4
எதிரிகள் என யாரும் கிடையாது அவளுக்கு. சிறுசிறு தவறுகளுக்கெல்லாம் சண்டையிடும் சிறுபிள்ளைத்தனமும் கிடையாது அவளிடம். வாழ்வில் சிற்சில சம்பவங்களால் ஆதங்கங்கள் இருப்பினும் சராசரி மனிதர்கள் போல அவற்றைக் கடந்துசென்றுவிடுவாள் பக்குவமாக. ஆயினும் ஐந்து வருடங்களுக்கு முன்பே கடந்து சென்றுவிட்டதாக நினைத்த ஒரு சம்பவத்தை, மீண்டும் நினைவில் காட்டவென ஒருவன் வருவானென அவள் எதிர்பார்த்திடவில்லை.
கல்லூரியில் அடுத்த இரண்டு வருடங்களுக்கு அவனைத் தவிர்த்துவிட்டாள் முழுவதுமாக. நடந்த சம்பவமும் சில மாதங்களில் நீர்த்துப்போனது. கல்லூரியில் அனைவருமே அதை மறந்துவிட்டனர். கீர்த்தியும்கூட அதை மறந்துவிட்டாள் கிட்டத்தட்ட. ஆயினும் மாறன் மீதிருந்த வெறுப்பு மட்டும் போகவில்லை மனதிலிருந்து.
கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, கிடைத்த முதல் வேலையை ஏற்றுக்கொண்டு சென்னை வந்துவிட்டாள். மூன்று வருடங்களில் எத்தனையோ மாறியிருந்தன. பழையபடி இயல்பான, தோழமையான குணம் திரும்ப வந்திருந்தாலும், எவரையும் எளிதில் நம்பிவிடுவதில்லை இப்போதெல்லாம். எனவே மனதால் எவரிடமும் நெருங்கவும் இயலவில்லை. ஆம், மாறனிடத்தில் வந்த உணர்ச்சிகள், வேறொருவனிடம் வரவில்லை இன்றுவரை.
அவனை நினைத்தபோது இதுவரை எங்கிருந்ததென்றே தெரியாத கோபமும் அழுகையும் வந்து அடிநெஞ்சில் கனன்றது. அவன் தன் வீட்டிலிருந்து நான்கடித் தொலைவில்தான் இருக்கிறான் என்ற எண்ணமும் அவள் நிம்மதியைக் குலைத்தது.
வாரநாட்கள் அனைத்தும் வேலை, அலுவலகம், ப்ராஜெக்ட் என்றே தீர்ந்திருக்க, பெரிதாக அக்கம்பக்கத்தினரிடம் அளவளாவிட நேரமிருக்கவில்லை அவளுக்கு. அவ்வப்போது மாறனை படிக்கட்டிலோ, வாகன நிறுத்தத்திலோ சந்தித்தாலும் முகம் பார்க்காமல் தலையைத் திருப்பிக்கொண்டு தன்வழியில் சென்றுவிடுவாள் அவள்.
ஆனால் மாறனிடம் காட்டும் பாராமுகத்தை மகதியிடம் காட்ட ஏனோ மனம் ஒப்பவில்லை அவளுக்கு. அவ்வப்போது அதேபோல சந்திக்கும் போதெல்லாம் சின்னதொரு சிரிப்பை இருவரும் பகிர்ந்துகொள்வர். சிலமுறை மகதிக்கென மிட்டாய்கள் கூட வாங்கித் தந்திருந்தாள் கீர்த்தி.
வெள்ளிக்கிழமை மாலை அலுவலகம் முடித்து வீட்டுக்கு வந்தபோது, எதிரில் பூட்டியிருந்த கதவில் சாய்ந்து தரையில் அமர்ந்திருந்த மகதியைப் பார்த்தாள் அவள்.
ஒருகணம் தயங்கியவள், மனது கேட்காமல் திரும்பி மகதியை ஏறிட்டாள்.
"ஏன் வெளிய உட்கார்ந்திருக்க மா?"
மகதி நிமிர்ந்து சோர்வாகப் புன்னகைத்தாள்.
"காலைலே ஸ்கூலுக்குப் போற அவசரத்துல சாவியை எடுத்துக்க மறந்துட்டேன். அண்ணா வீட்டைப் பூட்டிட்டுப் போயிட்டான்."
".. வேணும்னா.. இங்க வந்து வெய்ட் பண்றியா?"
மகதி புன்னகையுடன் எழுந்து அவளுடன் வந்தாள்.
"தேங்க்ஸ் கீர்த்தி"
"என்ன க்ளாஸ் படிக்கற?"
ஒரு டம்ளரில் எலுமிச்சை பழரசத்தை எடுத்துவந்து அவள்முன்னால் வைத்தவாறே வினவினாள் கீர்த்தி.
"நைன்த் ஸ்டாண்டர்ட்!"
"ஹ்ம்ம்.. அடுத்த வருஷம் டென்த்.. பப்ளிக் எக்ஸாம் இருக்குல்ல?"
"ம்ம்.. இப்பவே டென்த்துக்கான சிலபஸ்ஸை எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க… நிறைய படிக்கணும்.. அதிலும் மேத்ஸ் வேற.. இம்சை!"
கையை ஆட்டி ஆட்டி அவள் பேச, கீர்த்தி சிரித்தாள். சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, கடிகாரத்தைப் பார்த்தாள் கீர்த்தி. ஆறு பத்து என்றது அது.
"மணி ஆறுக்கு மேல ஆச்சே.. உங்க அண்ணா எப்ப வருவான்?"
"அண்ணாவுக்கு வேலை முடிய நைட் பத்து மணிக்கு மேல ஆகிடும் கீர்த்தி.. நீங்க எனக்காக பார்க்காதீங்க, உங்க வேலைய கவனிங்க. நான் அமைதியா உட்கார்ந்துக்கறேன்"
யோசனையுடன் சென்று உடைமாற்றிவிட்டு வந்தவள், தன் மடிக்கணினியில் வேலைகளைப் பார்த்துக்கொண்டே ஓரக்கண்ணால் மகதியையும் பார்த்தாள். சமர்த்தாக அமர்ந்து வீட்டுப்பாடங்களை எழுதிவிட்டு, கணக்குப் புத்தகத்தை எடுத்துவைத்து விரலால் எண்களை வருடியவாறே அவள் வாசித்துக்கொண்டிருக்க, சமன்பாடுகள் புரியாமல் அவள் புருவங்கள் சுருங்குவதையும் பார்த்தாள் கீர்த்தி.
"என்ன டவுட் மகதி? எனக்குத் தெரிஞ்சா நான் சொல்றேன்.."
"மேட்ரிக்ஸ் கீர்த்தி.. டென்த் சிலபஸ்ஸை இப்பவே எடுக்கறாங்க.. ஒண்ணுமே புரியல.."
"மேட்ரிக்ஸ் ரொம்ப ஈஸிடா.. இங்க வா, நான் சொல்லித் தர்றேன்"
காகிதம் ஒன்றைக் கையில் எடுத்தவள், வரைபடங்கள் இட்டு அந்த கணித நியமத்தை விளக்கிட, தலையாட்டித் தலையாட்டிக் கேட்டுக்கொண்டாள் மகதியும். அதன்பின் சில கணக்குகள் போட்டுக் காட்டச் சொன்னபோது, பிழையின்றி போட்டுவிட, ஆனந்தமாய் மகதியை கட்டியணைத்துப் பாராட்டினாள் கீர்த்தி.
"வாவ் மகதி! டக்குனு புரிஞ்சிக்கிட்டியே! வெல் டன்! தப்பே இல்லாம எல்லா கணக்கையும் போட்டு முடிச்சிட்டடா..!"
"வாவ் கீர்த்தி!! பேசாம எங்க மேத்ஸ் டீச்சரை வீட்டுக்கு அனுப்பிட்டு, நீங்களே எனக்கு டீச்சரா வந்துருங்களேன்!"
கீர்த்தி அதில் கலகலவென சிரிக்க, மகதியும் தெற்றுப்பற்கள் தெரியப் புன்னகைத்தாள். அவர்கள் சிரித்துக்கொண்டிருந்த போதே, எதிர்வீட்டுக் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்க, மகதி வேகமாய் எழுந்து பையை எடுத்துக்கொண்டு ஓடினாள்.
"அண்ணா!!"
வாசல்வரை வந்த கீர்த்தியும் அவனை சந்திக்க நேர்ந்தது. கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு அவள் இறுக்கமாகவே நிற்க, அவன் ஏனோ லேசாகப் புன்னகைத்தான்.
"மகதிய பாத்துக்கிட்டதுக்கு தேங்க்ஸ்."
மகதி தலையில் தட்டிக்கொண்டாள். "பாரேன், நான் தேங்க்ஸ் சொல்ல மறந்துட்டேன்.. தேங்க் யூ கீர்த்தி!"
மகதியை மட்டும் பார்த்தவள், "நோ மென்ஷன் மகதி" எனச் சிரித்தாள்.
மகதி அவளுக்குக் கையசைத்தவாறு வீட்டுக்குள் சென்றுவிட, மாறனை முறைத்துவிட்டுத் தானும் தன் வீட்டுக்குள் நுழைந்து கதவை மூடினாள் அவள்.
மாறனின் பெருமூச்சு கதவைத் தாண்டியும் கேட்டது.
***
அடுத்த சில நாட்கள் சுமுகமாக நகர்ந்தன. வார இறுதியில் வீட்டுக்குச் சென்றுவிட்டு, திங்களன்று காலையில் சென்னைக்குத் திரும்பி வந்தாள் கீர்த்தி. அம்மா கொடுத்தனுப்பிய புனித தீர்த்தத்தை அலமாரியில் இயேசுவின் படத்தருகே வைத்தவள், கைகளைக் கோர்த்து இரண்டு நிமிடங்கள் பிரார்த்தித்துவிட்டு, தன்மீது சிலுவையிட்டுக்கொண்டு கிளம்பி வெளியே வந்தாள். பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருந்த மகதியை வாசலில் நின்று அழைத்தவள், வெளியே அவளுடன் வந்த மாறனைப் பார்த்தும் பாராததுபோல மகதியிடம் தான் கொண்டுவந்த பலகாரங்களைக் கொடுத்தாள்.
"ஊர்ல இருந்து கொண்டு வந்தேன், சாப்பிடு"
"தேங்க்ஸ் கீர்த்தி, உள்ள வாங்க.."
"ம்ஹூம்.. லேட்டாச்சு, ஆபிஸ் போகணும்"
"ரெண்டே நிமிஷம்.. டிபன் சாப்பிட்டிருக்க மாட்டீங்க நீங்க, வாங்க சாப்ட்டு போலாம்"
கையைப் பிடித்து அன்புக் கட்டளையிட்டவளை மறுதலிக்க மனமின்றி உள்ளே சென்றாள் அவளும்.
தட்டில் சேமியா உப்புமாவும், ஒரத்தில் கொஞ்சம் ஊறுகாயும் வைத்து எடுத்து வந்தான் மாறன். அவன் அதை மகதியிடம் தர, அவள் மகதியிடமிருந்து பெற்றுக்கொண்டாள்.
"ஊருக்கு போயிருந்ததா சொன்னீங்களே கீர்த்தி.. நீங்க எந்த ஊரு?"
மகதியின் கேள்வியில் நிமிர்ந்தவள், மாறனை அர்த்தமாகப் பார்த்தபடி, "காஞ்சிபுரம்" என்றாள்.
"நிஜமாவா? எங்களுக்கும் காஞ்சிபுரம் தான்! ரெண்டு வருஷம் முன்னதான் சென்னைக்கு வந்தோம்!"
கீர்த்தி பதில்கூறாமல் தலையாட்டினாள். மகதி விடாமல், "நீங்க காஞ்சிபுரத்துல தான் படிச்சீங்களா?" என வினவ, "கே.என்.ஆர் காலேஜ்" என்றாள் கீர்த்தியும்.
"அப்படியா? எங்க அண்ணா கூட அங்கதான் படிச்சான்..! அவன் சொல்லவே இல்லையே எதுவும்?"
கீர்த்தி நக்கலாக சிரித்தாள்.
"உங்க அண்ணனுக்கு தான் எங்களை மாதிரி மிடில் க்ளாஸ் ஆளுங்களை கண்ணுக்கே தெரியாதே!"
மகதி குழப்பமாக இருவரையும் பார்த்தாள்.
"ஏன்.. அண்ணாவை.. உங்களுக்கு முன்னவே தெரியுமா?"
அவள் திரும்பி மாறனைப் பார்த்தாள். அவன் அசவுகரியமாக நெளிந்தான். மீண்டும் மகதியிடம் திரும்பினாள் கீர்த்தி.
"உங்க அண்ணனை மறக்க முடியுமா? அவன்தான என்னை மொத்த காலேஜ் முன்னாலயும் முதல்முறையா அழ வெச்சது "
"ஹேய்.. அப்படி என்ன பண்ணினான்? உங்களுக்குள்ள என்ன சண்டை?"
பெருமூச்சுடன் சாய்ந்து அமர்ந்தவள், நடந்ததை சுருக்கமாக சொன்னாள்.
மகதி நம்பமாட்டாமல் தன் அண்ணனையும் அவளையும் மாறிமாறிப் பார்த்தாள்.
"ஓ மை காட்! கீர்த்தி… அது ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்! அதுக்காக இவ்ளோ பெரிய பிரச்சினையா? எங்க அண்ணன்தான் அந்த லெட்டரை எழுதினானான்னு ஒருதடவை யாரையாச்சும் கேட்டு கன்ஃபார்ம் பண்ணீங்களா நீங்க?"
கீர்த்தி சோர்வாக முகஞ்சுழித்தாள்.
"அப்போதைக்கு எனக்கு எந்த சந்தேகமும் வரல மகதி. உங்க அண்ணன் யார்கிட்டவும் புதுசா பேசமாட்டான், ஸோ லெட்டர் எழுத வாய்ப்பு இருந்தது. வெளிய யார்கிட்டவும் சொல்லவும் மனசு வரல.. அத்தோட.."
"அத்தோட..?"
"அது உண்மையா இருக்கணும்னு தான் நானும் மனசார ஆசைப்பட்டேன்" என உதட்டுக்குள் முணுமுணுத்தாள் கீர்த்தி. மகதி அது கேட்காமல் "என்ன?" என்க, மாறனும் குழப்பமாகவே பார்த்திருந்தான்.
"ப்ச், பழைய கதை அதெல்லாம். உன் கேள்விக்கு பதில் கிடைச்சிடுச்சா இல்லையா மகதி? அவ்ளோதான்."
மாறன் இடையிட்டான் அவசரமாக.
"நடந்தது எதுவுமே எனக்கு தெரியாது. எல்லாம் முடிஞ்ச பிறகுதான் அது உன் க்ளாஸ் பசங்க சிலர் பண்ணின வேலைன்னு எனக்குத் தெரியும். உன்னை மட்டும் இல்ல, என்னையும்தான் எல்லாரும் கலாய்ச்சாங்க, தெரியுமா?"
அவனைப் பொருட்படுத்தாமல் மகதியிடம் திரும்பினாள் கீர்த்தி.
"உங்க அண்ணா என்ன சொன்னான் தெரியுமா? என்னை யாருன்னே தெரியாதுன்னு சொன்னான்! உண்மை அதுவா இருந்தாலும்.. எல்லார் முன்னாலவும்!? அட்லீஸ்ட் வெளியில ஒத்துக்கிட்ட மாதிரி காட்டிக்கிட்டு, அப்பறமா கூட என்கிட்ட உண்மைய சொல்லியிருக்கலாம். அதை செய்ய மனசில்ல உங்க அண்ணாவுக்கு!"
"அவ மட்டும் என்ன சும்மாவா இருந்தா?? நான் ஏதோ அவளை ஏமாத்திட்டது மாதிரி 'ஓ..'ன்னு கதறி அழுது, பக்கத்துல இருந்த தண்ணி பாட்டிலை எடுத்து மொத்தமா என்மேல ஊத்தி, காலேஜே பாக்குற அளவுக்கு கலாட்டா பண்ணினதே அவ தான்!"
அவனும் மகதியிடமே முறையிட்டான்.
"ஏன், தண்ணியை ஊத்துனா நீ கரைஞ்சு போயிடுவியா? ஒரு சாரி கேட்கறதுக்கு என்ன குறைச்சல் ஒனக்கு?"
"என்னத்துக்கு நான் சாரி கேட்கணும்?? நான் என்ன தப்புப் பண்ணினேன்?"
"ஏன்னா நடந்ததுக்கு எல்லாம் நீதான் காரணம்!"
சத்தமாகக் கத்திவிட்டு அவள் வெளியேற, மகதி அதிர்ச்சியாக நிற்க, மாறனின் முகத்திலோ ஏதேதோ யோசனைக் கோடுகள்.
***
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro