Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

17 இது விளையாட்டா?

17 இது விளையாட்டா?

மறுநாள்

ஆர்த்தியின் ஆர்வத்திற்கு அளவே இல்லை. என்றும் இல்லாத புத்துணர்ச்சியுடன் கல்லூரிக்கு தயாரானாள். அவர்களது பிரிவு உபசார விழாவில், அவளது அனைத்து நண்பர்களும் அழுது கொண்டிருக்கும் அந்த வேளையில், அவள் மட்டும் சந்தோஷமாய் இருக்க போகிறாள். அவளுடைய நீண்ட கால காத்திருப்பு இன்று முடிவுக்கு வரப் போகிறது. யாழினியனிடமிருந்து *ஐ லவ் யூ* என்ற அந்த மூன்று மந்திர வார்த்தைகளை அவள் இன்று கேட்கப் போகிறாள். அனைவருக்கும் முன்பாக, சீக்கிரமே கல்லூரிக்கு வந்துவிட்டாள் ஆர்த்தி. யாழினியன் அவளுக்காக அங்கு காத்திருப்பான் என்று எண்ணிக் கொண்டு வந்தாள் ஆர்த்தி. ஆனால் அவன் அங்கு இருக்கவில்லை. அவர்களது நண்பர்கள், ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்தார்கள். அவர்களது அனைத்து நண்பர்களும் வந்த பிறகு கூட யாழினியன் வரவில்லை. அவனது அந்த அலட்சியப் போக்கு அவளுக்கு பிடிக்கவில்லை. கல்லூரி வாசலையே மீண்டும் மீண்டும் பார்த்தபடி இருந்தாள் அவள். பிரிவு உபசார விழா சற்று நேரத்தில் துவங்க இருந்தது. மாணவர்கள் அனைவரும் மேடையின் முன் கூட ஆரம்பித்தார்கள். அப்பொழுது தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரியின் உள்ளே நுழைந்தான் யாழினியன். காலதாமதமாய் வந்ததற்காக அவன் மீது கோபமாய் இருந்தாலும் கூட, அவனை பார்த்தவுடன், ஆர்த்தியின் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம் படர்ந்தது. அவனை நோக்கி ஆசையுடன் ஓடி சென்றாள். இருசக்கர வாகனத்தை நிறுத்திய அவன், ஆர்த்தி தன்னை நோக்கி ஓடி வருவதை பார்த்து புன்னகை புரிந்தான். அவள் ஏன் தன்னிடம் வருகிறாள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அவன் மனதில் இருப்பதை, இன்று கூறுகிறேன் என்று கூறியிருக்கிறானே...! நிச்சயம் அவன் அதை செய்யத்தான் போகிறான். ஆனால் அதற்கு முன், அவளுடன் சற்று விளையாட நினைத்தான்... வழக்கம் போலவே...!

அவளைப் பார்த்து தன் கைகளைக் கட்டிக் கொண்டு புன்னகையுடன் நின்றான் யாழினியன்.

"எப்படி இருக்க?" என்று அவன் கேட்டது வழக்கமான கேள்வி அல்ல. முதல் நாள் தங்களுக்கு இடையில் நிகழ்ந்த கூடலை அடிப்படையாகக் கொண்டது அது.

அதை புரிந்து கொண்ட ஆர்த்தி, நன்றாக இருக்கிறேன் என்பது போல் தலையசைத்தாள்.

"நீ எதுக்காக இங்க வந்தேன்னு எனக்கு தெரியும். நீ கேட்க நினைக்கிறதை நான் சொல்லுவேன்னு நீ நினைக்கிறியா?" என்றான்.

அதைக் கேட்டு, முகம் சுருக்கினாள் ஆர்த்தி. தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டான் யாழினியன்.

"நீ எவ்வளவு ஆர்வமா இருக்கேன்னு எனக்கு தெரியும். ஆனா நீ எதிர்பார்க்குறதை நான் சொல்ல போறது இல்ல"

மென்று முழுங்கினாள் ஆர்த்தி. அவள் எவ்வளவு முயன்ற போதும், அவள் கண்களை, கலங்காமல் தடுக்க முடியவில்லை அவளால். அவன் என்ன பேசுகிறான்? இதற்காகவா அவள் காத்திருந்தாள்?

"ஆமாம் ஆர்த்தி... நான் அந்த மூணு வார்த்தையை சொல்ல போறது இல்ல... நமக்குள்ள இவ்வளவு நடந்ததுக்கு பிறகு, நிச்சயம் இல்ல..."

அவளுக்கு எதிர் திசையில் திரும்பி நின்றான். ஆர்த்தியின் கண்கள் கட்டுப்பாடு இல்லாமல் பொழிந்தது. அவன் கூறப்போவது இல்லையா? இப்பொழுதும் கூடவா? ஏன்? ஏன் கூறப்போவதில்லை? கூறும் எண்ணம் இல்லையா? அல்லது, தங்களுக்கிடையில் எல்லாம் நடந்த பின் கூறத் தேவையில்லை என்று நினைக்கிறானா? பின்னோக்கி நகர துவங்கினாள் ஆர்த்தி. இதற்கு மேல் அவன் கூறும் எதையும் கேட்க அவள் தயாராக இல்லை. எதையும் கேட்கும் சக்தி அவளுக்கு இல்லை. அங்கிருந்து ஓடிப் போனாள்.

பிரிவு உபசார விழாவில் யாரும் அவளை பார்க்கவில்லை. அதில் அவள் கலந்து கொள்ளவே இல்லை. யாழினியன் வார்த்தைகளைக் கேட்ட பிறகு, அங்கு இருக்க அவளுக்கு விருப்பமில்லை. அவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அதற்குப் பிறகு அவனைப் பார்க்கவே அவள் விரும்பவில்லை. அவன் ஒரு ஏமாற்றுக்காரன்... அவளது காதலுக்கு தகுதியில்லாதவன். நேரே மகளிர் விடுதிக்குச் சென்ற அவள், தனது உடமைகளை தனது பைகளில் அடுக்கத் துவங்கினாள். என்ன செய்கிறாள், எங்கே செல்ல போகிறாள் என்பது அவளுக்கு புரியவில்லை. அப்பொழுது, அங்கிருந்த ஒரு பத்திரிக்கையின் மீது அவள் பார்வை சென்றது.

யாரும் எளிதில் யூகிக்க முடியாத விதத்தில், திண்டிவனம் செல்லும் பேருந்து நிறுத்தம் நோக்கி பயண பட்டாள். அவளது சிறுவயது தோழிக்கு திருமணம். முந்தைய நாள் தான் அந்த பத்திரிகை அவள் கைக்கு கிடைத்தது. யாரையும் பார்க்க விரும்பாத அவள், திண்டிவனம் புறப்பட்டுச் சென்றாள்.

........

ஆர்த்திக்கு எதிர் திசையில் திரும்பி நின்ற யாழினியன், தனது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த வைர மோதிரத்தை வெளியில் எடுத்தான். மீண்டும் அவளை நோக்கி திரும்பி, முழங்காலிட்டு, வைர மோதிரத்தை நீட்டியபடி,

"வில் யு மேரி மீ?" என்ற அவன், அங்கு ஆர்த்தி இல்லாததை பார்த்து முகம் சுருக்கினான். அவள் எங்கு போனாள்? அவளை இங்குமங்கும் தேடினான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவள் இல்லை. ஒருவேளைக்கு தனது நண்பர்களை தேடிச் சென்றிருப்பாளோ...? விருந்து உபசார விழா நடக்கும் இடத்திற்கு அவளைத் தேடிக் கொண்டு வந்தான்.

"யாழ், ஆர்த்தி எங்க?" என்றான் மகேந்திரன்.

"அவ இங்க வரலையா?" அவன் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.

"உன்னை பார்க்க தானே வந்தா?"

அதைக் கேட்டு குழம்பினான் யாழினியன்.

"நியாயப்படி பார்த்தா, அவ இன்னைக்கு உன் கூட தானே இருக்கணும்? இன்னைக்கு தானே நீ அவகிட்ட உன்னோட லவ்வை கன்ஃபஸ் பண்ண போறேன்னு சொன்ன?"

அதற்கு மேல் அங்கு நிற்காமல் கூட்டத்தில் ஆர்த்தியை தேட துவங்கினான் யாழினியன். அவனை அழ வைப்பதற்காக, அந்த கூட்டத்தில் தான் அவள் ஒளிந்து கொண்டிருக்க வேண்டும். அரை மணி நேர தேடலுக்குப் பிறகும் அவள் கிடைக்காமல் போகவே, மேடைக்கு வந்த யாழினியன், ஒலிபெருக்கியின் மூலம் அவளை அழைத்தான். ஆனால் அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அது யாழினியனுக்கு நடுக்கத்தை தந்தது.

ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை அவர்களது நண்பர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

"என்ன ஆச்சி, யாழ்? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்க தானே இருந்தா?" என்றான் மகேந்திரன்.

"நான் அவளை சர்ப்ரைஸ் பண்ணலாம்னு நினைச்சேன்..." என்று முடிக்காமல் நிறுத்தி தன் தலையில் அடித்துக் கொண்டான் யாழினியன்.

"அதனால?"

"இரு..."

பெண்கள் விடுதியை நோக்கி ஓடினான் யாழினியன். அங்கு நின்றிருந்த காவலாளி அவனை தடுத்தார்.

"நீ உள்ளே போக கூடாது" என்றார்.

"நான் ஆர்த்தியை பார்க்கணும்"

"அந்தப் பொண்ணு கிளம்பி போயிடுச்சே..."

"போயிட்டாளா? எங்க? காலேஜ்க்கா?"

"இல்ல, காலேஜ் ஹாஸ்டல் ரூமை காலி பண்ணிட்டு போயிடுச்சு."

"என்ன்னனது...? ரூமை காலி பண்ணிட்டாளா? நெஜமா தான் சொல்றீங்களா?" என்றான் அதிர்ச்சியாய்.

"ஆமாம். பெட்டி படுக்கையெல்லாம் எடுத்துக்கிட்டு போயிடுச்சி"

பதட்டத்துடன் தனது கைபேசியை எடுத்து காலேஜ் ஹாஸ்டல் வார்டனுக்கு ஃபோன் செய்து, கவலாளி சொன்ன அந்த செய்தி உறுதியானது தானா என்பதை தெரிந்து கொள்ள முனைந்தான். அவர் அது உண்மை தான் என்பதை உறுதிப்படுத்த, தன்னைத்தானே சபித்துக் கொண்டான் யாழினியன்.

பெண்கள் விடுதியின் இரும்பு கதவை, கோபத்தில் காலால் எட்டி உதைத்தான் யாழினியன், எதார்த்தம் அவன் தலையை சம்மட்டியால் அடித்ததால். அவன் விளையாட்டாய் கூறியதை உண்மையிலேயே அவள் பெரிதாக எடுத்துக்கொண்டு விட்டாளா? அவன் எத்தனையோ முறை அவளிடம் அப்படித் தானே விளையாடி இருக்கிறான்? வழக்கமாய் செய்வது போல், அவன் தலை மயிரை பிய்த்து, அவன் வயிற்றில் நான்கு குத்து குத்தி இருக்கலாமே...! பல வருடங்கள் காத்திருந்தவள், சில வினாடிகள் காத்திருந்திருக்கக் கூடாதா?

என்ன காரியம் செய்து தொலைத்து விட்டான் அவன்...! அவளிடம் நேரடியாக விஷயத்தை கூறிவிட்டு பின் அவளிடம் விளையாடி இருக்கக் கூடாதா? எங்கு சென்றிருப்பாள்? அவள் எங்கு செல்லக்கூடும்? அவளது அப்பாவிடம் சென்று இருப்பாளோ? ஒருவேளை அவள் ப்ரேசிலுக்கு செல்வதாக இருந்தால், அவளது அப்பாவுக்கு ஃபோன் செய்து, தனது வருகையை முன்கூட்டியே தெரிவித்து இருப்பாள். தனது கை கடிகாரத்தை பார்த்தான் அவன். மணி, பகல் 11:30. அப்படி என்றால், இப்போது பிரேசிலில் நள்ளிரவு இரண்டரை மணி. இந்தியாவிற்கும் பிரேசிலுக்கும் எட்டரை மணி நேர வித்தியாசம். அங்கு நள்ளிரவு என்பதால், இப்பொழுது இந்தியன் எம்பஸியில் யாரும் இருக்க மாட்டார்கள். அவனுக்கு வெறுப்பாய் இருந்தது.

அவனது அனைத்து நண்பர்களும் தங்களால் இயன்ற வழிகளில் ஆர்த்தியின் இருப்பிடத்தை அறிய முயன்று கொண்டிருந்தார்கள். மைதிலியும், வானதியும் ஓயாமல் அழுது கொண்டிருக்க, மகேந்திரன், நிலவன், மற்றும் கதிரவன் மூவரும் கோபத்தின் உச்சியில் இருந்தார்கள்.

ஏதும் செய்ய இயலாதவனாய், கண்ணீர் சிந்தியபடி அமர்ந்து இருந்தான் யாழினியன். இந்த நாள், தன் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக இருக்க போகிறது என்று எண்ணியிருந்தான் அவன். அவன் நினைத்தது போல், அது மறக்க முடியாத நாளாக தான் ஆகிவிட்டது... அவன் நினைத்தது போல் அல்லாமல், துரதிஷ்டவசமாய் வேறு விதத்தில்...! ஆர்த்தி அவனைப் பற்றி என்ன நினைத்தாளோ தெரியவில்லை... என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாளோ தெரியவில்லை... வேறு என்னென்னவெல்லாம் நினைக்கப் போகிறாளோ தெரியவில்லை... அவனுக்கு வேண்டியதை பெற்றுக் கொண்டு, அவன் அவளை ஏமாற்றி விட்டதாய் அவள் நினைக்கலாம். இல்லை, ஆர்த்தி அப்படி நினைக்க மாட்டாள். அவளுக்கு அவனைப் பற்றி நன்றாக தெரியும். அவள் கோபத்தில் இங்கிருந்து சென்று இருக்கிறாள். நிச்சயம் அவனிடம் திரும்பி வருவாள். அவள் அவன் மீது கொண்ட காதல் அளப்பரியது. அவனை விட்டு அவளால் இருக்க முடியாது.

ஐந்து மணி வரை காத்திருந்த யாழினியன், பிரேசில் எம்பஸிக்கு ஃபோன் செய்தான். அதிர்ஷ்டவசமாய் வெங்கட்ராகவன் அலுவலகத்தில் இருந்தார்.

"அங்கிள், நான் யாழினியன் பேசுறேன்"

"எப்படி இருக்க, யாழ்? ஆர்த்தி எப்படி இருக்கா? எங்க அவ? இன்னைக்கு ராத்திரி இந்தியாவில் இருந்து கிளம்பறேன்னு சொல்லி இருந்தாளே... கிளம்புறாளா, இல்லனா அவளோட பிளானை மாத்திட்டாளா?"

அவர் பேசியதை கேட்ட யாழினியனுக்கு திக்கென்றது. அப்படி என்றால், ஆர்த்தியின் இருப்பிடம் வெங்கட்ராகவனுக்கும் தெரியாது. அவருக்கு என்ன பதில் கூறுவது என்று புரியாததால், அழைப்பை துண்டித்த யாழினியன், தனது கைபேசியை இறுக பற்றினான்.

"எங்க இருக்க, ஆரத்தி? ஐ அம் சாரி. உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க தான் நான் நினைச்சேன்... ப்ளீஸ் திரும்பி வந்துடு" என்ற அவன் கண்ணில் இருந்து கண்ணீர் அருவி என பொழிந்தது.

இல்லை... ஆர்த்தி திரும்ப வரவில்லை. அதன் பிறகு அவளை யாருமே பார்க்கவில்லை. அவளிடமிருந்து யாருக்கும் ஒரு குறுஞ்செய்தி கூட வரவில்லை. அவள் வெகு தூரம் சென்று விட்டாள்... அவர்களை விட்டு... யாழினியனை விட்டு... ஒரேடியாக...

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro