22 தியா
21 தியா
யாழினியனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவே இல்லை. *அம்மாவா?* அதற்கு என்ன அர்த்தம்? ஆர்த்திக்கு குழந்தை இருக்கிறதா? யாருடைய குழந்தை? அவள் திருமணம் ஆனவளா? அவள் யாரை திருமணம் செய்து கொண்டாள்? அவள் தாய்மையின் மீது கொண்டிருந்த மதிப்பும், மரியாதையும் அவன் அறிந்தது தான். ஆனால் அவள் நிச்சயம் தன்னைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொண்டிருக்க மாட்டாள். அதில் அவனுக்கு துளியும் சந்தேகமில்லை.
ஒருவேளை.... ஒருவேளை, அந்த குழந்தை அவனுடையதாக இருக்குமோ? மென்று முழுங்கினான் யாழினியன். அவனது உடல் வியர்வையால் நனைந்தது. அவன் நிற்கவே தடுமாறினான். அப்படி நடக்கவும் வாய்ப்பிருக்கிறதே...! அவன் தான் அவளது குழந்தைக்கு தகப்பன் என்றால், அவள் ஏன் அமைதி காக்க வேண்டும்? எதற்காக தன் அடையாளத்தை மறைத்து வைத்திருக்கிறாள்? தன் அடையாளத்தை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் என்ன? அவள் ஆரத்தியாக இருந்திருந்தால், தன் வாழ்நாளின் மிகப்பெரிய உண்மையை அவனிடமிருந்து அவள் மறைத்திருப்பாளா? அவனது தலை மயிரை பிடித்து அவனை அடித்திருக்க மாட்டாளா? அவன் மீது, அவளுக்கு எவ்வளவு கோபம் இருந்தால் தான் என்ன, அவள் தாய்மை அடைந்து விட்ட விஷயத்தை அவனிடம் சொல்லாமல் தடுக்கும் அளவிற்கு அவளது கோபத்திற்கு சக்தி இருக்கிறதா? அந்த விஷயத்தை அவனுடன் சேர்ந்து அவள் கொண்டாடி இருப்பாளே...! உண்மையிலேயே இவள் ஆர்த்தி தானா? அப்படி இருக்க முடியுமா?
சத்தமின்றி மெல்ல கதவை திறந்து, மேற்கொண்டு அவள் பேசுவதை கேட்கலானான்.
"புனிதா, சொல்றதை கேளு. அம்மா அடுத்த வாரம் வந்துடுவேன்."
"....."
"பிங்கி ப்ராமிஸ்"
புனிதாவா? அப்படி என்றால் பெண் குழந்தை. ஆரத்தியின் குழந்தையின் பெயர் புனிதாவா? அது எப்படி இருக்க முடியும்? அப்படி இருக்க வாய்ப்பே இல்லையே...! ஏதோ மிகவும் தவறாய் தெரிகிறது. அவனுக்கு ஆரத்தி/ சினேகா மீது இருந்த சந்தேகம் வலுத்தது. சத்தம் இல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
யாழ் இல்லம்
அனைவரும் சாப்பிட அமர்ந்தார்கள். அங்கு சினேகா இருக்கவில்லை. மதிவதனியின் பக்கத்தில் அமர்ந்தான் யாழினியன். அவனிடத்தில் ஏதோ ஒரு மாற்றத்தை அனைவரும் உணர்ந்தார்கள்.
"அக்கா, நான் நாளைக்கு பெங்களூர் போறேன்" என்றான் யாழினியன்.
"பெங்களூரா?"
"ஆமாம், டாக்டர்ஸ் கான்ஃபரன்ஸ்க்கு போறேன்"
"ஆனா, மகா தானே போக போறதா சொன்னான்...?" என்றான் கதிரவன்.
"இல்ல, நான் பிளானை மாத்திட்டேன் மகா இங்க தான் இருப்பான்"
"அப்போ மமதியோட ஆபரேஷன்?" என்றாள் மதிவதனி.
"ஆபரேஷனுக்கு தேவையான எல்லா ஏற்பாட்டையும் நான் ஏற்கனவே செஞ்சிட்டேன் கா. அதான் இவங்க மூணு பேரும் இருக்காங்களே... மிச்ச வேலையை அவங்க பாத்துக்குவாங்க."
"நீ போக வேண்டியது அவசியமா?"
"அவசியம் இல்லன்னா நான் போவேனா?"
இல்லை என்பது போல் தலையசைத்தாள் மதிவதனி. ஒரு துண்டினால் தனது கையை துடைத்துக் கொண்டு எழுந்த யாழினியன், தனது அறையை நோக்கி நடந்தான். அனைவரும் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். எதற்காக யாழினியன் தனது திட்டத்தை மாற்றிக் கொண்டான், அதுவும் ஆர்த்தி இங்கிருக்கும் போது?
யாழினியன் பெங்களூரு செல்வது குறித்து, நிலவனிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது மகேந்திரனுக்கு. அதை பார்த்த மகேந்திரன் குழம்பினான். தனக்கு பதிலாக யாழினியன் பெங்களூர் போக இருப்பதை பற்றி அவனிடம் ஒன்றுமே கூறவில்லை யாழினியன். யாழினியனுக்கு மகேந்திரன் ஃபோன் செய்வதற்கு முன், யாழினியனே அவனுக்கு ஃபோன் செய்தான்.
"என்ன ஆச்சு, யாழ்? எதுக்காக இப்படி விசித்திரமா நடந்துக்கிற?"
"அப்படி நான் என்ன செஞ்சேன்? பெங்களூர்ல நடக்கிற கான்ஃபரன்ஸ்க்கு போக போறேன்... அதுல என்ன தப்பு இருக்கு?"
"அதுல எந்த தப்பும் இல்ல. ஆனா அதைப் பத்தி நீ என்கிட்ட எதுவும் சொல்லலையே..."
"அதை சொல்லத் தான் இப்ப நான் உன்னை கூப்பிட்டேன்"
"உன் மனசுல என்ன இருக்கு, யாழ்?"
"ஆர்த்தி... "
"உன்னோட பிளான் மாறுனதுக்கும், ஆரத்திக்கும் என்ன சம்பந்தம்?"
"எந்த சம்பந்தமும் இல்ல"
"நிஜமாவே நீ பெங்களூர் போக போறியா?"
"ஆமாம்"
"இன்னைக்கோ, நாளைக்கோ நம்ம எதிர்பார்த்துகிட்டு இருக்கிற இதயம் மமதிக்கு கிடைச்சிடும். நீ இங்க இருக்க போறது இல்லயா?"
"எல்லாத்தையும் நீ பார்த்துக்குவேன்னு எனக்கு தெரியும்"
"யாழ்..."
"மமதியை பாத்துக்கோ"
"ஒரு நிமிஷம், யாழ்...."
"சொல்லு"
"ஐ அம் சாரி. நான் உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேன்"
அதைக் கேட்டு மென்று முழுங்கிய யாழினியன்,
"குட் நைட்" என்று அழைப்பை துண்டித்தான்.
பெருமூச்சு விட்டான் மகேந்திரன். அவனுக்கு நன்றாகவே தெரியும், அவன் யாழினியனை ரொம்பவே காயப்படுத்தி விட்டான் என்று. ஆனால் அவனிடமிருந்து உண்மையை பெறத்தான் அவன் அப்படி செய்தானே ஒழிய, உண்மையிலேயே அவனை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு சிறிதும் இல்லை. ஆனால் இப்பொழுது யாழினியன் என்ன செய்யப் போகிறான் என்று அவனுக்கு புரியவில்லை.
தன் கட்டிலில் படுத்து கண்ணை மூடினான் யாழினியன். ஆர்த்தியின் பழைய நினைவுகளால் அவனால் தூங்க முடியவில்லை. அவள் அவனை விட்டு சென்ற நாளிலிருந்து அவன் அந்த நினைவுகளுடன் தானே வாழ்ந்து கொண்டிருக்கிறான்...! மீண்டும் அந்த நினைவுகளில் மூழ்கினான்.
பழைய நினைவுகள்
மதிவதனி, மதுசூதனனின் திருமண நாளுக்கு அடுத்த நாள்.
சாப்பிட்டு முடித்து தனது அறைக்கு வந்த யாழினியன் விளக்கை அணைத்தான். தனக்கு பின்னால் யாரோ நிற்பது போன்ற பிரம்மை அவனுக்கு ஏற்பட்டது. அவன் குரல் எழுப்பும் முன், மீண்டும் அந்த அறையின் விளக்கு எரிந்தது. அவன் சற்றும் எதிர்பாராத வண்ணம் ஆர்த்தியின் குரலை கேட்டான்.
"யாழ்..." என்றாள் மெல்லிய குரலில் ஆர்த்தி.
திடுக்கிட்டு அவன் திரும்ப, புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள் ஆர்த்தி.
"ஏய் லூசு... நீ இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?" என்றான் நம்ப முடியாமல்.
"ஹலோ மிஸ்டர் இது என்னோட மாமியார் வீடு..." என்று அவன் மூக்கை பிடித்து கிள்ளினாள்.
"கதவை எல்லாம் சாத்திட்டாங்களே நீ எப்படி உள்ள வந்த?"
"என்னோட வல, இட, கரங்கள் இந்த வீட்ல இருக்கு..."
"இந்தக் கதிரவனையும் நிலவனையும் என்ன செய்றது..." என்று முணுமுணுத்தான்.
"நீ என்னை உங்க வீட்டுக்குள்ள தூக்கிக்கிட்டு வந்த இல்ல, அப்படின்னா நான் யாரு?"
"அது தற்செயலா நடந்தது... நீ கீழ விழப்போன..."
"ஆனா, நான் கீழ விழல. ஆனாலும் நீ தூக்கிட்டு போன..."
"இப்போ எதுக்காக இங்க வந்த?"
பேச்சை மாற்றினான் யாழினியன். அவனிடம் இரண்டு சினிமா டிக்கெட்டுகளை நீட்டினாள் ஆரத்தி.
"என்ன இது?"
"சினிமா டிக்கெட்"
"அதுக்கு?"
"நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் சினிமாவுக்கு போறோம்"
"நோ வே... நான் சினிமாவுக்கு வரல. எனக்கு நிறைய வேலை இருக்கு"
"நீயும் உன் வேலையும்... எப்படியும் நீ ஃபுல் மார்க் எடுக்க போறதில்ல"
"உன் கூட இப்படி ஊரை சுத்திக்கிட்டு இருந்தா நான் நிச்சயம் ஃபெயில் தான் ஆவேன்... நீ கெளம்பு"
"முடியாது"
"யாராவது உன்னை இங்க பார்த்தா, நம்மளை தப்பா நினைப்பாங்க"
"வெளியில யாரும் இல்ல. *மமதி* கூட அவங்க ரூமுக்கு போய்ட்டாங்க"
"மமதியா? அது யாரு?"
"மதுசூதனன், மதிவதனியோட ஷார்ட் ஃபார்ம். மதுசூதனன்ல இருந்து *ம* மதிவதனில இருந்து *மதி* இரண்டையும் எடுத்து மமதி. *தியா* மாதிரி. ஆர்த்தியோட கடைசி எழுத்து *தி* யாழினியனோட ஃபர்ஸ்ட் எழுத்து *யா*... எப்படி?" என்றாள் பெருமையாக ஏதோ பெரிதாய் கண்டுபிடித்து விட்டவளை போல.
தன் தலையை இடவலமாய் அசைத்து சிரித்தான் யாழினியன்.
"நம்ம குழந்தைக்கு தியானு பேர் வச்சா சூப்பரா இருக்கும் இல்ல?" என்றாள் ஆர்வமாக.
"தியாவா?"
"ஆமாம் நமக்கு பொண்ணு பொறந்தா தியானு தான் பேர் வைக்கணும்"
"அது நடக்கும் போது அதை பத்தி யோசிக்கலாம்"
"ஆங்... ஏன் நடக்காது? நிச்சயமா நடக்கும். தியா தான் நம்ம பொண்ணு"
"தாயே, தியாவோட அம்மா... தயவுசெய்து இப்போ கிளம்பு "
"தியாவோட அம்மா... ஆஹா... கேக்கவே எவ்வளவு இனிமையா இருக்கு... நாளைக்கு உனக்காக நான் தியேட்டர்ல காத்துகிட்டு இருப்பேன்"
"நான் வரமாட்டேன்"
"நீ வருவ..."
"நீ இப்போ இங்கிருந்து எப்படி போவ?"
"எப்படியும் நீ என்னை கூட்டிகிட்டு போய் விடமாட்ட... நான் என்னோட வல இடக்கை கூட போய்க்கிறேன்... நீ படுத்து தூங்கு"
சத்தம் செய்யாமல் அவள் அங்கிருந்து பூனை போல் நழுவி சென்றதைப் பார்த்து புன்னகைத்தான் யாழினியன்.
இன்று...
*புனிதா* என்ற பெயரை பற்றி யோசித்து கொண்டு, கட்டிலில் இருந்து எழுந்த அமர்ந்தான் யாழினியன். தங்கள் குழந்தைக்கு தியா என்று தான் பெயரிட வேண்டும் என்று அவள் விரும்பினாளே. பிறகு ஏன் அவள் புனிதா என்று பெயரிட்டாள்? அவன் மீது அவ்வளவு கோபமாகவா இருக்கிறாள்?
மறுநாள்
பெங்களூர் செல்ல தயாராகிக் கொண்டிருந்தான் யாழினியன். அன்று சினேகா உட்பட யாரையுமே சந்திக்கவில்லை அவன். அவனுடைய அறைக்குள் அவசரமாய் நுழைந்தான் மகேந்திரன். தனது துணிமணிகளைப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்த யாழினியன், அதை நிறுத்திவிட்டு மகேந்திரனை ஏறிட்டான்.
"கிளம்பிட்டியா?" என்றான் மகேந்திரன்.
"கிளம்பிட்டேன்" பெட்டியை மூடி விட்டு நிமிர்ந்தான் யாழினியன்.
"நாளைக்கு மமதியோட ஆபரேஷன் ஃபிக்ஸ் ஆகியிருக்கு"
"தெரியும்"
"உன்னை எது டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு இருக்குன்னு எனக்கு புரியல, யாழ்"
"எல்லாம் சீக்கிரமே சரியாயிடும், மகா" என்று அழகிய புன்னகையை உதிர்த்தான்.
"நானும் உன் கூட ஏர்போர்ட்டுக்கு வரேன்"
"இது என்ன புது பழக்கம்?" என்றான் ஆச்சரியமாய்.
"சும்மா தான்..."
"சின்னப்பிள்ளை மாதிரி நடந்துக்காதே" என்றான் தனது கோட்டை அணிந்தபடி.
தனது பெட்டியை எடுத்துக்கொண்டு, தன் அறையை விட்டு வெளியே வந்தான். மதிவதனியை நோக்கி தன் கண்களால் ஏதோ ஜாடை காட்டினான்.
"ஆல் தி பெஸ்ட்... கடவுள் உனக்கு துணையா இருக்கட்டும்" என்றாள் மதிவதனி.
"தேங்க்ஸ் கா" என்று அவளை சம்பிரதாயமாய் அணைத்துக் கொண்டா யாழினியன்,
"மமதியை பாத்துக்கோங்க. ஐ அம் சாரி, மமதிக்கு ஆபரேஷன் நடக்கும் போது என்னால உங்க கூட இருக்க முடியல" என்றான்.
"நீ அதைப் பத்தி கவலைப்படாதே. அதான் எங்க கூட பெஸ்ட் கார்டியாலஜிஸ்ட் சினேகா இருக்காங்களே..."
ஆம் என்று தலைசைத்தான் யாழினியன். அனைவரிடத்திலிருந்தும் விடை பெற்றுக்கொண்டு விமான நிலையம் நோக்கி புறப்பட்டு சென்றான்.
அவனுடைய கார் ஓட்டுநர், அவனை உள்ளூர் விமான நிலையத்தில் இறக்கிவிட்டு கிளம்பினார். உள்ளூர் விமான அரங்கில் இருந்து, சர்வதேச விமான நிலையம் நோக்கி செல்லும் உட்பாதையில் நடக்க தொடங்கினான். அவன் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த அதே நேரம், லண்டன் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய இருக்கும் பயணிகளுக்கான அழைப்பு அவன் காதில் விழுந்தது. அனைத்து வழக்கமான சம்பிரதாயங்களையும் முடித்துக் கொண்டு, லண்டன் செல்லும் விமானத்தில் சென்று அமர்தான் யாழினியன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro