Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

47 புனிதாவை பற்றி...

47 புனிதாவை பற்றி...

புனிதாவின் திடீர் வருகை ஆர்த்தியை ரொம்பவே குழப்பியது. இந்த விஷயத்தில் வெங்கட்ராகவனின் முடிவு என்னவாக இருக்கும் என்பது அவளுக்கு புரியவில்லை. என்னவாக இருந்தாலும், அவள் அதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள தயாரானாள் ஆர்த்தி. தன் கடந்த காலத்தில் நடந்தவை, அவளுக்கு ஏமாற்றத்தையும், பயத்தையும் அளித்திருந்தாலும், அனைத்தையும் எதிர்கொள்ளும் திறனும் அவளுக்கு வந்துவிட்டிருந்தது. ஏனென்றால் இதற்கு மேல் இழப்பதற்கு எதுவும் இல்லை அல்லவா...! ஆனால், யாழினியன், தியா என்று வந்து விட்டால், அவள் அதே தைரியத்துடன் இருப்பாளா என்பதை நாம் கூறுவதற்கில்லை.

அவள் உள்ளக்கிளர்ச்சியை புரிந்து கொண்டான் யாழினியன். அவளை தேவையில்லாத விஷயத்தில் அவன் இழுத்து விட்டு விட்டானோ?  ஏற்கனவே அவள் வாழ்க்கையில் அடிபட்டு நொந்து போயிருக்கிறாள். இன்னுமும் கூட பிரச்சனைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவளை துரத்திக் கொண்டே தான் இருக்கிறது. எப்பொழுது தான் அவள் அனைத்திலுமிருந்து விடுபட போகிறாளோ...!

அப்பொழுது, ஒரு பை நிறைய இனிப்பும், கார பலகாரமுமாக அவர்கள் அறைக்கு வந்தார் வெங்கட்ராகவன். அவர் கொண்டு வந்த பையை ஆர்த்தியிடம் கொடுத்தார். அதிலிருந்த ஒரு பார் சாக்லேட்டை எடுத்து அதை தியாவிடம் நீட்டினாள் ஆர்த்தி. அதை ஆசையுடன் பெற்றுக் கொண்டாள் தியா.

"என்ன அங்கிள் இதெல்லாம், ஒரு கடையையே பிடிச்சுகிட்டு வந்து இருக்கீங்க...?" என்றான் யாழினியன்.

"இதெல்லாம் ஆர்த்திக்கு பிடிச்ச ஸ்வீட் அண்ட் ஸ்நாக்ஸ்..." என்றார் வெங்கட்ராகவன்.

"டாட், நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்"

தானாகவே புனிதாவை பற்றி அவரிடம் கூற நினைத்தாள் ஆர்த்தி.

"என்ன விஷயம் சொல்லுடா"

ஆர்த்தி எதுவும் கூறுவதற்கு முன்,

"தியாவோட ஸ்கூல் அட்மிஷன் முடிஞ்சிடுச்சு அங்கிள்" என்றான் யாழினியன் அவளை பேசவிடாமல்.

அவனைப் பார்த்து கண்களை சுருக்கினாள் ஆர்த்தி.

"ரொம்ப நல்லது, எப்போதிலிருந்து அவ ஸ்கூலுக்கு போகணும்?"

"ஸ்கூல் எல்லாம் ஏற்கனவே ஸ்டார்ட் ஆயிடுச்சு அங்கிள். நம்ம தான் லேட். மண்டேயில் இருந்து அவளை அனுப்பலாம்னு இருக்கேன்" என்றான் யாழினியன். 

"ஏன் மண்டே? நாளைக்கே அனுப்பலாமே? ஏற்கனவே ஸ்கூல் ஸ்டார்ட் ஆயிடுச்சுன்னு வேற சொல்றீங்களே..."

"நான் ஆர்த்தியையும், தியாவையும் வெளியில கூட்டிகிட்டு போலாம்னு இருக்கேன் அங்கிள்"

"ஓ... அப்படின்னா சரி..."

கண்ணிமைக்காமல் யாழினியனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆர்த்தி. அவன் மனதில் இருப்பது என்ன? அவள் புனிதாவை தன் அம்மாவாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான்... ஆனால், அவரைப் பற்றிய உண்மையை தன் அப்பாவிடம் கூறாமல் தடுக்கிறான்... ஏன் இப்படி விசித்திரமாக நடந்து கொள்கிறான்?

ஓரக்கண்ணால் அவளை பார்த்த யாழினியன், அவள் மனதில் ஓடிக் கொண்டிருப்பது என்ன என்பதை புரிந்து கொண்டான்.

வழக்கம் போல் அவர்களிடம் சாதாரணமாய் பேசிக் கொண்டிருந்துவிட்டு, சிறிது நேரத்திற்கு பிறகு, தன் அறைக்குச் சென்றார் வெங்கட்ராகவன். அவரை யாழினியனும் பின்தொடர்ந்து சென்றான். ஆனால், அவன் அவர்களது அறையை விட்டு வெளியே செல்லும் முன், அவனுக்கு முன் ஓடி சென்று கதவை சாத்தினாள் ஆர்த்தி.

"உன் மனசுல இருக்கிறது என்ன யாழ்? நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க? எதுக்காக இப்படி எல்லாம் செய்ற?" என்றாள். 

"நீ எதை பத்தி பேசுற ஆர்த்தி?"  

"போதும். என்னை கடுப்பேத்துறதை நிறுத்து..."

"கடுப்பேத்துறேனா?"

"பின்ன என்ன? நான் எதைப் பத்தி பேசிக்கிட்டு இருக்கேன்னு உனக்கு நல்லாவே தெரியும்"

"நான் சொல்றத கேளு. புனிதா கோமாவுல இருக்காங்க. அவங்களை பத்தி அங்கிளுக்கு தெரிஞ்சா கூட அவரால என்ன செய்ய முடியும்? ஒன்னும் கிடையாது..."

"அதை நீ முடிவு செய்யக்கூடாது"

"ஏன் ஆர்த்தி?"

"ஏன்னா, புனிதா உனக்கு சம்பந்தம் இல்லாதவங்க... ஆனா, அவருக்கு இருக்கு"

"ஆனா, அவரோட முடிவு உன்னை பதிக்கும், ஆர்த்தி..."

"அதனால? அதனால என்ன?"

"நீ பாதிக்க கூடாதுன்னு நினைக்கிறேன்"

"பதிச்சு தான் ஆகணும்... வேற வழியில்ல..."

"வழி இருக்கு... நீ நெனைச்சா அதை தள்ளியாவது போட முடியும்..."

"நான் தள்ளிப் போட விரும்பல. நான் டென்ஷன் ஃப்ரீயா இருக்கணும்னு நினைக்கிறேன்..."

"நீ ஒரு டாக்டர்... பாசிபிலிட்டிஸ் பத்தி யோசிச்சு பாரு. புனிதா எப்போ குணமாவாங்கன்னு உன்னால சொல்ல முடியுமா? அவங்க குணமாகாமலேயே போகவும் வாய்ப்பு இருக்கு. அவங்க க்யூர் ஆகுற வரைக்கும் ஹாஸ்பிடல்ல தான் இருந்தாகணும். இதை பத்தி நம்ம அங்கிள் கிட்ட சொல்லி எதுக்காக அவரை டென்ஷன் பண்ணனும்?"

"அவர் டென்ஷனா இருந்து தான் ஆகணும்... அவர் விதைச்சதை அவர் அறுத்து தான் ஆகணும்..."

"ஆனா..."

"இல்ல யாழ்... அவர் கிட்டயிருந்து உண்மையை மறைக்குறது நியாயம் இல்ல. புனிதாவோட உண்மையான நிலை அவருக்கு தெரியணும். இதுல, நான் என்ன நினைக்கிறேன் அப்படிங்கறது முக்கியம் இல்ல. எனக்கு குடும்பம் இருக்கு... புருஷன், குழந்தை எல்லாம் இருக்காங்க. நான் செட்டில் ஆயிட்டேன். இந்த விஷயத்துல நான் தலையிட கூடாதுன்னு நினைக்கிறேன்"

"உங்க அப்பா அவங்களுக்கு சப்போர்ட்டா இருக்கணும்னு நீ நினைக்கிறியா?"

"இருந்து தானே ஆகணும்? அவரால தானே அவங்க வாழ்க்கையில படக்கூடாத அவஸ்தை எல்லாம் பட்டாங்க? இந்த உலகத்துல தன்னந்தனியா ஒரு பொம்பள பிள்ளையை வளர்க்குறது அவ்வளவு சாதாரணமில்ல, யாழ். இப்பவாவது அவங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயம் கிடைக்கட்டுமே..." என்ற ஆர்த்தியை பெருமையுடன் பார்த்தான் யாழினியன்.

"நிச்சயமா தான் சொல்றியா ஆர்த்தி?"

"ஆமாம். ஆனா, எனக்கு இந்த விஷயம் தெரியும்னு அவருக்கு தெரிய வேண்டாம்"

தூக்கி வாரி போட்டது யாழினியனுக்கு. இது அவர்களது நிலையை மோசமாக்கலாம்.

"ஏன் ஆர்த்தி?"

"அவரால் தான் என்னோட வாழ்க்கை நாசமா போச்சுன்னு ஏற்கனவே அவரு குற்ற உணர்ச்சியில இருக்காரு. இந்த விஷயம் தெரிஞ்சா அவர் என்னை ஃபேஸ் பண்ண தயங்கலாம். அதனால, தயவு செய்து புனிதாவை பத்தி எனக்கு தெரியும்னு அவருக்கு தெரிய வேண்டாம். எனக்கு தெரியலம்மா வேண்டாமான்னு அவரே முடிவு பண்ணட்டும்"

யாழினியனுக்கு அது சரியாய் படவில்லை. என்ன தான் ஆர்த்தி பரந்த மனப்பான்மையுடன் செயல்பட்டாலும், ஒருவேளை வெங்கட்ராகவன் இந்த விஷயம் ஆரத்திக்கு தெரியக்கூடாது என்று மறைக்க நினைத்தால், அது நிச்சயம் ஆர்த்தியை வருத்தமடைய செய்யும். அவன் இந்த விஷயத்தை எளிமையாக்க முயன்று கொண்டிருக்கிறான், ஆனால் அதுவோ, சிக்கலாகிக் கொண்டே செல்கிறது.

"என்ன யோசிக்கிற யாழ்? போ..."

"அவர் உன்னை பத்தி கேட்டா நான் என்ன சொல்லட்டும்?"

"ரொம்ப அப்பாவி மாதிரி நடிக்காத. இந்த நேரதுக்குள்ள என்ன சொல்லணும்னு ஏற்கனவே உன் மனசுல நீ யோசிச்சு வச்சிருப்ப." என்று சிரித்தாள் ஆர்த்தி.

அவனும் சிரித்தபடி அவளை தன்னிடம் இழுத்து,

"நீ ரொம்ப ஸ்மார்ட்"  என்றான்.

"அப்படியா?"

"உனக்கு தெரியாதா?"

"இல்ல... நான் ஸ்மார்ட் இல்ல. அப்படி இருந்திருந்தா, சினேகாவை கண்மூடித்தனமா நம்பி, அவ கூட போயிருப்பேனா?"

"நீ சினேகாவை நம்பினதால, நீ ஸ்மார்ட் இல்லைனு அர்த்தமில்ல... உன்னை மாதிரியே தான் எல்லாரும் இருப்பாங்கன்னு நீ நினைச்ச... அது உன்னோட தப்பு இல்ல. உனக்கு அவளை மாதிரி கெட்ட புத்தி இல்ல..."

ஒன்றும் பேசாமல் அமைதியாய் இருந்தாள் ஆர்த்தி. அவளுக்கு தெரியாதா? யாழினியன் எப்பொழுதும் அவளை விட்டுக் கொடுக்க மாட்டான் என்று..???

"உன்னை கடைசியா கேக்குறேன், நிச்சயம் புனிதாவை பத்தி உங்க அப்பா கிட்ட சொல்லனுமா?"

ஆமாம் என்று தலையசைத்தாள் ஆர்த்தி.

"சரி..."

மகேந்திரனுக்கு ஃபோன் செய்த படி, வெங்கட்ராகவனின் அறையை நோக்கி நடந்தான் யாழினியன். அவனது அழைப்பை ஏற்றான் மகேந்திரன்.

"மகா, புனிதாவை போட்டோ எடுத்து எனக்கு அனுப்பு"

"வெங்கட்ராகவன் அங்கிள் கிட்ட காட்ட போறியா?" என்றபடி புனிதாவின் அறையை நோக்கி நடந்தான் மகேந்திரன்.

"ஆமாம்"

"அதை பத்தி ஆர்த்தி கிட்ட பேசிட்டியா?"

"பேசிட்டேன்"

"அவளுக்கு இதுல எந்த பிரச்சனையும் இல்லையா?"

"சுத்தமா இல்ல..."

"ஆர்த்தி ஆர்த்தி தான்..."

"ஆமாம்"

"அவர்கிட்ட உண்மையை சொல்ல வேண்டாம்னு உன்னை தடுத்து நிறுத்துவாளோன்னு நினைச்சேன்" என்றான் மகேந்திரன்.

"நானும் அப்படித்தான் நினைச்சேன்"

"எல்லாம் நல்லபடியா போகுது போல இருக்கு"

"நான் அப்படி நினைக்கல... தனக்கு இந்த விஷயம் தெரியும்னு அங்கிளுக்கு தெரிய வேண்டாம்னு நினைக்கிறா ஆரத்தி..."

"ஒ..."

"அவ வெங்கட்ராகவன் அங்கிளை டெஸ்ட் பண்றான்னு நினைக்கிறேன்"

"அப்படின்னா?"

"அவராவே அவகிட்ட புனிதாவை பத்தின  உண்மையை சொல்றாரா இல்லையான்னு அவ டெஸ்ட் பண்றா..."

"இருக்கலாம்..."

"என்ன நடக்கப் போகுதுன்னு தெரியல"

"என்ன நடந்தாலும் அதைப்பத்தி நீ கவலைப்படாம ஆரத்தி கூட நில்லு..."

"நிச்சயமா"

"நான் உனக்கு புனிதாவோட போட்டோவை அனுப்புறேன் "

"ஓகே"

அவர்களது அழைப்பு துண்டிக்கப்பட்டது. புனிதாவை போட்டோ எடுத்து அதை யாழினியனுக்கு அனுப்பி வைத்தான் மகேந்திரன்.

யாழினியனை பார்த்த வெங்கட்ராகவன் புன்னகை புரிந்தார்.

"வாங்க யாழ்"

"உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும் அங்கிள்"

"ஏதாவது முக்கியமான விஷயமா?"

"ஆமாம் அங்கிள்"

மகேந்திரன் தனக்கு அனுப்பி வைத்திருந்த புகைப்படத்தை எடுத்து அவரிடம் நீட்டினான் யாழினியன். அதை பார்த்து முகம் சுருக்கினார் வெங்கட்ராகவன். அவரால் புனிதாவை அடையாளம் காண முடியவில்லை. பனிரெண்டு ஆண்டு காலம் கோமாவில் இருந்தவராயிற்றே... ஆளே தேய்ந்து எழும்பும், தோலுமாய் இருந்தார். அடியோடு பலவீனப்பட்டிருந்த அவரை அடையாளம் காண ரொம்பவே திண்டாடினார் வெங்கட்ராகவன். இறுதியில் அவரது முகபாவனை மாறியது. அதிர்ச்சியுடன் யாழினியனை ஏறிட்டார். அவர் புனிதாவை அடையாளம் கண்டு கொண்டு விட்டார் என்பதை அவரது முகமாற்றமே கூறியது.

"புனிதாவா?" என்றார் அதிர்ச்சியாய்.

ஆமாம் என்று தலையசைத்தான் யாழினியன். நிலைத்தடுமாறி தொப்பென்று அமர்ந்தார் வெங்கட்ராகவன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro