Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🥔🌽🌶🥒🫑🍆 பாகம் 5

1. புடலையன் (நம்பி)

2. வாழை நாச்சி (நங்கை)

3. வெண்டையன் (நண்பன்)

4. கத்தரி அரசி (தோழி)

5. பச்சையன் (தம்பி)

6. வெங்கைமணி (தங்கை)

7. உருளையன் (அப்பா)

8. பீர்க்கையாள் (அம்மா)

கோனார் வீட்டிலிருந்து கிளம்பிய எட்டு பேருக்கும் நம்முடன் வந்த மற்ற இரண்டு பேர் இப்போது இல்லையே என்ற வருத்தம் இருந்தது. யார் யாரென்றே தெரியாமல் ஒரே அறிமுகத்தில் ஒரு கூட்டமாய் ஆகியிருந்தவர்கள் இப்போது சற்று மனதளவில் சுணங்கிப் போயிருந்தனர். தக்காளி நம்பியும், பூசணியாளும் மற்றவரைப் போல்
உடலளவில் வலுவான நிலையில் இருந்திருந்தால், அவர்களை இப்படி விட்டு விட்டு வந்திருப்பாமா என்ற கேள்வியை அவர்களுக்குள்ளாகவே கேட்டுக் கொண்டு அமைதி காத்தனர்.

புடலையன் கடைத்தெருவை நோக்கி நடந்தபடி இருந்தான். எட்டு பேரில் எவரையும் தேடிக் கொண்டே இருக்கக்கூடாதென இரண்டு, இரண்டு பேர் சேர்ந்து ஜோடியாக நான்கு வரிசையில் நடந்து கொண்டிருந்தனர்.

தன்னுடைய கரத்தைப் பற்றியிருந்த வாழை நாச்சியிடம், "ஏய்.... நாச்சி! ஏம்புள்ள இவ்ளோ அமைதியா வர்றவ? நடக்குற களைப்பு தெரியாம இருக்க ஏதாவது பேசிட்டே வாயேன்! புடவைக்கடை, பூக்கடை, வளையல் கடை, பலசரக்கு கடை என எத்தனை கடைங்க இருக்கு பார்த்தியா? கடை பூராவுமே மனுஷக்கூட்டம் தான்..... எனக்கு இப்டி கூட்டத்தை பார்க்குறது ரொம்ப பிடிச்சிருக்கு! உனக்கு இந்த கடைவீதியில என்ன பிடிச்சிருக்கு?" என்று அவளுடைய அபிப்ராயத்தை கேட்டான் புடலையன்.

"எனக்கு இந்தக் கூட்டமும், கூச்சலும் பிடிக்கவேயில்லை; அதிலும் உம்முடன் சேர்ந்து நடப்பது சுத்தமாக பிடிக்கவில்லை..... என்ன மனிதரய்யா நீர்? கூட இருந்த இரண்டு பெரியவர்களை விட்டு விட்டு நாம் மட்டுமாய் சுற்றிக் கொண்டிருக்கிறோம் என்ற குற்ற உணர்வு கொஞ்சங்கூட இல்லாமல் பூவைப் பார்க்கிறாயா? புடவையை பார்க்கிறாயா என்று கேட்டுக் கொண்டு இருக்கிறீர்....? இந்த கடைத்தெருவிலேயே ஏதாவது ஒரு காய்கறி அங்காடியில் நான் தங்கி விடப் போகிறேன்! இனி உம்முடன் கூட வரும் இந்தப் பயணம் எனக்கு வேண்டாம்!" என்று சொன்னவளின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்ட புடலையன்,

"இந்தாரு நாச்சி! நான் யாரையும் கட்டாயப்படுத்தி எந்த முடிவையும் எடுக்க வைக்கல; அதுனால அவங்களோட சொந்த முடிவு பத்தியும் எனக்கு எந்த குற்ற உணர்வும் இல்ல; நாங்க எல்லாம் மடப்பள்ளிக்குன்னு கொண்டு சேர்க்கப்பட்ட நம்பிங்க; ஆனா அங்கயே இருந்துருக்காம இப்டி ஸ்ரீரங்க வீதிகள்ல சுத்திட்டு இருக்கோம்! எங்க போய் உன் விதி முடியணும்ங்கறது உன்னோட விருப்பம்; அது வரைக்கும் உன்னை பாதுகாக்க வேண்டியது என்னோட கடமை! பின்னால வர்ற நம்ம நண்பர்களுக்கு இடைஞ்சலா இல்லாம கொஞ்சம் சீக்கிரமா நடந்து வா!" என்று சொன்ன புடலையனிடம் ஏதும் பேசாமல் அமைதியாக அவனுடன் இணைந்து நடந்து கொண்டிருந்தாள் வாழைநாச்சி.

"ஆஆ........ என் தலையில் நெருப்பு பட்டு விட்டது; ஷ்ஷ்....... மிகவும் எரிகிறது; என்னைக் காப்பாற்றுங்கள் வெண்டயனே.....!" என்று கத்தரியரசி கண்களை மூடிக் கொண்டு அனற்றிக் கொண்டிருக்க வெண்டையன் முணங்கலுடன்,

"ஊர்ல இருக்குற எல்லாப் பிரச்சனையும் இவளுக்குத்தான்யா முதல்ல வருது.....!" என்று சலித்துக் கொண்டு அவளை தூக்கி அங்குமிங்கும் புரட்டி அவளது உடம்பில் எங்கெங்கே காயம் பட்டிருக்கிறது என்று ஆராய்ந்தான்.

"கத்தரியரசிக்கு என்ன ஆச்சு?" என்று அனைவரும் கேட்டு பதட்டத்துடன் அவளை சுற்றி வளைத்துக் கொண்டு நிற்க பச்சையன் புடலையனிடம் அவனை பக்கவாட்டில் பார்க்கும்படியாய் சைகை காட்டினான்.

பச்சையன் காட்டிய இடத்தைப் புடலையன் பார்க்க அங்கே ஒரு தள்ளுவண்டியில் சோளத்தை நெருப்பில் வாட்டி உப்பு மிளகு தடவி மக்களுக்கு ஒரு வியாபாரி விற்றுக் கொண்டிருந்தார். அவரது வண்டி சிறிது நகர்ந்து விட்டதில் சில கங்குகள் தெறித்து விழுந்திருந்தன. அப்படி விழுந்தவற்றில் ஒன்று கத்தரியரசியின் மீதும் லேசாக பட்டிருந்தது.

"ஐயோ.... இந்த மனிதப் பதர்கள் நம் இனத்தானை தான் நெருப்பில் சுட்டுப் பொசுக்கி தின்று கொண்டிருக்கிறார்களா? நெல்லுக்கு பாய்கிற நீர் வாய்க்கால் வழியோடி சிறிது புல்லுக்கும் பாய்வது போல சோளக்கதிரை சுட்ட நெருப்பு தான் என்னையும் சுட்டதோ வெண்டையா?" என்று கேட்டாள் கத்தரியரசி. அவளது பக்கத்தில் அவள் கைகளைப் பற்றிக் கொண்டு நின்ற வாழை நாச்சி கத்தரியரசியின் தலைப்பகுதியில் இதமாக ஊதி விட்டாள்.

"இந்த மனுஷனுங்க எதைத் தான்மா சாப்பிடாம இருக்காங்க.....? நம்ம, விலங்குகள், பறவைகள்னு கெடைக்குற எல்லாத்தையுமே சகட்டுமேனிக்கு சாப்ட்டுட்டு தான் இருக்குறானுங்க! சரி, ஏதோ நம்மள நல்லா சாப்ட்டு ரெண்டு தலைமுறைக்கு முந்தின மனுஷங்க மாதிரி திடகாத்திரமா இருக்கானுங்களான்னு கேட்டா அதுவுமில்ல! அத்தன சத்து தர்ற நம்பளையும் வயித்துல கொட்டி முழுங்கிட்டு, அப்புறம் அத்தன வியாதிக்கும் தர்ற கலர் கலர் மாத்திரையுமுல்ல நம்மளோட சேர்த்து கலந்து முழுங்கிப்புடுறானுங்க?" என்று பீர்க்கையாள் அங்கலாய்த்துக் கொள்ள அவர்களை அமைதிப்படுத்திய வெண்டையன் கத்தரியரசியிடம்,

"உனக்கு ஒண்ணுமில்லம்மா! லேசான சூடு மட்டுந்தான்; அதுவும் கூட நெருப்பில்ல அரசி; வெறும் கங்கு! அந்த சோளன் போல உன்னையெல்லாம் வாட்டினா உன் தொப்பி மட்டுமில்ல, உடம்புத் தோலே உரிஞ்சு பிய்ச்சுக்கிட்டு போய்டும்! உன் தலைப்பாகத்துல தான் லேசா கங்கு பட்டிருக்கு! அதுக்குள்ள இத்தன கூப்பாடும், கத்தலும் கத்தி அம்புட்டு பேரையும் கூட்டியாச்சு! சரி எல்லாரும் நடங்க! ஏப்பா புடலையா இப்டியே எங்கள பராக்கு பார்க்க வச்சு கூட்டிட்டுப் போயிட்டு இருக்கியே? இப்ப
நாம எங்க தான் போயிட்டு இருக்கோம்?" என்று புடலையனிடம் கேட்டான் வெண்டையன்.

"புடலையண்ணா..... வெங்கைமணிக்கு கால் வலிக்குதுண்ணா! எங்கேயாவது கொஞ்ச நேரம் உக்காந்து நடந்த களைப்பு தீர்த்துட்டு அப்புறமா போகலாமாண்ணா?" என்று கேட்டவளிடம்,

"ஆமா.... வந்துட்டாய்யா புல்லட் கேக்குற குண்டுமணி; அதென்ன வெங்கைமணிக்கு காலு வலிக்குதுன்னு வேற யாரோ மூணாவது ஆள சொல்ற மாதிரியே சொல்றவ? ஏன் எனக்கு கால் வலிக்குதுன்னு சொல்ல மாட்டியோ? எங்கையாவது உக்காரணும்னா சோளன அவிச்ச அடுப்பு இப்ப சும்மா தான் இருக்குதாம்; அங்க போயி ஒக்காரு போ!" என்று அவளிடம் ஒழுங்கு காட்டிய பச்சையனிடம் கோபக்குரலில்,

"டேய் பச்சத்தலையா! உங்கிட்ட நான் பேசுனேனாடா? ஏன்டா எங்கூட எப்போ பார்த்தாலும் சண்டைக்கு வர்ற! வாயை மூடிக் கொண்டு என் வழியிலிருந்து ஒதுங்கி நில்லு; இல்லன்னா நான் என் மேல் தோலை உரிச்சு உன் உடம்பு மேல புரண்டுடுவேன் ஜாக்கிரத!" என்று கத்திய வெங்கைமணியிடம் அசட்டையாக,

"ஏய் போடீ! நீ எல்லாரையும் அழ வைக்குறவன்னா, நானும் அதே குணத்தான் தான்! பக்கத்துல வந்துடாத; உன் முகத்துல என் ஜுஸை தடவி விட்டுடுவேன்..... அப்புறம் நீயும் புடலையண்ணா அன்னிக்கு கத்தின மாதிரி இப்போ குதிச்சு குதிச்சு கத்திட்டு தான் இருக்கணும் பார்த்துக்க! அடடா உன்னால குதிக்கக் கூட முடியாதுல்ல குண்டுமணி?" என்று பச்சையன் வெங்கைமணியிடம் ஏளனப் பேச்சு பேசிக் கொண்டிருக்க வெங்கைமணி பச்சையனை பார்த்து மனதிற்குள் முணங்கிய படி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

வெங்கைமணியையும், பச்சையனையும் ஜோடி மாற்றி உருளையனும், பீர்க்கையாளும் ஆளாளுக்கு ஒருவரை தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டனர். உருளையன் பச்சையன் வெங்கைமணிக்கு நடுவில் புகுந்து அவர்களை சமாதானம் செய்தார்.

"என்ன நீங்க ரெண்டு பேரும் இப்டி குழந்தைங்க மாதிரி சண்டை போட்டுக்குறீங்க! எல்லாரும் இருக்குற வரைக்கும் அமைதியா, சந்தோஷமா இருந்துட்டுப் போவோமே?" என்று இருவரிடம் அவர் பேச பச்சையனும், வெங்கைமணியும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு விலகி சென்றனர்.

உருளையன் புடலையனிடம் "புடலையா! இந்தக் கடைத்தெரு முடியுற இடத்துல ஒரு திடல் இருக்கு; அங்க பொருட்காட்சி போட்டிருக்காங்க போலிருக்கு! அங்க வேணும்னா எல்லாரும் போவமா?" என்று கேட்க அனைவரும் ஆர்வத்துடன் தலையசைத்தனர். புடலையனும் இந்த மாதிரியான இடங்களுக்கு செல்ல வேண்டுமென ஆசைப்பட்டவன் தானே..... அவனும் உருளையனின் யோசனைக்கு கீழ்படிந்து தன்
அனைத்து நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொருட்காட்சிக்குப் புறப்பட்டான்.

மக்கள்.... மக்கள்..... மக்கள்! எங்கு பார்த்தாலும் மனிதக்கூட்டம்! ஸ்ரீரங்கத்தில் இவ்வளவு மக்கட்தொகை இருக்கும் என்று புடலையனுக்கு இன்று தான் தெரியும்; ஆனால் இங்கு வந்த கூட்டம் ஸ்ரீரங்கத்தின் மொத்த மக்கட்தொகையில் ஒரு துளி தான் என்ற விபரம் அவனுக்குத் தெரியாது! நிறைய கூட்டமாக இருந்த நுழைவாயில் அவர்கள் எட்டு பேரும் எளிதாக உள்நுழைய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. கூட்டம் கட்டுக்கடங்காத படி இருந்ததால் பெரிய மனிதர்கள் தனியாக வருவதற்கு வசதியாக பொருட்காட்சி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த விஐபி நுழைவு வழியாக எட்டு பேரும் உள்ளே நுழைந்தனர்.

"எத்தாதண்டி பொருட்காட்சிடா..... புடலையா உன்னால தான்டா நாங்க இதையெல்லாம் எங்க கண்ணார பார்க்கப் போறோம்.....! ஆனா பொதுவழியில போயி அந்தக் கூட்டத்துக்குள்ள சிக்கியிருந்தா அவனுங்க உண்மையாலுமே எங்குடல பிதுக்கியிருப்பானுங்க! எல்லாரும் பத்திரமா இருக்கீங்கல்ல? எங்கடா எப்பயும் நம்மள ஆள் கணக்கு எடுக்குற சித்ரகுப்தன காணும்.....?" என்று வெண்டையன் பீர்க்கையாளின் கைகளைப் பார்க்க அவர்,

"இல்லையே வெண்டையா; பச்சையன் எங்கூட வரலையே?" என்றார் சற்று கலவரமான குரலில்.

"வெங்கைமணி..... பச்சையனை எங்க? உங்கூட தானே வந்தான்? இப்போ காணுமே? மறுபடியும் ரெண்டு பேரும் சண்ட போட்டீங்களா?" என்று புடலையன் அவளிடம் அதட்டல் குரலில் விசாரிக்க அவள் தலைகுனிந்த படி,

"புடலையண்ணா பொருட்காட்சி வாசல்ல ஒருத்தர் கிளி ஜோசியம் பார்த்துட்டு இருந்தாரு! அந்தக் கிளிக்கு சாப்பாடா நான் அவனத் தூக்கிக் குடுத்துட்டேன்!" என்று சொல்ல வெண்டையன் பதட்டமான குரலில்,

"ஆத்தி; இவள லேசா ஒரண்ட இழுத்ததுக்கு ஒருத்தன் சோலியயே முடிச்சுப்புட்டாளே! பாவி மவ..... பச்சையன் கத முடிஞ்சிச்சு! இனிமே நாம ஏழு பேரு தான்!" என்று வெண்டையன் வெங்கைமணியை திட்டி விட்டு ஒரு முடிவும் எடுத்த போது பொருட்காட்சி வாசலில் கிளியின் வாயில் அகப்பட்டுக் கொண்டு உயிரை தன் காம்பில் பிடித்து வைத்திருந்தான் பச்சையன்.

"ஆத்தா.... செல்லாத்தா; மாரியாத்தா.... பெருமாள் கோயில் அண்டாவுல வெந்து போக வேண்டிய உயிரு, இப்ப இப்டி அனாமத்தா இந்த கிளியோட வயித்துக்குள்ள போப்போது போலிருக்கே..... இந்த பச்சையன காப்பாத்த இங்க யாருமே இல்லையா?" என்று உயிர் போகும் வேளையிலும் கத்திக் கொண்டிருந்த பச்சையனை இரு சிறு விரல் பிடித்து தூக்கி தன் கையில் வைத்துக் கொண்டது.

இந்தா..... மிளகாக்கு பதிலா நீ இந்த ஸ்ட்ராபெரிய சாப்பிடு!" என்று ஒரு பழத்தையும் அந்தக் கிளியிடம் கொடுத்து விட்டு பச்சையனை தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உள்ளே நடந்தாள் கனிமொழி.

"யம்மாடி! பாப்பா; யாரும்மா நீயி? என்னைய காப்பாத்துறதுக்கே சாமி மாதிரி கூப்டவுடனே வந்தியே! உனக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.....!" என்று சொன்ன பச்சையனிடம்,

"பச்ச பேபி! நாந்தான் உங்களையெல்லாம் பேச வச்சு, நடக்க வச்சு, சிரிக்க வச்சு, சண்டை போட வச்ச கனிமொழி! நான் ஒண்ணும் பாப்பா இல்ல; நீங்க எல்லாரும் ஒரு மாசம், ரெண்டு மாசத்துல வளர்ந்த பேபீஸ் தான..... அப்போ நான் உங்களுக்கு அக்கா! எங்க என்னைய ஒருவாட்டி அக்கான்னு கூப்டு பார்ப்பம்!" என்று கனிமொழி பச்சையனிடம் கேட்க அவன் வாயை நெளித்துக் கொண்டு "யக்கே...." என்று கிண்டலாக அவளை அழைத்தான்.

"சரி; இப்போ எதுக்கு நாங்க வந்த பொருட்காட்சிக்கு நீயும் வந்தக்கா?" என்று அவளிடம் பச்சையன் கேட்க,

"உன்னைய கிளி வாயில இருந்து காப்பாத்த தான் பேபி! நீங்க பாட்டுக்கு சண்ட போட்டு வெங்கைமணி உன்னைய தூக்கிக் குடுத்துட்டுப் போயிட்டா! ஏற்கனவே தக்காளி நம்பி தாத்தாவும், பூசணியாள் பாட்டியும் போயிட்டாங்க! இப்ப நீயும் கிளி வாய்க்குள்ள போறது எனக்கு பிடிக்கல! அதான்..... நானே கதைக்குள்ள வந்தேன்; அங்க பாரு புடலையனும், உருளையனும் உன்னை தேடிட்டு எப்டி தவிச்சுப் போயி ஓடி வர்றாங்க..... உன்னைய எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு பச்ச பேபி!" என்று சொன்னவள் சற்று தூரம் போய் புடலையன், உருளையனையும் தன்னுடைய கைகளில் எடுத்துக் கொண்டு டிக்கெட் கவுண்ட்டரில் தனக்கு ஒரு டிக்கெட் எடுத்துக் கொண்டு பொருட்காட்சிக்குள் நுழைந்தாள்.

"டேய் பச்சையா; உனக்கு ஒண்ணுமில்லயே; வெங்கைமணி பேச்சை கேட்டு நீ என்ன ஆயிட்டியோன்னு பயந்து நாங்க ஓடி வந்தோம்டா..... இதென்னடா ஒரு பாப்பா நம்மள பார்த்தவொடனே வேகமா தூக்கி கையில எடுத்து வச்சுக்கிச்சு?" என்று கேட்ட புடலையனிடம்,

"ச்ச்ச்சு! வாயில அடி; வாயில அடி! இவங்க ஒண்ணும் பாப்பா இல்ல; இவங்கள பாப்பான்னு கூப்ட்டா இவங்களுக்குப் பிடிக்காது! இவங்க கனிமொழியக்கா! நம்மளோட காட்ஃபாதர்.... ச்சீ காட்மதர்!" என்று சொன்ன பச்சையனை உருளையனும், புடலையனும் ஒரு புரியாத பார்வை பார்த்த படி,

"என்னடா உளறுற?" என்று கேட்டனர்.

கனிமொழி பொருட்காட்சியின் வாசலில் இருந்து உள்ளே நடந்து வருவதற்குள் பச்சையன் கனிமொழி தன்னிடம் சொன்ன விபரங்களை தன் நண்பர்களிடம் சொல்லியிருந்தான். தன்னுடைய ஸ்கூல் பேகை கையில் எடுத்து வந்திருந்த கனிமொழி ஒவ்வொரு ஸிப்பிற்குள்ளும் ஒவ்வொரு நம்பி, நங்கையை போட்டு அவர்கள் எளிதாக வேடிக்கை பார்க்கும் படியும், அவர்களுடைய பொருட்காட்சி சுற்றுதலுக்கு இடையூறு வந்து விடாமலும் நிறைய இடங்களுக்கு அவர்களை கூட்டிச் சென்றாள்.

"அட்ராசக்க; சூப்பரு; மொழியக்கா! இப்ப  செவப்பு பலூன உடை!" என்று வெண்டையன் சொல்ல ஒரு சிறிய அளவிலான துப்பாக்கியை கையில் ஏந்தியிருந்த மொழி ஒரு வட்ட வடிவ ஓட்டை வழியாக பலூனை குறிபார்த்து சரியாக சிவப்பு பலூனை துளைத்து ஓட்டையாக்கினாள்.

"துப்பாக்கி ஒசரங்கூட இல்ல; யாருமே இல்லாம தனியா பலூன் சுடுறதுக்கு வந்துட்டு கரெக்டா குறி வச்சு அடிச்சுப்புட்டியே பாப்பா!" என்று ஆச்சரியமடைந்த கடைக்காரரிடம்,

"மொழியக்கா..... பொண்ணுங்க தனியா இருந்தா குடுக்குற வேலைய திறமையா செஞ்சு முடிக்க முடியாதான்னு அந்த கடைக்காரரு கிட்ட கேளு!" என்று கத்தரியரசி, வாழைநாச்சி, பீர்க்கையாள், வெங்கைமணி நால்வரும் ஒருசேர குரல் எழுப்ப கனிமொழி ஒரு சிரிப்புடன், "தேங்க்ஸ் அண்ணா!" என்று சொன்ன படி அவரிடம் துப்பாக்கியை தந்து விட்டு, பணத்தையும் தந்து விட்டு தன் நண்பர்களுடன் கிளம்பினாள்.

திடலின் நடுவில் ஒரு மேடையில் ஆடலும், பாடலும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்க, மொழி அதைப் பார்வையிட்ட படி கடந்து சென்று கொண்டிருந்தாள்.

"ப்ரெண்ட்ஸ்; எனக்கு கோபி 65 சாப்டணும்னு ஆசையா இருக்கு! அத நான் வாங்கி சாப்டலாமா?" என்று கேட்ட கனிமொழியிடம் உருளையன்,

"அது யாரு மொழியக்கா கோபி?" என்று விவரம் கேட்க வாழைநாச்சியும், கத்தரியரசியும் "ஐயோ அப்பா..... அவரும் நம் இனத்தவர் தான்!" என்று முணங்கினர்.

"மொழியக்கா! எங்கள கூட வச்சிக்கிட்டு நீங்க எங்க இனத்துல ஒருத்தனையே சாப்டுறது சரியா இருக்காது! உங்களுக்கு நன்மை செய்ய தான் நாங்க பிறந்தோமா? எங்களுக்குன்னு சில ஆசைகள், கனவுகள் எதுவும் இருக்கக்கூடாதா? விளைநிலத்துல இருந்து மொத்தக் கடைகளுக்கும், மொத்தக் கடைகள்ல இருந்து சில்லறைக் கடைகளுக்கும், அப்புறம் உங்க வீட்டு குளிர்பெட்டிக்கும், உங்க சமையலுக்கும் போறதோட எங்க வாழ்க்கை முடிஞ்சுடணுமா?" என்று சற்றே கோபமாக கேட்ட புடலையனிடம் வெண்டையன்,

"டேய் புடலையா! எதுக்கெடுத்தாலும் குதி குதின்னு குதிச்சுக்கிட்டு? கொஞ்சம் அமைதியா இருடா!" என்றான் பணிவான குரலில்.

"இல்ல வெண்டையா; புடலையனோட கோபம் நியாயமானது தான்! ஆனா ஒவ்வொருத்தரோட பிறப்புக்கும் ஒரு அர்த்தம் வேணும் இல்லையா? எனக்கு வாழைக்காய் அவியல், வெங்காய சாம்பார், பீர்க்கை, வெண்டைப் பொரியல், புடலங்காய் பருப்பு கூட்டு இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்! நீங்க ஒவ்வொருத்தரும் மனிதர்களுக்கு எவ்வளவு சத்தை அள்ளி அள்ளி குடுக்குறீங்க தெரியுமா? சரி சத்தை விடுங்க..... எவ்ளோ சுவையான சாப்பாட்டை நீங்க எங்களுக்கு தர்றீங்க தெரியுமா? கல்யாண வீட்ல எல்லாம் போய்ப் பாருங்க; பந்தியில உட்கார்ந்து மக்கள் உணவுகளை ரசிச்சு சாப்டுவாங்க! பத்தியச் சாப்பாடுன்னாலும் நீங்க தான்; விரதச் சாப்பாடுன்னாலும் நீங்க தான்! நீங்க இல்லாம விருந்து மட்டுமில்ல எங்களுக்கு மருந்து கூட கிடையாது! பாகற்காய், சுண்டைக்காய், மிளகு தக்காளின்னு உங்க இனத்துல எத்தன பேரு எங்களுக்கு மருந்தா பயன்படுறாங்கன்னு தெரியுமா? மண்ணுல தான் பொறந்தேன்; திரும்ப மண்ணுக்கு தான் போவேன்ங்குறது பெட்டரா? மனிதர்களோட முயற்சியால தான் பிறந்தோம்; ஸோ மனுஷங்களுக்கு பயன்படுற மாதிரி வாழ்ந்துட்டுப் போவோம்ங்குறது பெட்டரா......? அத நீங்களே முடிவு பண்ணுங்க! நான் அப்பளமும், பஞ்சு மிட்டாயும் சாப்ட்டுட்டு மேரி கோ ரவுண்ட் ஏறப் போறேன்! நீங்களும் என்னோட வர்றீங்களா? இல்ல இங்கயே எறங்கிக்குறீங்களா?" என்று கேட்ட கனிமொழியிடம் அவர்கள் யோசனையுடன் இறங்கிக் கொள்வதாக சொல்ல அவர்கள் எட்டுப் பேரையும் இறக்கி விட்டு விட்டு அவர்களுக்கு கையசைத்து அவர்களிடமிருந்து விடைபெற்றாள் கனிமொழி.

"கனியக்கா சொல்றதெல்லாம் சரின்னு தான் படுதுல்ல.....?" என்று கேட்ட பீர்க்கையாளை அனைவரும் ஒரு மாதிரியாக பார்க்க அவர் வாயை மூடிக் கொண்டார்.

மேரி கோ ரவுண்டில் ஒரு குதிரையின் மேல் ஏறி ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்த கனிமொழி, "மொழிம்மா..... இன்னும் ஃபிப்டீன் மினிட்ஸ்ல ஆப்டர்நூன் க்ளாஸஸ் இருக்கு; எழுந்திரிடா; காலையில சீக்கிரத்துல எழுந்திரிச்சுட்டு மதியம் இப்டி தூங்குறாளே..... பாவம்!" என்று சொன்ன படி திலகாவை மலங்க விழித்து ஏறிட்டவள்,

"ம்மா! இப்ப நடந்ததெல்லாம் கனவா?" என்று தன் அன்னையிடம் கேட்ட படி எழுந்து சென்றாள்.

நம்பிகளும், நங்கைகளும் வருவார்கள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro