
🥔🌽🌶🥒🫑🍆 பாகம் 3
1. புடலையன் (நம்பி)
2. வாழை நாச்சி (நங்கை)
3. வெண்டையன் (நண்பன்)
4. கத்தரி அரசி (தோழி)
5. பச்சையன் (தம்பி)
6. வெங்கைமணி (தங்கை)
7. உருளையன் (அப்பா)
8. பீர்க்கையாள் (அம்மா)
9. தக்காளி நம்பி (தாத்தா)
10. பூசணியாள் (பாட்டி)
கூட்டத்தில் இருப்பவர்களில் பூசணியாள் மட்டுமே அளவில் மிகப் பெரியவர்களாய் இருக்க அவர்களை எப்படி இங்கிருந்து வெளியேற்றுவது என்ற யோசனையில் மூளையைப் போட்டு கசக்கிக் கொண்டிருந்தான் புடலையன்.....
"பிள்ளைங்களா.... நீங்க வேணும்னா என்னைய விட்டுட்டு கிளம்புங்கப்பா; எல்லாரும் சேர்ந்து வெளியேறப் போறோம்னு சொன்னீங்களே, அதனால நாமளும் அதுக கூட போவம்னு நெனச்சேன்; ஆனா அப்டி நினைச்சவ என் உருவத்த மறந்துட்டேன்! உங்க எல்லாரையும் தட்டுல ஒரு பக்கமா வச்சு, மறுபக்கமா என்னைய மட்டும் வச்சாலுமே நான் தான் அதிக எடையா இருப்பேன்; என்ன செய்ய என்னோட உடம்புவாகு அப்டி!" என்று தன்னை ஒருமுறை பார்த்துக் கொண்டு சற்று வருத்தத்துடன் பேசிய பூசணியாளிடம்,
"இல்ல பாட்டி! எங்க கூட வரணும்னு நெனச்சுட்ட உங்கள உங்க உருவம் பெரிசா இருக்குங்குற காரணத்துக்காக எல்லாம் எங்களால விட்டுட்டுப் போக முடியாது! நாம எல்லாரும் இப்ப மடப்பள்ளியில இருந்து வெளிய கிளம்பி, கோவிலுக்கு வந்த பக்தர்கள்ல நாம முதல்ல பார்க்குற ஆளுங்க காலடியில உருண்டு போய் கெடக்கணும்! நம்ம எல்லாரும் இன்னும் நல்ல கறிகாய்ங்க தான்; அதனால பாக்குறவங்க அவங்களோட பைக்குள்ள போட்டு நம்மள கோவில் வாசல் வரைக்கும் கொண்டு போயிட்டா போதும்; அங்கிருந்து நாம சுலபமா தப்பிச்சுடலாம்! இன்னும் அரைமணி நேரத்துல நாம பத்து பேரும் கிழக்கு கோபுர வாசல் பக்கத்துல சந்திக்கலாம்!" என்று சொன்னவனிடம் வாழைநாச்சி கிண்டல் குரலில்,
"ஏன்ஓய் புடலையரே! உமக்கு உருளுவதென்றால் மிகவும் பிடித்தம் போலிருக்கிறதே? உம்முடன் சேர்ந்து நகர்வலம் வரத் துணிந்த பாவத்துக்கு நாங்கள் எல்லாம் உருளலாம் ஐயா.... ஆனால் பாவம் தக்காளி நம்பி தாத்தா; அவர் நம்மைப் போல் உருண்டு யார் காலிலாவது மிதிபட்டால் அந்த இடத்திலேயே அவருக்கு வீரசுவர்க்கம் தான்..... ஏதோ காய்கறிக் கடைகளில் நாம் சிதறிக் கிடந்தாலாவது எவரேனும் நம்மை எடுத்து நம் இனத்தவருடன் நம்மையும் கூடைக்குள் சேர்த்துப் போடுவார்கள்..... கோவிலுக்கு வரும் நல்லவர்கள் எல்லாம் கோவிலில் இருந்து ஒன்றையும் பொறுக்கி வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள் ஐயா; அதிலும் நாம் அனைவரும் ஒற்றை ஒற்றைக் காயாக நிற்கிறோம்; எங்கிருந்து நாம் உருண்டு; நம்மை எவர் கையிலெடுத்து ரக்ஷிக்க? ஒருவேளை இதற்கு அந்த அரங்கனே தான் ஒருவேளை அவதார புருஷராய் அவதரிக்க வேண்டும்! தலைவனாய் இருந்து கொண்டு ஏன் இப்படி பாடாவதியான திட்டமிடுகிறீர்? உம்மையெல்லாம் இங்கு யாரய்யா தலைவனென ஏற்றுக் கொண்டது?"
என்று புடலையனிடம் கேட்டு அவனது கோபத்தை அதிகப்படுத்தும் வகையில் சிரிக்க வேறு செய்தாள்.
"ஏன்டா வெண்டையா...... என்னடா இந்தப் பாப்பா பேசுற லாங்குவேஜ் நமக்கு சரியாவே புரியவே மாட்டேங்குது; இது தமிழ் தானா? வெங்கைமணியாவது பரவாயில்ல; இவ ரொம்ப பேசுறா! நான் சொன்ன திட்டம் பிடிக்கலைன்னா அவளையே வேற திட்டம் போட்டுக் குடுக்கச் சொல்லு! ஓவரா வாய் பேசுனாலும் அவ சொல்ற பாயிண்ட்ஸ் எல்லாம் கரெக்டா தான் இருக்கு!"
என்று தன் நண்பனிடம் சொல்லிக் கொண்டிருந்த புடலையனைப் பார்த்து கத்தரி அரசியும், வாழை நாச்சியும் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டனர்.
"வாய வச்சுக்கிட்டு சும்மாயிருன்னு சொன்னா நீ எங்கடா கேக்குற புடலையா? இந்த வாழைநாச்சி பாப்பா ரொம்ப படிச்சவங்க யாரு வீட்லயாவது வளந்துருக்கும்! அதான் இப்டி கூறா பேசுது..... சரி; இப்ப நம்ம கோவிலை விட்டு வெளிய போகுறதுக்கு என்ன தான் வழி? வேற யார் கிட்டயாவது ஏதாவது யோசனை இருந்தா சொல்லுங்க!" என்று அனைவரையும் பார்த்து பொதுவாய் ஒரு கேள்வி கேட்டான் வெண்டையன்.
"கோவிலோட கோசாலை இங்க பக்கத்துல தான் இருக்கும்னு நினைக்கிறேன்; நாம எல்லாரும் இப்டியே பொடிநடையா நடந்து கோசாலையை
கண்டுபிடிச்சு அங்க போயிட்டா, சாயந்தரம் கோவில் மாடுகளைக் கறக்க வர்ற கோனார்களோட பொருட்கள் எதுலயாவது நாம ஏறி சுலபமா வெளிய போயிடலாம்! நீங்க எல்லாம் என்ன நினைக்குறீங்க?" என்று கேட்ட உருளையனிடம்,
"சூப்பர் வாத்தியாரே.... உங்களோட ப்ளான் ரொம்ப நல்லாயிருக்கு! நீங்க எல்லாரும் என்ன நினைக்குறீங்கன்னு கேட்டது அத விட ரொம்ப நல்லாயிருக்கு! ஆனா மண்டைய பொளக்குற வெயிலுல ரொம்பத்தூரம் எங்க எல்லாரையும் நடக்க வைக்குறது தான் ரொம்ப கஷ்டமாயிருக்கு! கோவிலுக்குள்ள யார் கிட்டயும் ராயல் எண்ஃபீல்டு எல்லாம் இருக்காதுல்ல?" என்று கேட்டாள் பீர்க்கையாள்.
"அப்டியே இருந்தாலும் உன்னை அது மேல எல்லாம் ஏத்த மாட்டாங்கம்மா தாயி; அத வேணும்னா உம்மேல ஏத்துவாங்க! இடுப்பு ஒடைஞ்சு கெடக்குற நானே ஒண்ணும்பேசாம வாய மூடிக்கிட்டு நொண்டியச்சு, நொண்டியச்சு நடந்து வாரேன்; இவுகள கூட்டிட்டு போறதுக்கு புல்லட் வருதாம்ல புல்லட்...... புடலையண்ணா; அது என்ன டிடிங் டிடிங்ணு பக்கத்துல ஏதோ சத்தங்கேக்குது?" என்று பச்சையனின் புலம்பலையும், பின்பு கேள்வியையும் கேட்டு எட்டிப் பார்த்த புடலையன்,
"ஆ.....ஆ!" என்று பயத்தில் திக்கித் திணறினான்.
"ஏய்.... புடலையண்ணா; நான் உன்னைய ஒரசாம உங்கிட்ட இருந்து இத்தன தூரத்துல வெலகித் தான நிக்குறேன்! மறுபடியும் நீ என்ன ஆ,ஊ ன்னு கத்திக்கிட்டு இருக்க?" என்று குழப்பமாக கேட்டவனை சுவரோரமாய் நகர்த்தி அனைவரையும் முடிந்த அளவு சுவருடன் ஒட்டி நிற்கச் சொன்ன புடலையன்,
"சாமி புறப்பாட்டுக்காக ஆண்டாள் வந்துட்டு இருக்காடா; அவளோட மணிச்சத்தம் தான் கேக்குது!
அவ கால்ல மிதிபட்டா அப்புறம் நம்மள மண்ணுல இருந்து வழிச்சு தான் எடுக்கணும்! எல்லாரும் பாதுகாப்பா நில்லுங்க!" என்று கத்தியவன், தானும் முடிந்த அளவு சுவருடன் சுவராக ஒட்டி நின்று கொண்டான்.
"யாத்தே.... என்ன இது இம்மாம்பெரிசா ஆடி அசைஞ்சு வருது? இவ பேரு தான் ஆண்டாளா? பூசணிப் பாட்டி நீ தான் எங்களையெல்லாம் விட பெரிசா, துண்டா கண்ணுல தெரியுற மாதிரி இருக்க; அதுனால நீ ரொம்ப ஜாக்கிரதையா இரு! வாரி வழிச்சு எடுத்து வாயில போட்டுக்குடப் போறா! யப்பா ரங்கநாதா இந்த ஆண்டாள் கண்ணுக்கு நாங்க யாரும் தெரியவே கூடாது சாமி; அவ தும்பிச்சாங்கையால ஒரு தட்டு தட்டுனாலும் நாங்க எல்லாரும் ஸ்ட்ரைட்டா பரலோகந்தான்!" என்று பச்சையன் அனத்திக் கொண்டிருக்க அவர்களனைவரும் மருந்தளவிற்கு கூட மதிக்காமல் ராஜ கம்பீரத்துடன் அவர்களை கடந்து சென்றாள் அந்தக் கோவிலின் யானை ஆண்டாள்!
"அப்பாடா..... புடலையா! தப்பிச்சுட்டோம்டா!" என்று சொன்ன வெண்டையனை கோபப்பார்வை பார்த்த வெங்கைமணி,
"இவ்வளவு நேரம் நடுங்கிட்டு இருந்துட்டு இப்போ தான் பேச்சு வருதா உங்களுக்கு? ஆண்பிள்ளைன்னா தைரியமா இருக்க வேண்டாம்? பச்சையனை பார்த்தாவது கொஞ்சம் தைரியத்தை கத்துக்கோங்க!" என்று சொல்ல வெண்டையன் வெங்கை மணியிடம் சிரிப்புடன்,
"யாரு இவனப் பார்த்து..... நான் தைரியத்த கத்துக்கணும்; இவ்வளவு நேரம் புலம்பிக்கிட்டு இருந்தவனே இவன்தாம்மா; அவனோட பினாத்தல் எதுவும் உன் காதுல கேக்கலையா?" என்று கேட்டான்.
"புடலையா; உருளையர் சொன்ன ஆலோசனையின் படி நாம கோசாலை நோக்கி கிளம்பலாம்! நமக்கு அடுத்த தடை ஏதாவது நேரும் முன் நாம அங்கே சென்று சேர வேண்டும்!" என்று கத்தரி அரசியும், வாழைநாச்சியும் சொல்ல தக்காளி நம்பியும் அதை ஆமோதித்தார்.
"சீக்கிரம் சீக்கிரம் நடங்க!" என்று தக்காளி நம்பியும், உருளையனும் அனைவரையும் உற்சாகப்படுத்தியதில் எப்படியோ அனைவரும் அவர்களது பயணத்திற்கு எந்தவிதமான தடைகளும் நேராமல் கோசாலைக்கு வந்து சேர்ந்தனர்.
கோவிலின் கோசாலையில் பசுக்களும், கன்றுகளும் வரிசைகட்டி அணிவகுத்து நின்றன. பசுக்களுக்கு உணவாய் இடப்படும் பசுந்தீவனத்தின் வாசனையும், அவைகளின் கழுத்திலிருந்த மணிச்சத்தமும் இந்த ஜீவன்களும் மக்களுக்கான பாலின் தேவையை பூர்த்தி செய்ய பிறந்த ஜீவன்கள் என்று சொல்லி அவற்றிற்கு மரியாதை செய்தது போலிருந்தது.
"1,2,3,4,5,6,7,8.....!" என்று ஆட்களின் கணக்கை எண்ணிய பச்சையன் புடலையனிடம் கவலையுடன் "புடலையண்ணா.... ரெண்டு உருப்படி குறையுது; யாரு காணும்னு பாருங்க!" என்றான்.
"கத்தரி அரிசியை காணவில்லையே?" என்று வாழை நாச்சி கவலைப்பட, "டேய் பச்சையா வெண்டையனையும் காணுமேடா?" என்று அவனும் வருத்தப்பட்டான்.
"எப்போ பாரு பராக்கு பார்த்துட்டே நிக்க வேண்டியது; இன்னும் கொஞ்சம் தப்பியிருந்தா அந்த செவலைப் பசுவோட வாய்க்குள்ள போயிருப்ப!" என்று தன்னை திட்டிய படி இழுத்து வந்த வெண்டையனிடம்,
"பசு கத்திரியரசியை எல்லாம் சாப்பிடாது. வெறும் கீரை வகைகளை மட்டுமே சாப்பிடும்!" என்று மெல்லிய குரலில் உரைத்தாள் கத்திரியரசி.
"சாப்பிட முடியாது சரி; நாலு காலுல ஏதாவது ஒரு காலை வச்சு உன்னை மிதிச்சிருந்தாலும் பரவாயில்லங்குறியா? இது முழுக்க முழுக்க ஜீவராசிகள் உலவுற இடம்; எல்லாரும் இரண்டு மடங்கு கவனத்தோட இருங்க!" என்று வெண்டையன் சொல்லிக் கொண்டிருந்த போதே
"புடலையண்ணா.... புடலையண்ணா; ஐயோ காப்பாற்றுங்கள்; என்னைக் காப்பாற்றுங்கள்!" என்ற கூக்குரல் கேட்க வெங்கைமணி ஒரு சிறிய வாய்க்காலில் உருண்டு உருண்டு ஓடிக் கொண்டிருந்தாள்.
"அய்ய..... ச்ச்சீ! எங்க பாத்தாலும் ஒரே சாணி நாத்தம்! பசுக்களோட கழிவுகள் போற பாதையில இவ ஏன் போய் விழுந்தா? சரி பரவாயில்ல! இது ஒரு நல்ல உரம்ங்குறதால இவளோட ஆயுள்ல இன்னும் ஒரு நாள் கூடியிருக்கும்!" என்று கிண்டல் பேசிய பச்சையனை முறைத்த உருளையனும், புடலையனும் ஓடிச் சென்று கழிவு நீர் பாதையிலிருந்து வெங்கைமணியை மீட்டு எழுப்பி நன்னீரில் குளிப்பாட்டி கூட்டி வந்தனர்.
"எந்தப் பக்கம் திரும்பினாலும் கால்களா தான் இருக்கு; எல்லாரும் பத்திரமா இருங்க; ஜாக்கிரதையா இந்த இடத்துல இருந்து கிளம்பிப் போற வரையில நாம இந்த சூழ்நிலைய சமாளிச்சு தான் ஆகணும்!" என்று சொன்ன தக்காளி நம்பி பசுக்களுக்கு தண்ணீர் காட்டும் ஒரு தொட்டி காலியாக இருக்க அதை எல்லாரிடமும் காட்டினார்.
பூசணியாள் மட்டும் தொட்டியின் அடிப்பாகத்தில் அமர்ந்து விட அவர்களின் தலை மீது கத்தரியரசி, வெங்கைமணி, வாழைநாச்சி, வெண்டையன், பச்சையன் அனைவரும் அமர்ந்து வெயிலில் காய அவர்களின் இடப்புறம் புடலையன், தக்காளிநம்பி, பீர்க்கையாள், உருளையன் அனைவரும் ஒருவர் பக்கத்தில் ஒருவராக அமர்ந்திருந்தனர்.
ஒருவழியாக மாலை நேரம் வரை வெயிலியே காய்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தவர்கள் கோனார்கள் அங்கு வந்து விட முதலில் பூசணியாளை அனைவரும் ஒன்றாக சேர்ந்து பெருமுயற்சி செய்து அங்கிருந்த ஒரு கூடைப்பையில் ஏற்றி விட்டு பின் அவர்கள் ஒவ்வொருவராக அந்தக் கூடைக்குள் ஏறிக் கொண்டனர்.
காளிமுத்து கோனாரின் வீட்டிற்குச் சென்று அந்தக் கூடைப்பை இறங்கிய போது அந்தக் கூடைப்பையில் தட்டாம்பயிறு, புளி, மொச்சைப்பயிறு, நெத்திலிக் கருவாடு என இன்னும் பல பொருட்கள் நமது ஆட்களின் மேல் ஏறி அவர்களை அமுக்கி மூச்சடைக்க செய்து கொண்டிருந்தன.
"அய்யா! கோனாரே..... எங்க போனீங்கய்யா? வந்து சீக்கிரத்துல மூட்டைய பிரிச்சு கடை பரப்புற வேலையப் பாருங்கய்யா!" என்று காய்கறிகள் அனைவரும் அவரை கெஞ்சி அழைத்துக் கொள்ள கொண்டிருக்க வழக்கம்போல நமது புடலையனும், வெண்டையனும் மிகுந்த பிரத்தயனம் செய்து கூடைக்குள் இருந்து வெளியேறி அந்தக் கூடையை ஒரு பக்கமாக சரித்து வைத்திருந்தனர்.
இருபது நிமிட போராட்டங்களுக்குப் பின்னர் காய்கள் ஒவ்வொருவராக வெளியேற பச்சையன் இப்போதும் புடலையனிடம்,
"இப்பவும் எண்ணிக்கை எட்டுத் தான் இருக்கு புடலையண்ணா!" என்று சொன்ன போது கத்தரியரசி அனைவரிடமும்,
"தக்காளி நம்பி தாத்தாவும், பூசணியாள் பாட்டியும் நம்ம கூட இனிமே வர்றதுக்கு பிரியப்படல..... அவங்க ரெண்டு பேரும் இன்னிக்கு கோனார் வீட்டு சாப்பாட்டுக்கு விருந்தாகப் போறதா முடிவு எடுத்துருக்காங்க...... நம்மள இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்த கோனார் குடும்பத்துக்கு நன்றி சொல்றதுக்கு இப்டி முடிவெடுத்துருக்காங்க!" என்று வருத்தக் குரலில் சொன்னாள்.
"தக்காளி நம்பி தாத்தா, பூசணியாள் பாட்டி.....!" என்று அழைத்த புடலையனின் குரலுக்கு,
"அட.... யாரும் வருத்தப்பட வேண்டாம்யா; எங்க ரெண்டு போரோட நாள் முடியப் போகுது! நாங்க இனிமே வெளிய உலாத்துனா தாங்க மாட்டோம். போறப்ப ரெண்டு பேர் சாப்பிட உதவி செஞ்ச திருப்தியோட போறோமே..... நீங்க கெளம்புங்க சீக்கிரம்!" என்று சொன்ன தக்காளி நம்பியிடமும், பூசணியாளிடமும் ஒவ்வொருவராக விடைபெற்று மீதமுள்ள எட்டுப் பேரும் தங்களுடைய பயணத்தை தொடர்ந்தனர்.
நம்பிகளும்.... நங்கைகளும் வருவார்கள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro