Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

33

காவலன்

அந்த White Hart Yard பகுதி, லண்டனின் மிக நவீனமான பகுதிகளில் ஒன்றாகும். சிறிய இடம் என்றாலும், அங்கே இரண்டு கல்லூரிகளும், பதினைந்து உணவகங்களும், மூன்று வங்கிகளும், ஐந்து ஷாப்பிங் மால்களும் நிறைந்திருந்தன. தேம்ஸ் நதியின் தென்கரையில் இருந்த இந்தப் பகுதியில், இளைஞர் பட்டாளம் எப்போதும் குழுமியிருக்கும்.

மஹிமாவின் கல்லூரியான London School of Commerce, (இனி LSC) அந்தப் பகுதியில் மையத்தில் வீற்றிருந்தது. கோட்டை போன்ற அக்கல்லூரியைச் சுற்றியே மற்றவை யாவும் இருந்தன.

மஹிமா கல்லூரியின் தோட்டத்தை ரசித்திருக்க, திடீரென அவளெதிரில் வந்த ஒரு ஆங்கிலேய இளைஞன்,
"Go away! You are not welcome here" என்று அவள் முகத்தில் கத்தினான். திடுக்கிட்ட மஹிமா, சிலையாய் உறைந்துபோனாள்.

அவன் மேலும்,

"You Asian mongrels... get lost" என்று திட்டிவிட்டு, மூர்க்கமாக அவளைக் கீழே தள்ளிவிட்டு எங்கோ சென்று மறைந்தான்.

கீழே விழுந்தவள் எழுந்து நிற்பதற்குள், அவளைச் சுற்றி கூட்டம் கூடியது. ஆளாளுக்கு ஏதோ பேசினரே தவிர, யாரும் அவளுக்கு உதவ முன்வரவில்லை. தானாகவே எழுந்து, தன் பையையும், சிதறிய ஆவணங்களையும் திரட்டி எடுத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றாள். அவமானத்தில் கண்ணீர் வெள்ளமென வழிந்தது.

கல்லூரி வாசல் வரை மட்டுமே அவளால் நடக்க முடிந்தது. அழுகையில் தந்தையின் நினைவும், கூடவே காரணமின்றி விஷ்வாவின் நினைவும் சேர்ந்துகொள்ள, இதயம் வெடிப்பதுபோல வலித்தது. அதற்குமேல் நிற்க முடியாமல் வெளிச்சுவற்றில் சாய்ந்தாள் அவள்.

அவளது மனக்குரல் கடவுளுக்குக் கேட்டிருக்க வேண்டும். அந்த whitehart யார்டில் இருந்த இரண்டாவது கல்லூரி- கிங்ஸ் கல்லூரியேதான்.

ஓடிவந்து தன்னை அணைத்துத் தோளில் சாய்த்துக் கொள்பவனின் முகம்பார்க்கத் தேவையில்லை அவளுக்கு. அவனது அணைப்பே அவன் யாரென்று கூறியது.

"விஷ்வா..."
அழுகையினூடே நடுக்கத்துடன் சன்னமாய் அவளது குரல் வந்தது.

"நீ.. எப்படி.. இங்க..?"

"ஒன்னும் இல்ல மஹிமா... நான் வந்துட்டேன்.. ஏன் அழற? என்ன ஆச்சு?"

பதில் கூறாமல் மேலும் விக்கிவிக்கி அழுதாள் அவள். அவன் நிற்காமல் அவள் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் கூறியவாறே அவளைக் கைத்தாங்கலாகத் தூக்கிக் கொண்டு பேருந்து நிறுத்தத்திற்கு நடந்தான்.

அவன் பின்னால் பரத் ஓடிவந்தான்.
"டேய் விஷ்வா.. யார் இது? என்னடா ஆச்சு?"

"பரத்... நீ லீடர்கிட்ட சொல்லிடு. நான் போகணும். மஹிமாவுக்கு நான் வேணும். நீங்க எல்லாரும் போய் சாப்பிடுங்க, எனக்கு வேலை இருக்கு. நான் போறேன்."

புரிந்துகொண்டு அங்கிருந்து விலகினான் பரத்.

விஷ்வா அவளுடன் நிறுத்தத்தில் காத்திருந்து, வந்து நின்ற பேருந்தில் அவளை ஏற்றிவிட்டுத் தானும் ஏறினான். ஆளற்ற இருக்கை ஒன்றில் இருவரும் அமர்ந்தனர். அவன் தோளில் சாய்ந்துகொண்டாள் அவள். அழுகை குறைந்ததே தவிர நிற்கவில்லை. அவ்வப்போது விசும்பல் வெளிப்பட்டன.

அவள் தலையை வருடிக் கொடுத்தவாறு அவளிடம் பேச்சுக் கொடுத்தான் அவன்.

"என்ன நடந்தது மஹி? ஏன் இப்டி அழற?"

அவள் விசும்பல்களினூடே நடந்ததைச் சொல்ல, விஷ்வாவின் முகம் இறுகியது. கைகள் புடைப்பதை அவளால் உணர முடிந்தது.

"ராஸ்கல்! மஹி, அவனை நான் கவனிச்சுக்கறேன். நீ அவனை நாளைக்கு அடையாளம் மட்டும் காட்டு. அவன் செத்தான் நாளைக்கு", பற்களைக் கடித்துக்கொண்டு அவன் சொல்ல, மஹிமா 'வேண்டாம்' என்பதுபோல் தலையசைத்தாள்.

"அதெல்லாம் எதுக்கு விஷ்வா? இது என்னோட பிரச்சனை. நான் பாத்துக்கறேன்"

"இல்ல மஹி...நாளைக்கு அவன..."
சட்டென அவனுக்கு நினைவு வந்தது.

'நாளைக்கு... ஐயோ நாளை ஊருக்குத் திரும்ப வேண்டுமே...'

"விஷ்வா... நீ வந்ததே போதும் விஷ்வா. எனக்குன்னு யாரும் இல்லைன்னு நான் நினைச்ச நேரத்துல நீ வந்தது விதியோ தற்செயலோ.. அதுவே இப்ப என் மனசுக்குப் போதும்."

அவள் அழுகை நின்று, அமைதியாக வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிட்டாள்.

சிறிது நேரம் மௌனம் நிலவியது. அது பிடிக்காதவனாய் அவனே பேசினான்.

"சரி, நீ எங்க போகணும்? நாம இன்னும் டிக்கெட் எடுக்கல."

லேசாக சிரித்தாள் மஹி.
"விஷ்வா... இது நம்மூர் மாதிரி இல்ல. இங்க பஸ்க்கு டிக்கெட் கிடையாது. ஒரு travel card தான். பஸ்-பாஸ் மாதிரி. ஒரு நாளைக்கு ரெண்டு யூரோ. இல்லனா ஒரு வாரத்துக்கு பத்து யூரோ. Bus stationsல காசு கட்டி அந்த கார்ட் வாங்கிக்கணும். இறங்கும்போது அதைக் காட்டினா தான் விடுவாங்க"

அவள் சொல்வதை வியப்போடு கேட்டவன்,
"சரி... நீ அந்த கார்ட் வச்சிருக்கல்ல? நாம ரெண்டு பேருக்கும் அது போதும் தான?" என வினவினான்.

"நான் எங்க அதை வாங்கினேன்? நீதான் அதுக்குள்ள தூக்கிட்டு வந்துட்டயே!"

"ஐயையோ... இப்ப என்ன பண்றது?"

"லண்டன்ல ட்ராபிக் ரூல்ஸ் ரொம்ப ஸ்ட்ரிக்டு! இங்க எல்லாம் இந்த மாதிரி டிக்கெட் இல்லாம மாட்டுனா உடனே போலீஸ் கேஸ் தானாம். மினிமம் ஒரு வருஷம் ஜெயில்."

அவள் கூறவும் பதற்றமடைந்தான் விஷ்வா. புலம்பிக்கொண்டே சுற்றுமுற்றும் திரும்பி தப்பிக்க ஏதாவது வழி உள்ளதா என்று தேடினான்.

சோர்ந்துபோய் பயத்தோடு திரும்பியவனின் கண்ணில் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கியவாறு அமர்ந்திருந்த மஹிமா தெரிந்தாள். அவன் அவளைப் பார்த்ததும் அடக்க முடியாமல் வெடித்துச் சிரித்தாள்.

"பயந்துட்டல்ல?" மேலும் சிரிப்பு.

"அ... அப்போ போலீஸ்... அது எதுவும் வராதா?"
நன்றாகக் குழம்பியிருந்தான் விஷ்வா.

"உங்கிட்ட உன்னோட பாஸ்போர்ட், விசா ரெண்டும் இருக்கா?"

"ம்..இருக்கு. ஏன்?"

"அதுபோதும். இது டூரிஸ்ட்ஸ் சீசன். அதனால, லண்டன் டூரிஸம் டிபார்ட்மெண்ட் தங்களோட விசா கூடவே, ரெண்டு நாள் லண்டன் பஸ்ல ஃப்ரீயா travel பண்றதுக்கு பாஸ் தர்றாங்க. இத பாரு"

அவனது விசாவின் கடைசி லைனில் இருந்த ஒரு பார்கோடை சுட்டிக்காட்டினாள்.

"இதை scan பண்ணினா போதும். கார்ட் தேவையில்ல."

"ஓ... சரி.. நான் டூரிஸ்ட் விசா. நீதான் ஸ்டூடண்ட் விசாவாச்சே... அப்றம் எப்டி?"

கண்களில் குறும்பு மின்ன, தன் கைப்பையிலிருந்து தன் travel cardஐ எடுத்துக் காட்டினாள் அவள்.

"இன்னிக்கு காலைல தான் வாங்கினேன். இல்லனா எப்டி உன்ன நம்பி பஸ்ல ஏறுவேன்?"

அவள் மேலும் சிரிக்க, அவனுக்கும் சிரிப்பு வந்தாலும் பொய்யாக முறைத்தான்.

"உன்ன..."

விஷ்வா அவளை அடிப்பதுபோல் கை ஓங்க, அவள் பயந்தவாறு அவனைக் கட்டிக்கொண்டாள்.

மின்சாரம் பாய்ந்ததுபோல சிலிர்த்தான் அவன். மீண்டும் ஒருமுறை மிரட்ட, அவள் இன்னும் இறுக்கமாக அணைத்தாள்.

இருவருக்குமே அது மிகவும் தேவைப்பட்டதாக இருந்தது. விஷ்வாவின் மனது ஏக்கத்தால் நிறைந்திருந்தது.

அந்த அணைப்பின் கனப்பில் அவள் கெஞ்சல் குரல் சங்கீதமாகக் கேட்டது.

"என்னோடவே இருந்துடேன் விஷ்வா..."

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro