Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

41

தூரம்

வாட்டர்லூ வெஸ்ட் என்னும் காலனியில் ஜஃபீனாவின் வீட்டுக்கு வந்தவள், எதேச்சையாக சாலையின் மறுபுறம் இருந்த பூக்கடையைப் பார்த்தாள்.

அங்கே இருந்ததோ விஷ்வா.

விஷ்வாவை அங்கு கண்டதும் மஹிமா அதிர்ச்சியில் உறைந்தாள்.

அவனோ எங்கும் பாராமல் எதிரில் நின்ற பெண்ணோடு ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டே பூக்களை ஒரு பூங்கொத்தாக அடுக்கிக்கொண்டிருந்தான்.

நண்பர்கள் இழுக்கவும் மஹிமா தன்னிலை திரும்பி, எதுவும் காட்டிக்கொள்ளாமல் நகர்ந்தாள். ஒவ்வொருவராக விடைபெற்று அவளைப் பேருந்து நிறுத்தத்தில் விட்டுவிட்டுச் சென்றனர்.

வீடு செல்லும்வரை அவளது மனம் அலைந்து கொண்டிருந்தது. வழக்கத்தை விடச் சற்று முன்னதாகவே வீடு வந்திருந்தாள் அவள்.

அவள் நினைத்ததுபோல் வீட்டில் யாருமில்லை. மனது வலித்தது.

சரியாக ஒரு மணி ஆனதும், விஷ்வா வீட்டுக்குள் வந்தான்.

"Hi.. தூங்கிட்டு இருந்தேன். அதான் ஃபோன் எடுக்கல. அப்றம் இப்பதான் உன் மெசேஜ் பார்த்தேன். நீ சாப்பிட்டு வந்துட்டல்ல, அதான், எனக்கு லஞ்ச் வாங்க வெளிய போயிருந்தேன்"

எப்படி விஷ்வா உன்னால் இவ்வளவு சரளமாக பொய் சொல்ல முடிகிறது?

"ஓ.." என்றாள் அவள், சுரத்தின்றி.

"உன் ஃப்ரெண்ட்டோட வீட்டு சாப்பாடு எப்டி இருந்தது? ரொம்ப நாள் கழிச்சு வீட்டு சாப்பாடு... செம்மையா இருந்திருக்குமே?"

ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாள் அவள்.
"விஷ்வா.. என் ஃப்ரெண்ட் வீடு வாட்டர்லூ வெஸ்ட்ல இருக்கு"

அவன் சற்றே திடுக்கிட்டாலும் , உடனே சுதாரித்துக் கொண்டான்.

"ஓ.. அது ரொம்ப எலைட் கம்யூனிட்டி ஏரியா இல்ல? வீடெல்லாம் அழகா இருக்கும்"

"ம்...அங்க ஒரு பூக்கடை கூட இருக்கு. Ethel's florists"

இப்போது அவனுக்கு எல்லாம் புரிந்தது. பெருமூச்சு விட்டவன் அவளருகே வந்தான்.

"மஹிமா--"

"ஏன் விஷ்வா? நான் உனக்கு என்ன கொடுமை செஞ்சேன்? ஏன் எங்கிட்ட இருந்து எப்பவும் எதையாவது மறைச்சுகிட்டே இருக்க? யார் அந்தப் பொண்ணு??"

கண்ணீரோடு வெடித்தாள் அவள். அவள் கையில் மாட்டி அவனது சட்டை கசங்கிக் கொண்டிருந்தது.

அவனோ எங்கும் பாராமல் தலைகவிழ்ந்து நின்றான்.

"அப்ப... நான் பார்த்ததெல்லாம் உண்மையா? மறுத்துக் கூட பேச மாட்டயா? நீ மாறிட்டனு நெனச்சேனே.. என்கிட்ட உண்மையா இருப்பனு நெனச்சனே.. உன்னப் போய் நம்புனேன் பாரு.."

அவன் மார்பிலேயே சாய்ந்து அழுதாள் அவள். கண்ணீர் வெள்ளமென வழிந்து அவனது சட்டை முழுக்க நனைத்தது.

"நான் சொல்றத ஒரு நிமிஷம் காது கொடுத்து கேட்டுட்டு, அப்றம் என்னை என்ன வேணா பண்ணு"

"தேவையில்ல.. நீ எதுவும் சொல்லத் தேவையில்ல. நான் ஒரு முட்டாள். அன்னிக்கு வேணி அவ்ளோ தூரம் சொல்லியும் நான் கேக்கல!"

மஹிமா வேகமாக தன்னறைக்குச் சென்று கதவடைத்துக் கொண்டாள். விஷ்வாவின் முகத்தில் கோபமும் குழப்பமும் சூழ்ந்தன.

"மஹிமா.. முதல்ல என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்கிட்டு, அப்றம் கோபப்படு. ஏதோ உனக்கு மட்டும்தான் கோபம் வரும்னு நெனைச்சிட்டு இருக்கியா? உனக்காக ஆயிரம் மைல் தாண்டி உன்னோட இருக்கணும்னு வந்திருக்கேன். ஆனா நீ, என்மேல துளி கூட நம்பிக்கை இல்லாம இருக்க. எனக்கும் வலிக்கும் மஹிமா."

கதவின் மறுபுறம் நின்று கத்திப் பேசினான் அவன்.

மறுபுறமோ அமைதிகாத்தது பிடிவாதமாக. அவளது மௌனம் துன்புறுத்தியது அவனை.

"மஹி, என்னால வீட்ல சும்மாவே உட்கார்ந்து இருக்க முடியல. உங்கிட்ட இதை சொன்னா நீ இன்னும் ஃபீல் பண்ணுவ. உனக்காக நான் இங்க இருக்க ஒத்துக்கிட்டது உண்மைதான். ஆனா, உங்க அப்பாவோட காசில எத்தனை நாள்தான் நானும் கூச்சமில்லாம சாப்டறது? அதான். உன்னை ஒருநாள் காலேஜ்ல விட வந்தேனே, அப்போதான் அந்த கடைல hiring னு போர்ட் போட்டிருந்தத பார்த்தேன். உடனே வேலைல ஜாய்ன் பண்ணிட்டேன். உன்கிட்ட இருந்து எதையும் மறைக்கணும்னு நெனைக்கல. ஆனா எப்படி சொல்றதுன்னு தான்.. கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தேன்"

கதவைத் தாண்டி அவனது கம்மிய குரல் தெளிவாகச் செல்லவில்லை. மஹிமாவின் மனது எதை எதையோ நினைத்துக் குழம்பியது. அவன் கூறியது எதுவும் அவளுக்குக் கேட்கவில்லை சரியாக. அவளது அழுகையில் சுற்றிலும் இருந்த சத்தங்கள் நீர்த்துப் போயின.

அவனோ அதுபுரியாமல் இன்னும் பேசிக்கொண்டிருந்தான்.

"எந்த வேலையும் கேவலமானது இல்ல மஹி. In fact, எந்த வேலையும் இல்லாமல் இருக்கறதுதான் கேவலமானது. நான் இங்க சந்தோஷமா தான் இருக்கேன். என்ன, பழைய விஷ்வாவா இருந்திருந்தா, வெட்டியா இருக்க பிடிச்சிருக்கும். ஆனா இப்ப, வேலை செய்யப் பிடிச்சிருக்கு. அதான் பூக்கடைக்கு வேலைக்குப் போனேன். வேற நீ நினைக்கற மாதிரி உனக்கு துரோகமெல்லாம் செய்யலை நான்."

மஹிமா பதில் ஏதும் பேசவில்லை. நீண்ட நேரம் அவளது கதவருகிலேயே காத்திருந்தவன், பின் கனத்த மனதுடன் எழுந்து சென்றான். தன் காதலி தன்மீது கண்மூடித்தனமாக சந்தேகப்படுவது அவனை வருத்தியது.

'இந்த முறை நான் எந்தத் தப்பும் செய்யவில்லையே. பின் நான் எதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும்? ஒரு முறை அவள் கேட்கட்டும். அவளாகப் பேசட்டும்.'

இரவு இருவரும் பட்டினி கிடந்தனர். மஹிமா பத்து மணிக்கு எழுந்து வெளியே வந்தாள். விஷ்வா அவனறையில் உறங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. அவனைப் பார்த்ததும் கண்ணீர் மீண்டும் துளிர்த்தது. கண்களைத் துடைத்துக் கொண்டு தன்னறையில் படுத்துக் கொண்டாள்.

-----------

விஷ்வா அன்றிலிருந்து முழுநேரப் பணிக்கு செல்ல ஆரம்பித்தான். காலையில் அவன் முதலில் சென்று விடுவான். பின்னர் அவள் கிளம்பி கல்லூரிக்குப் போவாள். மதியம் கல்லூரி முடிந்ததும் அவள் வீட்டிற்கு வருவாள். கல்லூரி வேலைகள், வீட்டுப்பாடங்கள் எழுதுவாள். மாலை நான்கு மணிக்கு விஷ்வா வருவான். இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும், முகம்பாராமல் அந்நியர்கள்போல் நடமாடினர்.

மஹிமாவின் கல்லூரியில் அடிக்கடி இந்தியர்களுக்கும், சொந்த நாட்டு மாணவர்களுக்கும் ஏதாவது தகராறு நடந்து கொண்டே இருந்தது. ஒருமுறை வகுப்பறையில் வைத்தே நவ்நீத்தை இரண்டு பேர் வம்பிழுத்து அடித்தனர். கல்லூரி நிர்வாகத்தில் மஹிமா தான் புகாரளித்தாள். அதற்கு நிர்வாகிகள், மாணவர் சண்டையில் நிர்வாகம் தலையிடாது, மாணவர் சங்கத்தில் தான் முறையிட வேண்டும் என்று அவளது புகாரை ஏற்க மறுத்துவிட்டனர்.

மஹிமா அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாமல் போனது. அவர்களுடன் நண்பர்களாக இருக்கலாம் என்று இவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீண்போனது. சகித்துக் கொண்டு வாழ்ந்திருந்தனர். வீட்டிலும் துன்பம், வெளியிலும் துன்பம் என்றாகிப் போனது அவளுக்கு.

ஒருநாள் கல்லூரியில் இருந்து வெளியே நடந்து வரும்போது அவளை முதல் நாள் தள்ளிவிட்ட அதே இளைஞன் அவள்முன் வந்தான். சற்றே பயமாக இருந்தது அவளுக்கு. சுற்றுமுற்றும் பார்த்தாள். ஒருவரும் உதவிக்கு வருவதுபோல் தெரியவில்லை.

சரி, நாசூக்காக ஒதுங்கிவிடலாம் என்று எண்ணி அவள் ஓரமாகப் போனாள். அவனோ, மீண்டும் வந்து மறித்தான் அவளை.

அவன் கையிலிருந்த கத்தி அவளைப் பார்த்து குரூரமாகச் சிரித்தது.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro