Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

8 எச்சரிக்கை

8 எச்சரிக்கை

சினேகாவின் அறையை நோக்கிச் சென்றான் யாழினியன். அவன் செல்வதை பார்த்து அவன் எங்கு போகிறான் என்பதை புரிந்து கொண்ட மகேந்திரன், அவனைப் பார்க்காததைப் போல, முகத்தை திருப்பிக் கொண்டான். விருந்தினர் அறையின் கதவை தட்டினான் யாழினியன். கோபத்துடன் நின்றிருந்த  யாழினியனை பார்த்த சினேகா, பதட்டமடைந்தாள். அவளது அனுமதியின்றி அறைக்குள் நுழைந்தான் யாழினியன்.

"நீங்க இங்க என்ன செய்றீங்க?"
இங்கும் அங்கும் பார்த்தவாறு பின்னால் நகருந்தாள் சினேகா.

"என்னை பாரு..."

அவனைப் பார்க்கவில்லை சினேகா. அவளது மேற்கரங்களை பற்றி, சுவற்றில் சாய்த்தான்.

"உன் மனசாட்சியை தொட்டு சொல்லு, நீ ஆர்த்தி இல்லன்னு?"

"நான் ஆரத்தி இல்ல" அவன் பிடியிலிருந்து வெளிவர முயன்றாள் சினேகா.

"பொய்... நீ பொய் சொல்ற. அதனால தான், நீ என் முகத்தை பார்க்க மாட்டேங்கிற"

சில நொடி கண்களை மூடி நின்ற சினேகா, திடமாய் கண் திறந்தாள். அவனது கண்களை நேருக்கு நேர் பார்த்து,

"நான் ஆர்த்தி இல்ல. புரிஞ்சுதா?" என்றாள்.

அவளை பற்றியிருந்த பிடியை தளர்த்தினான் யாழினியன்.

"உன்னை காலம் ரொம்பவே மாத்திடுச்சு ஆர்த்தி. நீ நல்லாவே பொய் சொல்ல கத்துக்கிட்டிருக்க"

"தயவுசெஞ்சி இங்கிருந்து போறீங்களா?"

"என்னையா? நீ என்னையா இங்கிருந்து போக சொல்ற?"

"யாருங்க நீங்க? எதுக்காக இப்படி என்னை டார்ச்சர் பண்றீங்க? நீங்க நம்பினாலும், நம்பலனாலும், நான் ஆரத்தி இல்ல." கத்தினாள் சினேகா.

அதற்காகவே வெளியில் காத்திருந்த மகேந்திரன் உள்ளே ஓடி வந்தான். யாழினியனை பார்த்து முறைத்தான் மகேந்திரன்.

"ஏன் இப்படியெல்லாம் செய்ற, யாழ்?" என்றான் அலுப்புடன்.

"இங்க பாருங்க மிஸ்டர், நான் இந்த வீட்டை விட்டு போறேன். நான் இங்க இருக்க விரும்பல. நான் ஹோட்டல்ல தங்கிக்கிறேன்" என்றாள் சினேகா கண்டிப்பாக.

தன் பொருளை எல்லாம் எடுத்து பையில் அடுக்கத் தொடங்கிவிட்ட அவளை, வேதனையுடன் பார்த்துக் கொண்டு நின்றான் யாழினியன்.

"ஐ அம் சாரி... ஐ அம் ரியலி சாரி... இங்க நடந்த எல்லாத்துக்கும் நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். தயவு செஞ்சி எங்களை மன்னிச்சிடுங்க. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. உங்களுக்கு ஹோட்டல்ல நான் ரூம் அரேஞ்ச் பண்றேன்." கெஞ்சினான் மகேந்திரன்.

கோபத்துடன் மகேந்திரனின் சட்டை காலரை பற்றிக்கொண்ட யாழினியன்,

"அவளுக்கு ஹோட்டல்ல ரூம் அரேஞ்ச் பண்ணி குடுப்பியா நீ?" என்றான்.

"பிஹேவ் யுவர் செல்ஃப், யாழ்..."

"அவளை இங்கிருந்து அனுப்பணும்னு நினைச்சா, உன்னை நான் சாகடிச்சிடுவேன்" அரற்றினான் யாழினியன்.

"சரி, சாகடி..." பதிலுக்கு கத்தினான் மகேந்திரன்.

அவர்களுடைய சண்டையைப் பார்த்த சினேகா திணறிப் போய் நின்றாள்.

"அவளை இங்கிருந்து அனுப்பி பாரு, உன்னை கொல்றனா இல்லயான்னு தெரியும்"

"உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு, யாழ்."

அவர்களுடைய சத்தத்தை கேட்டு மதிவதனி, நிலவன், வானதி, மைதிலி அனைவரும் அங்கு ஓடி வந்தார்கள்.

"யாழ், என்னடா பண்ற நீ? " என்றாள் மதிவதனி.

"அவனை விடு, யாழ்" என்றாள் மைதிலி.

இருவரையும் அவர்கள் பிரித்து விட்டார்கள்.

கண்ணிமைக்கும் நேரத்தில் சினேகாவை நெருங்கினான் யாழினியன். அவனுடைய வேகத்தை பார்த்து திகில் அடைந்தாள் சினேகா.

"நீ ஒரு டாக்டர். ஒரு உயிரோட வேல்யூ என்னன்னு உனக்கு நல்லாவே தெரியும். தேவையில்லாம ஒரு உயிர் போக நீ காரணமா இருக்காதே. நீ இங்கிருந்து போனா அது நிச்சயம் நடக்கும்" என்றான் அனல் தெறிக்க.

"இப்படியெல்லாம் நீங்க என்னை மிரட்ட முடியாது மிஸ்டர். நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் எந்த உயிரையும் பத்தி கவலைப்பட வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. எனக்கு உயிரோட வேல்யூ தெரியும் தான். ஆனா அதே நேரம், எத்தனையோ உயிர் என் கண் முன்னாடி பிரியறதை நான் பார்த்திருக்கேன். அது அவங்களுடைய விதி. அதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. அதனால, நான் உங்க உயிர் மேல அக்கறை காட்டுவேன்னு நினைக்காதீங்க"

"ஓ.... நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க? நான் தற்கொலை பண்ணிக்குவேன்னு நினைச்சியா? அத செய்யணும்னா, நீ என்னை விட்டுட்டு போனப்பவே நான் செஞ்சிருப்பேன். ஆனா, ஒவ்வொரு நிமிஷமும் தற்கொலை பண்ணிக்கணும்னு எனக்கு தோனிக்கிட்டு தான் இருக்கு... ( மென்று முழுங்கினான் யாழினியன் ) ஆனா அந்த வலியோட நான் வாழறேன்... ஏன் தெரியுமா? ஒரு நாள் நிச்சயம் உன்னை சந்திப்பேன்னு நம்பிக்கையில தான்..."

திகைத்து நின்றாள் சினேகா.

மகேந்திரனை சுட்டிக்காட்டி,

"நான் சொன்னது அவனைத் தான். பாவம் அவன், இன்னும் அவனுக்கு கல்யாணம் கூட ஆகல. அவன் சாவுக்கு நீ காரணமாயிடாத. நீ இங்கிருந்து காலை எடுத்து வெளியில வச்சா, அதை நான் நிச்சயம் செய்வேன்" என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றான் யாழினியன், சினேகாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி.

நடுக்கத்துடன் கட்டிலில் அமர்ந்தாள் சினேகா.

"அவன் சொன்னதை நீங்க சீரியஸா எடுத்துக்க வேண்டிய அவசியமில்ல" என்றான் மகேந்திரன்.

"ஆமாம். உங்களுக்கு நாங்க ஒரு நல்ல ரூம் அரேஞ்ச் பண்ணி கொடுக்குறோம்" என்றான் நிலவன்.

"உங்க ரெண்டு பேருக்கும் பைத்தியம் பிடிச்சிருக்கா? எதுக்காக உங்களுக்கு எதுவுமே தெரியாத மாதிரி நடந்துக்கிறீங்க? உங்களுக்கு யாழை பத்தி தெரியாதா?" என்ற மதிவதனி,

சினேகாவிடம் வந்து அவள் கரங்களைப் பற்றிக் கொண்டாள்.

"உங்களுக்கு ஏற்பட்ட சங்கடத்துக்காக தயவு செஞ்சி எங்களை மன்னிச்சிடுங்க. இவங்க ஏன் யாழை புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்கன்னு எனக்கு புரியல. ஆரத்திங்கிற ஒரு பொண்ணை யாழ் உயிருக்கு உயிரா காதலிச்சான். அவ பார்க்க அப்படியே உங்களை மாதிரியே இருப்பா"

"ஆமாம்... நீங்க ஆரத்தி இல்ல அப்படிங்கறதை எங்களால் கூட நம்ப முடியல" என்றாள் மைதிலி.

"அவ அவனை விட்டு விலகிப் போயிட்டா. அதிலிருந்து சதா அவளைப் பத்தியே நினைச்சுக்கிட்டு இருக்கான். தயவு செஞ்சி அவனை தப்பா நினைக்காதீங்க" என்றாள் வானதி.

"நீங்க ஒரு டாக்டர். நீங்க அவனைப் புரிஞ்சுக்கவீங்கன்னு நினைக்கிறேன்" என்றாள் மதிவதனி.

"அவங்க ஒரு கார்டியாலஜிஸ்ட்... சைக்காட்ரிஸ்ட் இல்ல" என்றான் மகேந்திரன்.

தன் கரங்களை குவித்தபடி,

"மகா, ப்ளீஸ்... அவனுக்கு ஹெல்ப் பண்ணணும் என்கிற எண்ணம் உனக்கு இல்லனா தயவு செய்து சும்மா இரு. பிரச்சனையை பெரிசாக்காத"

"ஏன் இப்படி செல்ஃபிஷ்ஷா யோசிக்கிறீங்க? உங்க தம்பிக்காக எதுக்காக சினேகாவை டார்ச்சர் பண்றீங்க?"

"ஆமாம் கா. இது நியாயம் இல்ல" என்று மகேந்திரனுக்கு ஒத்து ஊதினான் நிலவன்.

அப்பொழுது, மதுசூதனனுடன் அங்கு வந்தாள் மமதி. சினேகாவை பார்த்த மதுசூதனனும் பேச்சிழந்து போனான்.

"அம்மா..." என்று ஓடிவந்தாள் மமதி,

"இவ தான் என்னோட டாக்டர் மமதி"
அவளை சினேகாவுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் மதிவதனி.

"இவங்க தான் டாக்டர் சினேகா"

"இல்லம்மா... இவங்க ஆர்த்தி மாமி. மாமாவோட ரூம்ல இவங்க ஃபோட்டோவை நான் பார்த்திருக்கேன்" என்றாள் மமதி.

தனது வலது கை ஆள்காட்டி விரலால் தன் நெற்றியை தேய்த்துக் கொண்டாள் சினேகா.

"நான் உங்ககிட்ட சொன்னேன்ல? என் பொண்ணு கூட அதையே தான் சொல்றா பாருங்க..."

மமதியை நோக்கி திரும்பிய மதிவதனி,

"இவங்க ஆர்த்தி மாமி இல்ல. டாக்டர் சினேகா. லண்டனிலிருந்து வந்திருக்காங்க. இவங்க தான் உன்னை ட்ரீட் பண்ண போறாங்க"

அதை கேட்ட மமதியின் முகத்தில் பய ரேகைகள் படர்ந்தது.

"ஹாய்" என்றாள் சினேகா.

"நீங்க தான் எனக்கு ஆபரேஷன் பண்ண போறீங்களா?" என்றாள் மமதி பயத்துடன்.

"ஆமாம்"

"ரொம்ப வலிக்குமா?" என்றாள் மமதி.

அவளைப் பார்க்க பாவமாய் இருந்தது சினேகாவுக்கு. அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து கொண்டாள்.

"உனக்கு எந்த வலியும் தெரியாது"

"நிஜமாவா?"

"நிஜமா தான்"

"ஆனா, என்னோட பிரெண்ட்ஸ் ரொம்ப வலிக்கும்னு சொன்னாங்களே..."

"ஒ... அவங்களில் எத்தனை பேருக்கு ஆபரேஷன் நடந்திருக்கு?"

"யாருக்கும் இல்ல"

"அப்புறம் அவங்களுக்கு எப்படி தெரியும்?"

"ஆப்ரேஷன்னா, நீங்க என்னோட செஸ்டை கத்தியால கட் பண்ணுவீங்க தானே?"

ஆமாம் என்று மெல்ல தலையசைத்தாள் சினேகா.

"அப்படின்னா அது வலிக்கும் தானே?"

"நான் கட் பண்ணும் போது உனக்கு வலிக்குமா?"

"வலிக்காது"

"ஏன்?"

"ஏன்னா, ஆப்பரேஷன் பண்ணும் போது நான் மயக்கமா இருப்பேன்"

"எப்படி?"

"நீங்க எனக்கு அனஸ்தீஷியா குடுப்பீங்க"

"அதே மாதிரி, ஆபரேஷன் முடிஞ்சதுக்கு பிறகு, உனக்கு வலி தெரியாம இருக்க பெயின் கில்லர் கொடுப்போம்"

"நெஜமாவா?" என்றாள் சந்தேகத்துடன்.

"என் மேல உனக்கு நம்பிக்கை இல்லயா?"

அமைதியாய் இருந்தாள் மமதி.

"உனக்கு வலி தெரியாம பார்த்துக்கிட்டா நீ எனக்கு என்ன கொடுப்ப?"

மதிவதனியை பார்த்தாள் மமதி.

"என்ன வேணா தரேன்னு சொல்லு" என்றாள் மதிவதனி.

"என்ன வேணா தரேன்"

"எனக்கு ஒன்னும் வேண்டாம். உனக்கு நான் சாக்லேட் தரேன்"

"ஆனா நான் சாக்லேட் சாப்பிட கூடாது" என்றாள் சோகமாக.

"சாப்பிடலாம்"

"நெஜமாவா?" என்றாள் விழி விரிய மமதி.

"எஸ்"

அவளது பையில் இருந்து ஒரு சாக்லேட்டை எடுத்து, மமதியிடம் நீட்டினாள் சினேகா.

"இந்தா வாங்கிக்கோ"

"நெஜமாவே நான் சாக்லேட் சாப்பிடலாமா?"

"நான் தானே உன் டாக்டர்?"

ஆமாம் என்று தலையசைத்தாள் மமதி.

"அப்புறம் ஏன் தயங்குற?"

"ஆனா அம்மா எப்பவும் என்னை சாக்லேட் சாப்பிட விட்டதில்ல"

"நான் உன்னோட சுகர் லெவலை நார்மலா கொண்டு வந்துடுவேன். டோன்ட் வொரி"

"தேங்க்யூ" என்று சந்தோஷமாய் அந்த சாக்லேட்டை அவளிடம் இருந்து பெற்றுக் கொண்டாள் மமதி.

சிரித்தபடி எழுந்து நின்றாள் சினேகா. அவளது முகபாவம் மாறியது, கதவின் மீது சாய்ந்த படி, யாழினியன், வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்த போது.

"சாக்லேட் சாப்பிடுற பழக்கத்தை இன்னும் விடலயா நீ?" என்றான் அவன்.

அவனைப் பார்த்து முகம் சுருக்கினாள் சினேகா.

"என்னைவிட நல்லா உன்னை பத்தி வேற யாருக்கு தெரிஞ்சிட போகுது?"

"சாக்லேட் சாப்பிடுற பழக்கம் ஆரத்திக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்ததா?" என்ற அவளைப் பார்த்து நக்கலாய் சிரித்தான் யாழினியன்.

"நாங்க கிளம்புறோம்" என்றான் மகேந்திரன்.

அவன் அனைவருக்கும் சைகை செய்ய, அனைவரும் அங்கிருந்து கிளம்பினார்கள். தன்னோடு யாழினியனையும் இழுத்துக் கொண்டு வெளியே வந்தான் மகேந்திரன். எண்ணங்களின் கலவையாய், சினேகாவை பார்த்தபடி வெளியேறினான் யாழினியன்.

"பைத்தியக்காரன் மாதிரி நடந்துக்காத, யாழ்" என்றான் மகேந்திரன்.

"எனக்கு என்னோட ஆர்த்தி திரும்ப கிடைச்சிட்டா"

"ஆனா அவ..."

சினேகா என்று மகேந்திரன் கூறுவதற்கு முன், அவன் வாயை பொத்தினான் யாழினியன்.

"அவ என்னோட ஆர்த்தி. சீக்கிரமே நான் அதை நிரூபிப்பேன்" அவனை பிடித்து தள்ளிவிட்டு தன் அறைக்கு  சென்றான் யாழினியன். அவனைப் பார்த்தபடி புன்முறுவலுடன் நின்றான் மகேந்திரன்.

தன்னை எப்படி ஆசுவாசப்படுத்திக் கொள்வது என்றே புரியவில்லை யாழினியனுக்கு. அவனுடைய ஆர்த்தி அங்கே இருக்கிறாள்... அவனுக்கு வெகு அருகில்... அனைவரும் அவளை சினேகா என்கிறார்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். அதை ஏற்றுக் கொள்ள அவன் முட்டாள் அல்ல. அனைத்திற்கும் மேலாக ஆர்த்தியும், அவள் ஆர்த்தி அல்ல என்று நடிக்கிறாள். அவளுடைய நிலைமை அவனுக்கு புரிகிறது. அவளுடைய கோபமும் நியாயமானது தான். அவளிடத்தில் யார் இருந்தாலும் அப்படித் தான் செய்வார்கள். ஆனால் அவனும் தானே அவளைப் போலவே காயப்பட்டவன்? அதை ஏன் அவள் புரிந்து கொள்ள மறுக்கிறாள்? அவளுக்கு அவனைப் பற்றி தெரியாதா? எப்படி இந்த அளவிற்கு அவள் மாறிப் போனாள்? அவள் மனதில் இருக்கும் காதலை எப்படி அவளால் மறைக்க முடிகிறது?

எது எப்படி இருந்தாலும், வெகு விரைவிலேயே உண்மையை அவள் ஒப்புக்கொள்வாள். அவன் ஒப்புக்கொள்ளச் செய்வான். இதன் பிறகு, அவளை இந்தியாவை விட்டு செல்ல அனுமதிப்பதில்லை என்ற முடிவை தீர்க்கமாய் எடுத்தான் யாழினியன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro