Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

3 புதியவள்

3 புதியவள்

அனைவருக்கும் தேநீர் பரிமாறிக் கொண்டிருந்தாள் மதிவதனி. அவளுடைய சித்தப்பா மகனான நிலவன், அவளுடைய சோகமான முகத்தை பார்க்கச் சொல்லி தன் பக்கத்தில் அமர்ந்திருந்த மகேந்திரனுக்கு சைகை செய்தான்.

"கூலா இருங்க மதி. அதான் டாக்டர் சினேகா இந்தியா வரேன்னு ஒத்துக்கிட்டாங்க இல்ல?"

"ஆமாம், கா. நிம்மதியா இருங்க நம்ம மமதி குட்டி நல்லா இருப்பா" என்றான் நிலவன்.

பெருமூச்சுவிட்டு அமர்ந்தாள் மதிவதனி.

"நீங்க இத்தனை டாக்டர்ஸ் இருக்கீங்க. ஆனா என்ன பிரயோஜனம்? நம்ம குழந்தையை காப்பாத்த, வேற ஒருத்தர்கிட்ட போய் கெஞ்ச வேண்டி இருக்கு...! உங்கள்ல யாராவது ஒருத்தர் கார்டியாலஜிஸ்ட் ஆகி இருக்கலாம் இல்ல?" என்றாள் மதிவதனி.

"அதை ஏன் கேக்குறீங்க, மதி...? எங்க ஃபர்ஸ்ட் கார்டியாலஜி கிளாஸ்லையே நான் கார்டியோலஜிஸ்ட் ஆகிறது இல்லன்னு முடிவு பண்ணிட்டேன்" என்றான் மகேந்திரன்.

"ஆனா ஏன்?" என்றாள் மதிவதனி.

"ஏன்னே தெரியல, எனக்கு கார்டியாலஜி லெசன் பிடிச்சதே இல்ல. அந்த கிளாஸ் வந்தாலே எனக்கு செம கடுப்பா இருக்கும். எங்க எல்லாருக்குமே கார்டியாலஜி லெசன்சை எப்பவுமே ஆர்த்தி தான் எக்ஸ்பிளைன் பண்ணுவா. அவ தான் கார்டியாலஜிஸ்ட் ஆகணும்னு ஆசைப்பட்டா. அவ இப்ப எங்க இருக்காளோ... எப்படி இருக்காளோ தெரியல..." என்றான் யாழினியனை ஓரக்கண்ணால்  பார்த்தபடி மகேந்திரன்.

அதைக் கேட்ட மதிவதனி பதற்றமானாள். தலை குனிந்த படி, தன் முஷ்டியை மடக்கிக் கொண்டு அமர்ந்திருந்த யாழினியனின் மீது அவள் பார்வை சென்றது. ஆனால் யாழினியனின் மனநிலையை பற்றி மகேந்திரன் சிறிதும் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. அது அவளுக்கு மேலும் ஆச்சரியம் அளித்தது. ஏனென்றால், யாழினியன் முன்பாக ஆரத்தியைப் பற்றி பேசுவதே இல்லை என்பதில், மற்ற அனைவரையும் விடவும் அவன் தான் மிகவும் எச்சரிக்கையாக இருப்பான். ஆனால் இன்று, அவன் வேண்டுமென்றே ஆர்த்தியை பற்றி பேசுவதாய் தோன்றியது மதிவதனிக்கு. ஆனால் ஏன் இப்படி செய்கிறான் என்று தான் அவளுக்கு புரியவில்லை.

எதிர்பார்த்தபடியே, அங்கிருந்து தன் அறையை நோக்கி நடந்தான் யாழினியன் கோபத்துடன்.

"என்ன மகா இப்படி பண்ணிட்ட? எதுக்காக இப்ப அவனுக்கு ஆர்த்தியை ஞாபகப்படுத்தின?" என்றான் நிலவன்.

"ஞாபகப்படுத்தினா என்ன? அவன் திரும்பத் திரும்ப அவளை நினைக்கட்டுமே..."

"நீ என்ன தான் நினைச்சுகிட்டு இருக்க, மகா?" என்றாள் மதிவதனி கோபமாய்.

"எதுக்காக எல்லாரும் டென்ஷன் ஆகுறீங்க? தெரியாம தான் கேட்கிறேன், நான் ஆரத்தியை பத்தி பேசலன்னா, அவன் அவளை மறந்துடுவானா?" என்ற தரமான கேள்வியை கேட்டான் மகேந்திரன்.

வாயடைத்துப் போனாள் மதிவதனி. மகேந்திரன் கூறுவது உண்மை தான் ஆர்த்தியை பற்றி பேசாமல் இருந்து விட்டால் மட்டும் யாழினியன் அவளை மறந்து விடப் போவதில்லை. அவளது நினைவு எப்பொழுதும் அவன் மனதில் வட்டமடித்துக் கொண்டு தான் இருக்கும்.

"இன்னைக்கு அவ மட்டும் நம்ம கூட இருந்திருந்தா, நம்ம மமதியை பத்தி கவலைப்பட்டிருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது" என்றான் மகேந்திரன் வேதனையுடன்.

"அவ எங்க போனான்னே தெரியல. இத்தனை வருஷமா, அவ யாழை விட்டுவிட்டு எப்படி இருக்கான்னு எனக்கு புரியல." என்றான் நிலவன் சோகமாக.

"யாழும் அவளையே நெனச்சுக்கிட்டு, மனசுகுள்ள நொந்து கிட்டு தான் இருக்கான்" என்றாள் மதிவதனி.

"இது அவனோட தலையெழுத்து. அவ அவனையே சுத்தி சுத்தி வந்த போது, அவன் அவளை மதிக்கல. அப்புறம், இப்ப எதுக்கு அவளை நினைச்சுகிட்டு உருகணும்?" என்றான் மகேந்திரன் காட்டமாக.

"உனக்கு அவனைப் பத்தி தெரியாதா?" என்றாள் மதிவதனி வேதனையுடன்.

"ஆங், ஆங்... தெரியும், தெரியும். அதனால என்ன பிரயோஜனம்? எவ்வளவு பைத்தியக்காரத்தனமா ஆர்த்தி அவனை காதலிச்சா? எந்த ஒரு ஈகோவும் இல்லாம அவனே உலகம் அவனை சுத்தி சுத்தி வந்தா...?"

"அவளை மாதிரியே இவனும் தானே அவளை ஆழமா காதலிக்கிறான்?"

"அவன் காதலை தூக்கி குப்பையில் போட சொல்லுங்க. அவனும் அவளை காதலிப்பான், ஆனா அவ கிட்ட சொல்ல மாட்டான்... அவனும் அவளை காதலிக்கிறான்னு அவளுக்கு தெரிய கூட படுத்த மாட்டான்... இதுவா காதல்? நீங்களும், உங்க தம்பியோட காதலும்..." என்றான் கடுப்புடன்.

மதிவதனிக்கு தெரியும் மகேந்திரன் மட்டுமல்ல, அவர்களது அனைத்து நண்பர்களுமே, ஆரத்தி என்று வந்துவிட்டால் யாழினியன் மீது கோபமாக தான் இருந்தார்கள்.

யாழினியனின் அறையில்...

மூடப்பட்ட கதவின் மீது சாய்ந்தபடி கண்களை மூடி நின்றிருந்தான் யாழினியன்.

ஆரத்தி...

அவனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆனால் அது அவளுக்கு தெரியாது. இல்லை, இல்லை, அவன் அவளுக்கு அதை தெரிய விட்டதில்லை...

ஆரத்தி... தன் மனதின் அடியாழத்தில் இருந்து யாழினியின் நேசித்த பெண். ஆனால், அதை அவளிடம் அவன் சொன்னதே இல்லை. இப்பொழுது பல வருடங்களாய் அவன் அவளைத் தேடிக் கொண்டிருக்கிறான்.

அவன் அவளை நினைக்காத நாளில்லை... ஒவ்வொரு நிமிடமும் அவள் எண்ணங்கள் தான் அவன் மனதில் வளைய வந்து கொண்டிருக்கின்றன...

மீண்டும் தனது பழைய நினைவுகளில் மூழ்கினான் யாழினியன்...

ஈவிஆர் ஆங்கிலோ இந்தியன் பள்ளி

பதினோராம் வகுப்பு துவங்கும் முதல் நாள். அறிவியல் பாடப் பிரிவு வகுப்புக்குள் நுழைகிறார் ஆசிரியர். வகுப்பு பிள்ளைகள் எழுந்து நின்று அவரை வரவேற்றார்கள். அந்த அறிவியல் பாட வகுப்பில் வெறும் இருபது மாணவர்களே இருந்தார்கள். அனைத்து மாணவர்களின் கண்களும் ஒரு குறிப்பிட்ட பெண்ணின் மீது குவிந்திருந்தது. அவள் அந்த வகுப்பிற்கு புதியவள் என்பதால்.

பார்த்தவுடனேயே புரிந்தது அவள் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக இருப்பாள் என்று.

"உன் பேர் என்னம்மா?" என்றார் வகுப்பாசிரியர்.

"வி. ஆரத்தி" என்றாள் அந்தப் பெண்.

"டென்த் வரைக்கும் எங்க படிச்ச?"

"ஊட்டி போர்டிங் ஸ்கூல்ல படிச்சேன் மேடம்"

"அப்படின்னா உங்களுக்கு சொந்த ஊர் சென்னை இல்லயா?"

"எங்களுக்கு சொந்த ஊர் பாண்டிச்சேரி. என்னோட அப்பா ஐஏஎஸ் ஆஃபிஸர் அப்படிங்கிறதால இந்தியா முழுக்க சுத்திக்கிட்டே இருப்பாரு, சில சமயம் இந்தியாவுக்கு வெளியில போக வேண்டி இருக்கும். அதனால என்னை ஹாஸ்டல்ல சேர்த்துட்டாரு. இப்போ அவருக்கு சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைச்சிருக்கு. இன்னும் டூ இயர்ஸ் அவர் இங்க தான் இருப்பாரு. அதனால அவர் கூட இருக்கலாம்னு நானும் இங்க வந்துட்டேன்"

"உங்க அம்மா என்ன செய்றாங்க?"

"எனக்கு அம்மா இல்ல" என்று உதடு மடித்தாள் ஆர்த்தி.

அதைக் கேட்ட யாழினியனுக்கு பாவமாய் இருந்தது. ஏனென்றால், அவனும் பெற்றோரை இழந்தவன்.

"ஐ அம் சாரி, மா" என்றார் ஆசிரியர்.

"தட்ஸ் ஓகே, மேடம்..."

"நீ என்னவாக போற?"

"நான் ஜர்னலிஸ்ட் ஆகணும்"

"ஓ... அப்படின்னா ஏதாவது ஈஸியான குரூப்பா எடுத்திருக்கலாமே...? சயின்ஸ் கொஞ்சம் கஷ்டமா இருக்குமே?"

"எனக்கு சயின்ஸ் பிடிக்கும் மேடம்"

"தட்ஸ் கிரேட்... எதுக்காக உனக்கு ஜர்னலிஸ்ட் ஆகணும்னு ஆசை?"

"எனக்கு டேபிள் ஜாப்ஸ் பிடிக்காது. அட்வென்சரஸ் லைஃப் தான் பிடிக்கும். த்ரில்லிங்கா இருக்கணும்..."

"குட்... ( மற்ற மாணவர்களை பார்த்து) ஸ்டுடென்ட்ஸ், ஆர்த்தியை உங்க ஃபிரண்ட்டா அக்செப்ட் பண்ணிக்கோங்க"என்றார்.

"ஓஓஓஓகேகேகேகே மேடடடம்ம்ம்ம்ம்" என்றார்கள் அனைவரும் கோரசாய்.

சிரித்தபடி அமர்ந்து கொண்டாள் ஆர்த்தி.

"நீங்கெல்லாம் என்னவாக போறீங்க?" என்றார் ஆசிரியர் மற்ற மாணவர்களை பார்த்து.

"நான் ரகுராம், சினிமா ஹீரோவாக போறேன் மேடம்" என்றான்.

வகுப்பறை முழுக்க சிரிப்பொலி எழுந்தது.

மற்றொருவன் எழுந்து நின்று,

"நான் விவேக், சினிமா டைரக்டர் ஆகப் போறேன் மேடம். ஆனா சத்தியமா அவனை வச்சு மட்டும் படம் எடுக்க மாட்டேன்" என்றான் ஹீரோவாக போகிறேன் என்று கூறிய மாணவனை பார்த்து.

மாணவர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்து சிரித்தார்கள்.

"அப்புறம்?" என்றார் ஆசிரியர்.

"நான் யாழினியன். டாக்டராகப் போறேன்"

"நான் மகேந்திரன், நானும் யாழினியனுக்காக டாக்டராக போறேன்"

"யாழினியனுக்காகவா?" என்றார் ஆசிரியர்.

"ஆமாம் மேடம்... நான் மட்டுமில்ல, நிலவன், கதிரவன், மைதிலி, வானதி எல்லாருமே யாழினியனுக்காக டாக்டராக போறோம்"

"அதுக்கு ஏதாவது காரணம் இருக்கா?"

"எங்க அப்பாவுக்கு என்னை டாக்டர் ஆக்கணும்னு ஆசை. நாங்க எல்லாரும் ப்ரீகேஜிலிருந்து ஃபிரண்ட்ஸா  இருக்கோம். எங்க ஃப்ரெண்ட்ஷிப்பை கண்டின்யூ பண்ண தான், இவங்க எல்லாரும் மெடிசன் சேர போறாங்க." என்றான் யாழினியன்.

"உனக்கு விருப்பப்பட்டு தான் நீ மெடிசன் படிக்கப் போறியா? இல்ல, உங்க அப்பா சொன்னதுக்காக படிக்க போறியா?"

"என்னோட முழு விருப்பத்தோடு தான் படிக்கப் போறேன். சின்ன வயசுல இருந்தே, டாக்டர் ஆகணும் அப்படிங்கற ஆசையை எங்க வீட்ல என்னைக்கு ஊசியில ஏத்துற மாதிரி ஏத்தி இருக்காங்க"

"நீங்கெல்லாம் எப்படி?" என்றார் ஆசிரியர்.

"அவனுக்கு போட்ட ஊசியை, அவன் எங்களுக்கும் போட்டுட்டான் மேடம்" என்றான் நிலவன், யாழினியனை சுட்டிக்காட்டி.

வகுப்பறை மீண்டும் சிரிப்பலையில் ஆழ்ந்தது

"உங்களுக்கு ஏதாவது லட்சியம் இருக்கா?"

"இல்லாதவங்களுக்கு மருத்துவ உதவி செய்யணும்" என்றான் யாழினியன்.

"அப்படின்னா இந்த சொசைட்டிக்கு ஃப்ரீ ட்ரீட்மெண்ட் கிடைக்க போகுதா?"

"அப்படியெல்லாம் இல்ல மேடம். இருக்கிறவங்க கிட்ட வாங்கி, இல்லாதவங்களுக்கு ட்ரீட் பண்ண போறோம்" என்றான் யாழினியன். 

ஆசிரியர் மட்டுமல்ல ஆர்த்திக்கும் கூட அவர்களது எண்ணம் பிடித்திருந்தது.

"அப்படின்னா, நீங்க நம்ம ஸ்கூலோட மெடிக்கல் டீமா?" என்றார் ஆசிரியர்.

"ஆமாம் மேடம்" என்றார்கள் ஆறு பேரும் ஒரே குரலில்.

அந்த மெடிக்கல் டீம் ஆரத்தியை வெகுவாய் கவர்ந்தது. அவர்கள் அனைவரும் எப்பொழுதும் ஒன்றாகவே இருந்தார்கள். ஒன்றாய் உணவு உண்டார்கள், சண்டையிட்டுக் கொண்டார்கள், சுற்றித்திரிந்தார்கள், சிரித்தார்கள், அழுதார்கள், மகிழ்ந்தார்கள்,  எல்லாவற்றையும் ஒன்றாகவே இணைந்து செய்தார்கள். அவளை அறியாமலேயே அவள் அவர்களை ரசிக்க துவங்கினாள். முக்கியமாய் அவர்களுக்கு தலைவனான, யாழினியனை...

நினைவுகள் தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro