Part 35
பாகம் 35
வாசலில் நின்று கொண்டிருந்த நபரை பார்த்து, பேய் அறைந்தாற்போல் ஆனான் சத்யா. சுபாஷின் நண்பன் சந்திரன் அங்கு நின்று கொண்டிருந்தான். சுபாஷிற்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. சந்திரன் தானாகவே சாட்சி கூண்டில் வந்து நின்றான்.
" என் பெயர் சந்திரன். சுபாஷின் நண்பன். இனியவை கடத்தியது நான்தான். என் தங்கைக்காக அதை நான் செய்தேன். அவள் சுபாஷை விரும்புகிறாள் என்ற காரணத்திற்காக."
" இது சுயநலமான செயல் என்று உங்களுக்கு தோன்றவில்லையா?" என்றார் நீதிபதி.
" இங்கு சுயநலமற்றவர் யார் இருக்கிறார், யுவர் ஆனர்? இனியா தன்னை விரும்பவில்லை என்று தெரிந்த பிறகும், சுபாஷ் அவளை திருமணம் செய்து கொள்ள நினைத்தான். தன் வியாபாரத்தை விஸ்தரிக்க நினைத்த சத்யா, தன் தங்கையை பகடைக்காயாக மாற்றினான். அவள் விருப்பத்தை கூட கேட்காமல், சுபாஷுக்கு அவளை மணமுடிக்க துணிந்தான். தன் தங்கையின் விருப்பத்தையும் சந்தோஷத்தையும் பற்றி அவன் கவலைப்படவில்லை. எனில், நான் மட்டும் சுயநலவாதியாக இருப்பதில் தவறு என்ன இருக்கிறது? நான் சுயநலவாதிதான். இனியாவின் குடும்பம் வேதனைக்கு உள்ளாகும் என்று தெரிந்திருந்தும் அவளை கடத்தினேன். எனக்கு வேறு வழியில்லை. அவள் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானம், எனக்கு வேதனையை தந்தது. ஆனால் அன்று பாரிக்கு ஏற்பட்ட கோபம் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவனைப் பற்றி நான் நன்கு அறிவேன். எங்கள் கல்லூரி காலங்களில் இருந்தே, தேவையற்ற விஷயங்களில் அவன் என்றும் தலையிட்டது இல்லை. அவன் இனியாவை பெண் கேட்ட பொழுது, என்னுடைய ஆச்சரியம் பன்மடங்கானது. நான் அவனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான், அவன் ராஜாவிடம் இனியாவிற்காக ஒருமுறை சண்டையிட்டதை தெரிந்து கொண்டேன். அதுமட்டுமல்ல, ராஜா தான் தன்னை கடத்தியவன் என்று தவறாக நினைத்துக் கொண்டு, இனியா சமீபத்தில் அவனுக்கு நன்றி கூறி இருக்கிறாள். தன்னை கடத்தியதற்காக, ஒரு பெண் நன்றி கூறுகிறார் என்றால், அவள் தன் கணவனுடன் எவ்வளவு சந்தோஷமாக இருக்க வேண்டும்? அவள் திருமணத்தை நிறுத்தியதற்காக உறுத்தலில் தவித்துக் கொண்டிருந்த நான், அன்று நிம்மதியாக உறங்கினேன், யுவர் ஹானர்."
சற்று நிறுத்தியவன்...
" ஆனால், சுபாஷின் அம்மா, கூட்டத்திற்கு முன் இனியாவின் குடும்பத்தை அப்படி அவமதிப்பார் என்பதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. "
" அது இயல்பாய் நடக்கக் கூடிய ஒன்றுதானே? அவருடைய இடத்தில் யார் இருந்தாலும் அதைத் தான் செய்வார். " என்றார் நீதிபதி.
" இல்லை யுவர் ஆனர். அவர் அவ்வாறு செய்திருக்கக் கூடாது. ஏனெனில், இனியவை கடத்த சொன்னதே அவர்தான். "
அவன் கூறிய வார்த்தைகள் சுபாஷை ஒரு உலுக்கு உலுக்கி விட்டன. சந்திரன் மேலும் தொடர்ந்தான்.
" ஆமாம் யுவர் ஹானர் சுபாஷின் அம்மா தான் இனியவை கடத்த சொன்னார். இனியா தனக்கு மருமகளாக வருவதில், அவருக்கு துளியும் விருப்பம் இல்லை. ஏனெனில், அவர் என் தங்கை தான் அவருக்கு மருமகளாக வரவேண்டும் என்று எண்ணியிருந்தார். சுபாஷின் மனதை மாற்ற, அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. இறுதியில், அந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்தும்படி என்னிடம் கூறினார். வேறு வழி ஏதுமின்றி நான் இனியாவை கடத்தினேன். பாரியிடம் இதுபற்றி கூறியும் விட்டேன். ஆனால் பாரி, இனியாவின் குடும்பத்தினருக்கு சங்கடத்தை அளிக்க விரும்பவில்லை. அதனால் அதை யாரிடமும் சொல்லாமல் மறைத்துவிட்டார். முதல் நாளன்று என்னால் நீதிமன்றத்திற்கு வர இயலாமல் போனது. அதனால், ராஜாவிடம், *பாரிக்கு கொலுசை கொடுத்தது அவன் தான்* என்று கூறும் படி கூறினேன்"
" எனில், பாரிக்கு கொலுசை கொடுத்தது ராஜா இல்லையா? "
" இல்லை யுவர் ஆனர். அதை பாரியிடம் கொடுத்தது நான்தான். பாரியிடம் உண்மையை கூறிய பொழுது, இனியாவின் கொலுசையும் கொடுக்க முயன்றேன். ஆனால், பாரி அதை அப்பொழுது பெற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில், இந்த கசப்பான உண்மை, இனியாவுக்கு தெரிய வேண்டாம் என்று நினைத்தான். அன்று தான், இனியாவும், பாரியும், ஆரம்பத்திலிருந்தே, சொல்லிக்கொள்ளாமல் ஒருவரை ஒருவர் விரும்பி இருக்கிறார்கள் என்பதை நான் பாரியின் மூலமாக தெரிந்துகொண்டேன். இனியாவை கடத்திய உறுத்தலில் இருந்து விடுபட்டு, விரும்பியவர்களை இணைத்து வைத்த மனநிறைவை நான் அன்று பெற்றேன். அனைத்தையும் தொடங்கியது நான்தான். அதனால், அதை முடித்து வைக்கும் பொறுப்பும் என்னைச் சார்ந்தது. இதனால் ஏற்படப்போகும் விளைவுகளை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன், யுவர் ஆனர்" என்று முடித்தான் சந்திரன்.
சத்யாவும் சுபாஷும் தங்கள் உடலில் இருந்து உயிர் பிரிந்து விட்டது போன்று உணர்ந்தார்கள். இனியா கடத்தப்பட்டதற்கு காரணம் ராதிகா தான் என்பதை அவர்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. சுபாஷின் தலை, வெட்கி தொங்கி போனது. ராதிகா இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போனார் என்பதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சந்திரனின் தங்கை, தன்னை காதலிப்பதையும், ராதிகா அவள் தனக்கு மருமகளாக வரவேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்ததையும் அவன் அறிந்திருந்தான். ஆனால் அவன் என்றும் அதை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. ராதிகாவின் இந்த கீழ்த்தரமான செயலுக்காக, அவன் எப்பொழுதும் அவளை மன்னிக்கப் போவதில்லை. கடத்தலுக்கு காரணமாக இருந்து கொண்டு, எவ்வாறெல்லாம் அவர் இனியாவையும், இனியாவின் குடும்பத்தினரையும் ஊராரின் மத்தியில் அவமானப்படுத்திவிட்டார்.. அவர் இவ்வளவு கருணை அற்றவரா? இது அனைத்தும், தனக்கு ஒரு பணக்கார பெண் மருமகளாக வரவேண்டும் என்பதற்காகவா?
" கடத்தல் வழக்கை விசாரிக்குமாறு போலீஸாருக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. மேலும் இந்த விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கிறேன். கோர்ட் கலையலாம்." இறுதி தீர்ப்பை கூறிவிட்டு வெளியேறினார் நீதிபதி.
கண்களில் திரண்ட கண்ணீரையும் மீறி, ரசிக்கத்தக்க புன்னகை மலர்ந்தது, இனியாவின் முகத்தில். ஓடிச்சென்று இனியாவை அணைத்துக்கொண்டான் பாரி. அதற்காகவே காத்திருந்தவள் போல அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டாள் இனியா.
" நம்ம ஜெயிச்சிட்டோம்" என்றான் அழகிய புன்னகையுடன்.
சத்யாவும், சுபாஷும் தங்களையே தயக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட இனியா, சத்யாவை நோக்கி சென்றாள். அவன் எதிர்பாரா வண்ணம், அவன் வழக்கமாக செய்வது போலவே, அவன் கையை எடுத்து தன் தலையில் வைத்துக் கொண்டாள்.
" தயவுசெய்து இனிமே என்கிட்ட சத்தியம் வாங்காதீங்க. நான் உங்களுக்கு செய்து கொடுத்த சத்தியம் எல்லாம் போதும். நான் பாரியை என் உயிருக்கு மேலா காதலிக்கிறேன். தயவுசெய்து எங்களை வாழவிடுங்க. உங்க மேல நான் வச்சிருந்த மரியாதையின் காரணமா, என்னுடைய காதலை வெளியில் சொல்லாமல், உங்க விருப்பத்துக்கு சம்மதிச்சேன். ஆனா இப்போ, பாரி தான் என் உலகம். அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது. "
" அப்போ ஆரம்பத்திலிருந்தே நீ பாரியை காதலிச்சது உண்மைதானா? " என்றான் சத்திய வருத்தத்துடன்.
ஆமாம் என்று தலையசைத்தாள் இனியா.
" நீங்க என்னுடைய விருப்பத்தை ஒரு தடவை கேட்டிருந்தால் கூட, இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டிருக்காது"
அவள் கூறியதைக் கேட்டு, பேசிழந்து நின்றான் சத்யா. அவள் ஆரம்பத்தில் இருந்தே பாரியை விரும்பினாள் என்பது, அவனை, கூனி குறுக செய்தது. இனியா கூறியதில் தவறு ஏதும் இல்லை. அவன், அவளிடம் ஒரே ஒரு முறை கேட்டிருந்தால் கூட, அத்தனை பிரச்சனைகளும் தவிர்க்கப்பட்டிருக்கும்.
அவன் ஒரு அடி முன்னேறி, குனிந்து, பாரியின் பாதம் தொட விழைந்தான். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாரி, பின்னோக்கி துள்ளி குதித்து, சத்யா தனது பாதத்தை தொடாமல் பார்த்துக் கொண்டான். அதே அதிர்ச்சியோடு, அவன் இனியவை பார்க்க, அவள் தன் அண்ணனின் மீதிருந்து கண்களை அகற்றாமல் நின்றிருந்தாள்.
" என்ன செய்றீங்க சத்யா நீங்க? " என்றான் பதட்டத்துடன்.
" நான், சவால்ல தோத்துட்டேன். "
" சவாலா?"
" நீங்க நிரபராதின்னு நிரூபிச்சிட்டா, நான் உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணும்னு, இனியா என்கிட்ட சவால் விட்டிருந்தா. "
அவன் சொன்னதைக் கேட்டு, நம்பமுடியாமல் பிரமித்து நின்றான் பாரி.
" அவளை தப்பா எடுத்துக்காதீங்க. என் மேல் இருந்த அன்பால அவ அப்படி கேட்டிருப்பா"
" உண்மைதான். நான்தான், அவளையும் உங்களையும் சரியா புரிஞ்சுக்காம போயிட்டேன். தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க. "
இனியாவின் தலை மீது அன்பாய் கை வைத்தான்.
" இனிமே உன்கிட்ட நான் எதுக்காகவும் சத்தியம் கேட்க மாட்டேன். ஐ அம் ரியலி சாரி"
சத்யாவிற்கு தொண்டையை அடைத்தது. தாளாத வேதனையுடன் அவ்விடம் விட்டு அகன்றான். சுபாஷ் தன்னை பின்தொடர்வதை உணர்ந்து, நின்றான் சத்யா.
" இப்போதிலிருந்து, நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல, எந்த ஒரு வியாபார தொடர்பும் வேண்டாம்ன்னு நான் நினைக்கிறேன்"
" சத்யா ப்ளீஸ் அப்படி சொல்லாதே" என்று கெஞ்சினான் சுபாஷ்.
" இல்ல சுபாஷ். இதுக்கு அப்புறம், உங்க அம்மாவை நான் எப்பவுமே பாக்க கூடாதுன்னு நினைக்கிறேன். ஒருவேளை நான் அவங்கள சந்திச்சா, விரும்பத்தகாத ஏதாவது நடக்க வாய்ப்பிருக்கு. அப்படி எதுவும் நடக்க வேண்டாம்ன்னு நினைக்கிறேன். தயவுசெய்து புரிஞ்சுக்கோ. நீ என்னை மதிக்கிறது உண்மைன்னா, சந்திரனுடைய தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கோ. அதுதான் நம்ம எல்லாருக்கும் நல்லது. " என்று கூறிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென சென்றுவிட்டான் சத்யா.
இனியாவை ஆரத் தழுவி, உச்சி முகர்ந்தார் சீதா.
" நீ இப்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். நான் வேணுமுன்னா உன்கூட வந்து கொஞ்ச நாள் இருக்கவா? "
*வேண்டாம்* என்று சிரித்தபடி தலையசைத்தாள் இனியா.
" இனியவை நான் பார்த்துக்கிறேன் ஆன்ட்டி" என்றான் பாரி.
" இதை நான் எதிர்பார்த்தேன்" என்றார் சீதா கிண்டலாக.
" ஏதாவது வேணும்னா தயங்காம எங்களை கூப்பிடு" என்றார் சேதுராமன்.
" சரிங்க அப்பா" என்ற தலையசைத்தாள் இனியா.
தனது இருசக்கர வாகனத்தை உயிர்பித்துவிட்டு நிமிர்ந்த சத்யா, அங்கே ராஜா சிரித்தபடி நின்று கொண்டிருப்பதைப் பார்த்து, தனது வாகனத்தை அணைத்து விட்டு கீழே இறங்கினான்.
" உன்னை ஹர்ட் பண்ணதுக்காக சாரி... என் தங்கைக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்ததற்காக நன்றி" என்றான் சத்யா.
" அதைத்தான் நானும் சொல்லனும்னு நெனச்சேன். என் தங்கைக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்ததற்காக நன்றி"
இருவரும் கைகுலுக்கியபடி சிரித்துக் கொண்டார்கள்.
பாரியும் இனியாவும் அவர்களைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். அப்போது சந்திரன், பாரியை நோக்கி, தன் கட்டை விரலை உயர்த்தி காட்டினான். பாரி சிரித்தபடி அவனை நோக்கி தலையசைத்தான்.
" அவரு ரொம்ப நல்லவரு. சரியான நேரத்திற்கு கோர்ட்டுக்கு வந்து நமக்கு ஹெல்ப் பண்ணினார்" என்றாள் இனியா.
" அதுக்காக மட்டுமில்ல. உனக்கும் சுபாஷுக்கும் செகண்ட் மேரேஜ் செய்ய, சத்யா ஏற்பாடு பண்றது அவனுக்கு தெரிஞ்சிருக்கு. அது மட்டும் நடந்தால் இவ்வளவு நாள் நடந்த எதுக்குமே அர்த்தமில்லாமல் போயிடும் இல்லையா? அவனாலதான் நமக்கு உதவ முடியும்ன்னு தான், அன்னிக்கு ராத்திரியே அவனை பார்க்க நான் கோயம்புத்தூர் கிளம்பி போனேன்."
" அதனாலதான் அன்னைக்கு நீங்க என்ன பார்க்க வரலையா? "
ஆமாம் என்ற தலையசைத்தான் பாரி.
" நீங்க அவரோட போனிலேயே பேசி இருக்கலாமே? "
"பேசியிருக்கலாம் தான். ஆனால், இந்த விஷயம், என்னை பொருத்தவரை எவ்வளவு முக்கியம் அப்படிங்கறத, அவனுக்கு உணர்த்த தான், நேரில் போய் அவனை சந்திச்சேன். அவனும் எல்லா வேலையும் அப்படியே போட்டுட்டு வந்து நமக்கு ஹெல்ப் பண்ணிட்டான்"
" நீங்க என்ன பார்க்க வராதப்போ, நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா?"
" தெரியும்"
" உங்களுக்கு என்னை பத்தி எல்லாம் தெரியும். ஆனாலும் விவாகரத்து பத்திரத்தில், என் கையெழுத்தை பார்த்தவுடனே அவ்வளவு கோபப்பட்டிங்க... " என்று முகம் சுளித்தாள் இனியா.
" நீ கையெழுத்துப் போட்டிருக்க மாட்டேன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஒருவேளை, சத்யா உன்னை கட்டாயப்படுத்தி, கையெழுத்து வாங்கி இருக்கலாம்ன்னு நெனச்சேன். ஆனா உன் முகத்தில் அதிர்ச்சியை பார்த்த உடனேயே, உனக்கு அதைப்பற்றி எதுவுமே தெரியாதுன்னு புரிஞ்சுகிட்டேன். "
" ரொம்ப சமத்து தான்... வீட்டுக்கு போகலாமா? "
" பாலாவை கார் எடுத்துக்கிட்டு வரச் சொல்லியிருக்கேன். அவன் வந்ததும் போகலாம். "
" ஆனா ஏன்?" என்றாள் புருவத்தை உயர்த்தியபடி இனியா.
அழகாய் அவள் குழல் கற்ற ஒக்கி விட்ட படி கூறினான்,
" ஏன்னா, நீ பிரக்னண்டா இருக்க. பைக்ல போறது சேஃப்டி இல்ல. ஒருவேளை... "
அவனை மேலே பேச விடாமல் வெட்டிவிட்டு,
" நீங்க இருக்கும் போது, நான் எப்படி கீழே விழுவேன்? நீங்க என்னை விழ விட மாட்டீங்க..." என்று, அவன் முன்பு ஒருமுறை கூறிய வார்த்தைகளை திருப்பி கூறினாள் இனியா.
பாரின் முகத்தில் ஒரு கர்வ புன்னகை ஒளிர்ந்தது. அது அவனை மேலும் அழகாய் காட்டியது.
இருசக்கர வாகனத்தில், பாரியின் பின்னால் அமர்ந்து, அவன் இடையை கைகளால் சுற்றி வளைத்து, அவன் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள்.
" இந்த நெருக்கத்தை, உங்களுடைய கார் கொடுத்திடுமா, மாஸ்டர் பாரி?" என்றாள் இனியா.
ரியர் வியூ மிரர்ரின் மூலம், அவளைப் பார்த்து புன்னகை புரிந்த பாரி, தனது இரு சக்கர வாகனத்தை உதைத்து கிளப்பினான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro