Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

29

மாயங்கள்

மஹிமா விமான நிலையத்தின் முன்பக்க ரிசெப்ஷன் லவுஞ்ச்சை அடைந்து,  தன் கைப்பையில் இருந்து அலைபேசியை எடுத்து, அதை ஃப்ளைட் மோடில் இருந்து விடுவித்தாள். தன் பெயர் தாங்கிய பலகை ஏதேனும் உள்ளதா என்று தேடியபடியே நடக்கலானாள்.

தூரத்தில் ஆங்கிலத்தில் தன் பெயரை ஏந்திய அட்டையைக் கண்டு அதை நோக்கி நடக்க எத்தனித்தவளை, வேறொரு பலகை தடுத்து நிறுத்தியது. அதில் 'மஹிமா' என்று தமிழில் எழுதியிருந்தது. அப்பலகையை ஏந்தியவனின் முகத்தைப் பார்த்தாள் அவள்.

மஹிமாவுக்கு அதிசயங்களில் நம்பிக்கை இருந்தாலும், இப்படி ஒரு அதிர்ச்சியை எதிர்பாராததால் ஸ்தம்பித்து நின்றாள்.

மெல்லிய புன்னகையுடன் கண்ணில் சிறு பதற்றத்துடன் கையில் தன் பெயரை ஏந்தி நின்றிருந்த விஷ்வாவைக் கண்டதும் அவளுக்கு அதிர்ச்சி, வியப்பு, ஆத்திரம், எல்லாம் கலந்த உணர்வு நெஞ்சை முட்டியது.

தகிக்கும் கண்களால் எரித்துவிடுமாறு அவள் பார்க்க, விஷ்வா முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது. அவளை நெருங்க முடியாதவாறு இடையில் தடுப்புகள் வேறு இருந்தன.

இருகணங்கள் செயலற்று நின்றவள், சுயநினைவு வரப்பெற்று, பிடிவாதமாக அவனைத் தவிர்த்துவிட்டு, தன் தந்தையின் நிறுவனப் பணியாளரை அணுகினாள் அவள்.

"Hello.  I'm Mahima"

"Ohh.. Warm Welcome Madam. My name is Narayanan" என்று அந்தப் பையன் கைகொடுத்தான்.

சின்ன வயதாகத் தெரிந்தது அவனுக்கு. பைகளை அவனிடம் கொடுத்தாள் அவள். அவனிடம் மேற்கொண்டு பேசும் முன்னர் விஷ்வா அவளை நெருங்கியிருந்தான்.

"சார், இவங்ககூட நான் கொஞ்ச நேரம் பேசணும்"

விஷ்வா அவளைப் பார்த்தவாறே பேசினான்.

நாராயணன் அவனை ஏற இறங்க ஒருமுறை பார்த்துவிட்டு, திரும்பி மஹிமாவிடம், "மேடம், மீக்கு தெலுசின வாரா( உங்களுக்கு தெரிஞ்சவரா)?" என்று சன்னமான குரலில் கேட்டான்.

அவள் பதில் சொல்லாமல் விஷ்வாவை நெருப்பாக முறைத்தவாறு நின்றிருந்தாள் அவள்.

"என்ன மஹி? என்னைத் தெரியுமான்னு தானே கேக்கறான்? பதில் சொல்லேன்.."

அவன் பேசி முடிப்பதற்குள் அருகிலிருந்த தடுப்புக் கட்டையை கையில் எடுத்திருந்தாள் அவள்.

அவன் சுதாரிப்பதற்குள் காலில், முதுகில், கையில் என்று சரமாரியாக தர்ம அடி விழுந்தது.

"மஹிமா! வலிக்குது!! மஹிமா ஸ்டாப்! ப்ளீஸ்... ஸாரி... ஐ லவ் யூ... மஹிமா ப்ளீஸ்.." என்று கத்தி அலறியவனைப் பொருட்படுத்தாமல்,கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தாலும், கோபத்துடன் அவனைப் போட்டு அடித்தாள்.

"எத்தனை நாள்... எத்தனை நாள் என்னை அழ வெச்சிருப்ப? என்னை நிம்மதியா ஒரு நாள் தூங்க விட்டுருப்பயா? என்னை ஹர்ட் பண்ணிட்டு, வேற ஒரு பொண்ணுகூட... அவளையும் உன் தேவைக்காக யூஸ் பண்ணிக்கிட்டு... மனுஷ ஜென்மமாடா நீ? உன்னையெல்லாம் உயிரோடவே விடக் கூடாது!"

விஷ்வா அடிவாங்கி அலறினாலும், அவளைத் தடுக்கவில்லை.

அவள் சோர்ந்துபோய் அடிப்பதை நிறுத்தினாள். அதற்குள் அங்கு கூட்டம் சேர்ந்து, ஓரிரு காவலர்களும் வந்துவிட, அவர்களை விஷ்வா சமாளித்து, மன்னிப்புக் கேட்டு அனுப்பி வைத்தான்.

மீண்டும் மஹிமாவிடம் திரும்பினான் கெஞ்சும் பார்வையோடு.

"நான் பண்ண எல்லாத்துக்கும் மனசார ஸாரி கேக்கறேன். உன்னைப் புரிஞ்சுக்காம நான் உன்ன ரொம்பவே காயப்படுத்திட்டேன். நான் ரொம்பப் பெரிய தப்புப் பண்ணிட்டேன். எனக்கு நீ என்ன தண்டனை வேணும்னாலும் கொடு. நான் சந்தோஷமா ஏத்துக்கறேன். இப்போ அடிச்சமாதிரி உன் ஆத்திரம் தீரர வரைக்கும் அடி. நான் வாங்கிக்கறேன். ஆனா நீ இல்லாம என்னால இருக்க முடியாது மஹி"

"பெரிய இவன்... வந்துட்டான் மன்னிப்புக் கேட்க. போடா... என்னல்லாம் சொன்ன நீ.. நான் உனக்கு வேண்டான்னு சொல்லி என்ன விரட்டல? ஒரு ஸாரி கேட்க அவ்ளோ ஈகோ உனக்கு... உடனே ஜூனியர் பொண்ணத் தேடிப் போற. அதை நான் பாக்கணும்னு என் முன்னாடியே வருவ... எவ்ளோ திமிருடா உனக்கு? எப்படியெல்லாம் யோசிச்சு யோசிச்சு கஷ்டப்படுத்துன என்னை!? இப்ப இங்க வந்து ஸாரி கேட்டா? எல்லாம் சரியாயிடுமா??"

அவள் அழுதுகொண்டே கத்த, ஊரே நின்று வேடிக்கை பார்த்தது அவர்களை.

விஷ்வாவிற்கும் கண்ணீர் வந்தது. அவன் அழுதுகொண்டே அவள்முன் மண்டியிட்டான்.
"தப்பு தான் மஹி. ஆனா நான் எல்லாமே நீ எங்கிட்டத் திரும்பி வரணும்னு தான் செஞ்சேன். அதெல்லாம் சரியா தப்பான்னு கூட நான் யோசிக்கல. I was mad with love. நான் மத்ததெல்லாம் பண்ணினதுக்கு உங்கிட்ட வந்து காலைப் பிடிச்சு மன்னிப்புக் கேட்ருக்கலாம்.. ஐம் ரியலி ஸாரி மஹி... பேசினா எல்லாம் சரியாகும்னு சொல்லுவியே... நாம பேசாததால பெருசான பிரச்சனை தானே இது? பேசித் தீர்த்துக்கலாம் மஹிமா... ப்ளீஸ்"

"பேசுறதுக்கு எதுவுமே இல்ல! பொறுக்கி! ஃப்ராடு! போ இங்கிருந்து! என் கண்ணு முன்னால நிக்காத விஷ்வா, உன்னைக் கொன்னாலும் கொன்னுடுவேன் நானு!"

"உன் கையால செத்துப்போகவாச்சும் எனக்குத் தகுதி இருக்கா மஹிமா?" என அவள் கால்களைப் பற்றிக்கொண்டான் அவன்.

அவள் மனதில் புயலே வெடித்தது. எத்துணை உறுதியாக அவன் வேண்டாமென்று இங்க வந்த போதிலும், அவன் அவ்வாறு கண்ணீரில் கரைவதைக் காணச் சகிக்கவில்லை அவளுக்கு.

"ப்ச், என்னை விடு விஷ்வா. எனக்குப் போகணும்."

நிமிர்ந்து ஏக்கமான பார்வை பார்த்துவிட்டு பின் அழுதபடியே அவளை விட்டான் அவன்.

இரண்டடி தள்ளிச் சென்றவள் நின்றாள். அவன் அப்போதும் அப்படியே சரிந்து அழுதுகொண்டிருக்க, அவள் மனது பிசைந்தது.

'மஹிமா.. வேண்டாம் போகாதே. அவன் எப்படியோ போகட்டும்.. தயவுசெய்து மீண்டும் அவனிடம் செல்லாதே...'

ஆனால் மூளையின் குரல் காதலுற்ற மனதுக்கு எட்டவில்லை.

"விஷ்வா... எழுந்திரு ப்ளீஸ். எல்லாரும் பாக்கறாங்க"

கண்ணைத் துடைத்தவாறு அவள் விஷ்வாவிடம் வந்தாள்.

"என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லு மஹிமா. அப்போதான் எழுந்திரிப்பேன்"

"நான் எதுக்கு உன்ன மன்னிக்கணும்..? நமக்குள்ள எதுவும் கிடையாது. என்னைத் தேடி நீ வந்திருக்கவும் கூடாது. இப்போ எழுந்திரு."

"ப்ளீஸ் மஹி... என்னோட பழையபடி பேசு. சிரி. சண்டைபோடு. சமாதானமாகு. நாம எத்தனை சந்தோஷமா இருந்தோம்... அதே மாதிரி மறுபடியும் இருக்க முடியாதா?"
அவன் எழுந்து அவளைக் கட்டியணைத்துக் கெஞ்சினான்.

அவன் அணைப்பில் தன்னைத் தொலைத்தாள் மஹிமா. ஆனாலும் மனதில் வருத்தம் மிச்சமிருந்தது.

ஆனால் அவனது உடல்வெப்பம் ஏசி காற்றிலும் கனப்பூட்டியது. விழிமூடி அவன் தோளில் சாய்கையில் தன் வீட்டிலிருப்பதுபோல உணர்ந்தாள் அவள். எத்தனையோ நாட்கள் ஏங்கிய தாய்மடியை நினைவூட்டிய அவனது அணைப்பு அவள் சித்தத்தை கலக்கியது.

அதே மென்மை, அதே இதம்... அவளது விஷ்வா இவன். இவனது மஹிமா அவள்.

"எனக்கொரு second chance தருவயா மஹிமா?"
உருக்கமாகக் கெஞ்சினான் அவன். அவள் மனதும் கிட்டத்தட்ட அவன்புறம் சாய்ந்திருந்தது.

அவள் பதில் சொல்வதற்குள் அவ்வளவு நேரம் வாயடைத்து நின்று பார்த்துக் கொண்டிருந்த நாராயணன் அழைத்தான்.

"மேடம் மீ நாநாகாரு போன்லோ பிலிஸ்த்துன்னாரு" என்றபடி கைபேசியை நீட்டினான்.

அவள் தந்தை அவளை ஃபோனில் அழைத்துக் கொண்டிருந்தார்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro