10
மூன்று நாட்கள் கழித்து இரவு மகதியை அழைத்துச்செல்ல அவன் வந்தபோது, காபிக் கோப்பை ஒன்றை அவன்புறம் நீட்டினாள் அவள்.
"நைட்ல காபி--" என ஏதோ சொல்ல வந்தவன், அதனுள்ளே காபி எதுவும் இல்லாமல் வெளிர்நீலத்தில் சுருளாக ஏதோ துணி இருப்பதைக் கண்டு குழப்பமாக அதை வெளியே எடுத்தான்.
"என்னதிது?"
"கழுத்துல கட்டற டை. முன்னப்பின்ன பாத்ததில்லையா?"
"அது தெரியுது.. இது என்னத்துக்கு எனக்கு?"
"ப்ச்.. இண்டர்வியூவுக்கு போகும்போது டை கட்டாம போனா, நல்லாவா இருக்கும்?"
அவன் குழப்பத்தோடு நிமிர, அடக்கிய புன்னகையுடன் தன் கைப்பையிலிருந்து ஒரு வெள்ளை உறையை எடுத்து நீட்டினாள் அவள். இன்ஃபோசிஸ் நிறுவன முத்திரையிட்ட அக்கவரைக் கண்டதும் மாறனின் முகம் வியப்பில் விரிந்தது.
அதைக் கவனித்த கீர்த்தி சிரிப்புடனே, "ஜூனியர் டெவலப்பர் வேலைக்கு இண்டர்வியூ. வர்ற வெள்ளிக்கிழமை. செலக்ட் ஆனதும் என்னோட ப்ராஜெக்டுக்கு தான் வரணும், ஓகேவா?" என்றவாறே அவனது கையில் திணித்தாள் கால்-லெட்டர் அடங்கிய கவரை.
ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து நின்றவன், மறுகணமே அவளை இழுத்து இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.
"தேங்க்யூ கீர்த்தி.. தேங்க்யூ சோ மச்!"
சில நொடிகள் தான் என்றாலும், அவனது அணைப்பிற்குள், அவனது நெஞ்சத்தில் சாய்ந்தவாறு நின்றது அவளை ஏதோ செய்ய, சிலிர்த்து விலகினாள் அவள். முகத்தில் எவ்வித மாற்றமும் காட்டாமல் புன்னகைத்தவள், "ஆல் தி பெஸ்ட்" என்றுவிட்டு நகர்ந்தாள்.
***
வாசல் கதவு தட்டப்படும் சத்தத்தில், கீர்த்தி ஓடிச்சென்று கதவைத் திறந்தாள் மகதிக்கு.
உற்சாகமாக 'குட்மார்னிங்' சொன்னவளைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
"சொல்லு மகதி, என்னாச்சு? எங்க உங்க அண்ணா? இன்னிக்கு இன்டர்வியூல்ல? ரெடி ஆகியாச்சா?"
"அதுக்காக தான் நான் வந்தேன். போகும்முன்ன உங்க முகத்தைப் பார்த்துட்டுப் போகட்டும். உங்க முகம் அதிர்ஷ்டமான முகம்.."
கீர்த்தி வாய்விட்டுச் சிரித்தாள். "கழுதை முகத்துல முழிச்சா யோகம் வரும்னு சொல்லுவாங்களே, அதுபோலவா?"
மகதி பதறினாள். "ஐயையோ..!! அப்படியெல்லாம் இல்ல கீர்த்தி! உங்களுக்கு உண்மையிலயே லக்கியான முகம். மகாலட்சுமி மாதிரி.."
"ஓவர் ஐஸா இருக்கே..." என்றபடியே அவளுடன் நடந்தாள் கீர்த்தி.
"அண்ணா!! கீர்த்தி வந்திருக்காங்க, வெய்ட் பண்ண வைக்காம சீக்கிரம் வா!!"
உள்ளறையை நோக்கிக் குரல் கொடுத்தாள் மகதி.
"வந்துட்டேன்..!"
குரலை முன்னால் அனுப்பிவிட்டு, இரண்டு நிமிடங்கள் கழித்து வந்தான் மாறன்.
முடி வெட்டிவிட்டு, சவரமும் செய்துவிட்டு, முழுக்கை சட்டையுடன் கழுத்தில் டையும் அணிந்து நேர்த்தியாக நின்றவனை வாய்பிளந்து பார்த்தனர் இருவருமே.
"அப்படியே நாலைஞ்சு வயசு குறைஞ்ச மாதிரி இருக்குண்ணா! இப்பவே பார்க்க ஆபிசர் மாதிரி தான் இருக்க. ஆல் தி பெஸ்ட்!!"
கீர்த்தியும் புன்னகையுடன் கட்டைவிரலை உயர்த்திக் காட்டினாள். "பெஸ்ட் ஆஃப் லக்"
அவளது மனமோ ஐந்து வருடங்களின் முன்னே பார்த்து மையலுற்ற மாறனின் பிம்பத்தை மனதில் பிறக்கச்செய்தது. மீண்டும் அவன்மீது காதலில் விழுவதை உணர முடிந்தது அவளால்.
தனக்குள்ளேயே அதிர்ந்தாள் கீர்த்தி.
****
தான் மையலில் விழுந்திருந்தோமென உணரும்முன்பே அதில் மீளாவண்ணம் மூழ்கியிருந்தாள் கீர்த்தி.
இயல்புதான் என்றபோதும், தினமும் காலையில் வாசல்தாண்டி வெளியில் வரும்போது அவன் முகத்தைப் பார்த்துவிட்டுப் புறப்படும் வழக்கம் பிடித்திருந்தது.
அவனது களங்கமற்ற கண்களைப் பிடித்திருந்தது. அந்த விழிகளைக் காணும்போது அவளது எதிர்காலத்தையே அவன் கண்களில் காணுவதுபோல இருந்தது.
அவனது சிரிப்பு பிடித்திருந்தது. ஆழமான அவனது குரலில் கபடமற்ற வெள்ளைச் சிரிப்பொன்றை அவன் உதிர்க்கும்போதெல்லாம் அது தேவகானம் போல அவளுக்குத் தொனித்தது.
மாறனின் பேச்சு பிடித்திருந்தது அவளுக்கே ஆச்சரியமாகத் தான் இருந்தது. மேசையில் கையூன்றி கன்னத்தைத் தாங்கிக்கொண்டு தலைசாய்த்து அவன் பேசுவதை நாளெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க வேண்டுமென்றெல்லாம் ஆசை வந்தது.
மொத்தத்தில் மாறனை மொத்தமாகவே மீண்டும் முதல்முறைபோல நேசிக்கத் தொடங்கியிருந்தது மனது.
"எங்க அண்ணாவை உனக்குப் பிடிக்குமா கீர்த்தி?"
முன்னறையில் அவளுடன் அமர்ந்திருந்த மகதி திடீரெனக் கேட்க, கீர்த்தி நிமிர்ந்தாள்.
"எ.. என்ன திடீர்னு?"
"தோணுச்சு, கேக்கறேன். உனக்கு மாறனை பிடிக்குமா?"
"ஹ்ம், காலேஜ்ல நடந்ததையெல்லாம் நான் மறந்துட்டேன். உங்க அண்ணன் மேல இப்ப எனக்கு கோபம் எதுவும் இல்ல.. அதைத்தான கேட்கற?"
கேட்டுக்கொண்டே தன் பழரசக் கோப்பையை எடுத்து உறிஞ்சினாள் அவள்.
மகதி நிமிர்ந்து சாதாரணமாக, "நீ அவனை லவ் பண்றயா?" என்க, புரையேறி இருமிடத் தொடங்கினாள் கீர்த்தி.
"வ- வாட்?? ஏன் அப்படிக் கேட்கற? மாறன் எதாவது.."
"உங்க ரெண்டு பேரையும் பார்க்கறப்போ, எனக்கா தோணுச்சு.. ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதோ இருக்குதோன்னு.."
"மகதி, அப்டிலாம் ஒண்ணும் இல்ல, நாங்க-"
"ப்ச், எனக்குக் கண்ணுல பட்டதை நான் சொன்னேன், அவ்ளோதான். ஆனா கீர்த்தி, மாறனை நீ லவ் பண்ணினா தான் என்னவாம்?"
ஆச்சரியத்தில் வாயைத் திறந்து திறந்து மூடினாள் அவள். அவளருகே அமர்ந்து கையைப் பிடித்துக்கொண்ட மகதியோ, "தனக்குன்னு எங்கண்ணன் இதுவரை எதுவுமே செஞ்சுக்கிட்டது இல்ல கீர்த்தி.. அப்பா அம்மா போனபிறகு, என்னைக் கவனிச்சுக்கறதையே அவனோட முழுநேர வேலையா மாத்திக்கிட்டான் அவன். அவனுக்கும் ஒரு லைஃப் இருக்குன்னே மறந்துட்டு, என்னைப் பத்தி கவலைப்பட்டு சோகமாகிடுவான். இந்த கொஞ்ச நாள்ல, அவன் நிறைய சிரிக்கறான்.. சந்தோஷத்தோட வளைய வரான். எல்லாம் உன்கூட இருக்கறப்ப தான். அதான் கேட்கறேன்.. அவனை லவ் பண்ணி, அந்த சந்தோஷத்தை கொஞ்சம் அதிகமா தரக்கூடாதா அவனுக்கு?" என்றாள் உருக்கத்தோடு.
கீர்த்திக்கு வார்த்தைகள் வரவில்லை.
"மகதி.. நான்.."
"அம்மாவுக்கு பின்ன, உன்னைத்தவிர யாருமே என்கிட்ட இவ்ளோ அன்பா இருந்ததில்ல. பரிதாபம் காட்டாம, முழுக்க முழுக்க உண்மையான அன்பும் அக்கறையும் மட்டும் காட்டி என்னைப் பாத்துக்கிட்ட நீ. என் வாழ்க்கைல அண்ணாவும் நீயும் மட்டும்தான் நிறைஞ்சிருக்கீங்க. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தா, அதிகமா சந்தோஷப்படறது நானா தான் இருப்பேன். ப்ளீஸ் கீர்த்தி..?"
கண்கள் தாமாகப் பனிக்க, மகதியின் தலையை வருடிக்கொடுத்தவள், அவளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.
"மகதி.. எனக்கு மாறனைப் பிடிக்கும், சரியா? ஆனா மத்த விஷயமெல்லாம் இப்ப இல்ல. ஸோ, இதைப்பத்தி மாறன்கிட்ட பேசமாட்டேன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணு"
"ஆனா-"
"ம்ஹூம்.. இனிமேல வயசுக்கு மீறி இப்படி எதுவும் பேசக்கூடாது நீ. எனக்கு ப்ராமிஸ் பண்ணு"
"சரி, ப்ராமிஸ். அண்ணாகிட்ட எதுவும் பேசல."
"தேங்க்ஸ். இப்ப ஹோம்வொர்க்கை முடி"
மகதி சோகமாக வீட்டுப்பாடத்தில் மூழ்க, கீர்த்தி கையால் தலையைப் பிடித்தபடி சோபாவில் சாய, சிறிதுநேரத்தில் கதவைத் திறந்துகொண்டு உற்சாகமாக உள்ளே நுழைந்தான் மாறன்.
"ஹாய்! இண்டர்வியூ சூப்பரா பண்ணிட்டேன். கண்டிப்பா வேலை கிடைச்சிடும்னு தோணுது. எல்லாத்துக்கும் உனக்குதான் நன்றி சொல்லணும்.. தேங்க்யூ சோ மச் கீர்த்தி!"
அவள் எதுவும் சொல்லாமல் வெறுமே புன்னகைத்தாள்.
மகதி ஆனந்தமாகச் சென்று அவனை அணைத்துக்கொண்டு ஏதோ சொல்ல, அவள் மெதுவாக எழுந்து வெளியே வந்துவிட்டாள் சமையலறைக்கு.
'உனக்கும் மாறனுக்கும் இடையே இருப்பது என்ன? காதலா? எனில் எப்போதிருந்து? என்று வந்தது இந்தக் காதல்? எப்படி வந்தது?
ஏற்கனவே ஒருமுறை உன் மனதைக் காயப்படுத்தியவன் அவன். மீண்டும் ஏன் உன் மனதை அவனிடம் தரவேண்டும்?
வேலை வாங்க உதவியும் செய்துவிட்டு, காதலென்று போய் நின்றால்.. ஏதோ நிர்ப்பந்தப்படுத்தி காதலிக்கச் சொல்லுவது போலல்லவா இருக்கும்? பிரதிபலன் எதிர்பாராமல் உதவும் நம் குணத்தை அல்லவா அது களங்கப்படுத்தும்?'
யோசனையில் ஆழ்ந்திருந்தபோதே இரண்டு கோப்பைகளில் காபி எடுத்துக்கொண்டு மாறன் அவளைத்தேடி சமையலறைக்குள் வந்தான்.
"உனக்குப் பிடிச்சமாதிரி எதாவது தரணும்னு ஆசை. ஆனா உனட்குத் தர்றதுக்கு இப்போ எங்கிட்ட ஒண்ணும் இல்ல, ஃபில்ட்டர் காபியைத் தவிர.."
தாமதிக்காமல் ஒரு கோப்பையை அவனிடமிருந்து வாங்கிக்கொண்டாள் அவள். "தே--தேங்க்ஸ்" என்றாள் சிரமப்பட்டு.
"வேலை கிடைச்சு நல்ல நிலமைக்கு வந்ததும், கண்டிப்பா உன்னைக் கடைக்குக் கூட்டிட்டுப் போயி எதாவது பெரிய கிஃப்ட்டா வாங்கித் தர்றேன்"
"எத்தனை பெரிய கிஃப்ட் வாங்கினாலும், இந்த காபிக்கு ஈடாகாது அது."
"ஹஹ.. அப்டியா, ஏன்? அவ்ளோ நல்லா இருக்கா என் காபி?"
"இதுல காபியோட நிறைய அன்பும் நன்றியும் கலந்திருக்கு"
"உண்மைதான் கீர்த்தி, இந்த உதவியை என் வாழ்க்கைல மறக்கவே மாட்டேன். எத்தனையோ ஃப்ரெண்ட்ஸ் இருந்தாங்க எனக்கு. பெரிய பணக்காரப் பசங்களா இருந்தாலும்கூட, எனக்கு ஒரு கஷ்டம்னு வந்தப்ப சத்தமே இல்லாம விலகிப் போயிட்டாங்க. ஆனா உன்னை நான் ஹர்ட் பண்ண பிறகும்கூட, எனக்காக இவ்ளோ பெரிய ஹெல்ப் பண்ணியிருக்க. என்னைப் பொறுத்தவரை, உலகத்துலயே பெஸ்ட் பெஸ்ட் ஃப்ரெண்ட் நீதான்!"
விகற்பமற்ற சிரிப்புடன் அவன் பேச, வேதனையையும் அதிர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் தலையாட்டினாள் அவள், காபிக் கோப்பையால் பாதி முகத்தை மறைத்தபடி.
***
கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் எதிர்பார்ப்பில் கழித்தன. தங்கள் அலுவலகத்தின் மனித வளத்துறைப் பணியாளர்களிடம் இயன்றவரை நாசூக்கா விசாரித்துப் பார்த்தாள் கீர்த்தியும். மகதி அவளைப் பார்க்கும்போதெல்லாம் நச்சரித்தாள், நேர்காணல் முடிவு என்னவென்று சொல்லுமாறு.
"அட, சத்தியமா எனக்குத் தெரியாது குட்டி.. உங்க அண்ணாவுக்கு தான் மெயில் அனுப்புவாங்க. அவன்கிட்டக் கேளு!"
"போ கீர்த்தி... நீ இப்படியே சொல்லு! நீ நைஸா போயி கம்ப்யூட்டரைத் திறந்து பாரேன் உங்க ஆபிஸ்ல!?"
"சரிதான், உங்க அண்ணன் வேலைக்காக என்னை வேலைய விட்டுத் தூக்க வழி பண்றயா?"
"ப்ச்.. போ கீர்த்தி!"
அவள் சிரித்துவிட்டு விலகி வந்தாள்.
அன்று மாலை மாடியில் துவைத்துப்போட்ட துணிகளைக் கொடிகளிலிருந்து எடுத்துக்கொண்டிருந்த போது, கீழே மாறனின் வீட்டுக்குள் ஓவென்ற ஆர்ப்பாட்டச் சத்தம் திடீரென எழ, கீர்த்தி யோசனையுடன் நின்றாள்.
அதற்குள் மூச்சுவாங்கப் படியேறி ஓடிவந்தான் மாறன் அவளைத்தேடி.
"வேலை கிடைச்சிடுச்சு!!"
ஆர்பரித்தவண்ணம் அவன் வந்து சொல்ல, தயக்கமாகப் புன்னகைத்துக் கைகுலுக்கக் கைநீட்டினாள் அவள்.
"கன்கிராட்ஸ்"
அவனோ அவளது நீட்டிய கையைப் பிடித்திழுத்து அவளை அணைத்துக்கொண்டான் ஆதுரமாக.
"தேங்க்ஸ்"
நாத்தழுதழுக்க அந்த ஒற்றைச் சொல்லைக் காதோரம் அவன் சொல்லியபோது, மெய்சிலிர்த்துப்போய் அவள் கண்களிலும் கண்ணீர் துளிர்த்தது.
"மா..மாறா..."
ஏதோ சொல்லத் தொடங்கிய தருணத்தில் மகதி வந்துவிட, மாறன் விலகிச் சென்றான்.
கலங்கிய கண்களுடனே கீர்த்தி நின்றாள் தனியாக.
***
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro