Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🥔🌽🌶🥒🫑🍆 பாகம் 4

1. புடலையன் (நம்பி)

2. வாழை நாச்சி (நங்கை)

3. வெண்டையன் (நண்பன்)

4. கத்தரி அரசி (தோழி)

5. பச்சையன் (தம்பி)

6. வெங்கைமணி (தங்கை)

7. உருளையன் (அப்பா)

8. பீர்க்கையாள் (அம்மா)

"பாப்பு..... என்னடா டல்லா ஒக்காந்துட்டு இருக்க? என்னாச்சு? மதிய க்ளாஸஸ்ல மிஸ் ஏதாவது திட்டுனாங்களா?" என்று கனிமொழியிடம் அக்கறையாக விசாரித்தாள் திலகா.

"நான் எதுக்கு மிஸ் கிட்ட திட்டு வாங்கப் போறேன்? நான் ரொம்ப குட் ஸ்டூடெண்ட் தெரியுமாம்மா?" என்று சொன்னாள் கனிமொழி. தன் மகளது கண்களின் உருட்டலைப் பார்த்து திலகாவிற்கு சிரிப்பு வந்தது; ஆனால் இப்போது தான் சிரித்தால் இவள் இன்னும் கோபமடைந்து விடுவாள் என்று நினைத்தவள்,

"என்னடா ஆச்சு?" என்று கேட்ட படி மொழியின் தலையை மெல்லமாய் வருடினாள்.

"தாத்தா, பாட்டியும் போயிட்டாங்கம்மா!" என்று வருத்தமாக சொன்னவளிடம்,

"தாத்தாவும், பாட்டியும் நம்ம வீட்டுக்கு வரவேயில்லயேடா? நீ என்னடான்னா போயிட்டாங்கன்னு சொல்ற! எங்க போயிட்டாங்க? யாரு போயிட்டாங்க?" என்று கேட்ட திலகாவிடம்,

"ம்ப்ச்! நான் நம்ம தாத்தா, பாட்டியப் பத்தி பேசலம்மா! தக்காளி நம்பி தாத்தாவும், பூசணியாள் பாட்டியும் கதையில இருந்து கிளம்பிட்டாங்க; இனிமே கதையில 8 பேரு தான் இருப்பாங்க!" என்று சொல்ல திலகா கனிமொழியிடம்,

"ஓ! எங்க பாப்பு கதை எழுத ஆரம்பிச்சு, அதுல ரெண்டு காரெக்டர்ஸ் கிளம்ப வேற செஞ்சுட்டாங்களா? அம்மா உன் கதைய படிக்கலாமாடா செல்லம்?" என்று திலகா தன் மகளிடம் ஆர்வக்குரலில் கேட்க கனிமொழி தனது டைரியை எடுத்து வந்து தன் அன்னையிடம் நீட்டினாள். தனது அன்னையின் எதிர்ப்புறமாக அமர்ந்து கொண்டு கதையைப் படிக்கும் தன் அன்னையின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

தன் அன்னையின் முகத்தில் அவ்வப்போது தோன்றிய குறுஞ்சிரிப்பும், சில இடங்களில் அவர்களது இதழ் மலர்ந்த பெருஞ்சிரிப்பும் கனிமொழியை மிகவும் உற்சாகம் கொள்ள செய்தது. டைரியை மூடி வைத்தவளிடம்,

"எப்டிமா இருக்கு?" என்று கேட்ட கனிமொழியை தன் பக்கத்தில் வரவழைத்து அணைத்துக் கொண்டாள் திலகா.

"நாந்தான் முதல்லயே சொன்னேன்ல; என்னை விட நீ நல்லா செய்வேன்னு.....! சூப்பராயிருக்கு! தக்காளி நம்பியும், பூசணியாளும் கிளம்பினத தான் நீ தாத்தா, பாட்டி கெளம்பிட்டாங்கன்னு சொன்னியா? அடுத்தவங்களுக்கு உபயோகமா இருக்கறது தான் நம்ம வாழ்க்கையோட எய்மா இருக்கணும்னு எவ்ளோ அழகா எழுதியிருக்கடா மொழி; டோண்ட் ஃபீல் ஓகே; காரெக்டர்ஸ் வருவாங்க, போவாங்க! பட் சொல்லப் போற மெசேஜ நாம கரெக்டா சொன்னமாங்குறது தான் முக்கியம்!
இன்னும் நிறைய எழுது!" என்று சொல்லி தன் மகளின் நெற்றியில் திலகா ஒரு முத்தத்தை பரிசாய் தர இப்போது கனிமொழியின் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது. அந்தநேரத்தில் திலகாவின் அலைபேசி அவளை அழைக்க அவள் சென்று அழைப்பை ஏற்று பேசி விட்டு வந்தாள்.

"பாப்பு.... ஏதாவது சாப்டுறியா? அப்பா நம்ம ரெண்டு பேரையும் கிளம்பி இருக்க சொன்னாங்க! நாம மூணு பேரும் இன்னும் ஹாப் அன் அவர்ல எக்ஸிபிஷன் போகப்போறோம்!" என்று திலகா சிரிப்புடன் சொல்ல கனிமொழி அவசர அவசரமாக தன் அன்னையிடம்,

"அய் ஜாலி; பட் எனக்கு வயிறு........ பசிக்கலம்மா! நான் என் ஈவிஎஸ் க்ளாஸ்வொர்க்ல இன்னும் ஒரு யூனிட் எழுத வேண்டியிருக்கேம்மா? என்ன செய்ய?" என்று கேட்ட படி அவள் புத்தகப்பையை உருட்டிக் கொண்டிருக்க திலகா சிரிப்புடன் தன் மகளின் அருகே வந்து,

"போய் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு, ப்ரெஷ் ஆகிட்டு வாங்க மேடம்! அம்மா உங்களுக்கு ஊட்டி விடும் போது, நீங்க உங்க ஈவீஎஸ் வொர்க்ஸ கம்ப்ளீட் பண்ணிடுவீங்களாம்! அப்படியும் போர்ஷன்ஸ் மிச்சம் இருந்தா அத நைட் 9 மணிக்கு முடிச்சுக்கலாம்! ஓகே?" என்று கேட்க கனிமொழி வேகமாக தலையை உருட்டியபடி குடுகுடுவென உள்ளே ஓடினாள் கனிமொழி.

தேவராஜ் நேற்று சினிமாவுக்கு தன் மகளை அழைத்துச் செல்ல முடியாமல் போனதற்கு வருத்தப்பட்டு இன்று பொருட்காட்சிக்கு அழைத்து செல்ல முடிவெடுத்து மாலை ஐந்தரை மணியளவில் தனது வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பி வந்திருந்தான்.

தனது தந்தையின் எண்ஃபீல்டில் முன்னால் அமர்ந்து கொண்டு வெளியில் செல்வதென்றால் மொழிக்கு தனி ஆனந்தம்! இன்று போகுமிடம் வேறு மிகவும் பிடித்த இடமாக இருந்ததால் இரட்டிப்பு மகிழ்ச்சியோடு கிளம்பினாள்.

தன் அன்னை, தந்தையுடன் அலுத்து களைத்துப் போகும் வரை பொருட்காட்சியில் ஆட்டம் போட்டவள், இரவில் வீட்டிற்கு திரும்பும் பொழுது மணி எட்டரை ஆகியிருந்தது.

இரவு உடை உடுத்தி தனது வழக்கமான வேலைகளை செய்து முடித்தவள், அமர்ந்த இடத்திலேயே தூங்கி விழ தேவராஜ் அவளை தன் கையணைப்பில் எழுப்பி வந்து படுக்கையில் கிடத்தினான்.

"ம்மா ஈவீஎஸ்...!" என்று முணங்கிய மொழியிடம் "அம்மா காலையில உன்னை சீக்கிரத்துல எழுப்பி விடறேன்டா பாப்பு! இப்ப நீ தூங்கு!" என்றாள் திலகா.

"குட் நைட்மா; ஸ்வீட் ட்ரீம்ஸ்!" என்று சொன்ன மொழியால் அதற்கு மேல் அரைகுறையாக கூட முழித்திருக்க முடியவில்லை.

"திலக்..... உம் பொண்ணு அவ ஸ்டோரிய பத்தி எங்கிட்ட நெறய விஷயம் சொல்லி
சிரிச்சுட்டுருந்தா! உண்மையிலயே நல்லா எழுதியிருக்காளாம்மா?" என்று சற்றே சந்தேகத்துடன் கேட்ட தேவாவிடம்,

"எனக்குப் பிடிச்சிருக்கு தேவா; உங்களுக்கு எப்டின்னு தெரியல! காலையில வேணும்னா அவ டைரிய தர்றேன்; படிச்சுப் பாருங்க!" என்று சொன்னாள் திலகா.

"அப்டி என்ன தான் எழுதியிருக்கான்னு கண்டிப்பா படிக்கணுமே!" என்று நினைத்தவன் மனைவிக்கு ஒரு குட்நைட் சொல்லி விட்டு உறங்கிப் போனான்.

மறுநாள் காலை எட்டு மணியளவில் சில பொரிவிளங்காய் உருண்டைகளை தன் கையில் வைத்திருந்த படி டேபிளில் தனது டைரியுடன் அமர்ந்திருந்தாள் கனிமொழி.

"ஹ்ஹ்ஹா!" என்ற கொட்டாவியோடு படுக்கையறையிலிருந்து அப்போது தான் வெளிவந்த தேவராஜை நிமிர்ந்து ஏறிட்ட கனிமொழி,

"நைட் ஏதாவது ப்ராப்ளமா டாடி? ரொம்ப நேரமா யாரோடயோ போன்ல பேசிட்டு இருந்தீங்க? நீங்க மெதுவா பேசினாலும் எனக்கு நீங்க பேசுனது கேட்டுச்சு!" என்று தேவாவிடம் சொன்னாள்.

"ஆமாடா மொழி! டெலிவரிக்காக போயிருந்த ஒரு வண்டிக்கும், ட்ரைவர் அண்ணாவுக்கும் சின்னதா ஒரு ப்ராப்ளம்; அதுனால வேற வண்டி அரேன்ஜ் பண்ண சொல்லி, அந்த ட்ரைவர் அண்ணாவ ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போக சொல்லி, எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டு படுக்க மூணு மணியாகிடுச்சு!" என்று சொன்ன தன் தந்தையை விளங்காத ஒரு பார்வை பார்த்த கனிமொழி,

"நம்ம கிட்ட வேலை பார்க்குற ட்ரைவர் அண்ணால்லாம் உங்களுக்கு ப்ரெண்டு இல்லையா டாடி?" என்று கேட்டாள்.

"ஏன்டா மொழி இப்டி கேக்குற? எல்லா அண்ணாவும் டாடியோட ப்ரெண்டு தான்....!" என்று சொன்ன தேவராஜிடம்,

"ம்ஹூம்; நீங்க சும்மா சொல்றீங்க....
"நோயாளியைப் பார்க்க ஒரு மைல் தூரம் செல்; இரண்டு பேர்களிடையே சமாதானம் செய்ய இரண்டு மைல் தூரம் செல்; ஒரு நண்பனைக் காண மூன்று மைல் தூரம் செல்"னு நபிகள் நாயகம் சொல்லியிருக்காங்க டாடி! எனக்கோ, அம்மாவுக்கோ அடிபட்டிருந்தா ஹாஸ்பிட்டல்ல வந்து பார்க்காம நீங்க இப்டிதான் போன்ல பேசியிருப்பீங்களாப்பா?" என்று கேட்ட தன் மகள் தன்னிடம் சொல்ல வரும் கருத்து இப்போது தேவாவிற்கு நன்றாகப் புரிந்தது.

"ஸாரிடா மொழி..... டாடி செஞ்சது ரொம்ப தப்புதான்; குளிச்சுட்டு ஹாஸ்பிட்டலுக்கு போயி அந்த அண்ணாவ பார்த்துட்டு தான் நான் நம்ம ஸ்டோரேஜ்க்கு போவேன். ஓகேவா? நீங்க என்ன காலையிலயே பொரிவிளங்கா உருண்டையோட.....?" என்று கேட்க கனிமொழி தன் தந்தையிடம்,

"அம்மா டிபன் செய்ய இன்னும் கொஞ்சம் நேரமாகுமாம்! நான் சீக்கிரமே எழுந்திரிச்சதால எனக்கு வயிறு பசிச்சுச்சு! அதான் இத சாப்டுறேன்! டாடி எங்கிட்ட வாங்களேன்!" என்று அவனை அழைத்ததும் தேவா அவளருகில் வந்து ஒட்டி நிற்க அவள் தன் தந்தையின் கன்னத்தில் ஒரு முத்தமிட்டு, "எக்ஸிபிஷன் கூட்டிட்டுப் போனதுக்கு தேங்க்ஸ் டாடி!" என்றாள்.

"என்னடா வெளிய அவுட்டிங் கூட்டிட்டுப் போனதுக்கு டாடிக்கு புதுசா தேங்க்ஸ் எல்லாம் சொல்றீங்க.....?" என்று தன் மகளிடம் சிரிப்புடன் கேட்டான் தேவராஜ்.

தனது டைரியைக் சுட்டிக்காட்டியவள்,
"தேங்க்ஸ் வெளிய கூட்டிட்டுப் போனதுக்கு மட்டுமில்ல டாடி! என் குட்டி ப்ரெண்ட்ஸ் அடுத்து என்ன செய்யப் போறாங்கன்னு எனக்கு ஹிண்ட் குடுத்தீங்கல்ல அதுக்கு....." என்று சொல்லி விட்டு தனது ஜெல் பேனாவை திறந்தவளிடம்,

"பாப்பு.... நான் எங்கடா உனக்கு ஹிண்ட் எல்லாம் குடுத்தேன்?" என்று கேட்ட தன் தகப்பனை வாயில் விரல் வைத்து பேசாமல் அமைதியாக இருக்குமாறு சைகை காண்பித்து விட்டு தனது டைரிக்குள் தலையை புதைத்துக் கொண்டாள் கனிமொழி.

"எல்லாம் அவளால வந்தது....!" என்று முணங்கிய படி சமையலறைக்குள் புகுந்தவனிடம், "குட்மார்னிங்.... காஃபி?" என்று வரவேற்பு செய்தாள் திலகா.

"என்ன குட்மார்னிங்? என்ன காஃபி?
காலையில எழுந்திரிச்சவுடனே டைரிய தூக்கிட்டு ஒக்காந்து இருக்காடீ உம் பொண்ணு...... இதெல்லாம் நீ என்ன ஏதுன்னு கேக்க மாட்டியா?" என்று சற்று குரல் உயர்த்திக் கேட்ட தன் கணவனிடம்,

"கூல்... கூல்! காலையிலயே இப்டி நீங்க கொந்தளிக்குற அளவுக்கு என்ன நடந்துச்சு தேவா? மொழி மேடம் இன்னிக்கு ஆறு மணிக்கே எழுந்திரிச்சுட்டாங்க. அவங்க தான் வாசல்ல கோலம் போட்டாங்க! அவங்க தான் மாடியில செடிக்கு தண்ணி ஊத்திட்டு முருங்கை இல பறிச்சுட்டு வந்தாங்க; குளிச்சு ரெடியாகி அவங்களோட போர்ஷனையும் கம்ப்ளீட் பண்ணிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம கிச்சனுக்குள்ள சுத்திட்டு இருந்தாங்க; நாந்தான் போயி கதைய எழுதுன்னு சொன்னேன்! இப்ப இதுல உங்களுக்கு என்ன ப்ராப்ளம் வந்துடுச்சு?" என்று புன்னகைத்த படி கேட்டாள் திலகா.

"என்ன ப்ராப்ளம் வந்துச்சா? அடியேய் உம்பொண்ணு காலங்கார்த்தால நபிகள் பொன்மொழிய கோட் பண்ணி எனக்கு க்ளாஸ் எடுக்குறாடீ! நேத்து நம்ம பசங்கள நான் நேர்ல போயி பாக்காதது எந்தப்பாம்!" என்று திலகாவிடம் தேவா குறை கூறிக் கொண்டிருக்க திலகவதி தன் கணவனிடம்,

"ஆமா தேவா! நீங்க செஞ்சது தப்புதான?" என்று மகளது வாதத்தை நியாயம் செய்தாள்.

"ஆமாடீ.... நான் செஞ்சதும் தப்பு தான்! இப்ப செய்யப் போறதும் தப்பு தான்! என் சைட்ல பேசாம நீ உன் மகளுக்கா சப்போர்ட் பண்ற! இரு வர்றேன்!"
என்று திலகாவிடம் சொல்லி விட்டு கிச்சன் மேடையை ஆராய்ச்சி செய்தவன், காலை உணவுக்காக தன் மனைவி தயாரித்து வைத்திருந்த எள்ளு சட்னியை பார்த்து விட்டு குறுஞ்சிரிப்புடன் ஒரு பாட்டிலில் தண்ணீரை கையில் எடுத்தான்.

"ஐயயோ.... தேவா ப்ளீஸ்! நான் உங்ககிட்ட ஸாரி கேட்டுடுறேன்! இந்த சட்னி இல்லன்னா மொழியை இட்லி சாப்ட வைக்கறது ரொம்ப கஷ்டம்; தயவுசெஞ்சு தண்ணிய கீழ வச்சுடுங்க!" என்று கெஞ்சிய திலகாவிடம்,

"நீ சொன்னத கேக்கணும்னா இப்போ எனக்கு ஒரு கிஸ் குடு பார்ப்போம்! உன் இட்லி மாதிரியே அதுவும் செம ஹாட்டா, சுடச்சுட இருக்கணும்! கம் ஆன்!" என்று சொன்ன தேவாவிடம் ஒன்றும் பதில் பேசாமல் 5 4 3 2 1 0 என்று இடைவெளி விட்டு எண்களை எண்ணி முடித்தாள் திலகா.

"மிஸஸ் தேவா.... நான் உங்ககிட்ட என்ன கேட்டுட்டு இருக்கேன்! நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என்று தேவராஜ் திலகாவிடம் கேள்வி கேட்டு முடிப்பதற்குள் விஐபிகளின் செக்யூரிட்டி கார்டு போல் சரியான நேரத்தில் சரியான இடமான சமையலறை வாசலில் வந்து நின்றாள் கனிமொழி.

"கவுண்ட்டிங் எதுக்குன்னு உங்களுக்கு இப்ப தெரிஞ்சதா ஸார்.....?" என்று தன்னிடம் கேட்ட மனைவியை முறைத்த தேவராஜ் தனது மகளைப் பார்த்து,

"கத தான எழுதிட்டு இருந்த! நீ எதுக்கு இப்போ இங்க வந்த?" என்று கேட்டான்.

"நான் தண்ணி குடிக்க வந்தேன்! ஆமா நீங்க எதுக்கு இப்போ இங்க வந்தீங்க?" என்று பதிலுக்கு தன் தந்தையிடம் கேட்ட கனிமொழியிடம்,

"நான் காஃபி குடிக்க வந்தேன்!" என்று சொன்னான் தேவராஜ்.

"இன்னும் நீங்க ஃபேஷ் வாஸ் பண்ணி, ப்ரெஷ் பண்ணவேயில்ல! அதுக்குள்ள உங்களுக்கு காஃபியா? அம்மாவ டிஸ்டர்ப் பண்ணாதீங்க; அப்போ தான் அம்மா சீக்கிரத்துல ப்ரேக்பாஸ்ட்ட ரெடி பண்ணுவாங்க; அம்மா இன்னும் பைவ் மினிட்ஸ்ல டாடிக்கு ஒரு காஃபி.....!" என்று சொன்னவள் தண்ணீர் அருந்தி விட்டு தன் தந்தையை கையுடன் அழைத்துச் சென்றாள் கனிமொழி.

நம்பிகளும், நங்கைகளும் வருவார்கள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro