Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

17

இருமனம்

விஷ்வா குழப்பத்தின், ஆற்றாமையின் உச்சத்தில் இருந்தான்.

'கோபம் கொண்டு பேசிய வார்த்தைகள் அமிலம் தான் என்றாலும், கொண்ட காதல் அதில் கரைந்துவிடுமா? நம் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கக் கூட ஒரு வாய்ப்புக் கிடையாதா?'

மஹிமாவின் மனதைப் புரியாமல் கத்தியது தவறென உணர்ந்திருந்தாலும், மனதின் ஒரு மூலையில் குரோதக் குரலொன்றும் ஒலித்தது இன்னும் விடாமல்.

இன்னும் எவ்வளவு தூரம் தான் இறங்கிப் போவாய் விஷ்வா?

என்ன செய்யவெனப் புரியாது, நிலைகுலைந்து, கதவை சாத்தக் கூட மறந்து, தலையில் கைவைத்தபடி தரையில் அமர்ந்திருந்தவனை, அந்தப் பக்கம் நடந்து வந்த சர்வேஸ்வரன் பார்த்துத் திகைத்தார்.

தம்பியை எப்போதும் உற்சாகமின்றிப் பார்த்ததே இல்லை அவர். தினம் தினம் காலையில் சரமாரியாகக் கிடைக்கும் அம்மாவின் அர்ச்சனைகளை அசராமல் வாங்கிக்கொண்டு அழகாகப் புன்னகைப்பான் அவன். வகுப்பில் ஆசிரியர்கள் திட்டினாலும்கூட சோர்ந்து போக மாட்டான். தோளைக் குலுக்கிவிட்டுத் தன்பாட்டில் சிரிப்பான்.

மாறாத அவனது உற்சாகம் தனது வாழ்க்கையின், உழைப்பின் வெற்றியாகவே கருதப்பட்டது சர்வேஸ்வரனால். எனவே இன்று நிலைகுலைந்து அமர்ந்திருந்தவனைப் பார்த்தபோது மனது சற்றே பதறியது.


"விஷ்வா, என்ன நடக்குது இங்க?" என்றவாறு உள்ளே நுழைந்தார்.

அவரைக் கண்டதும் எழுந்து நின்றான் விஷ்வா. பயமல்ல, அன்பு கலந்த மரியாதை.

உள்ளே வந்து அவன் தோளில் ஆதுரமாகக் கைவைத்து மீண்டும் கேட்டார் அதையே.

"ஒன்னும் இல்லயேண்ணா"

இயல்பாகப் புன்னகைக்க முயன்று தோற்றான் விஷ்வா.

"காலேஜ்ல இருந்து வந்தவன் சட்டையக் கூட கழட்டாம உட்கார்ந்திருக்கியே.. உடம்பு எதும் சரியில்லையா?"

"இல்லண்ணா.. அம்மா.."

"எதாச்சும் திட்டுனாங்களா?"

"அதெல்லாம் எனக்கென்ன புதுசா?"

"அப்றம் ஏன்டா மூஞ்சி மூணு கோணலா சுருங்கி இருக்கு?" என சிரிக்க முயன்றார் அவர்.

அவன் முகத்தை சுழித்தான்.

"அம்மா ஷாப்பிங் போகக் கேட்டப்போ என்னைக் கேட்டு நான் ஃப்ரீயா இருந்தா போலாம்னு சொன்னீங்களாமே?"

"ஆமாடா.. இது நம்ம வீட்டு பங்ஷன்ல? எல்லாரும் தேவையானதை வாங்கணும். உனக்கும் பிடிச்ச மாதிரி துணி எடுக்கணும், நீ வரலேன்னா எப்டி விஷ்வா?"

"எனக்கு எத்தனை எடுக்கப் போறோம்.. ரெண்டு ஷர்ட், ரெண்டு பேண்ட். அவ்ளோ தானே?"

அலட்சியமாக அவன் சொல்ல, அண்ணன் கண்டித்தார்.

"துணி எடுக்கிறது மட்டுமில்லடா... எல்லா சொந்தக்காரங்களையும் பாக்கணும், பேசிப் பழகணும்... மிங்கிள் ஆகணும். எத்தனை நாள் ஒதுங்கியே இருப்ப... நீயும் குடும்பத்துல ஒருத்தன் தான? பெரிய பையனா பொறுப்பா இருன்னு உன்னைப் பாக்குற எல்லோரும் சொல்லறாங்கல்ல... என்ன பண்ணி இவங்க வாய எல்லாம் மூடப் போற? நீயா முன்வந்து எல்லோரையும் கூட்டிட்டு போய் organize பண்ணி இந்த ஷாப்பிங்ல உன்னோட responsiblity எவ்ளோன்னு காட்டுடா. உன்னை மத்தவங்களுக்கு ப்ரூவ் பண்ணு.."

அன்றைய நாளிலே முதல்முறையாக ஒருவர் அவனுக்கு ஆதரவாய்ப் பேச, கண்கள் கலங்க அவரையே இமைக்காமல் பார்த்தான் அவன்.

"டேய் டேய்... ஆம்பளைங்க அழக் கூடாது டா"

"யாருண்ணா சொன்னா, பசங்க அழமாட்டாங்கனு? அவங்களுக்கு மட்டும் ஃபீலிங்ஸ் கிடையாதா என்ன? அவங்களைப் புரிஞ்சுக்காம எல்லோரும் hurt பண்ணா என்ன தான் பண்றது?"

"டேய்... நா உன்ன கஷ்டப்படுத்தனும்ணு சொல்லல விஷ்வா..."

"ஐயோ ஏன் அண்ணா... இதுவரை நீங்க மட்டும்தான் என்னைப் புரிஞ்சுகிட்டு பேசிருக்கீங்க... தேங்க்ஸ் அண்ணா"

"பெரிய மனுஷா... எங்கிட்ட இருந்தே ஸ்டார்ட் பண்றியா? புதுசா தேங்க்ஸ் எல்லாம் சொல்ற!?"

அண்ணன் நகைக்கவும் வாய்விட்டுச் சிரித்தான் அவன். மனது லேசானது போல் உணர்ந்தான். அண்ணன் தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைப் பொய்யாக்கக் கூடாது என்று உறுதியெடுத்தான்.

அடுத்த நாள் கல்லூரி விடுப்பு எடுத்துவிட்டு அவனே கடைக்கு உறவினர்களைக் கூட்டிக் கொண்டு கிளம்பினான். சர்வேஸ்வரனுக்குப் பெருமையாக இருந்தது, அவனை அவ்வாறு முனைப்புடன் பார்க்க. கண்ணூறு பட்டுவிடுமெனத் தன்னையே கண்டித்துக்கொண்டு, அவர் தன் அலுவல்களை பார்க்க விரைந்தார்.

—————————————————


மஹிமா அன்று காலை எழாமல் கட்டிலில் படுத்துக்கொண்டு கல்லூரிக்குப் போலாமா வேண்டாமா என மனதிற்குள் விவாதம் நடத்திக் கொண்டிருந்தாள்.

அவனைப் பார்த்து அழுதுவிட்டால் என்னாவது? அவன் ஏதாவது பேசினால்? மீண்டும் சண்டையிட்டால்? அதை எல்லோரும் பார்த்தால்?

கவலையில் உழன்று கொண்டிருந்த போது, சட்டென்று ஏதோ உறைத்தது அவளுக்கு.

'உன் சந்தோஷமோ சோகமோ அடுத்தவங்களைச் சார்ந்து என்றைக்கும் இருக்கக் கூடாது மஹிமா. நீ தைரியமானவள். உன் வாழ்க்கையின்  முடிவுகள் உனக்கானது, அதை யாருக்காகவும் மாற்றக் கூடாது'

திடமான முடிவோடு கல்லூரிக்குக் கிளம்பினாள். பங்கஜம் அம்மாள் அவளைக் கேள்வியோடு ஏறிட்டார்.

"நேத்து ரொம்ப கவலையா இருந்தியே மஹிம்மா? ஒருநாள் லீவு எடுத்துக்கலாம்ல?"

"பிரச்சனைய confront பண்ணா தான தீரும்? ஒதுங்கி ஒதுங்கி எத்தனை நாள் போறது? என்னால முடியாது. நான் காலேஜ்க்கு கிளம்பறேன்"

"சரிடா.. பார்த்து போய்ட்டு வா. எதுக்கும் பயப்படாத, எதுக்காகவும் அழுது உன்னோட பலவீனத்த யாருக்கும் காட்டாத. தைரியமா இரு."

என்றுமில்லாமல் அன்று அவர் அறிவுரையாய்ப் பேசியவுடன், மஹிமாவும் தலையாட்டிவிட்டு நம்பிக்கையோடு கிளம்பிச் சென்றாள்.

வகுப்பிற்கு வந்தவள் நேராக எங்கும் பார்க்காமல் சென்று அவளது இருக்கையில் அமர்ந்தாள். முதல் பாடவேளை தொடங்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன. அன்றைய பாடத்தைப் பற்றிப் படிக்கலாம் என புக்கைத் திறந்தாள் அவள்.

அப்போது உள்ளே வந்த ஆதீஷ் அவளிடம், "ஹே மஹி... விஷ்வா வரல?" என வினவினான் சாதாரணமாக.

அவன் பெயரைக் கேட்டதும் திடுக்கிட்டவள், சுதாரித்து பதில் பேசுவதற்குள் அவளருகில் இருந்த ப்ரதிபா முந்திக்கொண்டாள்.

"ஏய் லூசு... உனக்கு ஒன்னும் தெரியாதா... போடா அந்தப் பக்கம்!"

மஹிமா அவளை விழிகளால் வினவ, அவள், "இல்லப்பா...கேண்ட்டீனில அமலா இருந்தா, பஸ்ல வரும்போது சொன்னா. ஸாரிப்பா... யாருக்கும் உன்னப் போல ஆகக் கூடாது. ரொம்ப திட்டிட்டான்ல.." என்று வருந்தினாள்.

மஹிமாவுக்கு தலை பயங்கரமாக வலித்தது. கண்கள் வேறு லேசாக எரிந்தது. புக்கை மூடிப் பையில் வைத்து, அதையும் பூட்டி எடுத்துக்கொண்டாள். எழுந்து வெளியே செல்ல இரண்டடி வைத்துவிட்டாள். அப்போது ஏதோ தாக்கியதுபோல் நின்றாள்.

'செய்யாத தவறுக்காக ஏன் நீ பயந்து ஓடப்போகிறாய் மஹிமா?  தைரியமாக நில். துணிந்து எதிர்கொள். என்றானாலும் இது உன் வாழ்க்கை. நீதான் பொறுப்பேற்க வேண்டும். பதில் கூறு மஹிமா. இனி அவர்கள் என்றுமே அதைப்பற்றிப் பேசாதவாறு ஒரு பதில் உரை.'

திரும்ப வந்து அவளருகில் அமர்ந்தாள் மஹிமா.

"கஷ்டம்தான் ப்ரதிபா. என்னை ஒருத்தன் வேண்டான்னு சொன்னதுக்கு நானே கவலைப்படல. ஆனா, நீங்க எல்லோரும் இப்படி எனக்காக ஃபீல் பண்றீங்க. உங்கள மாதிரி நல்ல ஃப்ரெண்ட்ஸ் கிடைக்கிறது தான் கஷ்டம். அவனைக் கடந்து போறது ஒண்ணும் கஷ்டம் இல்ல."

"மஹி--"

"வேண்டாம். அதப்பத்தி யாரும் எங்கிட்ட பேச வேண்டாம். நீ எல்லார்ட்டயும் சொல்லிடு. ஆமா எனக்கு ப்ரேக்கப் ஆகிடுச்சு. இதை இன்ஃபார்ம் பண்ணிடு. யாரும் எதுவும் எங்கிட்ட கேட்க வேண்டாம். எல்லாம் முடிஞ்சு போச்சு. It's literally over"

"என்னடி இது? ஏதோ சண்டைன்னு நினைச்சா... நீ ப்ரேக்கப் அது இதுன்னு.."

"என்னை வேணாம்னு சொன்னவனை நான் வேணாம்னு சொல்லக் கூடாதா?"

அந்த அளவிற்கு மஹிமா இறுகிப் போவாள் என அவர்கள் யாருமே, ஏன் அவளே, அறிந்திருக்கவில்லை. அதிர்ச்சியாக அமர்ந்திருந்தனர் அனைவருமே.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro