிவியில் காட்டியது. அனைவரும் கையசைத்து உற்சாகக் கூக்குரலிட்டனர்.
"அடடே! இப்ப 'வானம் பொழிகிறது' பட நாயகி ரூபினி வர்றாங்க... வாங்க அவங்ககிட்ட பேசலாம்"
" Hi everyone... நான் ரூபினி... pardon me, I'm not so good in Tamil. இப்போதான் நான் தமிழ் கத்துக்குது...." என்று கொஞ்சிப்பேசியபடி கேமராவில் வணக்கம் வைத்தாள் ரூபினி.
"ரூபினி மேம், நீங்க எத்தனையோ படங்கள்ல நடிச்சிருக்கீங்க... உங்களுக்கு 'வானம் பொழிகிறது' படம் எப்டி ஸ்பெஷல்?"
"என்கு...நெறய படங்க நடிச்சிருக்கு..but, சந்தோஷ்ராஜா ஸார் directionல first time நடிச்சேன்...அது ரொம்ப special. அப்றோ.. நிவீஷ் கூட நடிச்சது.. அதும் special"
"நிவீஷ் கூட வொர்க் பண்ணின அனுவபத்தை எங்களுக்காக சொல்லுங்க மேம்"
"Niveesh is mind-blowing, and mindful. He never talks a word out of his dialogues. Yes, very sincere and hardworking. அவரு யாரோடும் வெட்டியா பேசவே மாட்டது. அவர் வொர்க்ல கரெக்டா இருக்கும். Mostly சிங்கிள் டேக்ல ஓகே வாங்கிடுவாரு.. ஆனாலும் அவருக்கு satisfaction வர வரெக்கும் ஷாட் நடிப்பாரு. ஆக்டிங் மேல பகூத் பகூத் டெடிக்கேஷன் ஹை உன்கோ.."
"ரொம்ப நன்றி மேடம். நம்ம ரகு உங்களுக்காக சில கேம்ஸ் வச்சிருப்பாரு வாங்க.."
அவர்கள் பேசி, விளையாண்டு ஒருவழியாக ரூபினியை உள்ளே விட்டனர். விழா தொடங்கும் நேரம் நெருங்கியது. தொகுப்பாளர்கள் உள்ளே சென்றனர். ஆனால் அனைவரும் காத்திருந்த அந்த நாயகன் மட்டும் இன்னும் வரவில்லை.
ஒருபுறம் அவ்விழாவின் event manager சரமாரியாகக் கத்திக்கொண்டிருந்தார். அவரது உதவியாளர்கள் இருவர் நிவீஷின் அலைபேசிக்கும், அவரது மேனேஜரின் அலைபேசிக்கும் விடாமல் அழைத்துக் கொண்டிருந்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடத் தொடங்கியது. இன்னும் வரவில்லை அவன்.
சந்தோஷ்ராஜா அங்குமிங்கும் திரும்பி அவனைத் தேடிவிட்டு , தன் கைபேசியை எடுத்தார். நான்கைந்து முறை அழைத்தும் அவரால் அவனைத் தொடர்புகொள்ள முடியாமல் போக, சந்தேகக் கோடுகள் அவர் முகத்தில் படர்ந்தன.
'என்ன ஆச்சு அவனுக்கு?'
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro