Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🥔🌽🌶🥒🫑🍆 பாகம் 2

1. புடலையன் (நம்பி)

2. வாழை நாச்சி (நங்கை)

3. வெண்டையன் (நண்பன்)

4. கத்தரி அரசி (தோழி)

5. பச்சையன் (தம்பி)

6. வெங்கைமணி (தங்கை)

7. உருளையன் (அப்பா)

8. பீர்க்கையாள் (அம்மா)

9. தக்காளி நம்பி (தாத்தா)

10. பூசணியாள் (பாட்டி)

"அடேய்.... புடலையா! நாம் இப்படி அடுத்தவர்களின் பசி போக்கும் கறிகாய் வகையாய் உயர் பிறப்பு எடுத்ததற்கு மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டுமடா; ஆஹா என்ன ஒரு அருமையான மணம்......! புளியோதரை, முறுக்கு, லட்டு, அதிரசம், அப்பம், கதம்ப சாதம்.....! அடடா; எவர் வீட்டு அடுக்களையிலோ புரண்டு, உருண்டு பின் அவர்கள் வீட்டு இல்லக் கிழத்தியின் கைகளால் அறுபட்டு, சமைத்த பதார்த்தங்களாகி நாம் மாள்வதை விட,
அரங்கனின் அடியாருக்கு திருவமுதாய் படைக்கப்பட என்ன பாக்கியம் செய்து நாம் விளைந்திருக்க வேண்டுமடா நண்பா?" என்று மிகவும் மனமகிழ்வுடன் தன் நண்பனிடம் பேசிக் கொண்டிருந்தான் வெண்டையன்.

இருவரும் இத்தனை நாளாய் விளைநிலத்தில் ஒன்றாய் அறுவடைக்கு காத்திருந்து சரியான உருவத்தில், நிறத்தில், பதத்தில் புடைத்து வளர்ந்திருந்தவர்கள்! அதனால் வெண்டையனும், புடலையனும் நல்ல நண்பர்கள்......

"கூறு கெட்ட வெண்டையனே! அரங்கனுக்கு அமுதாய்ப் படைக்கப்படத்தான் உன்னை ஒரு விவசாயி நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி விளைவித்தானா? உன்னுடைய கருத்துக்களை உன்னுடனே நிறுத்திக்கொள்! நானெல்லாம் எவன் வாயிலும் அரைபட்டு சாவதற்காக இந்தப்பிறவி எடுக்கவில்லையடா! எப்படியும் என் உடம்பு அழுகி மண்ணுக்குள் புதைவதற்குள்
இந்த மடப்பள்ளியை விட்டு வெளியேறி நாலு வீதிகள், நானூறு மனிதர்களையாவது வேடிக்கை பார்த்து விட்டு நான் முளைத்து வந்த மண்ணுக்கு உரமாய் மறுபடியும் மண்ணிலேயே கிடந்து தான் எனது இன்னுயிரை துறப்பேன்...... எனது எண்ணம் அறியாமல் நீ பாட்டில் எதையாவது பிதற்றிக் கொண்டிருந்தாய்?
உன் வயிற்றைப் பற்றி உள்ளிருக்கும் வெள்ளை முத்துகளை வெளியில் பிதுக்கி எடுத்து விடுவேன்; சும்மாயிரு!" என்று கோபாவேசமாக பேசிய புடலையனிடம் நமுட்டுச் சிரிப்புடன்,

"நாம் பிறந்ததன் நோக்கமே மக்களை ஆரோக்கியமாய் வாழ வைப்பதற்காக தானடா புடலையா? இதில் நீ பாட்டில் தப்பித்து பட்டினப்பிரவேசம் புறப்படப் போகிறேன் என்று சொன்னால் உன்னை எவர் அனுமதிப்பார்? என் குடலை நீ உருவப்போகிறேன் என்று முழங்குகிறாய்; உன்னை மட்டும் அடுக்களைப் பணியாளர்கள் கழுத்தை நீவிக் கொடுத்து எண்ணெய் குளியல் செய்விப்பார்களாக்கும்? உன்னையும் கூட ரெண்டாய் கூறு போட்டு உன் வயிற்றுக்குள்ளிருக்கும் விதைகளைப் பிதுக்கி வெளியேற்றத் தான் செய்வார்களடா; ஜாக்கிரதை!" என்று தன் நண்பனை கிண்டல் செய்தான் வெண்டையன்.

"பாப்பு! நீங்க உங்க ப்ரெண்ட்ஸோட ஸ்கூல்ல உட்கார்ந்து பேசிக்குற மாதிரி
மடப்பள்ளியில உட்கார்ந்து வெண்டையனும், புடலையனும் ஜாலியா பேசிக்குறாங்க...... இது எப்டிடா இருக்கு மொழி?" என்று கேட்ட திலகாவிடம் வருத்தமாக உச்சுக் கொட்டி விட்டு மேஜையில் கவிழ்ந்து கொண்டாள் கனிமொழி.

"என்னடா மொழி! அம்மா கதையோட ஸ்டார்ட்டிங்கை ரொம்ப போர் அடிக்கிற மாதிரி எழுதிட்டேன் போலிருக்கு! உங்க ஃபேஸ் எக்ஸ்ப்ரெஷனே சரியில்லையே செல்லம்? இந்த மாதிரியான ஸ்லாங்க் உனக்குப் பிடிக்கலையாடா செல்லம்?" என்று கேட்ட திலகாவிடம் உதட்டுப் பிதுக்கலுடன்,

"ம்ஹூம்! சரியா புரியலம்மா! நீங்க எழுதியிருக்குற தமிழ் ரொம்ப கஷ்டமாயிருக்கு; அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்க முடியல; நான் குட்டிப் பாப்பா தான? நானே எனக்குத் தெரிஞ்ச அளவுல இந்த ஸ்டோரிய க்ரியேட் பண்றேன்; சரியா?" என்று தன் அன்னையிடம் தயக்கக் குரலில் கேட்ட கனிமொழியைப் பார்த்து சிரித்த திலகா, தான் எழுதிய நான்கு பத்திகள் அடங்கிய தாளை உருவி அதைக் கிழித்துப் போட்டார்.

"மொழிம்மா.... அம்மா உனக்கு ஒரு சின்ன ஐடியா தான் குடுத்தேன்; ஒரு கத
எழுதணும்னா அதுக்கு முன்னால நாம
பத்து ட்ராப்ட்ஸ் எழுத வேண்டியதிருக்கும். அதப் பத்தி கவலைப்படக் கூடாது; சரியா?
உன்னால அம்மாவை விட பெட்டராவே பண்ண முடியும்! க்ளாஸஸ் முடிஞ்சதுல்ல?" என்று அவளிடம் கேட்ட தன் அன்னையிடம்,

"முடிஞ்சிடுச்சும்மா! மொபைல பெட்ரூம்ல சார்ஜ் போட்டுட்டு வர்றேன்; ஆஃப்டர்நூன் ரெண்டு க்ளாஸஸ் இருக்கு!" என்று சொல்லி விட்டு சென்ற தன் மகளுக்கு மதிய உணவு தயார் செய்வதற்காக அடுக்களைக்குள் நுழைந்தாள் திலகா.

"ஞானாநந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ வித்யாநாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே!"

என்று தான் ஒவ்வொரு முறையும் எதையேனும் புதிதாய் படிக்க ஆரம்பிக்கும் முன்னர் சொல்லும் ஹயக்ரீவ ஸ்லோகத்தை சொல்லி விட்டு தனது பேனாவை எடுத்த கனிமொழியின் மனக்கண்களின் முன் ஸ்ரீரங்கத்தின் மடப்பள்ளி தெரிந்தது

பெரிய, பெரிய வெண்கல அண்டாக்கள், சிறிய அளவிலான சருவங்கள், அன்றைய சமையலுக்கு தேவைப்படும் அளவிலா காய்கறிகள், மளிகைப் பொருட்கள், இறைவனுக்கும், பக்தர்களுக்கும் என்றும் அன்னமிடவே பிறந்த அடுப்புகள், அடுக்களை புழக்கத்திற்கென்று அவசியமாக தேவைப்படும் இன்ன பிற இயந்திர சாதனங்கள், சுற்றுச்சுவரில் இருந்து மெல்லிய கீற்றொளியை மட்டும் வழங்கிக் கொண்டிருந்த சாளரங்கள் என அந்த மடப்பள்ளி அவ்வளவு பெரிய கோவிலின் ஒரு ஓரத்தில் தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருந்தது.

சுவாமிக்கு எத்தனை மணிக்கு பூஜைக்கான ஆயத்தமாகிறதோ, அதற்கு கால் மணி நேரம் முன்னாலேயே நைவேத்யம் தயாராகியிருக்கும்! பகவானின் கைங்கர்யங்கள் எல்லாமே அதற்கென முறையாக நியமிக்கப்பட்ட கோவில் மடப்பள்ளியின் பொறுப்பாளர்களால் மட்டுந்தான்!

இந்த மடப்பள்ளி சமையலுக்கென கொண்டுவரப்பட்ட காய்கறி மூட்டையிலிருந்து எட்டிப் பார்த்த புடலையன் பொத்தென தரையில் குதித்தான். நல்ல வேளையாக குதித்தவன் தன் தேகம் தெறித்து இறந்து விடவில்லை. இல்லையென்றால் கதை ஆரம்பிக்கும் முன்னமே என் கதாநாயகன் அரங்கன் நிரந்தரமாய் உறைந்திருக்கும் வைகுண்டம் போய் சேர்ந்திருப்பான்!

காய்கறி மூட்டையிலிருந்து எட்டிப் பார்க்கும் காய்கறி இறக்குமா? நீ என்ன பைத்தியமா..... என்று கேட்கிறீர்களா? இல்லை. நான் கனிமொழி! இந்தக் கதையின் ஆசிரியை...... என்னுடைய கற்பனையில் உருவான இந்தக் கதையில் காய்கறிகள் பேசும், அழும், சண்டை போடும், பாட்டுப் பாடும், திட்டிக் கொள்ளும், நாம் அவைகளின் கிட்டே போனால் நம்மையும் ஒரு வழியாக்கும்! சரி வாருங்கள் இப்போது புடலையனிடம் செல்வோம்.....

பிரகாரத்தில் உருண்டாலாவது இவனது கணக்கில் ஏதாவது புண்ணியம் சேரும்; அதில்லாமல் இவன் இவனது உடலைக் காப்பாற்றிக் கொள்ள மடப்பள்ளியில் அங்கப்ரதக்ஷணம் செய்து கொண்டிருந்தான்.

"தம்பி.... அடே தம்பி!" என்று அவனை அழைத்த குரல் கேட்டு திரும்பிய புடலையன்,

"என்ன பெரியவரே..... என்னை எதுக்காக கூப்டீங்க? உங்களப் பார்த்தா கொஞ்சம் முதிர்ச்சியா தெரியுதே? நீங்க எங்களோட சம வயதுடையவர் இல்லையா?" என்று கேட்ட புடலையனிடம்,

"ம்ம்ம்.... உங்களுக்கு நானும், பூசணியாளும் நாலு நாட்களுக்கு மூத்தவங்க; ஆமா; நீ எதுக்காக இந்த மடப்பள்ளியில வீணா உருண்டுகிட்டு இருக்க.....?" என்று கேட்டார் தக்காளி நம்பி.

"ஹாங்..... இது நேர்த்திக்கடன் இல்ல; இன்னிக்கு கடன்; போயா யோவ்! நான் இங்கிருந்து தப்பிக்குறதுக்காக ஓடி ஒளிஞ்சுட்டு இருக்கேன்!" என்று புடலையன் தக்காளி நம்பியிடம் சொல்லிக் கொண்டிருக்கையில் "ஹச்சூ... ஹச்சூ!" என்ற ஒரு தும்மல் சத்தம் கேட்டது.

"ஏய்.... எவன்டா அவன்? இங்கருந்து கெளம்பப் போறேன்னு சொல்லிட்டு இருக்கேன்! நேரங் காலந்தெரியாம இப்போ தும்மிக்கிட்டு இருக்கிறது?" என்று எரிச்சலடைந்த புடலையனிடம்,

"அண்ணா.... மன்னிச்சிருங்கண்ணா; என் பேரு பச்சையன்; அப்பப்ப எனக்கு இந்த தும்மல் வரும்; நீங்க ஒண்ணும் பயந்துக்காதீங்க; ஆனா நீங்க போகும் போது நாங்களும் உங்க கூட கெளம்பி வரலாம்மாண்ணா?" என்று கேட்ட பச்சையன் எதேச்சையாக புடலையனின் தோலை உரசி விட புடலையன் "அய்யோ, அம்மா..... எரியுதே; என் உடம்பு எரியுதே!" என்று கூக்குரலிட்டு அலறி குதியோகுதியென குதித்துக் கொண்டிருந்தான்.

"அய்யய்யோ.... அண்ணா; மன்னிச்சிருங்க; நான் சாப்பாட்டுல காரம் குடுக்குற மொளகால்ல; என் உடம்புல இடுப்பு பக்கத்துல லைட்டா ஒடைஞ்சி போய் கெடக்கு போல! அத நானே கவனிக்கல; அந்தப் பாகம் தான் ஒங்க மேல ஒரசிடுச்சு போலிருக்குண்ணா!" என்று அப்பாவியாக சொன்னவனிடம் தக்காளி நம்பி "சரி விடுப்பா தம்பி.... ஒண்ணுமில்ல!" என்று சொல்லி சமாதானம் செய்தார்.

"எதே ஒண்ணுமில்லயா; யோவ் பெரிசு! அத நான் சொல்லணும்யா; அடுத்தவங்களுக்கு எரிச்சலைக் குடுக்கப் பொறந்தவன்; விரல் சைஸூக்கு இருந்தாலும் என்னமா பத்திக்கிட்டு எரிய வைக்குறான்; டேய் பச்சைப்பையா; நீ இன்னொரு தடவ மட்டும் என் பக்கத்துல வந்து ஒரசுன? லேசா ஒடைஞ்சுருக்குற இடுப்ப பிடிச்சு முழுசா ஒடைச்சு விட்டுடுவேன்! ஜாக்கிரதை! வேற யார் யார் வர்றீங்க என்கூட?" என்று கேட்க அங்கிருந்த கோணிப்பையிலிருந்து, "புடலையண்ணா நானும்.....!" என்று சொல்லிய படி உருண்டு ஓடி வந்தவளை பச்சையன் சென்று வேகமாக பிடித்து நிறுத்தினான்.

"நீ யாரு?" என்று அவளை மேலும் கீழுமாக பார்த்த புடலையனிடம், "ரங்கமணி, தங்கமணி, முத்துமணி மாதிரி நான் வெங்கைமணிடா.....!" என்று வசனம் பேசியவளை முறைத்தவன்,

"என்னது டா வா? ஏய்.... என்ன கொழுப்பா ஒனக்கு? நாந்தான் உங்கள எல்லாம் பத்திரமா இங்கயிருந்து தப்பிக்க வைக்கப் போற லீடர்! அதனால என்னோட மரியாத கொறயுற மாதிரி எப்பவும் என்கிட்ட பேசக்கூடாது!" என்று சொன்ன புடலையனிடம் வெங்கைமணி,

"நீங்க எங்களோட லீடர்னா நீங்க தான் அண்ணா முதல்ல கரெக்டா இருக்கணும்; ரூல்ஸ் மக்களுக்காக தான் போடுவேன், அத தலைவன் நான் ஃபாலோ பண்ண வேண்டியதில்லன்னு நெனக்குறவன் நல்ல தலைவனில்ல! நம்மள விடப் பெரியவரான தக்காளி தாத்தாவ மரியாதையில்லாம தானே நீங்க பேசுறீங்க..... இதுல உங்களுக்கு குடுக்குற மரியாதய மட்டும் நாங்க கரெக்டா குடுக்கணுமோ?" என்று கேட்டவளிடம் ஒன்றும் பதில் பேச முடியாமல் முழித்த புடலையன் தக்காளி நம்பியை நோக்கி,

"என்னோட தப்புக்கு என்னை மன்னிச்சிடுங்க தாத்தா!" என்றான்.

"பரவாயில்ல தம்பி! வெங்கைமணி நீ நல்லா கருத்தா பேசுறியேம்மா! புடலையனோட சேர்ந்து நாம இங்கிருந்து வெளிய போறதுக்கு அவனுக்கு ஏதாவது உதவி செய்!" என்று அவளிடம் சொன்னார் தக்காளி நம்பி.

அடுத்த அரை மணிநேரத்தில் வாழை நாச்சி, கத்தரி அரசி, உருளையன், பீர்க்கையாள் இவர்களும் புடலையனுடன் வெளியே வருவதாக சொல்லி சேர்ந்து கொள்ள ஒவ்வொருவரும் தங்களை மற்றவரிடம் அறிமுகம் செய்து கொண்ட பின்னர்,
அந்த காய்கறிகளின் புதிய கூட்டணி எப்படி மடப்பள்ளியிலிருந்து தப்பித்து தாங்கள் அனைவரும் வெளியே செல்வதென ஆர்வத்துடனும், அவசரத்துடனும் திட்டம் போட ஆரம்பித்தனர்.

நம்பிகளும்....நங்கைகளும் வருவார்கள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro